கார்டீசியமும் மருத்துவஉடல்களின் உருவாக்கமும்.

”மனித உடலை ஒரு எந்திரமாக கருதுகிறேன்… என் சிந்தனைப்படி… ஆரோக்கியமான மனிதன் சரியாக உருவாக்கப்பட்ட ஒரு கடிகாரம் என்ற கருத்துடன் ஒப்பிடும்போது நோய்கொண்ட மனிதனை தவறாக உருவாக்கப்பட்ட ஒரு கடிகாரமாக கருதலாம்.” - ரெனே தெகார்தே[1].

 

“நான் முழுமையான உடல் அதைதவிர ஏதுமில்லை: மேலும் ஆத்மா என்பது உடலினுள் உள்ள ஏதோ ஒன்றைப்பற்றிய ஒரு சொல்.” – பிரடரிக் நீட்ஷே[2]

 

”ஒழுங்குறுத்தல் தனியர்களை ”உருவாக்குகிறது”: அது புறப்பொருள் மற்றும் கருவி என்ற இருநிலையிலும் தனியர்கள் மீது செயல்படுத்தப்படும் அதிகாரத்தின் ஒரு தனித்துவமான தொழில்நுட்பம்” – மிஷல் பூஃக்கோ[3]

 

”மருத்துவம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம், மேலும் அரசியல் என்பது பெரிய அளவில் விரிவாக்கப்பட்ட மருத்துவமே தவிர வேறொன்றுமில்லை” – ருடால்ப் விர்ச்சௌ[4]

 

கார்டீசிய உடல் குறித்த வரையறை மந்திரச்சிமிழில் வெளிவந்த முதல் மூன்று பகுதிகளில் விவரிக்கப்பட்டது. அதில் கார்டீசிய இருமைப்பிளவு எப்படி உலகில் 17-ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக்கால பகுத்தறிவு கண்ணோட்டத்தின் அடிப்படையில் நவீன விஞ்ஞானத்தை உருவாக்கியது என்பது விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மனம் என்கிற ஒரு புலம் பிராய்டிய உளப்பகுபாய்வால் எடுத்துரைக்கப்பட்டதற்கு, கார்டீசியம் எப்படி அடிப்படையாக அமைந்தது என்பதையும், அதை ஒட்டி இந்தியாவில் அது எப்படி உள்வாங்கப்பட்டது என்பதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. பிராய்டிய இடிபல் முக்கோணம் எப்படி குடும்ப அமைப்பை உருவாக்கி, அதை சமூகவயப்படுத்தி உள்ளது என்பதையும், அது வளர்ந்துவந்த முதலாளியக் கருத்தைமவிற்கான உளவியல் முதலீட்டை வழங்கியது என்பதும் அதன் அடிப்படையாக விவாதிக்கப்பட்டது.

கார்டீசியப் பிளவின் மற்றொருக் கூறான உடல் என்ற மனித உடல் அதன் தத்துவ அடிப்படையில் எப்படி மருத்துவ ஏகாதிபத்தியத்தின் முதலீடாக மாறி உள்ளது அல்லது மருத்துவ ஏகாதிபத்தியம் ஒன்று உருவாக அடிப்படையாக அமைந்தது என்பதை புரிந்துகொள்ள முயல்வதே இப்பகுதியின் நோக்கம். மருத்துவ ஏகாதிபத்தியம் (Medical Imperialism) என்ற சொல்லின் உட்பொருள், இன்றைய உலகில் மருத்துவம் என்பது கேட்பாரற்ற ஒரு ஏதேச்சதிகார துறையாக மாறி, உலகின் பெரும் முதலீட்டைக் கொண்ட சுரண்டல் நிறுவனமாகி உள்ளது என்பதே.

உலக மருந்துச்சந்தையின் மதிப்பு 300 பில்லியன் அமேரிக்கன் டாலர், இது 3 ஆண்டுகளில் 400 பில்லியன் டாலர்களாக மாறலாம் என அனுமாணிக்கிறது உலக சுகாதரா நிறுவனம் (WHO). முதல் பத்து பெரும் மருந்து நிறுவனங்கள் உலகின் மூன்றில் ஒருபகுதி சந்தையை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளன. இவற்றின் வியபாரம் வருடத்திற்கு 10 பில்லியன் டாலர். அதில் 30 சதமானம் அவற்றின் லாப விகிதம் என்கிறது உ.சு.நி.(WHO). இதில் 6 நிறுவனங்கள் அமேரிக்காவையும் மற்றுமுள்ள 4 நிறுவனங்கள் ஐரோப்பாவையும் சேர்ந்தவை. உலகின் மருந்து மூலதனம் என்பது ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் இல்லை. ஆனால் சுரண்டப்படுவதும், சோதனைகாளக்கப்படுவதும் இவர்கள்தான். அந்த மருந்து நிறுவனங்களின் உடற் தொழிற்கூடம் இந்த ஏழை நாட்டின் ஏழைகள்தான். இவர்கள்தான் அந்த நிறுவனங்களின் உடல்-முதலீடுகள். இவர்கள் உடல்கள் மீதே இந்த மருத்தவ விளையாட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 21-ஆம் நூற்றாண்டில் அமேரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் 85 சதமானம் மருந்து நிறுவனங்களை கொண்ட நாடுகளாகிவிடும் என்கிறது உ.சு.நி.(WHO)[5]. இந்நிறுவனங்கள் தங்கள் லாபங்களில் மூன்றில் இரண்டு பகுதிகளை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவிடுகின்றன. இத்தகைய ஆராய்ச்சிகளால் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சந்தைப்படுத்தி கொள்ளை அடிக்கின்றன. முழு மனித அறிவும் இந்த துறைகளில் திருப்பிவிடப்பட்டு உள்ளது என்றால் மிகையாகது.

உலகச் சுகாதரா நிறுவனம் (World Health Organization) என்கிற நிறுவனம்தான் இன்று உலகின் சுகதாரம் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்கும் பொதுநிறுவனம். கடந்த இருபது ஆண்டுகளாக அதாவது உலகமயம் துவங்கியபின், இந்நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு செவை செய்யும் நிறுவனமாக மாறிவிட்டது என்கிறார் மருத்துவம் பற்றிய நூல்கள் மற்றும் பத்திரிக்கை கட்டுரைகள் எழுதும் சோனியா ஷா என்கிற அமேரிக்க-இந்தியர். இன்று உலக சுகாதாரத்தை தீர்மானிப்பதாக தனியார் நிறுவனங்கள் இந்நிறுவனம் வழியாக அதிகாரம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்[6]. அதாவது கார்பரேட் நிறுவன மருந்து சந்தைக்கான உடல் தயாரிப்பில் இந்த பொது சுகாதார நிறுவனங்களின் பங்களிப்புகளை அம்பலப்படுத்துகிறார். இத்தகைய நிறுவனங்கள் உலகப்பேரரசை கட்டுவதிலும் உலக குடியாண்மை சமூகத்தை உருவாக்குவதிலும், உலகக்குடிமகனாக கார்டீசிய உடல்களை உருவாக்கி நிலைநிறுத்துவதிலும் முக்கிய பங்களிப்பை செய்யக்கூடியவை.

இம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைய உடலியல் மற்றும் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளை முன்னின்று நடத்துவதும், மனித உடலின் பல மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதாக மரபணு பொறியியல், உயிர் தொழில்நுட்பம், உயிர்ப் பொறியியல் என பல புதியதுறைகளில் தனது ஆராய்ச்சிவலையை விரித்தும் உள்ளது. மருத்துவ துறை கைவைக்காத இடமே ஒரு உடலில் இல்லை எனும் அளவிற்கு உடல்கள் மீதான் முற்றதிகாரத்தை நிறுவி உள்ளது. நீரின்றி அமையா உலகு என்ற வள்ளுவத்தை மருந்தின்றி அமையா உலகு என மாற்றி வாசிக்கும் நிலையை உருவாக்கி உள்ளது. வள்ளுவர் சொன்ன நீரைக்கூட மருந்தாக மாற்றிவிட்டது. நன்னீர் என்ற பெயரில் முற்றிலும் இயற்கை சத்து நீக்கப்பட்ட நீரை பருகும் உடல்களாக மாற்றி உள்ளது. உணவுப்பொருட்களை மரபணு நீக்கம் செய்யப்பட்ட செயற்கையாக தயாரித்தளிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கி பரப்புகின்றன. மருந்தால் உருவாகி, மருந்தை தின்று வாழ்ந்து, மருந்தால் சாகும் இன்றைய உடல்களை சுருக்கமாக மருத்துவ-உடல்கள் என்று சொல்வதே பொருந்தமான சொல்லாக இருக்கும். மருந்துகள் அல்லது மருத்துவம் இன்றி இன்று எந்த உடலும் வாழமுடியாத நிலை உருவாகி உள்ளது. உடல்மீதான மருத்துவத்துறையின் இந்த முற்றொருமை அதிகாரத்திற்கான துவக்கத்தை உருவாக்கிய ஒரு தத்துவ விஞ்ஞான கருதுகோளே கார்டீசிய உடல் என்பது.

கார்டீசிய பிளவின் அடிப்படையில் உருவான அறிவியல் வளரச்சியில் உலகெங்கிலும், நாகரீக ஏற்றுமதியை செய்த ஆங்கில ஏகாதிபத்தியம், உலகத்தை ஒரு நிரந்தர போர்பதற்றம் கொண்ட நிலமாக மாற்றியது. மனிதஉடல் அதன் மண்ணிலிருந்து, அல்லது நவீன சொல்லாடலான பிராந்தியத்திலிருந்து, பிரிக்கப்பட்டு, உலகமனிதன் என்பதற்குள் அடைக்கப்பட்டது. இவ்வாறாக, நிலங்களுடன் பிணைந்திருந்த பிராந்தியம் சார்ந்த உடல்கள் ”உலகமனிதன்” என்ற கருத்தாக்கத்திற்கு மாறியது. இந்த உலகமனிதன் என்ற சாராம்சத்தின்மேல், ஒவ்வொரு நிலமும் இறையாண்மைக் கொண்ட நாடாகமாறி அந்த நாட்டுடன் பிணைந்த உடலை ”தேசியமனிதனா”-கவும், சர்வதேசிய பொதுமைக்குள் அடக்கப்பட்டவனை பொதுவான”மனிதனா”-கவும் குறியிடப்பட்டது. இம் மனிதன் காலனியத்தின் விளைவாக உலகப் பொதுவானவனாக மாற்றப்பட்டான். காலனியம் குறிப்பான நிலத்திற்கு தேசியமனிதனையும், உலகப்பொதுவான நிலத்திற்கு இந்த பொது”மனிதனை”யும் உருவாக்கியது. அல்லது கலாச்சார உடல்களின் மேல் மனிதன் என்கிற பொது அடையாளம் வரையப்பட்டது. அதனால் மனிதன் பற்றிய அறிதல்முறை மாறியது.

அப்படி என்றால் காலனிக்கு முந்தைய சமூகங்களில் உள்ளவர்கள் மனிதர்கள் இல்லையா? என்ற கேள்வி எழலாம். அவர்களும் மனிதர்கள்தான், அவர்கள் மற்ற தேசிய எல்லையுடன் ஒப்பிட்டு சர்வதேசியம் அல்லது உலகம் என்கிற பொதுவான அமைப்பிற்குரிய ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட உடலாக கருதப்படவில்லை. ஒரே சமூகத்திற்குள்கூட ஆண்டான், அடிமை, நிறவேறுபாடுகள், சாதி, குழு, கணக்குழு வேறுபாடுகள் கொண்ட வேறுபட்ட உடல்களாகவே இருந்தனர். அந்த சமூகங்களில் சமஉரிமை என்கிற ஒரு சொல்லாடலே இல்லை என்று சொல்லலாம். இன்று சொல்லும் மனித உரிமை போன்றவை எல்லாம் நவீன சமூகத்தின் பொது மனிதக் கண்டுபிடிப்பிற்கு பிறகு உருவாகி வந்த அரசியல் சொல்லாடலே. அல்லது ஒரு அடிமை, ஆண்டானால் தன்னைப்போன்ற உடல் கொண்டு ஒரு மனித சாராம்சம் கொண்டவனாக கருதப்படுவதில்லை.

ஆனால், இன்று ஆண்டான் அடிமை என்று இருந்தாலும், இருவரும் மனிதர்கள் என்ற பொது சாராம்சத்தில் ஒன்று என்ற கருத்தாக்கமே உள்ளது. அதன் அடிப்படையில்தான் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் எல்லாம் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் உள்ள ஏகாதிபத்திய மற்றும் உலகப் பேரரசுகளின் நலன் என்பது வேறு. உலகக் கூட்டமைப்புகள் உருவாகி அது உலகை ஒற்றை அமைப்பாக மாற்றும் போக்கிற்கு பின் இந்த சர்வதேச மனிதன் என்கிற சாராம்சக் கருத்தாக்கம் அரசியல் சார்ந்த ஒன்றாகி உள்ளது என்பதை கவனப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. சர்வதேசவாதத்தின் சாரம்சமே இந்த “உலகமனிதன்” தான். அல்லது மனிதன் என்ற சொல் தரும் சமூக விளக்கம் நவீன சமூக சொல்லாடலில் உள்ளதைப் போன்றது அல்ல பண்டைய அல்லது செவ்வியல்கால சமூகங்களில். இன்றைய மனிதன் என்கிற வரையறை முற்றிலும் புதிய ஒன்று.

இந்த உலகமனிதன் கார்டீசியத்தால் உடல்/மனம் என்ற இருமைப்பிளவாக கட்டமைக்கப்பட்டவன். இதன் தத்துவ பின்புலமாக உலகில் இருமைவாதம் என்பது ஆதிக்க கருத்தியலாக மாறியது. முரண்பாடுகள் அதன் மோதல் அதன் வளர்ச்சி என்கிற இருமைவாத இயங்கியல் ஒன்று உருவானது ஹெகல் துவங்கி மார்க்ஸ்வரை இந்த இருமைப்பிளவின் அடிப்படையில் இயங்கியல் ஆய்வுமுறை ஒன்று கட்டமைக்கப்பட்டது தத்துவ தளத்தில். உடல் மனம் என்ற பிரிவினை உடலியல் மற்றும் உளவியல் என்கிற விஞ்ஞானங்களை உருவாக்கியது சமூக தளத்தில். இதன் அடிப்படையில் வளர்ச்சியடைந்ததே ஆங்கில மருத்துவத்துறை.

‘1500ஆம் ஆண்டு முதல் 1700-ஆம் ஆண்டுவரை மனிதசிந்தனையில் ஒரு மிகப்பெரும் மாற்றம் உருவாகியது. உலகை பற்றிய சித்திரமும், அது குறித்த சிந்தனையும் மாறியது. இது மேற்கத்திய நாகரீகத்தின், சிந்தனைமுறையின் அடிப்படையாக அமைந்தது. இன்றுவரை அது உலகை ஆதிக்கம் செய்துவருகிறது. இதுவே மனித சிந்தனைக்கான ஒரு சட்டகமாக உள்ளது. அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் பொருண்மையான நிகழ்வுகளுக்கும், ஆன்மா அல்லது ஆன்மீகத்திற்கும் உள்ள உறவை கிறித்துவ சர்ச்சும், அரிஸ்டாட்டிலிய சிந்தனைகளுமே தீர்மாணித்தன[7]. 13-ஆம் நூற்றாண்டில் தாமஸ் அக்வினாஸ் அரிஸ்டாட்டிலின் இயற்கை பற்றிய முறைகளை கிறித்துவ இறையியல் மற்றும் அறவியலுடன் இணைத்து வைத்தார்[8]. மத்திய காலம்வரை இதுவே முக்கியமான பார்வைநிலையாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் உலகம் என்பது ஒருவகையான எந்திரம் என்கிற எண்ணம் கட்டமைக்கப்படுகிறது. நவீன யுகத்தின் ஒரு உருவகமாக இந்த உலக-எந்திரம் என்பது அமைந்தது. அதாவது, உலகம் எந்திரமயமானதாக விளக்கப்பட்டது. அல்லது அறிவியல் என்பதின் உள்ளார்ந்து உள்ள பகுத்தறிவுவாதம் உருவகிக்கும் பிம்பம் எந்திரமயமாதலுடன் உறவு கொண்டதாக மாறியது.

உலகில் அறிவியல் என்பது 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்பான மதத்தின் சொல்லாடல் களத்தை பகுத்தறிவு என்ற நவீனவாதச் சொல்லாடலால் பதிலீடு செய்தது. உலகம் அறிவியல் சார்ந்த மற்றும் பகுத்தறிவு சார்ந்த ஒன்றின் விளக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது. பண்டைய மதவாதம் உள்ளிட்ட சொல்லாடல்கள் பிற்போக்காக மாறியது. அறிவியல் அறிவின் உயர்ந்தபட்ச உரைகல்லாக மாறியது. அறிவியலால் அங்கீகரிக்கப்படாதவை அனைத்தும் பிற்போக்கு என்று ஒதுக்கப்பட்டன. அறிவின் புராதன வடிவங்கள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அறிவு என்பது சோதனைகள், நிரூபணங்கள், அதன் அடிப்படையிலான கோட்பாடுகள் என மாறியது. மதங்களின் வன்முறை சார்ந்த உலகம் அறிவியலில் உலகப்போர்களாகவும், கலாச்சாரம் சார்ந்த உலகம் நாகரீகமாகவும் சொல்லாடப்பட்டது. போர்களும், நாகரீகமும் ஒன்றை ஒன்று பதிலீடாக்கிக் கொள்ளும் இரண்டு அரசியல் சொல்லாடல்களே. இன்றைய உலகின் போர்களை நாகரீகங்களுக்கு இடையிலாக மோதல்களாக (Clash of civilizations) சித்தரிப்பதுவே ஏகாதிபத்தியம் மற்றும் உலகப்பேரரசின் வரலாற்று நியாயமாக ஆக்கப்பட்டுள்ளது. இத்தகைய போர்களுக்காகவும், போர்களாலும் உருவான துணைசக்திகளே மத அடிப்படைவாத சக்திகள். குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள்.

பகுத்தறிவுவாதம் வழியாக நாகரீகம்(/)காட்டுமிராண்டித்தனம், மேற்கத்தியம்(/)கீழைத்தேயம் என்பதாக உலகம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அதை தலைகீழாக்கி நாகரீகம்(\)காட்டுமிராண்டித்தனம், மேற்கத்தியம்(\)கீழைத்தேயம் என்பதான முன்-நவீன மற்றும் பின்-நவீன எதிர் சொல்லாடல்கள் கட்டமைக்கப்படுகின்றன. காலனிய எஜமான நாடுகளின் மிகை உற்பத்தி, மிகை வாழ்க்கைமுறை உருவாகி அதிலிருந்து தப்பிச்செல்லும் உத்தியாக பின்நவீன-சமூகம் பற்றிய வர்ணனைகள் துவங்கின. உலகம் காலனியத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சர்வதேச அமைப்புகளின் தளத்திற்கு மாற்றப்பட்டது. காலனிய நாடுகளில் காலனிய எச்சங்கள் இயல்பாக மாற்றுப்பட்டுவிட்ட பின்காலனிய சமூகங்கள் உருவாகின. இச்சமூகங்களில் ஒரு கலப்பினமாக கார்டீசிய உடல்களாக உலகமனிதன் உருவாகியுள்ளான். இயல்பாக உடல்/மனம் என்கிற கார்டீசிய பிளவை ஏற்றுக்கொண்டவிட்ட உடல்கள் இவை.

இவ்வாறாக, உடல்/மனம் என்கிற இப்பிளவு இன்றைய உலகின் அடிப்படையாக மாறியது. உடலை உயர்த்தும் கோட்பாடுகள் ஒருபுறமும், மனதை உயர்த்தும் கோட்பாடுகள் மறுபுறமும், இதை ஒட்டிய அறிவாய்வு முறைகளும் உருவாயின. பண்டைய உலகமும் அதன் அறிவும் முற்றிலும் அருங்காட்சியகப் பொருட்களாக மாற்றப்பட்டன. மன்னர்கள் தங்களது வெற்றி நினைவாக சேகரிக்கத் துவங்கிய காட்சிக்கூடங்கள், அந்த மன்னர்களின் பொருட்களையும் வாழ்க்கை முறையையும் உள்ளடக்கிய பொதுப்பரப்பிலான அருங்காட்சியமாக மாறியது. ஆக, அருங்காட்சியக சிந்தனைகளாக மாற்றப்பட்ட பண்டைய மனித உடல் பற்றிய ஒருமையான அல்லது முழுமையான அல்லது தொகுப்பான வரையறைகள் நீக்கப்பட்டு அவ்விடத்தில் மனித உடல்பற்றிய கார்டீசிய பிளவான உடல்/மனம் என்கிற பிளவு நிலைகொண்டது.

தெகார்தேவை பொறுத்தவரை உடல் என்பது இரண்டாம் நிலையானது. சிந்திக்கும் மனமே முதன்மையானது. தெகார்தேவின் உடல் பற்றிய வரையறை என்பது இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று 17-ஆம் நூற்றாண்டில் (1628) வில்லியம் ஹார்வி என்பவரால் வெளியிடப்பட்ட இரத்த ஓட்டம் பற்றிய உடற்கூற்றியல் ஆய்வு முடிவுகள், இரண்டு எந்திரவியல் தொகுப்புரைகளைக்கொண்டு இயற்கையை கணிதமயப்படுத்துதல்[9]. இவ்விரண்டு அடிப்படைகளில் இருந்து மனித உடல் என்பது ஒரு எந்திரமாகவும், அதன் நோய்த்தன்மை என்பது குறையுடைய எந்திரமாகவும் கருதப்பட்டது. அதனால் எந்திரத்தின் பாகங்களை பழுதுபார்ப்பதைப்போல, மனித உடலின் பாகங்களை பழுதுபார்க்கும் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவதுறையின் தத்துவ மற்றும் கோட்பாட்டு அடிப்படைகள் உருவாயின.

வில்லியம் ஹார்வி[10]யின் இரத்த ஒட்டம் என்பது உடல் என்ற மூடுண்ட அமைப்பிற்குள் நிகழும் சுழற்சியையும், அதனது சுய உற்பத்தி மற்றும் சுய இயக்கம் என்பதையும் விளக்கியது. இதனைக்கொண்டு தெகார்தே உடலை ஒரு தானியங்கி எந்திரமாக கற்பிதம் செய்து தனது கோட்பாட்டை வடிவமைக்கிறார். வில்லியம் ஹார்வியும், தனது இரத்த ஓட்டம் பற்றிய கருத்தாக்கத்தை பல்வேறு எந்திரங்களின் பணிகளோடு ஒப்பிட்டே வடிவமைத்தார். அப்போது இயக்கத்தில் இருந்த ஹைட்ராலிக் எனப்படும் நீராற்றல் இயக்க பம்புகளின் பணி அவரது விளக்கத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது தெகார்தேவின் உடலின் எந்திரவியல் விளக்கத்திற்கு போதுமான தத்துவ பின்புலத்தை தந்தது என்றாலும், ஹார்வியின் இதயமே இந்த இரத்த ஓட்ட செயலுக்கு முக்கியத்துவமானது. அது நீர் சுழற்சி பம்பு போன்று செயல்படுகிறது என்பதை தெகார்தே முழுமையாக ஏற்காமல், இதயம் என்பது இரத்த ஓட்டத்தினால் பெறும் வெப்பத்தில் இயங்குவதான ஒரு விளக்கத்தை தந்தார். இதயத்தின் இந்த மையமான செயலை மாற்றி மனம் அல்லது சிந்தனைப்பற்றிய ஒரு உருவக விளக்கமாக அதற்கான ஒரு தத்துவ பின்புலமாக அவர் தனது ”காஜிட்டோ” எனப்படும் கோட்பாட்டை உருவாக்குகிறார். அதில் சிச்தனையே மையமானது, உடல் இரண்டாம்தரமானது என்றும், ஒருவகையான உடலின் பௌதீக இறுப்பை மறுக்கும் சிந்தனை முதன்மை வாதத்தை முன்வைத்தார்.

இறவா ஆன்மா (immortal soul) என்பது தெகார்தேவின் ஒரு கோட்பாட்டு அடிப்படை. அவரது பகுத்தறிவால் ஆதாரமற்றதான இறப்பிற்கு பிறகான வாழ்வு பற்றிய சந்தேகம் இறவா ஆன்மா பற்றிய கருத்திற்கு ஒரு பகுத்திறவு சார்ந்த விளக்கத்தை தரமுனைகிறது. இறவா ஆன்மா என்பதை விஞ்ஞானரீதியாக உருவாக்க, ஆன்மாவின் கூடான உடலை மரணமற்றதாக்குவது அவசியம். அந்த அவசியத்தை மருத்துவ துறை உருவாக்கும் என்ற நம்பிக்கையை தெகார்தே கொண்டிருந்தார். தனது ஆராய்ச்சியின் இறுதி இலக்கு சுகாதாரத்தை மீட்டெடுப்பது பற்றியதே என்றார். ஆரோக்கியமான உடல்களை உருவாக்க அறிவியல் மருத்துவதுறையில் செலுத்த வேண்டிய கவனத்தை அனுமானித்து வெளியிட்டார். தெகார்தேவின் பிளவில் இறவா ஆன்மா என்ற இறையியல் சார்ந்த கருத்தாக்கமே மருத்துவத்துறையின் அடிப்படையாக அமைந்தது என்பது மிகைக் கூற்றாகாது.

உடல் ஆத்மா என்கிற பிரிவு பண்டைய கிரேக்க, இந்திய மற்றும் கீழ்திசைவியல் தத்துவ சிந்தனைகளில் இருந்துவந்துள்ளது. இப்பிரிவு ஒரு பிளவாக இல்லை. அப்பிரிவில் உடல் என்பது ஆத்மாவின் சிறை என்பதாகவும், உடல் என்பது கூடு அதனுள் ஆத்மா உள்ளது என்பதாகவும் உருவகப்படுத்தப்பட்டிருந்தது. கிரேக்க பிளேட்டோ, அரிஸ்டாட்டில் உள்ளிட்டவர்களில் இது நுட்பமாக வேறுபட்டாலும், இந்த அடிப்படை பிரிவை அவர்களும் முன்வைத்தனர். இந்திய தத்துவத்திலும் உடல்/ஆன்மா என்கிற பிரிவு இருந்தது. ஆனால், அவற்றை ஒன்றிற்கு ஒன்று எதிரானதாக பிளவுகொண்டதாக பார்க்கும் பார்வையில்லை. ஆனால், அவற்றிற்கிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் போக்கு இருந்தது. எது முதன்மையானது என்கிற வாத-விவாதங்கள் இருந்தது. பொதுவாக ஆன்மா என்பதை தூய்மையானதாகவும், உடல் என்பது தூய்மையற்றதாகவும், ஆன்மா அழிவற்றது உடல் அழியக்கூடியது என்பதாகவும் இந்த தத்துவ விவாதங்கள் பல முகாம்களை உருவாக்கி வைத்திருந்தன.

வரலாற்றில் முதன்முறையாக தெகார்தே இவற்றை ஒன்றிற்கு ஒன்று முரணான பிளவுகளாக மாற்றுகிறார். உடல் என்பது வாழ்வின் செயல்பாடுகளையும், ஆன்மா என்பது சிந்தனை செயல்பாடுகளையும் கொண்ட ஒன்றிற்கு ஒன்று முரணானது என்கிற இருமை பிளவை உருவாக்குகிறார். அதற்கான பகுத்தறிவுசார்ந்த விளக்கங்களை உருவாக்குகிறார். மனிதன் என்பவன் ஒரு ஆன்மீக ஜீவி என்பதால் மேற்கத்திய கிறித்துவம் உடல் ஆன்மா என்பதை ஒருமையாக பாவித்தது. அது உடலை ஆத்மாவிலிருந்த பிரித்து அதனைக் கூறுபோட்டு மருத்துவம் செய்வதற்கான அதிகாரத்தை மறுத்து வந்தது. தெகார்தே தனது இந்த பிளவின் வழியாக உருவாக்கிய தத்தவ சிந்தனை, ஒருமை எனகிற மாயையை உடைத்து உடலை, ஆத்மாவிலிருந்து பிரித்து மருத்தவத்திற்கான அனுமதியை தத்துவரீதியாக வழங்கியது[11]. வளர்ந்துவந்த முதலாளித்துவத்தினால் இப்பார்வை உலகப்பார்வையாக கட்டமைகிறது. உடல் என்பதை அதன் மனம் என்கிற ஆன்மீக வாழ்விலிருந்து பிரித்து ஒரு உழைப்பு எந்திரமாக மாற்றப்பட்டதே முதலாளித்துவத்திற்கான அடிப்படை முதலீடாக மாறியது.

பிளவு முழுமை என்ற சிந்தனைகளின் பிம்பம் குறித்து இங்கு புரிந்துகொள்வது அவசியம். பிளவு என்பது கீழ்மையாகவும் முழுமை என்பது முதன்மையாகவும் கருதப்படுகிறது. மனம் என்பது பிளவற்றது, உடல் பிளவுபடக்கூடியது என்பதே தெகார்தே இருமைவாதத்தின் வழிப்பெறப்படுவது. பிளவு என்கிற பிம்பம் உயிர் தோற்றத்தின் அடிப்படையான ஒன்று. அதாவது ஒரு செல் உயிரியின் பிளவு என்பது புதிய உயிரியின் தோற்றமாகிறது. இப்பிளவு என்பது உடலாக முழமையடைந்த உயரிகளிடம், இணைப்பின் மூலம், புதிய உயிர் உருவாக்கமாக மாறுகிறது. அதாவது பிளவு என்கிற செயலில் உருவாகிய உயர்ச்சூழல், இணைதல் என்கிற முழுமையில் முடிந்து உள்ளது. ஆக, பிளத்தல் என்பது ஒரு ஆதி உயிர் உருவாக்க செயல் எனில், இணைதல், கலத்தல் மூலம் புதிய உயிர் உருவாக்க செயல் நடைபெறுகிறது. அல்லது பிளவுண்ட ஒரு உடல் மற்றும் உயிர் தனது பிரிதுபாகத்தை தேடி முழுமையடையும் ஒரு புராணிகத் தன்மை இந்த முழுமை என்பதில் வெளிப்பாடு கொள்கிறது. அல்லது முழுமை என்கிற பிம்பம் இந்த இணைத்தல், கலத்தல், புணர்தல் என்பதன் தோற்ற உருவகமாக அமைந்து உள்ளது. அல்லது பிளவு என்கிற இயக்கத்தை முழுமை என்கிற நிலை முடிவுக்கு கொண்டுவருகிறது. உடலும் மனமும் இணைந்த முழுமையை பிளவுபடுத்தி மனதை ஒரு முற்றுமுழுதான முழுமையாக மாற்றிவிடுகிறது. உடல் என்பது மனதின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

எனவே முழுமை என்பது வளர்ச்சிக்கானதாக அமையாமல், வளர்ச்சியை நிறுத்துவதாக உள்ளது. இந்த வளர்ச்சியின்மையை நிலைத்தன்மையாக அதாவது இயற்பியலில் சொல்லும் இனர்ட்சியா (Inertia) என்கிற நிலை எனலாம். ஆற்றல்கள் இயக்கமற்று கட்டிறுகிய நிலை என்பதே இந்த இயக்கமற்ற நிலை அல்லது வளர்ச்சிமுடிந்த நிலை என்பது. ஆக, முழுமை என்பது அல்லது முழுமையை நோக்கிய தத்துவம் என்பது நிலைத்தன்மைக்கானது. இயக்கமற்றது. தெகார்த்தே சிந்தனை என்பதை இப்படி ஒரு முழுமையை நோக்கி திருப்புகிறார். ஆனால் உடலை ஒரு பகுக்கக்கூடிய எந்திரமாக மாற்றுகிறார். சிந்திக்கும் எந்திரமாக. அல்லது சிந்தனைக்கான வெளியில் வாழும் ஒரு அங்கக உயிர்ம உடலாக இல்லாமல், சிந்திக்கும் என்ற செயலிற்கான ஒரு எந்திர உடலாக முன்வைக்கிறார். அதனால் உடலின் உயிர்மச்சூழல் சார்ந்த அனுபவங்கள் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் கொள்ளாத, ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட எந்திரமாக எந்த சூழலிலும் நிலைப்பெறக்கூடிய ஒன்றாக மனித உடலை முன்வைப்பதாகிறது. அதனால் உலகெங்கிலும் மனித உடல் என்பது பொதுவானதாக, தனது குறிப்பான உயிர்ச்சூழல் அனுபவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு எந்திரமாக மாற்றப்பட்டு உள்ளது. அதனால்தான் ஒரு அமேரிக்கனின் உடலும், ஆப்பிரிக்கனின் உடலும், இந்தியனின் உடலும் உலகின் இன்னபிற உடல்களும் ஒரே எந்திரக்கட்டமைவைக் கொண்டதான ஒரு சிந்தனைப் பின்புலமும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதனால் உலக மனிதன் என்பவன் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட எந்திர உடலாக மாற்றப்பட்டதால், அவனது உடல் மருத்துவம் துவங்கிய எல்லா துறைகளிலும் ஒரு சோதனைக்கூடமாகவும், பழுதுபார்க்கக்கூடிய எந்திரமாகவும் மாற்றப்பட்டு உள்ளது. இந்த கருத்தியலே இன்றைய நவீன அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை தத்துவமாக உள்ளது. இதிலிருந்தே இந்த மருத்துவத்தின் அனைத்து கேடுகளும், நலன்களும் துவங்குகிறது.

17-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே உடலை எந்திரமாக பாவிக்கும் முறை இருந்து வந்தாலும், தெகார்தேவின் கார்டீசிய எந்திர முறைமை என்பது அதிலிருந்து தனித்துவமானதாக அறிவியல் மற்றும் பகுத்தறிவு சொல்லாடலுக்கான அடிப்படையாக மாறியது என்பதே முக்கியம். இந்திய தத்துவ சிந்தனைகளில் எந்திரம், மந்திரம், தந்திரம் என்ற சிந்தனைமுறைகள் உண்டு. அந்த எந்திரம் என்பது யந்த்ரா என்கிற சமஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம். அது ஒரு குறிப்பட்ட வரைபடத்தை ஸ்ரீசக்ரா, வாஸ்து யந்திரம் போன்றவை வைத்து சில பரிகாரங்கள், அனுகூலங்கள், பிரதிகூலங்களைப் பெறவென வரையப்படும் ஒன்று. அதற்கும் இங்கு நாம் பேசும் எந்திரங்களுக்கும் தொடர்பில்லை என்பதை கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். தமிழில் Machine என்பதற்கு எந்திரம் என்ற சொல்லே ஆளப்படுகிறது. இது மெக்கானிக்கல் எனப்படும் இயக்கத்தன்மைக் கொண்ட கருவிகளின் தொகுப்பாக உருவாக்கப்படும் நவீன எந்திரங்கள் என்பதை குறிப்பது.

கார்டீசிய எந்திரம் என்பது உடல்/மனம் என்கிற பிளவைக் கொண்ட ஒரு மனித எந்திரம். அது உடலை பல உதிரி பாகங்கள் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு எந்திரமாக பார்க்கிறது. அதாவது தெகார்தே மனித செயல்பாடுகளை எந்திரங்களின் மொழிக்கு மாற்றினார். அதன் விளைவு வாழும் உயிர்கள் அதனது உயிர்ச்சூழலிருந்து பிரிக்கப்பட்டு விடுகிறது. மனிதன் இயற்கையிலிருந்து பிரிக்கப்படுகிறான். அதனால் மனிதஉடல் இயற்கையின் அங்ககக் கூட்டிணைவிலிருந்து பிரிந்த தனித்த பல கருவிகளின் கூட்டிணைவானதாக பார்க்கப்படுகிறது. உடல் என்பது பல அங்ககப் பொருட்களின் எந்திரவியல் தொகுப்பாக பார்க்கப்படுவதால், அந்த அங்ககப் பொருட்களோடு உறவு கொண்டு எந்திரங்களின் பாகங்கள் தனித்ததாகப் பார்க்கப்படுகிறது. அதாவது பகுக்கும் தன்மைக் கொண்ட ஒரு தொகுப்பு. நுண்கணிதத்தில் (கால்குலஸ்) வரும் பகுப்பு (டிபரன்சியல்) மற்றும் தொகுப்பு (இன்டகரல்) போன்றது. ஒரு பாகம் பழுதடைந்தால் அந்த பாகத்தை சரி செய்வதால் மொத்த எந்திரமும் பாதிக்காது என்கிற ஒரு பகுக்கப்பட்ட சிந்தனையைக் கொண்டது. ஒரு உடலின் ஒவ்வொரு உருப்பையும் தனித்த முழுமையான ஒரு உதிரிப்பாகமாகக் கருதுவது. அது மற்ற பாகங்களோடு கொண்டு உள்ள உறவை பிரித்து தனியானதாகப் பார்ப்பது. உடலை ஒரு முழுமையாக இணைக்கக்கூடிய மனம் என்கிற செயலகம் தனியானதாக உடலில் இருந்து பிரிக்கப்பட்டதால், உடல் என்பது மையமற்றதாக மாறுகிறது. அதன் இயக்கவிதி என்பது மனம் என்கிற முழுமையை பாதிப்பதில்லை.

தெகார்தேவின் மனித எந்திரம் என்கிற கருத்தாக்கத்தின் மூலம் கிறித்துவ இறையியல் அடிப்படையில் உருவானதே. மரபான கிறித்துவத்தின் உடல் ஆன்மா ஒருமையிலிருந்து உடலை அவர் விடுவித்தாலும், ஆன்மா என்பதை முதன்மைப்படுத்தி தூய்மையானதாக, புனிதமானதாக மாற்றி, கிறித்துவ உற்பத்திக் (படைப்புக்) கோட்பாட்டை உடலின் உற்பத்திக்கான அடிப்படையாக எடுத்துக் கொள்கிறார். முதல் மனிதரான ஆதாமை கடவுள் மண்ணிலிருந்து படைத்து மூச்சுக்காற்றை ஊதியதாக சொல்லப்படும் பைபிள் சார்ந்த கிறித்துவ இறையியலின் ஒரு அறிவியல் விளக்கமே தெகார்தேவின் மனித-எந்திரம் பற்றிய உருவகம் தருகிறது. ஒரு கைவிஞைன் எப்படி ஒரு பொருளை உருவாக்குகிறானோ, அதுபோன்றே கடவுளும் மனிதன் என்கிற உடலை உருவாக்குகிறார். அதாவது ஒரு எந்திரத்தை உருவாக்க ஒரு தொழில்நுட்பமும், அதற்கான கலைஞனும் தேவைப்படுவதைப்போல, தெகார்தேவின் இந்த எந்திர உருவகம், மறைமுகமாக படைப்பாளி அல்லது கடவுள் பற்றிய கருத்தாக்கத்தை தனது சிந்தனைக்குள் கொண்டு உள்ளது. அன்றைக்கு உருவான எந்திரமான கடிகாரத்தை வைத்து தெகார்தே தனது மனித எந்திரக் கோட்பாட்டை வரையறுத்தது அதனால்தான். பகுத்தறிவாக இதை பறைசாற்றிய போதிலும், அங்ககக் கூட்டாக உருவான ஒன்றை, எந்திரமாக மாற்றி எந்திர உற்பத்திக்கான ஒரு ஆளுமையை ஊகிக்க வேண்டிய அடிப்படைகளைக் கொண்டிருக்கிறது. இயற்கையான மனித உடலை செயற்கையானதாக மாற்றுகிறது. மனிதன் இறைவனால் செய்யப்பட்டவன் உருவாக்கப்பட்டவன் என்பதே இயற்கையானவன் என்பதை மறுப்பதுதானே?

மனித எந்திரம் என்ற உருவகம் கார்டீசிய உடல் என்கிற கருத்தாக்கத்தின் வழியாக, ஒரு கடவுளை அனுமானிப்பதாக உள்ளது என்பதே முக்கியம். அந்த கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்த முதலாளித்துவ மூலதனமும், அதன் உபவிளைவான விஞ்ஞான வளர்ச்சியுமே. கடவுளின் புனித உலகம், இங்கு மறுவரையறை செய்யப்படுகிறது, ஒரு படைப்பாளி, தொழில்நுட்ப கலைஞன் என்பதாக. கடவுளின் இடத்தை ஒரு படைப்பாளிக்கு, தொழில்நுட்ப கலைஞனுக்கு மாற்றிய பெருமை தெகார்தேவையே சாரும். கடவுளின் இடத்தை நவீனத்துவ சமூகத்தில் படைப்பாளி நுட்பமாக பிடித்தது இப்படித்தான். ஆக, கார்டீசியத்தில் இயற்கையும், கலையும் (செயற்கையும்) ஒண்றிணைந்து விடுகிறது. இயற்கை கடவுளால் படைக்கப்படுவதைப்போல, கலையும் படைப்பாளியால் படைக்கப்படுகிறது என்பதே இதன் அடிப்படையில் பெறப்படுவது. அதாவது கடவுளின் இடத்தை படைப்பாளி அல்லது ஆசிரியன் இட்டு நிரப்புகிறான் நவீனத்துவத்தில் என்பதன் பொருள் இதுவே. எனவேதான், நீட்ஷே கடவுள் இறந்ததை அறிவித்ததைப்போல, ரோலன் பார்த்தும், மிஷல் பூஃக்கோவும் ஆசிரியனின் இறப்பை அறிவிக்க வேண்டிவந்தது.

ஆக இயற்கையின் தனித்தன்மையை ஒரு செயற்கை தொழில்நுட்பமாக பார்க்கும் பார்வை, இயற்கைக்கு சமமான ஒரு ஆற்றல் கொண்டவனாக மனிதனை மாற்றுகிறது. நவீனவிஞ்ஞானம் செயற்கை என்கிற ஒரு இணை உலகை படைப்பதன் வழியாக, இயற்கை என்பதை தனது எல்லைக்குள் உட்பட்டதாக கட்டமைக்கிறது. அதாவது செயற்கை என்பதை நிலைநிறுத்த இயற்கை என்கிற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன் விளைவு, இயற்கையை வெல்லும் அல்லது இயற்கைக்கு மேலான ஒருவனாக மனிதன் தன்னைக் கருதிக்கொள்ளும் நிலைக்கு நகர்த்துகிறது. ஒருபடிமேலாக, இயற்கைக்கும் கலைக்கும் உள்ள வேறுபாட்டை அழித்து, கடவுள் இடத்தை மனிதன் பிடித்து படைப்பாளியாகி, இயற்கையை தனது அடிமையாகக் கருதும் நிலை உருவாகுகிறது. இயற்கையின் பிரதியாக இருந்த மனிதனை இயற்கைக்கான உற்பத்தியாளன் என்கிற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. மனிதன் கடவுளைப் படைத்ததைப்போல, செயற்கை, இயற்கையை படைத்தது.

இயற்கையின்மீதான அனைத்த மேலாண்மை உரிமையும் பெற்றவனாக மாறும் மனிதன், தனக்குள் கொண்டிருக்கும் தன்னககங்கார பிம்பம் என்பது இந்த கார்டீசிய மனித எந்திர கருத்தாக்கத்தின் படைப்பாளி என்கிற உருவகமே. கார்டீசியம் சிந்தனையே முதன்மையானது, அதுவன்றி தன்னையே தான் அறியமுடியாது, தான் என்ற ஒரு இருப்பே தனக்கு சிந்தனையில்லாமல் இல்லை என்பதால், கார்டீசியத்தின் ஆன்மா என்பதே இந்த சிந்திக்கும் அறிவு என்கிற தன்னகங்காரத்தின் மையமாக உள்ளது. மனிதன் சுயம் என்கிற தனது சிந்தனை சார்ந்த ஒரு மையத்தை பெறுவதால், முற்றிலும் தனியனாக தன்னை மாற்றிக் கொள்கிறான். அவன் தன்னை பொதுமனிதனாக உணருவதற்கே கார்டீசிய உடல் தேவைப்படுகிறது. கார்டீசிய ஆன்மாவோ அவனை தனிமனிதனாக சிந்திக்கும் ஜீவியாக வைத்து உள்ளது. கார்டீசிய உடல் என்பது மனிதனது உள்ளடக்கம் மற்றும் வடிவத்திற்கான ஒரு பொதுசட்டகம். இது சில எந்திரவியல் விதிகளைக் கொண்டது. உலகெங்கிலும் ஒரு எந்திரம் செயல்படுவதைப்போல, மனித உடல் எந்த சூழலிலும் ஒரு பொது எந்திரத்தைப் போல செயல்படக்கூடியது. இந்த பொதுமைப்படுத்தப்பட்ட மனித எந்திர உடல் கருத்தாக்கமே, இன்றைய மருத்துவ ஏகாதிபத்தியத்தின் முதலீட்டு மையமாக உள்ளது.

- ஜமாலன் jamalan.tamil@gmail.com (24-12-2013) – மந்திரச்சிமிழ் – ஆகஸ்ட் 2013 – ஜீன் 2014

அடிக்குறிப்புகள்.


[1] “I consider the human body as a machine . . . . my thought . . . . compares a sick man as ill made clock with idea of a healthy man and a well made clock.” - Rene Descartes.

[2] I am body entirely and nothing besides; and soul is only a word for something in the Body. - Frederic Nietzsche

[3] ‘Discipline “makes” individuals; it is the specific technique of a power that regards individuals both as objects and as instruments of its exercise’ – Michel Foucault.

[4] “Medicine is a social science, and politics is nothing more than medicine on a grand scale.” - Rudolf Virchow. Father of Social Madicine (1821-1902). ஜெர்மானிய மருத்துவரான இவர் அரசியலில் ஈடுபட்டவர். சமூக மருந்தியலை உருவாக்கியவர். அரசியல் என்பது மக்கள் உடல் நலம் சார்ந்த ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவர்.

[5] Trade, foreign policy, diplomacy and health – Pahrmaceutical Industry - www.who.int/trade/glossary/story073/en/#

[6] How Private Companies are Transf orming the Global Public Health Agenda – Sonia Shah – Nov. 9, 2011 Foreign Affairs. சோனியா ஷா – அமேரிக்காவில் இந்திய பெற்றோருக்குப் பிறந்த அமேரிக்கர். த பாடி ஹண்டர் (The Body Hunter) என்கிற முக்கியமான நுலை எழுதியுள்ளார். மருத்தவ ஆராய்ச்சிக்கு ஏழைநாட்டு மக்கள் பலியிடப்படுவதையும், மருந்து நிறுவனங்கள் பற்றிய ஆராய்ச்சி நூல் அது. தொடர்ந்து கார்பரெட்டுகளின் மருத்துதுறை அதிகாரம் பற்றி எழுதிவருபவர்.

[7] Ch.2., Page:54 ”Body and Medicine: A Phenomenological Critique’ - Hema P.N – Research Paper submitted by Hema P.N. - Department of Philosophy , Sree Sankaracharya University of Sanskrit, Kalady.

[8] Ch.2., Page:54 மேற்படி ஆய்வுக்கட்டுரை.

[9] Ch.2., Page:59 மேற்படி ஆய்வுக்கட்டுரை.

[10] வில்லியம் ஹார்வி (1578-1657) ஆங்கில மருத்துவர். மனித முளை மற்றும் இதயத்தின் வளியழுத்தமுறையால் இரத்தம் ஓட்டம் பற்றிய கோட்பாட்டை முதன்முதலாக முன்மெழிந்தவர்.

[11] Mehta N.,(2011), Mind-body dualism: A Critique from a Health Perspective. In: Brain, Mind and Consciousness: An International, Interdisciplinary Perspective (A.R. Singh and S.A. Singh eds.), MSM, 9(1), p202-209. (http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3115289/)

2 comments:

COX DRAVID சொன்னது…

தமி்ழில் நல்ல கருத்தாக்கம் ஜமாலன்!'டெக்கார்ட்டேயைத் தெரியுமா' என்ற நகுலனின் கேள்விக்கு டெக்கார்ட்டேயைத் தெரிந்த தாங்கள் எல்லோருக்கும் டெக்கார்ட்டேயை தெரிய வைக்க முயன்றவிதம் பாராட்டுதற்குரியது!
மேலைத் தத்வக் கோட்பாடுகளை கீழைத்தத்வ கோட்பாடுகளுடன் இணைத்த நகுலனின் 'தேஹம்-தேஹி'- 'பகுதி-விகுதி' -'தார் ரோட்டில் கார் ஓடிற்று'-'நண்பா உனக்கு ஜே. கிருஷ்ண மூர்த்தியைத் தெரியுமா' என்கின்ற நகுலனின் தத்வக் குறியீடுகளின் பின் தொடர்வாக தமிழ் இலக்கிய படைப்புகளில் கடவுள் செத்தபின்னும்,ஆசிரியன் செத்துவிட்டான் என்னும் பொழுதிலும் உங்கள் எழுத்துக்களில் மனித உடல் இயந்திரம் தார் ரோட்டில் கார் போல வேகமாக மருத்துவ உடல் ஊர்தி 108 இன் மரணாவேசமாக ஓடியது மிக சிறப்பு!

ஜமாலன் சொன்னது…

உங்கள் பின்னோட்ட பகடிக்கு நன்றி. ஏதோ எங்களால் முடிந்த காரை தார் ரோட்டில் ஓட்டுகிறொம். உங்களுக்கு தெரிந்தவகையில் நகுலனை ஓட்டியாகக் கொண்டு மரணித்த ஆசிரி கடவுள் ஊர்திகளை ஓட்டினால் நல்லதுதான். எங்கள் கார்கள் தானாகவே பின் தங்கிவிடும். அது இன்னும் மிகமிகச் சிறப்பாக இருக்கும்.

ஜமாலன். Blogger இயக்குவது.