உலக புத்தக தினம்

180px-WBD_logo_08_RGB
உலகபுத்தகதினத்தை ஒட்டி 2008-ல் எழுதப்பட்ட பதிவு இது. மீள்பதிவு செய்யப்படுகிறது நணபர்களின் மறுவாசிப்பிற்காக. சென்னை வந்து இரண்டு புத்தக சந்தைகளுக்கு போனேன். புத்தக விற்பனை என்பது அத்துனை சுவராஸ்யமாக இல்லை. கூட்டமோ மிகக்குறைவு. தமிழில் நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை காணமுடிந்தது. குறிப்பாக டான் குவிக்ஜாட்.  புத்தக வாசிப்பு என“பதை ஒரு இயக்கமாகவும், புதிய தலைமுறையினருக்கு பழக்கமாகவும் மாற்றவேண்டியது இன்றைய அவசிய தேவையாக உள்ளது. 



ஏப்ரல் 23 - இன்று ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். இந்த  நாளை அறிவிக்க காரணமான இருவர் மிகைல் சொ்வாண்டிஸ் மற்றும் ஷேக்ஸ்பியர். இருவரது நினைவுதினம் இன்று. இருவரது நினைவு தினமும் ஒரேநாளில் இல்லை என்றாலும் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டிகளான ஜீலியன் மற்றும் கிரிகோர் ஆகியவற்றினால் நிகழ்ந்த 10-நாள் வித்தியாசப் பிழையே இவை ஒரே நாளாகக் கருதப்படக் காரணம் என்கிறது விக்கி

ஷேக்ஸ்பியர் எப்படி உலcervantes
க இலக்கியத்தின் ஒரு மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ளாரோ அதைப்போல மிகைல் சொ்வாண்டிஸ் ஸ்பானிஷ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியத்தில் முக்கியத்துவமான இடத்தைப் பெற்றவர். அவரது “டான் குயிக்ஜோட்“ என்கிற புனைவானது வரலாறு மற்றும் இன்றைய  புதியவகைப் புனைவுகளுக்கு அடிப்படையான பார்வையை தந்த ஒரு படைப்பிலக்கியம் ஆகும்.  இப்புனைவே மேற்திசை நாடுகளின் நாவல் வடிவத்தின் முன்னொடியாகும். இன்றைய 20-நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவலாரியர்களை பாதித்த ஒரு புதினம் ஆகும். கார்லஸ் பியாந்தஸ், தாஷ்தாவொஸ்கி, ஸ்காட், டிக்கின்ஸ், மெல்வில், பிளாபர்ட், ஜாய்ஸ், போர்ஹே போன்ற நாவலாசிரியர்களை பாதித்த ஒரு புதினமாகும். கீழ்திசை இலக்கியத்தில் அரேபிய இரவுகள் எப்படி மேற்திசை எழுத்துலகின் ஒரு முக்கிய பாதிப்போ அதைப்போலத்தான் இப்புதினமும்.


ஸ்பெயினின் ஈரோ நாணயங்களில் பொறிக்கப்பட்ட ஒரு எழத்தாளர் இவர். இப்புதினத்தை எழுதிய செர்வாண்டிஸ் ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர் என்பதுடன் இருவரும் ஒரே தேதியில் (ஏப்ரல் 23-ல்) இறந்துள்ளனர். ஷேக்ஸ்பியர் செர்வாண்டிஸைப் படித்துள்ளார். ஆனால், செர்வாண்டிஸிற்கு ஷேக்ஸ்பியரை தெரியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் செர்வாண்டிஸ் மற்றும் ஷேக்ஸ்பியர் இருவரும் ஒருவராக இருக்கலாம் என்கிறார் கார்லஸ் பியாந்தஸ். விஞ்ஞானப் புரட்சியை முன்மொழிந்த பிரான்ஸிஸ் பகூன் என்பவரால் இப்புதினம் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் உள்ளது. ஆக, இந்நாளை உலக புத்தக நாளாக அறிவித்திருப்பது இந்த இலக்கியவாதிகளின் நினைவை மீளாக்கம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும். ஷேக்ஸ்பியர் பற்றி அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பரவலாக அவர் அறியப்பட்ட ஒருவர்.

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமான இன்book_illustrationறு..
  1. கணிப்பொறியில் தேடி அடைவதை மட்டுமே அறிவின் ராஜபாட்டையாகக் கொள்ளாமல் படிக்கும் பழக்கத்தை தொடரவும் அதனை வளரும் தலைமுறையினருக்கு பழக்கவும் முயற்சிப்போம்.
  2. நாம் குறைந்த பட்சம் புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தையும் அல்லது பரிசுப் பொருட்களாக புத்தகங்களை அளிப்பதை பழக்கமாக்கிக் கொள்வோம்.
  3. வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்பதை சமையல் அறைக்கு சமமான அவசியத்துடன் பாவிப்போம்.
மனிதர்கள் அறிவை இரண்டு மூலங்களில் பெறுகிறார்கள். ஒன்று நேரடி அறிவு. அது அனுபவங்களின் வாயிலாக பெறுவது. மற்றது மறைமுக அறிவு. அது புத்தகங்கள் வாயிலாக மட்டுமெ பெற முடியும். புத்தக வாசிப்பு என்பது ஒருவகை இதம் தரும் சுகமாகும். அது பாலின்பம் தரும் இதத்தைப் போன்றது. அதனால் புத்தகம் வாசிப்பது என்பது அடிப்படையான பழக்கமாக மாற்றிக் கொள்வது அவசியம்.

”ஒரு புத்தகம் என்பது பல கருத்துக்களின் தொகுதி என்ற வகைமைக்கு உரியது. இன்னமாதிரியான தனிப்பட்ட ஒரு கருத்துக்கு மட்டுமே உரியது என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாதது. அது பெருகும்தன்மை (மல்டிபிளிசிட்டி) கொண்டது.” என்கிறார்கள் தெல்லஸ்-கொத்தாரி(1). ஒரு புத்தகத்தை நாம் இன்றைய உடனடித் தேவைக்கு வாங்கினாலும்.. அது வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் பல்கிக் பெறுகிக்கொண்டே இருக்கும். புத்தகம் ஒரு பொருளல்ல கருத்தின் திட வடிவம் அல்லது பொருளின் பாய்ம வடிவம் எனலாம். அது வாசிக்கவாசிக்க உற்பத்தியாகி பெருகிக் கொண்டிருக்கும் ஒன்று. நம்மை நாம் தேடி அடைய நிச்சயமாக நமக்கென ஒரு புத்தகம் தனது எழுத்துக்களுடன் தனது பிரதித் தன்மையுடன் காத்திருக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் அந்த புத்தகத்தில் நாம் நம்மை அடையாளம் கண்டு நம்மையே நாம் பெருக்கிக் கொள்ள முடியும். படிக்காதவர்களுக்கு இது சாத்தியமில்லையா? என்று கேட்கக்கூடும். அவர்களும் இந்த மறைமுக அறிவை பிற மனிதரிடமிருந்தும் சமூகத்திடமிருந்துமே பெறுகிறார்கள். அந்த பிற மனிதர் பெற்ற ஒருவர் நிச்சயமாக வாசிப்பு அறிவுள்ளவராகத்தான் இருப்பார். சுயம்புலிங்கங்கள் எல்லாம் சமூகமாகிவிட்ட தொடர்பு சாதனங்களால் ஆளப்படுகிற ஒரு உலகில் சாத்தியமில்லை. அறிவு சமூகத்தில் எண்ணற்ற முனைகளிலிருந்த எண்ணற்ற மூலங்கள் வழிகயாகப் பீய்ச்சப்படுகிறது. நாம் ஏற்றாலும் ஏற்காவிடடாலும் அது நம்மை நமது உடலை ஊடறுத்துக் கொண்டு சென்றவண்ணம் உள்ளது.  இனி, படிக்காத மேதை எல்லாம் சாத்தியமில்லை. படிக்கத் தெரியாத மேதையாக வெண்டுமானால் இருக்கலாம். உலகை படித்துக்கொண்டே இருப்பவர்தான் மேதையாகிறார். ஆக, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தம் ஒரு நாளாக இதனைக் கருதிக் கொள்வோம்.

”புனித புத்தகம்” என்பதும் அதை காலங்காலமாக வாசிப்பது என்பதும் எல்லா மதங்களிலும் அடிப்படையான ஒரு இயக்கமைப்பாக இருப்பது அதனால்தான். உண்மையில் மறைநூல்கள்தான் மதங்களை காக்கின்றன. மறைநூல்களுக்காகத்தான் மதங்களே தவிர. மதங்களுக்காக மறைநூற்கள் இல்லை. அதனால்தான் பைபிள் ”வார்த்தை மாம்சமானது” என்றது. சொல் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டே இருப்பதால்தான் மதங்கள் தங்களது மறைநூல்களை மைய்யமானதாக புணிதமானதாக வைத்துள்ளன. மனித உடல் முதலில் அச்சம் கொண்டது ஒலி என்கிற சத்தத்திற்காகாத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அந்த சத்தத்தை மொழியாக ஒழுங்கமைத்துக் கொண்டுள்ளது. அதையே ஆயுதமாக்கி இன்று தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை வெல்லத் துடிக்கிறது. இயற்கை இரைச்சல் என்றால் சமூகம் என்பது இசையாக உள்ளது. அந்த இசையின் மகுடிக்குள் அடங்கிய பாம்புகளாகத்தான் நாம் உள்ளோம்.  அதனால்தான் இத்தனை மதங்கள், இசங்கள் என ஒவ்வொன்றாக வந்த வாசித்துக் கொண்டுள்ளன. நாமும் அதற்குள் மயங்கியபடியே கழி(ளி)க்கிறொம். அதனால்தான் நீட்ஷே கூறினார் ”நாம் கடவுளை கைவிட முடியும் என்று தோன்றவில்லை ஏனென்றால் நாம் இன்னும் இலக்கணத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறொம்.” ( "I am afraid we are not rid of God because we still have faith in grammar.")

-ஜமாலன். (23-04-2008)

குறிப்பு (1) பக். 21 - தெலூஸ்-கொத்தாரி - எம்.ஜி. சுரேஷ் - 2007 - அடையாளம் வெளியீடு.

1 comments:

swara சொன்னது…

நல்ல புரிதலோடு எழுதியிருக்கிறீர்கள்.. அருமை..
Search your lover here

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.