பதிவிரதா தர்மம் எனும் கருத்தியல் பர்தா


image மார்க்சியம்(2) எந்த உற்பத்தியும் அதற்கான “உற்பத்திநிலமை“ இல்லாமல் உயிர்வாழ முடியாது என்கிறது. உற்பத்திநிலமை என்பது உற்பத்தியில் ஈடுபடும் உழைப்புச்சக்திகளை (மனிதர்களை) மறு-உற்பத்தி செய்வதற்கான சமூகச் சூழல் எனலாம். இச்சூழலுக்குள் மொத்த சமூக கலாச்சார-ஊடக-கல்வி-மருத்துவ-இலக்கிய-வரலாறு-புவியியல்-அறிவியல்-இன்னபிற-நிறுவனங்கள்-உள்ளிட்டவை அடங்கும். இவை “தினவாழ்வை“ உற்பத்தி செய்யும் சமூகக் களன்கள்.

இச்சமூகக் களனுக்குள் இருத்தப்பட்ட ஒரு மனிதன், தொழிலாளியாக 8-மணிநேரம் உற்பத்தியில் ஈடுபடும்போது, இழப்பது தனது உழைப்புச்சக்தியை. இதனைப் பெற்றுக்கொண்டு அதற்கு பகரமாகவே கூலி தரப்படுகிறது. கூலி உழைப்புச்சக்தியின் பொருளியல் வடிவமே. அதாவது, மனிதன் தனது உழைப்புச்சக்தியை பண்டமாக விற்று பெரும் காசு. மார்க்சிய பாடத்தை நிறுத்திவிட்டு பிரச்சனைக்கு வருவோம்.

மனிதன் உழைப்புச்சக்தி என்கிற பண்டமாக மாற்றப்பட்ட ஒரு சமூக அமைப்பில், அதை தினமும் உற்பத்தி செய்தால் மட்டுமே உற்பத்தி-மறுஉற்பத்தி தொடரும். சமூகப் பொருளியல் எந்திரமும் உடல்களைப் பிழிந்து ஆற்றலை உறிஞ்சுக் கொண்டிருக்க முடியும். இந்த உழைப்புச்சக்தியை உற்பத்தி செய்பவர்கள் யார்? தினசரி மறு-உற்பத்திக்கான உழைப்பை பெருவாரியான அளவிற்கு உற்பத்தி செய்பவர்கள், இல்லத்தரசிகள் (மக்கள் தொலைக்காட்சியின் தமிழ் வளர்ப்பு) என்று பெருமையாக பட்டம் சூட்டி அழைக்கப்படும் பெண்களே. இவர்களது உற்பத்திக் களம் வெளிச்சமுள்ள முன்கட்டுகள் ஆண்களுக்கும், இருண்ட பின்கட்டுகள் பெண்களுக்குமாக ஒதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வரும் வீடு அல்லது இல்லம். “வீடென்று எதனை சொல்வீர், அதுவல்ல என்வீடு, எட்டடி சதுரம் உண்டு, பொங்கிட மூலையுண்டு, புணர்வது மற்றொன்றில்” என்கிற மாலனின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது. சமூக உற்பத்தியில் பெண்களின் மைய இடம் என்பது என்ன? பெண் ஏன் ஒடுக்கப்படுகிறாள்? பெண் ஏன் ஒடுக்கப்பட வேண்டும்? என்பதற்கான முதலாளித்துவ-தர்க்க நியாயம் இதுதான்.

சமுக பொருளுற்பத்திக்கு உழைப்பாளிகளை மறு-உற்பத்தி செய்யும் (ஆண்களை மறுநாள் பணி செய்ய தயாரிக்கும்) மிக முக்கியமான பெண்களின் வீட்டுப்பணிகள் உழைப்பாக கணிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளாக இருத்தப்பட்டுள்ள பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பிடுவது? பெண்களுக்கு மாதக்கூலி நிர்ணயம், வாரவிடுமுறை, வருடாந்திர ஊக்கத் தொகை உள்ளிட்ட குறைந்தபட்சம் ஒரு தொழிலாளிக்காக நிர்ணயிக்கப்பட்ட பல சலுகைகள் பேசப்பட வேண்டியதாக உள்ளது. இதன் உள்ளார்ந்த அரசியல் சீர்திருத்தம் செய்வதன் வழியாக பெண்களை இல்லத்தரசியாக நீட்டிக்கும் குரலே உள்ளது. வளர்ந்துவரும் பெண்ணியக் குரல்களை, இச்சீர்திருத்தத்தின் வழியாக அடக்க முயல்கின்றன என்ற போதிலும், குறைந்தபட்சம் இல்லத்தரசிகளை இத்திசையில் நகர்த்தும் துவக்கநிலை பிரக்ஞையை இவை வழங்கக்கூடும். தனது பெற்றோரின், சகோதரர்களின், சகோதரிகளின் மருத்துவச் செலவிற்குகூட கணவனை கெஞ்சிக் கொண்டிருக்கும் மணைவிகள் பலர். ஆனால் மணைவிகளோ கூடையில் கணவனை தாசி வீட்டிற்கு தூக்கிச் செல்வார்கள். எமனிடம் தன்னுயிரை எடுத்துக்கொள்ள வாதாடி கணவனைக் காப்பாற்றுவார்கள். இப்படியாக, பல “பதிவிரதா“-க் கதையாடல்கள் நம்மிடம் காலங்காலமாக உள்ளன.

வரலாற்று ஆய்வாளர் உமா சக்ரவர்த்தி சொல்வதுபோல் “பதிவிரதா தர்மம் என்கிற கருத்தியல் பர்தா“ (3) அணியப்பட்டு காக்கப்பட்டுவரும் இந்தியப் பெண்களின் உழைப்புச் சுரண்டல் கவனிக்கப்படுவதில்லை. பெண்கள் மீதான வன்முறை துவங்கி இல்லத்தரசி என்கிற அரசி பட்டம்வரை, எதுவும் அவர்களது இந்த மறு-உற்பத்திக்கான உழைப்பை கவனத்தில் கொள்வதில்லை. தமிழ் பெண்ணியச் சிந்தனை என்பது இன்னும் யோனி-லிங்க மையவாதத்தில் நங்கூரமிட்டு நகர முடியாமல் உள்ளது. பெண்களின் காமம் அதிலும் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட மிகுகாமம் மட்டுமே இலக்கியங்களின், பெண்ணியச் சிந்தனையின் பேசுபொருளாக உள்ளதே தவிர அதை தாண்டிய தினவாழ்வின் இத்தகைய சுரண்டல்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படவில்லை. இந்நிலையில், தெஹல்காவில் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி URVASHI Butalia அவர்களால் எழுதப்பட்டுள்ள இச்செய்தி பெண்களின் இல்லப்பணிகளின் மதிப்பீடு பற்றி பேசுகிறது.

முதலாளியம் ஆண்களை கூலி குறைவாக கொடுத்து சுரண்டுவதுடன், ஆண்களை (தொழிலாளிகளை) மறுபடியும் உழைப்பதற்கான சக்தியாக மாற்றும் பெண்களுக்கு என்ன வழங்குகிறது?

அடுக்களை இருட்டும், அடுப்பு புகையும், அழும் சீரியல்களும், மல்லிப் பூவும், அல்வாவும்(1), அடிமைத்தனமும் தவிர....

பின்குறிப்பு

1. மல்லிப்பூவும், அல்வாவும் தமிழ் சினிமா கட்டமைத்துள்ள கணவன்-மணைவி அந்நியோன்னியம் பற்றிய ஆகச்சிறந்த காமெடி. கணவன் மறைத்து மறைத்து எடுத்துச் செல்வான். அம்மா கண்கொத்திப் பாம்பாய் அதை கவனிப்பார். ஒரு 100 கிராம் அல்வாவிற்காக குடும்பமே சிக்கி சீரழிந்து, குத்துவிளக்கை குப்புறக் கவிழ்த்துவிட்டு.. கண்ணீர் விட்டு ஆளாளுக்கு ஒரு பக்கம் நின்று பாடுவார்கள். இது குறித்து களஆய்வுகள் தேவை. சினிமா பார்த்து மக்கள் இதை கற்றார்களா? மக்களைப் பார்த்து சினிமா இதைக் கற்றதா? என்று.

2. மார்க்ஸ், மார்க்சியம் என்ற பெயரைப் பார்த்தவுடன் பதறி அடித்துக்கொண்டு இங்கு வந்து.. ரஷ்யாவைப்பார், ஸ்டாலினைப்பார், சீனாவைப் பார், மாவோவைப் பார், போல்போட்டைப் பார், கொல்லப்பட்ட மக்களைப்பார், கண்ணைப்பார் சிரி என்று திருஷ்டிப் பரிகார டெம்புளேட் பின்னூட்டங்களை அனானிகள் போடவேண்டாம். …. முடியல...

3. உமாசக்ரவர்த்தியின் Gendering Caste – Through a Feminist Lens என்கிற நூலில் இது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வாசிக்காமல் இங்கு வந்து ஆளாளுக்கு எங்க மதம் உங்க மதம் என்று மதம் பிடித்து பின்னூட்ட வேண்டாம்.


அன்புடன்

ஜமாலன். 04-08-2010

7 comments:

புதியவன் சொன்னது…

கொடுமையிலும் பெருங்கொடுமை, பெண்களே இதற்கு வக்காலத்து வாங்குவது; அல்லது ரொம்ப சாமர்த்தியமாக வாங்க வைத்து விடுவது. பெண்ணியம் பேசும் நம்மிடமே ஏகப்பட்ட ஓட்டை இருக்கு. எப்போ நாம அடைக்கப்போறோம்?

புதியவன் சொன்னது…

கொடுமையிலும் பெருங்கொடுமை, பெண்களே இதற்கு வக்காலத்து வாங்குவது; அல்லது ரொம்ப சாமர்த்தியமாக வாங்க வைத்து விடுவது. பெண்ணியம் பேசும் நம்மிடமே ஏகப்பட்ட ஓட்டை இருக்கு. எப்போ நாம அடைக்கப்போறோம்?

ஜமாலன் சொன்னது…

நன்றி புதியவன்.

//பெண்ணியம் பேசும் நம்மிடமே ஏகப்பட்ட ஓட்டை இருக்கு. எப்போ நாம அடைக்கப்போறோம்?//

சிந்திக்க வேண்டிய கேள்விதான்.

Unknown சொன்னது…

ரொம்பவும் யோசிக்க வேண்டிய விஷயமிது. சமூகத்தை விடுங்கள் ஒவ்வொரு ஆணும் இதை யோசித்திருப்பானா?.....

ஜமாலன் சொன்னது…

எம்.ஞானசேகரன் கூறியது...

//சமூகத்தை விடுங்கள் ஒவ்வொரு ஆணும் இதை யோசித்திருப்பானா?.....//

உண்மைதான். இதில் பெண்களின் இந்த உழைப்பையும் உள்ளடக்கியதாக கூலி நிர்ணயம் இருக்க வேண்டும். பெண்கள் இக்கூலியை சரியாக பெறகிறார்களா? என்பதற்கான கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப் படவேண்டும். பார்ப்பதற்கு குடும்பத்தை ஒரு வியபார நிறுவனம்போல் நடத்துவதாகத் தோன்றலாம். குடும்பம் அரசு போன்று அதிகார நிறுவனமாக இருப்பதைவிட இது மேல்தானே.

அம்பேதன் சொன்னது…

தற்காலத்தைய பெண்களின் விடுதலை பேசும் உலகளாவியப் பெண்ணியங்களும் அவற்றை ஆதரிக்கும் முதலாளித்துவமும் (எ.கா பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா, முதல் பெண் சபாநாயகர், முதல் பெண் குடியரசுத் தலைவர், ஆஸ்கர் விருது வாங்கிய முதல் பெண் இயக்குநர் என்று பட்டியல் நீளுகிறது..) நீங்கள் குறிப்பிடும் குடும்பம், குத்துவிளக்கு எல்லாவற்றையும் எட்டி உதைத்து நாளாகிவிட்டதே.

தற்போதைய பெண்ணியத் தலைப்புகளில் 'ஆணுக்கு இணையாக உழைக்கும்' பெண்ணுக்கு தரப்படும் குறைந்த கூலி, வீட்டு வேலைகளில் ஆண் பகிர்ந்து கொள்ளாமை, கிராமத்தில் ஆணுக்கு இணையாக உடலுழைப்பைத் தந்தாலும் இல்லத்திலும் சுரண்டப்படும் பெண்கள், உழைக்கும் பெண்ணின் காதல் சுதந்திரங்கள், பெண் உழைத்தாலும் குடும்பம் என்கிற கிணற்றுக்குள் தவளையாக அவளைச் சுற்றச் செய்யும் ஆண் வர்க்கம், பெண்கள் டாப்ஸ், ஜீன்ஸ், தொடை தெரிய கால் டவுசர் அணிந்து நடக்கும் உரிமை,அப்புறம் உங்கள் தலைப்பான 'பதிவிரதா தர்மம் எனும் பர்தா' என்று தான் பெரும்பான்மையான தலைப்புகள் உள்ளன.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது முதலாளித்துவம் பெண்கள் விஷயத்தில் முற்போக்கானதாகவே நடந்து கொள்கிறது. இல்லையா ? மார்க்சியர்கள் மட்டுமல்ல முதலாளித்துவ வாதிகளும் இவ்விடத்தில் ஒருமித்த குரலில் பேசுகின்றனர்.

கலாச்சாரம் என்பதைப் பற்றி மார்க்ஸ் என்ன பேசினார் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் இந்த , பெண்ணியர்களும், முதலாளித்துவர்களும், மார்க்சியர்களுடன் ஒலிக்கும் ஒருமித்த குரலில் ஏதோ பிறழ்வதாக எனக்குப் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ஜமாலன் சொன்னது…

@ Ambedhan

நண்பரே நீண்ட நாட்களுக்கப்பின் வந்துள்ளீர்கள்.

//தற்காலத்தைய பெண்களின் விடுதலை பேசும் உலகளாவியப் பெண்ணியங்களும் அவற்றை ஆதரிக்கும் முதலாளித்துவமும் (எ.கா பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா, முதல் பெண் சபாநாயகர், முதல் பெண் குடியரசுத் தலைவர், ஆஸ்கர் விருது வாங்கிய முதல் பெண் இயக்குநர் என்று பட்டியல் நீளுகிறது..) நீங்கள் குறிப்பிடும் குடும்பம், குத்துவிளக்கு எல்லாவற்றையும் எட்டி உதைத்து நாளாகிவிட்டதே.//

அப்படியா? எப்படி எட்டி உதைக்கப்பட்டது என்று சொன்னால் புரிந்துகொள்ள ஏதுவாகும். முதலாளித்துவம் தனக்கு தேவையில்லை எனில் எட்டி உதைக்கும்தான். அதற்கு தேவையான பெண் குடும்பம், குத்துவிளக்கு என்று தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எதிர்நிலையில் இருக்க வேண்டும். பெண் பெண்ணாக இருக்கக்கூடாது என்பதுதான் முதலாளித்துவத்தின் விதி. மனிதர்கள் உழைப்பை சேமித்து வைத்துள்ள பண்டங்கள் என்பதற்கு மேல் முதலாளித்துவம் சிந்திப்பதில்லை. அதற்கு தேவை பண்டம் உற்பத்தி செய்ய, அதை நுகர மட்டுமே உடல்கள் தேவை. அதனால் பெண்ணை ஒரு மறுஉற்பத்தி கருவியாக, நுகர்வுப்பணடமாக மட்டுமே அது குறிநிலைப்படுத்தி உள்ளது.

//தற்போதைய பெண்ணியத் தலைப்புகளில் 'ஆணுக்கு இணையாக உழைக்கும்' பெண்ணுக்கு தரப்படும் குறைந்த கூலி, வீட்டு வேலைகளில் ஆண் பகிர்ந்து கொள்ளாமை, கிராமத்தில் ஆணுக்கு இணையாக உடலுழைப்பைத் தந்தாலும் இல்லத்திலும் சுரண்டப்படும் பெண்கள், உழைக்கும் பெண்ணின் காதல் சுதந்திரங்கள், பெண் உழைத்தாலும் குடும்பம் என்கிற கிணற்றுக்குள் தவளையாக அவளைச் சுற்றச் செய்யும் ஆண் வர்க்கம், பெண்கள் டாப்ஸ், ஜீன்ஸ், தொடை தெரிய கால் டவுசர் அணிந்து நடக்கும் உரிமை,அப்புறம் உங்கள் தலைப்பான 'பதிவிரதா தர்மம் எனும் பர்தா' என்று தான் பெரும்பான்மையான தலைப்புகள் உள்ளன.//

ஆம் பிரச்சனைகள் உள்ளன அதனால் தலைப்புகளும் அப்படியே உள்ளன. முதலில் பதிவிரதா தர்மம் என்பது ஒரு முக்கியமான கருத்தாக்கம். அதை இப்படி தலைப்பாக சுருக்க வேண்டாம். பெண்ணியம் குறித்த எனது இதர கருத்துக்களையும் கட்டுரைகளையும் வாசித்தால் இது உங்களுக்கு புரியலாம். குறிப்பாக பெண் எனும் பேரச்சம் கட்டுரை எனது பதிவில் உள்ளது அதை நேரமிருந்தால் வாசியுங்கள் (தயவுசெய்து படிக்காதீர்கள், வாசிக்கவும்). இதை தவிர வேறு என்ன பேசவேண்டும் என்று சொல்லுங்கள்? அடிப்படையானவற்றிலேயே சிக்கல்கள் உள்ளது என்பதால் அவற்றை எழுதுவதும தவிர்க்க இயலாதது.

//இவற்றை வைத்துப் பார்க்கும் போது முதலாளித்துவம் பெண்கள் விஷயத்தில் முற்போக்கானதாகவே நடந்து கொள்கிறது. இல்லையா ? மார்க்சியர்கள் மட்டுமல்ல முதலாளித்துவ வாதிகளும் இவ்விடத்தில் ஒருமித்த குரலில் பேசுகின்றனர்.//

அப்படியா? எப்படி?

மார்க்சியம் பெண் என்பதை ஒரு உயிர்ப்புள்ள ஜீவி என்கிற நிலையில் அனுகுகிறது. முதலாளித்துவம் பெண்ணை ஒரு பண்டமாக அனுகுகிறது. இரண்டும் எப்படி ஒன்றாகும். முதலாளித்துவம் பெண்கள் விஷயத்தில் முற்போக்காக நடந்து கொள்கிறது என்றால், அதைதான் நீங்கள் முற்போக்கு என்று கருதினால் பேச ஒன்றுமில்லை. முதலில் பதிவின் தர்க்கமே புரியாத நிலையில்தான் உங்கள் இந்த கேள்விகள் எழுகின்றன. வேறு என்ன சொல்ல. மறுபடியும் பதிவை தலைப்பை தாண்டி வாசியுங்கள்.

//கலாச்சாரம் என்பதைப் பற்றி மார்க்ஸ் என்ன பேசினார் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் இந்த , பெண்ணியர்களும், முதலாளித்துவர்களும், மார்க்சியர்களுடன் ஒலிக்கும் ஒருமித்த குரலில் ஏதோ பிறழ்வதாக எனக்குப் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?//

கலாச்சாரம் பற்றி மார்கஸ் என்ன சொன்னார் என்பது இங்கு விவாதப் பொருள் அல்ல. அதனால் அதை நீங்கள் எளிமையாக இணையத்தில் கற்று அறியலாம். ஒருமித்த குரல் என்பது உங்களது வாசிப்பில் உள்ள சிக்கல். யாரும் அப்படி ஒருமித்து சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. அப்படி சொல்வதாக எண்ணும் உங்கள் கற்பனை அபாரமானது. அதுதான் அடிப்படையில் பிறழ்வு. ஒன்றை பிறழ்வாக நினைக்க வேண்டுமெனில் நாம் பிறழ்வற்ற தெளிவான பார்வையுடன் இருக்க வேண்டும். அப்படி சாத்தியமில்லை. ஒருமித்த குரலே இல்லை அதில் பிறழ்வும் சாத்தியமில்லை.

மீண்டும் ஒருமுறை பதிவை பிறழ்வான மனநிலையுடன் வாசிப்பது நலம். தெளிவான மனநிலையில் வாசித்தால் இப்படித்தான் எல்லாவற்றையும் ஒற்றையாக புரிந்துகொண்டு குழப்பமே மிஞ்சும்.

நன்றி உங்கள் கருத்துகளுக்கு.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.