2004 ஜீலை 16, கும்பகோணத்தில் நிகழ்ந்த மனதை நடுங்கச் செய்யும் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் விறகாக எரிந்து கரியாகிப்போன நாள். நேற்றோடு ஆறு ஆண்டுகள். இச்சம்பவம் குறித்த நேரடி சாட்சியமாக கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மணி செந்தில் அவர்களின் நெகிழ்ச்சியூட்டும் பதிவு. கல்வி வியபாரத்தில் காசு கொழிக்கும் வியபாரிகளான பள்ளி நிர்வாகத்தின் பணத்தாசையும், அரசின் அலட்சியமும், மாவட்ட கல்வி அதிகாரிகளின் அதிகார போதையில் தவறாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தியும், கண்காணிக்காமல் விட்ட அலட்சியத்தாலும் நிகழ்ந்த இந்நிகழ்வை, நெகிழ்ச்சியுடன் அதன் வலி மாறாமல் சொல்லியுள்ளார் இப்பதிவில். படிக்கும்போதே கண்கலங்க வைக்கிறது. நானும் கும்பகோணத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மேலதிக சோகத்திற்கும் பொறுப்பிற்கும் ஆளாகிறேன்.
அரசு பள்ளிகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று விதித்துள்ள எந்த விதிமுறைகளையும் மதிக்காத இப்பள்ளிகளை கண்காணிப்பது கல்வித்துறையின் கடமை. இத்தகைய உதவி பெறும் பள்ளிகள் தங்களது குறைந்த வருமானத்தை காரணம் காட்டி இதிலிருந்து தப்பிவிட முடியாது. ஒருபுறம் பணத்தை குவிக்கும் தனியார் பள்ளிகள். படித்த பணக்கார பெற்றொரின் பிள்ளைகளுக்கு மட்டுமே கதவு திறக்கும் இப்பள்ளிகள். அதில் படிக்கவைக்க வசதியற்ற ஏழைகளின் ஒரே புகலிடம் இத்தகைய உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள். அந்நிய மொழிகளின் கல்வியால், நடுவன் அரசின் ஆதிக்கத்தால் செத்துக் கொண்டிருக்கும் செம்மொழிக்கு 400கோடி செலவு செய்யும் அரசு, உண்மையில் செம்மொழியை வாழ வைக்கும் இத்தகைய பள்ளிகளை கவனிப்பதில்லை. செம்மொழி விதையாக ஊன்றப்படும் ஆரம்பக் கல்விக்கு அதிக கவனமும் முக்கியத்துவமும் செலுத்தாமல்... “செம்மொழி செம்மொழி செம்மொழியாம்“... என தமிழறியாதவர்களால் அரைகுறை உச்சரிப்பில்.. நவீன இசையமைப்பில் கத்திக் கதறுவதால் ஒரு பயனுமில்லை.
இத்தகைய விபத்துகளுக்கு காரணம், இப்பள்ளிகள் தரத்திலும், கட்டிடம் மற்றும் நிலப்பரப்புகளிலும், மிக மோசமான நிலையிலேயே உள்ளன என்பதுதான். தன்னைக் கல்வித் தந்தையாக உருவாக்க முனையும் கொள்ளைக் கூட்டத்திற்கு மத்தியில் இத்தகைய கல்விக்கூடங்கள் நிலை கவலைக்கிடமானதுதான். அரசு இத்தகைய நிறுவனங்களை முறையாக கண்காணித்து அவற்றிற்கான உதவிகளை செய்யலாம் அல்லது இத்தகைய பள்ளிகளை அரசே ஏற்று நடத்தலாம். நான் படித்த எங்கள் கிராம உதவி பெறும் நடுநிலைப்பள்ளி நிலமையும் இதுதான். என்றாலும் மிகவும் விரிவான பாதை வசதி, விளையாட்டுத் திடல் வசதி கொண்ட கூரைப் பள்ளி அது. (தாளாளர் வீட்டுக் மாங்கொல்லையில் ஒவ்வொரு “பேட்சா“-க மாவடு பொறுக்கிப் போடும் பணி கட்டாயமாக எங்களுக்கு உண்டு என்பது வேறுகதை. பெரும்பாலும் மதிய இடைவேளையில்.. கூரைமேல் ஏறி மூங்கில் கம்புகளுக்கிடையில் தாவிக் கொண்டிருப்போம். அதனால்தான் இதுவரை எந்த ஒன்றிலும் நில்லாமல் தாவிக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. தொட்டில் பழக்கம்... இப்பொழுதோ தனியார் பள்ளிகளுக்கும் இராணுவப் பள்ளிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.) குறைந்த பட்சம் இவ்விஷயங்களையாவது மற்றப் பள்ளிகளிடம் அரசு கவனிப்பதில்லை. விரிந்த பரப்பு என்பது குழந்தை உளவியலில் விரிவான மனதையும், உணர்வையும் உருவாக்கக் கூடியது. குறைந்தபட்சம் அதற்காகவாவது அரசு பள்ளிகளின் பரப்பளவை ஆய்வு செய்வதும் அடிக்கடி கண்காணிப்பதும் அவசியம்.
ஆனால், 6-ஆண்டுகளாகியும் 94-குழந்தைகளைக் கொண்ற இந்த வழக்கை.. வாய்தா.. வாய்தாவாக இழுத்துக் கொண்டிருக்கிறது அரசு. சமீபத்தில் துணைமுதல்வர் ஸ்டாலின் குடந்தையில் நினைவிடத்தை திறந்து வைத்தார். நேற்று குடந்தையின் “நிரந்தர“ ச.ம.உ. (கஞ்சா கருப்பு உபயம்- சட்டமன்ற உறுப்பினர்) ஆன அமைச்சர் கோ.சி. மணி நினைவாஞ்சலி செலுத்தி உள்ளார். வழக்கம்போல் ஆளும், ஆளத்துடிக்கும், ஆள ஆசைப்படும், ஆள முடியாத, ஆளக் கணவுகானும் அரசியல் கட்சிகள்... மலர் அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி, புஸ்பாஞ்சலி.. மெழுகுவர்த்தி தீப அஞ்சலி இன்னபிற இன்னபிற அஞ்சலிகள் என்று பல அஞ்சலிகளை செலுத்தி சோகம்பாடி ஓட்டை எண்ணுவதைத்தவிர அக்குழந்தைகளுக்கோ அல்லது அவர்களது குடும்பத்திற்கோ அல்லது இனியாவது படிக்கும் குழந்தைகளுக்கோ என்ன பயன்? பயனுள்ள வகையில் அரசு இனியாவது கல்வித்துறையில் மட்டுமாவது பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். “கடமையை மீறத்தான் லஞ்சம் வாங்குவார்கள் மற்ற நாடுகளில், கடமையை செய்யவே லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் நம்நாட்டில்தான்“ (இந்தியன் தாத்தாவின் வசனம்தான் இது). இனியாவது, குறைந்த பட்சம் குழந்தைகள் உயிர் விஷயத்திலாவது அரசும், அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
அரசு கல்வியை வியாபாரமாக்கியது கண்டிக்கத்தக்கது என்றால், அந்த வியபாரத்திற்குகூட குறைந்தபட்ச சட்ட விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பை வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் வழக்காட என்ன உள்ளது? என்றே தெரியவில்லை. கண்முன்னால் நிகழ்ந்த கோரம் அதற்கான காரணங்கள் தெளிவானவை. சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதும் அவசியம். இது விபத்து என்றாலும், சட்டவிதிமுறைகளை மீறி செய்யப்பட்ட செயல் என்ற வகையில் நிர்வாகமும், மாவட்ட கல்வித்துறை மற்றும் அரசு பொறுப்பேற்க வேண்டியது அவசியம். பார்க்கலாம் என்னதான் செய்கிறார்கள் என்று?
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நமக்குப் பிறந்த குழந்தைதான் என்கிற பொது உணர்வு ஏற்படுத்தும் இந்த மரணச் சோகம் சொல்லில் அடங்காதது. உலகை உணரமுடியாத, எந்த அதிகாரமும், ஆட்சியும் அதன் சுகபோகங்களும் உணரமுடியாத, உலகை அதன் விளையாட்டுத்தனங்களுடன் எதிர்கொள்ளும் குழந்தைகளை இனப்போர் துவங்கி உலக அதிகார வெறியின் அத்தனைப் போர்களுக்கும் பலியிடுகிறோம். அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.. ஒரு இலை உதிர்வதைப்போல எந்த சலனமுமின்றி. நசுக்கி தூக்கி எறியப்படுகிறார்கள் ஒரு பெம்மையைப்போல எந்த எதிர்ப்புமின்றி. எதற்காக கொல்லப்படுகிறோம் என்கிற காரணம் எதுவுமின்றி.. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். கொல்பவர்கள் கொன்று குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது மரணத்திற்கு எந்த கேள்வியும் இல்லை. எந்த பதிலும் இல்லை. மனசாட்சியற்ற ஒரு மரத்துப்போன வாழ்க்கையுடன் நாம் எரிப்பது ஒரு மரப்பாச்சி பொம்மைகளைப்போல உயிருள்ள குழந்தைகளை. ஈழம், ஈராக், ஈரான், ஆப்கான், ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், இந்தியா இப்படி கொன்று குவிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது. மனித குலம் தனது செயல்களிலேயே ஆக வெட்கித் தலைகுனியவேண்டிய செயல் என்றால் குழந்தைளை எந்த முன்னறிவிப்புமின்றி கொன்று குவிப்பதுதான். பண்டைய அரசுகளில் இருந்த குறைந்தபட்ச போர் தர்மம்கூட இன்றைய அரசுகளிடம் இல்லை. பண்டைய போர்முறை உயிரை பறிப்பதுடன் தனது போரை நிகழ்த்தியது என்றால், இன்றைய போர்முறை உயிரை பறிப்பது மட்டுமின்றி உயிர் பறிக்கப்படும் அச்சத்தில்தான் தனது போரை, வெற்றியை நிலை நாட்டுகிறது. உயிர் பறிப்பைவிட உயிர்வாழ்தலுக்கான அச்சமே இன்று அதிகாரத்தால் கண்ணுக்குத் தெரியாமல் பரப்பப்பட்டிருக்கிறது. உயிரச்சம் மதங்களை வாழ வைப்பதைப்போல, இன்று நவீன அரசுகளை வாழ வைத்துக் கொண்டுள்ளது. அதனால்தான் உலகில் அச்சத்தைப் பரப்பும் ஆயுதங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதும், கூட்டமாக நள்ளிரவில் கொத்தெறிக் குண்டுகளைப்போட்டு தூங்கும் மனிதர்களை பகுதி பகுதியாக கொன்று குவிப்பதும் நிகழ்த்தப்படுகிறது. அறம் என்பது எதையும் புடைத்துத் தள்ளக்கூடிய முறமாகிவிட்டது. அறத்தின் இடத்தில் மறத்தைக் கொண்ட இந்த பிணந்தின்னும் பேயரசுகளிடம் நாம் எதை எதிர்நோக்குவது. இதில் நவீனம் என்ன வேண்டிக்கிடக்கிறது? நாகரீகம் என்ன வேண்டிக்கிடக்கிறது?
சுனாமியால் இறந்த ஒரு தாய் நீருக்குமேல் தன்குழந்தையைத் தூக்கியபடி இறந்த செய்தியை படிக்கும்போது தோன்றும் அந்த தாய்மையின் பொறுப்பு, இன்று தந்தைமையால் ஆளப்படும் உலகில் எப்படி எதிர்பார்க்க முடியும்? பணத்தை தின்று உயிர்வாழும் பாசிஸ்டுகளாக, கார்பரேட் நிறுவனங்களுக்கு காவடித் தூக்கும் பக்த கோடிகளாக, ஏழைகளை, ஆதிவாசிகளை, தலித்துகளை பெண்களை, முதியவர்கள, குழந்தைகளை, எதிர்ப்பவர்களை, கொன்று குவித்து முதலாளிகளுக்கு வாலாட்டும் நன்றி உள்ள நாய்களாக மாறிவிட்ட அதிகார வர்க்கத்திடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்? கருணையையா? அன்பையா? பரிவையா?
புதுமைபித்தன் கூறியதுபோல கருணை என்பது கிழங்கில் மட்டும்தான் உள்ளது. நாம் கிழங்குகளைவிட கேவலமான உயிர்ப்பற்ற ஒரு ஜிவியாகிவிட்டோம். வெட்கித் தலைகுனிய வேண்டிய இவ்விஷயத்தில், இறந்த அந்த குழந்தைகளின் மரணம் என்பது எதனாலும் ஈடு செய்யமடியாது என்றாலும், அவர்களது நினைவை நெஞ்சில் ஏற்றி இந்த அரசு மற்றும் ஆளும் அதிகாரத்திற்கு எதிரான நமது உணர்வுகளையாவது ஒன்று திரட்டிக் கொள்வோம். ஒரு பலவீனமான பூனைகூட கல்லெறிந்த பலவானை நோக்கி உறுமும்? ஆனால் நாம்.......
image courtsey - The Hindu - Dialy News Paper.
- ஜமாலன் (17-07-2007)
4 comments:
ஜாமலன் அவர்களுக்கு..
உங்களை நான் மிகவும் அறிவேன்.ஐயா பொதி கூறியிருக்கிறார். உங்களின் பதிவு மிக நன்றாக இருக்கிறது என்பதை நாம் பகிர்ந்துக் கொள்ள முடியாத அவலமாக நம்முள் கவிழ்ந்திருக்கிறது நம் ஊர் சோகம்.
படைப்பினை கூட கொண்டாட முடியாத அளவில் உண்மையின் துயரம் நம்மினைக் கொல்கிறது.
இத் துயரம் குறித்து நாம் அடைந்த குற்ற உணர்வும், வேதனையுமே நம்மை யார் என்று அடையாளம் காட்டி விடுகிறது. அன்பிற்கு நன்றி.
இத்தனை குழந்தைகள் இறந்தும் அதேநிலையிலிருக்கும் மற்ற பள்ளிகள் இன்னும் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன,நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித்துறை இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறது
நன்றி மணி.செந்தி்ல்
உங்கள நான் சந்தித்ததில்லை. எப்படியோ இணையத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி
நன்றி gulf-tamilan...
ஆம் அரசாங்கம் தூங்கவில்லை. தூங்குவதாக நடித்துக் கொண்டு உள்ளது.
கருத்துரையிடுக