தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு - தமிழவன்

தமிழுணர்வின் அடிப்படையில் தென் கிழக்காசியாவில் (சமீபத்திய நாட்களில்)தோன்றியுள்ள மன உணர்வு இந்தப் பிரதேசம் பற்றி அறிந்துகொள்ளும் முக்கியமான அளவுகோலாகும். 1937-இல் இந்தி எதிர்ப்பு, தமிழர்கள் மத்தியில் தோன்றியபோது இவ்வுணர்வு ஒரு புதுமுறையில் வெளிப்பட்டது.வெறும் தமிழ்வெறி என்று இந்தPrimordial sentiment (மூலப்படிம உணர்வு)-ஐக் கொச்சைப் படுத்துபவர்கள் மூடர்கள் என்பதுதான் என் கருத்து.

இந்த மூலப் படிம உணர்வை நடுநிலையான எல்லா மானுடவியலாளர்களும், வரலாற்றாளர்களும் புரிந்து அங்கீகரித்துள்ளனர். யுஜின் இர்ஷிக், கிளிபோர்ட் கீட்ஸ், பெர்டன்ஸ்டைன், போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

இந்த உணர்வைப் புரிந்துகொள்ளாத வறட்டு இடதுசாரிகள் ஒருகாலத்தில் இந்தியாவில் நிறையபேர் இருந்தனர். சோவியத் யூனியன் சிறுசிறு தேசிய இனங்களாகத் துண்டான பின்பு இந்த இடதுசாரிகள் தங்கள் அப்பாவித்தனத்தைப் புரிந்து கொண்டனர். இதனைப் புரிந்துகொண்டுள்ளார் தா.பாண்டியன் என்பது மகிழ்ச்சி தருகிறது.

தமிழ் என்னும் மூலப்படிமம் நாடகீயமாய், சடங்குகளாய், கோபமாய்,தற்கொலைகளாய், ஆக்ரோஷமாய், மௌடீகமாய், மூட நம்பிக்கையாய் வெளிப்படும் அதே நேரம் ஆழ்ந்த தர்க்கமாயும், விசாரிப்புமரபாகவும்கூட அமைகிறது. இதனை இரு எதிரும் புதிருமான உணர்வின் அல்லாட்டமாய்ப் பார்க்கவேண்டும். ஏதோ ஒரு உணர்வு மட்டும் பிரதிபலிப்பதாய்ப் பார்க்கக்கூடாது. பார்த்தால் தவறு செய்தவர்கள் ஆவோம்.

இன்றைய நாவலை, சிறுகதையை, நாடகத்தை, திறனாய்வை, திரைப்பட விமரிசனத்தை இந்த அடிப்படை இரகசியத்தை அறியாமல் அணுகினால் தவறு செய்தவர்கள் ஆவோம்.

மேற்கத்தியச் சிந்தனையோடு சார்ந்து செயல் படுகிற, சிந்திக்கிற நம்மில் சிலர்கூட இந்தத் தமிழ் சார்ந்த அடிப்படை இரகசியத்தைப் புரிந்து கொண்டால் தமிழ் பேசும் பிரதேச அடிப்படைகள் தெளிவாகும். நம்முடைய படைப்புகள்,விமரிசனங்கள், திரைப்படங்கள் உண்மையோடு தொடர்புடையவையாய் அமையும்; அல்லது ஒரு குருட்டாட்டமாய்ப் போய்விடும். ஆக அமைப்பியல்,பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் ஆகிய நாமகரணங்களின்கீழ் பேசப்படும் விசயங்கள் உண்மையான தமிழனின் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டுமானால் தமிழனின் மூலப்படிம உணர்வைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த அம்சங்கள் எந்த அளவு நம் சிந்தனைகளில், எழுத்துகளில்,செயல்பாடுகளில் வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது நியாயத்தன்மை (authonticity) நிரூபிக்கப்படும். அந்த நியாயத்தன்மையற்ற எழுத்துகள் பொய் எழுத்துகள்; பயனற்றவை.

தமிழ் ஓர்மையின் மிகத்தெளிவான 'சுட்டி'கள்(index) இன்று அரசியல் கட்சிகளின் மூலமே வெளிப்படுகின்றன. இந்த அரசியல் கட்சிகளின் மூலம் வெளிப்படும் மூலப்படிம உணர்வை நல்லமுறையில் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்; அதனைத் தன் சுய மேம்பாட்டுக்குப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். தன் குடும்ப, சுயவளர்ச்சிக்குப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். மூலப் படிம உணர்வு என்பது ஒரு வகை நீட்சேயன் உணர்வாகும். அதிகாரங்கள், வெறியுணர்வுகள்,மகோன்னத கணங்களின் ஒளிகள் அதில் காணப்படும். இதனை இன்றைய தமிழ் அரசியல் புரிந்து கொண்டுள்ள அளவு, அலசி ஆராயும் தெளிவுள்ள வேறு அறிவார்த்த தலைமை இல்லை; இதனை உருவாக்க தக்கவர்களைக் கொணரவில்லை இவர்கள்.

ஆகையால் கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சென்னையில் உள்ள ஆங்கிலம் படித்த தனி மனிதர்களை நம்ப வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் ஒரு குறிப்பிட்ட சாதிக்குழுவைச் சார்ந்தவர்கள். வரலாற்று ரீதியில் பழிவாங்கும் உணர்வுடன் உள்ள பிராமணர்கள் இவர்கள்.தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளமுடியாது இவர்களால். ஆனால் அதிகமான அறிவை இன்னும் இவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இலக்கியமா, பத்திரிகையா, தத்துவமா, அரசியல் மற்றும் சட்டத்துறையா, வெளிநாட்டு ஆட்சியியலா, விஞ்ஞானமா, மானுடவியலா,சமூகவியலா இவர்கள்தான் தங்கள் கைவசம் வைத்திருப்பதாய் தமிழ்க்கட்சிகளை நம்ப வைக்கின்றனர். எம்.எஸ். எஸ்.பாண்டியன் போன்ற அனைத்துலக அங்கீகாரம் கொண்ட ஒரு திராவிடவியல் அறிஞனைத் திராவிடத் தலைமையினர் துணைவேந்தராய் நியமிப்பார்களா என்ன?

என்னுடைய அளவுகோல் எப்போதும் தமிழ்தான். நான் மார்க்சீயம் படித்தாலும், அமைப்பியல் படித்தாலும் குறியியல் படித்தாலும் வார்ஸாவில் ஒரு கடவுள் என்ற நாவலை எழுதினாலும் என் அளவுகோல் தமிழ்தான்.தமிழர்கள்தான். இதனால் சிந்தனைத் துறையில் நான் அடைந்த பயன்கள் பலப்பல. வெறும் மேல் நாட்டு மோஸ்தர்களுக்கு ஆட்படாத ஒரு இலக்கியக் கோட்பாட்டாளனாய் நான் எஞ்சுவதற்குத் தமிழை ஒரு அளவுகோலாய் நான் வைத்திருப்பது உதவுகிறது.

சமீபத்தில் ஈழப்பிரச்சினை சார்ந்த தமிழர்களின்,தமிழ்க் கட்சிகளின்,தமிழ்த் திரைப்படத் துறையினரின் செயல்பாடுகளில் வெளிப்பட்ட செய்தி யாது?

கலைஞர் என்ற பெயரில் ஒரு நான்கு சகாப்தங்களாய் தமிழ் மக்களைத் தலைமை தாங்கிய தலைவர் இன்று,மூத்த ஒரு அகில இந்தியத் தலைவராய் விளங்குகிறார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சங்க இலக்கியமோ திருக்குறளோ இந்த மனிதரின் வாயில் வராமலில்லை. இவர் புலிகளையும் ஈழத் தமிழர்களையும் பிரித்துப் பேசுவதில்லை. ஆனால் இதற்கு நேர் எதிரானவர் இன்றைய எதிர்கட்சித் தலைவர். புலிகளையும் தமிழர்களையும் பிரித்துவைத்துப் பிரச்சினையைப் பேசாதவர்கள், வைகோ, மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர்.இதில் பா.ஜ.கவைச் சார்ந்த கணேசன் என்ற கட்சித் தலைவரும் அடங்குகிறார் என்று நினைக்கிறேன்.

சிலருக்குக் குழப்பமாகவிருக்கலாம். ஒரேவிதப் பார்வைக் கோணம் கொண்ட வைகோவும் கலைஞரும் எதிர் எதிர் கட்சிகளில் அணி சேர்ந்திருக்கின்றனரே என்று. மூலப்படிம அரசியல் செயல்பாடு என்பது இதுதான். அது தர்க்கரீதியான வகைப்பாடுகளுக்கு அடங்காது. பிரச்சினையின் காரணம் நமக்கு விளங்குகிறது. அதுபோதும். மூலப்படிம தமிழ் உணர்வை உச்சக் கட்டத்துக்கு வளர்த்துவிட்டவர் பாரதிதாசன். இந்த மூலப்படிமத் தமிழ் உணர்வு திரு.வி.க.விடம், மறைமலையடிகளிடம், சுந்தரம் பிள்ளையிடம் இருந்த அளவு பெரியாரிடம் இருக்கவில்லை. அண்ணாவிடம் கலைஞரிடம் வைகோவிடம் இருக்குமளவு ஜெயலலிதாவிடம் இல்லை. தா.பாண்டியனிடம் இருக்குமளவு வரதராஜனிடம் இருக்க முடியாது. இந்த மூலப்படிம உணர்வு சிக்கலானது. இது புதிய ஒரு கோட்பாடு.

தனி நபர்களை மகோன்னத ஆட்களாகக் கணிப்பதுதான் மூலப்படிம உணர்வு.இன்றைய சூழலில், வரலாற்றில் தமிழர்களின் உலகத்தலைவராக ஒருவரை இந்த உணர்வு இனம் காணத் துடிக்கிறது. மூலப்படிமத்தின் குறும்பான செயலே இதுதான். நமக்கு அந்த நபரைப் பிடிக்கிறதோ இல்லையோ, அந்த நபரை மூலப்படிம உணர்வுக்குப் பிடிக்கிறது. மூலப்படிமத்துக்குச் சில வேளை மூளை இருக்காது; சிலவேளை மூளை ரொம்ப ஜோராய் வேலை செய்யும்.கண்கள் பார்க்காது. முட்டி மோதுவதில் இன்பம் கொள்ளும். இன்றைய சூழலில் உலகத் தமிழர்களின் நாயகத்துவம் என்ற இடத்திற்கு யாரை மூலப்படிம உணர்வு இனம் காண்கிறது என்பது புரிகிறதா? எனவே வெறும் அலசல்முறைச் சிந்தனைமூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்று கருதுபவர்கள் ஏமாறப் போகிறார்கள். அதேநேரத்தில் தந்திரமாய் இயங்குபவர்களையும் இந்த மூலப்படிம உணர்வு காவு கொண்டே தீரும்.அரசியல் பலிகள் நடைபெறலாம்.

இந்த உணர்வை இந்தியாவில் இருக்கிற பலர் உணராமல் இருக்கையில் சிரிதுங்க ஜெயசூரியா என்ற இலங்கையின் யுனைட்டெட் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் உணர்ந்துள்ளார். அக்டோபர் 21-ஆம்தேதி (2008) பெங்களூரில் ஒரு கூட்டத்தில் அவர் கூறிய கருத்துகள் நமக்குக் கண்களைத் திறப்பதாக உள்ளன.அவர், இன்றைய ஈழத்தில் யார் தமிழர், யார் புலி என்று பிரித்தறிய முடியாமல் உள்ளது என்று கூறுகிறார். (பார்க்க: இந்து நாளிதழ், 22-10-2008) இந்தக் கருத்து ஏன் எனக்கு முக்கியமானதெனக் கூறுகிறேன்? ஏனென்றால் நான் கூறிவரும் மூலப்படிம உணர்வு சார்ந்தது இந்தக் கருத்து. மூன்றாமுலக அரசியலையும் பண்பாட்டையும் இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டும். சார்லஸ் ரெயர்ஸன்( Charles Ryerson) என்ற இறையியலாளர், தன் ‘வட்டார வாதமும் தமிழ் புத்தொளியும் வெகுசன இந்துமதமும்’ என்ற நூலில் கூறும் கருத்துகளும் என்னுடைய ஆய்வுக்கு வலிமை சேர்ப்பதாக உணர்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் இங்குக் கூறவேண்டும்.

ஈழத்தில் கிழக்கில்,பிள்ளையன் என்பவர் முதலமைச்சராகியுள்ளார்.அவருடைய கருத்துகள் தினமணி இதழில் (29-10-2008)வெளிவந்துள்ளன. இந்தியத் தமிழர்களின் மூலப்படிம உணர்வெழுச்சிக் காலகட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவிடம் அவர் வாக்குக் கொடுத்ததுபோல கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தாருங்கள் என்கிறார். போலீஸ் வைத்துக் கொள்வதற்குக்கூட,பெயருக்கு முதலமைச்சர் ஆகியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற புலிகளை எதிர்க்கும் குழுவின் சார்பில் அதிகாரத்துக்கு வந்துள்ளவருக்கு உரிமையில்லையாம்.

என்.ராம் என்ற இந்து நாளிதழை ஹைஜாக் செய்து தன் ஒரு நபர் திட்டத்தை ஈடேற்றும் நபர், புலிகளைத் தோற்கடித்து பிள்ளையனைப் போன்ற இன்னொரு முதலமைச்சரை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கொணரும் தன் ஆசை நிறைவேறினால் என்ன நடக்கும் என்று அறியவில்லை.திடீரென்று கருணாநிதியின் கையிலிருந்து போலீஸ் துறையைப் பிடுங்கி டெல்லி வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்! அதுபோன்று அதிகாரமில்லாத நபர்தான் பிள்ளையன். பிள்ளையன் போன்ற முதலமைச்சர்,மகிந்த ராஜ பக்க்ஷவின் தயவில் கொஞ்ச நாள் இருக்கலாம். ஆனால் வரலாறு வேறுவிதமானது.

ஓரளவு, மூலப்படிம உணர்வின் ஆழ்ந்த ஆய்வு சில விஷயங்களிலாவது நமக்கு ஒளிபாய்ச்சலாம் என்று கருதுகிறேன். ஆனால் இந்த ஆய்வுமுறை,இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வர இயலாது என்று பாஸில் ராஜ பக்க்ஷ,பிராணாப் முகர்ஜியுடன் கூறினாலும் பெரிதாகக் கண்டுகொள்ளாத கலைஞரையோ, அவரை அடியொற்றி நிற்கும் பிற கட்சித் தலைவர்களையோ இனம் காணப் பயன்படாது.

நன்றி உயிரோசை 03-11-2008

தமிழவனின் தொடர்புடைய இதரக் கட்டுரைகள்.

1. தமிழ் உணர்வுக்கு என்ன பொருள்

2. இந்து நாளிதழின் சர்ச்சைக்குரிய கட்டுரை- ஒரு குறியியல் அணுகல்

3. இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும் -நாகார்ஜினன்.

குறிப்புகள்.

1.  தமிழவன் குறித்து விக்கிப்பீடியாவில் நான் எழுதிய குறிப்புகள்.

- மீளபதிவும் குறிப்பும் ஜமாலன் - 04-11-2008

2 comments:

றஞ்சினி சொன்னது…

நல்ல நேரத்தில் தமிழவனாலெழுதப்பட்ட கட்டுரையாக இது எனக்கு தெரிகிரது இதை மறுபிரசுரம் செய்த ஜமாலனுக்கு நன்றி.
இந்தக்கடுரைகலில் உள்ள பல விடயங்கலுடன் எனக்ககூடன்பாடு ..

//தமிழ் என்னும் மூலப்படிமம் நாடகீயமாய், சடங்குகளாய், கோபமாய்,தற்கொலைகளாய், ஆக்ரோஷமாய், மௌடீகமாய், மூட நம்பிக்கையாய் வெளிப்படும் அதே நேரம் ஆழ்ந்த தர்க்கமாயும், விசாரிப்புமரபாகவும்கூட அமைகிறது. இதனை இரு எதிரும் புதிருமான உணர்வின் அல்லாட்டமாய்ப் பார்க்கவேண்டும். ஏதோ ஒரு உணர்வு மட்டும் பிரதிபலிப்பதாய்ப் பார்க்கக்கூடாது.//

உண்மை

//அதிகாரங்கள், வெறியுணர்வுகள்,மகோன்னத கணங்களின் ஒளிகள் அதில் காணப்படும். இதனை இன்றைய தமிழ் அரசியல் புரிந்து கொண்டுள்ள அளவு, அலசி ஆராயும் தெளிவுள்ள வேறு அறிவார்த்த தலைமை இல்லை; இதனை உருவாக்க தக்கவர்களைக் கொணரவில்லை இவர்கள். ஆகையால் கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சென்னையில் உள்ள ஆங்கிலம் படித்த தனி மனிதர்களை நம்ப வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் ஒரு குறிப்பிட்ட சாதிக்குழுவைச் சார்ந்தவர்கள். வரலாற்று ரீதியில் பழிவாங்கும் உணர்வுடன் உள்ள பிராமணர்கள் இவர்கள்.தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளமுடியாது இவர்களால். ஆனால் அதிகமான அறிவை இன்னும் இவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இலக்கியமா, பத்திரிகையா, தத்துவமா, அரசியல் மற்றும் சட்டத்துறையா, வெளிநாட்டு ஆட்சியியலா, விஞ்ஞானமா, மானுடவியலா,சமூகவியலா இவர்கள்தான் தங்கள் கைவசம் வைத்திருப்பதாய் தமிழ்க்கட்சிகளை நம்ப வைக்கின்றனர். எம்.எஸ். எஸ்.பாண்டியன் போன்ற அனைத்துலக அங்கீகாரம் கொண்ட ஒரு திராவிடவியல் அறிஞனைத் திராவிடத் தலைமையினர் துணைவேந்தராய் நியமிப்பார்களா என்ன?//

இது நான் அடிக்கடி நினைக்கும் ஒன்று நன்பர்களிடமும் விவாதித்திருக்கிரேன் தமிழர்களை விழிப்படையாமல் வைத்திருப்பதில் பிராமனர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிரார்கள் .தமிழ்மொழியை முதல் மொழியாக்குவது என்பதென்றாலும் ,தமிழர்கள் கொஞ்சம் குரலை உயர்த்தி உணர்வுரீதியாக ,உரிமையாக எதையாவது கேட்டுவிட்டாலும் முதலில் எதிர்ப்பவர்களும் இவர்கள்தான்.. . ஆனால் தமிழர்கலுக்கு எங்கு பிரச்சனை நடந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் ,தேவைகள் ,கஸ்டங்கலை மத்திய அரசு கவனிக்காதது இருக்கும்போதும் இவர்கள் வாய்திறப்பதே இல்லை இது அவர்கலுக்கு தேவையில்லாத பிரச்சனையாகிவிடுகிரது .

நான் ஒரு தமிழ் வெறியுடைய பெண்ணல்ல அப்படி ஒரு வெறியை பரப்ப வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை ஆனால் நான் உருவாகி அறியப்பட்ட மொழியில் எனக்கு அக்கறையும் உண்டு ..நான் என்ன எழுதினாலும் தமிழில்த்தான் எழுதுகிரேன் சிந்திக்கிறேன் பேசுகிறேன் தமிழர்கலுகுத்தான் அது போய்சேர வேண்டும் என்றும் நினைக்கிரேன் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டு தமிழ் அல்லது சொந்த மொழி கட்டாயம் அவசியமா என்று என்னால் கேட்க்கமுடியுமா ....
நன்றி ஜமாலன்
அன்புடன் றஞ்சினி

ஜமாலன் சொன்னது…

விரிவான பின்னோட்டத்திற்கு நன்றி றஞ்சனி.

அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன். Blogger இயக்குவது.