தமிழவன், நாகார்ஜீனன், பிரேம் மற்றும் நான்.

நேற்று நண்பர் பைத்தியக்காரன் ஒரு பதிவு பொட்டிருந்தார் உம்பர்ட்டோ ஈகோவும் உம்மணாம் மூஞ்சியும் - 1! என்று. அதில் என்னைப்பற்றி அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

//உம்பர்ட்டோ ஈகோ எழுதிய புதினங்களில், முதல் இரண்டு நாவல்களை குறித்து பதிவில் எழுதலாம் என நினைக்கிறேன் (ஏன், மத்த மூணு புதினங்கள் பத்தி நாகார்ஜுனன், ரமேஷ் - பிரேம், ஜமாலன், தமிழவன்... யாரும் எழுதலையா? எழுதினது உன் கண்ணுல படலையா?).//

அதற்கு எனது பதில்:

மேற்கண்டவர்களின் வரிசையில் என்னை சேர்க்காதீர்கள். நான் அவர்களது வாசிப்பில் 10 சதமானம்கூட வாசித்தவன் அல்ல. தவிரவும் அவர்களை ஆச்சர்யத்துடன் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகன் நான். அதனால் அந்த வரிசையில் ஒரு பொறுத்தமற்றவன்.

அப்பதிவில் தமிழவனின் 'ஜே.கே. எழுதிய மர்மநாவல்' பற்றி குறிப்பிட்டிருந்தார்.

//தமிழவன் இதே அமைப்பில் ‘ஜி. கே. எழுதிய மர்ம நாவல்’ என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். இப்போது பிரதி கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இதில் தமிழகத்தில் நிகழ்ந்த பவுத்த சிதைவுகளை ஆராய்ந்திருக்கிறார்.//

அதற்கு மதி கந்தசாமி பின்வருமாறு பின்னோட்டம் இட்டிருந்தார்.

//தமிழவனின் புதினத்தை எப்போது யார் வெளியிட்டார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? முடிந்தார், அந்தப் புதினத்தைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

உம்பர்ட்டோ ஈகோவின் Name of the Roseமாதிரி இருக்கிறதென்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது. எங்காவது கிடைக்கிறதா என்று தேடப்போகிறேன்.//

நண்பர் பைத்தியக்காரன் மறு பின்னொட்டம் இவ்வாறு இட்டிருந்தார்.

//தமிழவனின் புதினம் குறித்த விவரம் கிடைத்ததும் கண்டிப்பாக தங்களிடம் தெரிவிக்கிறேன். நண்பர் ஜமாலனுக்கு இந்த புதினம் குறித்து என்னைவிட அதிகமாக தெரியும். அவர் தமிழவனின் புதினம் குறித்து ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார்.//

அவர்களது பின்னோட்டததிற்கான எனது பதிலே இது. இதை சாக்காக வைத்து தமிழவன், நாகார்ஜீனன் மற்றும் பிரேம் குறித்து சில....

என்பதுகளில் தமிழில் இயங்கிவந்த 3 அறிவுஜீவிகள் தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி (சாருநிவேதிதா என்பதிகளில் கலை இலக்கியம் என்கிற நூலில் இவர்களை intellectual giants என்று குறிப்பிட்டிருந்தார்.). இவர்களில் இங்கு தமிழவன் நாவல்கள் குறித்து சில குறிப்புகளை பகிரலாம்.

நண்பர் நாகார்ஜீனன் தனது பதிவொன்றில் எனது ஆசிரிதமிழவன்யர் தமிழவன் என்று குறிப்பிட்டு தமிழவனின் சமீபத்திய நாவலான 'வார்ஷாவில் ஒரு கடவுள்' பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்நாவல் குறித்த கருத்துக்களை தீராநதி பேட்டியில் சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்துவிட்டார்கள்-என்கிற தலைப்பில் கடற்கரயிடம் விவாதித்துள்ளார் தமிழவன்.

'ஜே.கே. எழுதிய மர்மநாவல்' என்ற நாவல் அநேகமாக காவ்யா வெளியீடாகத்தான் இருக்கும். காரணம் தற்சயம் என்னிடம் அந்த நாவல் கைவசம் இல்லாததால் சரியாக சொல்ல இயலவில்லை. எனது நண்பர் ஒருவர் பெங்களுர்காரர். அவரை தமிழவனை சந்தித்து சில நூட்கள் வாங்கி வரும்படிச் சொன்னபோது, இந் நாவலை தமிழவன் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பியிருந்தார். (இதை சொல்வதில் ஒரு 'சின்னப் புள்ளத்தனமான' ஆட்டோகிராப் சந்தோஷம்தான். இருந்தாலும் தமிழவன் உங்கள் விமர்சனத்திற்காக என எழுதும்போது அங்கீகாரம் கிடைத்து விட்டதான ஒரு அற்ப சந்தோஷமே.) ஏற்கனவே சென்னை நண்பர் மூலமாக எனக்கு இது அனுப்பப்பட்டது. இரண்டு பிரதிகளும் என்னிடம் இங்கு இல்லை. இந்நாவல் குறித்து எழுதும் எண்ணம் அன்று முதலே உண்டு. இடையில் சில ஆண்டுகள் எழுதுவதை விட்டு விட்டதால் அதில் கவனம் செலுத்தவில்லை. தற்சமயம் பதிவுகள் வந்தபின்தான் எழதத் துவங்கியுள்ளேன். சீக்கரத்தில் அதனுடன் சேர்த்து அவரது புதிய நாவலான 'வார்சாவில் ஒரு கடவுள்' பற்றியும் எழுத வேண்டும்.

ஏற்கனவே தமிழவனின் 'எற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' என்கிற நாவல் மார்க்குவெஸ்ஸின் 'ஒருநூறு வருஷத்து தனிமை' போன்று நாஞ்சில் நாட்டில் நடந்த சுதந்திர போராட்டக்காலம் துவங்கி சமீபத்திய சாதிய முரண்களினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'மாஜிக்கல் ரியாலிஸ' நாவல். அது குறித்த எனது விமர்சனம் ஒன்று தீபம் பத்திரிக்கைக்கு எழுதியது. அந்த பிரதி என்னவாகியது என்றே தெரியவில்லை. அது தீபத்திலும் வெளியாகவில்லை. இந்நாவல் குறித்து வந்த எதிர் வினைகளை தொகுத்து தனது பதில்களுடன் தமிழவன் ஒரு சிறு பிரசுரம் ஒன்றை 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டார்.

அதன்பின் 'சரித்திரத்தில் படிந்த நிழல்கள்' என்கிற நாவல் வெளிவந்தது. அந்த நாவல் மில்லார்ட் பாவிக்கின் (நாகார்ஜீனன் பாவிக்கின் எழுத்துபற்றி இங்கு பதிவிட்டுள்ளார்.) 'கஸாக்கர் டிக்ஷனரி்' என்கிற நாவலை ஒட்டி அமைந்துள்ளதாக ஒரு விமர்சனம் உண்டு. அந்நாவல் இந்திய திராவிட இயக்கங்கள், ஈழப்போராட்டம், பாபர் மசூதி இடிப்பும், இந்துத்வா இயக்கங்கள் பற்றியதான விமர்சனங்களை அடிப்படையகாகக் நாகார்ஜீனன்கொண்ட இன்றைய கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எம்ஜியார் ஆகியோரின் பிம்பங்களை அடிப்படையாகக் கொண்டு எழதப்பட்ட ஒரு 'அழித்தெழுதப்பட்ட பிரதி' வடிவிலான நாவல். அது குறித்து ஒரு விரிவான விமர்சனம் காலக்கறி (நகலச்சு இதழில் - Xeroxed magazine) வெளிவந்தது. அதை தமிழவன் படித்து எனது சில விமர்சனங்கள் குறித்து ஒரு விளக்க கடிதம் எழுதி அதையும் காலக்குறியில் வெளியிட்டுள்ளோம். பிரச்சனை அதன் கோப்பு என்னிடம் இல்லை. மறு தட்டச்சு செய்ய உள்ள அலுப்பால் பதிவில் வெளியிடவில்லை. பிறகு எனது 'மொழியும் நிலமும்' கட்டுரைக்கு ஒரு நீண்ட கடிதம் அவர் எழுதி அதற்கு நான் பதில் எழுதி அதில் ஒரு விவாதம் நடந்தது.

அடுத்த நாவலே 'ஜே.கெ. எழுதிய மர்ம நாவல்'. இது உம்பர்த்தோ எக்கோவின் 'நெம் ஆஃப் த ரோஷஸ்' நாவலைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. (உம்பர்ததோ எக்கோ பற்றிய ஒரு அறிமுகக்கட்டுரை காலக்குறியில் எழுதினோம். அது காலக்குறி மீளபதிவில் வரும்.) இந்நாவல் பழைய புத்தகக் கடையில் கண்டெடுக்கப்பட்ட அழிந்து போன ஒரு பழைய நாவலினை மீள்கட்டமைப்பு செய்யும் வண்ணம் எழதப்பட்ட நாவல். பெளத்த மடாலயங்கள் குறித்தும் ஈழப்போராளிகள் குறித்தும் மதம் சார்ந்த விசாரணையாகவும் நகரும் நாவல் இது.

தற்சமயம் 'வார்ஸாவில் ஒரு கடவுள்' என்கிற நாவல் வெளிவந்துள்ளது. அந்நாவல் என்னிடம் இல்லை. புத்தகக் கண்காட்சியில் எனது மகனை விட்டு வாங்கி வைத்துள்ளேன் (நண்பர் சுந்தர் உதவியுடன்). தமிழவனின் எழுத்துக்களின் மீது எனக்கு தீவிர ஈடுபாடு உண்டு. காரணம் 'கன்னீர் பூக்கள்' 'வைகைறை மேகங்கள்' என்று எனது பதின்ம வயதில் படித்து கிளர்ச்சியுற்று 'பாவாடை கட்டிய பாவைகள் மற்றும் சன்னல் பூக்கள்' பற்றிய தன்னெழுச்சிக் கவிதகளை கக்கிக் கொண்டிருந்த காலங்களில் தமிழவனின் 'புதுக்கவிதை நாலு கட்டுரைகள்' தான் எனக்கு இந்த இலக்கிய உலத்தையே காட்டியது. எங்களுர் பழைய நூலகத்தில் இந்த நூலை எதேச்சையாக எடுத்துப் படிக்க அன்று ஏற்பட்ட ஒரு மனக்கிளர்ச்சியின் விளைவே இன்றைய எனது தேடல்கள். எனது ஒரு நூலையாகவது எங்களுர் நூலக அடுக்கில் வைத்து விடவேண்டும் என்கிற 'லட்சிய வெறி' ஏற்பட்டது அன்றுதான். கருப்பு நிற அட்டையில் அட்டைப் பூச்சிகள் போல நெழியும் எழுத்தக்களில் உள்ள அந்த நூல் புதுக் கவிதைகளை புறவயப் பார்வையில் கோட்பாட்டு அடிப்படையில் விமர்சிக்கும் ஒரு நூல். அதில் 'ரெய்னீஷ் அய்ய்ர் தெருக்காரனும் சாணை பிடிப்பவனும்' என்கிற வண்ணநிலவன் கவிதைப் பற்றிய திறணாய்வுதான் தீவிரமாக இலக்கியங்களை நோக்கியும் எனது 'நெம்பகோல்' கவிதைகளை பார்த்து என்னையே வெட்கப்படவும் வைத்தவை. இலக்கியத்தை ஆழ்தளத்தில் சென்ற அனுகும் முறையை உருவாக்கியது அப்பார்வை.

மத்திய கால கிறித்துவ மடாலயங்கள் பற்றிய ஒரு வரலாறே எக்கோவின் நாவல் என்றால் அதனை தமிழக சூழலில் வைத்த புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மறுவாசிப்பு நாவலே ஜே.கே. எழுதிய மர்மநாவல். பெங்களுர் காவ்யாவில் பெரும்பாலான தமிழவன் நூற்கள் கிடைக்கும். தமிழவனின் 'ஸ்டரெக்சரலிஸம்' 'தமிழும் குறியியலும்' மற்றும் 'படைப்பாளி படைப்பு வாழ்க்கை' என்கிற 3 நூற்களும் அமைப்பியல் துவங்கி பின் அமைப்பியல் வரை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூற்கள். இன்று பின்நவீனத்தவம் என்று பேசப்படும் வார்த்தைக்கு அடிப்படை போட்டது அந்த நூலே. அதனை நாகர்ஜீனன், எம்.டி.எம், அ. மார்க்ஸ் மற்றும் பிரேம் ஆகியோர் தொடர்ந்தனர்.

அரசியல் மற்றும் கோட்பாட்டுரீதியான சிந்தனைகள் தமிழவன், கொவை ஞானி மற்றும் எஸ்.வி.ஆர் அளவிற்கு இன்றைய அறிவுஜீவிகளால் காத்திரமாக செய்யப்படவில்லை என்கிற ஒரு சின்ன வருத்premதம் எனக்கு இப்பொழுதும் உண்டு. நண்பர் பிரேம் (பிரெம் பற்றிய அறிமுகம் இங்கு மதிகந்தசாமி அவர்களால் DJ விடமிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.) மற்றும் நாகார்ஜீணனின் எழுத்துக்கள் ஓரளவு கோட்பாட்டுரீதியாக பேசக்கூடியவை. எம்.டி.எம்-மின் பின் அமைப்பியல் அறிமுகம் பற்றிய நூலுக்குப்பின் எதுவும் படிக்க கிடைக்கவில்லை. இவைகள் எனது புரிதலுக்கு ஏற்புடையவையாக உள்ளன. மற்ற விமர்சன எழுத்துக்களில் அகவய நோக்கு அல்லது அழகியல் ரசனைவாதப் புரிதலே அதிகமாக உள்ளது. இக்கருத்தை ஒப்பீட்டுரீதியில் எடுத்துக் கொள்ளுங்கள். நான் படித்தவை என்பதில் எனக்கு தெரியாத சிறந்த விமர்சனங்கள் இருக்கலாம். சுட்டிக்காட்டினால் பயனுள்ளதாக இருக்கும். இங்கு பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக கருதியே இதனை எழுதினேன். பிரேமின் பேச்ச - மறுபேச்சு பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பை இங்கு பார்க்லாம்.

நண்பர்கள் நாகார்ஜீனன் மற்றும் பிரேமிடம் நாட்கணக்கில் உடன் தங்கியும் பேசியும் பழகியும் உள்ளேன். தமிழவனை ஒருமுறைதான் சந்தித்துள்ளேன் இல்லை பார்த்துள்ளேன். அதுவும் அ.மார்க்ஸ், பொ. வேல்சாமி மற்றும் ரவிக்குமார் அடங்கிய நிறப்பிரிகை குழுவால் தஞ்சையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில். கூட்டம் முடிந்து நாங்கள் எல்லோரும் அருகில் உள்ள ஓட்டலில் இரவு உணவு முடித்துவிட்டு உடனே தமிழவனை பெங்களுர் பேருந்தில் ஏற்றிவிட்டோம். அப்பொழுது அவரிடம் நான் பேசியது ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளே. அதன்பின் அஞ்சலில் கடிதத் தொடர்பில் என்னை அவர் அந்த ஒரு சில நிமிட பழக்கத்தில் அடையாளம் கண்டுகொண்டார். அவர் போலந்து வார்சா பல்கலைக்கழகம் போனபின் ஒரு அஞ்சல் மட்டுமே. எம்.டி.எம். நடத்திய மேலும் பத்திரிக்கையில் எனது கட்டுரைகள் வெளிவந்தபோது அதைப்பற்றி பேசியதாக நண்பர் பொதி கூறினார். தமிழவனைப்போலவே எம்.டி.எம்.மையும் பலமுறை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்னும் எண்ணமாகவே உள்ளது. தற்சமயம் தமிழ் பத்திரிக்கை சூழல் அந்த பழைய காலங்களுக்குள் திரும்பியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றில் இரண்டுமுறை நடக்கும் என்கிற மார்க்சின் கூற்று இதிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் நேரடித்தொடர்பு அருகிவிட்டது ஆனால் அவர்களை வாசிப்பது மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

பின்குறிப்பு: தமிழ் பதிவுலக முன்னொடிகளில் ஒருவரான மதி கந்தசாமிக்கு பதிவுலக வீச்சின் விளைவு பற்றிய ஒரு சிறுகதையாடல். இன்று இப்பதிவு எழுதிக் கொண்டிருந்த வேளையில் நண்பர் பிரேம் உரையாடியில் (சாட்டில் நண்பர் டிபீசீடி உபயம்) பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தை ஆச்சர்யமாகக் கேட்டார். அவர் கோவை சென்றிருந்தபோது சில ஆய்வு மாணவர்கள் அவரிடம் நானும் அவரும் 90-களில் பழகிய நாட்களைப் பற்றிக் கூறியுள்ளார்கள். அவர் என்னிடம் இவைகள் எப்படி அவர்களுக்கு தெரிந்தன என்று? நான் எனது பதிவொன்றில் கோபி கிருஷ்ணன் பற்றி எழுதியதில் அந்த அனுபவங்களைப்பற்றி கதைத்திருந்தேன். அதைதான் அவர்கள் அவரிடம் பேசியிருக்க வேண்டும். பதிவுலகம் இப்படி முகந் தெரியாதவர்களிடமும் அறிமுகத்தைக் கொண்டு செல்கிறது என்பது நமக்கு எல்லாம் மகழ்சியான ஒன்றுதானே.

அன்புடன்
ஜமாலன்.

படங்கள்: தமிழவன், நாகர்ஜீனன் மற்றும் பிரேம்.

7 comments:

பெயரில்லா சொன்னது…

காலக்குறி இந்தப் பதிவில் காலக்கறி
ஆகி விட்டது.ஒருவேளை காலக்கறி
என்ற பெயரில் ஏதாவது சிற்றிதழ்
வந்ததா என்று ஐயம் எழுந்தது :)

பெயரில்லா சொன்னது…

காலக்குறி இந்தப் பதிவில் காலக்கறி
ஆகி விட்டது.ஒருவேளை காலக்கறி
என்ற பெயரில் ஏதாவது சிற்றிதழ்
வந்ததா என்று ஐயம் எழுந்தது :)

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

தமிழவனின் படைப்பும் படைப்பாளியும் போன்ற புத்தகங்கள் எனக்கும் பல தெளிவிகளைத் தந்துள்ளன. தமிழின் முக்கியமான ஒரு சிந்தனையாளர்.

அவரது நாவல்கள் ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள், ஜேகே எழுதிய மர்ம நாவல்(வார்சாவில் ஒரு கடவுள் இனிதான் படிக்க வேண்டும்), மற்றும் ஒரு சிறுகதைத் தொகுதி படித்துள்ளேன். வாசிப்புத் தன்மை (readability) குறைவாகவே இருக்கும் அவரது புனைவுகளில் என்பது என் கருத்து.

ஜமாலன் சொன்னது…

அணானி அய்யா திருத்தியாச்சு நன்றி.

ஜமாலன் சொன்னது…

நன்றி சுந்தர்.

எனது பார்வை பொதுவாக அரசியல் சார்ந்த வாசிப்பை அடிப்படையாகக் கொண்டது.

கே.என்.சிவராமன் சொன்னது…

ஜமாலன், இது நண்பர்களை குறித்த நெகிழ்ச்சியான, அசைபோடும் பதிவு. என்றுமே, எந்த மனிதனுமே பிறர் இல்லாமல் முழுமையடைவதில்லை... அந்த பிறருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். இப்படி பார்க்கும்போது ஒவ்வொரு மனிதனுமே உலகை சுமந்து கொண்டிருக்கிறான் என்ற நிலைக்கு வரமுடியும்...

ஜமாலன் என்னும் கலைஞருக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களை குறித்த பதிவு என இதை சொல்லலாம். அந்த கலைஞர்களுக்கு பின்னால் உலக கலைஞர்கள் இருக்கிறார்கள்...

நேற்றிரவு ஜோர்ஜ் லூயி போர்ஹே குறித்து படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் சொன்ன ஒரு வாசகம் என்னை தூங்கவிடாமல் செய்தது. இந்தப் பதிவுக்கும் அது பொருந்தும் என்பதால் அதை இங்கு சொல்லலாம் என நினைக்கிறேன்..

'I am not sure that I exit, actually.
I am all the writers that I have read,
all the people that I have met,
all the women that I have loved;
all the cities that I have visited,
all my ancestors.'
- BORGES

எஸ்.சத்யதேவன் சொன்னது…

பதிவில் தமிழவனின் ஜீ.கே எழுதிய மர்ம நாவல் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் அதன் உள்ளடக்கம் பற்றிய விடயங்கள் ஆர்வமாக இருந்ததால் எமது திருகோணமலை நூ}லகத்தில் தேடிப்பார்த்தேன் அதிஸ்டம் எனக்கு அந்த பத்தகம் கிடைத்தது அதன் வெளியீடு மற்ற விபரங்கள் தற்போது ஞாபகம் இல்லை என எழுதியிருந்தீர்கள் எனக்கு கிடைதத அந்த புத்தகத்தின் விபரங்கள் இதோ

ஜி.கே.எழுதிய மர்ம நாவல்
தமிழவன்
பல்கலைப்பதிப்பகம் 36,
தெற்குச் சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம்,
சென்ன -600024
முதல்ப் பதிப்பு : அக்டோபர் - 1999

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.