குறிப்பு: இக்கட்டுரை தாகம் - மே 2007 - இதழில் திருவாளர் தினா என்பவரால் எழுதப்படடுள்ளது. கட்டுரையின் உடனடி முக்கியத்தவம் கருதி இங்கு வெளியிடப்படுகிறது. ரஜனி என்கிற பிம்பத்தை கடந்த 25-ஆண்டுகளாக கட்டமைக்கும் அரசியல் சக்திகள் கவனமாக ஆய்வு செய்யப்பட வேண்டியவை. பார்ப்பணீய இந்துத்துவ சக்திகள் இந்த பிம்பத்தை தமிழக பெருமுதலாளிக் கும்பலுடன் செர்ந்து கட்டமைப்பது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியவை. இப்பிம்பத்தின் இயக்கம் குழந்தைகளையும் இளைஞர்களையும் மிகத் தெளிவான திட்டமிட்ட புரிதலுடன் அழிவிற்கு இட்டுச் செல்லும் ஒரு சீரழிவு இயக்கமாகும். இந்துத்தவ பாசிசத்தின் ஒரு பெருந்திரள் வெளிப்பாடும் அதற்கான குழு உளவியலுமே இப்பிம்பத்தின் இயங்குதளமாகும். இதனை இன்றே அம்பலப்படுத்தி சமுகத்திலிருருந்து அப்புறப்படுத்தாவிட்டால்... நாளை நாம் இந்த பாசிச வெறிக்கும்பலால் ஒரு பேரழிவை சந்திக்க நேரிடும். அதன் முதல் கட்டமாக இப்பிம்பத்தின் பொய்முகத்தை கிழிக்கிறது இக்கட்டுரை.
-------------------------------------------------------------------------------------
ரஜினி பிம்பமும் உண்மையும்
திருவாளர் தினா
-------------------------------------------------------------------------------------
ஜூனியர்கள் அறியாத ரகசியங்கள்!
ஒரு திரைப்படம் வெற்றி பெற எது முக்கியம்?
நல்ல கதை?... ... ..ஊகும்
நல்ல திரைக்கதை?.. ... .. ஊகும்
திறமையான இயக்குநர்?... .. ஊகும்
கதாபாத்திரத்தை உணர்ந்த நடிகர்கள்?... ஊகும்
தொழில்நுட்பக் கலைஞர்கள்?...... ...... ஊகும்.
திரைத்துறையினரில் சிலரைக் கேட்டால், இவை எல்லாவற்றையும் விட பூஜை போட்ட நாளிலிருந்து படம் வெளியாகும் நாள்வரை நடைபெறும் `கட்டுமானப் பணி'தான் முக்கியம் என்பார்கள். கட்டுமானப் பணியா? அது இன்ஜினியர், மேஸ்திரி, கொத்தனாரு, சித்தாளு சம்பந்தப்பட்ட வேலையாச்சே என்று குழம்புகிறீர்களா? ஒருவேளை, திரைப்படங்களுக்குப் போடப்படும் செட்டிங்குகளாக இருக்குமோ என யோசிக்கிறீர்களா? இது வேறுவிதமான கட்டுமானப் பணி. அதுக்குப் பேருதாங்க `பில்டப்பு'
டப்பும் பில்டப்பும் இருந்தால் படத்தை ஓட்டிவிடலாம் என்று கணக்குப் போட்டுச் செயல்படும் திறமைமிக்கவர்கள் திரையுலகில் அதிகரித்துக்
கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பில்டப்பு கொடுக்கப்பட்ட படங்களில் முதலிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் சிவாஜிக்கு உண்டு. ஏ.வி.எம். தயாரிக்க, ஷங்கர் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரஜினி நடிக்கும் படம் இது என்பதை நேற்றுப் பிறந்த குழந்தைகளும் நாளைக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும்கூட தெளிவாகச் சொல்லிவிடும்.
சிவாஜியைப் பற்றி அதை விடவும் கூடுதலான தகவல்களையும் சொல்லக் கூடும். ஏனென்றால் சிவாஜி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டுக்கு மேலாகியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பில்டப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும் (தாகம் உள்பட)
படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார். ‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான் தயாரிப்பாளர் தந்த தகவல். அட.. ஙொக்கமக்கா! இதுதாம்ப்பு பில்டப்புக்குப் பிள்ளையார் சுழி.
சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா? சிவாஜி என்ற தலைப்புக்காக சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டதாகக் கட்டுமானப் பணிக்கு அடித்தளம் போட்டார்கள்.
அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்? வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்? கேட்பவன் கேணையனாக இருப்பான். எழுதுபவன் ஏமாளியாக இருப்பான் என்று கணக்குப் போட்டே ரஜினி+ஷங்கர் கூட்டணி, ஏ.வி.எம்மைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுமானப் பணிகளை ஈஃபில் கோபுரம் அளவுக்குக் கொண்டு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஏமாளிகளாகி, சிவாஜி படக்குழு கக்கிய வாந்தியையெல்லாம் வழித்தெடுத்து வெளியிட்டன.
ரஜினி தும்மினார், அவருடைய மருமகனுடன் கட்டிப்பிடித்து ஆடிவிட்டு அடுத்த படத்திலேயே அவரையும் கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா குனிந்து நிமிர்ந்தார், இயக்குநர் ஷங்கர் இருமினார், ஏ.ஆர்.ரகுமான் எழுந்து உட்கார்ந்தார் என்ற அளவில் தினம் ஒரு தகவலை வெளியிட்ட ஊடகங்கள், அதே சிவாஜி படத்திற்காக அதன் படப்பிடிப்புக் குழுவினருக்கு அளிக்கப்பட்ட விருந்து பற்றியும் அதில் ஒருவர் இறந்தது பற்றியும் எந்த அளவுக்குச் செய்திகளை வெளியிட்டன? படத்தின் ஒலிப் பொறியாளர் சச்சிதானந்தன் என்பவர், கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த அந்த மது விருந்தில் பங்கேற்று, அங்கே 4 அடி தண்ணீர் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துபோனார். அது கொலையா, தற்கொலையா என்ற விவாதங்கள் எழுந்தது ஒருபுறமிருக்கட்டும்.
தான் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் நேற்றுவரை ஒன்றாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் இன்று உயிருடன் இல்லை. அதுவும் தனது படப் பிடிப்புக்குழுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மரணமடைந்திருக்கிறார். சச்சிதானந்தத்தின் மனைவி கதறித் துடிக்கிறார். அவரது பிள்ளைகள் அப்பாவை இழந்து தவிக்கின்றன. ஆறுதல் சொல்லக்கூட ரஜினி அங்கே எட்டிப் பார்க்கவில்லை. ஷங்கரைக் காணோம். ஒருவரும் வரவில்லையே என்று அந்தக் குடும்பம் கதறுகிறது. நல்லது நடக்கும்போது பக்கத்தில் இல்லாவிட்டாலும், கெட்டது நடந்து விட்டால் துணைக்கு இருக்கவேண்டும் என்று தமிழகக் கிராமப்புறங்களில் சொல்வார்கள். மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, பிழைப்புக்காகத் தமிழகத்திற்கு வந்து பல ஆண்டுகளாகியும் ரஜினிக்கு இந்த இங்கிதம்கூடத் தெரியவில்லை. சச்சிதானந்தத்தின் இறுதி ஊர்வலத்தில் சிவாஜி குழுவினர் ஒருவரும் இல்லை என்பதை நக்கீரனைத் தவிர வேறெந்தத் தமிழ்ப் பத்திரிகையிலும் பார்க்க முடியவில்லை.
சச்சிதானந்தன் அதிகமாகக் குடித்திருந்தார். அதனால்தான் அவர் மரணமடைந்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன. இருக்கலாம். ஒருவேளை, அவரைவிடவும் அதிகமாக ரஜினி குடித்திருந்ததால், சச்சிதானந்தன் இறந்த தகவலைக்கூட அவரது இறுதி ஊர்வலம் நடந்து முடியும் வரை அறியாமல் இருந்தாரோ! அதனால்தான் வரவில்லையோ... ... யாரறிவார் பராபரமே!
தன்னை நம்பிப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவக் கூடியவர் என்ற நல்ல பெயர் ரஜினிக்கு உண்டு. அவர்கள் நட்டமடைய விடமாட்டார் என்பதும் ரஜினிக்கு இருக்கும் குணாம்சம். இவை பாராட்டுக்குரியவைதாம். தயாரிப்பாளர் என்ற `எஜமானுக்கு' இலாபம் ஈட்டித் தரக்கூடிய நல்ல `வேலைக்காரனாக' இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் தொழிலான திரைத்துறையில் அந்தப் பணத்தின் மதிப்பை உணர்ந்து மிகப்பிரபலம் வாய்ந்த ஒரு நடிகர் செயல்படுகிறார் என்பதை யாரும் வரவேற்காமல் இருக்க முடியாது. அதே நேரத்தில், பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பை உயிருக்குக் கொடுக்காமல் போய் விட்டாரே என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் தென்படவில்லை. உடன் பணியாற்றியவர் மரணமடைந்ததும் கண்டும் காணாமல் விட்டவர், தன் படத்திற்காக ஆண்டுக்கணக்கில் தவமிருக்கும் தீவிர ரசிகர்களையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது படத்தை எதிர்பார்த்திருக்கும் பலதரப்பட்டவர்களையும் வைத்து என்னக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் தெரியுமா?
சிவாஜி திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய்க்குக் குறையாமல் விற்கவேண்டும் என்பதில் ரஜினியும் இயக்குநரும் படத்தயாரிப்பாளரும் பிடிவாதம் காட்டினர். இதுதவிர வெளிமாநிலங்கள், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள், தொலைக்காட்சி உரிமை, ஒலிநாடா உரிமை என ஏகப்பட்ட கோடிகளுக்கான விற்பனை தனி. படம் எடுத்தவன் விற்காமல் என்ன செய்வான் என்று கேட்கலாம்.
விற்கட்டும்... இலாபகரமாகவே விற்கட்டும்.. ஆனால், தொழிலில் ஒரு நேர்மை வேண்டுமே! விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இவ்வளவு விலையா என்று மலைத்துப் போய், குறைத்துத் தருமாறு கேட்டிருக்கிறார்கள். 65 கோடிக்குக் குறைய மாட்டோம் என சிவாஜி தரப்பு பிடிவாதமாக இருந்துவிட்டதைக் கோபத்தோடு சுட்டிக்காட்டுகிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
தமிழகத்தில் சிவாஜி படத்தை 150 பிரிண்ட்டுகள் போட்டு வெளியிட்டு, அனைத்து திரையரங்குகளிலும் அவை ஒரு நாளுக்கு 4 காட்சிகள் என 100 நாட்களுக்கும் தொடர்ச்சியாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலும்கூட 40 கோடி ரூபாய்தான் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள திரையரங்கங்களையும் அதன் கட்டணங்களையும் கணக்கிட்டுப் பார்த்தால் இவ்வளவு தான் வசூலாக முடியும்.
என்ன செய்யப் போகிறீர்கள் என்று விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் கேட்டால், "என்னங்க செய்றது? ரேட்டைக் கம்மி பண்ணிப் படப் பெட்டியைக் கொடுங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்க. ரஜினி படத்தை 100 ரூபாய் கொடுத்தும் ஜனங்க பாப்பாங்கய்யா. நீ டிக்கெட் ரேட்டை ஏத்தி வித்துக்கோன்னு சொல்றாங்க" என்கின்றனர். தமிழகத்தின் பெருநகரங்கள், சிறுநகரங்கள் ஆகியவற்றில் டிக்கெட் கட்டணத்தைத் திருத்தியமைத்திருக்கிறது தமிழக அரசு.
படம் பார்க்கச் செல்லும் குடும்பத்தினர் ஒட்டுமொத்த மாதச் சம்பளத்தையும் ஒரு படத்திற்கே டிக்கெட் கட்டணமாகச் செலவு செய்ய வேண்டிய நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவு. ஒவ்வொரு திரையரங்கிலும் குறைந்தபட்சக் கட்டணம் எவ்வளவு இருக்கவேண்டும். அதிக பட்ச கட்டணம் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை அரசு நிர்ணயித்துள்ளது.
அரசாங்கம் என்ன சொன்னால் என்ன? நாங்கள் நிர்ணயிப்பதே டிக்கெட் கட்டணம் என தனி ராஜாங்கம் நடத்த முன்வந்திருக்கிறது சிவாஜி படக்குழு. அதுவும் எப்படிப்பட்டவர்கள் இந்தக் குழுவில் இருக்கிறார்கள் தெரியுமா? 5 பைசா திருடினா தப்பா... 5 கோடி பேரு 5 பைசா திருடினா தப்பா.. 5 கோடி பேரு 5 கோடி தடவை 5 பைசா திருடினா தப்பா... என்று வசனம் எழுதி, திருட்டுக்கும் இலஞ்சத்திற்கும் எதிராகப் போர் தொடுக்கப் பிறந்தவர்கள் போலக் காட்டிக்கொண்ட `அந்நியன்'கள்தான் தமிழகத்தின் 5 கோடி மக்களிடமும் டிக்கெட் கட்டணத் திருட்டை பகிரங்கமாகச் செய்வதற்குத் தயாராகியிருக்கிறார்கள். தன்னை வைத்து நடக்கும் இந்த அநியாய வியாபாரத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார் ரஜினி. அதனை ஊக்கப்படுத்தவும் செய்கிறார். 1600 ரூபாய் செலுத்தி 20 டிக்கெட்டுக்கான கூப்பனை வாங்கிக் கொண்டு போ என்று ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடம் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறது ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம்.
ஒரு வணிக நிறுவனம் என்றால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மற்றவர்களைவிடக் குறைந்த விலையில் பொருட்களைத் தருவது தான் தொழில் தர்மம். திரைப்படத் தொழிலிலோ, இந்தப் படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள் என்றால் அவர்களின் சட்டைப் பையை மொத்தமாகச் சுரண்டிவிடு என்பதுதான் தொழிற் கொள்கையாக இருக்கிறது. அதனைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. தமிழகத்தின் எந்தத் திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி சிவாஜி படத்திற்கான டிக்கெட் கிடைக்காது என்பதே தற்போதைய நிலைமை. சிவாஜி படத்தில் கல்வி வியாபாரத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழுவாராம் ரஜினி. அதைவிட அநியாய வியாபாரத்தை திரைத்துறையில் நடத்திக் கொண்டிருக்கிறாரே, அவரை எதிர்த்து யார் கிளர்ந்தெழுவது?
ஒவ்வொரு ரஜினி படத்திற்கும் கொடுக்கப்படும் பில்டப்புகளால் அவரது பிம்பம் உயர்ந்து நிற்கிறது. ஆனால், உண்மைகள் ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.
"சந்திரமுகி" படத்தில் நடந்தது என்ன தெரியுமா?
- தணிக்கை இல்லாமல் தொடரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஜமாலன். Blogger இயக்குவது.
3 comments:
//சிவாஜி திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது.//
அண்ணா அது 30 கோடி இல்லிங்கண்ணா 80 கோடி...
நல்ல கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி.
//- தணிக்கை இல்லாமல் தொடரும்// தொடர்ந்த அந்த கட்டுரையையும் தர முடியுமா? ப்ளீஸ்.
கருத்துரையிடுக