நண்பர்களுக்கு வணக்கம்.
“மேலும்”-இதழ் வழங்கும் இவ்விருதைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்விருதை வழங்கிய “மேலும்” அறக்கட்டளைக்கும்,
அதனை நடத்திவரும் மதிப்பிற்குரிய “மேலும்” ஆசிரியர் சிவசு மற்றும் மதிப்பிற்குரிய
தமிழவன் அவர்களுக்கும் நன்றி. விருதுகள் நபர்களை அங்கீகரிப்பதில்லை அவர்களது பணியை
மற்றும் எழுத்தை அங்கீகரிப்பவை. அந்தவகையில் எனது எழுத்திற்கும்
விமர்சனமுறைமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.
இச்சந்தர்ப்பத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் சார்த்தர்
தனக்கு வழுங்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விருதான நோபலை நிராகரிக்கும்போது கூறிய
வாசகமே நினைவிற்கு வருகிறது. நோபல் பரிசை எனக்கு தந்து என்னை நிறுவனமாக்க
முயல்கிறார்கள் என்பதே அது. இக்கருத்தில் அவர் பரிசு என்பதன் வழியாக நிறுவன
மயப்படுத்தம் போக்கை நிராகரிப்பது முக்கியமானது. பெரும்பாலான பரிசுகள், விருதுகள்
நிறுவனமயப்படுத்தும் தன்மையிலேயே தரப்படுகிறது. பரிசு யாரால் யாருக்கு தரப்படுகிறது
அதன் நோக்கம் என்ன என்பதே முக்கியம். அவ்வகையில் நிறுவனமாக தன்னை ஆக்கிக் கொள்ளாத
”மேலும்” இதழின் பெயரில் நிறுவனங்களில் பங்களிக்காத பேரா. சிவசு அவர்களால்
இவ்விருது வழுங்கப்படுகிறது. இவ்விருது நிறுவனங்களுக்கும், நிறுவன முறைமைகளுக்கும்
எதிராக உள்ளவர்களையும், அதனை சாராதவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது முக்கியம்.
சென்ற ஆண்டு விருதை அருமை நண்பர் எஸ். சண்முகம் பெற்றார். இந்த ஆண்டு எனக்கு
வழங்கப்பட்டு உள்ளது. இது எனது திறனாய்வுக்கும், விமர்சனத்திற்கும்
கிடைத்திருக்கும் ஒரு மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்.
படைப்பாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் விருதுகளிலிருந்து
விலக்காகி, திறனாய்வு மற்றும் விமர்சனத் துறையாளருக்கு வழங்கப்படுவதே இவ்விருதின்
சிறப்பு எனலாம். திறனாய்வாளன் எத்தனை சமூகம் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை எனது
சிற்றேடு இதழ் நேர்காணலில் விளக்கி உள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் அதை
வாசித்தறியலாம். குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். திறனாய்வாளன்
என்பவன் சமுகத்தையும் படைப்பையும் இணைக்கவும், இணக்கவும் செய்பவன். பிரதிக்கும்
வாசகனுக்கும் இடையில் பிரதியை சமூகவயப்படுத்துவதுடன் வாசகனையும்
சமூகவயப்படுத்துகிறான். திறனாய்வு அற்ற சமூகம் இலக்கியத்தை எப்படி பண்டமாகவும்,
சுவைஞர்களை உட்கார வைக்கும் உணவு மேசையாகவும் மாற்றும் என்பதற்கு ஒரு உதாரணமே
தற்போதைய தமிழ் சூழல் இலக்கிய நிலை என்றால் மிகையாகாது. திறனாய்வு இன்றி ஒரு சமூகம்
தன்போக்கை உணரமுடியாது. அவ்வகையில் திறனாய்வாளனின், விமர்சகரின் பணி என்பது
முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லி என் பற்றியும் எனது எழுத்து பற்றியும் ஒரு
சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
“மேலும்” இதழில்தான் எனது எழுத்துப்பணியின் விமர்சன மற்றும்
கோட்பாடு சார்ந்த எழுத்துமுறை துவங்கியது. எனது ”கவிதையும் சிதைவாக்கமும்” என்ற
கட்டுரை “மேலும்” இதழில் வெளிவந்தபோது எனது எழுத்திற்கான அங்கீகாரமாகவும்,
எழுதுவதற்கான நம்பிக்கையாகவும் எனக்குள் உருவாகியது. காரணம் “மேலும்” இதழ் தமிழக
அறிவார்ந்த சிந்தனை தளத்தில் ஒரு முக்கியமான நவீனமான சிந்தனையை
பிரதிநிதித்துவப்படுத்திய இதழ். தமிழ் சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒரு
போக்கே ”மேலும்” இதழ். தமிழில் 80-களுக்கு பிறகு அறிமுகமான புதிய விமர்சனமுறையை,
சிந்தனை முறையை அதாவது அமைப்பியல் துவங்கிய பின் அமைப்பியல்வரையான சிந்தனைமுறையை
தமிழில் நிகழ்த்திப் பார்த்த ஒரு ஆடுகளமே, ஒரு தளமே ”மேலும்” இதழ். அதில் எழுதிய
சிந்தனையாளர்கள் குறிப்பாக தமிழவன், சிவசு, நாகார்ஜீனன், அ. மார்க்ஸ், எம்டிஎம்,
பிரேம் மற்றும் எஸ். சண்முகம் உள்ளிட்ட சிறுபத்திரிக்கை தொடர்புடைய
சிந்தனைாளர்களும், பல்கலைக்கழகம் சார்ந்த அறிவுப்புலப் பேராசிரியர்களும்தான் இன்று
தமிழ் சிந்தனையின் விமர்சன மரபை, கோட்பாட்டு சிந்தனை தளத்தை பிரதிநிதித்துவப்
படுத்துபவர்களாக உள்ளனர்.
ஒரு சமூகத்தின் அறிவுப்புலத்தை, சிந்திக்கும் முறைமையை,
உலகப்பார்வையை கட்டமைப்பது இத்தகைய சிறு சூழலைச் சார்ந்த சிந்தனைகளும், அதில்
புழங்கும் அறிவுவுஜீவிகளுமே. உதாரணமாக சொல்லாடல், பணுவல், கட்டுடைப்பு, சிதைவாக்கம்
உள்ளிட்ட பல வார்த்தைகள் இன்று வெகுசன ஊடகங்களில் மிகச்சாதரணமாக புழங்குவதைக்
காணலாம். இத்தகைய புழக்கத்திற்கான இச்சொற்களை அன்று உருவாக்கிய ஒரு அறிவுத்தளமே
“மேலும்” இதழ். ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான ஒரு சொல்லாடல் புலத்தை
வடிவமைப்பதும் அதை இயக்கத்திலும், ஆட்டத்திலும் வைப்பதே இலக்கியத்தின் பணி. அதாவது
முந்தைய சொல்லாடலை இன்றைக்கான தகவமைப்பாக்கி இயல்பாக்கம் செய்வதே இலக்கியத்தின்
பணி. பல்வேறு உலகை படைத்தளிப்பதன் மூலம், வாழ்வதற்கான பல திறப்புகளை, சாத்தியங்களை
உருவாக்குவதே இலக்கியத்தின் பணி. அத்தகைய பணியை தமிழில் முன்னின்று நடத்திய ஒரு
இயக்கமே “மேலும்” என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு இயக்கம் வழங்கும்
இந்த விருது என்னை இன்னும் பொறுப்பு மிக்க விமர்சகனாக மாற்றும். அந்தவகையில்
இவ்விருதை ஏற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மௌனியின் செம்மங்குடி ஊர்தேடல் போல என்னைப்பற்றிய சிறு
அறிமுகக்குறிப்பு. நான் தஞ்சைப்பகுதியில் உள்ள பாடல்பெற்ற சைவத்தலமான குடந்தை
எனப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து
வளர்ந்தவன். எங்கள் ஊர் ஒருவகையான புராணங்கள், பழங்கதைகளில் நிரம்பிய ஊர் என்பதே
எனது முதல் இலக்கிய ஆர்வத்திற்கான அடிப்படை. புகழ்பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றான
ராகுஸ்தலமே எங்கள் ஊர். அதேபோல் பிரபலமான வைணவத்தலமான தென்திருப்பதி எனப்படும்
ஒப்பிலியப்பன் கோவில் உள்ளதும் எங்கள் ஊரே. இவற்றை எல்லாம்விட சுந்தர காளியம்மன்
வருட உலா மற்றும் எங்கள் ஊரின் ஐதீகமும். பழங்கதையுடன் உறவும் கொண்ட
ஜெம்புமாலிராஜன் கதை நாடகமும் கொண்ட ஊர்.
நாடோடியாக முடியாதவகையில் தேசங்களில் கட்டுண்டுவிட்ட நாம்,
நாட்டில், மண்ணில் அடையாளம் காணப்படும் இடமான ஊர் என்பதே எழுத்தாளனின்
கற்பனைக்கும், இலக்கிய உணர்விற்கும் அடிப்படையாக அமைந்து உள்ளது. ஒரு உடலின் முதல்
நிலமயமாதல் அதாவது தெல்யுஸ் வார்த்தைகளில் சொன்னால் “டெர்ரிட்டேரியலைசேஷன்” என்பது
ஊரே. அதனால்தான் தொல்காப்பியம் அய்ந்திணைகளின் வாழிடங்களை வெவ்வேறு பெயரில்
அடையாளப்படுத்துகிறது. நெய்தல் நிலம் பட்டினம் என்றும், குறிஞ்சி நிலம் காடு
என்றும், மருதநிலம் ஊர் என்றும். ஆக, மருதமயமாகிவட்ட மனித வாழிடங்கள் இன்று ஊர் என்
பெயரால் அழைக்கப்படுகிறது. ஆக ஒரு உடலின் நிலமயமாதலான ஊர் என்பது மனித உடலின் முதல்
நினைவாக உள்ளது.
இந்த அடிப்படையில் ஒருவகை ஊர்தேடல் நினைவு என்பதில் பழமைவாத
ஏக்கம் இருப்பதை உணரலாம். இத்தகைய ஏக்கத்தை ஒருவகையான பின்நவீன உணர்வு சார்ந்ததாக
சொல்லலாம். காரணம் பின்நவீனம் நவீனத்திற்கு முந்தையதைப்பற்றிய ஒரு ஏக்கத்தின்
அடிப்படையில் நவீனத்தில் பழமையை மறு உருவாக்கம் செய்வதன் வழியாக நவீனத்துவத்தின்
உண்மையை புனைவாக்கி காட்டிவிடுகிறது. இத்தகைய பழமையின் நவீன உருவாக்கம்தான் நவீன
மனிதனை நவீனத்தின் அழுத்தத்தத்திலிருந்து விடுவிப்பதாக உள்ளது. நவீனத்துவத்தின்
உணர்வடிப்படைகளாக பதற்றம், அந்நியமாதல், நிலைகொள்ளாமை, பேரெந்திர அச்சம்,
உயிர்நிலைக்கான ஏக்கம் எனலாம். இந்த உணர்வெல்லைகள்தான் நவீனத்துவம் பேசும்
“பகுத்தறிவு” என்ற ஆன்மீகத்திற்கான அடிப்படையாக மாறி உள்ளது. நவீனத்துவ
இலக்கியத்தின் தேடலும் கட்டமைப்பும் இதனை சுற்றியே பின்னப்பட்டு உள்ளன என்பது
மிகைக் கூற்றாகாது. இந்த மன அழுத்தம் ஏற்படுத்தி உள்ள இலக்கிய உணர்வை ஒரு
விளைாயட்டாக, ஆட்டமாக மாற்றிவைத்ததே பின்நவீன உணர்வு எனலாம்.
இப்பின்நவீன உணர்வின் ஒரு புற அடையாளமே சமீபத்தில் உருவாகிவரும்
பல ‘மால்கள்’ மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள். இவற்றை கவனித்தால் இவை பழமையை
மறுஉருவாக்கம் செய்வதை அறியலாம். இவற்றின் பின்னணி இத்தகைய ஒரு உணர்வாக்கத்தின்
வெளிப்பாடே. நட்சத்திர ஓட்டல்களில் ஆர்கானிக் உணவும், சராசரி உணவைவிட ஆர்கானிக்
உணவு அணுகுமுடியாத விலையில் நிலையில் இருப்பதும் இதன் பின்னணி எனலாம். ஆக
தன்னுருவாக்கமாக எனது ஊர் அமைந்த கதை என்பது சுயவிமர்சனமாக எனது பழமை ஏக்கத்தின்
வெளிப்பாடே என்பதை பதியவைக்க விரும்புகிறேன்.
நான் எழுதத் துவங்கியது என்பது எனது சிறுவயதில் இருந்தே உருவான
ஒன்று. சிறுவர் கதைகளில் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் எனது அய்ந்தாம்
வகுப்பில் துவங்கியது வாசிப்பும், நூலக பழக்கமும். நானே சிறுவர் இதழ்கள், கதைகள்
கொண்ட ஒரு வாடகை நூலகம் வைத்து நடத்தினேன். அந்த காலத்தில் 75-களில் 5 காசுகள்
துவங்கி 15 காசுகள் வரை உள்ள சிறுவர் கதைகள் வாங்கி அதை வாசிக்க 5 காசுகளுக்கு 3
புத்தகங்கள் என வாடகைக்கு விட்டு சிறநூலகம் நடத்தினேன். புத்தகங்கள் வாசிப்பதைவிட
வாங்கி சேகரித்து அதை அடுக்கி பார்ப்பதே ஒரு ஆனந்தம் என்பதாக உருவாகிவிட்டது.
இன்றுவரை வாசிக்க என வாங்கி சேர்த்த புத்தகங்கள் வாசித்ததைவிட அதிகமாகிவிட்டது.
எழுத்து என்பதற்கான அடிப்படை வாசிப்பும், வாசித்தவற்றைப்பற்றிய
கற்பனைத்திறனும், சிந்திக்கும் பழக்கமும்தான். அதை தொடர்ந்து காப்பாற்றி வந்து
உள்ளேன் என்பதே எனது இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்வில் மாறாத பழக்கமாகிவிட்டது. எனது
ஒன்பதாம் வகுப்பில் வெகுசன வாசிப்பிலிருந்தும், வெகுசனபாணி கவிதை
எழுத்துக்களிலிருந்தும் ஒரு பாயச்சலை உருவாக்கியது தமிழவனின் புதுக்கவிதை நாலு
கட்டுரைகள் என்ற நூல்தான். அதன்பின் சீரிய இலக்கியத்திற்கு திரும்பி, தமிழவன்
வழியாக அமைப்பியல் மற்றும் நாகார்ஜீனன், எம்டிஎம், பிரேம் வழியாக பின்நவீனம்
அறிமுகமாகி, சக பயணியாக நண்பர் எஸ். சண்முகத்துடன் இந்த இலக்கியப் பயணம்
தொடர்கிறது. நண்பர் ராமானுஜத்தின் தொடர்ந்த உரையாடல்கள் எனது எழுத்தை
செழுமைப்படுத்தி வருபவை. தீராநதியில் தொடர்ந்து எழுத வாய்ப்பு தந்து எனது எழுத்தை
பரவலாக்கியதில் நண்பர் கடற்கரய் பங்கு முக்கியமானது. எனது கல்லூரிக்கால நண்பர்கள்
அரசு, ரவி சுப்ரமணியன், அமானுஷ்யன், கோமகன் மற்றும் என்னோடு சிறுபத்திரிக்கை
நடத்திய நண்பர் ஆறுமுகம் மற்றும் பால்ய நண்பர்கள் மகேந்திரன், சிற்றரசு என
அனைவருக்கும் எனது எழுத்து வளர்ச்சியில் ஒரு பங்கு உள்ளது என்பதை நன்றியோடு நினவு
கூருகிறேன்.
எனது சிறுவயது எழுத்து இலக்கியத்தை கட்டமைத்ததில் சிறுவயது
நண்பனாக இன்றுவரை என்னோடு உற்ற தோழமையாக இருந்து வரும் நண்பன் காலக்குறி ஆசிரியர்
அ. ஜ. கான். எனது எழுத்திற்காகவே வறண்ட பாலைவனத்தில் காலக்குறி என்ற இதழை துவங்கி
தொடர்ந்து எனது எழுத்தை அறிமுகப்படுத்தி வந்தான். எனது விமர்சன எழுத்தில் எந்த
கட்டுப்பாடும் இன்றி சுதந்திரத்தை உருவாக்கி தந்து, எனது எழுத்தை முழுமையாக
வெளியிடுவதும், அதனால் கட்டுப்பாடின்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் வாய்பை
உருவாக்கி தந்து உள்ளான். இந்த வாய்ப்புதான் எனது எழுத்தின் ஒரு சுதந்திரபலமாக,
சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியமற்றதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் கானிற்கு நான்
நிறைய கடப்பாடு உள்ளவன் என்பதை நன்றியோடு பதிய விரும்புகிறேன்.
எனது எழுத்திற்கான வாய்ப்பையும், வளர்ச்சியையும் தந்த
தமிழ்ச்சூழல் சிற்றிலக்கியங்கள், சிறு சூழல் அமைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும்
இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
எனது இரண்டு நூல்கள் வெளிவந்து உள்ளது. மொழியும் நிலமும் என்ற
தலைப்பிலும், நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள் என்ற தலைப்பிலும். 90கள்
தொடங்கி 2010 வரையிலான 20 ஆண்டு விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தொடர்ந்து
இலக்கிய அரசியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். என்
குறித்த எனது எழுத்து குறித்த விபரங்கள் சிற்றிதழில் வெளிவந்த எனது நேர்காணலில்
விளக்கப்பட்டு உள்ளது. அதனால் கூறியது கூறலாக வேண்டாம் என அதை தவிர்க்கிறேன்.
இவ்விருதை பெறுவதற்கான எனது தகுதியைவிட எனது எழுத்தின் தகுதியை
குறித்த எனது பார்வையை உங்களோடு இந்த ஏற்புரையில் பகிர்கிறேன். இலக்கியம், சமூகம்,
அரசியல் என்கிற ஒரு முப்பரிமாண அளவுகோலே எனது விமர்சனமுறையாக உருவாகி வந்து உள்ளது.
நவீனத்துவம் மற்றும் பழமைவாதம் இரண்டிற்கும் எதிரான ஒரு விமர்சனத்தை தொடர்ந்து
முன்வைத்து வருவது அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவின் வளர்ச்சி
என்ற பெயரிலான நவீனத்துவவாதத்திற்கும், கற்பணார்த்த பழமைவாதத்திற்கும். ரசனைசார்ந்த
நுகர்வு வாதத்திற்கும் எதிரானதாக எனது விமர்சனமுறையை அமைத்துக் கொண்டு உள்ளேன்.
சமூக விஞ்ஞானப்பார்வையான மார்க்சிய துவங்கி அமைப்பியல், பின் அமைப்பியல்,
பின்நவீனத்தவம், பெண்ணியம், புதிய வரலாற்றுவாதம், சிதைவாக்கம் என் பல கோட்பாடுகளின்
உள்ளோட்டத்தை விமர்சனமுறையில் அணுகி உருவாகி வந்ததே எனது பார்வை.
தற்போது எனது இலக்கிய அரசியல் என்றால் சிறபான்மையாதல் என்பதே.
எப்பொழுதும் சிறுபான்மையாதல் என்பது ஒருவகையான ஜனநாயக இன்னும் சொல்லப்போனால்
இன்றைக்கான வெகுமக்கள் அரசியல் எனலாம். சிறுபான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது
அல்ல. பன்மைத்துவம் சார்ந்தது. பெரும்பான்மை என்பதே ஓருமையானது. ஒற்றை சிந்தனையைக்
கொண்டது. வன்முறையானது. யதார்த்தத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையில்
சிறுபான்மையானது. சிறுபான்மை எண்ணிக்கையில் பெரும்பான்மையானது. காரணம் சிறுபான்மை
என்பது பன்மை. அதனால் சிறுபான்மைகள் உண்டு. பெரும்பான்மைகள் கிடையாது. காரணம்
பெரும்பான்மை என்பது ஒன்றுதான். பெரும்பான்மையை எதிர்ப்பதும் சூழலை உயிர்ப்புடன்
வைப்பதும் சிறுபான்மைகளே.
சிறுபான்மையாக உள்ளவையே வளரும் தன்மைக் கொண்டது. பெரும்பான்மை
என்பது வளர்ந்து தெவிட்டிய நிலையை அடைந்துவிட்ட ஒன்று. சிறுபான்மை பெரும்பான்மையாக
வளர்வதற்கான இயக்க நிலையில் இருப்பது. அதுதான் சமூகபொதுபுத்திக்கு எதிரான
பொராட்டத்தைக் கொண்டது. சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. இத்தகைய சிறசூழல்
அமைப்புகளே நுண் அளவிலான சமூக இயக்கத்தை நகர்த்துபவை. சமூக எந்திரத்தின்
பற்சக்கரமாக இயங்குபவை. இவ்வமைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் நுண் அளவிலான
மாற்றமே அடுத்துவரும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. அதனால் எப்போதும்
சிறுசூழலுடன், சிறுபான்மைகளுடன் இருப்பதும் சிறுபான்மையாக உருவாகிக் கொண்டு
இருப்பதுமே உயிர்ப்புடன் வாழவைப்பது.
அவ்வகையில் “மேலும்” உள்ளிட்ட சிறுபத்திரிக்கை மற்றும் சிறசூழல்
அமைப்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. சமூகத்தின் கலாச்சார அரசியலில்
நுண்அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்கால சமூகத்தின் போக்கை நிர்ணயிப்பவை.
அவற்றில் பங்கேற்பதும், அதன் கொளவரமும் முக்கியமானது என்பதே இந்த விருதை ஏற்பதற்கான
எனது மனநிலை.
உலக வரலாற்றில் இலக்கியம் எப்போதம் சிறுபான்மையாக இருப்பதால்தான்
அது உயிர்ப்புடன் உள்ளது. இந்த சமூகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இலக்கியம்
இல்லாமல் சமூகம் சாத்தியமில்லை. இலக்கியத்தை சமூகம் ஒதுக்கலாம். மதிப்பற்றதாக
மாற்றி வைக்கலாம். ஆனால் இலக்கியம்தான் சமூகத்தை மதிப்புள்ளதாக மாற்றுகிறது. ஒரு
இலக்கியம் சரியான சமூகத்தை கடடமைப்பதை கண்காணிப்பதும், அதை சரி செய்வதும் அதன்
போக்கை மாற்றியமைப்பதும் அதை வாசிப்பாளனான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமான
பெரும்பணியே திறனாய்வாளர்களின் பணி. அவ்வகையில் திறனாய்வாளர்களுக்கும்
விமர்சகர்களுக்கும் விருது வழுங்கி சமூகத்தின் சரியான போக்கை கட்டமைப்பை
உருவாக்கும் பணியில் “மேலும்” அறக்கட்டளை ஈடுபட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்த சமூகச்செயல்பாடு என்று கூறி நன்றியோடு எனது ஏற்புரையை முடிக்கிறேன்.
ஜமாலன் - 12-10-2014 (சிற்றேடு ஜனவரி-மார்ச்.2015)
0 comments:
கருத்துரையிடுக