நண்பர் சுரேஷ் கண்ணன் அவர்கள் முகநூலில் கீழ்கண்ட நிலைத்தகவலை பதிவு செய்து உள்ளார். அது குறித்த எனது கருத்து கீழே...
”பின்நவீனத்துவ படைப்புகளுக்கென்று பிரத்யேகமான குணக்கூறுகள் உள்ளன. ஒரு நாவலில் ' ஒழி,பழி,குழி, மழி,கிழி' என்ற வார்த்தைகள் மாத்திரமே பத்து பக்கங்களுக்கு வந்தால் அந்த கலகத்தன்மைக்காகவே அதை பின்நவீனத்துவ நாவல் என வகைமைப்படுத்தலாம்' என்றார் நண்பரொருவர்...
உதாரணமாக...
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
என்று ஒரு நாவலில் வந்திருந்தால் சம்பளப் பாக்கிக்காக டிடிபி ஆப்பரேட்டர் பழிவாங்கியிருப்பாரோ என்று தவறான யூகம் கொள்ளாமல் அது பின்நவீனத்துவ நாவல் எனறு உறுதியாக சொல்லி விடலாம் என்கிறார்.
***
1941-ல் சபாபதி என்றொரு திரைப்படம் வந்தது. 'இருப்புப்பாதை வியாசம்' என்கிற கட்டுரையை குறும்புக்கார மாணவனான சபாபதி, ரயிலின் சப்தங்களையே தொடர்ச்சியாக 18 பக்கங்களுக்கு "குப் குப்..குப்..குப்... என்று எழுதியிருப்பான்.
ரயில் பாலத்தைக் கடக்கும் போது வரும் 'கடகடகட பட படபட' என்கிற நுண்ணிய வேறுபாடும் அந்த 18 பக்கங்களில் உண்டு.
***
எனக்கென்னமோ தமிழின் முதல் பின்நவீனத்துவப் பிரதி அந்த 18 பக்கங்களாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.
http://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U
அவரது நிலைத்தகவல் https://www.facebook.com/suresh.kannan.1806
************************************
இப்படியெல்லாம் பின்நவீனத்துவத்தை சொல்லித் தந்த அந்த பேராசானின் காலை காட்ட சொல்லுங்கள். தொட்டு கும்பிடனும். எந்த ஒன்றையும் யாரும் ஒழுங்காக படிப்பதில்லை. வார்த்தைகளை வைத்து ஜல்லியடிப்பது என்பதுதான் பின்நவீனத்துவம் என்று 20 ஆண்டுகளாக தமிழில் புரிந்துகொண்டுள்ள அபத்தம் அபாரமானது. தமிழ் மூளையின் விசேஷ குணாம்சங்களில் ஒன்று புதுமைபித்தன் கூறியதைப்போல.. ”தமிழ் குரங்குதான் முதல் குரங்கு என்பது.” இந்த பழம்பெருமை எந்த புதிய ஒன்றையும் மூளைக்குள் நுழையவிடாது. வரலாற்று ஆலமரத்தை அணைத்துக் கொண்டு தூங்கிவிடுவதில் அளப்பறிய ஆனந்தத்தை அடையும் தமிழ் அரசியல். ஆதார் கார்டுகளையும், ரேஷன் கார்டுகளையும் உற்பத்தி செய்யும் தமிழ் மெகா நாவல் இலக்கியம். வாசகன் தங்கி கண்ணீர்விடவும், கட்டி அழவும், உணர்ச்சிப் பெருக்கில் நனையவும் ஆன வாசக குடியிருப்புகளை வரைந்து தள்ளும் ரியல்-எஸ்டேட் எளக்கிய எழுத்தாளர்கள் என நிரம்பி வழியும் தமிழ் இலக்கியச் சூழல்.
நகங்களை அழகாக வெட்டி வழவழப்பாக ஆக்கிக்கொள்வதை முதல் நிபந்தனையாகக் கொண்டு உருவாகி உள்ள பதிப்பக-எழுத்தாள-வாசக உறவு. சொறிந்துகொள்வதில் ஒரு போட்டி வைத்தால் அதில் இவர்களே பெரும் பரிசுகளை தட்டிச் செல்வார்கள். தமிழ் இலக்கியம் கட்டக்கடைசியில் சொறிதலிதம் என்கிற இஸத்தை கண்டடைந்து உள்ளது தனது எண்ணற்ற பண முதலீட்டு வியபாரத்தில் சிக்கி.
தமிழின் உயர்ந்தபட்ச இலக்கியத்தர அளவுகோல் கல்கி, சுஜாதா மற்றும் பாலகுமாரன் என்கிற நிலைக்கு இலக்கிய உலகம் இறக்கப்பட்டு உள்ளது. சுஜாதா, பாலகுமாரன் வெகுசன எழுத்துக்களை தமிழில் உருவாக்கிய இரண்டு இலக்கிய எந்திரங்கள். அவர்களது தேவை வெகுசனத் தளத்திலானது. அதை இலக்கிய தளத்திற்கு நகர்த்திவிட்டனர். அதன் மெகா உற்பத்தி நிறைந்து வழியும் இடமாகிவிட்டது தற்போதைய இலக்கிய உலகம். பாலகுமாரனின் அவதாரமாகிப்போன இலக்கிய மம்ம நாயனார்கள் நிறைந்துவிட்டனர். எண்ணற்ற நாவல்கள் வெளிப்படுவது அதன் ஒரு விளைவுதான். பாலகுமாரனின் அறத்தை ஒருவரும், காமத்தை பிறிதொருவரும், நெகிழும் மனிதர்களை மற்றொருவரும் தங்கள் எழுத்துக்களின் வழி உச்சநிலைக்கு கொண்டு சென்று உள்ளனர். கல்கியும், சாண்டியல்யனும் மீண்டும் பிறப்பது அவசியமாகி உள்ளது. அது வெகுசனதளத்தில் தேவையானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கிய உலகில் அதன் பணி என்ன? என்பதே கேள்வி. இலக்கியத்தின் சரிவு இங்குதான் துவங்கியது. இன்று அது எண்ணற்ற பாலகுமாரன், சுஜாதாக்கள், கல்கி, சாண்டில்யன்களை இணையவெளி எங்கும் இலக்கியவாதிகளாக அவதாரமெடுக்க செய்து உள்ளது. இவர்கள் சொம்புடன் அலைந்து திரியும் அவலம்தான் தாங்க முடியவில்லை.
தமிழ் மூளையின் விசேஷ அமைப்பு எந்த ஒன்றையும் தனது பழமைவாதத்தை தண்டி ஏற்காது என நினைக்கிறேன். அதனால்தான் பு.பி. கபாடபுரம் எழுதினார். தமிழின் முதல் பின்நவீன பாலிம்செஸ்ட் சிறுகதை அது. அந்த கதையை ஒரு பெரும் நாவலாக விரிக்க முடியும். அந்த கதையில் இன்று அரசியல் பண்ணும் தமிழ் தேசியர்கள் உட்பட வந்து போவார்கள். அந்த கதையின் விசேஷம் தமிழின் வரலாற்றை ஒரு அழித்தெழுதப்பட்ட புனைவாக எழுதி வைத்து உள்ளதுதான். கோணங்கி கூறியதைப்போல கபாடபுரத்தில் ஒருவன் நுழைந்து வெளிவந்தபின் அவன் முற்றிலும் வேறொரு மனிதனாக மாறிவிடுவான். இதைக்கூட சரியாக வாசிப்பதில்லை நம் ஆட்கள். சிற்பியின் நரகம், நாரத ராமாயணம், பிரம்ம ராஸஸ், கட்டிலை விட்டிறங்கா கதை, வேதாளம் சொன்ன கதை... (பெயர்கள் நினைவில் எழுதப்படுகிறது.) இப்படி பலவடிவங்களில் எழுதிப்பார்க்கப்பட்ட புதுமை பித்தன் கதைகள் எல்லாம் பின்நவீன எழுத்து சொல்லும் மொழிவிளையாட்டைக் கொண்டவைதான்.
இந்துத்துவாவை, ராமயாணத்தை காந்தியை இந்திய சுதந்திரப்போரை மணுதர்மத்தை சாதியத்தை தமிழில் புதமை பித்தனின் நாரதராமயணம் அளவிற்கு வலுவாக கிண்டலடித்த ஒரு அரசியல் பிரதி வேறொன்றில்லை. தமிழின் பழகிய உணர்வுநிலையின் போலித்தனத்தை நுட்பமாக கிழித்தெறியும் ஜி. நாகராஜன் போன்றவர்கள் எழுத்தெல்லாம்தான் நவீனத்துவ உணர்வை முன்வைத்தவை. பின் நவீனத்துவம் என்பது ஒரு பின்-மனித சிந்தனை (post-human thought). மனிதன் என்கிற நவீனத்துவ கண்டுபிடிப்பிலிருந்தும், அதனால் உருவாகி உள்ள அழிவுகள், வன்முறையிலிருந்து, மனித மையவாத சிந்தனையிலிருந்து விலகி செல்லும் சிந்தனை. அது ஏதோ கிலி, பலி.. என்ற வார்த்தைகளின் தொங்கி கொணடிருப்பதில்லை.
குழந்தையின் அழுகையை வெறும் சத்தமாக உணர்ந்து அர்த்தமற்றது என்று முடிவெடுத்தால், எல்லாக் குழந்தையும் பசியில் செத்த மடிவதை தவிர வேறு வழியில்லை. சத்தம் ஒழுங்குபடுத்தி அர்த்தமாகிறது என்பதால், அர்த்தமற்ற சத்தம் என்பதை அதாவது நமக்கு புரியாததை, வெறும் சத்தமாக ஒதுக்க முயல்கிறோம். அதன் உணர்வு புரிவதில்லை. அர்த்தம் என்பது ஒரு சமூக ஒழுங்கு என்பதால், அந்த ஒழுங்கை அதிகாரத்தை ஏற்பதே இதன் அடிப்படை. இப்படி சொல்வதால் மேலே குறித்த உங்கள் நக்கலான சப்தங்களின் அடுக்கை ஏற்கிறென் என்பதல்ல பொருள். இப்படி பலரும் பின்நவீன எழுத்து போலியை உருவாக்குவதே பிரச்சனை. அதை வைத்து அந்த சிந்தனைமீது சேற்றை வாறியிறைப்பது என்பது இப்போது எல்லோருக்கும் வசதியாக உள்ளது.
காரணம் இன்று இலக்கியம் என்பது வெகுசன எழுத்திற்கான பத்திரிக்கை எழுத்திற்கான பயிற்சிக்கூடமாக சான்றிதழ் வழங்கும் பட்டறையாக மாற்றப்பட்டு உள்ளது. இதுதான் தமிழில் முகநூலின் நான்காண்டு கால சாதனை. இலக்கியவாதி குமுதம் விகடனில் இடம் பிடிப்பதே உயர் லட்சியமாக மாறிவிட்ட காலமிது. கேட்டால் இலக்கியத்தின் எல்லைக் கோட்டை பின்நவீனத்தவம் அழித்துவிட்டது என்பார்கள். அதற்கு மட்டும் பின்நவீனத்துவம் முட்டுக் கொடுத்துக் கொள்வார்கள். தமிழில் தனது திறமையற்ற எழுத்தை அடைப்பதற்கான ஒரு குமிழாக பின்நவீனத்துவம் பயன்படுகிறது என்பதே யதார்த்தம்.
உண்மையில் பின்நவீனம் முன்வைக்கும் எந்த இலக்கிய எழுத்தையும் யாரும் படிப்பதில்லை. ஏன் காப்காவின் நாயகன் பெயரற்ற ஆங்கில எழத்து K ஆக உள்ளான்? சில நேரங்களில் வெறும் சப்தங்களை வெளியிடும் மொழியற்றவனாக உள்ளான்? என்பதெல்லாம் வாசிக்கப்படுவதோ உள்வாங்கப்படுவதோ இல்லை. இலக்கியம் என்பது முன்னேறிச் செல்வதற்கான படிகட்டாக மாறிவிட்டது. அதன் அதிகபட்ச எல்லை பாப்பலராக மாறுவது. பெரும்பத்திரிக்கையில் எழுதுவது. 10000 பிரதிகள் விற்கும் குப்பையை இலக்கிய கோபரமாக கட்டமைப்பது. இதெற்கெல்லாம்தான் பின்நவீனத்துவம் முன்வைத்த மைய உடைப்பு, புனித உடைப்புதான் காரணம் எனக் கூறிக்கொள்வது. இலக்கியத்திற்கான மதிப்பீட்டை மற்றைய சிந்தனைகளைவிட பின்நவீனத்துவம் மிகவும் கொதிநிலையான சமூக உணர்வு மற்றும் அறிவுத்தளத்தில் முன்வைக்கிறது. வாசிப்பாளனை விழிப்புகொள்ள தன்னோடு சேர்ந்து எழுத சிந்திக்க வைக்கிறது. மனிதன் மனிதனாக மையம் கொண்ட அனைத்தையும் விமர்சிக்கிறது. ஒரு புதிய மொழி விளையாட்டை முன்வைக்கிறது. அதன் அரசியல் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளபோதும், இலக்கியத்தில் அதன் செயல்பாடு முக்கியமானதே.
இங்கு பின்நவீனத்துவம் என்பது என்னவென்றே புரியாமல் வார்த்தைகளை வைத்து ஒரு புறம் மிரட்டுவதும், மற்றொரு புறம் அதை வைத்து நக்கலடிப்பதும்தான் நடக்கிறது. பின்நவீனத்துவம் என்ன என்பதை விளக்கவோ, விளங்கிக்கொள்ளவோ யாரும் முயற்சிப்பதில்லை. நவீனத்துவமே புரியாத தமிழ் உலகில் பின்நவீனத்துவம் புரிவதும் கஸ்டம்தான். தமிழ் இணையத்தில் குறிப்பாக முகநூலில் நீர்த்துப்போன வார்த்தை இலக்கியத்தைப் போல பின்நவீனத்துவமும் ஒன்று.
இந்த புத்தகச் சந்தையிலாவது வாங்கி நண்பர்கள் பின்நவீனத்தை புரிந்து கொள்ள குறைந்தபட்சம் தமிழில் வந்துள்ள இந்து புத்தகங்களையாவது படிப்பது நலம்.
1. கோபிசந்த நாரங் எழுதியுள்ள பின்நவினத்துவம், கீழைக்காவயியல் பற்றிய மொழிபெயர்ப்புநூல். (ஜெமோவால் பரிந்துரைக்கப்பட்ட நூலும் கூட.) - சாகித்ய அகாதமி வெளியிடு.
2. பின்நவீனத்துவம் - ஆக்ஸ்போர்ட் தத்துவநூல் வரிசை மொழிபெயர்ப்பு பிரேம். அடையாளம் பதிப்பகம்.
3. பின்அமைப்பியலும் குறியியலும் - எம. டி. முத்துக்குமாரசாமி - பதிப்பகம் நினைவில் இல்லை. அவுட் ஆஃப் ஸ்டாக் ஆக இருக்கலாம். (நூல் பெயர் நினைவில் எழுதப்படுகிறது. தவறு இருக்கலாம்.)
4. எம். ஜி சுரேஷின் - குறுநூல் அறிமுகவரிசை 6 சிறு புத்தகங்கள் - அடையாளம் பதிப்பகம்.
5. க. பூரணசந்திரன் எழுதிய பின்நவீனத்தவ அறிமுக நூல் - பதிப்பகம் நினைவில் இல்லை.
6. அமைப்பியலும் அதன் பிறகும் - தமிழவன் - அடையாளம் பதிப்பகம்.
இவற்றை படித்தால் பின்நவீனத்துவம் பற்றிய இப்படி ஒரு அடிப்படையற்ற கேலி வெளிப்படாது என நம்புகிறேன். :) :)
பின்குறிப்பு - மார்க்சிய தோழர்களோடு இது குறித்து உரையாடும் மனநிலையில் நான் இல்லை. இது அவர்களுக்கான பதிவு இல்லை. பின்நவீனத்துவத்தை வைத்து ஜல்லியடிப்பவர்கள் உரையாடலாம்.
- ஜமாலன் 19-01-2014 jamalan.tamil@gmail.com
4 comments:
அந்த ஜல்லியடிப்பவர்கள் யார் என்று கோடிட்டு காட்டினால் நன்றி.
@manjoorraja ஏனிந்த கொலவெறி. நல்லா இருக்குறது பிடிக்கலையா? பின்நவீனத்துவம் என்று சொல்லி புடுங்குற தமிழ் இணைய ஆணிகள் எல்லாமே வேஸ்ட்டுதான். :) :) நிறைய பேர் அதை ஒரு பேஷனாக பாவிக்கிறார்ள் என்பதே உண்மை. நன்றி.
பி.நவீ'த்துவம் என்பது இப்பொழுதைய இலக்கியவாதிகள்/புரட்சியாளர்கள்/பத்திரிக்கையாளர்கள் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பதிவில் இவரும், இவர் பதிவில் அவரும், மாற்றி மாற்றி பின்னூட்டத்தில் 'மீ தி ஃபர்ஸ்ட்' 'மீ தி ஃபிப்டித்', 'வட போச்சே' என்பன போன்ற தத்துவங்களே பின்னாளில் பினவீனத்துவமென ஆயிற்று. - 'கோயிஞ்சாமி'.
கோயிஞ்சாமி... தெரியும் உங்களை அங்க எதிர்பார்த்தேன் இங்க வந்து லீலையை காட்டி உள்ளீர்கள். ஆமா இப்படி எல்லாம் நீங்க செஞ்சித்தானே இப்பே முகநூல் புலி, பிளாக் எலி எல்லாம் ஆகி உள்ளீர்கள்... தெரியாதா பின்னே...ஹீ ஹீ..
கருத்துரையிடுக