உயிரோசையில் மதிப்பிற்குரிய பேராசிரியர் தமிழவன்">தமிழவன் எழுதிய இக்கட்டுரை இங்கு மீள்பதிவிடப்படுகிறது. ஈழப்பிரச்சனயை ஒட்டி சர்ச்சைக்குரிய முறையில் சாம்ஸ்கியை பயன்படுத்த முனையும் லங்கா கார்டியன் மற்றும் இந்து ராம் பற்றி விவரிக்கிறது இக்கட்டுரை. உலகில் அரசியல் மனோபாவங்கள் மற்றும் அரசியல் ஒப்புதல் கருத்தாக்கங்கள் உருவாக்கப்படுவதின் அரசியல் நுட்பம் பற்றியதும் சாம்ஸ்கி மற்றும் முக்கிய சமஸ்கிருத அறிஞர்களில் ஒருவரான ஸெல்டன் போலக்கையும் மொழி அடிப்படையில் இணைப்பது குறித்தும் பேசுகிறது இக்கட்டுரை. மற்றபடி அறம்/மறம் என்கிற அடிப்படையில் பேசப்படும் கருத்தாக்கங்கள் தொடர் உரையாடலுக்கும், மீளாய்வுக்கும் உரியவை.
நோம் சாம்ஸ்கி என்ற அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் உலகின் மனசாட்சி என்று அறியப்பட்டவர். நான் தொடர்ந்து இவர் நூல்களைப் படிப்பவன்.
மொழியியலையும் தத்துவத்தையும் இணைத்து எழுதி உலகப் புகழடைந்தவர் சாம்ஸ்கி.
அமெரிக்காவின் ஒற்றை வல்லரசுத் தன்மையை அந்நாட்டால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கு விளக்கியவர். ‘எனது அமெரிக்கா’ எனப் புலம்பாதவர்.
சாம்ஸ்கி தனக்கு இலங்கை பிரச்சினை பற்றி போதிய அறிவு இல்லை என்று கூறியுள்ளார். எனினும் லங்காகார்டியன் பிரதிநிதி சாம்ஸ்கியை விடவில்லை. புலிகளை நியுரன்பர்க் விசாரணை போன்ற ஒன்றின்மூலம்தண்டனை கொடுப்பதுபற்றி சாம்ஸ்கி என்ன நினைக்கிறார் என்று மடத்தனமாகக் கேட்கிறார். சாம்ஸ்கிமீண்டும் மீண்டும் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களும் யுத்தக் குற்றவாளிகளும் கண்டிக்கத்தக்கவர்கள்என்கிறார். ஓரளவு இலங்கை அரசில் பல யுத்தக் குற்றவாளிகள் இருக்கமுடியும் என்ற தொனி சாம்ஸ்கியின்பதிலில் உள்ளது. ஆனால் ராஜபக்ஷவின் ஆதரவில் ஐ.நா.வில் வேலைபார்க்கும் லங்கா கார்டியனின்ஆசிரியரைத் திருப்திப்படுத்த முனைந்து நிற்கிறார் லங்கா கார்டியன் பிரதிநிதி. இந்த மாதிரி லும்பன்களிடத்தில்சாம்ஸ்கி பேச ஒத்துக் கொண்டிருப்பதே அவரது பெயருக்குக் களங்கம்.
சாம்ஸ்கி பற்றித் தொடர்ந்து உலகின் பல பாகங்களிலும் அக்கறை காட்டுகிறார்கள். இந்தியாவில் சாம்ஸ்கியைஅழைத்து அவரது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்பவர் சென்னையைச் சார்ந்த, ‘இந்து’ ராம். லங்காகார்டியனும் ‘இந்து’ பத்திரிகையும் கைகோர்த்து அகில உலக இடதுசாரி மனோபாவத்தை உற்பத்தி செய்யமுயல்கிறார்கள்போல. இந்தியாவின் சி.பி.எம். என்ற இடதுசாரி நிறுவனமும் ‘இந்து’ ராமும், இலங்கையின் ஜே.வி.பி.யும் லங்கா கார்டியன் போன்றனவும்ஓரணியில் வரமுடியும், இந்த ‘வேரில்லா’ நிறுவனத்தன்மைகொண்ட இடதுசாரிகள்பற்றி தனியான ஒரு சொல்லாடலை உருவாக்கி இவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சி.பி.ஐ.கட்சியின் தமிழ்சார் நிலைப்பாட்டை இந்த ஆய்வில் முக்கிய உரைகல்லாக நாம் எடுக்க முடியும்.
முத்துக்குமார் மரணத்தருவாயில் எழுதிய கடிதத்தின் மேற்கோளான திருக்குறள் மீண்டும் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது. அறத்திற்கே அன்புசார்பென்பர் அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்ற கருத்து மீண்டும் மீண்டும் புதுப்புது அர்த்தங்களைப் படைத்துக் கொண்டே போகமுடியும். அரசு என்பது மறம். அத்தகைய மறம் பல்வேறு முறையில் வேறு மறத்தை உற்பத்தி செய்கிறது. புலிகளின் மறம், இலங்கை அரசின் ஒற்றைமுகமாக்கலை நோக்கிய கிரமமான வளர்ச்சிக்கான ஒரு தர்க்கரீதியான எதிர்வினை. அவ்வளவுதான். வன்முறைபற்றி சாம்ஸ்கி கூறும்போது அது தீர்வாகாது என்ற தொனியில் பேசுகிறார். ஐ.நா.சபை போரை நிறுத்தச் சொன்னாலும் தான் கேட்கப் போவதில்லை என்று கூறும் அரசின் மறத்தை இன்னொரு மறம்தான் தடுக்கமுடியும்.
மெதுமெதுவாக உலகமெங்கும் அதிகாரம் என்ற மறம் கோலோச்சுகிறது. அங்கு மறம் புதிய வடிவத்தை மேற்கொள்கிறது. மறத்திலிருந்து பயங்கரவாதம்தோன்றுகிறது. அகில உலகத்தின் வெளிவிவகார நடவடிக்கைகள் எப்போதும் ஒழுக்கக்கோட்பாட்டைப் பின்பற்றாதவை. அமோரல் (amoral) தன்மைகொண்டவை. இதனுடன் சம்பந்தப்பட்டவைதான் பயங்கரவாதம். பயங்கரவாதத் தன்மை அரசுகளின் ஒழுக்கத்துக்கப்பாற்பட்ட நடவடிக்கையோடுசம்பந்தமுள்ள காரியம்தான்.
ஜோசப் கான்ராட் நாவல் ஒன்றில் வெளிநாட்டுத் தூதுவர் இன்னொரு நாட்டில் குண்டுவெடிப்பதற்குச் செய்யும் நடவடிக்கைகள் வரும். பிற நாடுகளைஅழிப்பதற்கு உளவு பார்ப்பது, லஞ்சமாகப் பெண், பணம், பதவிகள், விருந்துகள் தருவதுதான் தூதுவர்களின் பணி.
பெண்கள், பிராமணர்கள், பசுக்களை யுத்தம் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நீதியின் காலம் மலைஏறிவிட்டது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும்உள்ள படைகள்தான் மனித ஒழுக்கத்தைக் கேள்விகேட்கும் நிறுவனங்கள். நீதி, நியாயம், அன்பு, பாசம் எதுவும் செயல்படாத நிறுவனம் இது. இதனைப் புரிந்தசில தெய்வத்தன்மை கொண்ட மனிதர்கள் சேர்ந்து ஓருலகம் என்ற (one world) கோட்பாட்டைச் சிந்தித்தார்கள். பெட்ரண்ட் ரஸ்ஸல் பெயர் இந்த இடத்தில்எனக்கு ஞாபகம் வருகிறது.
இப்போது என் மேசைமீது சாமஸ்கியின் ‘அறிவு மற்றும் விடுதலை பற்றிய பிரச்சினைகள்’ என்ற நூல் இருக்கிறது. இரண்டு கட்டுரைகள் இந்தச் சிறிய நூலில்உள்ளன. இரண்டும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கியால் சொற்பொழிவுகளாகக் கொடுக்கப்பட்ட கட்டுரைகள். லண்டன் டிரினிடி கல்லூரியில் 1971-ஆம் ஆண்டுபெட்ரண்ட் ரஸ்ஸல் நினைவுச் சொற்பொழிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. சாம்ஸ்கியும் பெட்ரண்ட் ரஸ்ஸலும் இரண்டு மகாமனிதர்கள்.அரசுகளைத்தாண்டி மனித நியாயத்தை யோசித்தவர்கள். அரசுகளின் கையில் இருக்கும் அணுக்குண்டுகள், படைகள், சட்டதிட்டங்கள், ஆள்பலம் இவற்றைமீறிக் கருத்துககளால் செயல்படமுடியும் என்பதை நம்பியவர்கள். யுத்தங்களைவிட கருத்துகள் வலிமையானவை எனக் கூறியவர்கள். ஏனெனில்கருத்துகள் மொழியில் உருவாக்கப்படுபவை என்ற தத்துவச் சிந்தனையை இருவரும் ஏற்கிறார்கள்.
சாம்ஸ்கியின் சிந்தனையான இயல்புக் கொள்யை (Innate Principle) இன்று பலருக்குப் பரிச்சயமானது.மொழியானது அகில உலக மனிதர்களின் ‘உறைந்த இயல்பு’ என்பது போன்ற சிந்தனைஇது. மொழியும் மனிதச்சிந்தனையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எல்லா மனிதர்களும், சாதி, இன, மத, மொழி வேறுபாடற்றுஉயர்ந்தவர்கள் என்ற சிந்தனையைக் கூறுகிறது இக்கோட்பாடு.
முதல் கட்டுரையில் இயல்புக் கோட்பாட்டோடு உலகின் முக்கியமான தத்துவவாதிகள் சிலரின் சிந்தனைகளைஒப்பிடுகிறார். கூட்மன், லாக், லெப்னிஸ், கான்ட், ஹ்யும், ரஸ்ஸல் போன்றோரின் சிந்தனைகளை சாம்ஸ்கிதன் சிந்தனைக்கருகில் கொண்டு வந்து ஒப்பிடுகிறார்.
விஞ்ஞானத்தின் அடிப்படை உண்மைகள் பரஸ்பர அனுபவத்திற்கு உட்பட்டவை. இன்னொருவருக்குஎடுத்துக்காட்டி விளக்கலாம். அந்த எடுத்துக்காட்டி விளக்கும் பண்பையும் எடுத்துக்காட்டி விளக்கமுடியாததன்மையையும் ஒப்பிடுகிறார் ரஸ்ஸல். அப்படிப்பட்ட எடுத்துக்காட்டி விளக்கமுடியாத பண்போடு,மொழியியல் மூலம் தான் கண்டுபிடித்த இயல்புக் கோட்பாட்டை ஒப்பிடுகிறார் சாம்ஸ்கி.
எனக்கு இந்த இடத்தில் ழான் பவுல் சார்த்தரின் சிந்தனை ஞாபகத்துக்கு வந்தது. அவர் முன்-அறிவுத்தளம் (Pre-Cognitive) ஒன்றைப்பற்றிக் கூறுகிறார்.
இந்தச் சிந்தனைகள், அமைப்பியலில் நிராகரிக்கப்படுகின்றன என்பது வேறு விஷயம்.
மொத்தத்தில் தீவிரமான அரசியல், செயல்பாடு, தத்துவம் எல்லாம் மனித வாழ்வு தீவிரமாகும்போது ஒன்றிணைகின்றன.
நோம்சாம்ஸ்கி இத்தகைய ஒன்றிணைவின் அரிதான உதாரணம். அவர் ஒரு அறிவுஜீவி என்பது மட்டுமல்ல அவரை நாம் புகழ்வதற்கான காரணம்.
இத்தகைய நோக்கில்தான் அவரைப் புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய நோக்கில் புரிந்துகொள்ளாத இந்துஇதழின் வெளியீடான ஃப்ரன்ட்லைனின்வலைத்தளம் சாம்ஸ்கியை சொந்தம் கொண்டாடுவதுஅபத்தம். இந்து, சாம்ஸ்கியுடன் தன்னை இணைப்பது கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தனதுவாலை ஆட்டுவது போன்றது. லங்காகார்டியனும் இந்து வரிசையில் இணைவது அபத்தத்தின் உச்சம் என்பதுதான் எனது கணிப்பு.
இன்னொரு கோணத்திலும் யோசிக்கவேண்டியுள்ளது. சாம்ஸ்கியை லங்காகார்டியனும் (1983இல் இப்பத்திரிகை நடுநிலையாக இருந்தபோது பல நல்லகட்டுரைகளை வெளியிட்டது) இந்து குழுமமும் ஏன் தங்கள் சொத்தாக மாற்றப் பார்க்கின்றன? தங்களுக்கு காஸ்மாபாலிட்டன் புத்திஜீவி என்ற பெயர்வேண்டியிருக்கிறது. காஸ்மாபாலிட்டனிசத்தில் தமிழ் சேரமுடியுமா என்ன? எல்லை தாண்டிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது இதன் முக்கிய குணம்.ஈழப் பிரச்சினை பற்றிப் பேசாமல் பாலஸ்தீனிய பிரச்சினை பற்றிப் பேச வேண்டியது இதன் முக்கியத் தேவைகளில் ஒன்று. இந்து ராம், அருந்ததிராய், வேறுசில அரைகுறைகள் எல்லாம் இங்கே அணிவகுத்து நிற்கும். இன்னொரு கூட்டம் உண்டு. சீ, தேசிய இனவாதி ஆகிவிட்டானய்யா என்று லேபல் குத்துபவர்கள்அடிப்படையில் காஸ்மாபாலிட்டனிசத்தின் மீதான மோகவியாதிதான் இதற்கெல்லாம் காரணம். இந்த காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவி அந்தஸ்துக்காகஆசைப்படும் உளவியல் ரோகிகளுக்கும் சி.பி.எம்.மின் மேல்தட்டு கட்சித் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் சோம்நாத் சட்டர்ஜிபாராளுமன்ற அவைத்தலைவரானவுடன் சி.பி.எம்.மிலிருந்து தப்பிவிட்டார். இவர்களெல்லாம் தங்கள் அசிங்கங்களை மறைக்க ஒரு சாம்ஸ்கியைப்பிடித்துவந்து தங்கள் சொத்தாக்க முயலுகிறார்கள். கடைசியாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது லங்கா கார்டியன்.
ஆனால் சமீபத்தில் ஒரு புதுச்சிந்தனை இந்தியவியல் ஆய்வில் தலைகாட்டியுள்ளது. இதனை முன்னெடுப்பவர் ஷெல்டன் போலக் என்ற சமஸ்கிருதப்பேராசிரியர். இந்திய ஆய்வில் சமஸ்கிருதம் பிராந்திய மொழியோடு (உதாரணம் கன்னடம்) தொடர்பு கொள்கையில் ஒரு காஸ்மாபாலிட்டன் வெர்னாக்குலர்தோன்றுகிறது என்கிறார் ஷெல்டன் போலக். தமிழ் பற்றிய கணிப்பில் இவர் தோற்றாலும் சமஸ்கிருதத்தின் அரசியலைச் சரியாகக் (இவரது சமஸ்கிருதத்தின்சாவு என்ற கட்டுரையைப் பார்க்க) கணிக்கிறார்.
இந்தியாவில் நடமாடும் காஸ்மாபாலிட்டன் அறிவு ஜீவிகளுக்கு போலக்கின் தர்க்கம் தெரியாது. அதாவது பிராந்திய மொழி அல்லது பிரச்சினையில்ஈடுபடும்போதுதான் உண்மையான காஸ்மாபாலிட்டானிசம் உருவாகிறது. இந்தப்பார்வையை எனக்குத் தந்ததற்கான அடிப்படை போலக் கட்டுரைகளில்உள்ளன. சாம்ஸ்கியை, போலக்கோடு இணைக்கவேண்டும். இந்தியச் சூழலில் சரியான அரசியல் பார்வை என்பது பிராந்திய மொழி சார்ந்த பார்வைதான்.ஜார்ஜ் ஹார்ட் என்ற பெர்க்கிலி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் எழுத்துகளிலும் இந்த அழுத்தம் உண்டு. எனவே தமிழின் தனித் தன்மையைப் பற்றிஹார்ட் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த வழியில் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி செய்த கிரேக்க இலக்கியத்தோடான ஒப்பீடு முக்கியமான ஆய்வுநடவடிக்கைகளாகும்.
சாம்ஸ்கியைப் போலக்கோடு இணைக்கத் தெரியாத ‘இந்து’த்தனமான காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவித்தனம் போலியானது. சாம்ஸ்கியை அழைத்துச்சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தால் மட்டும் போதாது. சிருஷ்டிபரமாக சாம்ஸ்கியை அணுகத் தெரியாதவர்கள் தங்கள் ரோகத்துக்கான புனுகாக மட்டுமேசாம்ஸ்கியைப் பயன்படுத்தமுடியும்.
- நன்றி உயிரோசை
குறிப்பும் மீள்பதிவும் – ஜமாலன். – 24-02-2009
0 comments:
கருத்துரையிடுக