சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மோதல் ஒரு வருந்ததக்க செயல் என்பதும் பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்.  வன்முறை எப்போதும் எதிர்வன்முறைக்கான கூறைக் கொண்டே உள்ளது. அவ்வகையில் இந்த வன்முறையின் ஒருபக்கத்தை மட்டும் ஊடகங்கள் பெரிதுபடுத்தி இந்தப் பிரச்சனையில் தங்களது ஒருதலைப் பச்சமான உயர்சாதி சார்பு மனப்பான்மையை வெளிப்படுத்தி கொண்டன என்பதுடன் தங்களது ஓட்டுவங்கி அரசியலுக்கு இதனை பயன்படுத்திக்கொண்டன. ஊடகங்கள் உண்மைகளை சொல்வதில்லை “உண்மைகளை“ கட்டமைக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லியுள்ளது இச்சம்பவம்.

இச்சம்பவத்தில் பரவலாகப் பேசப்பட்ட முக்கியச் சொல்லாடல்கள். 1. சட்டம் 2. வன்முறை 3. வன்மம் 4. காட்டுமிராண்டித்தனம். 5. மாணவர்கள் - அரசியல் உறவு 6. காவல்துறைப்பணி 7. பொதுமக்கள் பார்வை 8. அரசு நடவடிக்கை 9. ஊடகங்கள் கட்டும் உண்மை 10. பொதுபுத்தியும் சாதிப்புத்தியும்.

இச்சொல்லாடல்கள் மறு உற்பத்தி செய்யப்பட்டு சமூக பொதுப்புத்தி கட்டமைப்பை மறுபடியும் மறுஉருவாக்கம் செய்து அவரவர் அடையாளங்களை ஒரு முறை மீளாக்கம் செய்துள்ளது என்றால் மிகையாகாது.  மேற்க்கண்ட சொல்லாடல்கள்வழி இந்நிகழ்வு எப்படி பரவலான கவனத்தையும் மக்களிடம் ஒரு அதிகார விருப்புறுதியையும் உருவாக்கியது என்பது பிறிதொரு ஆய்வு. சாதியம் என்பது ஒரு கருத்தியில் அல்ல அது ஒரு உடலரசியல் நிகழ்வு என்பதையும் ஒரு உடலின் உள்ளார்ந்துள்ள செயல்-பழக்கத்தின்(habitués)  வழியாக ஒரு கருத்துருவ-உடலாக மாற்றப்பட்டுள்ளது. விழாககள், ஜெயந்திகள் மற்றும் பல கொண்டாட்டங்கள் வழியாக சாதி குறித்த பல வரலாற்று நினைவுகள் தொடர்ந்து ஊடகங்களால் அந்த சாதிய ஆதிக்க வர்க்கத்தினரால் பெருக்கப்பட்டு, பாதுகாப்பாக அந்தந்த சாதி உடலுக்குள் இறக்கப்படுகிறது. இப்படி இறக்கப்பட்ட சாதிய உடல்கள் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதின் வழியாக தங்களது அடையாளத்தை மீளுருவாக்கம் (assemblages)  செய்துகொள்கின்றன. சாதியம் என்பது அடிப்படையில் தீண்டாமை மற்றும் தனது குழு உடல்கள் பற்றிய பெருமித அடையாளங்கள் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. வரலாறு என்கிற பெயரில் பல கற்பிதங்களை உருவாக்கி பல கதையாடல்களைக் கட்டமைத்துக் கொண்டதன்மூலம் சாதிய உடல்கள் மீண்டும் மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொண்டே உள்ளன இத்தகைய நிகழ்வுகளால். வினவு சுட்டிக்காட்டியதுபோல “சாதியத்தலைவரை தேசியத்தலைவராகவும், தேசியத்தலைவரை சாதியத்தலைவராகவும்” கட்டமைக்கும் ஒரு கதையாடலை இந்கிகழ்வுகள் சென்னை போன்ற பெருநகர்வரை கொண்டு சென்றுள்ளது.

விரிவாக இதனை வேறாரு பதிவாக எழுதலாம். இங்கு, இந்நிகழ்வின் காட்சிகள் மற்றும் இதுகுறித்து தோழர். அ.மார்க்ஸ் மற்றும் மக்கள் குடியுரிமைவாதிகளால் நடத்தப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கையும் நிகழ்ந்த இந்த வன்முறையின் அடிப்படைகளைச் சொல்லும் என்பதால் இங்கு மீள்பதிவிடப்படுகிறது.

இப்படி வந்த நான் ...........

imageimage
imageimage

















imageimage
இப்படி ஆயிட்டேன்.

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)

தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020.செல்: 94441 20582, 94442 14175, 94434 39869

20, நவம்பர் 2008

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிறசாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் பங்குபெற்றோர்:

அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.

இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத்தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம்ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான தலித் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது.சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.

பின்னணி:

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல்,விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) தலித்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது.

எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்’ என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளில் ‘தேவர் ஜெயந்தி’ கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’என்னும் பெயரிலுள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ என்னும் சொல்லை நீக்கி வெறும் ‘சென்னை சட்டக் கல்லூரி’என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் தலித் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும்எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.

இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை ‘ராகிங்’ செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கேலி செய்வது என்கிற வகையின்றி சும்மா விசாரித்துக் ‘கலாய்ப்பது’ என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ‘‘என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் ‘அக்யூஸ்ட்’ ராமர் என்னுடைய சித்தப்பா’’ என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதிரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற தலித்மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை, போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என தலித்மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி தலித் மாணவர்களை ‘‘தேர்வு எழுத வந்தால் தாக்குவோம், காலை ஒடிப்போம்’’ என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள தலித் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் தலித் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின்அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.

நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(தலித்)மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன்,ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு தலித் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன்ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம்.

இது குறித்து விடுதியில் தலித் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர்.தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.

நவ.12 வன்முறை:

இன்று காலை தேர்வு எழுத வந்த சில தலித் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் ‘கேட்’டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள ‘எஸ்பிளனேடு’ காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார்.

தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவிஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் ‘பகுஜன் சமாஜ் கட்சி’ தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார்.கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த லித் மாணவர்களிடம் பேசியுள்ளார்.அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்லியுள்ளனர்.

சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார். இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் தலித் மாணவர்களைத் திட்டிக்கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட லிலும் பெருங்காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினர் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.

இன்றைய நிலை:

நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

1. குற்ற எண்:1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 தலித் மாணவர்கள் ‘மற்றும் பலர்’ குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 தலித் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட)பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2. குற்ற எண்:1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும்(‘மற்றவர்கள்’) சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.

3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்காகஇடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி (ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.

எமது பார்வைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன.அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.

2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன் லிசிங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.

3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு Cognizable Offence நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும்,அனுமதியும் தேவையில்லை.

4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிபக்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழிலின் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.

5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும் போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. தமிழகம் முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம்.ஆனால் அதே நேரத்தில் Elite Schools என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.

6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.

8. தலித் மாணவர்கள், தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ‘திருப்பதி சட்டக் கல்லூரி’ மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். தலித் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.

பரிந்துரைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப்படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.

2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.

3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.

4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.

5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்களைத் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.

6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்தன்பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

7. கல்லூரி ஆசிரியப் பணிக் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சிலிங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு ‘வார்டன்’ நியமிக்கப்பட வேண்டும்.

8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதிஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும்
Legal Cell Authority, High Court Registry ஆகியவற்றில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.

9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.

நன்றி - சத்தியக்கடுதாசி

குறிப்பும் மீள்பதிவும் ஜமாலன் - 22-11-2008.

12 comments:

நெய்தல் சொன்னது…

நாம் ஏராளமான கேள்விகளை முன் வைக்கிறோம்.ஆனால் ஆதிக்க சாதி வெறியர்கள்,ஊடகங்கள்,போலீஸ்,அரசு நிர்வாகம் என சகலமும் சேர்ந்து கொண்டு. தலித்துக்களை ஒழித்துக் கட்டாமல் ஓயமாடோம் என்பது போல நடந்து கொள்கிறார்கள்.அனைத்து ஊடகங்களையும் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக ஆக்ரமித்திருக்கும் கள்ளர்கள் தலித் மக்களுக்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்கி வருகிறார்கள் என்பதோடு. கத்தியோடு பாய்ந்த பாரதிகண்ணனின் படங்களை தந்திரமாக மறைத்து வருகிறார்கள்.இந்த தாக்குதலுக்கு காரணமான பாரதிகண்ணன் மீது அனுதாபம் ஏர்படும் வகையிலான ஜோடனைகளோடு கட்டுரைகளும் செய்திகளும் எழுதப்படுகிறது. விரைவில் ஊடகங்களில் பொறுப்பில் இருக்கும் நபர்கள் ஜாதிகள் குறித்த விசாரணையோடு நாம் எழுத வேண்டும்.ஆமாம் "இவனுக காண்டுமிராண்டிங்கப்பா" என்று சொல்லக் கூடிய ந‌டுநிலையாள‌ர்க‌ளின் ஜாதிப் பின்ன‌ணியை தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ சூழ‌ல் த‌மிழ‌க‌த்தில் எழுந்திருக்கிற‌து.

saki சொன்னது…

அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் பற்றி தளங்களில் உண்மையான ஆய்வுகள் தெரியப்படுத்தவில்லை என்ற வேதனை இருந்தது.. சத்தியக்கடுதாசியும் ,நீங்கலும் இந்தக்கடுரையை வெளியிட்டது சிறிது ஆறுதலைத்தருகிறது ..
நேற்று அ.மார்க்சின் பேட்டி பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாகியது ..நன்றாக சொல்லியிருந்தார்...

சாதியம் ஒழிந்துவிட்டது தலைத்மக்களுக்கு பல உரிமைகள் கிடைத்து விட்டது என்று இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் எதனையோ நடந்து கொண்டிருப்பதை மறைத்து பழியை தலித் மக்கள்மேல் போட்டும் விடுகிறார்கள்.. இன்னும் தலித்துகலுக்கு எதிரான சாதி வெறி நிகழ்வுகள் ஆழமாக வாழ்ந்து கொண்டிருக்கிரதென்பதற்க்கு இவை போன்ற பல நிகழ்வுகள்
தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிரது.. இன்னும் வேதனையாக இருப்பது அம்பேத்காரின் பெயர்கொண்ட கல்லூரியில் சாதிவெறியை ஊட்டிவிடுவது ..

றஞ்சினி .

ஜமாலன் சொன்னது…

விரிவான கருத்து பகிர்தலுக்கு நன்றி நெய்தல் மறறும் சகி.

பெயரில்லா சொன்னது…

நல்ல விளக்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன் வாழ்த்துகள். தொடருங்கள்!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பகிர்வுக்கு நன்றி ஜமாலன் சார்..

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. விரிவாக எழுதினால் சில புரிதல்களுக்கு ஏதுவாயிருக்கும்.

ஜமாலன் சொன்னது…

நன்றி தமிழன்

நன்றி சுந்தர். இதுகுறித்து விரிவாக எழுத முயல்கிறேன் சீக்கிரத்தில். வருடக்கடைசி அலுவலகப் பணிகள் துவங்கிவிட்டதால் தாமதாகலாம்.

ramachandranusha(உஷா) சொன்னது…

நன்றி ஜமாலன். பிரச்சனைகள் ஆழமாய் வேர் விட்டுள்ளது அதை சரி செய்வது அவ்வளவு சுலபமில்லை.

எழுபத்தி ஐந்து சதவீதம் அட்டணன்ஸ், முதல் வருடத்தில் இருந்தே ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு முடிந்ததும், இண்டன் ஷிப்
செய்ய வேண்டும். லாயர்கள், லா பார்ம், கம்பனிகளின் லா டிபார்ட்மெண்டுகளில் போன்று- இதை மாணவர்களே தேடி பிடிக்க வேண்டும்- அதற்கு மதிபெண் உண்டு போன்றவை நேஷனல் லா கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. மாணவர்களை சரியான பாதையின் திருப்பினாலே பல பிரச்ச்னைகள் தீரும். வேண்டாத பிரச்சனைகளை தேடி அலைய
நேரமும் இருக்காது.

ஜமாலன் சொன்னது…

ramachandranusha(உஷா) கூறியது...

//பிரச்சனைகள் ஆழமாய் வேர் விட்டுள்ளது அதை சரி செய்வது அவ்வளவு சுலபமில்லை.//

உண்மைதான் இரு சாதி மக்களிடமும் சமநிலையுடன் பேசுவதற்கான ஜனநாயக அமைப்புகள் உருவாகி மக்களிடம் உள்ள வெறுப்பணர்வை சரி செய்து ஒருங்கிணைக்க வேண்டும்.

//எழுபத்தி ஐந்து சதவீதம் அட்டணன்ஸ், முதல் வருடத்தில் இருந்தே ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு முடிந்ததும், இண்டன் ஷிப்
செய்ய வேண்டும். லாயர்கள், லா பார்ம், கம்பனிகளின் லா டிபார்ட்மெண்டுகளில் போன்று- இதை மாணவர்களே தேடி பிடிக்க வேண்டும்- அதற்கு மதிபெண் உண்டு போன்றவை நேஷனல் லா கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. மாணவர்களை சரியான பாதையின் திருப்பினாலே பல பிரச்ச்னைகள் தீரும். வேண்டாத பிரச்சனைகளை தேடி அலைய
நேரமும் இருக்காது.//

உங்களது ஆலோசனைகள் கவனிக்கப்பட வேண்டியவைதான். நல்லதொரு கருத்தை சொல்லி உள்ளீர்கள்.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

திரு.ஜமாலன்..

உணமைஅறியும் குழுவின் அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு நன்றி

ஆய்வின் முடிவில் குழுவின் பரிந்துரையில் இச்செயலை மக்களிடையே ஒருவித கருத்து திணிப்பை போல தமது பரபரப்பு செய்திக்கான நோக்கம் ஒன்றையே குறிக்கோளாக ஒளிபரப்பியதை கண்டித்து இச்செயல் தொடராதிருக்க அரசிற்கு தனது யோசனைகளையும் வழங்கியிருக்க்லாம் எனத்தொன்றுகிறது
நன்றி

விஷ்ண்புரம் சரவணன்

ஜமாலன் சொன்னது…

நன்றி விஷ்னுபுரம் சரவணன்

உங்கள் கருத்து ஏற்புடையதே. ஊடகங்களை எதிர்காலத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள செய்ய இதுபோன்ற அறிக்கைகள் வழி வகுக்கும் என்பதால் அதனையும் குவிமையப்படுத்தி இருக்கலாம்.

பெயரில்லா சொன்னது…

"இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்." (- உங்கள் பார்வையில் உருட்டுக்கட்டைகள் ஒத்தடம் கொடுக்க பயன்படும் பொருளா?)
வந்த மாணவர்கள் ‘கேட்’டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர்.
இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். (-பாதுகாப்பு அளிக்க உருட்டுக்கட்டை கொண்டு வந்த மாணவர்கள் அந்த உருட்டுக்கட்டைகளை ஆயுதம் ஏதும் கொண்டு வராத அய்யாத்துரையை ஏன் தாக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதுவதை தடுத்து அடித்தவர் என்பதால் அவரை தாக்கிவிட்டு, அதன்பின் தண்ணீர் தந்து ஆசுவாசம் செய்தனராம். அப்படியானால், பாரதிகண்ணனும் கத்தியால் யாரையாவது கத்தியால் குத்திவிட்டு ஒரு வேளை தண்ணீர் கொடுக்கலாம் என்று நினைத்து வந்திருக்கலாம் இல்லையா.. பாவம். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை எல்லோரும் தாக்கிவிட்டார்கள் போலும்.. உங்களுக்கு பிடித்த ஒரு ரவுடி கும்பல் செய்தால் அது நியாயம், அதுவே இன்னொரு ரவுடி செய்தால் தவறு என்று தான் இந்த அறிக்கை சொல்கிறது.)
யார் செய்தாலும் வன்முறையும் ரவுடியிசமும் கண்டிக்கத் தக்கது தான். இந்த ஆய்வுக்கட்டுரை அதை பிரதிபலிக்கவில்லை. ஒருதலைப் பட்சமானது என்றேதான் கருத தோன்றுகிறது.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.