“எண்ணப்பட்ட உடல்களும் எழதப்பட்ட கதைகளும்” என்கிற தீராநதிக் கட்டுரை இரண்டு பகுதிகளாக பதிவில் வெளியிடப் பட்டுள்ளது. (கட்டுரையை படிக்க பகுதி-1 பகுதி-2 இங்கு செல்லவும்) அதற்கான உரையாடலை மேலெடுத்துச் செல்லம் வண்ணம் நண்பர் பாரி. அரசு இன்று புள்ளியியல் ஒரு அரசியல் வகையினம் - (ஜமாலனுக்கு மட்டுமல்ல...) என்று ஒரு பதிவு போட்டுள்ளார். அதற்கான விளக்கமாக எனது பின்னொட்டம் பொதுவான விளக்கமாக இருப்பதால் இங்கு தனிப்பதிவாக இடப்படுகிறது. மெற்கண்ட கட்டுரைகளை படித்தவிட்டும் தொடரலாம்.
புள்ளியல் குறித்த உரையாடலைத் துவங்கியதால், எனது சில மேல் விளக்கங்களை இங்கு தருகிறேன். எனது பகுதி-1 கட்டுரையில் புள்ளியல் மட்டுமின்றி எல்லா அறிவுத்துறையுமே அரசியல் தன்மை கொண்டவையே என்பதை நண்பர் “பெரியார் விமர்சகர்“ உடன் ஆன எனது பின்னொட்ட உரையாடலில் விளக்கியுள்ளேன். அதனால் மேலதிகமாக அதைப்பற்றிப் பேசவேண்டாம். குறிப்பாக ஒன்று அறிவியல் துறைகள் உருவான வரலாறு முக்கியமானது. அவை மனிதர்களை பண்பாட்டுரீதியாக கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை சார்ந்தவையே. அவற்றில் மனிதர்களுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களுடன் இத்தகைய பாதக அம்சங்களும் உள்ளது. புள்ளிவிபரம் அல்லது புள்ளியல் என்பது தரவுகளின் பொதுமைப்படுத்துதல் என்பதை கொண்டிருப்பதால் அது மற்றவற்றைவிட ஒரு ஆளுகை தொழில்நுட்பமாக இருக்கிறது என்பதே எனது கட்டுரையின் மையமான உரையாடல். புள்ளியல் பொய்யா? உண்மையா? என்பது எனது தேடல் அல்ல. என்வரையில் அது அவசியமும் அல்ல. உண்மை தேடுதல் என்பது மதவாதிகளின் வேலை என்று நினைப்பவன் நான். அடிப்படையில் நான் மதவாதி அல்ல. மனிதர்கள் மகிழ்வுடன் வாழ புனைவுகள் அல்லது பொய்கள்தான் சாத்தியமெனில் அதை சொல்லவும் எழுதவுமானதே எனது அரசியல். பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்க்க நன்மை பயக்குமெனில் (குறள் நினைவிலிருந்து எழுதப்படுகிறது - தவறெனில் சுட்டலாம்). அவ்வளவுதான்.
//இப்படியே எல்லாவற்றின் அரசியல் பின்னணி பார்க்கபோனால் இந்திய துணைக்கண்டத்தை பற்றிய ஐரோப்பிய ஆய்வுகள் அனைத்தும் பொய்யானவை என்று இன்றைக்கு அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் சொல்வது உண்மையா?//
ஐரோப்பிய ஆய்வுகள் பற்றியதல்ல எனது உரையாடல். குறிப்பாக மேல்திசை மற்றும் கீழ்திசைக் கட்டமைவு என்பது குறித்து பேசினால் இது குறித்து ஆழமாக உரையாடலாம். அதற்குள் நான் போகவில்லை. உண்மையில் ஐரோப்பிய ஆய்வுகள்தான் ஆர்.எஸ்.எஸ். உருவானதற்கான கோட்பாட்டுப் பின்புலத்தை தந்தவை. அவர்கள் கூறுவது மிகவும் சுருக்கப்பட்ட தங்களுக்கு பாதகமான அம்சங்கள் பற்றியே. குறிப்பாக சாதி, ஆரிய-திராவிட வேறுபாடு ஆகியவற்றைப் பற்றிய கருத்தாக்கங்களில் ஐரோப்பிய கண்டுபிடிப்பு என்று புசி மெழுகுவார்கள். தேசம் என்கிற கோட்பாடே ஐரோப்பிய கோட்பாடுதான். அதை ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள்? பாரதம், அகண்ட பாரதம், பண்பாட்டு தேசியம் என்றெல்லாம் கூறுவதே ஐரோப்பிய கண்ணோட்டம்தான். சாவர்க்கர், ஜின்னா போன்றவர்கள் இந்த ஐரோப்பிய கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தேசம் பற்றியக் கோட்பாட்டை முன்வைத்தனர். காந்தியை கொன்றவன்கூட நவீன இந்தியா பற்றித்தான் பேசினான். அதற்கு காந்தி தடை என்று பார்த்தான். அணுகுண்டு வலிமையான இநதியா என்பது என்னவகைக் கண்ணோட்டம்?
இனம் என்கிற கண்ணோட்டமே ஐரோப்பிய வகைதான். ஆக, மனிதர்களை உயர்வு தாழ்வு கருதும் ஐரோப்பிய இனவாதம் இந்திய சாதியமைப்புடன் ஊடுகலந்து உருவானதே நான் பேசிய கட்டுரையின் சாரம். இதன்பொருள் ஐரொப்பிய ஆய்வை மறுப்பதோ அல்லது இந்திய மரபை தூக்கிப்பிடிப்பதோ அல்ல. அரை டவுசர்கள் (சாகா சீருடையை நீங்கள் குறிப்பதாக கொள்கிறேன்.) தங்களுக்கு அல்லது உயர்சாதி பார்ப்பன ஆர்ய வர்த்தம் என்கிற அகண்டபாரத ஆதிக்க நிலத்தை அடைவதற்காக தேவைப்பட்டால் தங்கள் எதிரிகளாக கருதம் முகமது நபியையும் ஏசுவையும் கூட தூக்கிப் பிடிப்பார்கள். அதனால் அவர்களது வாதத்தை மேலோட்டமாக பார்க்க்ககூடாது. இப்படி எழுதுவதன் மூலம் அவர்களது இரட்டைமுக அரசியல் கருத்தாக்கத்திற்கு நாமே பலியாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுத் தேவை.
//இன்றைக்கு மேற்கோள் (உசாத்துணை) நூற்களாகவும், ஆய்வு ஆதாரங்களாவும் காட்டுபடுவை மிக பெரும்பான்மையானவை ஐரோப்பியர்களின் வழி வந்தவை! அப்படியானால் இவையெல்லாம் ஐரோப்பிய அரசியல் வகையினமா?//
ஆம். ஐரொப்பிய அரசியல் வகையினம்தான். இதில் என்ன முரண்பாடு? நமது ஆழ்மனதில் உள்ள ஐரோப்பிய வழிவந்தவை எல்லாம் தவறானவை என்கிற புரிதலையே இவ்வாக்கியங்கள் சுட்டுகின்றன. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஐரோப்பா அல்லது குறிப்பாக பிரித்தானியர்கள் ஏன் நமது சமூகங்களை ஆய்வு செய்வேண்டும். பொழுது போக்காகவா? அந்த ஆய்வுத் துறைகளை அவர்கள் பல மில்லியன்கள் செலவு செய்து உருவாக்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சமீப காலங்களில் நீங்கள் அறிந்திருக்கக் கூடும். தன்னார்வக் குழுக்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் போர்ட் பவுண்டேஷன் போன்ற அந்நிய நிறுவனங்கள் மில்லியன்கள் செலவழித்து இந்திய சமூகம் பற்றிய வேர்மட்ட கள ஆய்வகளை செய்வதும் வாய்ப்புள்ள இடங்களில் பல சிறுசிறு அமைப்புகளை கட்டமைப்பதும் புரட்சிகர இயக்கங்கள் பின்னால் இளைஞர்கள செல்வதை தடுப்பதுமான செயல்பாடுகள் நடைபெற்று வருவது பரவலாக அறியப்பட்டதே.
ஆக, ஐரோப்பிய ஆய்வுகள் வழியாகத்தான் இன்றைக்கான அரசியல் சொல்லாடல் களங்கள் உருவாகி இயங்கிக் கொண்டுள்ளன. சங்க காலத்தில் தமிழன் இருந்தானா? அல்லது 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு மனிதன்தான் இருந்தானா? தமிழன் என்கிற அடையாளமும் மனிதன் என்கிற அடையாளமும் முதலாளித்தவத்தின் வளர்ச்சிக்காக உருவமைந்த கருத்தாக்கங்கள். நாம் எவ்வளவுதான் பேசினாலும் தமிழன் என்கிற இனவகைக்குள் தமிழ்தேசிய முதலாளித்தவ நலன் இருப்பதை மறுக்க முடியுமா? இதன் பொருள் அதற்கு முன்பு இருந்தவர்கள் மனிதர்கள் அல்லது தமிழர்கள் அல்ல என்பதல்ல. அந்த உடல்களின் அடையாளம் மனிதன் அல்லது தமிழன் என்கிற அடையாளம் அல்ல என்பதுதான். பண்ணைகளில் நிலங்களில் கட்டுண்டு இருந்த அடிமைகளை விடுவித்தால்தான் சதந்திர கூலித் தொழிலாளிகள் கிடைப்பார்கள். இதைதான் முதலாளித்தவ புரட்சி என்றும் அடிமைகளை விடுதலை செய்த மாபெரும் கலகம் என்றும் அர்ப்பரிக்கப்படுவதின் பின்புலம். எல்லாம் கடவுள் அருள் என்றில்லாமல் மனிதன் பகுத்தறிந்தால்தான் எந்திரங்களில் உழைக்கத் தயங்கமாட்டான். ஆக, முதலாளியம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டை முன்வைத்தது என்றால் தொழில் போட்டிக்கான சுதந்திரம், தொழிலாளிகளை கூலிக்கு அமர்த்தவதற்கான சமத்தவம், சக முதலாளிகளுடன் சகோதரத்தவம் என்றுதான் பொருள். அதனால் ஐரோப்பிய அரசியல் வகையினமா? இந்திய வகையினமா? என்பதல்ல பிரச்சனை. அரசியல் என்ன? என்பதே பிரச்சனை.
//புள்ளியியல் இல்லையேல் வணிகம் என்பதே சாத்தியமற்றது என்கிறது இன்றைய கார்ப்பரேட் உலகம்! வணிக புள்ளியியல் எந்த வகை அரசியல்?//
தொழில் மற்றும் வணிகசார் நிர்வாகங்களில் சொல்லப்படும் ஒரு கதையை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஒரு செருப்பு தயாரிக்கும் நிறுவனம் தனது இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை ஒரு தீவிற்கு அனுப்பி அங்கு செருப்பு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய சொன்னதாம். அந்த தீவில் யாருமே செருப்பே அணிவதில்லை. முதல் பிரதிநிதி கூறினானாம் அந்த தீவில் யாருமே செருப்பு அணிவதில்லை என்பதால் அங்கு விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று. இரண்டாவது பிரதிநிதி கூறினானாம் நமது விற்பனைக்கு அருமையான ஒரு இடம் அது. அங்கு யாருமே செருப்பு அணிவதில்லை அதனால் முதலில் நாம் விற்பனை துவங்குவதற்கு முன்பாக... செருப்பின் பயன்பாட்டை விளக்கி அதை அணிவதற்கான ஒரு பண்பாட்டு கட்டமைப்பை உருவாக்கி விட்டால் பிறகு நமது செருப்புகள் மாபெரும் விற்பனை புள்ளிகளை எட்டும் என்றானாம். இக்கதை ஐரோப்பாவின் ஆய்வு ஏன் என்பதை நமக்கு விளக்கும்.
உலக அழகியாக இந்தியப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மிஸ்.. போட்டிகள் கிராம அளவில் நடந்ததும் அதன்பின் ஒப்பனை (மேக்கப்) அழகு சாதனப் பொருள்கள் விற்பனை அதிகரித்ததையும் அந்த வகைப் போட்டிகளுக்கு இத்தகைய நிறுவனங்கள் உதவிகள் செய்வதையும் இதனுடன் இணைத்துப் பாருங்கள். அப்புறம் புள்ளிவிபரம் என்பதில் மேற்சொன்ன கதை இரண்டு வேறபட்ட கண்ணோட்டங்களை விளக்கும். இப்படி வணிக புள்ளிவிபரங்கள் என்பது மேலோட்டமாக எண்கள்தான் ஆனால், அதனுள் ஒரு பண்பாட்டு அரசியல் கட்டமைப்பு உள்ளது. வணிகப் புள்ளி விபரங்கள் பற்றிய ஆய்வு என்பது தனியானது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கான சாத்தயங்களைப்பற்றி அனுமானிக்கம் நிகழ்தகவுக் கொட்பாடு (probability theory) என்பது அந்த நிகழ்ச்சி நிகழ்வதற்கான சாத்தயங்களை நிகழ்விற்கு முன்பே சொல்வதின் வழியாக நிகழ்வை வகைப்படுத்தி ஒரு புரிதல் எல்லைக்குள் சுருக்குகிறது அல்லது அந்நிகழ்வின் இயல்பை பாதிக்கிறது என்பதை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். மற்றொன்று இதனுடன் தொடர்புடைய ஒன்று.. பெப்சி அல்லது கோக் நிறுவனத்தினரிடம் எதிர்காலத்தில் உங்களது போட்டியாளர் யார்? என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் “தண்ணீர்“ என்பதுதான். இதன்பொருள். எதிர்காலத்தில் குடிநீர் என்பதே பெப்சியும் கோக்கும்தான். இப்படி போட்டியானை கபளிகரம் செய்வதற்க்குத்தான் இந்த புள்ளிவிபரங்கள் பயன்படுகின்றன. உலகை குடிநீரற்ற உலகாகவும், குடிநீர் என்றால் அவர்களிடம்தான் பெறவேண்டும் என்பதை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கும் அபாயத்தை நாம் தினசரி அனுபவங்களில் பார்க்கிறோம். இந்தவகை கட்டமைப்புகளுக்கு வணிகப் புள்ளியல்கள்தான் துணை போகின்றன என்பது கண்கூடு.
//அப்புறம் இந்த மனித உடல்களை எண்ணுதல் பணியை இந்தியாவில் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை உள்ளாட்சி மன்றங்கள் பிறப்பு, இறப்பு அடிப்படையிலும்..., குடிமை வழங்கல் பிரிவு குடும்ப அட்டை வழியாகவும், இந்திய புள்ளியியல் துறை மக்கள் தொகை கணக்கெடுப்பு வழியாகவும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வழியாகவும், இந்திய குடிமை மற்றும் இமிக்ரேசன் துறை கடவுச்சீட்டு வழியாகவும்... எண்ணிக்கிட்டேயிருக்காங்க... ஆனா யாருக்கிட்டேயாவது முழுமையான தரவுகள் இருக்கா என்று யாருக்கும் தெரியாது!//
இப்படி பகுதி பகுதியாக எண்ணிளால் எப்படி முழுமையான தரவுகள் இருக்கும்? :)
இங்கு ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இந்தியாவில் இடஒதுக்கீடு பிரச்சனை வரம்போது எல்லாம் உச்ச நீதிமன்றம் எழுப்பும் ஒரு கேள்வி “உங்களிடம் முழுமையான சாதிவாரிப் பட்டியல் உள்ளதா? எதை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு தருவது? ” என்பதுதான். 1936-ல் பிரித்தானிய அரசு எடுத்தது அதன்பின் 2001-ல் எடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பிற்குப் பிறகு சாதிவாரி புள்ளி விபரங்கள் எடுக்கப்படவில்லை. இதற்கான முயற்சியை ஏன் எந்த அரசும் எடுக்கவில்லை? இங்கு அரசாங்கத்தில் ஒரு திருமாவளவனோ அல்லது கே.ஆர். நாரயணணோ தலைமையாக வரலாம். ஆணால் உயர்சாதி கருத்தியலால் கட்டப்பட்டுள்ள அரசை என்ன செய்வது? எனது கட்டுரை சாதியம் என்கிற கருத்தாக்கம் எப்படி எண்ணுதல் வழியாக அமைப்பாக பிரித்தானிய அரசால் மாற்றப்பட்டது என்பதும் இதற்குள் இனவாத தன்மை ஏற்கனவே நிலவிய பார்ப்பன வர்ணத் தன்மையுடன் இணைந்ததையும்தான் பேசுபொருளாக கொள்கிறது.
மற்றபடி.. தாவுதீர (நன்றி லக்கிலுக்) அரைடவுசர்களை கிழிப்பதோ அல்லது அவர்களுக்கு நீள்கால்சராய் தைப்பதோ எனது பணி அல்ல. :) :) :)
நீண்ட உரையாடலுக்கு நன்றி.
அன்புடன்
ஜமாலன். (05-06-2008)
4 comments:
மேலதிகத் தெளிவைத் தந்தது கட்டுரை. நன்றி.
செருப்பு கதை நன்றாக இருந்தது :)
நன்றி சுந்தர்
சிறப்பானதொரு விளக்கத்திற்க்கு மிக்க நன்றி!
புரிதலுக்க நன்றி பாரி.அரசு..
கருத்துரையிடுக