பச்சைமரத்தில் பதியும் பதிவர்கள்

நண்பர் நாகார்ஜினன் தனது இரண்டுமாத கால பதிவு அனுபவங்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பேசியுள்ளார். அதில் பதிவில் நடந்தவரும் பிரபு ராஜதுறை மற்றும் வெங்கட் ஆகியவர்களின் பின்னொட்டப்பெட்டிக் குறித்த விவாதம் ஒன்றை சுட்டிக்காட்டி தானும் பின்னொட்ட பெட்டியை திறப்பதாக சொல்லியுள்ளார். அந்த விவாதத்தில் வெங்கட்டிற்கு இடப்போன பின்னொட்டம் வளர்ந்து பதிவாகிறது இங்கு.

இது ஒரு பயனுள்ள விவாதம். மீண்டும் மீண்டும் பேசப்படும் பதிலவுலகமா? பத்திரிக்கை உலகமா? என்கிற விவாதமாக இருப்பதால் இது குறித்து வெங்கட் கட்டுரையை முன்வைத்து வெட்டியும் ஒட்டியம் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்

1. வெங்கட்டின் பின்னோட்டத்தில் பத்ரி மற்றும் சிரில் அலக்ஸ் கூறுவதுபோல மின்னஞ்சல் மற்றும் பின்னோட்ட பெட்டியில் பெரிய வேறுபாடுகள் இல்லை. என்ன மின்னஞ்சலில் கொஞ்சம் வேலை அதிகம், பலரும் பின்னோட்டம் இடமாட்டார்கள். போகிற போக்கில் எதையாவது போடமுடியாது என்பதைத்தவிர இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உண்மையில் உரையாட விரும்புபவர்கள் மின் அஞ்சல் செய்வதன் மூலம் காத்திரமான உரையாடலை துவக்கலாம். “பெருசு“ என்று நீங்கள் கூறுபவர்கள் மின் அஞ்சலை திறந்துதான் வைத்துள்ளனர்.

2. செத்த மரத்திற்கும், தினமும் தண்ணீர் ஊற்றும் உயிர்ப்புள்ள மரத்திற்கும் வித்தியாசங்கள் நிறைய, என்றாலும், பத்தி எழுத்தைப் பொறுத்தவரை வெங்கட் சில நியாயமான வாதங்களை வைத்துள்ளார். அதே நேரம் இலக்கிய வகைப்பட்ட எழுத்தையும் இதழியல் வகைப்பட்ட எழுத்தையும் பிரித்து பார்ப்பது அவசியம். அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்கமுடியாது. எழுத்து என்பதற்கு மதிப்பீடுகள் வாசக தளத்திலும் எழுதப்படும் தளத்திலும் உண்டு. அம்மதிப்பீடுகளி்ல் உயர்வு தாழ்வு கற்பிப்பவை அரசியல் சார்ந்தது. ஞாநியின் எழுத்தும் ஜெயமோகன் எழுத்தும் ஒன்றல்ல. ஒவ்வொன்றும் அதனளவில் சரியானதே. அதற்கான அரசியல் குணாம்சங்களைக் கொண்டவை. அவர்கள் எழுதுவது சிறந்தது என்றோ பதிவுகளில் எழுதுவதோ தவறு என்றோ பார்க்க முடியாது.

3. பதிவுகள் வெறும் பத்தி எழுத்தை மட்டும் கொண்டதாக அதாவது தகவல் அடிப்படையிலானவையாக மட்டும் இல்லை. பத்தி எழுத்து என்பது தகவல் அடிப்படைகளில் அல்லது நிகழ்வுகள் அடிப்படையில் பேசப்படுவது. அதில் கோட்பாட்டு தத்துவங்கள் அதிகம் பேசப்படுவதில்லை. அனால் அதை தாண்டிய எழுத்து என்பதாக நாம் அறியும் “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்” எழுத்துக்களில் அரசியல், தத்துவம், ஆன்மீகம் இலக்கியம் என பலவகை எழுத்துக்கள் அவற்றின் கோட்பாட்டு தர்க்க அடிப்படையில் உள்ளன. அவை இதழியல் சாராதவை அல்லது இலக்கியம் சார்ந்தவை. சாரு, ஜெயமோகன், எஸ்ரா மற்றும் நாகார்ஜினன் போன்ற எழுத்தாளார்கள் செத்த மரங்களில் செதுக்கிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. அவர்களது எழுத்தும் பத்தி எழுத்தும் ஒன்றல்ல. அவற்றில் இலக்கியம் அரசியல் ஆன்மீகம் எனப் பலவற்றைப்பற்றிய உரையாடல்கள், குறிப்புகள் உள்ளன. அவற்றிற்கு பெருக்கச் (generative) செயல்பாடு உள்ளது. அதனால் அவற்றை பத்தி எழுத்துக்களின் மட்டத்தில் மட்டுமே நிறுத்திப் பார்க்க முடியாது. இதன் பொருள் பத்தி எழுத்து தரம் குறைந்தவை என்பதல்ல அதன் நோக்கம் வாசகத் தளம் வேறு. பத்தி எழுத்துக்கள் உடனடித் தன்மை வாய்ந்தவை. அவற்றின் ஆய்வுத்தன்மையும் குறைவு. அனால் நம்பகத் தன்மை அதிகம். கூடுதலாக அவை புனைவு அல்ல, உண்மையாகவோ அதற்க்கு நெருக்கமானதாகவோ நம்பப்படும் இதழியல்வகை எழுத்துக்கள்.

4. பிரபு ராஜதுறை முன்வைக்கும் ஆங்கில வார்த்தைகளை கூடுமானவரை தவிர்ப்பது என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. பதிவுகள் அந்தவகையில் தமிழிற்கு பெரும் பங்காற்றியுள்ளதை யாரும் மறுத்தவிடமுடியாது. பதிவுகளை குறைத்து மதிப்பிடமுடியாது என்பதுடன் வெங்கட்டின் வாதமே பத்திரிக்கை எழுத்தை ஒரு உயர்ந்த மதிப்பிட்டில் வைத்துதான் எழுதப்பட்டுள்ளது. அல்லது பதிவுலக எழுத்தை உரைப்பதற்கான உரைகல்லாக அந்த எழுத்துக்களில்தான் போய் அளவிட்டுப் பார்க்ககப்படுகிறது. அவரது பதிவின் முன் அனுமானமே அந்த அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளது.

5. ஆக, எப்படி வெங்கட் முன்வைக்கும் பின்னோட்ட பெட்டி என்பது நமது உரிமையோ அதேபோல் மின்னஞ்சலை மட்டும் முன்வைப்பது அவர்களது உரிமை. அதை நாம் கீழிறக்கம் செய்து பார்க்க முடியாது. அவர்களை “பழமையில் ஊறிப்போன படைப்பாளிகளாலும், விமர்சகர்களாலும்“ என்று எழுதுவதன் மூலம் நாம் அடைய விரும்பம் அடையாளம் பதிவுலகம் நவீன சிந்தனையின் பிரதிநிதி என்பதா? இணையத்தில் படித்துவிட்டு ஒரே வாரத்தில் அவர்கள் எழுதினால்.. அடுத்த நிமிடமே நாம் பதிவில் எழுதுகிறோம். இரண்டிலுமே எழுதுபவரின் புரிதல்தான் பிரச்சனையே ஒழிய எப்படி என்பதில் இல்லை. ஒரு வசதி பதிவில் எழுதினால் தட்டிக் கேட்கலாம் உடனடியாக. தற்சமயம் பத்திரிக்கையில் எழுதினாலும் பதிவில் தட்டிக் கேட்கலாம் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளது என்பதால் இதில் பின்னோட்டம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. சமீபத்தில் ஜெயமோகனை பதிவுகளும் பத்திரிக்கைகளும் ஒன்று சோ்ந்து காய்ச்சி எடுத்தது நினைவிருக்கலாம்.

6. சான்றாக, ஜெயமோகன் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். அதில் பத்திரிக்கை என்ன செய்தது? பதிவுலகம் என்ன செய்தது? என்பதை பார்த்தால் இப்பேச்சுக்களின் வழியாக கட்டப்படும் விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். ஒரு எழுத்தாளனின் 'தான்' குறித்த அரசியல் கோட்பாடுகளிலிருந்து, ஊடகங்களின் எல்லைகள் அவை கட்டமைக்கும் கருத்துக்களம், கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் வரை இதற்குள் வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டன. பகடி, அங்கதம், நையாண்டி, நகைச்சுவை அவற்றின் கோட்பாடுகள் உளவியல் அரசியல் ஆழ்மன தணிக்கை என இன்னும் ஆழமாக உள்ளே செல்ல வேண்டிய பல தளங்கள் இவற்றில் மிச்சமிருந்தாலும் இதனை மேலோட்டமாக ஒட்டியும் வெட்டியும் சென்றுள்ளன இந்த பதிவுலக உரையாடல்கள். இனி தமிழ் எழுத்தாளன் புதிதாக உருவாகி வந்துள்ள வித்தியாசமான இந்த பதிவுலக வாசக வட்டத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை உருவாகி உள்ளது. இனி எழுத்தாள ஆழ்மனம் பதிவுலக வாசகனையும் தனது உரையாடலுக்குள் உள்ளடக்கி அவனது கண்காணிப்பு தணிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு எழுத்துச் சூழலை இந்த உரையாடல் திறந்து விட்டுள்ளது. இதோடு ஜெயமோகன் குறிப்பிடுவதைப்போல ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் கையாளும் வெகுசன அரசியல்தளம் பற்றிய கவனமும் இந்த எழுத்தாளனை கட்டமைக்கும் கூறாக மாறியுள்ளது. நுட்பமாக பார்த்தால் இந்த உரையாடல் பெரும்பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை வெகுசன எழுத்து/இலக்கிய எழுத்து அல்லது கனமான எழுத்து போன்ற வகைத்திணைகளின் முரண்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருப்பதை காணலாம். ஜெயமோகனின் இப்பிரச்சனைக் குறித்த பதிவுகள் அனைத்திலும் இரண்டு முக்கிய அரசியல் கருத்தாக்கங்கள் நுண்ணளவில் விழிப்புற்று போராடின. அது ஒரு 'பண்பாட்டு போராக'வே நிகழ்ந்தது. அதில் ஜெயமோகனை ஆதரிப்பவர்கள் யார் என்பதும் அவரை எதிர்க்க வேண்டிய தேவை என்ன என்பதையும்கூட இவை சொல்லிக் காட்டியுள்ளன. பரந்துபட்ட மக்களுக்கு புரியாததை எழுதுவதாக வைக்கப்படும் வாதத்தையும் அதில் கண்டோம். உண்மையில், எழுத்தின் அல்லது இத்தகைய கனமான இலக்கியத்தின் பணி ரசிகர்களை உருவாக்குவதல்ல வாசகனை உருவாக்குவதுதான். மக்கள் எல்லோரையும் கடைத்தேற்றுவதல்ல மாறாக மக்களை மேம்படுத்தும் முன்னணிகளை உருவாக்குவதுதான். பதிவுகள் பத்திரிக்கைகளைவிட குறைவான வாசகப் பரப்பையே கொண்டுள்ளன. அதேசமயம் பொது வாசகத் தளத்தைவிட சற்றே வலிமையானதாக உள்ளது. அறிவின் அதிகாரத்தைக் கொண்டதாக உள்ளது. ஆனந்த விகடனைவிட அதிக துயரத்தை ஜெயமோகனுக்கு பதிவுலகம் தந்துள்ளது. அதிகமான அதிகாரத்தை இந்த பதிவெழுத்துக்கள் செலுத்தியுள்ளன. அதிக உரிமையையும் எடுத்துக் கொண்டுள்ளன. இவை தனிமனித தாக்குதலையோ அல்லது குழு நலன்களையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அதேசமயம் தன்னை வெளிப்படுத்தி தனக்கான ஒரு அடையாளத்தை கட்டமைத்துக் கொள்வதாகவும் பதிவுலகம் இப்பிரச்சனையை அனுகியுள்ளது. ஆக, ஜெயமோகன் பின்னோட்ட பெட்டியை இணைக்கவில்லை என்பதற்காக அவரது எழுத்துக்கள் பதிவுலக விமர்சனத்திலிருந்து தப்பிவிட்டதா?

7. பின்னோட்டப்பெட்டி இல்லாவிட்டாலும் நம்மைப்போல தனிப்பதிவாக பொட்டு அதனை கண்டிக்கும் வசதி உள்ளது. பிறகு எதற்காக அவர்களை “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்“ என்று அழைக்க வேண்டும். செத்த மரத்தில்தான் சிற்பம் செதுக்க முடியும். உயிருள்ள மரத்தில் (சுயபுலம்பல்களைக் கொண்ட பதிவுகளைப்போல) முதிராத காதலர்கள் பெயர்தான் செதுக்கமுடியும் என்பதாக இந்த தலைப்பை விமர்சிக்க முடியும். பிரச்சனை சில முன்முடிவுகளுடன் எழுதப்படுவதின் விளைவே இது என்பதைச் சொல்லத்தான்.

8. பதிவுகளை உயர்த்துவதன் மூலம் பத்திரிக்கைகளை குறைவாக மதிப்பிட முடியுமா? பதிவர்களை ஜனநாயகவாதிகளாக சித்தரிக்கும் இந்தபோக்கு சரியா? உண்மையில் பதிவுகளின் மதிப்பீடுகள் அப்படித்தான் வெளிப்படுகிறதா? பதிவுலக சண்டைகள் பத்திரிக்கை சண்டைகளைவிட பிரபலம். அப்புறம் போலிப்பிரச்சனைகள். ஆக, நிறைகுறை இரண்டிலும் உள்ளது. சாதகமானதை நமக்கு சாத்தியமானதாக எடுத்தக்கொள்வதே சரியானது. தவிரவும் அவர்கள் பின்னோட்ட பெட்டியை போடாததால் விமர்சனத்தை சந்திக்கும் திராணியற்றவர்கள் என்பது பல ஆயிரம் ஆண்டுகால எழுத்து சரித்திரத்தையே மறந்துபோனதாகிவிடும். பதிவுகளுக்கு முன்பே எழுத்தும் பத்திரிக்கையும் உண்டு. அதில் இந்த எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். உண்மையில் பதிவுலகம் என்பதும் தற்காதலின் மற்றொரு அதீத வடிவமே. அதற்கு இந்த எழுத்தாளர்கள் தங்கள் வாசகப்பரப்பை விரிப்பதுடன் அவனுடன் ஒரு உயிரோட்டமுள்ள தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே பதிவுகளில் எழுதுகிறார்கள். அதைவிட்டு இங்கும் அவர்கள் திரண்டு வந்து விட்டதாக எண்ணிக் கொள்வது “ஆலையில்லாத ஊரில் இழுப்பைப் பூ சக்கரை“ என்கிற மணோபாவத்தை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கும்.

வால்பகுதியாக (டைல்பீஸ் என்பதை இப்படிச் சொல்லலாமா?) ஒரு சின்ன கலந்துரையாடல்.

(வெங்கட்- வாதம் இந்த வண்ணத்தில் உள்ளது.)

"இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது.”

- இணையம் என்பது பொதுவானது. அதன் பிரதிநிதியாக நாம் நம்மை கருதிக்கொள்ள முடியாது. இணையம் பரவலானது என்பதுடன் அனுக எளிமையானது என்பதாலும்தான்.

”ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை.”

- அச்சில் ஏறுபவை எல்லாம் இணையத்திற்கும் பதிவிற்கும் எதிரானவை அல்ல. அவர்களும் பதிவுகளை எல்லாம் வாசிக்கிறார்கள். அப்படி வாசிக்க வேண்டும் என்பதும் அவர்களது அங்கீகாரம் தேடுவதும் பதிவர்களிடம் உள்ள ஒரு ஆசைதானே.

”இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை.”

- பதிவுலகம் மற்றொரு பிம்ப உற்பத்தித் தொழிற்கூடம்தானே ஒழிய இங்கு எந்த பிம்பமும் அழிக்கப்படுவதில்லை. பிம்பப் பால்வினை நோய் பீதிக்கப்படாமல் சீரோ-டிகிரியில் எழுத்து சாத்தியமா?

”மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ள முடிவதில்லை.”

- மேல்நின்று உபதேசிப்பதாக ஒரு எழுத்தாளனை அனுகுவதால்தான் பிரச்சனை. கறாரான விமர்சனம் என்பதே தவறான ஒரு அனுகுமுறை. எழுத்துக்களுடன் உரையாடலாம், மறுக்கலாம், அழிக்கலாம். விமர்சனம் என்ற பெயரில் நடைபெறும் தனிமனித தாக்குதல்தான் பிரச்சனை. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு எழுத்தாளர் அல்லது பதிவர்  என்ன சொல்வார். Artaud கூறியதுதான் “are you critic? suck my cock". எழுதுபவர் தனது உலகம் சிறியது என்பதை உணர்ந்தால் போதும். அதேபோல் விமர்சிப்பவரும்.

”மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள்..."”

இதற்கு பதில் நாகார்ஜினன் கூறியுள்ளார்.

ஒரு விஷயம் - என் எழுத்துக்கு இணையத்தை மாத்திரம் நான் நம்புவதில்லை. புத்தகங்கள் எப்போதும் உண்டு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நான் முக்கியமாகக் கருதும் அறிவியல்-இலக்கிய-தத்துவ-வரலாற்றுப் பிரச்னைப்பாடுகள் என் சிந்தனையில் எப்போதும் இடம்பெறும்.
இருந்தாலும் இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!
என் தளத்தில் பின்னூட்டங்களை இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - விரைவில் அதற்கான மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.
அதேவேளை நேற்றுக் கூறியது போல “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை!

-ஜமாலன் - 02-04-2008

5 comments:

தறுதலை சொன்னது…

உண்மை இரண்டு பொய்களுக்கு இடையில் உள்ளது
அல்லது
பொய் இரண்டு உண்மைகளுக்கு இடையில் இள்ளது

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

இராம.கி சொன்னது…

ஐயா,

அது “ஆளில்லாத ஊரில் இழுப்பைப்பு சக்கரை“ இல்லை. "ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூச் சர்க்கரை" ஆலை என்பது கரும்பு ஆலையைச் சுருக்கமாய்க் குறிப்பிடுவது; அதன் நீட்சியாய்க் கரும்புச் சர்க்கரையை உணர்த்துவது.. இலுப்பை பாலை நிலத்து மரம்.

இந்தச் சொலவடையை இங்கு எப்படிப் பொருத்திப் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை. ஏனென்றால் இந்த எழுத்தாளர்கள், அச்சில் இடமில்லாமலா (வாசகர் இல்லாமலா) வலைப்பதிவுக்கு வருகிறார்கள்?
அவர்கள் தான் அச்சென்னும் கரும்புச் சர்க்கரையையும் வைத்துக் கொண்டு, அதோடு வலைப்பதிவு என்னும் இலுப்பைப்பூச் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்கிறார்களே? அப்புறம் என்ன ஒன்றிற்குப் பகரியாய் இன்னொன்று?

அன்புடன்,
இராம.கி.

ஜமாலன் சொன்னது…

நன்றி இராம.கி ஐயாவிற்கு..

தவறை சுட்டியமைக்கு. திருத்திவிட்டேன்.

அதன் பயன்பாடு சரியானதுதான். நீங்கள் பொருத்திப்பார்க்கும் இடமும் நான் பொருத்திப்பார்க்கும் இடமும் எதிரானது. சர்க்கரை பத்திரிக்கை எழுத்து அது இல்லாததால் பதிவுலக இலுப்பைபூ கூட சக்கரையாகப் பார்க்கப்படும் அபாயம் பற்றியதுதான். தரமான எழுத்து இல்லாத இடத்தில் எழுதுவது எல்லாம் சர்க்கரை என்கிற அந்தஸ்த்தை பெற்றுவிடும் அபாயம் பற்றியதே எனது புரிதல்.

பெயரில்லா சொன்னது…

தனிப்பதிவை வாசிக்கலாம். நன்றி.

http://nagarjunan.blogspot.com/2008/04/3.html

பெயரில்லா சொன்னது…

ஜமாலன் - என் பதிவிலும் பின்னூட்டப்பகுதியில் உங்கள் கருத்தின் கீழும் சில பதில்களைத் தந்திருக்கிறேன்.

http://marchoflaw.blogspot.com/2008/03/blog-post_30.html

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.