நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா

ஆதவன் தீட்சண்யாவின்  'நான் ஒரு மநு விரோதன்" என்கிற அவரது நேர்காணல்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பற்றி எனக்கு வந்த அஞ்சலை பதிவுலக நண்பர்களின் பார்வைக்கு இங்கு வெளியிடுகிறேன். அப்புத்தகத்தின் அறிமுகமாக  வெளியிடப்பட்டுள்ள சிலகுறிப்புகள் தற்சமயம் நடந்துவரும் பதிவுலக விவாதங்களை ஒட்டி இருப்பதும்... யோனி, கலகக்காரி, சுஜாதா, பார்பனீயம்,சுந்தரராமசாமி போன்ற பதிவுலக ஹாட் போஸ்டிங் குறிச்சொற்கள் இதில் இருப்பதும் யதேச்சையானதே. மற்றபடி நண்பர்களிடையே நடைபெறும் காரசாரமான விவாதததிற்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை புதிர்கதைபோடும் எகிப்தின் ஸ்பிங்கஸ் மீது சத்தியமடித்து சொல்கிறேன்.
புத்தகத்திலிருந்து:

"....வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?..."
"...யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. ..."
"...சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது. இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? ..."
"... ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது...."
"..ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்..."
 
நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழாaadhavan_340
(ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள்)
தலைமை : தோழர். பிரளயன், நாடகவியலாளர்
வரவேற்க : தோழர். மினர்வா, கீற்று.காம்
வெளியிட : தோழர். வ.கீதா, ஆய்வாளர்
பெற்றிட : மரு. ஜெயராமன், அபெகா நூலகம், புதுகை
கருத்துரை : தோழர். கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
தோழர். புனித பாண்டியன், ஆசிரியர், தலித்முரசு
தோழர். பி.சம்பத், அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
ஏற்புரை : ஆதவன் தீட்சண்யா
நன்றியுரை : கா.பிரகதீஸ்வரன்

நாள் : 2008 மார்ச் 19நேரம் : மாலை 5 மணி
இடம் : தேவநேய பாவாணர் நூலக அரங்கு, சென்னை-2

வருவீரென : கீற்று.காம் (www.keetru.com) & பூபாளம் புத்தகப்பண்ணை

நண்பர்களே! அயல்தேசத்தில் இருக்கும் எங்களால்தான் முடியாது.. நீங்களாவது இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
-அன்புடன்
ஜமாலன்.

5 comments:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஜமாலன் சொன்னது…

அன்புள்ள அனானிகளுக்கு...

தங்களது கருத்தைக்ககூற உள்ள சுதந்திரத்தை நான் மறுக்கவில்லை. ஆனால், அதை பயன்படுத்தி தனிப்பட்ட நபர்கள் குறித்த தாக்குதலை தொடுக்கிறீர்கள். அது ஆரோக்கியமானது அல்ல. இது நூல் பற்றிய அறிவிப்புதான். இதில் நபர்களை தாக்குவது சரியில்லை. இங்கு குறிக்கப்பட்டவை எற்கனவே பதிவலகில் சூடாக விவாதிக்கப் பட்டவைதான்.

நபர்களை குறிக்காமல் இதில் கறிப்பிடப்பட்ட பொருள் பற்றி விவாதித்தால் நாமும் உரையாடலாம்.

அதைவிட்டுவிட்டு மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்தா?

சுந்தரவடிவேல் சொன்னது…

புத்தகம் வாங்குவதற்கான முகவரி/தொடர்பு கிடைத்தால் தாருங்களேன். நன்றி!

ஜமாலன் சொன்னது…

சுந்தரவடிவேல் said...

//புத்தகம் வாங்குவதற்கான முகவரி/தொடர்பு கிடைத்தால் தாருங்களேன். நன்றி!//

அது பூபாளம் புத்தகப்பண்ணை வெளியீடாகத்தான் இருக்கும். தற்சமயம் இல்லை. கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன்.

ஜமாலன் சொன்னது…

அன்புள்ள அனானிக்கு..

தொடரும் உங்கள் இடையீடுகளுக்காக..

ஆதவன் தீட்சண்யாவின் பேட்டி மற்றும் அவரது கதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் அவரது கதைகள் மீத எனக்கு ஆர்வம் உண்டு. பேட்டியைப் பொறுத்தவரை அவரது நிலைப்பாடுகள் அவருடையவை. உதாரணமாகக் கூறினால்,பெடடியில் அவர் நாகார்ஜீனன் பற்றி குறிப்பிட்டவற்றில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. நாகார்ஜீனன் இயக்கரீதியாக நடைமுறை செயல்பாட்டில் இருந்தவர். அவர் அவரை அறியாமல் தனது பாரம்பர்யப் பின்னனியை முன்வைப்பது என்பது தன்னுடல் பற்றிய வரலாற்றுக் கதையாடல்தான் அது. தனிப்பட்ட முறையில் நாகார்ஜினன்கூட இந்த கோணத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். காரணம் இன்றைய பேச்சில் இது போன்ற நுன்னரசியல் மெளனங்களை உடைப்பது சாதரணமாக ஆகி உள்ளது. அதுபோகட்டும்.

பேட்டிகளில் அவர் என்ன பேசுவேண்டும் என்பதை கேள்வி கேட்கும் பேட்டியாளர்தான் வரவழைக்க வேண்டும். அவராக கருத்து சொல்லமாட்டார். அவர் அப்படியே தனது அரசியல் அல்லது கட்சி நிலைப்பாட்டில் இருப்பது அவரது உரிமை. அதைப்பற்றி நாம் பேச என்ன உள்ளது?

இங்கு அவர் முன்வைத்திருக்கும் கருத்துக்கள்தான் முக்கியமானவை. அந்த கேள்விகள்?

இங்கு வெளியிட்டிருப்பது அவருக்கு உள்ள மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அல்ல. நூல் விமர்சன அறிவிப்பு. பலருக்கும் இது பார்வையில் பட்டால் நல்லது என்கிற எண்ணத்தில்தான். இது எனது தேர்வே.அதனால் அவர் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன் என்றோ அல்லது அவரது அரசியலை ஏற்றுக் கொண்டேன் என்றோ பொருளல்ல. உடன்படக்கூடிய புள்ளிகளில் நான் அவரது அரசியலில் உடன்படவே செய்கிறேன். குறிப்பாக இங்கு வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில் எனக்கு உடன்பாடு உண்டு.

நீங்கள் அக் கருத்துக்களை பற்றி பேசுங்கள், அவரைப் பற்றி வேண்டாம். அவருக்கு தெரிந்தோ அல்லது சம்மததத்துடனோ இது வெளியிடப்படவில்லை.

நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.