இடமாற்றம் அல்லது நன்றி அறிவிப்பு

வலைப்பதிவுலக நண்பர்களுக்கு...

"இடமாற்றம்" என்கிற தலைப்பில் 11-ஆம்வகுப்பில் "நீ மலர்/நான் செடி/ஏனென்றால்/இடம் மாறுவது/நீ தானே" - என்று வகுப்பு பெண்ணை மனதில் வைத்து ஒரு கவிதை எழுதி அதை நாங்களே அச்சடித்த பத்திரிக்கையில் போட்டு இறகு முளைத்த குதிரையில் ஏறி கவிஞர்களை எல்லாம் ஏளனமாகப் பார்த்து உலகை ஒரு சுற்று சுற்றி தட்டாமலை ஆடிய தலைப்பு இது. முதல்காதல் முதல்கடிதம் முதல்மணைவி முதல்தாய் முதல்அப்பா முதல்அண்ணன் முதல்முத்தம் முதல்ஜீரம் இப்படி பல முதல் (சினமாக் கவிஞர்களுக்குத்தான் தெரியும் மற்ற முதல் எல்லாம்) போல இதுவும் ஒரு முதல்கவிதை... வார்த்தை மாம்சமானது அதனால் அதனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன் இங்கு.

ஒருவாரம் தமிழ்மணத்தின் 'பால்கனி'யில் (பால்கனி பாப்பா என்றெல்லாம் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்) நின்று கொண்டு எனது முதல் அறிமுகத்தில் குறிப்பிட்டது போல நடத்திய ஜீகல்-பந்தி அல்லது கதம்பக் கச்சேரி இன்றுடன் முடிவடைகிறது. அதற்கு முதலில் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.

இந்த ஒருவாரத்தில் உற்சாகப்படுத்திய நண்பர்கள், புதிதாக வந்து பின்னொட்டமிட்டு வாழ்த்திய, படித்து விமர்சித்த நண்பர்கள், எட்டிப்பார்த்துவிட்டு நேரத்தை வீணாக்காமல் திரும்பி போனவர்கள், படித்தவிட்டு 'என்னத்த எழுத' என்று பின்னோட்டமிடாமல் போனவர்கள், மின்அஞ்சலில் வாழ்த்து சொல்லிய நண்பர்கள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.

இந்த ஒரு வாரக்காலத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. குஜராத்தில் முஸ்லி்ம்களுக்கு எதிராக நடந்த கோத்ரா கலவரம் ஒரு இனசுத்தீகரிப்பு படுகொலைகள் என அம்பலமாக்கியிருக்கிறது தெஹல்கா. வழக்கம்போல் தமிழகம் இரண்டு வார்ததைகளை மட்டும் திருத்திவிட்டு அமைதியாகி விட்டது "தீபாவளி ரிலீஸ் என்ன?" என்று. ஒன்று 'நடந்த' என்பதை 'நடத்திய' மற்றொன்று 'கலவரம்' என்பதை 'திட்டமிட்ட படுகொலை' என்பதாக. இவ்விரு வார்த்தைகளை திருத்த தெஹல்கா பத்திரிக்கை கடுமையாக ஆறு மாதங்கள் உழைத்திருப்பது அப்படியே மெளனத்தில் காற்றில் பறந்து கலந்து விட்டது. இதற்கான கண்டணத்தை தோழர் கார்கியின் மீள்பதிவு வழியாக முன்வைத்திருக்கிறேன்.

மற்றொன்று ஈழத்தில் அதிகரிக்கும் இனப்படுகொலைகள். உலக நாகரீகம் வெட்கித் தலைகுனியும் இந்த பாசிச கொடூரத்தை பதிவு மூலமாக கண்டித்திருக்கிறேன். இவை இரண்டைத் தவிர மருத்தவர் புகழேந்தியை அறிமுகப்படுத்தி எனது செயல்பாடுகள் பற்றிய குற்ற உணர்வை சமப்படுத்த முயன்றேன். அதை ஒட்டி வந்த டாக்டர் புருணோவின் அமெரிக்க மருத்துவ சோதணையை அம்பலப்படுத்த பயன்படுத்திக் கொண்டேன். நண்பர் ராமாநுஜத்தின் 'காந்தியின் உடலரசியல்" என்கிற ஒரு நல்ல நூலை அறிமுகப் படுத்தினேன். இவற்றைத் தவிர மற்றெல்லாம் வழக்கம்போல் சுய புலம்பல்கள் அல்லது பொதுப் புலம்பல்கள்தான்.

நாளைமுதல் உங்களுடன் நானும் தமிழ்மணத்தின் உள்கட்டிற்கு இடம்பெயர்கிறேன் புதிதாக வரும் நட்சத்திரத்தை வாழ்த்தி. இனி உள்கட்டில் அலையும்போது உங்களை எதிர்கொண்டு கைகுலுக்கலாம் அல்லது மோதி கீழே விழலாம்.

எனது ஜமாலன் என்கிற புனைபெயருக்கு காரணமான வலைப்பதிவின் முன்னொடியான மாலன் மின் அஞ்சலில் வாழ்த்தினார். ஆணந்த விகடனில் பணியாற்றும் அருள் எழிலனும் மின் அஞ்சலில் வாழ்த்தினார். இருவருக்கும் நன்றிகள்.

நண்பர்களின் எதிர்பார்ப்பை ஓரளவாவது பூர்த்தி செய்திருப்பேன்.. இல்லாவிட்டாலும் உங்களை விடுவதாகவும் இல்லை.

நகுலன் கவிதைப்போல...
யாரது ராமச்சந்திரனா என்றேன்..
ஆம் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கெட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்ல
.

- இனி ராமச்சந்திரன்போலத்தான் நமது அடையாளங்கள் முட்டி மோதி அலைவதைத்தவிர..

மீண்டும் ஒருமுறை அனைவருக்கம் நன்றி கூறி விக்ரமாதித்யன் கவிதையுடன் முடிக்கிறேன்.

வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்
என் மகன் தீப்பெட்டி படம் சேகரிக்கிறான்.

அவ்வளவுதான்....
அன்புடன்
ஜமாலன்.

21 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//பால்கனி பாப்பா என்றெல்லாம் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்//

ஜமாலன்.
முன்னால் சபாநாயகரை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்கள். எத்தனை பேருக்கு இதெல்லாம் நினைவு இருக்கும் ?
:)

உங்களுது நட்சத்திர இடுகைகளில் இன்னும் படிக்க வேண்டியவை இருக்கிறது. கொஞ்சம் வேலை தொல்லை. படித்துவிட்டு பின்னூட்டுகிறேன்.

வெற்றி'கரமாக' வலம் வந்ததற்கு பாராட்டுக்கள் !

பூனைக்குட்டி சொன்னது…

ஜமாலன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் உங்கள் நட்சத்திர இடுகைகளை.

நட்சத்திரமாயிருப்பதும் இல்லாமலிருப்பதுவும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை. ;)

தொடருங்கள்.

வினையூக்கி சொன்னது…

ஒவ்வொன்றும் அருமையான பதிவுகள் சார். உங்களின் அனைத்து நட்சத்திரப் பதிவுகளையும் படித்து உள்வாங்கி கொண்டேன்.

ramachandranusha(உஷா) சொன்னது…

ஜமாலன், மோகன் தாஸ் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். தீவிர வாசகர்களுக்கு இவ்வாரம் நல்ல தீனி. காந்தி மற்றும் பெண்ணீய சிந்தனைகளை குறித்த உங்கள் பதிவுகளில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இப்பொழுது கருத்துமோதல் செய்யும்
மனநிலைமை இல்லை. இன்னும் ஒரு சமயம் வாய்க்கும், பேசலாம்.
பி.கு நல்லவேளையாய், ஏகாம்பரியின் லிஸ்டை, உங்க நட்சத்திர வார பதிவுகளுக்கு முன்பே போட்டேன். இல்லை என்றால் உங்களையும் கிண்டல் அடிக்கிறேன் என்று திட்டியிருப்பீர்கள் :-)

பெயரில்லா சொன்னது…

ஜமாலன், அமைதியாக வந்து கலக்கியிருக்கிறீர்கள். ரொம்ப நாள் கழித்து நட்சத்திரப் பதிவரின் அனைத்து இடுகைகளையும் ஆர்வமாக வாசித்தேன்.

RATHNESH சொன்னது…

ஜமாலன் சார்,

//இந்த ஒருவாரத்தில் உற்சாகப்படுத்திய நண்பர்கள், புதிதாக வந்து பின்னொட்டமிட்டு வாழ்த்திய, படித்து விமர்சித்த நண்பர்கள், எட்டிப்பார்த்துவிட்டு நேரத்தை வீணாக்காமல் திரும்பி போனவர்கள், படித்தவிட்டு 'என்னத்த எழுத' என்று பின்னோட்டமிடாமல் போனவர்கள், மின்அஞ்சலில் வாழ்த்து சொல்லிய நண்பர்கள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.//

இன்னொரு பிரிவினரை விட்டு விட்டீர்கள் - பெரிய இரை விழுங்கிய மலைப்பாம்பாக ஜீரணத்திற்காக அரை மயக்கத்தில் இருக்கும் வாசகர்கள் (என்னைப் போல்)

ஜமாலன் சொன்னது…

கோவி.கண்ணன் said...

//உங்களுது நட்சத்திர இடுகைகளில் இன்னும் படிக்க வேண்டியவை இருக்கிறது. கொஞ்சம் வேலை தொல்லை. படித்துவிட்டு பின்னூட்டுகிறேன்.//

உங்கள் மேலான பின்னொட்டத்திற்காக..

//வெற்றி'கரமாக' வலம் வந்ததற்கு பாராட்டுக்கள் !//

'கரம்'கூப்பி நன்றி..

ஜமாலன் சொன்னது…

மோகன்தாஸ் said...

//ஜமாலன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் உங்கள் நட்சத்திர இடுகைகளை.//

நன்றி மோகன்தாஸ்.

//நட்சத்திரமாயிருப்பதும் இல்லாமலிருப்பதுவும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை. ;)//

உண்மைதான். உங்கள் பதிவுகள் பற்றி பிறகு ... குறிப்பாக பேபல்... ரமேஷ்-பிரேம் மற்றும் எம.ஜி.சுரேஷ்

//தொடருங்கள்.//

தொடர்வோம்...

ஜமாலன் சொன்னது…

வினையூக்கி said...

//ஒவ்வொன்றும் அருமையான பதிவுகள் சார். உங்களின் அனைத்து நட்சத்திரப் பதிவுகளையும் படித்து உள்வாங்கி கொண்டேன்.//

மகிழ்ச்சி. உள்வாங்கி கொண்டமைக்கு நன்றி..

ஜமாலன் சொன்னது…

ramachandranusha(உஷா) said...

//தீவிர வாசகர்களுக்கு இவ்வாரம் நல்ல தீனி.//

நன்றி.

//காந்தி மற்றும் பெண்ணீய சிந்தனைகளை குறித்த உங்கள் பதிவுகளில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இப்பொழுது கருத்துமோதல் செய்யும்
மனநிலைமை இல்லை. இன்னும் ஒரு சமயம் வாய்க்கும், பேசலாம்.//

காந்தி சிக்கலான ஆளுமை நிறைந்தவர்தான். பெண்ணியமும் அப்படித்தான். பேசலாம். குழப்பமே தெளிவை ஏற்படுத்தும்... காத்திருக்கிறேன். கருத்தமோதல் என்று முன்பே முடிவெடுத்த விடடீர்களா? ஆட்டோ கீட்டோ வராதே..

//பி.கு நல்லவேளையாய், ஏகாம்பரியின் லிஸ்டை, உங்க நட்சத்திர வார பதிவுகளுக்கு முன்பே போட்டேன். இல்லை என்றால் உங்களையும் கிண்டல் அடிக்கிறேன் என்று திட்டியிருப்பீர்கள் :-)//

நான் ரசித்த பதிவுகளில் ஒன்று. குறிப்பாக கூகுலில் மார்க்சியம் தேடும்.. பதிவும்கூட. நான் யாரையும் திட்டமாட்டேன். இரண்டாவது கிண்டல்களை ரசிப்பவன். என்னைக் குறித்து எனக்கு எப்பொழுதுமே உயர்வான பிம்பமோ எண்ணமோ கிடையாது. அப்பதிவு முன்னே போட்டதால் இதற்கு முன் உள்ளவர்களை கிண்டல் அடித்ததாக வாக்குமூலம் தந்து மாட்டிக் கொள்ளாதீர்கள். பதிவில் நேர் குத்தைவிட உள் குத்து தான் அதிகம். உங்கள் பதிவு பொதுவான போக்கைப்பற்றிய ஒரு விமாசனமாகவே எடுத்துக் கொள்கிறேன். அதில் உண்மையும் உண்டு. நீங்களும் ஒரு மு.ந. தானே.. தப்பில்லை.

ஜமாலன் சொன்னது…

prakash said...

//அமைதியாக வந்து கலக்கியிருக்கிறீர்கள். ரொம்ப நாள் கழித்து நட்சத்திரப் பதிவரின் அனைத்து இடுகைகளையும் ஆர்வமாக வாசித்தேன்.//

நன்றி... மகிழ்ச்சி பிரகாஷ்

ஜமாலன் சொன்னது…

RATHNESH said...

//இன்னொரு பிரிவினரை விட்டு விட்டீர்கள் - பெரிய இரை விழுங்கிய மலைப்பாம்பாக ஜீரணத்திற்காக அரை மயக்கத்தில் இருக்கும் வாசகர்கள் (என்னைப் போல்)//

இதெல்லாம் உங்களுக்கே கோஞ்சம் ஓவரா தெரியல.. நன்றி உங்களது தொடர் ஊக்கத்திற்கும் தொடர்புகளுக்கும். கர்நாடக பி.ஜே.பி. க்கு ஏன் ஆதரவு என்று உங்க பதிவிற்கு வந்த பின்னோட்டம் இடுகிறேன்.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்தும் நன்றியும்.
உங்கள் 'ஹேராம்' படம்பற்றி இடுகை என்னைக் கவர்ந்தது. இன்னும் பலவழிகளில் ஆராயப்பட வேண்டிய, பேசப்பட வேண்டிய படம்.

ஜமாலன் சொன்னது…

வசந்தன்(Vasanthan) said...

//நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்தும் நன்றியும்.//

நன்றி.

//உங்கள் 'ஹேராம்' படம்பற்றி இடுகை என்னைக் கவர்ந்தது. இன்னும் பலவழிகளில் ஆராயப்பட வேண்டிய, பேசப்பட வேண்டிய படம்.//

உண்மைதான். இதுவே.. படம் வந்த புதிதில் ஒரு நண்பருக்கு பார்த்தபின் ஏற்பட்ட ஜீரத்தில் எழுதப்பட்டது. இப்பொழுது மீண்டும் பார்த்தால் ஒருவேளை இதனை வேறுவிதமாக எழுதக்கூடும். என்னிடம் அப்படம் இல்லை என்பதால் அந்த கடிதத்தை எடிட் செய்து வெளியிட்டேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ராமச்சந்திரன் கவிதை நகுலனுடையது என்றே நினைக்கிறேன். மிகப் பிரபலமான கவிதை ஆச்சே அது.

விக்ரமாதித்யன் கவிதையில் 'தீப்பெட்டி' சேகரிக்கிறானா இல்லை 'தீப்பெட்டிப் படம்' சேகரிக்கிறானா.? இதுவும் எனக்குப் பிடித்த கவிதை.

ஜமாலன் சொன்னது…

Jyovram Sundar said...

//ராமச்சந்திரன் கவிதை நகுலனுடையது என்றே நினைக்கிறேன். மிகப் பிரபலமான கவிதை ஆச்சே அது.

விக்ரமாதித்யன் கவிதையில் 'தீப்பெட்டி' சேகரிக்கிறானா இல்லை 'தீப்பெட்டிப் படம்' சேகரிக்கிறானா.? இதுவும் எனக்குப் பிடித்த கவிதை.//

உங்களது கருத்துக்கள் சரியாக இருக்கலாம். நன்றி.

10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த கவிதைகள் இவை. நினைவிலிருந்த எழுதுவதால் தவறு இருக்கலாம். தவிரவும், என்னிடம் இந்த கவிதை நூல்களும் கைவசம் இல்லை.

நீங்கள் உங்கள் கருத்தை உறுதிப்படுத்தினால் அவற்றை திருத்திவிடுகிறேன்.

முபாரக் சொன்னது…

நீங்கள் உரையாடும் கருத்துக்களின் கனத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியிருக்கிறது. உள்ளுக்குள் காலங்காலமாய் படிந்திருக்கும் பொதுப்புத்தியை கரைக்க வேண்டியிருக்கிறது.

எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறோம்

//யாரது ராமச்சந்திரனா என்றேன்..
ஆம் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கெட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்ல.//

இது ஞானக்கூத்தன் இல்லை. நகுலன் கவிதை

ஜமாலன் சொன்னது…

முபாரக் said...

//நீங்கள் உரையாடும் கருத்துக்களின் கனத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியிருக்கிறது. உள்ளுக்குள் காலங்காலமாய் படிந்திருக்கும் பொதுப்புத்தியை கரைக்க வேண்டியிருக்கிறது.//

நன்றி முபாரக். அப்புறம் எனது தொலைபேசி எண் கிடைத்ததா? பார்க்க வருகிறேன் என்றவுடன் பயந்த விட்டீர்களோ என்று நினைத்தேன்.

//இது ஞானக்கூத்தன் இல்லை. நகுலன் கவிதை//

இதற்குமுன் வேறொரு நண்பர் இதனை குறிப்பிட்டிருந்தார். திருத்திவிட்டேன்.

மாயன் சொன்னது…

நட்சத்திரமா இருந்தா தான் நல்ல பதிவு எழுதணுமா என்ன?.. எப்பவும் கலக்குங்க..

கே.என்.சிவராமன் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜமாலன்.

நட்சத்திர பதிவர்கள் அனைவருமே அந்தந்த வாரத்தை சிறப்பான முறையில் நிரப்பியிருக்கிறார்கள். அந்தவகையில் உங்களது வாரமும் நிறைவாக இருந்தது. 'இதெல்லாம் உங்களுக்கு புரியாது...' என்ற ஆணவம் இல்லாமல், 'இதுதான் விஷயம். இப்படியும் யோசிக்கலாம். இந்தவகைலதான் நான் உரையாடறேன்... நீங்க என்ன நினைக்கறீங்க...' என்ற நட்புடன் அனைத்துப் பதிவையும் எழுதினீர்கள், எழுதுகிறீர்கள், எழுதுவீர்கள். உங்கள் பலம் இதுதான். உங்கள் தொடர் பயணத்தில், சகபயணியாக அதனால்தான் எல்லோராலும் பயணிக்க முடிகிறது.

உங்கள் பதிவுகள் அனைத்துமே நட்சத்திரங்கள்தான் என்னும்போது இந்த 7 நாட்களின் பதிவுகளை மட்டும் குறிப்பிட்டு சொல்ல மனம் இடம்தரவில்லை.

தொடர்ந்து உரையாடுங்கள் ஜமாலன்.

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரன் said...

//உங்கள் தொடர் பயணத்தில், சகபயணியாக அதனால்தான் எல்லோராலும் பயணிக்க முடிகிறது.//

உங்கள் புரிதலுக்கு நன்றி.

//உங்கள் பதிவுகள் அனைத்துமே நட்சத்திரங்கள்தான் என்னும்போது இந்த 7 நாட்களின் பதிவுகளை மட்டும் குறிப்பிட்டு சொல்ல மனம் இடம்தரவில்லை.//

இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்..

//தொடர்ந்து உரையாடுங்கள்//

உரையாடுவோம்

உங்களது தொடர் ஊக்கத்திற்கும் வாசிப்பிற்கு பிறகான கருத்துகளுக்கும் நன்றி...

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.