டவுசர் கிழியும் டாலர் அரசியல் - 2

நண்பர்களுக்கு எனது முந்தைய பதிவான டவுசர் கிழியும் டாலர் அரசியலும் குப்பை கூட்டுபவர்களும் -அமேரிக்க பொருளாதார நெருக்கடி. யின் நோக்கம் பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு பயனுள்ள விவாதமாக தொடர வேண்டும் என்பதே.  ஆனால், வழக்கம்போல் பின்னொட்டங்கள் தனிமனிதப் பிரச்சனை மற்றும் மார்க்சிய. எதிர்-மார்க்சிய கருத்தாக்கங்கள் பற்றியதாக மாறிச் செல்கிறது. மார்க்சியம்-எதிர்மார்க்சிய உரையாடல் நடத்தப்பட வேண்டிய தளம் வேறு. தவிரவும் இத்தகைய உரையாடல்கள் உலக அளவில் நடந்துகொண்டிருப்பவை. அவற்றை நடத்த விரும்பும் நண்பர்கள் ஆதாரத்துடன் மூலக்கட்டுரைகளையும் அல்லது தங்களது சுயமான புரிதல்களையும், கருத்துக்களையும் முன்வைப்பதன் மூலமே பயனுள்ள வகையில் இதனை புரிந்து எடுத்துச் செல்லமுடியும். தனிமனித தாக்குதல் இல்லாமல் முன்-அனுமானங்கள், காழ்ப்புணர்சிகள் இல்லாமல் ஆரோக்கியமான உரையாடலாக அவை அமையவேண்டும். இந்த இதழ் உயிரோசையில் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இந்திராபார்த்த சாரதி  கார்ல்மார்க்ஸும் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியும் என்று தனது பார்வையை முன்வைத்துள்ளார். அதில் முக்கியப்படுத்தும் மார்க்சிய நிலைப்பாடு என்பது முதலாளியம் தனது உள் நெருக்கடிகளால் சிதைவை சந்திக்கும் என்பதை இன்றைய பொருளாதார நெருக்கடி முன்கொண்டு வந்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 

மார்க்சின் உபரிமதிப்பு பற்றியக் கொட்பாடு விஞ்ஞானபுர்வமற்றது என்று சொல்லும் நண்பர் அதியமான் அதற்கான ஆதாரங்களையும் தனது சிந்தனைகளையும் தமிழில் முன்வைத்தால் பரவலாகப் புரிந்துகொள்ள ஏதுவாகும். மார்க்சியத்தை சகலோரோக நிவாரணியாகக் கான்பதும், மார்க்சியம் காலாவதி அடைந்துவிட்டது என்பதும் அடிப்படையில் சாரம்சவாத தன்மைக்கொண்ட பார்வைகள்தான். இவை இரண்டுமே மார்க்சிய வார்த்தையில் கூறினால் இயங்கியலை மறுப்பவை. சமூக வளர்ச்சிக்கு கேடானவை. மார்க்சியம் என்பது சமூகவளர்ச்சிக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஒரு இயங்கியல் பார்வையைக் கொண்டது. அப்படி இது இயங்குவதால்தான் இன்றுவரை உயிர்ப்புள்ள ஒரு சிந்தனைமுறையாக உள்ளது. 

உரையாடலில் பங்குபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

ஜமாலன்.

டவுசர் கிழியும் டாலர் அரசியலும் குப்பை கூட்டுபவர்களும் -அமேரிக்க பொருளாதார நெருக்கடி.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி எப்படி உலகை பாதிக்கிறது என்பதற்கான அடிப்படையான சில பார்வைகள் இதில் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக டாலர் பொருளாதராம் மற்றும் எண்ணெய் பொருளாதாரம் போன்ற சொற்றொடர்களின் பொருள் என்ன? என்பதை எளிமையாக இது விளக்குகிறது. டாலர் எப்படி உலகப் பணமாக மாறியது என்பதை விளக்ககிறது இக்கட்டுரை. இதில் உள்ள குறிப்புகளின் சுட்டிகளும் மேலதிக வாசிப்பிற்காக தரப்பட்டுள்ளன. உயிர்மை அக்டோபர் 2008 இதழில் வெளிவந்த இக்கட்டுரை இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. இத்துடன் புதிய ஜனநாயகத்தில் வெளிவந்து தோழர் வினவு அவர்களின் பதிவில் வெளியிடப்பட்டள்ள அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது! என்கிற கட்டுரையும் இணைத்து வாசித்தால் பிரச்சனைகளை ஒரளவுப் புரிந்துகொள்ள முடியும். கட்டுரையாளர்கள் மாயா, வினவு மற்றும் புதிய கலாச்சாரம், உயிர்மை-க்கும் நன்றி.

சென்னையிலுள்ள பன்னாட்டு ஐ.டி அலுவலகங்களில் தரையைத் துடைப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது, பூச்செடிகள் முதலிய அலங்காரப் பொருட்களைப் பராமரிப்பது என அடிமட்ட வேலைகளைச் செய்து வரும் பலருக்குத் திடீரென வேலை பறிபோகத் தொடங்கியிருக்கிறது. செலவைக் குறைக்கும் திட்டங்களில் ஒரு பகுதியாக house keeping என்று சொல்லப்படும் இத்தகைய வேலைகளுக்கான ஒதுக்கீட்டைப் பல நிறுவனங்கள் குறைக்கத் தொடங்கியிருப்பதால் பல ஐ.டி மென்பொருள் வல்லுனர்கள் வரிசையில் இவர்களும் தெருவில் நிற்கிறார்கள். அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்துவரும் நிறுவனங்கள், அமெரிக்க projectகளை நம்பியிருக்கும் ஐ.டி நிறுவனங்கள் எனப் பல துறைகளில் உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை இந்தப் பாதிப்பு தெரிகிறது. என்ன வினோதம் என்றால் எங்கோ ஒரு கண் காணாத தேசத்தில் (அமெரிக்கா) ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் சென்னையில் தரையைத் துடைக்கும் வேலை வரை பாதிக்கிறது. இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவில் ஆரம்பித்துள்ள பொருளாதாரச் சரிவு உலகின் பல நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்து வருகிறது.

அமெரிக்காவில் பல மாபெரும் நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன. திருப்பிக் கொடுக்கும் சக்தியை மீறி எக்கச்சக்கமான கடன்கள் கொடுக்கப்பட்டதால் வராக் கடன்கள், கடன் கட்டாமல் விட்டவர்கள் விகிதம் பெரிதும் அதிகமாகிவிட்டது. இன்னொரு பக்கம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது அமெரிக்கர்களுக்கே நம்பிக்கை இல்லாததால் செலவைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் பொருட்கள், சேவைகளுக்கான தேவை குறைகிறது. உற்பத்தி குறைகிறது. வேலை இழப்பு ஏற்படுகிறது. முதலீட்டாளர்களும் பங்கு வர்த்தகத்தின் அளவைக் குறைப்பதால் அதன் புள்ளிகளும் சரிகிறது. எல்லா நாடுகளிலும் 6-10 வருடங்களுக்கு ஒரு முறை வரும் தற்காலிகப் பொருளாதார வீழ்ச்சியைத்தான் அமெரிக்காவும் இப்போது சந்திக்கிறது. உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்ட இன்றைய யுகத்தில் ஒரு நாட்டின் வீழ்ச்சி மற்றொரு நாட்டை பாதிப்பது சாத்தியம்தான் என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது தெரியும். அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை பிரதானமாகக் கொண்டிருக்கும் நாடுகள் அந்நாட்டின் வீழ்ச்சியால் பாதிக்கப்படுவதில் என்ன ஆச்சரியம் என்றுகூடப் பலரும் கேட்கக்கூடும். ஆனால் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா ஆடி வரும் சித்து வேலைகள் பற்றி அறிந்தால் பிரச்சினை அவ்வளவு மேலோட்டமானது அல்ல என்று உங்களுக்குப் புரியும்.

அமெரிக்காவின் பொருளாதார சித்து விளையாட்டு இரண்டாம் உலகப் போருக்கு முன்பே தொடங்குகிறது. போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு (ஆரம்பத்தில் அமெரிக்கா நேரடியாகக் களத்தில் இறங்காதது தெரிந்ததே) ராணுவத் தள வாடங்கள், உணவுப் பொருட்களை வினியோகம் செய்த அமெரிக்கா அதற்கான விலையை, பணமாக அல்லாமல் தங்கமாகக் கோரியது. அதனால் 1945 வாக்கில் உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 80 சதவீதம் அமெரிக்காவின் வசம் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் ராணுவ வல்லரசாக உருவெடுத்த அமெரிக்கா பொருளாதார வல்லரசாகவும் உருவாக இது உதவியது. கரன்சிக்கு மதிப்பில்லாது போகும் சமயங்களில் தங்கம்தான் சரியான மாற்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெரிந்த விஷயம்தான். அந்த தைரியத்தில் அதற்கடுத்த 10-20 வருடங்கள் அமெரிக்கா கணக்கற்ற டாலர் கரன்சிகளை அச்சிட்டு உலகெங்கும் பரப்பியது. அமெரிக்காவின் டாலர் தங்கத்தைவிடப் பாதுகாப்பானது என்ற பிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. பிற நாடுகளின் அன்னியச் செலாவணி கையிருப்பு டாலர்களால் நிரப்பப்பட்டது. எனினும் 1971ல் முதல் சவாலை எதிர் கொண்டது அமெரிக்கா. பல நாடுகள் ஒரே சமயத்தில் தங்களிடமிருந்த டாலர் கையிருப்பை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டு, அதற்கு இணையான மதிப்புள்ள தங்கத்தைக் கோரின. அவ்வளவு கரன்சி கையிருப்பு ஒரு நாட்டில் குவிந்தால் அது பண வீக்கத்திற்கு வித்திடும் என கருதப்படுகிறது. இந்தப் பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்று யோசித்த அமெரிக்கர்களின் கிரிமினல் மூளையில் உதித்ததுதான் எண்ணெய் அரசியல்.

1970களில் புதிதாக எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட வளைகுடா நாடுகளை அமெரிக்கா தன் கைக்குள் போட்டுக்கொள்ளத் தொடங்கியது. கச்சா எண்ணெயை டாலர் கரன்சியில் விற்கப்படுவதை உறுதி செய்தது. இதற்காக எண்ணெய் வர்த்தக கரன்சி பரிமாற்றத்திற்கு லண்டனிலும் நியூயார்க்கிலும் மையங்கள் அமைக்கப்பட்டன. இரண்டையும் இன்று வரை அமெரிக்கர்கள்தான் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் அத்தியாவசியத் தேவையாகிவிட்ட எண்ணெயை வாங்க டாலர் தேவை என்பதால் அன்னிய செலாவணி கஜானாவை எல்லா உலக நாடுகளும் டாலர்களால் நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் உள்நாட்டுப் பணவீக்கம் பற்றிய கவலை இல்லாமல் அமெரிக்கா டாலர் கற்றைகளை அச்சிட்டு உலகெங்கும் உலவவிட்டிருக்கிறது. அதிக கரன்சியை அச்சிட்டுப் புழக்கத்தில் விட்டால் பண வீக்கம் அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால் அமெரிக்கா அச்சிட்ட டாலர்களை எண்ணெய் வாங்குவதற்காக வெளிநாடுகள் தங்கள் கஜானாக்களில் அடுக்கி வைத்ததால் அமெரிக்காவுக்குப் பொருளாதார சிக்கல் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதாவது உலக நாடுகளின் முதுகில் ஏறி அமெரிக்கர்கள் சுகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்த சுகமான வாழ்க்கையைக் கெடுக்க நடந்த எந்த முயற்சியையும் அமெரிக்கர்கள் அனுமதித்ததில்லை.

ஜனநாயகத்திற்கு இடம் கொடுக்காத வளைகுடா மன்னராட்சிகளுக்கு அமெரிக்கா அடியாள் போல இருப்பது ஏன் என இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர்கள் உதவியுடன்தானே டாலர்களை உலகெங்கும் பரப்ப முடியும். எனினும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கு ஈராக்கின் சதாம் உசேன் வடிவில் முதல் சவால் வந்தது. அமெரிக்கா தங்கள் மீது குதிரைச் சவாரி செய்வதில் கடுப்படைந்திருந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் முன்முயற்சியில் யூரோ என்ற கரன்சி உருவான தருணம் அது. அமெரிக்காவின் அடிமைகளான வளைகுடாவின் ஓபெக் (எண்ணெய் ஏற்றுமதி) நாடுகளின் விதியை மீறி எண்ணெய் வர்த்தகத்தை யூரோ கரன்சியில் ஆரம்பித்தார் சதாம் உசேன். 2002ல் தனது கஜானாவிலிருந்த அத்தனை அமெரிக்க டாலர்களையும் ஈராக் தீர்த்துவிட்டிருந்தது. 2001 செப்டம்பர் 11 தாக்குதலையடுத்து ஆப்கானிஸ்தானைத் தாக்கிய அமெரிக்கா, இந்தத் தருணத்தில்தான் ஈராக் மீது படையெடுத்தது. பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன, வேதியியல் ஆயுதங்கள் இருக்கின்றன என்று ஐ.நாவை வைத்து பாவ்லா காட்டி போர் தொடுத்த அமெரிக்கா ஈராக்கில் குண்டு வீசாத ஒரே அரசுக் கட்டிடம் எது தெரியுமா? எண்ணெய் அமைச்சகக் கட்டிடம். நாட்டைக் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா செய்த முதல் காரியம் எண்ணெய்க் கிணறுகளை சீர் செய்து, பிறகு எண்ணெய் வர்த்தகத்தை டாலர் கரன்சியில் தொடங்கியதுதான்.

அமெரிக்காவின் எண்ணெய் ஏமாற்று வேலைக்கு அடுத்த சவால் விடுத்தது வெனிசுலா. 2003 ஆரம்பத்தில் தனது எண்ணெய் வளத்தின் பாதியை யூரோவில் விற்கப் போவதாக அதன் அதிபர் யூகோ சாவெஸ் அறிவித்தார் (மீதிப் பாதியை அமெரிக்கா வாங்கி வந்தது). அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க ஆதரவு தொழிலதிபர்கள் சிலர், ராணுவ ஜெனரல்கள் சேர்ந்து யூகோ சாவெஸ்ஸைக் கடத்தி, ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்கள். ஆனால் வெகுஜன ஆதரவால் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இப்போது ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது என்று அமெரிக்கா ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறதே? அவர்கள் உள்ளூர பயப்படும் அணுகுண்டு எண்ணெய் வர்த்தகம்தான். லண்டன், நியூயார்க்கில் உள்ளது போன்ற எண்ணெய் விற்பனை மையம் அமைத்துள்ள ஈரான், தனது வர்த்தகத்தை யூரோ கரன்சியில் நடத்த எந்த நாடும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. எண்ணெயை டாலரில் வாங்காமல் யூரோவில் வாங்குவதால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கலாம். அமெரிக்கா இவ்வளவு காலம் செய்த சித்து வேலைகள்தான் அவர்களையே இப்போது வாட்டத் தொடங்கியிருக்கிறது.

எண்ணெய் வர்த்தகம் மூலம் அமெரிக்க டாலருக்கான தேவை உலகச் சந்தையில் செயற்கையாக ஊதப்பட்டது. டாலரை ஸ்திரப்படுத்துவதற்காக அவ்வப்போது future trading மூலம் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் உண்டாக்கப்பட்டன. இன்றைய பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கூட இதன் பாதிப்பில் ஒரு பகுதிதான். எண்ணெய் விலை அதிகமானால் அதிக டாலர் கொடுத்து அதை வாங்க நேரும். அது டாலருக்கான தேவையை அதிகரிக்கும். இப்போது அதை வைத்தே உலக நாடுகள் அமெரிக்காவை திருப்பி அடிக்க முடியும். எண்ணெய் வாங்க டாலர் தேவை என்பதைப் பயன்படுத்தித்தானே இத்தனை சித்து விளையாட்டுகளை நடத்தியது? இப்போது எண்ணெய்யை யூரோவில் வாங்க முடிகிற போது எனது கஜானாவை அடைத்துக்கொண்டிருக்கும் டாலரை வைத்து என்ன பயன் என்று உலக நாடுகள் டாலரைத் திரும்பக் கொடுத்துவிட்டு தங்கள் நாட்டு கரன்சியையோ தங்கத்தையோ கோரினால் அமெரிக்கா ஆடிப் போய்விடும். அமெரிக்கா அல்லாத நாடுகளிலுள்ள அன்னியச் செலாவணி முதலிய இருப்புக்களில் 66 சதவீதம் டாலர்களாக இருக்கிறது. அதில் ஐந்து சதவீதத்தைத் திருப்பிக் கொடுத்தால்கூட அமெரிக்கா ஓட்டாண்டியாகிவிடும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் இந்தியாவின் செங்கல் சூளைகளிலும் அரிசி ஆலைகளிலும் கொத் தடிமைகளாக வேலை பார்க்கும் தொழிலாளர்கள் போல அமெரிக்கர்கள் உழைத்து ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியையும் ஏற்று மதியையும் அதிகரித்தால்தான் மீள முடியும். ஆனால் இவ்வளவு காலம் சுகமாக வாழ்ந்துவிட்ட அமெரிக்கர்கள் அதைச் செய்வார்களா எனத் தெரியவில்லை. முற்றிலும் புதிய அமெரிக்க கரன்சியை அச்சிடுவது மற்றொரு வாய்ப்பு. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கஜானாக்களில் உள்ள அத்தனை பில்லியன்கணக்கான கரன்சியும் ஓரிரவில் வெற்றுக் காகிதங்களாகி விடும். அதைச் செய்ய அமெரிக்கா தயாராக இருக்குமா எனத் தெரியவில்லை. இன்னொன்றும் நடக்கலாம், உலகமே சேர்ந்து டாலர்களைத் திருப்பிக் கொடுக்கும்போது உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டு அமெரிக்கா நாசமாகிவிடக்கூடும். ஆனால் பொருளாதாரத்தில் சில காலம் முன்பே வலுவிழந்துவிட்டாலும் இன்னமும் வலுவான ராணுவத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்கா அத்தகைய ஒரு வாய்ப்பைத் தடுக்கத்தான் தீவிரமாக முயன்று வருகிறது. தனது எண்ணெய்ச் சூழ்ச்சியின் வீழ்ச்சி மூலம் தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க அமெரிக்கா தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தக்கூடும். அதன் ஒரு பகுதிதான் ஈரான் மீதான போர் அறைகூவல்கள்.

ஆனால் அமெரிக்காவுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானதாக இருக்கின்றன. ஏற்கனவே ஈராக்கிலுள்ள உள்நாட்டுக் கலகத்தையே சமாளிக்க முடியாத அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் தொடுப்பது சிரமமான காரியம். அவ்வாறு போர் தொடுத்தால் ஈராக்கில் உள்ள ஷியா பிரிவினர் ஈரானுக்கு ஆதரவாகத் திரும்பக்கூடும். அதை சமாளிக்கத்தானோ என்னவோ ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவினரிடையே பெரும் பிளவை ஊக்குவிக்கிறது அமெரிக்கா. இன்னொரு வழியையும் அமெரிக்கா கையாளக்கூடும். மற்றொரு கதையைப் புனைந்து மீண்டும் ஒரு உலகப் போரை உருவாக்கி, அமெரிக்கா இப்போது தனக்கு எதிராகச் செயல்படும் கூட்டணி நாடுகளைத் தன் பக்கம் இழுக்கக்கூடும். அதன் மூலம் தனது பக்கத்தில் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள நினைக்கும். அமெரிக்கா இதுவரை கட்டிவிட்ட கலாச்சார மோதல், இஸ்லாம், பேரழிவு ஆயுதங்கள் போன்ற கதைகளை அத்தகைய ஒரு தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் சுயசார்பு அடையாததால் ஒவ்வொரு முறை அமெரிக்கா பாதிப்புகளைச் சந்திக்கும் போதும் கூடவே சேர்ந்து இழுபடுகிறது. எப்படியிருந்தாலும் தான் உலங்கெங்கும் விதைத்த டாலர்கள், அநியாயங்களின் பலனை அமெரிக்கா அடைந்தாகத்தான் வேண்டும். ஆனால் அதன் வீழ்ச்சியுடன் அமெரிக்கா, பூவுலகத்தையும் வீழ்ச்சியடைச் செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பதில் இவ்வுலகின் எழுச்சி பெற்று வரும் சக்திகளான சீனா, இந்தியா ஆகியவற்றின் ராஜதந்திரத்திற்கு முக்கிய பங்கிருக்கிறது.

ஆதாரம்

1. The Proposed Iranian Oil Bourse By Krassimir Petrov
2. U.S. Dollar vs. the Euro: Another Reason for the Invasion of Iraq  by William R. Clark
3. Iran’s New Oil Trade System Challenges U.S. Currency  by William R. Clark
4. Petro Dollar Warfare by William R. Clark

*நன்றி உயிர்மை.

மேற்கண்ட சுட்டிகள் அந்நூல்கள் மற்றும் அது தொடர்பான கட்டுரைகள். (சுட்டிகள் என்னால் தரப்பட்டவை. கட்டுரையாளர் குறிப்பிடுவது அந்நூல்களை.) நூல் அறிமுகம் இங்கு.  நூல் கூகுல் புக்செல்ஃப்பில் வாசிக்கலாம் இங்கு.  மேலும் அறிய... வில்லியம் கிளர்க்கின் Peak Oil, Petrocurrencies, and the Emerging Multi-Polar World பார்க்கலாம்.

தோழர் வினவு பதிவில் அமேரிக்காவின் இந்த நெருக்கடிக்கான சூழல் உருவான விதம் விபரமாக விளக்கப்பட்டுள்ளது. அமேரிக்க டவுசர் கிழிந்த அந்த வரலாற்றையும் அவசியம் படியுங்கள்.

விடியல் பதிப்பக வெளியீடா வந்துள்ள ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற ஜான் பெர்கின்ஸின் நூலில் சவுதி மற்றும் வளைகுடா நாடுகள் எப்படி? அமேரிக்காவின் சார்பு நாடுகளாக ஆக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்ககிறது 2 அத்தியாயங்கள். பெட்ரோ - டாலர் கட்டமைப்பு எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்வதற்கான நூல் இது. இந்நூல் குறித்து தனிப்பதிவு எழதும்போது விரிவாக இது பேசப்படும. ஜான்பெர்கின்ஸ் மற்றொரு நூல் பற்றி ஆங்கிலத்தில் படிக்கலாம் இங்கு.

- மீள்பதிவும் குறிப்பும் ஜமாலன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.