கவிதையின் மயிலாட்டம் அல்லது உரையின் அர்த்தப் பகடைகள்

Perundevi wrapper 1 சொற்பானைகளின் அர்த்தத்தை

காலப்பூனை கவிழ்த்துக் கொட்டிவிட்டது.

- பெருந்தேவி

 

 

பெருந்தேவியின் இத்தொகுப்பை வாசித்தபின் தமிழில் கவிதையாக அறியப்பட்டவற்றை மீளாய்வு செய்வதற்கான சில கேள்விகள் தோன்றின. கவிதை என்றால் என்ன என்பது அதில் ஒரு ஆதாரமான கேள்வி. அதனால் கவிதை பற்றிய புரிதலை இங்கு ஒழுங்குபடுத்திக்கொள்வது அவசியம். கவிதை என்பது ஒருவகை உள்-மொழி; மொழிக்குள் இயங்கும் மொழி என்பது எனது அடிப்படை எடுகோள். இந்த எடுகோளை கொஞ்சம் விளங்கிக்கொள்ள முயலலாம். மொழியில் ஒரு பொருள் சார்ந்து நிற்கும் சொற்களை உணர்வேற்றம் செய்து, புதிய அர்த்தங்களை உணரச் செய்வது இலக்கியத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று என்று கொண்டோமானால், சொல்லின் உணர்வுசார்ந்த தளத்தை விரிவுபடுத்துவது கவிதையின் செயலாக உள்ளது. இன்று நாம் உணரும் காதல், அச்சம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்த படிமங்களின், சொற்சேர்க்கைகளின் வாயிலாகக் குறிப்பிட்ட உணர்வுத் தொகுதிகளின் ஆழ்படிமங்களாக நம்முள் இறக்கியதில் கவிதையின் பங்கு முக்கியமானது. மற்ற உரைசார்ந்த புனைவுகள்கூடக் கவிதையால் உருவமைக்கப்பட்ட வார்த்தைகளில்தான் மேலதிக அனுபவங்களை வாசிப்பவரிடத்தில் படியவிடுகின்றன. காரணம் கவிதைக்கு அடிப்படையாக இருப்பது கவித்துவம். அது மட்டுமல்லாமல், பொதுவாகப் புனைவிலக்கியத்தின் அடிப்படை அழகியல் அளவீடாக இருப்பதும் கவித்துவமே. சிறுகதை, நாவல் போன்ற புனைவு தரும் அழகியல் உணர்வை நாம் கவித்துவத்தாலேயே அளவிடுகிறோம். இதிலிருந்து விரித்து மொழி எங்கெல்லாம் கவித்துவமாக வெளிப்படுகிறதோ அதைக் கவிதை எனச் சொல்லலாம். ஆகவே கவிதை என்பது வடிவ ஒழுங்கு மட்டும் அல்ல ஒரு வெளிப்பாட்டு நிலைகூட. அதாவது கவித்துவம் முழுக்க வெளிப்பட்டு நிற்கும் நிலை என்றாகிறது.

அடுத்து எழும் கேள்வி: கவித்துவம் என்று எதைச் சொல்கிறோம்? இக்கேள்வி கடவுள் என்றால் என்ன என்னும் கேள்வியைவிடச் சிக்கலானது. காரணம், கவித்துவம் என்பது ஒருவகையான உணர்தலாக உள்ளது. உணர்தல் புலன்சார்ந்த அனுபவமாக உள்ளது. ஆக, புலனுணர்வை பயிற்றுவிக்கும் ஒருவகை மொழிதலைக் கவித்துவம் எனக் கொள்ளலாம். பழகிய சொல்லை அல்லது நிகழ்வை முற்றிலும் புதியதொரு உணர்தலாக அல்லது புலன் அனுபவமாகக் கவிதை மாற்றிவிடுகிறது. இந்த மாற்றத்தை உணரும் வாசிப்பாளனின் புலன்கள் அந்த அனுபவத்தை அழகியலாக தனக்குள் பதித்துக்கொள்ளும் நிகழ்வையே கவித்துவம் என்கிறேன். கவிதைக்குள் வரும் ஒவ்வொரு சொல்லும் கவித்துவக் குறித்தலாக இயங்குவதே கவிதையின் அடிப்படைப் பண்பு. இவ்வாறாக வாசிப்பின் முதற்படியில் அர்த்தமாவதைவிட உணரப்படுவதற்கான சாத்தியத்தைக் கவிதை அதிகமாகக் கொண்டிருக்கிறது. உணர்தல் அறிதலுக்கு முன்பான வினை. இந்த வினைதான் கவிதையை மொழிக்குள் உருவாகிவரும் ஒரு மொழியாக மாற்றுகிறது. இந்த மொழியைத் தனக்கும் மற்றவருக்குமான புரிதலாக அதாவது புழங்குமொழியாக மாற்றுவதற்கான முயற்சியே கவிதைக்கான உரைவிளக்கமாகவும் விமர்சனமாகவும் அமைகிறது.

கவிதையின் மேற்சொன்ன புரிதலோடு இன்று தமிழில் கவிதை என எழுதப்படும் பெருவாரியான பிரதிகளை வாசித்தால், அயர்ச்சியே ஏற்படுகிறது. காரணம், மிகவும் பழக்கமான அனுபவங்களையே இயற்கை சார்ந்த கற்பனார்த்தம் நிறைந்த புனைவுகளாக அவை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. வார்த்தைகளின் ‘சூளைச்செங்கற் குவியலாக’ பெரும்பாலான கவிதைகள் உள்ளன. சொற்கட்டு என்பது அறவே இல்லை. நவீன வாழ்வு ஏற்படுத்தியிருக்கும் அந்நியத்தன்மை, பொருட்சார் பண்பாடு, அழகியல், சுவை ஆகியவற்றில் உருவாகியுள்ள ஒருவிதமான ஒட்டுதலின்மை, வாழ்வில், உணர்வுகளில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம் போன்றவற்றைப் பேசும் கவிதைகள் குறைவே. வார்த்தைகளை வாரியிறைத்து உணர்வுகளை மொண்ணையாக வெளிப்படுத்தும் மிகைநவிற்சி சார்ந்த உணர்வுகளோ அல்லது இயல்புநவிற்சி சார்ந்த வர்ணனைகளோ கவிதையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மேலும் தமிழ்க் கவிதையுலகின் தொண்ணூறு சதமானத்தைக் கைப்பற்றி கோலோச்சுபவை காதல் சார்ந்த மிகைநவிற்சிக் கவிதைகள் அல்லது காமத்தின் அதீதத்தை அல்லது காம ஒடுக்குதலை உரைக்கும் உடல், கூடல், ஊடல், சாடல் கவிதைகள். அந்நியத்தன்மையின், அலுப்பின், ஒவ்வாமையின், ஒட்டாமையின் நகல்களைப் பெருக்கும் நவீன வாழ்வை இன்றைய கவிதைகள் நுட்பமாகக் கவனிப்பதாகக் தெரியவில்லை. பண்டைய காதலும் தமிழ் சினிமா பேசிப் பேசி அலுத்த காதலும் அல்லது வேறொரு தளத்தில் உடல் கிளர்ந்த வெளிப்படைக் காமமுமே அதிகம் தமிழில் பேசப்படுகின்றன. இவற்றிலிருந்து விலகிச் சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல்-போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக்காட்டி வாசிப்பாளரை ஏற்க வைப்பதையோ இக்கவிதைகள் செய்யவில்லை. உடன்பாட்டுநிலையில் இல்லாமல் கொடுக்கப்பட்ட ‘உண்மைகளாக’ நம்பப்படுவனவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்துவதாக அமைந்திருக்கின்றன என்பதே இக்கவிதைகளின் முக்கியத்துவம். வாசிப்பாளனின் தன்னடையாளத்தை விமர்சிப்பதாக, அவன் உணர்வுகளை எள்ளலுக்கு உட்படுத்துவதாக உள்ளன இக்கவிதைகள். அதாவது, தினசரி புழங்கக்கூடிய சொற்களின் மற்றும் பொருட்களின் மீது இருத்தப்பட்டுள்ள உணர்வைச் சிதைத்து மாற்றுபவையாக இவை உள்ளன.

இவ்வுணர்வு மாற்றத்தை அறிய இத்தொகுப்பில் அமைந்த கவிதைகளை வாசித்துப் பார்க்கலாம். இக்கவிதைகளின் களன்களாக மூன்று முக்கியப் புலன்-வெளிகள் அமைந்துள்ளன. 1.இன்றைய இளந்தலைமுறைகளின் வாழ்களமாக உள்ள நவீனத் தொழில்நுட்ப-இணையப் புலன்வெளி. 2. காலம் தாண்டியதாக உணரப்படும் வன்முறை, ஏக்கம், பிரிவு, துயரம், கனவு போன்றவை இன்றைய சூழலில் இயக்கம் கொள்ளும் யதார்த்தப் புலன்வெளி. 3. பாலினங்களாக வாழும் உடல்கள் பற்றிய நவீன வாழ்வு கட்டமைத்துள்ள உடலியக்கப்-புலன்வெளி. இம்மூன்று பகுதிகளும் மூன்று தலைப்புகளின் கீழ் வாசிப்பின் வசதிக்காக பிரித்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

முதல் பகுதியான உலோகருசி என்னும் தலைப்பின் கீழுள்ள கவிதைகள் மீ-யதார்த்தக் கூறுகளைக் கொண்ட இன்றைய நவீன வாழ்வு குறித்தவை. உள்ளார்ந்து இவை நவீனத்துவத்தின் மீதான எள்ளல் கொண்டவையாக, நவீன வாழ்வின் அபத்தம் ஏற்படுத்தும் அவலத்தை அதன் வலியுடன் சொல்லிச் செல்வதாக அமைகின்றன. வாசித்தலில் இவை ஏற்படுத்தும் உணர்வு பழகிய அனுபவங்களை முற்றிலும் புதிதான உணர்தலுக்குள் நகர்த்திவிடுகிறது. முக்கியமாகத் தொழில்நுட்ப-இணையப் புலன்வெளியால் எண்மயப்படுத்தப்பட்ட வாழ்க்கை அதன் நகல்தன்மையோடு கவிதைகளில் முன்வைக்கப்படுகிறது. தொலைக்காட்சிகள், விளம்பரங்கள், தெருவில் உள்ள மெகா சைஸ் டிஜிட்டல் போஸ்டர்கள், இணையம் உருவாக்கும் காட்சிகள், வெப்காம், அரட்டை அறைகள், அவை உருவாக்கியுள்ள சங்கேத மொழிகள், மொபைல் போன்கள், குறுஞ்செய்திகள் எனத் தொழில்நுட்பப் பிரதிகளாகப் பெருக்கப்படும் நவீன வாழ்வில் பங்குகொள்ளும் உடல்கள் ஒளிர்திரை நீலச்சுடர் பிம்பங்களாகக் கவிதைகளில் விரிகின்றன.

தன்னை முழுமையாகக் காட்சிப்படுத்திக்கொள்வதன் வழியாக உருவாகும் புலனின்பம் என்பதே நவீனத்துவ வாழ்வின் அடிப்படை. இது ஒருவகையான பிறழ்ச்சியும்கூட. இப்பிறழ்ச்சியால், புலன்கள் தற்கொலையைக்கூட எவ்வித ஒட்டுதலுமற்றுக் காட்சித் திரைப் பிம்பமாக உணரும் வண்ணமே கட்டப்படுகின்றன. காதல் என்பது இணையத் தொடர்பு எனும் பிராட்-பாண்டுக்குள் (அகலப்பட்டைக்குள்) அலைபாய்கிறது அல்லது சிக்கிப் பெருகுகிறது. ‘ஆறோடி நனைக்கும்’ அரட்டை அரங்கில் உடல் என்பது பிம்பங்களின் ஒளிர்திரைக்குள் மாட்டிக்கொள்கிறது. விளம்பரப்பலகைக்கு உள்ளேயே கொக்கோகோலா ஆடி விழுந்துவிடுவதை மோனித்துப் பார்க்கும் புலனாகக் கண்கள் மாறிவிடுகின்றன. லாப்டாப் - களில் வாழும் வாழ்க்கை தனது இறுகின கால்களுக்குள் நசுங்கிவிடும் கிளிக்குஞ்சுகளாகக் காயடித்து விரட்ட, இரண்டு வருடங்களுக்குப் பின் நடக்கப்போகும் காதணிவிழா பூந்தித்துகள் நாவில் இனிக்க, காதில் நரையோடும் முதிர்கன்னிகளாக/முதிர்கண்ணன்களாகப் பெண்களும் ஆண்களும் செல்போன்களில் வாழ்ந்து களிக்கிறார்கள். கணிப்பொறியும் இணையமும் உருவாக்குகிற வாழ்வெளியில் கடவுளின் இடத்தைக் கணிப்பொறியின் நீலச்சுடர் கைப்பற்றிக் கொள்கிறது. உருச்சிதைந்த தொழில்நுட்பங்களின் கொலாஜ் ஆன நவீன வாழ்வு தருகிற மாற்றங்களை விசாரணைக்குட்படுத்தும் இக்கவிதைகள் தமிழில் ஒரு புதிய முயற்சி.

இப்பகுதிக் கவிதைகளில் சிலவற்றை இங்கு வாசித்துப்பார்க்கலாம். தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில் என்கிற கவிதையில் விடியல் எப்படி அமைகிறது எனப் பார்ப்போம்.

மயக்கம் தராத மாலை

இன்றும் வந்தது.

விடியலின் கிரணத்தை

ஸன்ரைஸ் காப்பி விளம்பரத்தில்

அருமையாய் எடுத்திருந்தான்.

புல்லின் நுனியில் பனித்துளி ஒளிர, புல்லாங்குழலாய் மூங்கில்கள் பூபாளம் பாடப் புலரவில்லை. நவீன வாழ்வில் பொழுது ‘ஸன்ரைஸ் காப்பி’ விளம்பரத்தைப் போல விடிகிறது. இனி, சூரியன் ஸன்ரைஸ் காப்பி விளம்பரமாகத்தான் உதயமாகும். இந்த விளம்பரக் காட்சியைச் சிதை-சங்கேதப்படுத்தினால் (decoding) அது மத்தியதர வாழ்க்கையின் காலைப்பொழுதுகளை எப்படி உருவாக்கி ஒழுங்கமைக்கிறது என அறியலாம். அப்பா ஈசிசேரில் அமர்ந்து பேப்பர் படிக்க, அம்மா அருகில் காப்பிக் குவளையுடன் நிற்கும் 60-70களின் வாராந்திரப் பத்திரிகைப் படங்கள் ‘சும்மா கிடந்து சுவடு பதியாமல் நடந்து சமன் சற்றேனும் குலையாத’ மத்தியதரவர்க்க குடும்பங்களின் காலைப்பொழுதுகளை வடிவமைத்தன. இங்கோ சூரியன் ஒரு விளம்பரத்தின் நகலாகவும் விளம்பரம் அதன் காலை நிஜமாகவும் மாறியுள்ளது.

கவிதையில் தொடரும் வரிகள் இவை:

இருளின் மின்மினி

எதுவும் சொல்லாமல்

நேற்று பூச்சி கடித்தது.

பொதுவாக இருளின் மின்மினிகள் தமிழ்க் கவிதையில் மகிழ்ச்சியை அவலத்தை, இப்படி ஏதாவதொன்றைச் சொல்லும். ஆனால் இங்கே அவை பூச்சி கடித்ததாக மாறிவிட்ட தாம்பத்தியத்தைக் குறிப்பால் உணர்த்துவதைத் தவிர எதுவும் சொல்வதில்லை. உருண்டு படுக்க மெகாசீரியல் நாயகன்தான் கற்றுக்கொடுக்கிறான் ‘இப்படி இப்படி.’ இன்றைக்கு ஒரு நிகழ்வை எப்படி எதிர்கொள்வது என்பதை, துக்கத்தை, மகிழ்ச்சியை மெகாசீரியல்கள்தாம் கற்றுத்தருகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், நமது இயல் வாழ்வில் நினைவாகும், அடையாளப்படுத்தும் பலவற்றுக்கும் இத்தகைய மெகாசீரியல்களும் சினிமாக்களும்தாம் சட்டகங்களாகின்றன. விளம்பரம்சூழ் உலகின் இன்று நாம் எதிர்கொள்ளும் நுட்பமான மாற்றத்தை அவதானிக்கிறது இக்கவிதை. ‘ஸ்வீட்டி’ என்று இடையில் வரும் சொல்லில் உள்ள எள்ளல்தான் இந்த வாழ்வு பற்றிய எள்ளலைக் குறிப்பதாக உள்ளது. காமம் எப்படிப் பூச்சிக்கடியாக மாறியுள்ளது என்பதில் தாம்பத்யத்தின் தாம்பூலச் சுகம் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இங்கு மறைபொருளாகக் காமம் இயக்கம் கொள்வதே கவிதையாக மாறுகிறது. பெண் உடல் கிளர்ச்சி மறுக்கப்படுவதைப் பற்றிய உரத்த பேச்செதுவும் இல்லை, மறைபொருளாகத் தாம்பத்ய வாழ்வு எள்ளலுக்கு உட்படுத்தப்படுவதைத் தவிர.

இவ்வாறு எள்ளலுக்கு உட்படுத்தப்பட்ட வாழ்வில், இன்றைய நவீன உலகின் மின்வணிகப்பரத்தமையின் அவலமாக வெளிப்படும் கணிப்பொறியில் வாழும் பிறழ்ந்த மனநிலை இன்னொரு கவிதையில் வருகிறது. அது தொலைக்காட்சியின் முக்கியச் செய்திகள் ஓடுவதைப் போலத் தொடர்வரிகளாக . . . நிலாவே என்முன்னே கண்டேன் பொன்வண்ணங்கள் என் ஆசைவானில் நிலாவே என் முன்னே கண்டேன் பொன்வண்ணங்கள் என் ஆசை . . . என்று தலைப்பிடப்பட்ட கவிதை. மேசையில் வரையப்படும் இனிஷியல்கள் ஒருவகைச் சித்தப்பிரமையாகக் கவிதைக்குள் உள்ள கவிதை-உருவை வெளிப்படுத்துகின்றன. இக்கவிதையை இன்றைய ‘ஹைடெக்’ தொழில்நுட்பம் வடிவமைக்கும் பாலியலின் அவலமாகவும் வாசிக்கலாம். இதில் வரும் புணர்ச்சியின் ஆதிக்கப் பிம்பமான ஈயை, ‘வைன் கிளாஸில் ஒரு ஈ துடிக்கிறது ... ஆன்மாவைக் கழுவி எடுத்து அணிய முடியவில்லை’ என்ற மற்றொரு கவிதை வரியில் மனிதனின் ஆன்மா என்கிற மொழியமைப்பு பற்றிய விசாரணையாக எதிர்கொள்கிறோம். ஆன்மாவின் இந்த நவீன உருவகம் முக்கியம். ஈ என்பதற்குமேல் ஆன்மாவுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆன்மத்தூய்மை என்கிற நமது மத-தத்துவ-ஆன்மீக மரபுகளின் இதுவரையிலான கருத்துகளை ஒற்றைவரியில் இக்கவிதை நிராகரிக்கிறது. ஆன்மா பற்றிய நமது பழகிய அறிதலைக் கலைத்துவிட்டுப் புதியதான ஒரு குறிப்பீட்டைச் செய்துவிடுகிறது. ஆன்மாவின் புனிதம் ஒழிய, ஞாபகங்கள் நாயாகிக் குறைக்க, இருள்மூலையில் காத்திருக்கும் நப்பாசைதான் ‘நான்’. இந்த நான் ஒரு பால்தன்மையற்ற வெற்றுக்குறிப்பான். இதற்குள் எந்தப் பால் அடையாளத்தையும் நிரப்ப முடியும். இத்தகைய குறிப்பான்களால், கவிதை பொதுக்குறித்தலுக்கு உரியதாக மாறிவிடுகிறது.

கனவின் கதிரியக்கத்தில் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் இரண்டாம் பகுதி உணர்வுகளின் கதைக்கூறல்களுக்கான களனாகியுள்ளது. தினவாழ்வில் உழலும் மனிதர்கள், அவர்களது உணர்வுகள், விழுமியங்கள், அரசியல், சமூகம் என அது விரிகிறது. அடைக்கலமற்ற காதை ஈழப்படுகொலை தொடங்கி உலகில் தனது சொந்த மக்கள்மீதே படுகொலைகள் நடத்தும் அனைத்து அரசுகளும் ‘தன்னைத்தானே வன்புணரும் பேய் வெளிச்சமாக’ வெளிப்பட்டிருப்பதைப் பேசுகிறது. அடைக்கலமற்ற அகதிகளாக மாற்றப்பட்ட குறிப்பிட்ட மக்களின் துயரம் பற்றியது இக்கவிதை என்றால், ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை எனும் கவிதை ஓவியம் வரைதல் வழியாகப் பொது ஒழுக்கத்தை விமர்சிக்கிறது. ஒழுக்கத்தைக் கருப்பு வெள்ளையாக காணும் உலகிற்கு எண்ணற்ற நிறங்கள் எதற்கு? விழிகளின் வழியாக இறங்கும் நிறங்கள், தீர்ப்பளிக்கும் நெஞ்சுக்குள் கருப்பு வெள்ளையாய் ஆகிவிடுகின்றன. பறவை பாம்பான கதை-யில் அறியாமைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊடாடும் உடல்களின் உருமாற்றம் பறத்தல், ஊர்தல் என்கிற படிமங்களாகச் சொல்லப்படும்போது தினவாழ்வின் உருமாறும் அனுபவங்களைச் சொல்வதற்கான மொழி உருவாகிவிடுகிறது. கேசவா என்ற கவிதையில் உருவாக்கப்படும் நகைச்சுவைச் சித்திரம், நாட்டுப்புற நையாண்டியைப் போலக் கடவுள் என்கிற பிம்பத்தைத் தலைகீழாக ஆக்கிவிடுகிறது. வேகத்துடன் இணைக்கப்பட்ட கடவுள் பெயரால் வெளியேறிச் செல்கிறான் நண்பன். கனவில் விழிக்கும் ஆழ்மனதிலும் கடவுள் உட்கார்த்தி வைக்கப்பட்டுள்ளார். கற்புக்கரசியை மட்டுமே காதலியாகப் பெறக் கனவிலும்கூட எண்ணுகிறது ஆண் மனம். கடவுளுடன் புணர்ச்சி வேகத்தை இணைப்பதன் வழியாகப் புனிதக்கவிழ்ப்பை நிகழ்த்துகிறது இக்கவிதை.

சொல் பொருள் நியதி, நேரும் கவிதைகள் எனது வாசிப்பில் முக்கியமானவை. மொழி பற்றிய நவீனச் சிந்தனைகளை முன்வைப்பவை. ஆண்களின் பெண்களின் வேறுவேறு மொழிதல்கள் இக்கவிதைகளில் சுட்டப்படுகின்றன. சொல் ஒன்றுதான், பொருள் வேறுவேறு. நிகழ்வு ஒன்றுதான், அர்த்தம் வேறுவேறு. இறுதியில் சொற்பானைகளின் அர்த்தத்தைக் காலப்பூனை கவிழ்த்துக் கொட்டிவிடுகிறது. சொற்பானை, காலப்பூனை என்கிற உருவகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. சொற்பானைக்குள் அர்த்தங்களைப் போட்டுக் கொதிக்கவைப்பதுதான் கவிதையின் உருவாக்கம் என்று சொல்லலாம். சொற்கள் மீண்டும் அர்த்தங்களாக அடுக்கப்பட வேண்டும். காலப்பூனை திரும்பவும் கொட்டிக் கவிழ்த்துவிடும். இப்படித்தான் நேருகின்றன சொல், பொருள் ஆகியவற்றின் நியதிகள்.

தொகுப்பின் மூன்றாம் பகுதி பாலினவரி. பெண், ஆண் என்கிற பாலினங்கள் சமுதாய, கலாச்சாரத்தின்வழிக் கட்டப்படுவதைப் பேசுகிற பகுதி இது. பெண்ணுடலில் ஆதிநிலையைத் தேடுதல், அடங்காக்காமம், மிகுகாமம், பேய்க்காமம், பொருந்தும் காமம், பொருந்தாக் காமம், லிங்கமையக்காமம், யோனிமையக் காமம், பெண்ணுடலை இயற்கையின் நீட்சியாகக் கருதுதல் எனப் பெண் உடல் என்பதைச் சாராம்சமான ஒன்றாகச் சுருக்கிப்பேசும் தமிழ்க் கவிதையின் அலுப்பூட்டும் சூழலில்தான் பெருந்தேவியின் இப்பகுதிக் கவிதைகளின் பேசுபொருள்கள் கவனம்பெறுகின்றன. இவை ‘பெண்’ என்பவளைச் சாராம்சப்படுத்துவதிலிருந்து விலகிப் பெண்கள் என்கிற பன்மைத்துவ நிலைப்பாட்டில் நின்று நவீன வாழ்வின் அனுபவங்களைச்சுட்டுபவையாக, அவற்றை மீள்பரிசீலனைக்குக் காட்டித்தருபவையாக வெளிப்பட்டுள்ளன. காமத்தை, உடலைக் கொண்டாடுதல் என்பதாகத் தமிழில் எழுதப்படும் ‘பெண்மொழி’ என அறிவிக்கப்பட்டிருக்கிற கவிதைகளிலிருந்து விலகி இவை முற்றிலும் வேறான தளத்தில் இயங்குகின்றன. குறிப்பாகச் சொன்னால், இன்றைக்குத் தமிழில் பெருமைப்படுத்திப் பேசப்படும் உடல் ‘கொண்டாட்டக்’ கவிதைகளில் உள்ளிருத்தப்பட்டுள்ள பெண் உடல் என்பது நவீனத்துக்கு முந்தைய, பண்டையச் சமூகத்தில் சாராம்சப்படுத்தப்பட்ட உடலாகக் காணக்கிடைக்கும் ‘லட்சியப்’ பெண் உடல், ஆண் உடலை எதிர்வாகக் கொண்டு ஆணிய-லிங்கமையவாதத்தால் கட்டமைக்கப்பட்ட உடல். பெண் உடல் பற்றிய இப்படியான சாராம்ச மொழிதலிலிருந்து விலகி இக்கவிதைகள் நவீனச் சமூகத்தின் பிம்பப் பரப்பில், தொழில்நுட்பம் சார்ந்த சுரண்டலில், ஆண், பெண் இருமையில் சிக்கிக்கொண்டுள்ள உடல்களையும் மனிதர்களையும் பேசுகின்றன.

இப்பகுதியில் விலக்கப்பட்ட உறவு (incest) பற்றி உரையாடும் கவிதை (புஷ்பா சேலையணிந்த முதல் நாள்) வயதுக்கு வருகிற பெண் உறவுகளான மற்றவர்கள் அடையும் கிளர்ச்சியின் ஊடாகப்பொம்மையாக, உடையை மீறிய அம்மணமாகக் கட்டப்படுவதைச் சொல்லுகிறது. சில ஆலோசனைகள், பூமிபோலும் வலிய, படையல் ஆகிய கவிதைகளும் வெவ்வேறு பேசுபொருள்களின் சூழலில் ஆண், பெண் என்ற இறுகிப்போன பாளங்களான கட்டமைப்புகளைப் பிரச்சினைக்குட்படுத்துகின்றன. இங்கே, இன்னொரு குறிப்பிடத்தக்க கவிதையாக நான் எண்ணுவது இருத்தல் நிமித்தம். குடும்ப வாழ்வில் மனைவியாகப் பாத்திரமேற்கும் பெண்ணுடலுக்குச் சமூகத்தால் இருத்தப்பட்டுள்ள பெண்மை என்னும் நடிப்பில் முலை அறுக்கும் சடங்கு மிகைநாடகீயக் காட்சி. கண்ணகி தனது முலையைத் திருகி எரிகிறாள். பெண்மையின் குறியீடாகக் காலங்காலமாகக் காட்டப்பட்டு வந்த முலைகளை அறுப்பதன் வழியாகப் பெண்மை எனும் பிம்பத்தைச் சிதைத்தெறிகிறாள். சதத் ஹசன் மாண்டோவின் ஜுபைதா கதையில் வரும் பெண் பால்தராத தன் முலையை அறுத்தெறிவதன் வழியாகத் தாய்மையைக் கேள்விக்குட்படுத்துகிறாள். புதுமைப்பித்தனின் வழி கதையில் வரும் அலமு, இளம் விதவையாகச் சமூகம் நிர்ப்பந்திக்கும் வலியிலிருந்து விடுபடத் தனது முலையைக் கிழித்துக் கொள்கிறாள். பாலுந்த ஆற்றல்மையமாக இருத்தப்பட்டுள்ள பெண்மை பங்கேற்கும் நாடகத்தில் ஒரு உடல் பெண்மையை விட்டு வெளியேறும் உச்சநிகழ்வாக முலை அறுத்தலைக் கொள்ளலாம். வெவ்வேறு சமூகங்களின் வெவ்வேறு காலகட்டக் கதையாடல்களில் இந்நிகழ்வு சடங்குபோல் பரிமாணம் கொள்ளுகிறது. சமூகக் கலாச்சாரம் வடிவமைக்கும் பெண்மையைச் சிதைக்கும் இச்சடங்கு பாலியல் பிம்பமாக மட்டுமே கட்டப்பட்ட பெண் உடலின் எதிர்க்குரலைப் பதிகிறது. இதைப் பெண்மையாக உள்ளிறுத்தப்பட்டுள்ள ஆற்றலின் வலிமையான வெளிப்பாடு எனலாம். இங்கே நவீனப் பெண்ணாக வரும் கவிதையின் நாயகி, அந்நாடகத்திற்குப்பிறகு நன்றாகத் தூங்க எண்ணுகிறாள். இதன் மூலம் எதிர்க்குரலின் சடங்கும்கூட அர்த்தமற்ற நாடகப் பகுதியாகவே அமைக்கப்படுகிறது. நவீன உலகில் உடலும் அதன் உறுப்புகளும் தமது தொன்மையான அர்த்தங்களை இழந்துள்ள அறிதலை முன்வைக்கிறது இக்கவிதை. நவீன வாழ்வில் முலையறுத்தல் என்கிற சடங்கும்கூட அதன் சடங்குத்தன்மையிலிருந்து, அது உருவாக்கும் தெய்வாம்சத்திலிருந்து விலகிச் சாதாரண ‘உருச்சிதைவு’ காட்சிக்கான நிகழ்வாக மாறிவிடுகிறது. கண்ணகிகூட அர்த்தமற்ற பிம்பமாகவே இயக்கமடைவதைச் சொல்லாமல் சொல்கிறது இக்கவிதை.

மனைவி எனும் பாத்திரத்தில் காத்திருத்தல் முலை அறுபடலாக விரிவதைப் போல இன்னொரு கவிதையில் (என் புனல்) காமம் புனலாக ‘கொப்பும் நுரையும் நிறைந்ததாக’, ‘பழையவெள்ளத்தின் பயணம் தெரிந்தாக’, ‘அபாயத்தின் நுட்பம் கூடியதாக’ வாசிப்பின்முன் காட்சியாகிறது. ஆணையும் புரட்டி அப்புனலில் இணைக்க முயல்வது முக்கிய அவதானம். ஆணுடலை எதிர்மையாகவோ எதிரியாகவோ கட்டமைக்காமல், இணைவாதலின் ஒரு கூறாக எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்க அறிதல் புள்ளி எனலாம். ‘பேராண்மையின் சில கூரைகள் தடுமாறுதல்கண்டு ஒரு சுழிப்பில் பெண்புனல் சிரிக்கிறது.’ இச்சிரிப்பில் ஆண்-பெண் படிநிலை உறவிலும் நேரக்கூடிய அங்கதக்காட்சிகளைக் கண்டு மெல்ல நகும் ஒரு பெண்ணை எதிர்கொள்ளலாம். புனல் எனும் படிமத்தைத்தாண்டியும் அதனால் இணைக்கப்பட்டும் நகர்கிற படிமங்கள் பாலின உறவுசார் சிக்கல்களின் பல அர்த்தப்பாடுகளை வாசிப்பவரிடம் கோரிச்செல்லுகின்றன.

பெண் என்பவளைக் காமத்தின் களமாக (erotic site) மட்டுமே குறியிட்டு, ஒடுக்குமுறை என்பது அவளது மிகுகாம உடல்பாலியலில் மட்டுமே நிகழ்வதாக மிகுகாமப் பெண்ணுடலைச் சாரப்படுத்தி விதந்தோதிப் பேசும் வழமையான பெண்ணியச் சிந்தனையைத் தாண்டி நிற்பவை இக்கவிதைகள். பெருந்தேவியின் பிரதியில் தாய், தங்கை, மனைவி, காதலி, முதிர்கன்னி, பெண்ணாக நடிக்கும் ஆண், பெண் தெய்வம் எனப் பல பாத்திரங்கள் பாடுபொருள்களாகப் பங்கேற்கின்றன. இத்தகைய பன்மைத்தன்மையோடுகூட ஆண்- பெண் எதிர்வை அப்படியே அடிப்படையாகக் கொள்ளாத பெண்ணியச் சிந்தனைத்தளத்தை வலிமையுடன் முன்வைத்துள்ளது இந்தக் கவிதைப்பிரதி. கவிதைகள் வெறும் பிரகடனங்களாக இல்லாமல் இலக்கியத்தன்மையுடன் வெளிப்பட்டிருப்பது ஆகப்பெறும் ஆறுதல்.

‘ஒரே கண்ணைச் சிமிட்டிச் சிரித்தது சின்ன மயிலிறகு’ போன்ற வரிகளில் வெளிப்படும் எள்ளல். ‘உணவுமேசைமேல் சுடுகலனில் ஆறிக்கொண்டிருக்கிறது இரவு’, ‘நிலா முழுக்கக் கறையான்கள்’ என்பது போன்ற புதிய உருவகங்கள், இப்படி நிறைய வரிகளை அவற்றின் இலக்கியத்தன்மைக்காக, நவீன எடுத்துரைப்புகளுக்காக இந்தப் பிரதியில் எடுத்துக்காட்ட முடியும்.

இலக்கியப் பனுவலை அதிலும் கவிதையை இப்படி உரையாக விளக்கிச் சொல்வது அதன் வாசிப்பை திசைதிருப்பிவிடக் கூடியது என்றாலும், தற்போதைய தமிழ்ச் சூழலில் வாசிப்பை நெறிப்படுத்திக்கொள்ளவோ அல்லது நிராகரித்துத் தனக்கான வாசிப்பை ஒருவர் உருவாக்கிக்கொள்ளவோ ஏதேனும் ஒருவகையில் இவ்வுரை பயன்படலாம் என்பதாலேயே இந்தப் பின்னுரையை எழுதுகிறேன். எனக்கு மட்டுமல்ல, எந்த எதிர்பார்ப்புமற்று இலக்கியப் பிரதிகளையும் விசாரணைகளையும் தமது உயிர்வாழ் உழைப்பிற்கு மத்தியில் உருவாக்கிப் பதித்துக்கொண்டிருக்கும் எல்லோருக்குமே பெருந்தேவியின் இந்தக் கவிதை வரிகள் பொருத்தமாக இருக்கும்:

சுவைக்காத இன்றோ

தெரியாத நாளையோ

எது விழுந்தால் என்ன

என்னுடையது

எண்ணற்ற பகடை.

பெருந்தேவியின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட இப்பின்னுரையும்கூட எண்ணற்ற பகடைகளில் ஒன்றுதான்.

அன்புடன்
ஜமாலன்

07-11-2010 ஜெத்தா - சவுதி அரேபியா.

இப்பின்னுரையில் பேசப்பட்ட  பெருந்தேவியின் கவிதைகளை இணையத்தில் இங்கே பார்க்கலாம்:

http://www.kalachuvadu.com/issue-118/page46.asp  (க்ராஸ்டாக் அல்லது குறுக்குச்சால், சில ஆலோசனைகள், பகல்போல் இல்லை இரவு)

http://www.kalachuvadu.com/issue-127/page42.asp  (சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு, மதிப்பு, ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை, ஆகாயத்தின் எட்டாவரி, உரையாடல்)

http://www.kalachuvadu.com/issue-104/page23.asp   (நல்ல, கிறுக்கன், எதிர், தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில், குட்டிப்பன்றியே, விழைகிறேன்)

கவிதையின் உயிர்வேதிச் சமன்பாடு

1990-ல் குடந்தையில் நண்பர் தேனுகா அவர்கள் சிறப்பாசிரியராக இருந்து தயாரித்த “கவிதா இண்டியா“ என்கிற ஆங்கில-ஹிந்தி-தமிழ் மும்மொழிப் பத்திரிக்கையில் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் எழுதக்கேட்டுக் கொண்டதால் குறிப்பாக எழுதப்பட்டது. இதன் கருத்தாக்கங்கள் விரிவாக எழுதப்பட வேண்டியவை. இதுபோன்று அப்போது அறிவியலையும் கலையியக்கத்தையும் கலந்து ஒரு சில கட்டுரைகள் புரிதல் நோக்கில் எழுதப்பட்டது. இக்கட்டுரை மொழியும் நிலமும் தொகுப்பில் வெளிவந்தது. இதன் கருதாக்கங்களை விரிவுபடுத்தி ‘கவிதையும் சிதைவாக்கமும்’ என்கிற கட்டுரை அதன் பின் “மேலும்“ இதழில் வெளிவந்தது. தட்டச்ச முடிந்தால் அதை அடுத்த பதிவாக வெளியிடலாம். கலையை அறிவிலாக புரிய முயற்சிப்பதே இக்குறிப்பு. சமீபத்தில் மூளையின் வினோத செயலமைப்புகள் பற்றிய பல வாசிப்புகள் இந்த கட்டுரையை பதிவில் வெளியிடும் எண்ணத்தை அதிகப்படுத்தியதே காரணம்.

எந்த ஒரு செயலும் (1) ஆற்றல் மாற்றம் என்கிற பௌதீகச் செயலில் துவங்கி (2) உணர்வுறுப்புகள் – மூளைக்கு இடையிலான மின்னியக்கமாக (electrodynamics) செயல்பட்டு (3) நினைவகத்தில் செயலியக்கப்பட்ட உயிர்வேதி (bio-chemical) எழுதுதலாக நடைபெறகிறது. கவிதை ஒரு மனிதச் செயல்பாடாக இருக்கிறது. ஒரு மனித உடல் தான் எதிர்கொள்ளும் பொருள் / நிகழ்வு/ கருத்து என்கிற புறநிலைகள் மனித உடலுக்குள் செயலியக்கப்படும் மேற்குறித்த மூன்று வினைக் காரணிகளே கவிதை உருவாக்கத்திற்கான விஞ்ஞானச் செயல்பாடாக அமைகிறது.

ஒரு மூடிய அமைப்பின் மொத்த ஆற்றல் மாறாததாகவும், அமைப்பிற்குள் ஆற்றல் மாற்றம் என்து சாத்தியமானதாகவும் அமைகிறது. அளவுநிலைகளை அடிப்படையாகக் கொண்ட மேற்குறித்த விதியானது, பண்புநிலை வேறுபாடுகள் பற்றிய நுண் ஆய்வாக அமைகிறது. மனித உடல் எதிர்கொள்ளும் பொருள்/நிகழ்வு/கருத்துடன் ஆன வினை என்பது வெளிப்பொருள் செலுத்தும் ஆற்றலை, மனித ஆற்றலாக மாற்றுவதே. இவ்வாற்றல் மாற்ற வினையானது உணர்வு உறுப்புகளின் உடலியங்கியல் (physiology) விதிகளான நரம்புகளின் செயல்பாடாக (neuronal activity) மூளையின் நினைவகத்திற்குச் செல்கிறது. இச்செயல் நரப்பங்களினால் தூண்டப்பட்ட மின்னியக்க விசையாக (electro dynamical forces) செயல்பட்டு, உயிர்வேதிமூலங்களைத் தூண்டி அணுத்திரள் வினைகளை (molecular reaction) செயல்பட வைத்து அளவுருமாற்றம் (வெவ்வெறு புலன்வழி பதிந்த சங்கேதப் பதிவுகளுடன் வினைபுரிந்து) பண்புரு மாற்றமாகி வேறொரு செயல்வடிவமாக மனிதனிலிருந்து வெளிப்படுகிறது. இந்நிலையில் மனித வரலாறு என்பது நினைவக/செயலகப் பதிவுகளின் உருவாக்க வரலாறாகவே அமைய முடியும்.

மனித மூளையின் மொழி என்பது உயிரகம் (oxygen), நீரகம் (hydrogen), கரிமம் (carbon), அவியம் (nitrogen) போன்ற வேதிமங்களின் அணுத்திரள் வினைகளே ஆகும். மனித உடல் எதிர்கொள்ளும் ஒன்றினை வேதிமச் சங்கேதப் பதிவுகளாக பதிவுறுத்துவதும் பிறகு அப்பதிவுகளை சிதைத்து, சிதைச்சங்கேத செயல் (coding and decoding process) நடைபெறவதால் உருவாகும் வேதிமங்களின் மின்னியக்கு ஆற்றலானது சப்த/எழுத்து ரீதியான இயல்மொழிச்செயலாக அமைகிறது. வளைகுடா யுத்தம் பற்றிய கருத்தோ பார்வையோ/அனுபவமோ... மனித உடலுக்குள் ஒருவகை ஆற்றலை புலன்வழிச் செலுத்தி, அவ்வாற்றலை மூளையின் சங்கேத சிதைச்சங்கேத செயலால் நினைவகங்களில் பதிவுறுத்துகிறது. இவ்வாறு பதிவுறுத்தப்பட்ட எண்ணற்ற செயல்களினால் உருவான வேதிம அணுத்திரள்களால் ஏற்படும் அளவுருமாற்றம் பண்புரு மாற்றமாக மாறி வேறொரு ஆற்றல் வடிவமாக வெளிவருகிறது. இவ்வாற்றல் மாற்றம் சாத்தியமற்ற நிலையில் மனித மூளை அழுத்தங்களுக்கு உட்படுகிறது. எனவே, கவிதை என்பது மனித வினைபடுதலின் ஆற்றல் மாற்றமாக இருப்பதால், கவிதைப் பற்றிய ஆய்வு மனித உயிர்த்தலின் ஆற்றல் மாறக்கோட்பாட்டால் ஆளப்படுவதாகக் கொள்ளலாம்.

வளைகுடா யுத்தம் பற்றிய ஒருவரின் அரசியல், வரலாறு மற்றும் இதர வகைப்பட்ட பார்வைகள் எல்லாம் நமது மூளையின் நினைவகத்தில் பதிவறுத்தப்பட்ட வேதிமச் செர்க்கைகளாக (chemical compounds) உயிர்மொழியால் எழுதப்பட்டுள்ளது. இவற்றின் உள்வினைபடுதலின் சேர்க்கை மற்றும் பிரிகைகளால் ஏற்படும் அளவுரு மாற்றம் பண்பமைப்பாக மாறுதலே கவிதையாக உருவாக்கம் பெறுகிறது. இவ்வாறாக, கவித்துவத்திற்கான சமன்பாட்டை (poetic equation) உயிர்மொழியியலால் சாத்தியமாக்க முடிகிறது.

வளைகுடாயுத்தம் கவிதையாக, அரசியலாக, செயலாக, கட்டுரையாக பல வடிவ மாறுபாடுகளை அடைவது என்பது மனிதனுள் செயலியக்கப்படும் சங்கேத மற்றும் சிதைச்சங்கேத செயலமைப்பின் வேறுபட்ட மூலகங்களின் கூட்டிணைவே ஆகும். இங்கு வர்க்க வேறுபாடு என்பதும்கூட வேறுபட்ட வாழ்நிலைகளால் உருவான வேறுபட்ட சங்கேத மற்றும் சிதைச்சங்கேத அமைப்பின் கட்டமைப்பால் உருவமைந்ததாகவே உள்ளது. கலைஞர்களின் உள்மனம் சிதைந்திருப்பதாகவே உளவியலாளர்கள் கூறுகின்றனர். இச்சிதைவு வேதிமங்களின் நுண்ணியக்கச் செயலின் சீரற்ற வினைபடுதலே ஆகும். இவ்வாறே.. படைத்தல்/சிருஷ்டி என்பதான உருவாக்க நிலைகள் சாத்தியமாகின்றன. நல்ல படைப்பாற்றல் உள்ள கலைஞன் உள்மனச்சிதைவு உடையவனாக இருக்கிறான். அவனது பாதுகாப்பு செயலியக்கம் (defense mechanism) படைப்பு நிலையில் செயலற்றதாக உள்ளது என்கிற உளவியல் கோட்பாடு இதையே தனது மொழியில் கூறுகிறது.

வர்க்கமாக பிளவுண்டுவிட்ட இச்சமூகத்தில் மனித உடலின் வினைபடுதல் அதிகாரமயப்படுத்தப்பட்டுவிட்ட சங்கேத மற்றும சிதைச்சங்கேத அமைப்பைக் கொண்டிருப்பதால், மனித மூளையின் நினைவகம்/செயலகம் ஆகியன அதிகாரமயமாதலுக்கு உள்ளாகி உள்ளது. கவிதை இந் நினைவகம்/செயலகங்களைக் கொண்டு எழுதப்படுவதால், அதிகாரத்தின் நுண்வேதிச் செயலாகவே உள்ளது. இவ்வாறே கவிதைக்குள் செயல்படும் பலவித சமிக்ஞைகளாக அதிகாரமயமான மொழிச்செயல் உருவாகிறது.

இந்நூற்றாண்டின் கவிதை என்பது அதிகாரத்தினை சிதைப்பதாக அமைவதன் மூலம் மட்டுமே மனித நினைவக/செயலக – அமைப்புகளின் நுண்செயலன்களை (micro-processor unit) மாற்றியமைப்பதாக அமையும். அம்மாற்றத்திற்குப் பின் மனித வரையறை இன்றைய மொழியளவில் சாத்தியமற்றதாகவும், புதிய வரையறை என்பது உயிரிமொழித் தளத்தில் சாத்தியமானதகாவும் அமையலாம்.

-ஜமாலன்.

-Kavitha India – ஆண்டு. 1990. (மொழியும் நிலமும் நூலில் தொகுக்கப்பட்ட கட்டுரை. ஆண்டு 2003)

கார்டீசிய மனங்களும் கார்டூனாகிய உடல்களும் - தெகார்தேவின் மூன்று கனவுகள் – இறுதி பகுதி.

பகுதி - 1

பகுதி -2

கார்டீசிய மனதின் பிறப்பு –இருமைவாதம்

கார்டீசிய இருமைவாத அடிப்படையில் உடல்-ஆத்மா என்பது இரண்டு வேறுபட்ட உண்மைகள் ஆகும். ஆத்மாவை ஸெல்ப் என்கிற ஆங்கிலச் சொல்லால் குறிக்கிறார்கள். ஆத்மா, சுயம், மனம், தன்னிலை என்ற பல சொற்களால் இதனைக் குறிப்பிடலாம் என்றாலும், இவற்றை சமூக-வரலாற்றின் சொல்லாடல் மாற்றங்கள் அடிப்படையில் அணுகினால், இச்சொற்கள் முற்றிலும் வெவ்வேறான வர்ணனைகளையும், புரிதல்களையும், இயக்கங்களையும் கொண்டவை. இயக்கம் என்பது ஓர் உடலிற்குள் அல்லது சமூக அமைப்பிற்குள்ளான இயக்கத்தைக் குறிக்கும். ஆத்மா, சுயம், மனம் மற்றும் தன்னிலை என்கிற நான்கு சொற்களும் உடலாக உள்ள ஒன்றிற்குள் உள்ள ஒரு உறுப்போ, அரங்கோ, இடமோ, செயலகமோ ஏதோ ஒன்றை குறிப்பதற்கான சொற்களாக உள்ளன. உடல் பொருண்மையாலும், ஆத்மா பொருண்மையற்றதாலும் ஆனது. பொருண்மையற்றது என்பதை கிறித்துவ இறையியலின் ஆன்மா-புனித ஆவி (ஸ்பிரிட்) என்கிற உருவகத்திலிருந்து பெற்றது எனலாம். சுருக்கமாக, மனிதன் பௌதீக உடலும், அபௌதீக மனமும் கொண்டவன். உடல் மனதையும், மனம் உடலையும் வழிநடத்தலாம். மனதின் ஒரு பகுத்தாய்ந்து உணமை அறியும் நிலைதான் சிந்தனை. மிருகங்களுக்கு இந்த பகுப்பாய்வு இல்லை. அதனால் அவை மனிதனாகாது. அதாவது மனிதன் என்பவன் சிந்திக்கும் பொருளாக உள்ளான் என்பதே கார்டீசீய இருமைவாதத்தின் அடிப்படை. அதாவது பகுத்தறிவுதான் மனிதனின் மையம் அல்லது மனிதனை மனிதனாக வித்தியாசப்படுத்தும் ஒன்று. ஆக, பகுத்தறிவு என்கிற உலகப்பார்வையால் கட்டப்பட்டுள்ள இன்றைய மனிதன் கார்டீசீய மனம் கொண்டவனாக, கார்டீசிய உடல்கொண்டவனாக இருக்கிறான். அமைப்பிலிருந்தும், குழுவிலிருந்தும், அவனுக்கான நிலத்திலிருந்தும் சுயசிந்தனை என்கிற ஒன்றால் பிரிக்கப்பட்ட இந்த கார்டீசிய மனிதன்தான் 17-ம் நூற்றாண்டுமுதல் வளர்ந்துவரும் முதலாளித்துவத்தின் முதலாக உருவாக்கப்பட்டவன். இந்த முதல் சந்தை சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், காரண-காரிய தொடர்பையும் கொண்டது. பகுத்தறிவின் அடிப்படையில் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்வது.

இருப்பை தனது சாராம்சமாக் கொண்ட நவீன மனிதன் உருவாக்கப்பட்டது கார்டீசிய தத்துவத்தின் வழியாகத்தான். பிரதிகள் உலகை கட்டும் என்பதற்கான ஒரு நவீன சான்று. அதுதான் முதலாளித்துவத்திற்கான உடல்-முதலை உருவாக்கியது. மூலதன செறிவு துவங்கியப் புள்ளி இதுதான். அரசியல் பொருளாதாரம்- லிபிடனல் பொருளாதாரத்தில்தான் உருவாகுகிறது. மார்கஸ் அரசியல் பொருளாதாரத்தில் இதை அம்பலப்படுத்தினார். ஆனால், அவரும் கார்டீசிய காஜிட்டோவிற்குள்தான் சிக்கினார். அதனால்தான் மனித உடலை உற்பத்தி சக்தியாக பார்க்க முடிந்த அவரால், மனித உடலே ஒரு உற்பத்தி எந்திரமாக உள்ளது என்பதை பார்க்க முடியாமல் போனது. பிராய்டும் இந்த காஜிட்டோவில் சிக்கினார். அவரால் உடலை உற்பத்தி எந்திரமாக பார்க்க முடிந்தது. அவரும் இடிபல் முக்கோணத்தில் சிக்கி மனம் பற்றிய முதலாளித்துவ உடல்-முதலில் மறுஉற்பத்திக்கான மகிழ்வுநிலையை உருவாக்கினார். அது பாலுந்த ஆற்றலை முதலாளித்தவ எந்திரத்திற்குள் செலுத்தியது. இதற்கும் உலகமய மனிதனுக்கும் உள்ள உறவு நிலைகள் ஆராயப்படவேண்டும். கார்டீசிய காஜிட்டோ ஒருவகையான மறைவியக்க எந்திரமாக இயங்கி மனித உடலை பெருக்கித்தந்தது. முதலாளித்துவம்தான் உலகெங்கிலும் தனது காலனிய கருத்தியலால் அந்த கார்டீசிய-மனிதனை உருவாக்கியது. அல்லது உலக தேசிய மனிதர்களை சர்வதேசிய மனிதனாக மொழிபெயர்த்து தந்தது. முதலாளித்துவ உற்பத்தி எந்திரத்திற்கான மனித உடலை வடிவமைத்து அதற்கான சுயத்தை கண்டுபிடித்து தந்ததே கார்டீசிய சிந்தனைவாதத்தின் அடிப்படையான பணியாக மாறியது.

முதலாளியம் தனக்கு தேவையான முதலீட்டை பெறவும், பெருக்கவும் கண்டடைந்ததே தனிமனித உடல்கள். இந்த மனித உடல்களை தன்னுணர்வு உள்ளதாக பிரித்தெடுத்து உடல், மனம், சிந்தனை, சுயம் என்கிற பண்புகளைக்கொண்ட சிந்திக்கும் எந்திரமாக உருவாக்கியது கார்டீசியவாதம். ஒரு உடல் மனிதனாக பிறப்பெடுத்த கதை இதுதான். வளரும் முதலாளித்துவம் தனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இம் மனிதனை உலகெங்கும் அறிவித்து பொதுமைப்படுத்தி, சதையும், எலும்புமான உடலை மனிதனாக அடையாளப் படுத்துகிறது. இந்த அடையாளப்படுத்துதல் என்பதை பல தத்துவ சொல்லாடல்கள் மூலம் மனிதனின் இயல்கடந்த இருப்பாக மாற்றகிறது. மனிதன் என்பவன் காலந்தாண்டிய சாராம்சமாகவும், காலத்திற்குட்பட்ட இருப்பாவும் மாறுகிறான். பண்டைய இலக்கியங்கள் துவங்கி அத்துணை வரலாறுகளும், வாசிக்கவும் கண்டுபிடிக்கவும் படுகிறது. மனிதன் பற்றிய வரலாறுகள் உருவாக்கப்படுகிறது. இவ்வரலாற்றின் அடிப்படையில் மனிதன் என்பவன் ஆதாமாக தோன்றிய ஆதிக்கதைவரை எடுத்துரைக்கப்படுகிறது. இறையால் படைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட முதல் உடல்களான ஆதாமும், ஏவாளும்கூட இருப்பும், சாராம்சமும் கொண்ட மனிதர்களாக விவரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் மனம் என்பதும், உடல் என்பதும் பிரிந்து இயங்குகிறது. அவர்களது காதல் பாலியல் பிறப்பு இறப்பு மகிழ்ச்சி துன்பம் உள்ளிட்ட அத்துணை உணர்வுகளும் இன்றைய கார்டீசிய மனிதனின் அளவீடுகளைக்கொண்டு அளக்கப்பட்டது. பாவமாக சபிக்கப்பட்ட அவர்களது சிந்தனைச்செயல் பகுத்தறிவால் வரமாக விளக்கப்பட்டது. உலகெங்கிலும் மனிதர்களையும், மூலவளங்களயும் தேடும் செயல் உருவாகிறது. மானுடவியல் என்கிற புதிய மனதனின் அறிவியலை படிக்கும் துறை உருவாகுகிறது. உலகில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைப்போல, நிலம் கண்டுபிடிக்கப்பட்டதுபோல பிற உடல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றின் இயல் வாழ்க்கை அழிக்கப்பட்டு அவர்களும் மனிதர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஆக, மனிதமையவாத சிந்தனை என்பது கார்டீசியவாதத்தின் ஒரு கொடை. அல்லது சிந்தனைமையவாத மனிதன் கார்டீசியம் தந்த கொடை.

மேற்கத்திய சிந்தனை என்று இதனை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிடமுடியாத அளவிற்கு இன்றைய உலகின் ஓர் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட சொல்லாடலாக பகுத்தறிவு உருவாகி உள்ளது. இது காலனியம் வழியாக ஒரு உலகப்பார்வையாக மாறியது. மறுமலர்ச்சி சொல்லாடலாக கட்டமைக்கப்பட்ட பகுத்தறிவுவாதம், தொழிற்புரட்சிக்கு காரணமாக அமைந்து முதலாளியத்தை உருவாக்கிய ஒரு முக்கிய சிந்தனைமுறையாக இருந்தது. அல்லது முதலாளியமயமான இன்றைய உலகு கார்டீசிய தத்துவத்தின் அடிப்படையிலேயே இயக்கம் கொள்கிறது. முதலாளித்துவ அமைப்பில் கட்டமைக்கப்பட்ட மனித உடல் என்பது உலகமயமான கார்டீசிய மனித உடலே. இந்த உடல் காலனியமயமாக்கலின் விளைவாக உலகின் அனைத்து தேசிய, சுதேசி, விதேசிய, பரதேசிய உடலாக கட்டப்பட்டுள்ளது. அதனால் உலகின் குக்கிராமத்தில் தெகார்தேவை அறியாமல் பிறந்தவர்கள்கூட, இந்த உடலுடன் இயங்கினால் மட்டுமே மனிதராகக் கொள்ளப்படுவார்கள். இல்லையேல் அவர்கள் சித்தர்களாக, பித்தர்களாக, மனப்பிறழ்ச்சியாளர்களாக, எக்செண்டிரிக்களாக, விளிம்பு நிலையாளர்களாக மட்டுமே கருதப்படுவார்கள்.

குறிப்பு - இக்கட்டுரையின் தொடர்ச்சியாக எழுதப்படவேண்டியவை இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல். உழைப்பு எந்திரத்தில் சிக்கிய கார்டீசிய உடல். பின்நவீன உலகில் கார்டூனாகிய கார்டீசிய உடல். வாய்ப்பிருந்தால் தொடரலாம்.

பின்குறிப்பு – இக்கட்டுரை எழுதுவது விசயமாக தொடர்ந்து விவாதித்தும், ஊக்கப்படுதியும் தொடர்புடைய இணைப்புகள், சுட்டிகள் தந்தும் உதவிய நண்பர் முபீன் சாதிகாவின் முயற்சிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இக்கட்டுரை மந்திரச்சிமிழ் அக்டோகர்-2010 – மார்ச்-2011 – இதழில் வெளிவந்துள்ளது. இது நீளம் கருதி பகுதிகளாக  இங்கு வெளியிடப்படுகிறது.

-ஜமாலன் (07-12-2010)  மந்திரச்சிமிழ் (அக்டோபர்-2010-மார்ச்-2011)

கார்டீசிய மனங்களும் கார்டூனாகிய உடல்களும் - தெகார்தேவின் மூன்று கனவுகள் –பகுதி-2

பகுதி-1

கார்டீசியவாதம் தோற்றமும் சிந்தனைகளும்

கார்டீசிய என்கிற சொல் தத்துவம் துவங்கி கணிதம், அறிவியல், உடல், ஆத்மா அல்லது மனம் (ஸெல்ப்) என எல்லாத்துறையிலும் பயன்படும் ஒரு சொல். முதன்முதலாக மேற்கத்திய சிந்தனை வரலாற்றில், உலகப்பார்வையில் உடல், மனம் என்கிற பிளவையும், இருமைவாதத்தையும், சிந்தனையின், சிந்திக்கும் செயலின் சாராம்சமாக உருவாக்கியது. கார்டீசியவாதம் பொருண்மை, பொருண்மையிண்மை என்பதாக உடலையும், மனதையும் இரண்டாக்கியது. இன்று நாம் பார்க்கும் உணரும் உலகம் என்பது கார்டீசிய முப்பரிமாணவெளி என்றே வழங்கப்படுகிறது. குறிப்பாகச் சொன்னால், கார்டீசியம் இந்திய தத்துவசிந்தனையில் பழங்காலம் முதல் உள்ள உடல்/ஆத்மா[i], பைபிளில் சொல்லப்பட்ட உடல்/ஆத்மா (soul), கிரேக்க சிந்தனையில் இருந்த உடல்/மனம் என்ற இருமையை நவீன சிந்தனைத் தளத்திற்கு புதிய விஞ்ஞானச் சொல்லாடலாக கொண்டுவந்தது. இதன் பொருள் இந்திய சிந்தனையிலிருந்து இது மேற்கே எடுத்தாளப்பட்டது என்பதாக புரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்திய, கிறித்துவ சிந்தனையில் மதங்களோடு இயங்கிய இச்சிந்தனை, மேற்கின் சிந்தனை வளர்ச்சியில் அறிவியலுடன் இணைந்து புதிய மனிதனை கண்டுபிடிக்க உதவியது மற்றும் நவீன சமூகத்தை உருவாக்கியது என்பதே முக்கியம்.

இச்சொல் மேற்கத்திய தத்துவ, சிந்தனை வரலாற்றில் 1596 முதல் 1650 வரை வாழ்ந்த “காஜிட்டோ இர்கோ ஸம்" “நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்" (I think, therefore I am) என்ற புகழ்பெற்ற மேற்கத்திய சிந்தனையின் ஆப்த வாக்கியத்தை அருளிய ரெனே தெகார்தெ என்கிற பிரஞ்சு தத்துவவாதியின் பெயரால் உருவான சிந்தனையைக் குறிக்கும் சொல். பல்துறை அறிவாற்றலை வளர்த்துக் கொண்டவர். கணிதம் துவங்கி தத்துவம்வரை பலவற்றிலும் பங்களிப்பு செய்தவர். பகுப்பாய்வு வடிவகணிதத்தை உருவாக்கியவர். வடிவக்கணிதப் பொருள்களைக் குறிப்பதற்கான வரைகோணப் புள்ளிகளை உருவாக்கியவர். இன்றைய சிந்தனைமுறையில் உள்ள பிரிவினைகள் அல்லது தனித்துறைசார் அறிவு என்பது அக்காலத்தில் இல்லை. அறிவு அல்லது சிந்தனை என்பதே பல்துறை சார்ந்ததுதான். இன்றுபோல் தத்துவம், விஞ்ஞானம், வரலாறு என்றெல்லாம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. எல்லாமே தத்துவம் அல்லது இயற்கை தத்துவம் என்கிற சொல்லாலேதான் அறியப்பட்டது. அதனால் தெக்கார்தேவை ஒரு தத்துவவாதியாகவே இங்கு கருதிக்கொள்வோம். நவீன தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் இவர் விஞ்ஞானப் புரட்சிக்கான அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர். இவரது சிந்தனைகளில் உருவமைந்துள்ள இத்தனை புள்ளிகளும் சேர்ந்தே நவீன உலகை, மறுமலர்ச்சிக்காலத்தை (ரெனெயசன்ஸ்), மனிதனை அல்லது முதலாளித்துவ உற்பத்தி எந்திரத்திற்கான உடல் முதலீடுகளை (bio-capital) உருவாக்கியது.

தெகார்தேவின் உள்ளொளிக் கனவுகள்

தெகார்தே கண்ட மூன்று கனவுகள் அல்லது அவருக்கு ஏற்பட்ட உள்ளொளி (விசன்ஸ்)-தான் அவரது எதிர்காலத்தை உண்மைக்கான தேடலுக்கானதாக மாற்றியது என்று அவரால் சொல்லப்பட்டுள்ளது. முதல் கனவில் தனது கல்லூரிக்கருகில் நடந்து சென்ற அவர் ஒரு சுழல் காற்றினால் தாக்கி தள்ளப்படுகிறார். இரண்டாவது கனவில் விவரிக்கமுடியாத பேரிடி ஒன்றின் சத்தம் கேட்டு விழிக்கிறார், தனது அறையில் உள்ள “ஸ்டவ்வில்“ நெருப்பு பொறிகளை காண்கிறார். மூன்றாவது கனவில் தனது படுக்கை அருகில் உள்ள மேசையில் ஒரு சிறந்த அகராதியும், பழங்கால லத்தின் கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றும் இருப்பதைக்காணும் அவர் கவிதை தொகுப்பை எடுத்து புரட்டுகிறார், "என் வாழ்வில் எந்த பாதையை பின்பற்றுவது?" என்று துவங்கும் கவிதை கண்களில் படுகிறது. இக்கனவுகளில் அறிவியல் செயல்பாடுகள்தான் உண்மையான அறிவை நிரூபிக்கும் என்கிற தனது வாழ்வின் மையச்சிந்தனையை கண்டு அடைந்ததாக தெகார்தே முடிவிற்கு வருகிறார்.. காரணகாரியங்களை ஆராயும் பகுத்தறிவு என்கிற சிந்தனைக்கான திறப்பை காரணங்கள் அற்றதாக கருதப்படக்கூடிய கனவின் வழி பெறுகிறார். இந்த கனவுகளின் உள்ளொளிதான் அவரை பகுத்திறவு சிந்தனையை நோக்கி உந்தி தள்ளியது என்பது ஒரு நகைமுரண்தான்.

தெகார்தேவின் தர்க்கமுறைப்படி இன்றைய உலகம் கனவுபோன்ற கருத்துக்களால் ஆனது.. கனவிற்கும், விழிப்பிற்கும் வித்தியாசமற்ற தன்மையே உள்ளது. கடந்தகாலத்தில் மட்டுமே அவற்றின் வித்தியாசத்தை உணரமுடியும், அதாவது கனவில் இருப்பவர் எழாதவரை அது கனவு என்பதை அறியமுடியாது. கனவை அறிய விழிப்புகொள்ளும் நிலை தேவை என்பதால், ஒன்றை கனவா நிஜமா என்பதை நிகழ்ச்சி முடிந்தபின்னே அதாவது காலம் கடந்த பின்னேதான் அறியமுடியும் என்கிறது. கனவு மற்றும் நிஜ அனுபவங்களை வேறுபடுத்த விழிப்புநிலை அவசியம். விழிப்பற்ற நிலையில், இரண்டும் ஒன்றே. நாம் வாழும் உலகில் இப்படி சில கருத்துக்களை கனவுபோல உருவாக்கி வைத்துள்ளோம். அது கனவா நிஜமா என அறிய குறைந்தபட்சம் கடந்தகால அனுபவங்கள் பற்றிய நினைவிலேயே சாத்தியம். இந்த அனுபவங்கள் சந்தேகப்படுவதன் வழியாகவும் பகுப்பாய்வின் வழியாகவுமே உண்மையாக அறுதியிட முடியும். .

இப்பகுப்பாய்வின் வழி பெறும் உண்மைகளை புறவயமாகவும் அகவயமாகவும் பிளவுபடுத்தியது கார்டீசியம். புறவய உண்மை என்பதைவிட அகவய உண்மையே முக்கியமானது என்பதாக புற உண்மையான உடலை பின்னுக்குத் தள்ளி அக உண்மையான மனதை முதன்மைப்படுத்தியது. யதார்த்தமாக உள்ள இயல் உலகைவிட நீ என்ன சிந்திக்கிறாய் என்பதே முக்கியமானது என்கிற மறுமலர்ச்சிவாதத்தின் அடிப்படை இதிலிருந்துதான் உருவாகுகிறது. 1637-ல் தெகார்தேவால் வெளியிடப்பட்ட “டிஸ்கோர்ஸ் ஆன் த மெத்தேட்" (Discourse on the Method) என்கிற நூலே இச் சிந்தனையின் அடிப்படை. இச்சிந்தனைதான் மதங்களை அரச அதிகாரத்திலிருந்து நீக்கி அங்கு அறிவின் ஆட்சியை அமர்த்திய அதிகாரச் சிந்தனையின், மறுமலர்ச்சிக்காலத்தின், நவீன உலகின், அறிவியல் புரட்சியின், இன்றைய உலகப்பார்வையை உருவாக்கிய, நவீன மனிதனை கண்டடைந்த, அவனது மனதை கண்டடைந்த பகுத்தறிவு என்கிற அறிவு-விருப்ப எந்திரத்தின் இயக்கத்திற்கு காரணமாக அமைந்த சிந்தனை.

சிந்தனை என்பது கருத்து வடிவிலானது. உணர்வுகள் புலன்களால் தவறாக வழிகாட்டப்படலாம். அதனால் உணர்வையும், புலன் அனுபவத்தையும் வழிகாட்டியாக ஏற்கமுடியாது. “தூய அறிவே” உண்மையானது. அதுவே உண்மையை நோக்கி வழிநடத்தும் என்பது தெகார்தேவின் சிந்தனைக்கான அடிப்படையாகும். உண்மையைக் கண்டடைய உணர்வை அதாவது உடலின் புலன் அனுபவங்களை பின்னுக்குத் தள்ளி, அறிவை முதன்மைப்படுத்தியது. அறிவுவாதத்தை ஒரு தத்துவ நிலைபாடாக, மனித வாழ்தலின் அடிப்படையாக முன்வைத்தது. பகுத்தறிவின் அடிப்படை ஆய்வுக்கருவியான பகுப்பாய்வு தர்க்கத்தை (டிடக்டிவ் லாஜிக்) சிநதனைக்கான செயல்படும் கருவியாக (டிவைஸ்) உருவாக்கியது. அதாவது, ”பகுத்தறிவு” (ரேஸனாலிட்டி) என்கிற உலகப்பார்வையை உருவாக்கியது. உலகின் அனைத்து செயல்களும் காரண-காரியங்களால் ஆனது என்பதையும், பகுப்பாய்வின் அடிப்படையில் காரணங்கள் அறியப்பட்ட ஒன்றையே விஞ்ஞான நிரூபணமாக கொள்ளமுடியும் என்பதையும் அடிப்படை மனித சிந்தனை முறையாக கட்டமைத்தது.

கார்டீசிய உடலின் பிறப்பு

கார்டீசீயவாதம் அடிப்படையில் எந்திரவிழைச்சைக் கொண்டது. உடல் என்பது ஓர் எந்திரம், அது மூளையால் இயக்கப்படுகிறது. இது பொருட்பண்புகளைக் கொண்டது. இதன் இயக்கம் இயற்பியல் விதிகளால் ஆளப்படுகிறது. ஆனால், மனம் அல்லது சுயம் அல்லது ஆத்மா பொருட்பண்பற்றவற்றால் இயக்கமற்ற ஒன்றால் ஆக்கப்பட்டது. இது இயற்பியல் விதிகளால் ஆளப்படுவது அல்ல. மனிதர்களுக்கு மட்டுமே மனம் உள்ளது. மனம் மனித மூளையில் உள்ள “பினைல் கிளான்டால்“ வினைபடுகிறது. மனிதன் உடலும் மனமும் கொண்டவன். மனம் உடலை கட்டுப்படுத்தும், பகுத்தறிவற்ற நிலையில் மனம் உருவாக்கும் உணர்வுகளால் உடல் பாதிக்கப்படும் என்பதே கார்டிசீய மனிதனுக்கான வரைபடம். அறிவார்ந்து செயல்படுபவனே மனிதன். அவனது அடிப்படையான அறிதல் பகுத்தறிதல். உணர்வுகளால் ஆளப்படாமல் சிந்தித்து செயல்படுபவனாக இருக்கவேண்டும். சிந்தனை என்பது பகுப்பாய்வு முறையில், சந்தேகங்கள்-ஆய்வு-உண்மையை கண்டறிதல்-கண்டறிந்த உண்மைகளை மீண்டும் சந்தேகப்படுதல் என்கிற வட்ட வளர்ச்சியைக் கொண்டது. மனிதன் என்பவன் சிந்திக்கும் உடலாக உள்ளான். காரணகாரியங்களை ஆய்வது மனிதனின் அடிப்படை செயல்பாடாகும். காரணங்கள் அறியாதவை, அறியப்படாதவை, அறியமுடியாதவை என்பவை எல்லாம் இல்லை. அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. மனிதனை உணர்ச்சிசார்ந்த உடல்களாக மட்டுமே அடையாளப்படுத்திவிட முடியாது. இன்று நாம் மனிதன் என்று சொல்வது கார்டீசிய உடல்களையே. அல்லது தனது பகுத்தறிவை பயன்படுத்தும் ஒரு உடலே மனிதன்.

காரண-காரியவாத்தை தெகார்தே கிரேக்க ஸ்டோயிக்குகளின் சிந்தனைகளிலிருந்து பெறுகிறார். கிரேக்க ஸ்டோயிக்குகள் அறிவினைப் பயன்படுத்தி காரணங்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினார்கள். அறிவினால், ஆய்வினால் உண்மையை பொய்யிலிருந்து பிரித்தறியமுடியும். உணர்வுகள் தொடர்ந்து புலன்கள் வழி பெறும் பதிவுகளை மனம் உணர்வுகளாக பதியவைக்கிறது. உணர்வுகளை அதன் பதிவுகளை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டது மனம். யதார்தத்திலிருந்த உண்மையான பதிவுகளை பொய்மையிலிருந்து வித்தியாசப்படுத்தி அறியும் திறன் கொண்டது. சிலவற்றை உடனடியாக தீர்மானிப்பதாகவும் சிலவற்றை தீர்மானிக்காமலும் நம்பிக்கை அல்லது ஒப்பீனியன் என்ற பெயரால் இருத்தி வைத்திருக்கிறது. காரணங்களின் வழியாகவே சரியான ஒன்றை அடையமுடியும். என்கிற ஸ்டாயிக்குகளின் சிந்தனை முறையை கார்டீசியவாதம் வளர்த்தெடுத்து நவீன உலகிற்கான தத்துவமாக ஒழுங்குபடுத்தியது.

மேற்கத்திய சிந்தனையின் கிரேக்க தத்துவ இயலில் உள்ள ஒருமைவாதம் மற்றும் இருமைவாதம் என்கிற சிந்தனையில் இருமைவாதத்தை ஒரு உலகப்பார்வையாக வளர்த்தெடுத்தது. பிரஞ்சு சிந்தனையாளரான டெலியுஸ் சுட்டிக்காட்டுவதைப்போல, ஒருமைவாதம், பன்மைவாதம் என்பதற்கு பதிலாக இருமைவாதம் என்கிற ஒன்றை நிலைநிறுத்தியது கார்டீசியவாதம். இந்த இருமைவாதத்தில் தீர்ப்பு என்கிற மதம்சார்ந்த அறநிலைப்பாடு அடிப்படையாக அமைந்திருப்பதைக் காணலாம். அதாவது ஒருமை, பன்மை என்பதில் நீதியியல் நோக்கோ, அதை சார்ந்து நிற்கும் மையமோ இல்லை. அதாவது ஒருமையில், மையமே ஒருமைதான். அதனால் அதில் மையம் இல்லை. பன்மை மையமற்றது. அல்லது பல மையங்களைக் கொண்டதாக உள்ளதால் அதனை மையம் என்பதாக கொள்வதற்கில்லை. ஆனால் இருமையில் மையமே அடிப்படை. ஆக, மனித சிந்தனையில் மையத்துவ சிந்தனையை உருவாக்கியது கார்டீசியத்தின் ஒரு முக்கிய விளைவாகும். அல்லது மையவாதம்தான் இருமைவாதத்தின் அடிப்படை எனலாம். இந்த மையவாதம், மார்க்சியம், பிராய்டியம், அமைப்பியல் என எல்லா சிந்தனைகளிலும் அடிப்படை பார்வை நிலையாக அமைந்துள்ளது. உலகினை நீதியியல் நோக்கில் சிந்திக்கத் தலைப்படுத்தியது. கார்டீசிய இருமைவாதம் கட்டமைத்த மனிதனின் உடல்-ஆன்மா பிளவை, அதன் இறுதி எல்லைக்கு எடுத்து சென்றவர் லக்கான். சமூக இயக்கம் என்பது தான்-பிறர் எனகிற இருமைக்குள் சிக்கியிருப்பதாக வர்ணித்தார். அதனால்தான் டெல்யுஸ் லக்கானை கடைசி கார்டீசியன் என்று அழைத்தார். ஏனெனில் கார்டீசிய வாதத்தின் அதிகபட்ச சாத்தியத்தை லக்கான் முன்வைத்தார். கார்டீசிய பிளவின் லக்கானிய சமூக-அரசியல் வடிவம் என்பது இந்த தான்-பிறர் என்கிற இருமை எதிர்வு எனலாம்.

கார்டீசியவாதப்படி ஓர் உடல் சிந்திக்கும் பொருளாக (thinking thing) இருப்பதால் அது மனிதனாகிறது. உடலின் அகநிலை என்பது சிந்திக்கும் பொருள், புறநிலை என்பது சிந்திக்காத பொருள் என்று பிரித்ததின் வழியாக, உலகின் இந்த பிரபஞ்சத்தின் மையமாக மனிதனையும், அவனது சிந்தனையையும் முன்வைத்தது. மனித உடல் சிந்திப்பதால் பிரக்ஞையடைகிறது. பிரக்ஞையடைவதால் தன்னை உணர்கிறது. தன்னை உணர்தலே இருத்தலுக்கான சான்று. தனிமனிதனின் இருப்பு என்கிற ஒரு நிலை கண்டடையப்படுகிறது. சமூக மனிதனிலிருந்து தனிமனிதன் பிரிக்கப்படுகிறான். இப்படியாக கார்டீசியம் அகநிலையின் தீவிரத்திலிருந்து, தியானத்திலிருந்து, பகுப்பாய்வுச் சிந்தனையிலிருந்து தனிமனிதனைப் பெற்றெடுத்தது. இன்றைய தனிமனிதனின் வயது சுமார் 300 ஆண்டுகளே. இந்த தனிமனிதன் தனது இருப்பை உணர சிந்திப்பதே அடிப்படையான செயலாகிறது. சிந்தனையின் முதல்படி சந்தேகம் கொள்வது. எல்லாவற்றையும் சந்தேகிப்பது என்பதே தெகார்தேவின் டிஸ்கோர்ஸில் அடிப்படையான உண்மை கண்டறியும் கருவியின் துவக்கமாகும்.

இக்கருவி கிரேக்க சந்தேகவாதத்தின் (ஸ்கெப்டிசிசஸம்) அப்படையில் உருவானது. எல்லாவற்றைம் சந்தேகிப்பதன்மூலம், அறிவையும் அதனால் உண்மையையும் கணடறியமுயும் என்கிற “கார்டீசிய சந்தேகத்தால்“ உருவானது. ஒருவன் நான் இருக்கிறேனா? என்று சந்தேகப்பட்டால், அதுவே அவன் இருக்கிறான் என்பதற்கான சாட்சி. ஏனென்றால் அவனது சந்தேகம் என்பதே சிந்தனை. அவன் சிந்திக்கிறான் அதனால் அவன் இருக்கிறான் என்கிறார் தெகார்த்தே. சிந்திப்பதால்தான் அவன், அவனாக அதாவது ஒரு “சுயமாக” ஆகிறான். இதன் மறுதலையாக, சிந்திக்காத உடல் சுயமற்ற உடல். எனவே, சிந்திப்பதே உடலிற்கான சுயமாகிறது. வேறுவிதமாகக் கூறினால், சுயமற்ற உடல் மனித உடல் அல்ல. இங்கு சுயம் என்கிற பிரக்ஞைதான் உடலின் மையப்புள்ளி ஆகிறது. இந்த சுயம்தான் மனம். உடலைவிட மனதை மிகச்சரியாக அறியமுடியும். ஒருவனது அடையாளமே அவனது சுயம்தான். ஒரு உடல்மீதான சுயம் சார்ந்த அடையாள எழுதுதலின் துவக்கம் இதான். அதாவது மனித உடல் பொதுவானது, சாராம்சமானது. சுயம் என்பது தனித்துவமானது. அதுதான் அடையாளம். இந்த அடையாளம்தான் ஒருவனை தனிமனிதனாக ஆக்குகிறது. ஒவ்வொரு மனிதனும் சுயவிருப்பு கொண்டவன் என்றவகையில் சுய அடையாளம் கொண்ட தனிமனிதனாக உள்ளான். சுயமற்ற, பிரக்ஞை தவறிய மனிதனை மனப்பிறழ்ச்சியாளன் என்கிற அடையாளமும், அவனை மனித அடையாளத்திலிருந்து பிரிப்பதற்கான ஒரு தத்துவ அடிப்படை இதில் இருப்பதைக் காணலாம். இப்படியாக, சமூகத்தின் மையப்பாத்திரத்தை ஆற்றுபவனாக தனிமனிதன் கண்டடையப்படும் செயல் நடந்தேறுகிறது. அதன்பின் மனம் பற்றிய ஆய்வுகள் துவங்கி அது பிராய்டில் முழுமையடைகிறது. மனம் உள்ளவனே மனிதன். அவன்தான் தனிமனிதன். மனமற்ற மனிதன் இருப்பற்றவன். இருப்பற்றவன் சாராம்சமற்றவன். மனித சாராம்சவாதத்தின் முதல் வித்து இதில்தான் உள்ளது. இந்த காஜிட்டோ சாராம்சவாதத்தில் சிக்கிய இந்த நூற்றாண்டின் இரண்டு பெரும் சிந்தனைகளை புரிந்துகொள்வது அவசியம். ஒன்று பிராய்டியம் மற்றொன்று மார்க்சியம். இவை இரண்டுமே இந்த உடல் மனம் பிளவு என்கிற கார்டீசிய இருமைவாத காஜிட்டோவின் அடிப்படையில், ஒன்று மனம் உடலை இயக்கும் என்றது மற்றது உடல் மனதை பாதிக்கும் என்றது. இரண்டுமே மனித சிந்தனை என்பதின் கார்டீசிய அடிப்படையை ஏற்றுக்கொண்டன. தங்களது சொல்லாடல்களங்கள் இயங்கும் தளமாக கார்டீசிய மனித உடலையே அடிப்படையாகக் கொண்டு உள்ளன.


[i] ஆத்மா என்பது ஆத்மன் என்கிற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் சுவாசும் (breath) என்பதாகும். Inner self என்று பொருள்தரும் சுயம் என்கிற நவினத்துவ சொல்லாடலை இதற்கு இனையானதாக சொல்லலாம். இந்திய தத்துவ தரிசனங்களான அத்வைதம் துவங்கி புத்தம்வரை ஆத்மா பற்றிய பல விளக்கங்களை சொல்கின்றன. விரிவான பொருளை அறிய பார்க்க A concise Dictionary of Indian Philosophy Sanskrit Terms Defined in English. John Grimes. State University of New York. (1996) Page 69-70. இதற்கு இணையான சொல்லாக பைபிளில் பயன்படுத்தப்படும் சொல் soul என்பது. இதன் மூலமான ஹீப்ரு மொழியல் இது Nephesh எனப்படுகிறது. இதன் ஒரு பொருள் சுவாசிக்கும் உடல் என்பதே. பைபிளின் ஆதாமின் கதையில் அவருக்கு சுவாசம் GOD ஆல் ஊதப்பட்டதை குறிப்பதாக உள்ளது.

இக்கட்டுரை மந்திரச்சிமிழ் அக்டோகர்-2010 – மார்ச்-2011 – இதழில் வெளிவந்துள்ளது. இது நீளம் கருதி பகுதிகளாக  இங்கு வெளியிடப்படுகிறது.

-ஜமாலன் (07-12-2010)  மந்திரச்சிமிழ் (அக்டோபர்-2010-மார்ச்-2011)