கார்டீசிய மனங்களும் கார்டூனாகிய உடல்களும் - தெகார்தேவின் மூன்று கனவுகள் – பகுதி-1

இக்கட்டுரை மந்திரச்சிமிழ் அக்டோகர்-2010 – மார்ச்-2011 – இதழில் வெளிவந்துள்ளது. இது நீளம் கருதி பகுதிகளாக  இங்கு வெளியிடப்படுகிறது.

முன்னோட்டம்.

MANDHIRACHIMIZH WRAPPER PG 1(CURVED) நவீன மனிதன் கார்டீசிய மனமும் கார்டூன் உடலும் கொண்டவன் என்பது பற்றிய ஒரு வர்ணனையை விளங்கிக்கொள்ள முயல்வதே இங்கு எழுத்தாக நிகழ்கிறது கார்டீசியன் என்பதை தமிழ் படுத்தமுடியாது என்கிற இடைஞ்சலில்தான் இவ்வெழுத்து துவங்குகிறது. இந்த இடைஞ்சலுக்குப் பின்னணியில் ஓர் அரசியல் உள்ளது. அந்த அரசியலுக்குப்பின் ஒரு மன அமைப்பு உள்ளது. அந்த மனஅமைப்பை தாங்கிய ஒரு உடலமைப்பு உள்ளது. அந்த உடலமைப்பிற்கு மனிதன் என்கிற ஒரு உலகளாவிய அடையாளம் உள்ளது. அமெரிக்க வங்கிகள் பொருளாதார மந்தத்தில் சரியும்பொது, தமிழனாக தன்னை உணரும் அந்த இடைஞ்சலுக்குட்பட்ட மனித உடல் பாதிக்கப்படுகிறது. உலகில் பல மனித உடல்கள் பதற்றுத்துக்கு உள்ளாகிறது. பில்கிளின்டன் மோனிக்காவை காதல் கொண்டதாக அறிவிக்கப்பட்டபோது, உள்ளுர் தமிழனாக உள்ள அந்த உடல் கிளர்சியடைந்தது, வம்பளந்தது, ஆர்வம் கொண்டது, தனது ‘கள்ள' உறவுடன் அதை இணைத்து ரசித்தது. குடும்ப அமைப்பிற்குள் அமர்ந்து குதர்க்கம் பேசியது. பிள்கிளின்டனும் தானும் மனிதன் என்கிற ஒரே உடல், ஒரே உணர்வு கொண்டதாக எண்ணி இருமாந்தது. உணர்வுரீதியாக உலகெங்கும் மனித உடல் என்பது ஒன்றுதான் என்று எண்ணிக்கொண்டது. உயிர்வாழ்தலுக்கான அச்சம் துவங்கி பேருண்மைகளை அறிந்து ஞானமாக மாறிவிடும் விடுதலை அல்லது மோட்சம் வரை பலவகை உணர்வுகள் பாய்ந்து சென்றபடி உள்ளது. ஒரு உடல் மனிதனாக வாழ இத்தகைய உணர்வுகளை உணர்வது அவசியமாகிறது. உடல் இந்த உணர்வுகளால் மனிதர்களான கதையை துவக்கிய சொல், தத்துவம், அறிதல்முறைதான் கார்டீசியம் என்பது.

கார்ட்டூன் என்பதற்கு கேலிச்சித்திரம், குறும்புச்சித்திரம் போன்ற தமிழில் அறிமுகமாகி உள்ள தொலைக்காட்சி சொற்களை பயன்படுத்தி விளக்க முடியாது. இங்கு அதற்கான பொருள் வேறு. கார்ட்டூன் என்பதை ஒருவரது சுயத்தை பகடியாக வரையப்பட்ட அவரது உருவத்தின் வரைபடம் எனக் கொள்ளலாம். ஒரு உடலில் ‘மனிதன் என்கிற குறிப்பான சில பண்புகளை உருவாக்கி, அந்த பண்புகளை ‘சுயம்’ என்பதாக குறியிட்டு அச்சுயத்தை உணர ஒரு பிறரை உருவாக்கி, அதை வெளிப்படுத்தும் வண்ணம் வரையமுயன்ற ஒரு நவீனத்துவ ஓவியம் இறுதியில் கார்ட்டூனாகிவிட்டதை குறிப்பதற்கே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. சுயமாகவும், பிறராகவும் ஆகிவிட்ட மனிதர்கள், ஒருவரை ஒருவர் கண்டு கார்ட்டூனாகக் களிக்கும் விளையாட்டுப் பரப்பாக விரிக்கப்பட்டுள்ளது இச்சமூகம். ஆனால், அது விளையாட்டு அல்ல ஆழ்ந்த பொருளுள்ள அரங்கோ, கடவுளால் உருவாக்கப்பட்ட மேடையோ என ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மாயத்தோற்றம் உடல்களின் மனிதன் என்கிற கார்ட்டீசியம் உருவாக்கிய கார்டூனியத் தன்னிலையை, கார்டூனிய வாழ்வை மறைக்கிறது. அதாவது, உடல்களின் வாழ்தல் என்பது உருவங்களின் அதிலும் கேலிச்சித்திர உருவங்களின் வாழ்தலாகிவிட்டது. இந்த கேலிச்சித்திரங்களின் சுயம் கார்டீசிய தத்துவச் சித்தனை உருவாக்கிய ‘மனம்' என்கிற அல்லது ‘ஆத்மா' என்கிற 'சுயம்' என்கிற 'தன்னிலை' என்கிற ஒன்றின் விளைவு..

அறிமுகம்.

தத்துவம் ஒரு தியானமாக, உள்ளுணர்வாக, ஆத்ம விசாரமாக, உரையாடலாக, கோட்பாடாக, விஞ்ஞான அறிவாக, தொகுப்பறிவாக, புலனறிவாக, புலனுணர்விலிருந்து அறிதலுக்கு செல்லும் முறைப்படுத்தப்பட்ட அறிவாக, திண்ணைப் பேச்சாக, குருபரம்பரை விவாதங்களாக, தவப்பயனில் விளைந்த விசாரமாக, தெய்வகடாட்சமாக, ஞானமாக, யோகமாக, கர்மமாக, மர்மமாக, மாயமாக, மந்திரமாக, தந்திரமாக, விழிப்புணர்வாக, உள்ளொளியாக, தரிசனமாக. கரிசனமாக, செயல்பாடாக, நடைமுறையாக, புரியாமையாக, தெளிவாக, தனிமனித தன்முனைப்பாக, … இன்னபிறவாக... பல வடிவங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து விலகி தத்துவத்தை ஓர் அறிதல் எந்திரமாக முன்வைத்து ஆராய முனையலாம்.

தத்துவம் என்றால் என்ன? என்கிற கேள்வியைவிட தத்துவம் எதற்கு? தத்துவத்தின் பணி என்ன? என்கிற கேள்விகள்தான் முக்கியமானவை. இதுநாள்வரையிலான தத்துவத்தின் அடிப்படை பிரச்சனை ஓர் உடலுக்கு அல்லது சமூகம் என்கிற கூட்டுஉடலுக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தை அறிவது. பிரபஞ்சத்தை உடலின் அறிவிற்கு உட்பட்டு விளக்கப்படுத்துவது. உடல் எந்திரத்தின் அறிதல் கருவிகளை இயங்கிக்கொண்டிருக்கும் பிரபஞ்ச எந்திரத்துடன் இணைப்பது. இப்படி இணைப்பதன் வழியாக ஓர் உடலின் அறிதல் எந்திரத்தின் இயக்கத்தை துவங்கிவைத்து, இடையறாது இயக்குவது. அதை முடுக்கிக்கொண்டிருப்பது. புறப்பொருளை பற்றிய புரிதலை மற்றும் அறிதலை உருவாக்குவது. உடலுக்கும் புறஉலகிற்கும் இடையிலான உறவை உருவாக்குவது, இயைபுபடுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஓர் உடலின் பிறப்பு மற்றும் இறப்பு என்பதற்கிடையிலான ஊடாட்டத்தில், வாழ்தலில், அறிதல்புலனை கட்டமைப்பது தத்துவத்தின் முக்கியப்பணியாக உள்ளது. இப்புலன்வழி இதம்-வாதை என்கிற உடலின் உயிர்த்தல் செயல்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு அறிதலின் விளைவாக அடையாளப்படுத்தப்படுகிறது. சமூகத்தின் மகிழ்வுந்தங்களை இயக்குவதில் தத்துவம் அறிதல்புலனாக மாறி மன அமைப்புகளை உருவாக்குவதாக உள்ளது.

தத்துவம் என்கிற சொல் சமஸ்கிருதத்திலிருந்து ஆளப்படுகிறது. தமிழில் அது மெய்யறிவு என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. அர்த்தரீதியாக மெய்யறிவு என்பது தத்துவத்தின் உட்பொருளை சொல்லும் சொல்லே. அர்த்தம் என்பதும் சமஸ்கிருதச் சொல்தான். அர்த்தம் என்பது matter, thing and meaning [i]  என்கிற ஆங்கிலச் சொல்லின் மூன்று அர்த்தங்களையும் குறிப்பதற்கான சொல்லாக உள்ளது. இங்கு ஆங்கிலச் சொற்களின் அடிப்படையாக கொண்டு இதனை ஏன் விவரிக்கிறோம் என்பதற்கான காரணங்களை கண்டறிவதும் இக்கட்டுரையின் நோக்கங்களில் ஒன்று என்பதால் இறுதியில் இதனை புரிந்துகொள்ளலாம். அர்த்தத்தை தொடர்வோம். அர்த்தா என்பது பொருள் மற்றும் பொருள்கொள்ளப்படும் என்பதற்கும் பகரமான சொல்லாகவே சமஸ்கிருதத்திலும் உள்ளது[ii]. சொல்லை பொருள்கொள்வது (meaning) என்பது சொல்லை பொருளாக (matter) கொள்வதுதான். ஆக, சொல்லும் பொருளும் ஒன்றுதான். சொல் சொல்லாக இருப்பதும், பொருளாக இருப்பதும் அது இயங்கும் புலம் சார்ந்ததாக உள்ளது. இயக்கமற்ற சொல் பொருளாக உள்ளது. இயங்கும் பொருள் சொல்லாக உள்ளது. e=mc2 என்பதைப்போல. சொல் சொல்லாகவும் பொருளாகவும் இயங்குவதில்தான் தத்துவத்தின் விளையாட்டு துவங்குகிறது. மொழியை ஒரு பொருண்மைமிக்க ஊடகமாக மாற்றுவது தத்துவம்தான். அதனால்தான் எல்லா மதங்களும் மொழியை படைப்பின் முக்கியக் கூறாகக் கொள்கின்றன. மதம் என்கிற இந்த சொல் தரும் பொருள், மதங்கள்தான் ஒரு முறைப்படுத்தப்பட்ட உலகை உருவாக்கின என்பதாற்காகத்தான். மதங்கள்தான் அப்பாலை என்கிற கடந்துசெல்லும் கறபனைகளை மொழி சார்ந்த புலத்தில் இறக்கின. மதங்களுக்கு முன்பாக இதனை தத்துவங்கள் செய்தன. தத்துவத்திலிருந்து இந்த கற்பனை மதங்களின் சொத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது புழக்கத்தில் மெய்யறிவைவிட தத்துவம் என்ற சொல்லே தத்துவம் சார்ந்த வினைகளுக்கான திறப்புச் சொல்லாக உள்ளதால் அதையே இங்கு பயன்படுத்தலாம். தத்துவம் தத்+துவம் என்கிற இரண்டு வேர்ச்சொல்களை இணைப்பாகக் கொண்டது. “தத்“ என்பது ‘that’ என்கிற ஆங்கிலச்சொல்லிற்கு இணையான “அது“ என்கிற பொருள்கொண்டது. “துவம்“ `ness’ என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான “நிலையை குறிப்பது” (state off). அதாவது “that-ness’ ஒன்றின் சாராம்சத்தை அல்லது சாராம்ச-இருப்பை அறிதல் என்று இதனை பொருள்கொள்ளலாம்[iii]. அதாவது, தத்துவம் என்ற சொல்லின் வேர்ப்பொருள் எந்த ஒன்றினதும் சாராம்சத்தை அறிதலே. பொருட்களின் தானேயான பண்பை விளக்குவது. வேர்ச்செல்லை தேடுவது செல்லின் உருவாக்ககால சிந்தனையை புரிந்துகெள்ளவே. இவ்வேர்ச்செல்லிலிருந்து, தத்துவத்தின் சொல்லாடல் (discourse) என்பது ‘இறைமை அல்லது முழுமுதல் உண்மை (பேரிருப்பு), தனி உடல் (individual) மற்றும் அண்டம் (பிரபஞ்சம்) என்கிற மூன்றையும் விளக்குவது. அவற்றின் உண்மையான இருப்பை தேடுவது. அவற்றை உறவுபடுத்தி விவரிப்பது’[iv]. தத்துவம் குறித்த இந்திய சிந்தனையின் சுருக்க வருணணை இது.

‘குறிப்பாகச் சொன்னால் பேருண்மைகளை (Nobel truth or Absolute truth) அறிவதுதான் தத்துவத்தின் அடிப்படையான செயல்பாடு’. என்று ஒற்றை வாக்கியமாகச் சுருக்கலாம். இந்த வாக்கியத்தை நவீனத்துவ வாக்கியமாக இன்றைய பொதுபுத்தி சார்ந்த புரிதலில்தான் எழுதுகிறோம் வாசிக்கிறோம். இவ்வாக்கியத்தில் உள்ள ‘அறிவதுதான்' என்பதில் பேருண்மையின் இருப்பை அங்கீகரிக்கும் தன்மை இருப்பதை உணரலாம். இந்த வாக்கியத்தை சொல்பவர்கள் விவாதிப்பவர்கள் அனைவரும் இந்த பேருண்மையின் இருப்பை அங்கீகரித்த நிலையில்தான் இதனை பயன்படுத்துகிறோம். இப்பேருண்மைகள் ஓர் உடலுக்கு உள்ளாகவா? வெளியிலா? என்கிற வாதவிவாத விளையாட்டில் தத்துவ முகாம்கள் பல கிளைகளாக பிரிகின்றன. இக்கிளைகள்தான் தத்துவம் குறித்த பல பேச்சுக்களை, அதன் பொழிப்புரைகளை, அதன்வழியாக பல இருப்புகளை பெருக்குகின்றன. இவ்வாக்கியங்களின் எடுத்துரைப்பில் உள்ள இத்தன்மையை தலைகீழாக்கினால், தினவாழ்வில் உள்ள யதார்த்த உண்மைகளைவிட பேருண்மைகள்தான் அறிதலின் அதிகபட்ச எல்லையாக உள்ளதை உணரலாம். யதார்த்த உண்மைகள் என்பது இந்த எல்லைப்படுத்தலுக்கு உட்படுவதால், இவற்றை கடந்தே பேருண்மையை உணரமுடியும் என்பதான கடந்து செல்லுதல் என்கிற தொழில்நுட்பமாக தத்துவம் மாறிவிடுகிறது. இங்கு வாழ்விற்கும், வாழ்விற்கு அப்பாலும் என்பதாக உண்மை பிளவுபடுத்தப்படுகிறது. இப்பிளவின் அடிப்படை அனுமானத்திலிருந்துதான் தத்துவம் தனது சொல்லாடல் விளையாட்டைத் துவங்குகிறது.

மேற்கண்ட வாக்கியம் எப்படி எழுதப்படவேண்டும் என்றால், ‘குறிப்பாகச் சொன்னால் பேருண்மைகளை மொழிதல், கதைத்தல் மற்றும் சொல்லுதல்தான் தத்தவத்தின் அடிப்படையான செயல்பாடு’ என்பதாக. இவ்வாக்கியம் பேருண்மையின் கடந்தநிலைவாதத்தை (transcendence) அல்லது தேடலை விடுவித்துவிடுகிறது. பேருண்மை என்பது ஒரு கதையாடலாக மாறிவிடுகிறது. இக்கதையாடல் சமூகக்கதையாடலாக இருப்பதால், சமூக அறிவை. உலகப்பார்வையை கட்டமைப்பதாக உள்ளது. இயல் உலகு ஒன்று உருவாகுகிறது. இந்த இயல் உலகின் பிரதிபிம்பமாகவும், இலட்சிய பிம்பமாகவும் பேருண்மைக்கொண்ட உலகு படைத்தளிக்கப்படுகிறது. தத்துவத்தின் பணியாக இந்த பேருண்மை விவரிக்கப்படுகிறது. அதை அடைவதற்கான வழிமுறைகள் கதைக்கப்படுகின்றன. இக்கதைகளில் உடல் எந்திரம் அரைபடத் துவங்குகிறது. இவ்வரைபடலில் தத்துவம் என்பது ஓர் அறிதல் எந்திரமாக உடலின் போக்குகளை இயக்குவதாக செயல்படுகிறது.

டெல்லியுஸ்-கத்தாரி கூறுவதைப்போல தத்துவம் என்பது புதிய கருத்தாக்கங்களைப் படைப்பதே (create). இதன்பொருள், தத்துவங்கள் பேருண்மையை தேடுவதல்ல, வாழ்வதற்கான பல கருத்தாக்கங்களை உருவாக்குவதே. இப்படியாக, தத்துவங்களின் பேருண்மை தேடும் பணி கழன்று போய்விட்டிருக்கிறது. இனி தத்துவஞானியின் தரிசனங்கள் என்பது அவரது பதிய கருத்தாக்க உருவாக்கத்தின் வழியாக, வாழ்வை பாதிப்பதே (affect). தத்துவத்திற்கு விளைவு இல்லை பாதிப்புகளே உண்டு (philosophy is having no effects but it only affects). விளைவு என்பது விஞ்ஞானம் சார்ந்த சொல்லாடல். பாதிப்பு என்பது கலைசார்ந்த சொல்லாடல். ஆக, தத்துவம் விஞ்ஞான விசாரத்திலிருந்து நிரூபணங்களில் இருந்து வாழ்வின் கலையாக மாறிவிட்டது. எந்த ஒன்றையும் அறிய தத்துவம், கலை, அறிவியல் என்கிற மூன்றுவித பார்வைகளே சாத்தியம் என்கிறார்கள் டெல்யுஸ்-கத்தாரி. தத்துவம் கலையையும் விஞ்ஞானத்தையும் இணைத்த ஒன்றாக இருப்பதால், அது உலகப்பார்வையை, அறிவை சுட்டுவதாக உள்ளது. விஞ்ஞானமோ கலையோ இரண்டுமே தத்துவத்தால் இயக்கப்படுகிறது என்பதே முக்கியம்.

தத்துவங்கள் மேற்கில் தத்துவ விசாரங்களை அடைந்த சிந்தனையாளர்களின் பெயராலும், இந்தியாவில் தத்துவத்தின் உள்ளடக்கத்தின் பெயராலும் குறிக்கப்படுகிறது. சங்கரரின் வேதாந்த தத்துவம் அத்வைதம் என்கிற அச்சிந்தனையின் மையமான இரண்டாவது இல்லை (அல்-துவைதா) என்கிற சாராம்ச சிந்தனையின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. மேற்கில் பிரஞ்சில் தோன்றிய தெகார்தேவின் அல்லது கிரேக்கத்தில் தோன்றிய அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் அவர்களது பெயரால் அழைக்கப்படுகிறது. சங்கரவாதம் என்று சொல்லப்படுவதில்லை, ஆனால் கார்டீசியவாதம் என்று சொல்லப்படுகிறது. இது கிழக்கின் மற்றும் மேற்கின் பெயரிடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல உலகப்பார்வையில் உள்ள தொகுப்பாய்வு, பகுப்பாய்வு அடிப்படையிலான சிந்தனை வேறுபாடும்கூட. இந்திய தத்துவ சிந்தனை தொகுப்பை நோக்கியது என்றால், மேற்கின் சிந்தனை பகுப்பை நோக்கியது எனலாம். தத்துவத்தின் இந்த பகுப்பாய்வு முறையை விஞ்ஞானம் பற்றிய அறிவிற்கான அடிப்படையாக மாற்றியது கார்டீசியவாதம். பொதுப்புத்தியில் இது மனிதர்களின் பகுத்து அறியும் அறிவுவாதமாக மாறியது. ஆக, பகுத்தணர்தல், தொகுத்துணர்தல் என்கிற மரபான தத்துவ அறிதலில் கருவிகளை கைவிட்டு கார்டீசியத்தை சிதைவாக்கம் செய்வதன் வழியாக இன்றைய மனிதனின் அறிதல் முறையை புரிந்துகொள்ள முடியும்.


[i] இவ்விரண்டு சொற்களும் வேறு நுட்பமான அர்த்தங்களைக்கொண்டவை. என்றாலும் கார்டீசய தத்துவம் திங் என்பதை பயன்படுத்துவதால் அதையும் இணைத்து சிந்திக்க வேண்டி உள்ளது.

[ii] Artha – Wealth, meaning of a word; object; thing; purpose; aim (from the verb root arth = ‘to request the sense, to point out”) A concise Dictionary of Indian Philosophy Sanskrit Terms Defined in English. John Grimes. State University of New York. (1996) Page 54

[iii] A concise Dictionary of Indian Philosophy Sanskrit Terms Defined in English. John Grimes. State University of New York. (1996) Page 318.

[iv] A concise Dictionary of Indian Philosophy Sanskrit Terms Defined in English. John Grimes. State University of New York. (1996) Page 318 .

(தோடரும்.)

-ஜமாலன் (07-12-2010)  மந்திரச்சிமிழ் (அக்டோபர்-2010-மார்ச்-2011)

புத்தகச்சந்தை-2011 பதிப்பகங்கள் எனும் அறிவின் அதிகாரமையங்கள்

தமிழ்ப் புத்தக சந்தை 2011 அல்லது புத்தக கண்காட்சி-2011 பற்றி எழுத யோசித்தபோது இத்தகைய சந்தைகளின் இயக்க சக்திகளான பதிப்பகங்கள் பற்றிய கருத்துக்களை பகிரலாம் என்று தோன்றியது.

clip_image001[1]புத்தகக் கண்காட்சியை கடைசியாக பார்த்தது 1990-ல். தோழர் பொதியின் சிலிக்குயில் பதிப்பகத்தின் கடையில்தான் நண்பர்களை சந்திப்பது வழக்கம். அப்போது தோழர் பொதியுடன் புத்தக மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு இலக்கிய கூட்டங்கள், சிறிய கண்காட்சிகளில் கடைபோடுவது வழக்கம். 80-களில் தீவிரமாகிய சிறுபத்திரிக்கை இயக்கம், இத்தகைய சிறு பதிப்பக அமைப்புகளால் பரவலாகிக் கொண்டிருந்த காலம். அன்று இலக்கு என்கிற சிறுபத்திரிக்கைகளின் கூட்டமைப்பு ஒன்று இருந்தது. அதன் இலக்கு இலக்கிய எழுத்துக்களின் போக்குகளை பரிசீலிப்பதும், அவற்றை புத்தகங்களாக்கி ஆவணப்படுத்துவதும். இலக்கால் “எண்பதுகளில் கலைஇலக்கியம்“ என்கிற கருத்தரங்கு ஒன்று நடந்தது. அன்று சிறுசூழல் என்கிற ஒரு அமைப்பு இயங்கியது. வளர்ச்சி என்பது “பெரிது“-என்பதில் இருப்பதில்லை “சிறிது“-என்பதில்தான் உள்ளது என்பதை கவனத்தில் கொள்வோம். சிறிதாக உள்ளதே வளரும். வளர்வதற்கான கூறுகளைக் கொண்டது. பெரிது என்பது வளர்ந்து வேர்பரப்பி நிற்பது. எப்போதும் சாராம்சம் என்கிற அடையாள ஆணிவேர் பாவாத சல்லிவேர்களைப் பரப்பிய “சிறிதா“-க உருவாகுதல் என்பது பாசிசமயமாக்கலுக்கு எதிரான ஒரு அரசியல் நிலைபாடும்கூட. இதுதான் இதில் கவனிக்கவேண்டிய அம்சம். பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ளல், வலியவற்றுடன் அடையாளம் காணுதல் இப்படித்தான் பாசிச மனம் உருவாகுகிறது.

80-களில் வெகுசன பத்திரிக்கைகள் சிறுபத்திரிக்கைகள் என்கிற பிரிவு இருந்தது. இடைநிலை என்கிற “பாலம்“-போடும் பத்திரிக்கைகள் சில தோன்றி தோன்றி மறைந்து கொண்டிருந்தன. சுபமங்களா துவங்கி அந்த போக்கு வளர்ந்தது. பாலச்சந்தர்-கோமல் சுவாமிநாதன் இணைந்து வெளியான ”தண்ணீர் தண்ணீர்” உருவாக்கிய “பிரபல்யம்“ இத்தகைய பத்திரிக்கை ஒன்றின் தேவையை அவருக்கு உருவாக்கியிருக்கலாம். 90-களில் அந்த போக்கு தீவிரப்பட்டது. அன்று சிறுபத்திரிக்கையால் “ஒவ்வாமை“-யாகக் கருதப்பட்ட குமுதம் என்கிற நிறுவனம் வெளியிடும் “தீராநதி“ போன்ற பத்திரிக்கை அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது. ஒருவகையில் சமூகச்சூழல் வாசிப்பின் பரவலாக்கம், கணிப்பொறியின் எழுத்துரு (யுனிக்கோட்) வசதியால் கிடைத்த தமிழ் தட்டச்சு என இன்றைய போக்கிற்கான ஏற்புடைமையாக இவை வளர்ந்து வந்துள்ள சமூகக் காரணங்களை புரிந்து கொள்ளலாம். இன்றைய அறிவுச்சூழல் சிறுபத்திரிக்கை வட்டத்திலிருந்து இந்த இடைநிலை மற்றும் பெரும் வணிக்கப்பத்திரிக்கை அளவிற்கு விரிவடைந்துவிட்டது. இது தவிர்க்கமுடியாததும்கூட. சிறுபத்திரிக்கைகளின் அறிவை பெரும்பத்திரிக்கைகள் கடன் வாங்கி அல்லது பாதிப்பாக வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலைமாறி, சிறுபத்திரிக்கையை அதன் அறிவை கையகப்படுத்தி அதனை பகடி பண்ணுவதாக பெரும்பத்திரிக்கைகளே அத்தகைய எழுத்துக்களை வெளியிட்டுக்கொண்டு உள்ளன. இதற்கு ஒரு காரணம் வாசிப்பு என்பது வெறும் செய்தி-அறிவாக இருந்த நிலையை தொலைக்காட்சிகளின் தொடர்தாக்குதல்கள் மாற்றியமைத்திருப்பதே. செயதிகளுக்காக பத்திரிக்கைகள் என்கிற நிலைமாறி, செய்தி-ஆய்வாக அல்லது காட்சிக்கு பின் சொல்லப்படாத வர்ணனையாக வாசிப்பு மாறி உள்ளது. இந்த வாசிப்பை தரக்கூடிய எழுத்துக்கள் சிறுபத்திரிக்கை உருவாக்கிய அறிவுச்சூழலால் நிரப்பப்படுகின்றன. இந்த வர்ணனை கற்பனை கலந்ததாக மாற நல்ல கற்பனைத்திறன் கொண்ட எழுத்துமுறை அவசியம். இந்த கற்பனைத்திறன் கிசகிசு பாணியிலான ஒருவகை துப்பறியும் வாசக மூளையின் பரபரப்பிற்கான விளையாட்டுக்களத்தை அமைத்து கொடுப்பதாக இருக்க வேண்டும். துப்பறியும் தன்மை கொண்ட எழுத்தே புனைவின் கற்பைனையின் அதிகபட்ச விளையாட்டு உணர்வை வாசகருக்கு தரத்தக்கவை. இத்தகைய எழுத்துபாணி புரிதலற்று நீர்த்த வடிவில் கிசகிசுவாக மாறிப்போகிறது தமிழ் பத்திரிக்கைகளில். இந்த கிசுகிசு பாணி தமிழின் முக்கிய எழுத்தாளர்களாலும் எழுத்தாளர்களின் பிம்பங்களாலும் பெருக்கித் தள்ளப்படுகிறது.

1993-முதல் வெளிநாட்டிலிருந்து இந்தப் போக்குகளை அவதானித்ததில், இன்றைய தமிழ்ச்சூழலின் அதிகார மையம் எப்படியாக மாறி உள்ளது என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதை மட்டும் பதியவைப்போம். வெகுசன பத்திரிக்கையில் எழுதுவது இலக்கியமா இல்லையா என்கிற வாதங்கள் வழக்கொழிந்துவிட்டன. இன்றைய “நவீனத்திற்கு பிந்தைய சமூக அமைப்பி“-ல் இத்தகைய வாதங்கள் பொருளற்றவை என்பதே முக்கியம். எழுத்து என்பது ஒரு நிறுவனமாகிவிட்டது என்ற நிலையில், அவற்றின் மதிப்பீடு என்பது எழுத்து எந்திரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட புத்தகம் உலகுடன் உருவாக்கும் assemblage 1 (இதை எப்படி தமிழில் சொல்வது? இணைவாதல் எனலாமா) எனபதில்தான் பொருள்கொள்கிறது. அசம்பலேஜ் என்பது குறித்து விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம். புத்தகம் என்கிற கருத்தாக்கம் பற்றியும் உலகில் அது என்னவாக உள்ளது இயக்கம் கொள்கிறது, என்னவித போக்குகளை உற்பத்தி செய்கிறது, எத்தனை வகைகள் உள்ளன, இன்றைய உலக உருவாக்கத்தில் புத்தகங்கள் எப்படி ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன, என்பதை அதில் விரிவாக உரையாடலாம். டெல்யுஸ்-கத்தாரி A Thousand Plateaus என்கிற நூலின் அறிமுகமாக ரைசோம் 2 (rhizome) என்கிற தலைப்பில் புத்தகங்கள் குறித்து விரிவாக எழுதி உள்ளார்கள் என்பதை மட்டும் சொல்லிவைப்போம்.

சமூகத்தில் ஒரு புத்தகம் பல்வேறு பிணைப்புகளையும் கண்ணிகளையும் உருவாக்கக்கூடியதாக, தனக்குள் இப்படி உருவாகுவதற்கான எல்லா கருவிகளையும் கொண்டதாக உள்ளது. அல்லது ஒரு புத்தகம் அசம்பலேஜ் வழியாக சமூகவயமாகிறது. சமூகவயமாதல் என்பதுதான் எந்த ஒன்றினது அடிப்படை இருத்தலாக மாறுகிறது. இநத சமூகவயத்திற்குள்தான் அதிகாரத்தின் அத்துணை கண்ணிகளும் செறிவடைந்துள்ளன.

இந்த 20 ஆண்டுகளில் எந்த புத்தகக் கண்காட்சியையும் காணமுடியாதநிலை. அதிலும் வறண்ட பாலைத்திணை வாழ்க்கை. எனது வேலைமுறையில் டிசம்பர்-ஜனவரி என்பது மூச்சுமுட்டும் காலம். 11 மாத தூக்கத்தை அந்த ஒரு மாதத்தில் கண்விழித்து சமன் செய்யவேண்டும். அதனால் இந்த கண்காட்சியிலும் பார்வையாளராக முடியாதது ஒரு ஏக்கமாகி அப்படியே எந்த எதிர்வினையுமற்ற ஒரு உணர்வாக மாறிவிட்டது. வழக்கம்போல் நண்பர் ஒருவர் எனக்காக புத்தகச் சந்தையில் சில குறிப்பிட்ட புத்தகங்கள் வாங்கி வைக்க ஒப்புக்கொண்டார். அவரது வேலைப்பளுவிற்கு மத்தியில் இந்த பெரும்பணி ஆற்றியமைக்கு இப்பதிவின் வழியாக நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படி சில நண்பர்கள் உதவிதான் நமது வாசிப்பின் நிலைய உயர்த்திக்கொள்ள பயனுள்ளதாக உள்ளது.

1990-களில் புத்தக சந்தையில் பங்குபெற்ற பதிப்பகங்கள் (சிறுபத்திரிக்கை - இலக்கியம் சார்ந்த) எல்லாம் மாறி இன்று பதிப்புத்துறை என்பது பெரும் நிறுவனங்களாக மாறி உள்ளது. இந்த நிறுவனங்கள் இலக்கிய, கலை, அரசியல், வரலாறு என அறிவு உற்பத்தி எந்திரங்களை கையகப்படுத்தி ஒரு அதிகார மையமாக மாறி உள்ளன. அதாவது தமிழில் பதிப்பகம் என்பது ஒரு அறிவுருவாக்க அதிகார மையமாக மாறி உள்ளது. யார் இலக்கியவாதி என்பதை இவைகள்தான் தீர்மானிக்கின்றன. அறிவுலகம் எதை சிந்திக்க வேண்டும் என்பதையும். எதை சிந்திக்கக்கூடாது என்பதையும் கூட. அறிவை உற்பத்தி செய்வதும் பரவலாக்குவதும் இந்த பதிப்பக-எந்திரங்கள்தான். பொதுபுத்திசார்ந்த அறிவை கையகப்படுத்தி தனது அரசியல்சார்ந்த அறிவை உருவாக்குபவையாக உள்ளன. தமிழின் இன்றைய இலக்கிய போக்குகளை தீர்மானிப்பதாகவும், வரலாற்றை எழுதும் எந்திரங்களாகவும் உள்ளன.

தமிழ் பதிப்பகங்களின் நிலை பற்றி தினமணியில் ஸமஸ் என்பவர் எழுதிய 10-குறிப்புகள் முக்கியமானவை. இந்த நிலை மாற்றம்கூட முக்கியமானது. சிறுசூழல்கள் தினமணியை விமர்சித்த காலங்கள்போய், தினமணி சிறுசூழலை விமர்சிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளது என்பது தமிழ் இலக்கிய அறிவின் திருகுசுழல் வளர்ச்சியையே காட்டுகிறது. இந்த திருகுசுழலில் அம்புக்குறி மேல்நோக்கி பயணிக்காமல் கீழ்நோக்கி பயணித்திருப்பதே அதைவிடவும் கவலை தரும் விஷயம்.

இந்தியாவில் மதவாதம் ஒரு அரசியல்-நினைவிலியாக எல்லாத் செயல்பாட்டுக்குள்ளும் இறக்கப்பட்டிருப்பது, இந்துத்துவா கருத்தியல் பிராந்திய அரசியலில் ஊடுருவி பிராந்திய அரசியலை மத்திய அரசியலின் தொங்குசதையாக மாற்றியிருப்பது, திராவிடக்கட்சிகள் பார்ப்பனியமயமாகி அதிகாரத்தில் பங்குபெற்றிருப்பது, இந்தியா கார்ப்பரேட்மயமாகி அரசியலில் அதிகாரத்தில் கார்ப்பரேட்கள் நேரடியாக தலையிடும் நிலைக்கு போயிருப்பது, எங்கெங்கு காணினும் வாரிசுகளின் அரசியலும், கட்சிகளும், தலைமையும் என பார்ப்பனிய குலக்கல்வித் திட்டமாக அரசியல் மாற்றப்பட்டும், அது மக்களால் பரவலாக ஏற்கப்பட்டும் உள்ளது. இப்படியாக மாற்றப்பட்டுவிட்ட இந்திய அரசியல் போக்கின் ஓட்டத்தில் இணைந்து கொண்டவைதான் இந்த பதிப்பகங்கள். இவர்கள் இந்திய-மதவாத-கார்ப்பரேட்டிசத்தின் அறிவுருவாக்க காரணியாக மாறாவிட்டால், அழிந்தோ அல்லது அழிக்கவோ பட்டுவிடும் நிலைக்கான அச்சத்தில் மட்டும் செயல்படுவதாக எண்ணிவிட முடியாது. இவை அத்தகைய போக்கில் தங்களை இணைத்துக் கொள்வதற்கான கருத்தியலையும் அரசியலையும் கொண்டவையாக உள்ளன. இவை சந்தைப்போட்டி என்கிற பற்சக்கரத்தில் சிக்கிக்கொண்டதைப் போன்ற பாவனையில், அந்த பற்சக்கரங்களை இயக்குபவையாக உள்ளன என்பதே முக்கியம்.

பதிப்பகங்கள் அரசியல்மயமாகியப் போக்கு கடந்த 10 ஆண்டுகளில்தான் அசுர வளர்ச்சியாகி உள்ளது. குறிப்பாகத் தமிழ்சூழலில் பதிப்பகம் பொதுவானதொரு விற்பனை நிறுவனமாக இல்லை. ஒரு பலசரக்கு கடையாக இவை இருப்பதில்கூட ஒரு வியபார நியாயம் உள்ளது. முதலீடு பற்றிய அச்சம் உள்ளது எனலாம். ஆனால். இவை அறிவு-முதலீடாக தங்களை நிர்ணயித்துக்கொண்டு செயல்படுவதாக உள்ளது. அறிவை கொள்முதல் செய்வதும், அவற்றை பரவலாக்குவதுமான தோற்றத்தை இவை உருவாக்கி தங்களை ஒரு அதிகார மையமாக கட்டிக்கொண்டு உள்ளன. இப்படி அதிகார மையமாக மாற அவைகளுக்குள் கருத்தியல் அரசியல் மற்றும் தனிமனித விருப்பு வெறுப்பு நிலைபாடுகளைக் கொண்டதாக அவை இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டும் தள்ளிக்கொண்டும் தள்ளப்பட்டதாக நியாயப்படுத்திக் கொண்டும் உள்ளன. பதிப்பகங்கள் “எழுத்தாளர்“-களாக கட்டமைக்கப்பட்ட சில பிம்பங்களுடன் இணைந்தே தங்களை வெளிப்படுத்திக்கொண்டு உள்ளன. பதிப்பாளர் உற்பத்தியாளராகவும், எழுத்தாளர்கள் முகவர்களாகவும், வாசகர்கள் நுகர்வாளர்களாகவும் மாற்றப்பட்ட இந்த சந்தைவிதிக்குள் தமிழ் அறிவுச்சூழல் சிக்கிக் கொண்டு உள்ளது என்பதே பேரவலம். இதுதான் பதிப்பகங்களின் அரசியலாக மாறி உள்ளது. ஒவ்வொரு புத்தகச் சந்தையும் பதிப்பகங்களின் அரசியலை மென்மேலும் மறுஉருவாக்கம் செய்து, கொழுக்க வைத்து தங்களது வரலாற்றுப் பணியை செவ்வனே செய்துவருகின்றன.

புத்தகங்கள் என்றால் என்ன? அது எழுத்தை அச்சில் பதிப்பிக்கப்பட்ட காகிதத்தால் ஆன ஒரு பொருளோ, பண்டமோ அல்ல. ஒரு புத்தகம் என்பது பன்முக அர்த்தங்களைக் கொண்டது. பன்மையான சூழலை உருவாக்கக் கூடியது. பல நிலப்பகுதிகளை இணைக்கும் கண்ணியாக உள்ளது. உலக வரலாறுகள் பயணநூலில்தான் துவங்குகின்றன. யுவான்சுவாங் மற்றும் மார்கோபோலோவின் பயணக் குறிப்புகளை3 வாசிப்பவர்கள், முற்றிலும் அந்நிய “கிரகங்களாக“ உள்ள இரண்டு நிலப்பகுதிகள் எப்படி இந்த பயணக் குறிப்புகளின் வழி ஒற்றைக் கண்ணியில் இணைக்கப்படுகின்றன என்பதையும் ஒரு நிலம் ஒரு ஆசிரியனின், பார்வையாளனின் அறிவால் பெயர்த்து எடுக்கப்பட்டு மற்றொரு நிலத்துடன் பிணைக்கப்படுவதையும் காணலாம். உலகில் புனைவிலக்கியங்கள் துவங்கி ஆய்வுகள் வரை உலகை அறிவை உருவாக்கியவை பரவலாக்கியவை புத்தகங்கள்தான். ஒருவகையில் உலக அறிவை கட்டமைத்தவை புத்தகங்கள்தான். அதனால்தான் தமிழில் “நூல்“ என்கிற கட்டுதல் என்கிற வினையுடன் உள்ள சொல் பயனபடுத்தப்படுகிறதோ? எழுதுதல் என்கிற செயல்தான் உலகை உருவாக்கியது என்பது மிகைக்கூற்றாகாது. அதன் வழியாகத்தான் அறிவுருவாக்கம் நிகழ்கிறது என்பதும் இதன் நீட்சிதான். இந்த நீட்சி மீட்சிக்கு வழிவகுக்குமா தமிழில் என்கிற கேளிவியும் ஏனோ தவிர்க்க முடியவில்லை.

குறிப்புகள்

1. Assemblage –இது டெல்யுஸ்-கத்தாரியால்உ“Capitalism and Schizophrenia” என்கிற இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில் இரண்டாவது நூலான A Thousand Plateaus ல் எழுதப்பட்ட ஒரு கருத்தாக்கம். இது பிரஞ்சில் agencement and dispositif என்ற இருபொருளைக்கொண்ட சொல். நேர்ப்பொருளில் ஆங்கிலத்தில் சொற்கள் இல்லாத நிலையில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. டெல்யுஸ்-கத்தாரியின் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர் Brian Massumi ன் கருத்துப்படி Anti-Oedipus என்கிற நூலில் பயன்படுத்தப்பட்ட desiring machine என்கிற சொல் அகநிலைக் கருத்தாக்கமாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதால் அதற்கு பகரமாக அடுத்த நூலில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது அவர்களால். டிசையரிங் மெஷின் என்பதற்கு முன்பு வேட்கை எந்திரம் என்கிற மொழிபெயர்ப்ப்பே பயன்படுத்தப்பட்டது. எம். ஜி. சுரேஷ் எழுதி வெளிவந்துள்ள தெலூஸ்-கத்தாரி என்கிற சுருக்க அறிமுக நூலில் விருப்ப எந்திரம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிஜந்தன் அவர்கள் Anti-Oedipus நூலின் முதல் அத்தியாத்தை மந்திரச்சிமிழ் இதழ்-5-6ல் (அக்டோபர் 2010 – மார்ச் 2011) மொழிபெயர்த்துள்ளார். அதில் அவர் விருப்ப எந்திரம் என்கிற சொல்லையே பயன்படுத்துகிறார். வேட்கை என்பதில் உள்ள செவ்வியல் மற்றும் சாராம்சவாத உள்ளர்த்தம் விருப்பம் என்பதில் இல்லை என்பதால் விருப்ப எந்திரம் என்பதே பொறுத்தமான சொல்லாகப்படுகிறது. மந்திரச்சிமிழ்-5-6 ல் இந்த விருப்ப எந்திரம் பற்றிய அத்தியாயம் வெளிவந்துள்ளது. மேலதிக புரிதல் வேண்டுபவர்கள் அதை வாசிக்கலாம்.

2. Rhizome – என்கிற Capitalism and Schizophrenia நூலில் உள்ள அறிமுக அத்தியாயத்தை நண்பர் எஸ். சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். அது இதுவரை எந்த பத்திரிக்கையில் வெளிவரவில்லை. வரப்போகும் ஒரு சிற்றிதழில் வெளிவரும் என்றார். இதுவரையிலான மரம் சார்ந்த ஆணிவேர்பரவி நிற்கும் தோற்றவியல் சாராம்சவாத சிந்தனைக்கு எதிராக டெல்யுஸ்-கத்தாரியால் முன்வைக்கப்பட்ட கருத்தாக்கமாகும். பல இடங்களில் பற்றிப்படரும் சல்லிவேர்களைக்கொண்ட ஒரு உருவகமாக சொல்லப்பட்ட பன்மைத்துவமாக சிந்திக்கும் முறை. பல திறப்புகளைக் கொண்டதாக எழுதப்படும் புத்தகங்கள், பன்முக சாத்தியப்பாட்டைக்கொண்ட ஜனநாயக அரசியல், பன்மை வாழ்நிலைகள், எந்த புள்ளியைப்பற்றியும் வளரும் சிந்தனைப்போக்கு உள்ளிட்ட பலவற்றையும் குறிக்கும் ஒரு கருத்தாக்கம். தோற்றவியல் சார்ந்த பழகிய தத்துவ முறைக்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு வரைபடவியல் கருத்தாக்கமாகும். இது இணையத்தின் ஹைபர்-டெக்ஸ்ட் (மீ-எழுத்து எனலாமா?) எனப்படும் ஒருவகை எழுத்துமுறைபோன்று பல இணைப்பு கண்ணிகளையும், அதே நேரத்தில் தனித்துவமிக்கதாவும் உள்ள ஒரு வகை புத்தகம் அல்லது எழுதுதல் எனலாம். இந்த முறையை பயன்படுத்தியே அவர்கள் தங்களது இரண்டாவது நூலான A Thousand Plateaus என்பதை எழுதி உள்ளனர். மேலதிகமாக இது குறித்த அறிமுகத்தை வாய்ப்புள்ளபோது பதிவாக எழுதலாம்.

3. யுவான்சுவாங் இந்தியப்பயணம் – தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன் – புதுமைப்பித்தன் பதிப்பகம் 2009.  மார்க்கோபோலோ பயணக்குறிப்புகள் – தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன் – அகல் பதிப்பகம்- 2007.

-ஜமாலன் (16-01-2011)

பெயர்த்து-உருவாக்கப்பட்ட பின்காலனிய நிலங்கள் - ஒரு அறிமுகம்.

image பின் காலனியம் -மிகச்சுருக்கமான அறிமுகம் - ராபர்ட் ஜே.சி. யங் - தமிழில் அ.மங்கை-பதிப்பாசிரியர் வ. கீதா - அடையாளம் பதிப்பகம் - விலை ரூ 90.00.

அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310. தொலைபேசி 0091 4332 273444 மின் அஞ்சல் info@adaiyaalam.net

குறிப்பு தோழர் ரவிக்குமாரின் மணற்கேணி நவம்பர்-டிசம்பர் 2010 இதழில் வெளிவந்த அறிமுகக்கட்டுரை இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. நூலசிலிரியரின் வலைத்தளம் இது. 

 

ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள மிகச்சுருக்கமான அறிமுகம் என்imageகிற வரிசை நூல்களை, அடையாளம் பதிப்பகம் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. அடையாளத்தின் இப்பணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தமிழில் அவ்வரிசையில் வந்துள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் கோட்பாட்டுப் பகுப்பாய்வுத்துறை பேராசிரியரும் காலனியம், பின்காலனியம் பற்றி எழுதிவருபவருமான ராபர்ட் ஜே.சி. யங்-கின் “பின்காலனியம் - மிகச்சுருக்கமான வரலாறு” என்கிற நூலை, சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியின் ஆங்கிலப்பேராசியர், பெண்ணியலாளர், அரங்கம் போன்றவற்றில் தமிழில் அறியப்பட்ட அ. மங்கை அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். பெரியாரியம், பெண்ணியம் பற்றி காத்திரமாக எழுதி வருபவரும், பெண்ணியச் செயல்பாட்டாளரும், ஆய்வாளருமான வ. கீதா பதிப்பாசிரியராக இருந்து இந்நூல் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு என்கிற நெருடலை ஏற்படுத்தாத சரளமான மொழியில் இதனை செய்துள்ள அ. மங்கையின் பணி பாராட்டுக்குரியது. பின்காலனியம் பற்றிய பரவலான அறிமுகமற்ற தமிழ் சூழலில் இந்நூல் அதனை நடைமுறைசார்ந்த அரசியலில் அறிமுகம் செய்கிறது.

அல்ஜீரிய விடுதலைப்போராளியும் புரட்சிகர அரசியல் கோட்பாட்டு செயல்பாட்டாளரான பிரான்ஸ் ஃபனான், பின்காலனியச் சிந்தனைக்கான கோட்பாட்டு அடிப்படைகளை தனது “கீழ்திசைவாதம்” (ஓரியண்டலிஸம்) மூலம் உருவாக்கிய எட்வர்ட் சைத், விளிம்பநிலையாளர்கள் சிந்தனையை உருவாக்கிய ஆய்வளாரான காய்த்ரி சக்ரவர்த்தி ஸ்வைபுக், பின்காலனியம் உருவாக்கிய கலப்பினம் பற்றிய கோட்பாடுகளை முன்மொழிந்த ஹோமி பாபா என பல ஆய்வாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடே பின்காலனியம். காலனியம் எழுதிச்சென்ற, விட்டுச்சென்ற தன்னிலையிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு காலனிய எதிர்ப்பு மற்றும் உலகில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலைத் தன்னிலையாக ஒருங்கிணையும் ஒரு புரட்சிகர சுயதன்னிலைகள் பற்றிய கோட்பாடே பின்காலனியக் கோட்பாடு. ஆனால், இத்தகைய கோட்பாட்டு அறிமுகத்திலிருந்து விலகி இந்நூல் நடைமுறை சார்ந்த அரசியல் எழுச்சிகள், போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து எழுதப்பட்டுள்ளது. “அறிவு” என்கிற மேலிருந்து திணிக்கப்படும் காலனியக் கோட்பாட்டை மறுப்பதால், கீழிருந்து உருவாகிவரும் பின்காலனிய அறிவு பற்றிய அறிமுகத்தை செய்கிறது.

இந்நூல் 7 இயல்களை, அதற்குள் பல துணைத்தலைப்புகளைக் கொண்டிருந்தாலும், ஒரு தொடர்ச்சியின்மையைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. திரைப்படங்களில் பயன்படும் மோண்டேஜ் எனப்படும் எதிரெதிரான பொருட்களை, நிகழ்வுகளை அருகருகே வைப்பதன் மூலம் ஒரு புதிய வாசிப்பை, அர்த்தத்தை உருவாக்கும் உத்தி முறையில் எழுதப்பட்டுள்ளது. முக்கியமான புகைப்படங்களை அருகருகே வைத்து அப்படங்கள் பற்றிய வாசிப்பாக தொடரும் எழுத்தில்.. பின்காலனியத்தின் அடிநாதமான ஒடுக்கப்பட்ட, புலம்பெயர்ந்த, விளிம்பிற்கு தள்ளப்பட்ட மக்களின் சுய-அடையாளத்தையும், அவர்களது விடுதலைக்கான அரசியலையும் பேசுகிறது. அமெரிக்க-ஐரோப்பிய-ஆஸ்திரேலிய-ரஷ்ய.. வெள்ளையினக் கண்டங்களால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஆசிய-ஆப்ரிக்க-லத்தீன் அமேரிக்க கருப்பு மற்றும் பழுப்புநிற முக்கண்டங்களின் காலனிய விடுதலைக்குப் பின்னாலான வரலாற்றில் துவங்குகிறது. அவற்றில் தொடரும் ஏகாதிபத்திய-மேலைத்தேய மறைமுக நவ-காலனிய அடக்குமுறைக்கு எதிரான தொடர் போராட்டங்களின் வழியாக உருவாகிவரும் பின்காலனிய அரசியலை சுருக்கமாகவும், ஆழமாகவும் விவரிக்கிறது.

முதல் இயலில் விளிம்புநிலை அறிவு என்ன என்பதை இன்றைய உலகளாவிய பிரச்சனையாக உள்ள அகதிகளின் வாழ்விலிருந்து துவங்கி, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் போர்வழியாக முஸ்லிம்களை உலகெங்கும் தனிமைப்படுத்தும் விதமாக கட்டப்படும் “அறிவு“ குறித்த விமர்சனத்தை முன்வைக்கிறது. முக்கண்டம் என்பதிலிருந்து இந்த அறிவு எப்படி சுயதேர்வாக காலனிய தன்னிலையிலிருந்து விலகி ஆசிய-ஆப்பிரிக்க-லத்தீன் ஆமெரிக்க தன்னிலை அறிவாக உருவாக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இரண்டாவது இயலில் காலனிய நாடுகளாக இருந்து விடுதலைப்பெற்றபின் ஆப்பிரிக்க-கரிபீயன்களின் உலகளாவிய இயக்கங்கள் உருவாக்கம் பற்றியும், அமேரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக உருவாகவும், எண்ணை வளச்சுரண்டலுக்காகவும், ஈராக் போன்ற நாடுகளை குண்டுவீசி தொடர்ந்து ஒரு போர்ச்சூழலை உருவாக்கியதையும் விவரிக்கிறது. வரலாற்றில் அதிகாரம் ஏற்படுத்திய அழிவு பற்றிய ஒரு வரைபடம் இது. இஸ்லாமிய உலகம் என்கிற ஒரு கற்பிதப்புவியியல் (imagined geography) கட்டமைக்கப்பட்ட வரலாறு.

“இடமும் மண்ணும்“ என்ற மூன்றாவது இயல், மண்ணை அழித்து அப்புறப்படுத்தப்பட்ட அகதிகளாக புலம்பெயர்க்கப்பட்ட மக்களையும், காலனியம் மண்ணை தனக்கு ஏற்ப எல்லைப்படுத்தியதையும், உலக வரைபடங்களில் இந்த எல்லைப்படுத்தல் எப்படி தேசங்களாக மாறியது என்பதையும் உள்ளோட்டமாக சொல்கிறது. பிரஞ்சு சிந்தனையாளர்களான டெல்யுஸ்-கத்தாரியின் நில-நீக்கம் செய்தல் (deterritorialization) மற்றும் நாடோடித்தன்னிலை (nomadic subject) என்ற கருத்தாக்கத்தின் வழியாக அது எப்படி ஒரு அரசு-எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு வாழ்நிலையாக உள்ளது என்பதை விரிவாக இல்லாவிட்டாலும் மேலோட்டமாகச் சொல்லிச் செல்கிறது. “ஆதிக்குடிகள்” உருவாக்கம் என்பது எத்தனை துயர்நிறைந்த வரலாறாக மாறியது என்பதை விளக்குகிறது.

நான்காவது இயல், காலனிய எஜமானர்கள் தனது ஆதிக்கப் பண்பாட்டால், imageமண்சார்ந்த மக்களிடம் எப்படி காலனியத் தன்னிலையை உருவாக்குகிறார்கள் என்பதும், இத்தன்னிலை சுயம், மரபு என்பதுடன் ஒரு கலப்பினமாக உருவாகுவதையும் விவரிக்கிறது. குறிப்பாக அல்ஜீரியாவில் உருவான காலனிய எதிர்ப்பு ராய் இசை எப்படி மேலைத்தேய கலப்பிசையாக மாறியது என்பதன் வழியாக ஹோமிபாபாவால் முன்வைக்கப்படும் “கலப்பினம்“ என்கிற கருத்தாக்க அடிப்படையில் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் இஸ்லாமிய பெண்களின் முகத்திரை என்கிற வழக்கம் பற்றிய விரிவான உரையாடலைச் செய்கிறார் இவ்வாசிரியர். இதனை மொழிபெர்த்த மொழிபெயர்ப்பளார் அ. மங்கை, முகத்திரைப்பற்றிய மத-அடிப்படைவாத சக்திகளின் நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ளவில்லை இந்நூலசிரியர் என்ற விமர்சனத்தை தனது குறிப்புரையில் முன்வைத்துள்ளார். முகத்திரை பழக்கம் பற்றிய மதஅடிப்படைவாத சக்திகளின் ஒடுக்குமுறை நிலைப்பாடு கவனத்தில் கொள்ளவேண்டியதே, அதே நேரத்தில் “முகத்திரை அணியும்பெண் அதற்கு தரும் பொருள் என்ன என்ற அக்கறை” (பக்.115) பற்றிய கவனமும் அவசியம் என்பதை சொல்லிச்செல்கிறார் யங். இஸ்லாமிய மதம் முகத்திரையில் மட்டுமல்ல, பொதுவாகவே பெண் என்பதை ஒரு உயிர்ப்புள்ள ஜீவியாக கருதுவதில்லை. பெண் என்பவள் யங் சொல்வதைப்போல ஒரு தன்னிலையோ, மற்றமையோ அல்ல பயனிலையாகவே மதங்களால் கருதப்படுகிறாள் என்பதே முக்கியம். முகத்திரை என்கிற பழக்கம் ஒரு குறியீட்டு செயலாக இருக்கிறது என்பதையும், அது பரந்துபட்ட இஸ்லாமிய உழைக்கும் பெண்களிடம் காணப்படுவதில்லை என்பதும் இதனுடன் இணைத்து கவனிக்கத்தக்கது. இஸ்லாமிய பெண்களை ஒருபடித்தானவர்களாக சித்தரிக்கும் ஒரு குறியீடே முகத்திரை என்பது. அனியா லூம்பா கூறுவதுபோல “ஒருபடித்தானவர்களாக சித்தரித்தல்“ ஒரு காலனீய யுத்ததந்திரம் என்பதை நினைவில் இருத்த வேண்டியதாக உள்ளது. (முகத்திரை பழக்கம் பற்றிய எனது கருத்துக்கள் “இஸ்லாமிய பெண்ணியம்“ பற்றிய பிறிதொரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளதால் அதனை தவிர்க்கிறேன்.)

image இயல் 5-ல் பின்காலனியத்துவப் பெண்ணியம் பற்றிய பகுதியில் இந்தியா பற்றிய காந்தி மற்றும் காலனியப் போராட்டங்களில் பெண்கள் துவங்கி சிப்கொ-சூழலியல், சமீபத்திய நர்மதா அணை தடுப்பு இயக்கம் வரை விவரிக்கப்படுகிறது. இப்போராட்டங்கள் எப்படி பினகாலனித்துவ அரசியலுடன் ஒன்றிணைந்து உள்ளன என்பது சொல்லப்படுகிறது. பூலான்தேவி பற்றிய விவரணை எப்படி ஒரு அதிகார எதிர்ப்பாக மாறி, சட்டத்திற்கு உட்பட்டு அது முடிந்தது என்பதை விளக்குகிறது. பின்காலனியத்தின் அதிகார எதிர்ப்பரசியலில் சட்டத்திற்கு உட்பட்டு போரிடுதல் மட்டுமே மையப்படுத்துவதான பொருளை இது தருவதாக உள்ளது. ஆனால், அது சட்டத்திற்கு புறம்பான, சட்டத்தை நிராகரிக்கும் போராட்ட வழிமுறைகளும் உள்ளடக்கியது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கவனப்படுத்த வேண்டிய ஒன்று பெண்கள் எப்படி பின்காலனிய அரசியலை உருவாக்குகிறார்கள் என்பதும், அவ்வரசியலே பெண்களின் அரசியல்தான் என்று விளக்கப்படும் பகுதி. குறிப்பாக பின்காலனியம் உலகை கீழிருந்து நோக்கும்படி செய்கிறது. “எத்தியோப்பிய-பெண் விவசாயிதான் பின்காலனியத்துவத்தின் கண்கள், காதுகள், வாய்கள்” (பக்.143) என்பது குறிப்பிடப்பட வேண்டிய வாசகம்.

இயல்-6ல் உலகமயமாக்கலில் பின்காலனிய அரசியல் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. உலகமயமாக்கலின் சின்னமாக உள்ள மெக்டொனால்ட், நெஸ்லே போன்ற வணிக நிறுவனங்கள் எப்படி மக்களின் நலவாழ்விற்கே எதிரானதாக உள்ளன என்பதை விளக்கும் பகுதி முக்கியமானது. அமர்த்தியா சென்னின் கருத்துக்கள் அடிப்படையில் உணவு விநியோக முறையின் குளறுபடிகள் எப்படி பஞ்சத்தை உருவாக்குகின்றன எனபது விவரிக்கப்படுகிறது. ”வறுமையும், பட்டினியும் வளங்கள் இல்லாத சூழலைக் குறிக்கவில்லை. இருக்கும் வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கும் முறையில் தோல்வி ஏற்பட்டது என்பதையே குறிக்கின்றன.” (பக்.169). சமூக சமத்துவமின்மைதான் இத்தகைய வறுமை, பட்டினி, பஞ்சம் இவற்றிற்கு காரணம் என்பதை சொல்லிச் செல்வது கவனி்க்க வேண்டிய ஒன்று.

இயல்-7ல் மிகவும் புதிதான ஒரு கருத்தாக்கத்தை பின்காலனிய கோட்பாட்டு அடிப்படையில் விரிக்கிறது. அது மொழிபெயர்ப்புகள் என்பதுதான். இங்கு பிரதிகள் மொழிபெயர்க்கப்படுவதால் எப்படி ஒரு பண்பாடு கட்டமைக்கப்படுகிறது. அக்கட்டமைப்பு எப்படி ஒரு மனிதனை காலனியத்திற்கு மொழிபெயர்க்கிறது என்பதை விவரிக்கிறது. பிரதிகளும், மனிதர்களும் ஒன்றினைக்கப்படும் காலனிய அரசியல் வெளிப்படுவதை சொல்வதாகிறது. மொழிபெயர்ப்பின் அரசியல் பின்காலனிய அறிவுருவாக்க அரசியலின் ஒரு முக்கிய பகுதியாகும். உண்மையில் ஒரு உலகை அல்லது நாட்டை அல்லது நிலத்தை கண்டடைவது என்பது அந்த நிலத்தை தனது நிலத்திற்கு ஏற்ப மொழிபெயர்ப்பதாகவே நடைபெறுகிறது. காலனிய அறிவை இன்னும் குறிப்பாகச் சொன்னால் உலக அறிவை உருவாக்கியது மொழிபெயர்ப்புகள்தான். இன்றைய ஆப்பிரிக்க-ஆசிய-லத்தீன் அமேரிக்க மனிதன் காலனியத்தால் மொழிபெயர்க்கப்பட்ட மனிதனே. இந்திய காலனியமாக்கலில் துபாஷிகளின் பங்கும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்சாதியினராக குறிப்பாக பார்ப்பனர்களாக இருந்ததும், இந்திய தேசிய அமைப்பு கட்டப்பட்டதன் பின்னுள்ள அறிவுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இந்தியராகிய நாமும் உயர்சாதி துபாஷிகளால் மொழிபெயர்க்கப்பட்டவர்களே. மொழிபெயர்ப்பு அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. பெயர்க்கப்பட்ட பிரதியைவிட மூலம் சிறப்பானது என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டது. காலனியம் மொழிபெர்த்த மனிதனைவிட, காலனியத்திற்கு முந்தைய “மூல“மனிதன் சிறப்பானவன் என்பதுபோன்ற கருத்தாக்கமாக பின்காலனியம் புரிந்துகொள்ளப்படுவது அபாயகரமானது. இந்த அபாயம் மத-அடிப்படைவாத சக்திகள் உருவாக்கும் “லட்சிய மனித உடல்“ என்பதில் வெளிப்படுவது. பின்காலனிய சிந்தனையை பயன்படுத்துவதில் உள்ள இந்த “மூலம்” ”சுயம்” “ஆதிக்குடி” ”மண்ணின் மைந்தன்” போன்ற கருத்தாக்கங்கள் எல்லாமே காலனியத் தன்னிலைக்கான பிறராக்குதல் (otherization) அடிப்படையில் உருவானதே என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவற்றை தூக்கிப்பிடிப்பது பின்காலனிய அரசியலாகாது என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம். காலனியத்திற்கு முந்தைய மக்களின் அறிவு கையகப்படுத்தப்பட்டு அது காலனியத்தால் மொழிபெயர்க்கப்பட்டதாக உள்ளது என்பதையே இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உண்மையில் மொழிபெயர்ப்பாக (translation) இது நிகழவில்லை, பெயர்த்து-உருவாக்குதலாகவே (trans-creation) இது நடைபெற்றது. இந்நிகழ்வைப் புரிந்துகொள்ள நாம் தெலூஸ்-கத்தாரியின் நில-மயமாக்கல், நில-நீக்கமாக்கல், மறு-நில-மாக்கல் என்கிற வட்ட சுழற்சிமுறையும், அது எப்படி ஒரு உடலின் உருவாகுதலாக (becoming) மாறுகிறது என்கிற ஆய்வைக்கொண்டே புரிந்துகொள்ள முடியும். இதை சுருக்கமாகவே இங்கு பெயர்த்து-உருவாக்குதல் என்று குறிப்பிடுகிறேன். இது சுருக்க அறிமுகம் என்பதால் இந்நூலில் இது பேசப்படவில்லை. இது தனியாக விரிவாக விளக்கப்பட வேண்டிய மற்றொரு ஆய்வாகும் என்பதை குறித்துக் கொள்ளலாம்.

மங்கை தனது குறிப்புரையில் அரசியலை ஆழப்படுத்தவதாக பேசப்படும் கோட்பாட்டு சிந்தனைகளை “முனைமழுங்க வைக்கும் கோட்பாட்டு நூற்கண்டுகள்“ என்று எழுதியுள்ளார். இந்த நூல் அத்தகைய நூற்கண்டகளால் நெய்யப்படவில்லை என்றாலும் கோட்பாடுகள் என்பதுதான் தறியாக உள்ளது என்பதே முக்கியம். நடைமுறையிலிருந்து கோட்பாடுகள் உருவாகுகின்றன என்பதால், இன்றைய கோட்பாடுகள் நேற்றைய நடைமுறைகள் அல்லது நேற்றைய சமூகச்சூழலிலிருந்து உருவாகி வருபவை. அந்தவகையில் கோட்பாடுகள்தான் நடைமுறைகளை நெறிப்படுத்துகின்றன. அவை பற்றிய ஆழமான புரிதல்களே நடைமுறையினை வழிநடத்துகின்றன. கோட்பாட்டு புரிதிலின்மை நடைமுறைகள் பற்றிய விவரணைகளை, வியாக்கியானங்களை சரிவர தருவதில்லை. அது தவறான வழிகாட்டுதலாகவே முடிகிறது. அந்தவகையில் மங்கை நடைமுறை, முரண்கள், மாற்று என்கிற புரிதலில் கோட்பாட்டை “சிக்கலான பயனற்ற நூற்கண்டாக“ கருதினாலும், இந்த நூல் பின்காலனியம் பற்றிய சரியான கோட்பாட்டு புரிதலிலிருந்தே உலகின் பல போராட்டங்களை, அரசு-அதிகார எதிர்ப்பு இயக்கங்களை பின்காலனியத்துவத்துடன் இணைத்து விவரிக்கிறது. கோட்பாடு சிக்கல் அவிழ்க்கும் நூலாக நேரடியாக இல்லை என்றாலும், கோட்பாடுகளின் பின்னணியில்தான் இந்த நூல் இயங்குகிறது என்பதை கட்டவிழ்த்து வாசிக்கமுடியும். ஆழமான கோட்பாடுகளை ஒதுக்கித் தள்ளுவதும், அதை வெற்று வாத-பிரதிவாதங்கள் என்று எள்ளலாக தள்ளி நடைமுறைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதான பார்வையினை, பாவனையினைக் கட்டுடைத்தால் அதற்குள் கோட்பாடுகளின் முக்கியத்துவம் பற்றிய மன அவசத்தையே காணமுடியும். நடைமுறைகளை முதன்மைப்படுத்துவது என்பது அதனடியிலான கோட்பாடுகளை முக்கியப்படுத்துவதே.

பின்காலனியக் கோட்பாடுகளைப் பற்றி பல நூல்கள் வந்துள்ளன. குறிப்பாக அனியா லூம்பாவின் பின்காலனியம் பற்றிய புத்தகங்கள் எளிமையான கோட்பாட்டு அறிமுகங்களைத் தரக்கூடியவை. என்றாலும், பின்காலனிய அரசியல் நடைமுறைகளின் வழியாக அதற்கான கோட்பாடுகளை காட்டிச்செல்லும் நூல் என்றவகையில் இது கவனப்படுத்தப்பட வேண்டிய நூல். அத்துறை மட்டுமின்றி போராட்டம், நடைமுறை, அரசியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ள சராசரி வாசகர்களுக்கும் எளிமையாக உலகின் போராட்டங்களையும், செகுவேரா, ஃபனான் போன்ற புரட்சியாளர்களையும், அறிமுகமற்ற பல பெண்ணிய புரட்சியாளர்களையும் அறிமுகப்படுத்துகிற ஒரு நூல். இந்நூலின் தொடர்சியற்ற மோண்டேஜ் வடிவம் வாசகர்களுக்கான பல இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகளைத் தருகிறது. வாசகன் இடையீடு செய்யும் நூலாக இது எழுதப்பட்டுள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு எனலாம்.

இந்நூலில் முன்வைக்கப்பட்ட யங்கின் இந்த எச்சரிக்கை முக்கியம். “ஒரு புதுவகையான சுய-கட்டுடைப்பு அரசியல் நடமாடத்துவங்கியுள்ளது. புதிய உலக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தனது எதிர்ப்பைத் தானே பல வடிவங்களில் நிகழ்த்திக் காட்டும் முறைக் காணப்படுகிறது. இந்த வழி மிகவும் ஆபத்தானதாகப் பரவி வருகிறது. முதலாளித்துவம், தனக்கெதிரான எதிர்ப்புகளையும் சந்தைப் பொருளாக்குவதில் வெற்றிபெற்று வருகிறது. அத்தகு எதிர்ப்புகளை ஒருங்கிணைப்பதிலும், அதிகமாக உற்பத்தி செய்வதிலும் ஈடுபடும் அளவுக்கு முதலாளித்துவத்தின் தன்மை மாறியுள்ளது.” ஆம் இன்று முதலாளித்துவத்தின் எதிர்ப்பியக்கங்கள்கூட முதலாளித்துவ சக்திகளால் சந்தைப்படுத்தப்படுகிறது என்பது முக்கியம். இதற்கான சில ஆதாரங்களை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது என்றவகையில் இது வாசிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

-ஜமாலன் 21-11-2010  (மணற்கேணி நவம்பர்-டிசம்பர் 2010)