பிரம்மச்சர்யமும் ஆணுறைகளும் - மண்ட்டோவின் மதம், தேசியம் மற்றும் உடல் பற்றிய வெள்ளை அறிக்கை – பகுதி –5,6 & 7

பகுதி-1 - பகுதி-2  - பகுதி-3  -  பகுதி–4

பகுதி-5 

image ஆண் மற்றும் பெண்ணின் அடையாளம் அவமதிப்பிற்குள்ளாக்கப்படும் போது அவற்றை ஒரு ஆணுடலும் பெண்ணுடலும் எதிர்கொள்வதே  அவமானம் மற்றும் குஷியா கதைகளாகும். ஒரே கருவைக் கொண்ட ஆணிய மற்றும் பெண்ணிய நோக்கிலான கதைகள் கதை. அதன் களம் அதை எடுத்துரைக்கும் முறை, விவரணை எல்லாம் ஆணின் கண்ணோட்டத்தில் குஷியாவிலும்  பெண்ணின்  கண்ணோட்டத்தில் அவமானம்  கதையிலும் முன்வைக்கப்படுகிறது. இக்கதைகளின் வழியாக அவமதிப்பு என்கிற செயல்பாடு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு உடலின் அடிப்படை இயல்பூக்கங்கள் பசி, பாலின்பம் மற்றும் தூக்கம். பசிக்காகப் பாலின்பத்தை விற்பனை செய்யும் சுகந்தியும்,  அதனை  விற்றுக்கொடுக்கும்  குஷியாவும்  வெறும்  இந்த இயல்பூக்கங்களை மட்டுமே கொண்டு வாழ்ந்துவிட முடியாது. அவர்களுக்கு என்று சுய அடையாளங்கள் இருக்கின்றன. அது அடிப்படையான ஆண் மற்றும் பெண் என்கிற அடையாளம்தான் இவ்வடையாளங்களும் நிராகரிக்கப்படும் போது சுகந்தி மாதுவை அடித்துத் துரத்துவதன் மூலமும், குஷியா காந்த குமாரியை இஞ்சினை இயக்க அது உயிர்  பெற்றுச்  சீறிப்  பாய்ந்தது.  காந்தா  என்ன சொல்லியிருந்தாலும் அது இஞ்சினின் இரும்பு போன்ற முழக்கத்தில் மூழ்கிப் போனது. என்றவாறு பாலியல் வெறித்தணிப்புடனும் எதிர்கொள்கிறார்கள். இங்கு  கதையில்  ஏற்படும்  இடைவெளியில்  காந்தகுமாரியிடம்  தனது ஆண்மையை நிரூபித்துக்கொண்ட குஷியா, பழைய வாழ்விலிருந்து விலகிப் போயிருக்கலாம் என்பதாக முடிகிறது. டாக்சி இரவுக்குள் காணாமல் போனது போல,  காந்த குமாரி  கதையில்  காணாமல் போய்விடுகிறாள். இவ்விரு கதையிலும் டாக்சி என்பது ஆண் மைய அதிகாரத்தின் ஒரு வலிமையான குறியீடாகி நிற்கிறது.

‘கருப்பு சல்வார்’  ,‘நூறு விளக்குகளின் வெளிச்சம்’ ஆகிய கதைகள் விலைமாதர்களின் வாழ்வில் உள்ள வறுமை நிலையை மனிதநேயத்துடன் முன் வைக்கும் கதைகளாகும். இஸ்லாமிய அரசாட்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்த கர்பலா யுத்தத்தில் இரத்த சாட்சிகளான அசேன்,உசேன் மரணத்தை நினைவுகூறித் துக்கதினமாக அனுஷ்டிக்கும் முகரம் பண்டிகைக்காகக் கருப்பு சல்வார்  எதிர்நோக்கி  அதனை  ஒரு  ஆண்  விபச்சாரகன்  மூலம்  பெறும் சுல்தானாவிற்கு மதத்திலும் மேல் உலகிலும் என்ன பங்கு என்பது இக்கதை எழுப்பும் முக்கியக் கேள்வியாகும். பசி, பாலுறவு, தூக்கம் என்கிற அடிப்படை இயல்பூக்கங்கள் மறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை தான் விலைமாதுவின் வாழ்வு என்பதைச் சொல்லும் கதை  ‘நூறு விளக்குகளின் வெளிச்சம்’. இவ்வளவு வெளிச்சத்திற்குள் இருண்டு கிடக்கும் வாழ்க்கைதான் அவர்களது வாழ்க்கை.

                                                      பகுதி-6

மனித இனம் தன்னுடைய நிர்வாணத்தல் சலிப்புற்றுப்போய் ஆடைகள் அணிந்துகொள்ள முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அது அணிந்துகொண்டிருக்கும் ஆடைகளில் சலிப்புற்று நிர்வாணத்திற்குதிரும்ப imageமுயற்சித்துக் கொண்டிருக்கிறது.  இன்றோ  நாளையோ  நிச்சயமாக  இந்த நிர்வாணம் நம் கலாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அல்லது இது வாழ்க்கையின் கொடூரமான பந்தயத்தில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி தானா? (மம்மி பக். 283) என்கிற கேள்விக்கான ஒரு கதையாடலாக வாழ்க்கையின் கொடூரமான பந்தயத்தில் இருந்து தப்பிக்க முயலும் உத்தியை விவரிக்கும் கதை தான் மம்மி. இக்கதை மேலோட்டமாகக் காமத்தையும் போதையையும் அடிப்படையாகக் கொண்ட, மறைமுகமாகவோ மறைக்கப்பட்டதாகவோ இல்லாத  ஒரு  இல்லத்தின்  நடைபெறும்  பார்ட்டியின்  கொண்டாட்ட விவரணையைக் கொண்டது. கதையின் மையமாக இருப்பவர் மம்மி எனப்படும் ஒரு வயதான பெண்மணி. மேலோட்டமாக கதையானது மம்மி மற்றும் பார்ட்டியைப் பற்றியதாக இருந்தாலும் ஆழ்தளத்தில் சலனப்படும் அமைப்பு நகரத்திற்குள் கட்டமைக்கப்படும் ஒரு திறந்தவெளி சமூகம் அல்லது புராதன தாய்வழிச் சமூகத்தின் நகர்ப்புற மாதிரி. இதில் ஒரு தாய் தனக்குக்கீழ் ஒரு கூட்டத்தை வழி நடத்துகிறார். முழுக்க முழுக்க நாடோடித் தன்மையின் மகிழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு அடையாளமற்ற சமூகம் இது. இதில் நுழைபவர்கள் தங்களது அடையாளத்தை இழந்த ஒரு புனைவின் அதீத சுகத்தில் நடிப்பவர்களாக மாறிப்போகிறார்கள். சந்தோசத்திற்காக அது நிலையற்றது என்றாலும்கூட  நடிக்கப்படுவது  போல  விளையாடி,  சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.

அன்பைப் பொழியும் இந்தத் தாய் நுட்பமாகப் புராதனத் தாய்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறாள். இத்தாய் இன்றைய நாகரிக உலகின் சொல்லப்படும் தாய்மை குறித்த பிம்பங்களை உடைத்தெறிகிறாள். ஒரு மாற்று உலகம் இன்றைய கொடூரத்திலிருந்து தப்பிக்க முன்வைக்கப்படுகிறது. இத்தகைய தாய்கள் இன்றைய சமூகத்தின் ஓர் அச்சுறுத்தலாக இருப்பதால் அன்றைய அரசாங்கம் மம்மியை புனேயைவிட்டு அகற்றுவதுடன்  (நாடு கடத்துவதைப்  போன்று)  கதை முடிகிறது. இத்தாய்  கட்டற்ற  பாலியல் விளையாட்டுகளை அனுமதித்தபோதும், ஓரினப் புணர்ச்சியாளன்  (சென்) ஒருவனையும் தனது அடையாளத்தை இழக்காமல் இருக்கும் ஒருவனையும் (ரஞ்சித் குமார்) அடையாளம் கண்டு நிராகரிக்கிறாள். கதையாடல் நுட்பமாக இன்றைய வன்முறை நிறைந்த நாகரிகச் சமூகத்திற்கு மாற்றாக ஒரு மாற்று சமூக அமைப்பைக் கட்டமைக்க முயல்கிறது. இன்றைய சமூகத்தின் அடிப்படை அலகாகக்   குடும்பம் இருப்பதால் அதனை நிராகரித்துவிட்டு வேறொரு வெளியை உருவாக்க முயல்கிறது. நான் கோரமான வெளித்தோற்றத்துக்குப் பார்வையாளனாக இருந்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அது அதன் தேவையைப் பூர்த்தி செய்துக்கொண்டிருந்தது என இந்த மாற்றும் அதன் திறந்த வெளியும் சரியா? தவறா? என்பது குறித்துப் பிரதிக்குள் ஏற்படும் தடுமாற்றமும் வெளிப்படுத்தப்படுகிறது.

காதல் என்பது இரண்டு மனங்களின் இசை,  ஒரு வேதிவினை இத்யாதி என மனங்களின் அடிப்படையில் தரப்படும் இலக்கணங்களைக் கிழித்துப் போடும் கதைதான். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தனிக் கதையாடல் நாயகி பெயரைக் கொண்ட ‘ஜானகி’. காதல் என்பது  அடிப்படையில் உடலீர்ப்பில் தான் உருவாகுகிறது. ஜானகி மூன்று நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறாள். மூவர் மீதும் அவள் காதல் கொள்கிறாள். அவளைத் தனிச்சொத்தாக்கிக் கொள்ள அவளுடன் உறவுகொள்பவர்கள்தான் கருதுகிறார்கள் என்பதுடன் அதற்காகவே இருவர் அவளை நிராகரிக்கவும் செய்கிறார்கள். குடும்பம் என்கிற அமைப்பும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் காக்கப்படுவது பெண்களால் அல்ல ஆண்களால் தான். ஆண்தான் தனிச்சொத்தை உருவாக்கினான், அதைக் காக்கக் குடும்பத்தை உருவாக்கினான். குடும்பங்களைக் காக்க அரசை உருவாக்கினான். எனவே காதல் என்பதுடன் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற திருமண பந்தத்தை இணைத்துவிட்டான். உண்மையான  காதல்  என்பது  எங்கு  சாத்தியம்?  வாய்ப்புள்ளபோதும் ஒருவனுடன் ஒருத்தி வாழ்வதுதான் காதல். ஆன்ம காதல் என்பது சொத்து மற்றும் வாரிசு போன்ற பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் ஏற்பாடுகளுடன் உறவு கொண்டதாக உள்ளது. இக்கதையாடலானது காதலை ஆன்ம தளத்திலிருந்து விடுவித்து உடல் தளத்திற்கு நகர்த்திவிடுகிறது. ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவுகொள்வதை அனுமதிக்கும் சமூகம் பெண்ணை மட்டும் அனுமதிப்பதில்லை என்பதுடன் புனித உடல் என்பது பெண் உடலாக மட்டுமே கருதப்படுகிறது. இந்தப் புனிதம் உடைபடுகிறது இக்கதையில்.

                                                   பகுதி-7

இக்கட்டுரை ராமாநுஜத்தின்  மொழிபெயர்ப்பில் சாதத் ஹசன் மண்ட்டோ என்கிற  உருதுப்  படைப்பாளியின்  கதைகள்,  சொற்  சித்திரங்கள், நினைவோடைகள்  மற்றும் அவரது எழுத்துக்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் என முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்டுள்ள மண்ட்டோ  படைப்புகள்  என்கிற  நூலை  அடிப்படையாகக்  கொண்டு எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்கிற உணர்வை ஏற்படுத்தாமல் இயல்பான தமிழில் வெளிவந்திருப்பது ஆறுதலான விஷயம். ராமாநுஜத்தின் கடினமான  உழைப்பும்,  மண்ட்டோவைச்  சரியாக  அறிமுகப்படுத்த (பின்னிணைப்பில் உள்ள அவரது கட்டுரை ஒன்று போதும் மண்ட்டோவை அவரது  தளத்தில்  உள்வாங்கிக்கொள்ள)  அவர்  எடுத்துக்கொண்ட பொறுப்புணர்ச்சியும் பாராட்டத் தக்கது.

‘டோபா டெக்சிங்’ மற்றும் ‘டிக்வாலில் ஒரு நாய்’ (பாகிஸ்தான் - இந்திய எல்லையில்  மாட்டிக்கொண்டு இருபுறமும்  துரத்தப்படும்  ஒரு  நாயைக் குறியீடாக்கிக் காஷ்மீர்ப் பிரச்சினையின் அவலத்தைச் சொல்லும் கதை)இத்தொகுப்பில் இல்லை என்பது ஒரு குறைதான் என்றாலும் மண்ட்டோவின் வகுப்புக் கலவரத்திற்கு அப்பாலான முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில் பல மாறுபட்ட கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல்  வளர்ந்து  வரும்  வகுப்புவாத  அரசியலையும்  அதன் வன்முறையையும் அம்பலப்படுத்தும் நோக்கில் மிக முக்கியத்தவம் வாய்ந்த ஒரு கால கட்டத்தில் தமிழில் வந்திருக்கிறது. வகுப்புவாதம் மற்றும் வன்முறை குறித்த ஒரு விசாரணையை இது தமிழில் தொடங்கிவைக்க வேண்டும். மதம் தேசியம் ஆகியவை  எவ்வாறு இந்தியத்  துணைக்கண்டத்தில் இயங்கிய உடல்களை வன்முறை கொண்டு சிதைப்பதன் மூலம் இந்தியன்-பாகிஸ்தானி என்கிற உடல்களாகக் கட்டமைக்கின்றன என்பதையும் குறிப்பாகப் பெண் உடலை   வரைதோலாகக் கொண்டு கலாச்சார வரலாறு எழுதப்படுவதையும் நுட்பமாகச் சொல்கிறது.

மனித உடலுக்குள் ஒரு ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவைச் சுமப்பது தான் உடல் என்கிற உடல் குறித்த இந்தியத் தத்துவங்களின் அடிப்படையை முற்றுலுமாக நிராகரிக்கின்றன மண்ட்டோவின் கதைகள். உடல் தான் மனிதன், ஆன்மா, உயிர் எல்லாம். பசிக்கும், பெண்தேடும், தூக்கம் வரும், போதையில் உலகை மறந்து   சுற்றும், வதைபடும், இதப்படுத்திக் கொள்ளும் உடலுக்கு அப்பால் எதுவும் இல்லை. இந்த உடலில்தான் காதல் வருகிறது. கண்ணீர் வருகிறது. சிரிப்பு வருகிறது. உலகின் நிகழும் அனைத்து வன்முறைகளை ஏற்பதும் செலுத்துவதும் இந்த உடல் தான். ஆனால் உடலை நிராகரிப்பதன் மூலமே ஆன்ம விடுதலை என்று பேசுவதும், உடல் குறித்த சிந்தனைகள் புனிதமற்றதாக நிராகரிக்கப்படுவதும், ஆன்மா என்கிற ஒரு கருத்தியல் வெளியை உயர்த்திப் பிடித்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உடலுக்கு அப்பாலும்  உறவு  சாத்தியம்  என்பதான  பொய்மையையும்  கிழித்துப் போடுகின்றன.

மதம் என்பதும் தேசியம் என்பதும் ஒரு அடையாளமே ஒழிய அவற்றால் மனித விடுதலை சாத்தியமில்லை. அந்த அடையாளங்கள் மனிதர்களைப் பிரித்துத் தனது கருத்தியலுக்கு ஏற்ப வகைப்படுத்துவதன் மூலம் நாடுகளை உருவாக்க எண்ணற்ற உடல்களைக் கொன்றொழிக்கின்றன. இந்திய பாகிஸ்தான் உருவாக்கக் கலவரங்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமயமான வன்முறைகள் அல்ல. அந்தக் கலவரங்களுக்குள் இயங்கிய மனித தன்னிலை மற்றும் மத இன அடையாளம் அது வெளிப்படுத்திய மனித மனத்தின் உள்ளார்ந்துள்ள பாசிச மனப்போக்கு ஆகியவற்றை அதன் உண்மையான நோக்கில் பதிய வைக்கின்றன இக்கதைகள். இக்கலவரங்களில் ஏற்படுத்தப்பட்ட பயம், அச்சம், பதற்றம் ஆகியவை ஒரு கொடுங்கனவாக மனித மனதின் ஆழத்தில் உறைந்து போய் விட்ட கொடூரம் ஆகியவை எந்தச் சார்புமின்றி ஒரு நேர்மையான அறிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது.

நிலையான குடிகளைக் கொண்ட மக்கள் கூட்டம் மட்டுமே வரலாற்றின் மூலமாகத்  தனது நிலத்தை வரைந்து வைத்துக் கொள்ளக்கூடிய  தேவை இருக்கிறது. நாடோடிகளுக்கு வரலாறு கிடையாது. அதனால் வாழ்க்கையின் நேற்று பற்றியோ நாளை பற்றியோ கவலையும் கிடையாது. அதனால்தான் வரலாறோ  கடந்த  கால  ஏக்கமோ  மண்ட்டோ  கதைகளில்  காணக் கிடைப்பதில்லை. அடையாளமற்ற நாடோடி வாழ்க்கையாக மாறி இருக்கும் இந்நூற்றாண்டை அகதிகளின் நூற்றாண்டு என்றால் மிகையாகாது. புலம் பெயர்ந்துபோன ஒரு மனிதனின்  நாடோடி உணர்வு எல்லாக்  கலாச்சார விழுமியங்களையும் தூக்கிப் போட்டு உடைப்பதன்  மூலம் மட்டுமே நிலையான குடிமக்களை எதிர்க்க முடியும். மண்ட்டோ தனது கதைகளில் அதைத் தான் செய்கிறார். அவரது வேரை ஆதிக்க வர்க்கம் அறுக்கும்போது தனது ஆற்றலின் மூலம் ஆதிக்க வர்க்க வேர்களை அறுத்து ஆட்டம் காணச் செய்ய முனையும் ஒரு யுத்தக்களமாக விரிகிறது அவரது கதைகள்.

(நிழல் பத்திரிக்கையில் வெளிவந்த இக்கட்டுரை, எனது “நவீனத்தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்” நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. )

--  ஜமாலன் (14.12.2005)