பிம்பங்களின் இருத்தல்வினைச் சொல்லாடல்கள் (அதிகாரத்தின் அமிலச் சேர்க்கை பற்றிய யூகங்கள்)

இக்கட்டுரை 1990-ல் உடலரசியல் பற்றிய வாசிப்புகள் துவங்கிய காலத்தில் எழுதியது. கோட்பாடாக எழுதிபார்க்கும் ஆசையில், எண்ணத்தில். நிறப்பிரிகைக்கு அனுப்பப்பட்டு பிரசுரமாகவில்லை. காரணமாக பதிலும் இல்லை. நிகழ் பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்டு, மதிப்பிற்குரிய கோவை. ஞானி அவர்கள், இது புரியாததாக புதிய ஒன்றாக உள்ளதால் பிரசுரிக்க இயலவில்லை என்ற தகவலுடன் திருப்பி அனுப்பியிருந்தார். மிகவும் அறிமுகமற்ற எழுத்தாளனாக இருந்தும், மதிப்புடன் அவர் அனுப்பிய பதிலே மகிழ்ச்சியும் உற்சாகம் தருவதாகவும் இருந்தது. அதன் பின் சில பகுதிகள் திருத்தப்பட்டு காலக்குறி நகலச்சு இதழில் 1994-ல் பிரசுரமானது. எனது இரண்டு நூல்களிலும் இக்கட்டுரையை சேர்க்கவில்லை. சமீபத்தில் தனிப்பட்ட முறையில் வாசித்த நண்பர்கள் இதை பிரசுரிக்கலாம் என்று தந்த துணிச்சலில் இதை பகுதியாக இங்கு வெளியிடுகிறேன். வாசிப்பவர்கள் இது ஆரம்பநிலையில் எழுதப்பட்டதை கவனத்தில் கொள்ளவும். இன்று எழுதினால் இதிலிருந்து பலவற்றை விரிவாக்கியும் சிலவற்றை சுயவிமர்சனமாகவும் எழுதலாம்.

மெல்ல எரிதலே உயிர்த்தல்" - அன்டனி லாரன்ஸ் லவாய்சியர்
"

பிரச்சனைகள்:

"அரசியல் சர்வவியாபகமானது" - என்ற கூற்றின் முழு அர்த்தமும் உக்கிரமாகச் செயல்படக்கூடிய ஒரு காலத்தில் வாழ நாம் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். எதுவும் அரசியலற்ற இருப்பைக் கொண்டிருக்கவே முடியாது என்கிற பொதுவிதியன் செயல்பாட்டிற்குள்ளேயே இன்றைய தனிமனிதன் நடப்பட்டிருக்கிறான். அரசியல் என்பது அதிகாரம் பற்றிய பிரச்சனை என்பதால் மேற்குறித்த வரிகளில் அடங்கியுள்ள உண்மையையும் வன்முறையையும் நம்மால் உணர முடிகிறது.

அரசியல் என்பது அதிகாரம் செயல்படுவதற்கான வெளி (space) அதிகாரம் ஒவ்வொரு மனித செயலுக்குள்ளும் ஒருவகை பொருட்பண்பாக (physical property) செறிந்து இவ்வெளிக்குள் இயக்கம் அடைகிறதுஒவ்வொரு பொருளின் இருப்பும், அதிகாரத்துடன் அதுகொள்ளும் உறவினைக்கொண்டே அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட்டிருக்கிறதுஇன்றைய 'பொது அர்த்ததளம்" - என்பது அதிகாரத்தின் தொழில்நுட்பமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பொது அர்த்த தளத்திற்குள் தன்னை ஒடுக்கிக்கொள்ளாது விலகிச் செல்லும் தன்முனைப்புள்ள மனிதனை அதிகாரம் இருப்பற்றவனாக ஆக்குவதன்மூலம்...  அரசியலற்றவனாகச் செய்கிறதுஇத்தகையவர்கள் அதிகாரத்தின் பிடிக்கு வெளியே நிற்பதால்.. இவர்கள்மீது அதிகாரம் நேரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வது பொது அர்த்ததளத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுஅதிகாரத்தின் நேரடி ஒடுக்குதலுக்குள்ளாகும் மனநொயாளியையும், புரட்சியாளனையும் - சமமாக நோக்கும் போக்கு இவ்வாறே உருவாகுகிறதுஅதிகாரத்தின் விளையாட்டுகளை வேடிக்கை பார்க்கும் கூட்டமாக எண்ணற்ற மனிதர்கள் பாமரர்கள் என்ற வடிவத்தில் இருத்தப்பட்டிருப்பதும் இப்படித்தான்.

எனவே, இன்று நம்முன் கதையாடலாகவும், சொல்லாடல்களாகவும், சமிக்ஞையாகவும் விரித்து வைக்கப்பட்டுள்ள பொது அர்த்த தளத்தில் செயல்படும் வாழ்தல்களை பல நிலைகளில் சிதைத்தும், இன்றைய மனிதன்முன் வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள்சிந்தனைக்கட்டுகள் ஆகியவற்றின் உள் தர்க்கங்களை உடைத்தும் பார்க்க வேண்டியதாக உள்ளது. பொதுவாய், இன்றைய சொல்லாடல்களின் தர்க்கம் என்பது கடந்துசெலல், தேடல் என்பதான தத்துவப் பிரச்சனைகளாக செயல்வடிவம் பெறுவதை அனுமானிக்கலாம்மனம் என்பதில் உள்ளார்ந்த அலகுகள் வெளியின் ஏகாந்தத்துடன் காலமற்ற உறவு கொள்ள துடிப்பதாக உணரப்படும் - பாவத்தின் விஞ்ஞானம் இதுதான்அல்லது இன்றைய பேச்சின், மொழியின் அமைவு என்பது இவ்வுடலை, வாழ்வை கடந்து சென்று ஒரு நிலையான அர்த்தத்தில் தன்னை பிணைத்துக் கொள்ளத் துடிப்பதாக இருப்பதை உணரலாம். இவ்வகை தத்துவ ஊடாட்டங்கள் மனிதனின் உள்ளும், வெளியுமாய் ஒருவகை இரட்டை விசையை செயல்படுத்தி மனிதனை நிறைவின்மை என்ற இருட்டிற்குள்ளேயே பதுக்கி வைத்திருக்கிறதுஇவ்வகை இரட்டை விசையே மொழித்துகளின் வழியே மனித வாழ்வின் அர்த்தங்கள் பற்றிய சொல்லாடல்கள் கட்டியமைக்கப்படுகிறதுஇச்சொல்லாடல்களத்தில் கட்டப்பட்டுள்ள தனிமனிதன் முன் சில தேர்வு விதிகளே (selection rule) செயல்படுகின்றன. இத்தேர்வு விதிகளை தேர்ந்துக் கொண்டு வாழ முடிந்தவர்களுக்கே "மனித வாழ்வு" என்பதன் அர்த்தமும், இருத்தலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இநநிலையில் தத்துவம், அரசியல் ஆகியவற்றின் அடிப்படைப் பிரச்சனைகள் மனிதனும், மனிதன் முன் உள்ள தேர்வுகளும் எப்படி அதிகாரத்தின் பொதுவிதிகளால் கட்டமைக்கப்பட்டு செயல்வடிவம் பெறுகின்றன என்பதை புரிந்துகொள்வதே ஆகும்.

அதிகாரம் என்பது இன்று மனிதனை நிர்ணயிப்பதாக கூறிக் கொண்டிருக்கும் அனைத்து வகைக் காரணிகளின் உள் அலகுகளும் சேர்ந்து மனிதன் மீது செலுத்தும் வன்முறையின் சுழல் மைய ஆற்றலாகக் கருதலாம்இவ்வாற்றல் பல்வேற படிநிலைகளில் வளர்ந்து இன்று பாரீய தொழில்நுட்பமாக உருவமைந்துள்ளதுஇவ்வாறாக, உருவமைந்துள்ள அதிகாரத்தின் மையமான பிரச்சனைகளாக உருவாகியுள்ள தத்துவம், அரசியல், ஆகியவற்றின் இயங்கியல் உறவின் வலைப்பின்னலை படிக்க முற்படும் முயற்சியே இவ்வெழுத்து.

(இன்னும் வரும்)

-ஜமாலன் (1990)

ஜமாலன். Blogger இயக்குவது.