பிம்பங்களின் இருத்தல்வினைச் சொல்லாடல்கள் (அதிகாரத்தின் அமிலச் சேர்க்கை பற்றிய யூகங்கள்) - 2

பகுதி -1 பிரச்சனைகள்


ஆய்வுரைகள்:

தத்துவம், அரசியல் என்கிற இருவகை செயல்பாடுகளுக்கு இடையிலான இயங்கியல் படிநிலைகளை வரைய முயற்ச்சிப்போம்

முதல் நிலையில் தத்துவத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு துகளுக்கும், புலத்திற்கும் இடையிலான உறவாகும்தத்துவமாக உருவான கருத்துருவங்கள் அரசியல் புலத்திற்குள் இயங்கி - ஒருவகை சுழல் மைய ஆற்றலை சேகரித்துக் கொடுக்கக்கூடிய துகள்களாகவும், அரசியல் தத்துவத்தின் இயங்கியல் போக்கில் தன்னை கட்டமைத்தக் கொண்ட புலமாகவும் அமைந்தள்ளதுஇப்படியாகத்தான் தத்துவம் என்று அறியப்படும் கருத்துருவம் தவிர்க்க இயலாமல் அரசியல் குணாம்சத்தைக் கொண்டிருக்கிறது. அல்லது அரசியல் தேவையே தத்துவமாக வடிவமெடுக்கிறது. இத்தத்துவம் அரசியல் முரண்களை பூசி மறைக்கும் சாயமாக இருக்கிறது. இதை விஞ்ஞான மொழியில் கூறினால் இயக்கமற்று நிற்கும் திசைவேகம் குறைந்த நிலையில் தத்துவ கருத்துருவமாக (துகளாக) இருக்கிறது. சமூக இயக்கத்தில் திசைவேகம் பெற்று இயங்கும்போது (புலமாக) அரசியல் வடிவமாக இருக்கிறது. மொழியின் இருவேறு உறவு நிலையிலேயே இவ்விரு நிலைப்பாடுகளும் உருவாகுகின்றன.

இரண்டாம் நிலையில், தத்துவமானது மனித இருத்தல் பற்றியதாகவும், அரசியலானது மனித வாழ்தல் பற்றியதாகவும் உருவமைந்துள்ளதுஇதன்பொருள் தத்தவமானது மனிதன், மனிதனாக இருப்பது பற்றியும், அவனது சாராம்சம் - அதன் மகிழ்வு பேரின்பம் என்கிற 'உண்மை'-களைப் பேசுகிறது. அரசியல் மனிதனின் நிகழ்கால உலகில் வாழ்வதின் பொருளியல், யதார்த்த பிரச்சனைகளை பேசுகிறது. இந்நிலையில் இருவேறு உலகின் தன்மைகளை பேசும் வேறு துறைகளாக அவை பிரிகின்றன, தத்துவம் மனித மதிப்புகள் பற்றி பேசும்போது அரசியல் மனிதனையே மதிப்பீடு செய்வதாக அமைகிறது.

மூன்றாம் நிலையில், தத்துவமானது மனித உடல் மீது பன்முகப்படுத்தப்பட்டுள்ள வன்முறையை கருத்தியல் ரீதியாக இயல்பாக்கம் (naturalize) செய்யும் தொழில் நுட்பமாகவும், அரசியலானது நடைமுறை யதார்த்தமாக்கும் தொழில்நுட்பமாகவும் செயல்பாடடைகிறது. சமூகத்தின் வறுமை, வாழ இயலாமை, ஏழ்மை போன்ற யதார்த்தங்களையும் அவற்றினால் உருவாகும் மனோவியல் வன்முறையையும் அர்த்தமற்றவை என்பதான தோற்றப்பாட்டை உருவாக்கி அப்பாலையான, மனொவியலான ஒருவகை சுகம் இருப்பதாக ஏற்கச் செய்து அதை அடைய இவற்றை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்வதான ஒரு மனோவியல் தோற்றப்பாட்டைத் தத்துவம் உருவாக்குகிறது. அல்லது இவ்வகை வன்முறைகள் அர்த்தமற்றவை என்றும் இவற்றின் பெளதீக அர்த்தத்தை கரைத்து இயல்பாக்கம் செய்கிறது. ஆனால், அரசியல் நடைமுறையில் இப்பிரச்சினைகளை உருவாக்கும் காரணியாகவும், செயல்படுத்தும் எந்திரமாகவும் இருக்கிறது. இந்நிலையில் அரசியலின் யதார்த்தமுகத்தை கருத்துருவ அலகுகளால் மூடிமறைக்கும் செயலாக தத்துவம் இயங்குகிறது.

நான்காம் நிலையில், தத்துவம் மனித வரலாறு பற்றிய எழுத்தாகவும்,அரசியல் மனித வரலாறு பற்றிய பேச்சாகவும் வடிவ வேறுபாடு அடைகிறது. அதாவது இதுநாள்வரையிலான மனிதவரலாற்றின் உள்விதைகளை பதித்துக் கொண்டிருக்கும் ஒன்றாக தத்துவம் இருக்கிறது. அதாவது, மனித வரலாற்றின் தேர்ந்தெடுப்புகளை எடுத்து பதித்து வைத்திருக்கும் உன்னதங்களின் எழுதுதலாக இருக்கிறது. எழுத்தின் பண்பு என்பது முடிவற்ற அர்த்தங்களைக் கொண்டிருக்கும். காலத்திற்கேற்ப படிக்கும் தன்மை கொண்டதாகும்இப்பண்பு தத்துவத்திற்கு உருவாகுகிறதுஅரசியல் என்பது உடனடிச்செயலாக, தேவையின் நிறைவிற்காய் உருவாகும் மொழிபோல அமைகிறது. அதாவது, பேச்சின் இயக்கத்தன்மை-சொல்லப்பட்ட சூழலில் உருவாகும் மேலோங்கிய அர்த்தம்-வளையுந்தன்மை ஆகியன அரசியலின் பண்புகளாக இருக்கின்றனமொழியின் இருவேறுபட்ட வடிவங்களைப்போல அரசியலும், தத்துவமும் அமைகின்றன.

ஐந்தாம் நிலையில், தத்துவம் வன்முறையின் விளிம்பு நொக்கிய இயக்கமாகவும், அரசியல் மையம் நோக்கிய நகர்வாகவும் இருக்கிறதுதத்துவம் எப்பொழுதும் வன்முறையை விட்டு விலகிச்செல்வதான தோற்றத்தை தருகிறதுஅரசியல் மெலும் மேலும் வன்முறையைச் சார்ந்து உள்நோக்கி குவிவதாகிறது. தத்துவம் வன்முறையை விட்டு விலகிச் செல்வதானது அரசியலின் வன்முறை குவிப்பிற்கு ஒரு திரைபோல செயல்படுகிறது.அல்லது அவ்வன்முறை பற்றிய பேச்சையே மேளனமாக புறக்கணிப்பதைப்போல செயல்படுகிறது.

இறுதியில், தத்துவம் அதிகாரம் பற்றிய எதிர்கோட்பாடாகவும், அரசியல் அதிகாரம் பற்றிய கோட்பாடாகவும் அமைப்பாக்கம் பெறுகிறதுஎனவே,தத்துவம் அரசியலிலிருந்து விலகியத் தனித்துறையாகவும், அரசியலை எதிர்ப்பது போன்ற தோற்றத்தையும் தருகிறதுஅதிகாரத்தினை எதிர்ப்பது போன்ற ஒருவகை பதுக்கப்பட்ட, ஸ்தூலமற்ற மொழியால் தத்துவம் முனுமுனுக்கிறதுஅரசியல் தத்துவத்தை புறக்கணித்துவிட்டு வேறுவகை நடைமுறை சார்ந்த கோட்பாடுகளின் தத்துவ வடிவங்களை தனதாக்கி நடைமுறையில் செயல்படுகிறது.

ஒரே புள்ளியில் துவங்கிய இரண்டும் விலகி வெவ்வேறு திசையில் நிற்பதன்மூலம் ஒரேவித செயலை வெவ்வேறு தளத்தில் செய்வதாகிறது. தத்துவம் மக்களை சென்றடைந்து பெளதீக சக்தியாக அரசியல்வடிவை எடுத்தப்பின் - அரசியல் தத்துவத்துடன் ஏற்படுத்தும் எதிர்நிலை உறவின்மூலம் தத்தவம் செயல்பாடற்று முடங்கிப் போகிறது.

மாபெரும் இந்து” சமூகத்தை உருவாக்கிய அத்வைதமும், மாபெரும் பேரரசுகளை உருவாக்கிய பெளத்தமும், கிறித்துவமும், இஸ்லாமும் பேசிய தத்துவ உள்ளடக்கங்கள் தேங்கிப்போய் - அரசியல் முகங்கள் சார்பு நிலையில் சிரிக்கத் துவங்கிய கோரம் உருவாகியதற்கான காரணங்களாக இவற்றைக் கொள்ளலாம்.

இவ்வாய்வுரைகளில் தத்துவ - அரசியல் இடைவெளிகளில் செயல்படும் மெளனங்கள், இருண்மைகளை படிக்க முற்படும்போது தத்துவமும், அரசியலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் நுண்ணியக்க மொழிக்கூறுகளையும்அதன் உள் அலகுகளையும் ஆய்வு செய்யவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறதுஇந்நிலையில் முற்றிலும் தனிமனிதனையும், அவனது மனத்தையுமே தனது செயல்தளமாக கொண்டியங்கும் அதிகாரத்தின் செயல் மையங்களை கண்டடையும் போக்கில் நமது ஆய்வு வழி நடத்தப்பட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

(இன்னும் வரும்)

-ஜமாலன் (1990)
ஜமாலன். Blogger இயக்குவது.