மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 3

மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 1
மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 2

உலகின் புராணங்கள் மற்றும் கடவுள் பற்றிய பல தொன்மங்களில் திருநங்கைகள் பற்றிய கதையாடல்கள் உள்ளன. அக்கதையாடல்கள் திருநங்கைகளை சமூகவயப்படுத்தும் நோக்கினையே கொண்டிருக்கிறது. அவர்களை பாலினமாகவோ அல்லது அவர்களது பாலற்ற தன்மையினால் உருவாகும், சமூக ஒழுங்கின்மைக்கு அஞ்சி, அவர்களை சமூக அமைப்பிற்குள் இருத்தும் நோக்கையே கொண்டிருக்கின்றன. திருநங்கைகளுக்கு இருபாலின-அடையாளத்தில் ஒன்றை வழங்குவதன்மூலம் அவர்களை சமூகவயப்படுத்துவதே அத்தொன்மங்களின் நோக்கமாக உள்ளது.

சான்றாக, பகுச்சரமாதா கதையில் குஜராத்தில் இருந்த சரன் இனத்தை சேர்ந்த பகுச்சரா என்பவளும் அவளது தங்கையும் ஒருநாள் தேரில் செல்லும்போது, பாப்பியா என்பவனால் தாக்கப்படுகிறார்கள். எதிரிகள் தாக்கும்போது அவர்களை எதிர்த்து வெல்லமுடியாத நிலையில், சகோதரிகள் இருவரும் தங்கள் இன வழக்கப்படி தங்களை அழித்துக்கொள்ளும் முகமாக தங்களது முலைகளை அறுத்துக்கொள்கிறார்கள். இப்படி முலை அறுப்பதன் வழியாக தெய்வநிலையை அடைகிறார்கள் கண்ணகிப்போல. முலைஅறுத்தல் என்பது பெண்மையாக கட்டப்பட்ட பாலின அடையாளத்தை துறந்து வெளியேறுதலே. இப்படி வெளியேறுபவர்கள் தெய்வமாக்கப்பட்டு சமூகத்தின் கருத்தியல் அங்கமாக ஆக்கப்படுகிறார்கள். பாப்பியா ஆண்மையற்றவனாக சபிக்கப்படுகிறான். பகுச்சரமாதாவை பெண் உடையிலும், பெண்ணாக செயல்பட்டும் வழிபட்டால சாபம் நீக்கப்படுவான் என்பதால் அவன் தன்னை ஒரு திருநங்கையாக மாற்றிக்கொண்டு வழிபடுகிறான். அதனால் திருநங்கைகள், தங்களது மாதாவாக பகுச்சரமாதாவை இன்றும் வழிபடுகிறார்கள். இதனால் அவர்களது சாபம் நீக்கப்படும். அதாவது திருநங்கையாக பிறத்தல் சபிக்கப்பட்டது என்பதையும், அது ஒரு குற்றத்தின் விளைவு என்பதையும் இத்தொன்மக் கதையாடல் சமூகத்திற்கு சொல்கிறது. இதில் பெண் என்பதால் ஒரு உடல் மீது பாலியல் வன்முறை செய்பவன் அந்த பெண்ணாக மாறி அதன் வலியை உணர்வதற்கான நாடகமும் உள்ளது. திருநங்கையாதல் என்பது ஒரு பாலினத்தேர்வு அதை சாபமாக மாற்றுகிறது இக்கதையாடல். பகுச்சரமாதா பற்றிய பல தொன்மங்கள் உள்ளது. எல்லா தொன்மங்களிலும், ஆண்மையற்றவன், ஆண்மை பெறுதல் என்கிற ஒரு முடிவே எட்டப்படுகிறது. ஆண்மையை அளிக்கும் தாயாக இருக்கிறது இக்கடவுள்., திருநங்கைகளை ஆண்மை இழந்தவர்கள் என்பதாக பாலினமாதலின் அரசியலுக்குள் வைப்பதே இத்தொன்மங்களின் நோக்கமாக உள்ளது. அதாவது ஆண்-பெண் பாலின-இருமை எதிர்வாக கட்டப்பட்ட சமூக அமைப்பில், சமூகவயமாக வேண்டுமானால் எதாவது ஒரு பாலினத்திற்குள் அடக்கப்பட வேண்டும், அப்படி அடங்காதவர்கள் சபிக்ப்பட்டவர்களாக, பாவப்பட்டவர்களாக. குறையுடையவர்களாக மாற்றப்படுகிறார்கள். இப்படி அவர்களை வகைப்படுத்துவதன் மூலம், அல்லது அடையாளப்படுத்துவதன் மூலம், பாலின-இருமை-எதிர்வு சமூகத்திற்குள் ஒரு பாலின தேர்விற்குள் அடக்கப்படுகிறார்கள். அதற்கு கடவுள்கள் வழியாக தெய்வீகமாக்கப்படுதலும், புனிதப்படுத்தலும் சடங்காதலும் நிகழ்த்தப்படுகிறது.

ராமாயணத்தில் ராமன் காட்டிற்கு போகும் முன் அயோத்தியின் எல்லையில் தன்னை வழி அனுப்ப வந்தவர்களிடம் ஆண்களும், பெண்களும் இல்லத்திற்கு திரும்பும்படி அறிவிக்கிறான். 14 ஆண்டுகள் வனவாசம் கழிந்து நாடு திரும்பும்போது, அந்த எல்லையில் ஒரு திருநங்கை நிற்கிறார். ராமன் ஆண், பெண் என்று சொன்னதால், தான் ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்பதால் ராமனின் வாக்குபடி வீடு திரும்பமுடியாமல் நின்றுவிடுகிறார். அவரது அந்த உணர்வை மதித்து ராமன் அவரை ரட்சித்ததால், திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சடங்குகளில் அவர்களிடம் ஆசி பெறுவது புனிதமாக கருதப்படுகிறது. மஹாராஷ்டிராவில் இன்றும் இப்பழக்கம் உள்ளது[1]. இதிலும், பாலின குழப்பம் என்பது ராமனின் வாக்கை கையாள்வதில் உள்ள குழப்பத்தை சுட்டுகிறது. இதில் உள்ள மற்றொரு உட்பொருள் சட்டம், வாக்கு, மொழி எல்லாம் பாலினத்தன்மை கொண்டது என்பதுதான். அது ஆண்-பெண் இருமை எதிர்வு பாலின ஒழுங்குசார் தன்மைக் கொண்டது என்பதால், அதற்குள் திருநங்கைகள் என்கிற பாலின மற்றவர்கள் அடங்கமாட்டார்கள் என்பதுதான். அவரை புனிதப்படுத்தி சமூகவயத்திற்குள் அடக்கவேண்டியதேவை உள்ளதையே இப்புராணக்கதையாடல் விளக்குகிறது.

மகாபாரத அரவான் கதைப்படி, பாண்டவர்கள் வெற்றியடைய, காளியின் சக்தியைப்பெறவேண்டி அரவானை பலியிடுகிறார்கள். அரவான் இறக்குமுன் திருமணம் செய்ய ஆசைக்கொள்கிறான், அதன்படி நாளை இறக்கப்போகும் அவனை பெண்கள் திருமணம் செய்ய தயாரற்ற நிலையில், கிருஷ்ணன் மோகினியாக மாறி அரவானை திருமணம் செய்துகொள்கிறார். மோகினி என்பது மோகத்தை வெளிப்படுத்தும், ஒரு பெண் யட்சி. இக்கதையின்படி, திருநங்கைகள் மோகினியாக, கிருஷ்ணனின் ஒரு மாற்று வடிவமாக, அவதாரமாக உள்ளவர்கள் என்பதால் கடவுளின் மறுவடிவமாக மாற்றப்படுவதும், ஆண் பெண்ணாக மாறி திருமணம் செய்வதால், இந்த திருநங்கைகள் சமூக நிறுவனமான குடும்பம் என்கிற அமைப்பின் திருமண பந்த்த்திற்குள்ளும் வைக்கப்படுகிறார்கள். இதன்மூலம் தன்உடல்மீது செலுத்தப்பட்ட சமூகவலியை தெய்வீக இதமாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஆண் பெண்ணாக மாறி ஆணைபுணர்தல் என்பது ஐயப்பன் பற்றிய கதையாடலிலும் உள்ளது. இவற்றில் திருநங்கைகளின் பாலற்ற தன்மை அல்லது பாலின அமைப்பிற்குள் தங்களை இறுத்திக்கொள்ளாத தன்மை, சமூகமீறலாக மாறிவிடாமல் சமூக அமைப்பிற்குள் இருத்தப்படுகிறது. அதாவது பாலற்ற உடல்களின்மீது பாலின சமூகவிதிகள் எழுதப்படுகிறது. இத்தகைய புராணங்கள் உலகின் எல்லா இனங்களின் தொன்மங்களிலும் வெவ்வேறு வடிவில் உள்ளன. இது குறித்து விரிவாக மாறியப்பாலினங்கள் பற்றி தொகுக்கப்பட்ட களைக்களஞ்சியங்களில் வாசித்தறியலாம்.

பாலினமாதலின் அரசியலில் அல்லது இருபாலின உடல் உருவாக்கத்தில் திருநங்கைகளின் உடல் என்பது ஒரு முரணாக இருபாலின உடல் உருவாக்கத்தை கவிழ்த்துவிடக்கூடியதாக இருப்பதால், அதனை பல தொன்மங்கள், புராணங்கள், கதையாடல்கள் வழியர்க புனிதமாக, சடங்காக, பாவமாக, நோயாக, குறையாக, தண்டனையாக, சாபமாக பல வடிவங்களில் சமூகத்தின் உடலியல் தளங்களில் எழுதி வைத்து உள்ளன. பாலற்றதான உடல்களின் மீது ஆணையும் பெண்ணையும் எழுத, ஆணும் பெண்ணுமற்றதான இந்த உடலை விலக்கி வைக்கவேண்டிய தேவையும், அதே நேரத்தில் இவற்றின் இருப்பைக் கண்டு அஞ்சி அதனை ஒழுங்கமைத்து தனது கண்காணிப்பில் வைக்க வேண்டிய தேவையும் அதிகாரத்திற்கு அவசியப்படுகிறது.

ஆண், பெண் என்கிற பாலுமையில் ஆண்மை, பெண்மை என்கிற பண்பாட்டு கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டால் அது பாலினமாக கருதப்படுகிறது. பாலுமை என்பதை பிறப்பு உருப்புகள் அடிப்படையில் தீர்மானிப்பதாக உள்ளது. தொடைகளுக்கிடையில் என்ன உள்ளது? என்பது பாலுமையை தீர்மானிப்பதாகவும், நடை, உடை. பாவனைகளில் என்ன உள்ளது என்பது பாலினத்தை தீர்மானிப்பதாகவும் கருதப்படுகிறது. 2000 த்திற்கு ஒருவர் என்கிற வீத்த்திலும், உலகில் வருடத்திற்கு 65,000 பேர் மாற்றுப்பாலினமாக பிறக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். பிறப்பின் அடிப்படையில் மாற்றுப்பாலினத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக பிறக்கின்றனர். இத்தகையவர்களை ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க வேண்டிய ஒரு அழுத்தநிலைக்கு ஆளாக்குகிறது சமூகம்.

பாலுமை(sex) மற்றும் பாலினம்(gender) என்கிற சொற்கள் ஒரு குழுப்பமான நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தோற்றம் பற்றிய மூன்றுவிதமான கருத்தாக்கங்கள் நிலவுகிறது.

1. பாலுமை, பாலினம் இரண்டும் உடலின் பிறப்பில் உள்ளது என்ற கருத்து. இது சாராம்சவாதிகளின் கருத்து. ஒரு உடல் பிறக்கும்போதே பாலுமையுடன் பிறக்கிறது. ஆண் பெண் வேறுபாடு சாராம்சமானது அடிப்படையானது என்பது இதன் அரசியல். பாலின அடையாளங்கள் இயல்பானது, இயற்கையானது என்பது. நவீன சமூகத்தின் முதலாளித்துவத்தின் அரசியல்.

2. பாலுமை பிறப்பிலேயே ஒரு உடலில் உள்ளது. பாலினம் மட்டும் பண்பாட்டு கட்டுமானம் என்ற கருத்து. இது சிமோன்-தி-போவாவின் “பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள்” துவங்கிய பெண்ணியலாளர்களின் அரசியல். பெண் என்பது ஒரு கலாச்சாரக்கட்டுமானமாக தந்தைவழி சமூக நோக்கில் கட்டமைக்கப்பட்டது என்பது. ஆண் பெண் பாலின அடையாளங்கள் கட்டமைக்கப்பட்டதுதான், ஆனால், பெண் என்கிற அடையாளம் அதில் மறுக்கப்பட்டு உள்ளது. அதனை கட்டமைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது.

3. இரண்டுமே கட்டுமானம்தான், ஒரு உடலில் பாலுமை என்பதும் இல்லை பாலினம் என்பதும் இல்லை இரண்டுமே ஒரு உடலின் உருவாக்க போக்கில் அதன் நிகழ்வுகளைக்கொண்டு கட்டமைக்கப்படுவதே என்கிற கருத்து. இது பிரஞ்சு சிந்தனையாளர் பூக்கோ துவங்கி ஜீதித் பட்லர் மற்றும் தெல்யுஸ்-கத்தாரி போன்ற சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் இந்த பாலினமாதல் அரசியலை அடையாள அரசியலுக்கு எதிராக விரிவுபடுத்தி மாறியப்பாலினத்தினர் பற்றிய “குயிர் தியரி“ எனப்படும் ”கோணல்கள் கோட்பாடு” (தமிழில் குயிர் என்பதை எப்படி சொல்வது என்பது சிக்கலாக உள்ளதால் கோணல்கள் என்கிற வார்த்தையே பயன்படுத்துகிறது.) வரை விரிவுப்படுத்தியுள்ளனர்.

யுத-கிறித்துவ-இஸ்லாமிய மூலக்கதைகளில் உள்ள ஆதாம்-ஏவால் என்கிற தொன்ம அடிப்படையில், ஆண் பெண் என்கிற இருபாலின ஒழுங்கமைப்பாக சமூகம் கட்டப்படுகிறது. அதாவது இருமை எதிர்வாக இது கட்டப்பட்டு உள்ளது. இது ஒருவகையான மத விதிமுறைகளின் ஆழ்தள கட்டமைப்பு. உலகின் அனைத்து உடல்களையும் இந்த இரு பாலினத்திற்குள் அடக்க முனைவதால், இந்த எதிர்வை அடிப்படையாக்க் கொண்ட ஒரு சமூக அமைப்பே வரலாற்றுரீதியானது, அங்கீகரிக்கப்பட்டது, இயல்பானது, இயற்கையானது என்ற நிலை உருவாகியுள்ளது. பண்டைய காலங்களில் தன்பால்-புணர்ச்சியாளர்கள் ஒரு பாலினவகையாக அல்லது தனிப்பாலுமையாக இருந்தனர். அவர்களை இன்றைய எதிர்பால்-வேட்கை கொண்ட ஆண்-பெண்-இருமை-எதிர்வு-சமூக அமைப்பிற்குள் ஆணாகவும், பெண்ணாகவும் வகைப்படுத்தி, தன்பால்-புணர்ச்சியை குற்றமாக மாற்றியது நவீன சமூகம். மாற்றுப்பாலியளார்களையும், தனியானதொரு பாலுமை கொண்டவர்களாக இல்லாமல், இருமை-பாலினத்திற்குள் அடக்கவே முனைகிறது. 17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகான கிறத்துவ-விக்டோரியன் அறமதிப்பீடுகள் வழியாக, பாலியல் சொல்லாடல்கள் கட்டப்படுவதையும், பாலியல் ஒழுங்கமைக்கப்படுவதையும் விவரிக்கிறார் பூக்கோ தனது பாலியல் வரலாறு என்கிற நூலில். 200 ஆண்டுகளுக்கு முன்பாக கே எனப்படும் தன்பால் புணர்ச்சியாளர்கள் என்கிற வகைத்திணையே இல்லை, இரண்டு ஆண்களுக்கு இடையிலான பாலுணர்வை சோடமி என்ற சொல்லால்தான் குறித்தனர். அதன்பின் மருத்துவம் மற்றும் உளவியல் சொல்லாடல்கள் வழியாக கட்டப்பட்டதே ஹோமோசெக்சுவாலிட்டி எனப்படும் தன்பால் புணர்ச்சி என்ற சொல். பிறகு அது சிறிது சிறிதாக குற்ற உணர்வாக கட்டமைக்கப்பட்டு, எதிர்பாலின வேட்கை மட்டுமே இயல்பானதாக வடிவமைக்கபட்டது என்கிறார் பூக்கோ.

மாற்றுப்பாலுணர்வாளர்கள் இந்த இரு-பாலின-அமைப்பிற்குள் விடுதலை வேண்டுபவர்களாகவும், மாறியப்பாலினத்தினர் இந்த இரு-பாலின-அமைப்பிலிருந்து விடுதலை வேண்டுபவர்களாகவும் உள்ளனர். உடல்கள் பாலுமை கொண்டவையாக மாற பாலினமாக்கல் என்பது அவசியப்படுகிறது. பாலின அரசியலை ஆராய்ந்த ஜீதித் படலர் பாலினம் என்பது சொல்லாடல்களான மொழி, இயக்கம், மொழியற்ற பரிமாற்றம். நடத்தை, நிறுவன அமைப்புகள், வழக்கப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் போன்றவற்றால் கட்டப்பட்டது என்கிறார். பாலுமை என்பது உடலுக்கு கொடுக்கப்பட்டு அதனால் பாலினம் செயற்கையாக உட்செலுத்தப்பட்டு கட்டப்படுவதல்ல மாறாக பொருளியல் ரீதியாக உடல்கள் ஆளப்படுவதற்கான ஒரு கலாச்சார விதி என்று பட்லர் கருதுகிறார். இதனை அவர் தனது நூல்களில் விரிவாக விளக்கிச் செல்கிறார். பாலினம் என்கிற அறிதல் சட்டகத்தின் கட்டமைப்பினால் கண்டடடையப்படும் உடல்சார்ந்த பாலுமையால்தான், பாலியல் சார்ந்த உடல்கள் (sexed bodies) இருப்படைகின்றன. பாலுமையை அறிவதற்கே பாலினம் என்கிற அடிப்படையான அறிதல் தேவைப்படுகிறது. அதாவது ஆண் பெண் என்கிற பாலினம் கட்டமைக்கப்பட்டு, அதை வைத்து பிறக்கும் உடலை ஆண் பெண் என்கிற பாலுமை கொண்ட உடலாக அடையாளப்படுத்தப்படுகிறது. பாலுமைக்கு முன்பாகவே பாலினம் என்பது உருவாகியுள்ளது. பாலுமையை அடையாளப்படுத்துவது பாலினம்தான். கலாச்சார கருவிகளாக மாறிவிட்ட பாலினமாதல் என்பதன் அரசியலே ஆண் பெண் என்கிற இரு-பாலின-சமூகத்தின் அடிப்படையாக உள்ளது. அதனால்தான் இந்த இருபாலினமற்ற அடையாளத்தைக்கொண்ட மாறியப்பாலினத்தினரான திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த சமூகத்தின் தனித்த இருப்பற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களையும் இந்த பாலினமாதல் அரசியலுக்குள் உள்ளடக்கி சமூகவயப்படுத்துவதே நிகழ்கிறது.

பாலினமாதல் அரசியல் என்பது அடையாள அரசியலுடன் உறவுடையது. அடையாள அரசியல் என்பது இன்றைய சமூக அமைப்பிற்குள் வாழ்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட பல அடையாளங்களுக்குள் உடல்களை வகைப்படுத்துவது. அடையாளம் என்பது தெல்யுஸ்-கத்தாரி கூறுவதைப்போல ஒரு மோலார் நிலை. அதாவது ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு உடல் நிலைநிறுத்தப்பட்டு, அதிலிருந்து அது இயங்காமல் அந்த நிலையிலிலேயே தேங்கி செயல்படுவது. பாலுமை மற்றும் பாலினம் என்பது மோலார்நிலை. நிலையான இருப்பை கொண்டவை. எப்போதும் மாறாத, மாற்றங்களை நிறுத்திவிட்ட நிலை. தன்னை மையமானதாக மாற்றிக் கொண்டுவிட்ட நிலை. மாறாக, ”உருவாகுதல்” எனபது மூலக்கூறு நிலை என்கிறார்கள். இந்நிலை ஒரு பண்மைநிலை, சல்லிவேர்களைப்போல படரும் நிலை (ரைசோமேட்டிக்), படைப்பாக்க நிலை, தேக்கமற்ற நிலை, மையமற்ற நிலை. தன்னிலையாக்கத்திற்கு உட்படாத நிலை. இந்நிலையில் ஒரு உடல் எதுவாகவும் உருவாகும் தன்மை கொண்டதாக இருக்கும். தனது மோலார் அடையாள நிலைக்கு மற்றமையை உட்படுத்தி அதன்மீது அதிகாரம் செலுத்துவதாக இருக்காது. பாலற்றதாக உள்ள மாறியப்பாலினத்தினர் ஒரு அடையாள அரசியலுக்குள் சிக்காமல் தங்களை உருவாகுதல் என்கிற நிலையில் வைத்துக்கொள்வதற்கான விடுதலை பெற்ற உடல்களாக உள்ளனர். இவர்கள் சமூகத்தின் அங்கமாக உள்ள மதம், சாதி, பால், பாலினம், நிறம் உள்ளிட்ட எந்த மோலார் அடையாளத்திலும் இல்லாதவர்கள். இவர்கள் எதுவாக வேண்டுமானாலும் உருவாகும் தன்மையில் தங்களை வைத்துக்கொண்ட விடுதலைப்பெற்றவர்களாக உள்ளனர். அதனால்தான் இந்த இரு-பாலின-நிறுவனமாகவிட்ட சமூகம் இவர்களை இல்லாதொழிப்பது, புற்க்கணிப்பது அல்லது உள்வாங்கி ஒரு பாலினமாக தனது அடையாள எல்லைக்குள் வைப்பது என்கிற நிலையை எடுக்கிறது.

அதாவது மாற்றுப்பாலினத்தவர்களை கண்டு சமூகம் அச்சம் கொள்ளவோ அல்லது அவர்களை புனிதப்படுத்தவோ காரணம், அவர்கள் சமூகத்தின் அடிப்படை உடலமைப்பு விதியான இரு-பாலின விதியை பகடி செய்து, அதை இல்லாதொழித்துவிடக்கூடிய அபாயம் இருப்பதால்தான். அல்லது இரு-பாலின வேட்கை என்பதில் ஒரு உடைசலை உருவாக்கி பாலின அடையாளத்தை சிதைத்துவிடக்கூடியவர்களாக அவர்களது செயல்கள் இருப்பதால்தான்.

1. சமூக பாலினவிதிகளுக்கு எதிரான ஒரு உடல்சார் நாடகத்தை அவர்கள் நிகழத்தி சமூகம் எப்படி பாலியலை பாலினம் வழியாக கட்டமைத்தது என்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

2.  உடலிற்குள் உள்ள பாலின்பம் என்பது பிற உடல் வேட்கைதானே ஒழிய அது எதிர்பால் உடல் வேட்கை அல்ல என்பதை வெளிப்படுத்தியப்பபடி உள்ளனர்.

3. ஆண் பெண் இன்கிற இறுகிய அமைப்பிற்குள்ளான உடல்களை போலச்செய்து அதன் சாராம்சத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.

4. ஆண்-பெண் என்கிற தெளிவான அடையாளத்தை தெளிவற்றதாக ஆக்கிவிடுகிறார்கள்.

இருபாலின உடல் 1. சமூகவிதி 2. குடும்ப விதி 3 சட்ட விதி என்ற மூன்று விதமான அமைப்பு விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது.

1. சமூகவிதி என்பது ஒரு உடல் ஆண்-பெண் இருமை எதிர்வு பாலினமாக இருத்தல். பைனரி எனப்படும் இருமை எதிர்வு என்பது போர் எந்திரக் கட்டைமைப்பிற்கான அடிப்படை சமூகவிதி. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு இந்த முரணியக்க விதியை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் இணக்கமற்ற முரணில் சிக்கியிருப்பது. எதிரெதிரான இரண்டு அடையாளங்களை நிலைநிறத்தி இரண்டிற்குமிடையில் ஒரு பதற்றத்தை வைத்திருப்பது. இந்த முரணிண் அடிப்படையில் இரண்டு சக்திகளை மோதவிடுவது. இவர்கள் இந்த இருபாலின-கட்டமைவிற்குள் வருவதில்லை. போர் எந்திரத்திற்கு வெளியில் நிற்பவர்கள்.

2. குடும்பவிதி எனபது சமூக உற்பத்திக்கான அமைப்பு. இது தந்தைமை ஆதிக்கத்தை உருவாக்கும் இடிபலாக்க காதல் எந்திரத்தினை அடிப்படையைக் கொண்டது. இது அதிகாரத்தை ஏற்பதற்கான இணக்கத் தன்னிலையாக்கத்தினை உருவாக்குவது. இவர்கள் தாய் ஆதிக்கத்தை முன்வைத்து தந்தமையை காலவதியாக்கி வேறு ஒரு குடும்பமற்ற கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இதில் குருதிவழி என்கிற வரலாறு கலாச்சார பாரம்பரியம் இல்லை. இதற்குள் நெகிழ்வான சமூக உறவுகளை பகடி செய்யும் உறவுமுறைகள் உள்ளன. அந்த உறவுமுறைகள் பிற்ப்படிப்படையிலான குடும்ப அமைப்பை கொண்டதல்ல. எப்போதும் நெகிழ்வான, சுதந்திரமான ஒரு உறவைக் கொண்ட அமைப்பு அது. இவர்கள் இதனை ஜமாத் என்கிறார்கள். இந்த ஜமாத்திற்குள் சிறுசிறு நிர்வாக வசதிக்கான குடும்பமாக உள்ளனர்.

3. சட்டரீதியான விதிமுறைப்படி இருபாலின உறவிற்கான சட்டங்கள் இவர்களை தனது நீதிபரிபாலன எல்லைக்குள் கொண்டு வர முயல்கிறது. சட்டத்தை மீறிய உறவுகளை உருவாக்கும் அதிகாரம் இவர்களிடமே உள்ளது. குடும்பத்திற்கான சட்டவிதிகள் இவர்களிடம் இல்லை. இவர்கள் சட்டத்திற்கு வெளியே நிற்பதால் சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறார்கள். சட்டத்தினை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கிவிடுகிறது இவர்களது உடல். சட்டம் என்பது ஆண்-பெண்-பாலின-குடும்ப அமைப்பிற்கானதாக உள்ளதால் இவர்களை அது உள்ளடக்கமுடியாததாக உள்ளது.

இவர்கள் ஒரு பொருண்மையான சமூக குழுவாக உள்ளனர். அதில் முழுமையான உடல் பாலியல் சுதந்திரம் உள்ளது. அந்த கட்டுபாடற்ற தன்மை நிறுவன அங்கங்களான சமூகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சம் உள்ளது. சமூகம் இவர்கள்மீது உள்ள தனது அச்சத்தால், இவர்களது இருப்பை இல்லாதொழிப்பதில் மூர்க்கமான வன்முறையை செலுத்துகிறது. சமூகத்தின் அங்கமாகா உடல்களாக இவர்கள் இருப்பதே இப்போதைய அரசிற்கான அதிகாரத்திற்கான சிக்கல். உண்மையில் மாறியப்பாலினத்தினர்தான் விடுதலைபெற்ற பாலினத்தினர். இரு-பலினத்தை ஏற்றவர்கள் ஒருவகையில் சமூகத்தின் பாலின விதிக்கு அடிமைப்பட்டவர்களே. பாலினத்திற்கு அதன் இருமைவிதிகளுக்கு அடிமையாகிவிட்டவர்கள். மாறியபாலினத்திற்கு இருமை இல்லை. ஒருமை மட்டுமே உள்ளது அதுதான் அவர்களது பன்மையாக உள்ளது.

-ஜமாலன் jamalan.tamil@gmail.com (23-10-2011 - 25-11-2011) வலசை 2012

நண்பர் நேசமித்திரனின் வலசை என்கிற இதழுக்காக திருநங்கைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை.  இதழ் அநேகமாக புத்தகக்கண்காட்சியில் வெளிவந்திருக்கலாம்.  மிக நீண்ட கட்டுரை என்பதால் பகுதி பகுதியாக இங்கு வெளியிடப்படுகிறது.


[1] இப்பழக்கத்தை திருநங்கைகள் பற்றிய ஆவணப்படங்களிலும், தமிழில் திருநங்கைகள் பற்றி வெளிவந்த நர்த்தகி என்கிற திரைப்படத்திலும் காணலாம். திருநங்கைகள் பற்றிய மற்றொருபடம் நவரசா. இவ்விரு படங்களும் திருநங்கைகள் பற்றிய தமிழில் வந்த முழுநீளப்படங்கள். இவற்றின் கதையாடல் ஒத்த தன்மையைக் கொண்டிருந்தாலும், இரண்டும் இரண்டு வேறுபட்ட சூழலில் உருவாகும் திருநங்கைகள் பற்றியது. நவரசா, ஒரு சிறுமியின் பார்வையில், அவர் புரிந்துகொள்வதை பெரியவர்கள் புரிந்துகொள்ளமுடியாத சூழலை நுட்பமாக அம்பலப்படுத்தும் படம்.