மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –1
மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –2

கதை-1 ல் கூறியபடி நுகர்விற்கானவர்களாக மக்கள் திரளை படைப்பது. சிவில் சமூகம் என்பது நாகரீகப்படுத்துதல் என்பதுடன் உறவுகொண்டதாக உள்ளது. இது உலகளாவிய ஒரு பொதுஅமைப்பை கட்டுவதாக உள்ளது. குடிமக்கள் உருவாக்கமே இதன் அடிப்படையாக உள்ளது. சிவில் சமூகம் என்பது அரசியலற்றதாக கருதப்படுகிறது. காரணம், சிவில்சமூகம் என்கிற கருத்தாக்கமே வணிகமயமாக மக்கள்திரளை மாற்றும் ஒன்று. அரேபியா போன்ற மதவாத நாடுகளில் முதலில் செருப்புபோடும் கலாச்சாரத்தை பரப்பும் கதையாக ஜனநாயகத்தை, சுதந்திரத்தை பரப்புவதுதான் என்.ஜி.ஓ.க்கள் மற்றும் ஊடகங்களின் பணி. பரபப்பட்டவுடன் மக்கள்திரள் தான் உணர்ந்த சிவிக் பண்புகளின் அடிப்டையில் புரட்ச்சிக்கான உந்துதலை பெறுகிறார்கள். இதன் பொருள் அரேபிய அரசுகள் மக்கள் நலன் கொண்ட அரசுகள் என்று பொருளல்ல, அவை அடிப்படையில் எதேச்சதிகார, பாரம்பரிய மன்னராட்சி அரசுகள் மட்டுமல்ல புதிதாக உருவாகிவரும் முதலாணமை அரசியலில் ஊறித்திளைத்து வெளிப்படும் ஊழலின், மனிதத்தன்மையற்ற அடக்குமுறைகளின், பணம் மட்டுமே, சொத்து மட்டுமே குறி என்கிற நுகர்வின் ஆகப்பெரும் சீரழிவைக்கொண்ட அரசுகள்தான். இத்தகைய அரசுகளின் கீழ் மக்கள் பெறும் தன்னெழுச்சியான எதிர்ப்பை இத்தகைய அரசுசாரா நிறுவனங்கள் ஒரு நெகிழ்வான போக்கிற்கு மாற்றியமைக்கின்றன. அந்நெகிழ்வு போராட்டத்திற்கு பிறகு வழிகாட்டுதலற்ற திக்கற்ற நிலைக்கு ஆளாக்குவதாக உள்ளது.
அரேபிய புரட்சிகளுக்கு பின்புலமாக அமெரிக்க ஆதரவு என்.ஜி.ஓ.க்கள் பங்கு முக்கியமானது. குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் கம்யுனிச வீழ்ச்சியில் பொருளியல் பண்டங்களைவிட, கருத்தியல் பண்டங்களான ஜனநாயகம், சமத்தும், மனித உரிமை போன்றவை முக்கிய பங்காற்றின. மேற்கத்தியத்தின் இக்கருத்தியல் பண்டங்களை விற்பனை செய்யும் முகவர்களாக செயல்பட்ட என்.ஜி.ஓ.க்கள் சோவியத் ரஷ்யாவிற்கு பின் அரேபிய பகுதிகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பினார்கள். கடந்த 20 ஆண்டுகளாக என்.ஜி.ஓ.க்களின் பரவலாக்கம் அரேபிய நாடுகளில் மேற்கத்திய பாணியிலான சிவில் சமூகத்தை உருவாக்க பணியாற்றி வருகின்றன. அதன் உச்ச விளைவுதான், இறுகிய அரேபிய இஸ்லாமிய சமூக அமைப்பை இளகவைத்து, புரட்சியை உருவாக்கியது. 2003 நவம்பர்-6ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ் இதனை பிரகடனம் செய்தார் ”60- ஆண்டுகளாக மேற்கத்திய தேசங்கள் மத்திய-கிழக்கு நாடுகளின் விடுதலையின்மையை பொறுத்துக்கொண்டுவிட்டன அது நம்மை பாதுகாப்பற்ற நிலையில்தான் வைத்து உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளின் விடுதலைக்காக அமெரிக்கா புதிய திட்டத்தை (நியு பாலிசி) முன்னெடுக்க வேண்டும்”. இதன் பொருள் அந்த புதிய பாலிசியில் ஒன்றுதான், போர் மற்றும் சமூகநலப்பணிகளின் வடிவில் உருவாக்கப்பட்ட என்.ஜி.ஓ. வலைப்பின்னல்.
இது நேரடியாக அமெரிக்க ஆதரவுநிலையில் செயல்படாது. இன்னும் குறிப்பாக எதிரான நிலையில்தான் செயல்படும். அமெரிக்காவிற்கு எதிராக இது மக்களை திரட்டும். ஆனால், அரசு என்கிற அமைப்பிற்கு எதிராக இது செயல்படாமல், அதன் திட்டவடிவிற்குள்தான் இது செயல்படும். அமெரிக்கா மக்கள் ஆதரவைவிட அரசு ஆதரவில்தான் தனது வெளி உறவுக்கொள்கைகளை உருவாக்குகிறது. ஆனால், இந்த என்.ஜி.ஓ.க்கள் மக்கள் மனநிலையை சிவிக் பண்புகள் என்பதாக, அமெரிக்க அரசின் முனமாதிரி பற்றிய ஆழ்மன கனவை உருவாக்கிவிடுபவை. வெளியில் அமெரிக்காவை எதிர்ப்பதும், மனதளவில் ஒரு சுதந்திர-ஜனநாயக-மக்கள் நல்வாழ்வு அரசின் முன்மாதிரியாக அமெரிக்க அரசை கருதிக்கொள்வதும் செயல்படுத்தப்படுகிறது. அதாவது அமெரிக்க ஆதரவுநிலை பரவலாகவும் மேலொட்டமாகவும் பார்த்தால் அரேபிய மக்களிடம் இல்லை என்பதால், அமெரிக்கா தனது அரசு பற்றிய கனவை அகநிலையில் வளர்த்தது. அரேபியர்கள் அமெரிக்காவை எதிர்த்தனர், பின்லாடன் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆதரித்தனர். புஷ்ஷும் பின்லாடனும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ள்வர்கள். இவர்களது செலாவணி என்பது ஒரே நாணயத்தின் செலாவணிதான். சான்றாக, பின்லாடன் விரும்பியபடி, அமெரிக்க பொருளாதாரத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தவர் புஷ். அமேரிக்காவின் உலக மேலாண்மை கனவிற்கு வழியமைத்து தந்தவர் பின்லாடன். இதுதான் உலக பயங்காரவாத்த்திற்கு எதிரான போர் மற்றும் உலக அரசியலை பயங்கரவாதம் ஜனநாயகம் என்கிற இரமைவாத-போர் எந்திரக்கட்டமைப்பிற்குள் கட்டமைக்க காரணமாக நடந்த விளையாட்டு.
பின்லாடன் உலக வணிக மையத்தை, உலக முதலாண்மை நிறுவனத்தின் குறியீடாக நின்ற இரட்டைக்கோபுரத்தை தகர்த்து, உலக பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தவே. அதை வளைகுடா ஆப்கான் ஈராக் போரின் மூலம் நடைமுறைப்படுத்தினார் புஷ். இந்த அதிகாரத்தின் ஆணவமிக்க விளையாட்டில், பாதிக்கப்பட்டிருப்பது உலகின் வாழ வழியற்ற மக்கள்கூட்டம்தான். ஆனால், பின்லாடனை புஷ் எதிர்ப்பது என்பதும், இருவரும் எதிரெதிரானவர்கள் என்பதும், வெளிப்படையாக தெரிந்தாலும், உலகை வீழ்ச்சியடைய செய்ததில் இருவரின் பங்கும், விமான இடிப்பு-ஆப்கன் போராட்டம் என்பதன் வழியாக ஒரு பேரரசின் விளையாட்டாக நிகழ்த்தப்பட்டதே. அதாவது உலகில் தீவிரவாதம் பேரரசின் எதிர் வடிவமாக தன்னை அறிவித்தது 9/11 என்கிற நிகழ்வில்தான். இந்த புள்ளியில் உலக முதலாண்மை என்பது ஒரு புதிய பரிமாணத்தை, அரசுமுறையின் வடிவத்தை, அரசிற்கும் தனக்குமான உறவை வரையறுத்துக்கொண்டது.
சுருக்கமான பொருளில் சிவில் சமூகம் என்பது, அரசிலிருந்தும் சந்தையிலிருந்தும் பிரித்து இனக்குழுவாக உள்ள மக்களிடம் தன்னிச்சையான வாழ்வை உருவாக்கும் ஒன்றாக செயல்படுகிறது. மக்களை அரசியலற்றவர்களாக மாற்றுவதே அதன் பணி. காளான்களாய் முளைத்த இந்நிறுவனங்கள்தான் அரேபிய புரட்சியை நடத்தின. சிவில் சமூகம் என்பது அரசிற்கு சமமான அதிகாரத்தை பெற்றதாக முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் அன்னா ஹசாரேவின் அரசியல் அதைத்தான் முன்வைக்கிறது.
சிவில் சமூகத்திற்கு உதவுதல் என்பது அமெரிக்காவின் திறனை முன்னெடுப்பதாக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் 1991-2001-ற்கு இடையில் மட்டும் சிவில் சமூகத்தை பலப்படுத்தவென ஏறக்குறைய 150 மில்லியன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இத்திட்டங்கள் என்.ஜி.ஓ.க்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன.
சிவில் சமூக அமைப்புகள் குடிமக்களின் குரலாக தங்களை அறிவிக்கின்றன. மக்களின் அரசியல், சமூக மற்றும் ஆன்மீக நோக்கினை அமைதியான முறையில் கூட்டாக வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக உள்ளன. சிவில் சமூக அமைப்புகள் மக்களின் அடிப்படை ஜனநாயக மதிப்பீடுகளை கற்றுத் தருகின்றன. மக்களின் தேவைகளை அரசின் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, அரசின் ஆளுகையினை மக்கள் ஏற்கும்படி செய்கின்றன. அரசியல் சட்டம் மக்களை நேரடியாக அரசு அதிகாரத்திற்குள் வைக்கிறது என்றால், சிவில் சமூக அமைப்புகள் மக்களுக்கு அரசியல் சட்டத்தை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதாக உள்ளது அல்லது அரசியல் சட்டத்தை ஏற்கும் ஒப்புக்கொள்ளும் தன்னிலைகளாக குடிமக்களை மாற்றியமைக்கிறது.
சிவில் சமூகம் என்பது மேற்கத்தியர்களின் மனதில் “மக்கள் அதிகாரத்திற்கான” இயக்கமாக அதனால், எதேச்சதிகாரத்தை தூக்கி எறிந்து மேற்கத்திய ஜனநாயகத்தை கொண்டுவருவம் ஒன்றாக கருதப்படுகிறது. உலகெங்கிலும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஜனநாயகத்தை உவந்தளிக்கும் கருவியாக செயல்படுகிறது. சிவில் சமூகம் என்பது சிவிலிட்டி அதாவது நாகரீகப்பண்பு கொண்ட ஆண் என்கிற பிம்பத்தின் அடிப்படையில் உருவாகியது. அதாவது ஐரோப்பிய ஆண் பிம்பமே இதன் அடிப்படை.
காட்சி-1ம் கதை-1ம்
சிவில் சமூகம் மற்றும் ஜனநாயகம் என்பதை கட்டமைப்பதில் ஒத்திசைவு (கான்சென்ஸஸ்) என்கிற பண்பே அடிப்படையானது என்பது ஹெபர்மாஸின் கோட்பாடு. முரண்களே (கான்பிளிக்ட்) அடிப்படையானது என்பது பூக்கோவின் கோட்பாடு. முரண்களின் அடிப்படையில் போர் எந்திரங்களின் வழி ஜனநாயகத்தை சிவில் சமூகத்தை உருவாக்குவது என்பது காட்சி-1 ன்படி நடப்பது. ஒத்திசைவின்வழி உருவாக்குவது என்பது கதை-1 ன்படி நடப்பது. இந்த இரண்டையும் உலகப்பேரரசு தனது தந்திரமாக, கருவியாக பயன்படுத்தி உலக சிவில் சமூகத்தை உருவாக்குகிறது. அப்படி உருவாக்குவதன்மூலம் தனது ஆளுகையை உலகில் உறுதி செய்துகொள்கிறது. இப்படி உறுதிசெய்யப்பட்ட ஆளுகையால், தனக்கான எதிரிகளை கட்டமைப்பதும், அவர்கள் குறித்த பயங்கரத்தை உருவாக்கி பயமுறுத்துவதும், தொடர்ந்து நிகழத்தப்படும் நாடகங்களாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கும், பேரரசிற்கும் இடையில் நிகழும் இந்த நாடகத்தின் பாத்திரமேற்பவர்களாக, காட்சியாளர்களாக உலக மக்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இன்றைய இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் சட்டத்தை ஏற்ற தேசிய, பிராந்திய கட்சிகள் காட்சி-1 ல் உள்ளதைப்போல, அதிகாரத்தை நேரடியாக அரசு என்கிற வடிவத்தில் செலுத்தி ஒரு பொருளாதாரப் போரை நிகழ்த்திக்கொண்டு உள்ளன. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ, ஐ.எஸ்.எஸ். உள்ளிட்ட இஸ்லாமிய மதவாத அமைப்புகள் கதை-2ல் சொன்னதைப்போல கலாச்சார எந்திரங்களாக செயல்பட்டு குடிமக்களை அரசின் ஆளுகைக்கு தயாரித்து அளிக்கின்றன. பேரரசின் இந்த இரண்டு வடிவங்களும்தான் இன்றைய இந்திய அரசியலின் பிரதானப் போக்காக உள்ளது. பேரரசின் உடலுறுப்போடு தன்னை இணைத்துக்கொள்ளாத எந்த அதிகார அரசியலுக்கும் இருப்பற்ற நிலையை உருவாக்கி காட்டிக்கொண்டு உள்ளது இந்த நிலைமை. “டெவில் அண்ட் டீப் சீ“ என்பதைப்போல மக்கள் மேலே பூதம் கீழே சீற்றம் கொண்ட கடல் என்ற தத்தளிப்பில் மரணபயத்திற்குள் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் யார் பூதம் யார் கடல் என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைவிதி என முத்திரையிட்டு தீர்மானிக்கும் ஜனநாயக சிவில் உரிமைகள் மட்டுமே மக்களுக்கு மனம் உவந்து அதிகாரத்தால் அளிக்கப்பட்டு உள்ளது.
- ஜமாலன் (jamalan.tamil@gmail.com) 16/12/2011 - அடவி 2012
பயன்பட்ட கட்டுரைகள்
The War on Terrorism or a Global Crusade against Islam - Mahboob A. Khawaja, Ph.D. http://www.asiantribune.com/news/2011/11/27/war-terrorism-or-global-crusade-against-islam
Darkness Renewed: Terror as a Tool of Empire - CHRIS FLOYD http://www.chris-floyd.com/component/content/article/1733-darkness-renewed-terror-as-a-tool-of-empire.html
The Imperial Anatomy of Al-Qaeda. The CIA’s Drug-Running Terrorists and the “Arc of Crisis” Part I by Andrew Gavin Marshall - http://globalresearch.ca/index.php?context=va&aid=20907
Multi-Billion-Dollar Terrorists and the Disappearing Middle Class - James Petras Economic & Political Weekly EPW october 1, 2011 vol xlvi no 40
MIDDLE EASTERN DEMOCRACY Is Civil Society the Answer? - Amy Hawthorne - © 2004 Carnegie Endowment for International Peace.
NGOs and Their Role in the Global South - Monsiapile Kajimbwa - http://www.icnl.org/research/journal/vol9iss1/art_7.htm
அமேரிக்க பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பெரியார்தளம் - http://www.periyarthalam.com/2011/12/09/rss-run-by-american-money/




0 comments:
கருத்துரையிடுக