இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 1
இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 2
இடிபஸ் புராணம் – தாய் மோகமா? தந்தையின் சாபமா?
பண்டைய கிரேக்கத்தில் புழங்கிய தந்தையைக்
கொன்று தாயை மணந்துகொள்ளும் ஒரு வாய்மொழிக் கதையாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையே இடிபஸ் புராணம். தந்தையை அல்லது தாய்வழிச்சமூகத்தில் தந்தை-ஸ்தானமாக அறியப்பட்ட தாயமாமனைக் கொல்வது என்கிற புராணிகம் உலகின் பெரும்பாலான சமூகங்களில் காணப்படுகிறது. யூத-கிறிதுவ-இஸ்லாமிய மூலத்தொன்மங்களில் சொல்லப்படும் மோசஸ்-மெசையா-மூசாவுக்கு எதிரான எகிப்திய பரோமன்னன் கதைதுவங்கி, இந்தியாவின் யாதவ-கிருஷணன் மற்றும் கம்சன் கதைவரை இது உள்ளது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் பல உதாரணங்களை தருகிறார் ஏ.கே. ராமானுஜன் தனது இந்தியன் இடிபஸ் என்கிற கட்டுரையில். தந்தை அல்லது தாய்மாமனைக் கொல்லுதல் என்பது, மதங்களின் உருவாக்கத் தொன்மக்கதையாடல் எனலாம். இக்கதையாடல்கள் விதிவாதத்தை சமூகத்தில் நிலைநிறுத்தி, விதியின் மூலகர்த்தாவாக கடவுளை கட்டமைப்பதற்கானதாகவும், விதியின் கைகளில் தப்பமுடியாததாக மனிதஉடல் மாட்டிக்கொண்டிருப்பதான ஒரு மூலமுதல் தத்துவத்திற்கான அடிப்படையாகவும் கட்டப்பட்டவை. இக்கதையாடலில் தாயை மணந்து குழந்தைகள் பெற்று குடும்பமாக இருப்பது என்பது கிரேக்க கதையாடலில் முக்கியமான ஒரு வேறுபாடாக உள்ளது.
இடிபஸை நாயகனாகக் கொண்ட இப்புராணம் ஒரு வாய்மொழிக் கதையிலிருந்து நாடகங்களாகவும், கிளைக்கதைகளாகவும் வழங்கப்பட்டுவந்தது. அது கிரேக்க நாடகாசிரியரான ஸோபோகளிஸால் (Sophocles) கி.மு. 492-ல் “இடிபஸ் ரெக்ஸ்“ அல்லது “மன்னன் இடிபஸ்“ என்கிற புராண-நாடகமாக எழுதப்பட்டது. இப்புராணத்தின்படி கிரேக்க நகரமான தீப்ஸில் பிளேக் நோய் பரவுகிறது. நோய்க்கான காரணத்தை அறிந்து தீர்க்க மன்னன் இடிபஸ் முயல்கிறான். இடிபஸின் மனைவியான ஜொகாஸ்டாவின் முன்னாள் கணவனாகிய மன்னன் லயாஸை கொன்றவனை கண்டுபிடித்து தண்டித்தால் இந்நோய் தீரும் என்று குறி கேட்டுவந்து சொல்கிறான் அவளது சகோதரன் கிரியான். கண்தெரியாத டைரிஸியஸ் என்கிற தீர்க்கதரிசியிடம் அக்குற்றவாளியை கண்டுபிடித்து சொல்லும்படி கேட்கிறான். டைரிசியஸ் லயாஸைக் கொன்ற கொலையாளி தனது சொந்த பிள்ளைகளுக்கு தந்தையாகவும், சகோதரனாகவும் மேலும் தனது மனைவிக்கு மகனாகவும் இருக்கிறான் என்ற ஒரு புதிர்வாசகத்தை கூறி நீதான் அந்த கொலையாளி என்று சொல்கிறான். இது தனக்கு நேர்ந்த அவமானம் எனவும் கிரியான் மன்னனாக ஆசைப்பட்டு டைரிசியஸிற்கு பரிசுகள் தந்து இப்படி சொல்லவைத்துள்ளதாக கூறி கிரியான் ஒரு ராஜத்துரோகி என்ற குற்றச்சாட்டை வைக்கிறான். தந்தைக்கும் தாய்மாமனுக்குமான முதல் முரண் இங்கு வெளிப்படுகிறது.
இடிபஸ் ஜொகாஸ்டாவிடம் டைரிசியஸ் சொன்ன தீர்க்கதரிசனத்தை சொல்கிறான். ஜொகாஸ்ட்டா மன்னன் லயாஸ் தனது சொந்த மகனால் கொல்லப்படுவான் என்ற முன்னறிவிப்பால் தனது குழந்தையை அதன் பாதங்களில் ஆணிகள் அறைந்து காயமாக்கி ஒரு மேய்ப்பனிடம் மலைகளில் எறிந்துவிடும்படி தந்துவிட்டதாகவும், ஆனால், லயாஸ் கொல்லப்பட்டதோ மூன்று பாதைகள் சந்திக்கும் குறுக்கு ரோட்டில் கொள்ளையர்களால்தான், அவனது சொந்த மகனால் அல்ல என அதை பார்த்த ஒரே சாட்சியான இடையன் சொன்னதைக் கூறுகிறாள். இடிபஸ் அச்சாட்சியை அழைத்துவரும்படி ஆணையிடுகிறான். சாட்சிக்காக காத்திருந்த நேரத்தில் ஜொகாஸ்டாவிடம் இடிபஸ் தனது கடந்தகாலக் கதையை சொல்கிறான். அவன் இளைஞனாக இருந்தபோது ஒருவன் நீ உனது தந்தையின் மகனல்ல என்று சொன்னதால், டெல்பி என்ற பகுதியில் உள்ள ஒரு முன்னறிவிப்பாளரிடம் சென்று தனது பிறப்பை அறிய முயல்கிறான். அந்த முன்னறிவிப்பில் அவன் தனது தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்று சொல்லப்பட்டதால், அச்சமுற்று அந்நகரத்தை விட்டு வெளியேறுகிறான். அவனது பயணத்தில் ஒரு குறுக்குப்பாதையில் இருமாப்புள்ள ஒரு மனிதனை எதிர்கொள்கிறான். இடிபஸை அவன் அவமானப்படுத்தியதால் அவனை கொன்றுவிட்டதாகவும் சொல்கிறான்.
அச்சமயத்தில் பழைய நகரத்திலிருந்து அவனது தந்தை இறந்ததை சொல்ல வந்த செய்தியாளன், இறந்தவன் உன் தந்தை அல்ல பலவருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை ஒருவன் தன்னிடம் தந்ததாகவும, அதை தான் மன்னரிடமும் ராணியிடமும் தந்ததாகவும், அதனை இடிபஸ் என்ற பெயரிட்டு வளர்த்தார்கள் என்றும் கூறுகிறான். அதற்கு ஆதாரமாக இடிபஸின் பாதத்தில் உள்ள ஆணி அறையப்பட்ட காயமே சாட்சி என்கிறான். இடிபஸ் யார் உன்னிடம் அந்த குழந்தையை தந்தது என்று கேட்டதற்கு அவன் லயாஸ் மன்னனின் வேலைக்காரன் என்கிறான். இடிபஸ் அவனை அனுப்பி அந்த வேலைக்காரைனை கண்டுபிடித்து அழைத்துவரச் சொல்கிறான். இடிபஸ்முன் அந்த பழைய வேலைக்காரனை கொண்டுவருகிறார்கள். அவன்தான் அந்த செய்தியாளனிடம் குழந்தையை தந்தவன் என்றும், அந்த குழந்தைதான் லயாஸ்-ஜொகாஸ்டாவின் மகன் என்றும் லயாஸ் மலையடிவாரத்தில் கொல்லப்பட்டது பழைய முன்னறிவிப்பின் தீர்க்கதரிசனப்படி அவனது மகனான இடிபஸால் என்ற உண்மையைச் சொல்கிறான். தந்தையைக்கொன்று தாயை மணந்த முன்னறிவிப்பின் விதி தெளிவாகிவிட்டதால் இடிபஸ் ஜொகாஸ்டாவை கொல்வதற்காக தேடிச்செல்கிறான். அவள் தூக்கில் தொங்குவதைக் காண்கிறான். அவளது ஆடையில் இருந்த தங்க ஊக்கை எடுத்து தனது கண்களில் குத்திக்கொள்கிறான். தனது பிள்ளைகளை கிரியானிடம் ஒப்படைத்துவிட்டு இடிபஸ் நகரத்தைவிட்டு வெளியேறுகிறான். தந்தை-மகன்-தாயமாமன் என்கிற கதையின் அதிகாரச்சுற்று இவ்வாறாக முடிகிறது.. இடிபஸ் ஜொகாஸ்டாவை கொல்ல முயன்றது ஏன்? அவள் தூக்கில் தொங்கியது ஏன் என்கிற கொலை தற்கொலை என்கிற முடிச்சு ஒன்று புதிராக இதில் பின்னப்பட்டுள்ளது. கதையின் மையமான தாய் தற்கொலையின் மூலம் தன்னை இன்மையாக்கிக் கொள்கிறாள். ஆண் தண்டிப்பவனாகவும், தண்டித்துக்கொள்பனாகவும், பெண் சுயதண்டித்தலுக்கு உள்ளாகக் கூடியவளாகவும் இருப்பதை சொல்வதாக இதனைக் கொள்ளலாம். பெண்ணுடல் தாய் வழியாக இன்மையாக்கப்பட்ட வரலாறாக இதனை வாசிக்கலாம்.
இக்கதையொடு தொடர்புடைய மன்னன் லயாஸின் மேல் படிந்த சாபம் பற்றிய மற்றொருக்கதையில், லயாஸ் தனது நகர் அந்நியர்களால் கைப்பற்றப்பட்டபோது வெளியேறி மற்றொரு நகர மன்னனிடம் அடைக்கலாமாக இருந்தபோது அம்மன்னன் மகனை வன்புணர்ச்சி செய்துவிடுகிறான். அதனால் அவனது மகன் அவனைக் கொன்று அவனது மனைவியை (தாயை) மணப்பான் என லயாஸ்மீது சாபம் கவிகிறது. இச்சாபத்தின் கதைதான் இடிபஸ் புராணம். தன்பால்புணர்ச்சிக்கு சபிக்கப்பட்ட கதை, தகாப்புணர்ச்சிக்கான சாபமாக தந்தையின் கொலையிலும் தாயின் தற்கொலையிலும், மகன் குருடனாவதாகவும் மாறுகிறது. கொலை செய்யப்பட்ட தந்தை, தற்கொலைக்கு தள்ளப்பட்டுவிட்ட தாய், குருடான மகன் இதுதான் இந்த முக்கோணத்தின் விதி.
இப்புராணம் இத்தனை விரிவாக சொல்லப்பட்டது, பிராய்டிய ஈடிபல் சிக்கலில் விடுபட்ட சில புள்ளிகளை வைத்தும் அதைப் புரிந்துகொள்ள முயலவே. புரணாங்களில் அல்லது தொன்மங்களில் பலவகைகள் உண்டு. இப்புராணங்கள் உருவாக்க புராணங்கள் (founding myth) வகையைச் சேர்ந்தவை. அரசு உருவாக்கும், நகர் உருவாக்கும், சில முன்மாதிரி பாத்திரங்களை உருவாக்கி சமூகத்திற்கு பின்பற்ற அளித்தல் என்கிற வகையைச் சேர்ந்தவை. அதாவது வரலாற்றுத்தன்மையுடன் உறவு கொண்டவை. முன்மாதிரி பாத்திரங்கள் என்பதால் இவை சமூகப்பொதுமை கொண்டவையாக உள்ளன. பிராய்ட் இந்த பொதுதன்மையை, ஒரு தொன்மக் கதையாடலின் அடிப்படை வரலாறாக அல்லாமல், அல்லது நாடகத்தின் பாத்திரமாக அன்றி மனிதஉருவாக்கத்தின் அடிப்படையானதாகக் கொள்கிறார். அதனால் இத்தொன்மங்கள் பற்றிய நமது வாசிப்பின்வழி பிராய்டின் சிந்தனை தடத்தை புரிந்துகொள்ளமுயலாம்.
இடிபல் எனும் ‘தந்தை‘மை சொல்லாடல்
முதலில் இப்புராணத்தின்படி இரண்டு பாலியல் சிக்கல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று தன்பால்புணர்ச்சி மற்றொன்று தகாப்புணர்ச்சி எனப்படும் தாயுடன் ஆன புணர்ச்சி. அதாவது பிராய்டின் பாலுணர்ச்சி பற்றிய சிந்தனையில் ஆரம்பத்தில் தன்பால்புணர்ச்சி என்கிற சிக்கலை முன்வைத்ததும், அதனால் சபிக்கப்பட்டு அச்சாபம் தகாப்புணர்ச்சியாக வெளிப்பட்டதை மறைத்தோ அல்லது மறந்தோ இடிபல் சிக்கலாக முன்வைத்ததும் இக்கதையாடல்களின் அடிப்படையில்தான். தன்பால்புணர்ச்சி என்கிற ஹோமோசெக்ஸ் குறிப்பாக ஆண்களுக்கிடையிலான பாலியல் தடைபடுத்தப்படுகிறது. அது தடைபடுத்தப்பட்டால், அடுத்து ஆண் பெண்ணுடன் ஏற்படுத்திகொள்ளும் எதிர்பால்-புணர்ச்சி எனப்படும் ஹெட்ரோசெக்ஸ் தகாப்புணர்ச்சி நோக்கி நகர்ந்துவிடுவதை, இடிபல் புராணம் சாபமாகவும், தகாப்புணர்ச்சியை குற்றஉணர்வாகவும் மாற்றி தந்தைவழி-குடும்ப சமூகஅமைப்பு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பது இப்புராணத்தின் அடிப்படை வாசிப்பில் ஒன்று. அதாவது இப்புராணத்தில் முக்கியமான முரண்பாடு தந்தையும்/மகனுமான இடிபஸூக்கும் சகோதரனும/தாய்மாமனும் ஆன கிரியானுக்கும் இடையிலான அதிகாரப்போட்டிதான். இப்போட்டி தாய் என்கிற பெண்உடலின் மீது வைத்து கதையாடப்படுகிறது. அதாவது தாய்வழிச்சமூகத்தில் தாயக்குப்பின் அதிகாரம் பெற்ற ஆண் அவளது சகோதரனே அதாவது தாய்மாமனே. அவன் பணி பாதுகாவலனின் பணி. இங்கு தாய்மாமனின் பாதுகாவல் பணியை பெண் உடல்மீதான முற்றதிகாரமாக மாற்றி அவனை அதிகாரமற்றவனாக ஆக்கப்பட்ட ஒருசமூகத்தில், தந்தையும் மகனும் பதிலீடாக அதிகாரம் பெறுகின்றனர். அதாவது தாயின் கால்வழி மறுக்கப்பட்டு, தந்தையின் கால்வழி பாரம்பரியமாக மாறுகிறது. தந்தையின் கால்வழி பாரம்பரியம் என்பதுடன் மதங்களின் உருவாக்கம் நிகழ்கிறது. இறை என்பது இந்த தடைசெய்யப்பட்ட குற்றவியலின் கண்காணிப்பாக மாற்றப்படுகிறது. இறைக்கு ஆண் என்கிற அதாவது தந்தை என்கிற ஆண்பால் தன்மை தரப்படுகிறது. தடைசெய்யப்பட்ட தன்பால்புணர்ச்சி (தந்தை-மகன் புணர்ச்சி) மற்றும் தகாப்புணர்ச்சியின்மேல் (தாய்-மகன் புணர்ச்சி) மதங்கள் மற்றும் குடும்பங்கள் கட்டப்படுகின்றன. இதுதான் பிராய்டிய ஆழ்மன ”இத்”-தாக அதாவது இடிபல் சிக்கலாக நவீன சமூகத்தில் கட்டமைகிறது. பிராய்டு கண்டு சொன்ன ஆழ்மனம் முதலாளியத்தின் நவீன மதமாக மாறியது.
இக்கதையாடலில் பிளேக் இறையின் சாபமாக கவிகிறது. நோய் உடல் சார்ந்ததாக அல்லது சூழல் சார்ந்ததாக அல்லாமல் இன்றுவரை ஒரு தண்டனையாக கருதப்பட்டே வந்துள்ளது. காரணம் தகாப்புணர்ச்சி என்கிற மதவிரோத செயலை செய்தவன் அச்சமூகத்தில் இருப்பதால் உண்டான தெய்வக்குற்றமே கதையாடலின் மையம். தகாப்புணர்ச்சி குற்றம் என்பதாக கட்டப்படுவதே இக்கதையாடலுக்கான தேவையாக உள்ளது. தந்தை மற்றொரு ஆணுடன் உறவு கொண்டதால், தாயுடன் உறவு தடைபடுத்தப்படுகிறது. அப்படி உறவு ஏற்பட்டால் அதன்விளைவான மகனால் அவனது உயிருக்கு ஆபத்து என்கிற தண்டனை முன்வைக்கப்படுகிறது. கதையின் மௌனத்தில் தந்தையைக் கொல்லுதல் தாயின் பாலியலை கட்டவிழ்ப்பதற்கான செயலாக உள்ளது. அதே தாய் மகனுடன் புணர்ந்து 4 பிள்ளைகள் பெற்று அரசியாக இருக்கிறாள். தாய்-மகன் உறவு அறியப்படாதவரை தகாப்புணர்ச்சி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இக்கதையில் தந்தைமையின் அதிகாரத்திற்குள் சிக்கிய தாயின் பாலியலை விடுவிக்கிறான் மகன். இங்கு தந்தைமீதான பொறாமை என்பதோ காயடிப்பு சிக்கலோ இல்லை. தந்தையை கொல்லுதல் அகங்காரத்தை சூப்பர்ஈகோ என்கிற லிங்க-அதிகாரத்தை வெட்டி எறிவதே தவிர தந்தை என்கிற காயடிப்பு அதிகாரத்திற்கு எதிராக அல்ல. தந்தை என்பதற்காக அவன் கொல்லப்படுவதில்லை. தாய் என்பதற்காக அவள் மணமுடிக்கப்படுவதுமில்லை. தந்தை தாய் என்கிற உறவு கதையாடலின் புதிர் தன்மையில் விடுவிக்கப்பட்டே வெளிப்படுகிறதே ஒழிய விருப்பின் அடிப்படையில் நிகழவில்லை. விருப்பின் அடிப்படையில் நிகழாத ஒன்றை பிராய்ட் ஆழ்மனவிருப்பாக கட்டமைக்கிறார். இவ்விருப்பிற்கான சொல்லாடல் களத்தை திறந்துவிடும் செயலாக இது அமைகிறது. இதிலிருந்து பாலியல் விருப்பு என்பது பெருக்கப்பட்டு பாலியல் என்பது ஆழ்மன இச்சையாக கதைக்கப்பட்டு சமூக இயக்கத்தின் மையமாக வந்தமைகிறது. அவ்வகையில் பாலியலை சமூக சொல்லாடலாக மாற்றியது பிராய்டியம்.
இடிபல் சிக்கல் எங்கு வெளிப்படுகிறது என்றால் பிளேக் என்கிற நோயால். அதாவது தெய்வகுற்றமாக அது மாற்றப்படுவதால். ஒரு தெய்வகுற்றத்திற்கு பலியிடப்பட்ட ஒருவனது கொலை எப்படி மற்றொரு தெய்வக்குற்றமாகும். இரண்டுவகையான பாலுந்துங்களும் தெய்வகுற்றமாக கருதப்படுவதால், புராணம் முன்வைக்கும் நுட்பமான செய்தி தாய்-தந்தை-மகன் என்கிற உறவை உருவாக்க தகாப்புணர்ச்சி தடை தெய்வீக விதியாக முன்வைக்கப்படுவதே. அதாவது குடும்பங்கள் தகாப்புணர்ச்சியின்மேல்தான் கட்டப்பட்டுள்ளன. மகனை தந்தையாக்குவதன்மூலம் அதிகாரம் ஆணிய-பேரிருப்பை நிரந்தரமானதாக மாற்றுகிறது. தந்தை என்கிற உயிரியல்-தந்தை தந்தையின் ஸ்தானம் என்கிற கலாச்சார-தந்தையாக மாற்றப்படுகிறது. வாரிசு என்கிற அதிகார-உரிமை தொடர்ந்து ஆணிய இருப்பில் கைமாறிக்கொண்டே இருக்கிறது. மதங்களின் இந்த இடிபலாக்க இத்தை நவீன சொல்லாடலில் கொண்டுவந்து முதலாளிய நவீனத்தின் மனக்கூறாக மாற்றி வைக்கிறார் பிராய்ட். பாலியல் குடும்பங்களின் மையமாகவும், உடல்களின் லிபிடனல்-இயக்க ஆற்றலாகவும் மாறிவிடுகிறது. அதாவது உடலில் தங்கியிருந்த பாலியலை மனதிற்கு மடைமாற்றிவிடுகிறார் பிராய்ட்.
இப்புராணத்தில் டைரீசியஸின் புதிர்வாக்கியம் ஒரு சித்திரத்தை தருகிறது. அதாவது தாயை மணந்ததால் ஒருவன் தந்தையாக, சகோதரனாகவும், கணவனாகவும, மகனாகவும் இருக்கிறான் என்பதே அந்த புதிர். இதில் ஆண் என்பவன் ஒரு பெண்ணை தாயாக மையப்படுத்தி நான்கு உறவுநிலைகளை ஏற்படுத்துகிறான். தாயை மணந்தால் கணவன், மகன், தந்தை, சகோதரன் என்கிற நான்கு உறவும் ஒருவனுக்கே ஏற்பட்டுவிடுகிறது. தந்தை-தாய்-மகன் என்கிற குடும்ப முக்கோணத்தில், தாயின் சகோதரன் அல்லது பெண்வழி உறவு என்பது வெளித்தள்ளப்படுகிறது. இங்கு சமூகநிலை அல்லது தாய் என்கிற சமூகச்சொல்லாடல் புதிய குறியமைப்பிற்குள் நுழைகிறது. இயற்கை-தாயாக இருந்த பண்டைய சமூக ஆதித்தாய், நவீனக் குடும்பஅமைப்பின் மையஅச்சாக அதாவது உயிரியல்-தாயாக மாறுகிறாள். தாய்மாமன் என்கிற ஸதானம் தந்தை என்கிற ஸதானமாக மாற்றப்பட்டு பண்டைய காலத்தில் உயிரியல்-தந்தையாக இருந்தவன் கலாச்சார-தந்தையாக மாறுகிறான். தாய்வழி-இயற்கை தந்தைவழி-கலாச்சர அமைப்பாக மாற்றம் கொள்கிறது. அதாவது பண்டைய அமைப்பு தலைகீழாக்கப்படுகிறது. இத்தலைகீழாக்கத்தில் “இத்“ என்பது கீழே ஒடுக்கப்பட்டதாக உள்ளார்ந்து அமைந்துவிடுகிறது. மனம் என்கிற சுயத்தின் கலாச்சார தொழில்நுட்பம் கட்டப்படுகிறது. கணவன் என்கிற புதிய உறவினால் தாய் என்பவள் மனைவி என்கிற பாத்திரத்தை ஏற்று சகோதரி என்கிற பாத்திரத்தை இரண்டாம்நிலைக்கு தள்ளுகிறாள். அதாவது கிரியான் என்கிற சகோதரன் பின்தள்ளப்பட்டு இடிபஸ் அதிகாரம் பெறுகிறான். தாயை உள்ளே அமுக்கிவிட்டு தந்தையும் மகனும் மேலெழும்பி வருவதே கதையாடலின் அடிப்படை சட்டகம்[1]. தந்தை மறைபொருளாகவும், மகன் நேர்பொருளாகவும், தாய் உட்பொருளாகவும், தாய்மாமன் வெளிப்பொருளாகவும் கதைக்குள் பொருள் கொள்ளப்படுகிறார்கள். கதையாடல் இந்நான்கு பொருள்கொள்ளுதல்கள் வழியாக கட்டப்படுகிறது. மறைபொருளான தந்தை மதங்களின் மறைபொருளான இறையாக இயக்கம் கொள்வதே நவீன மனம்.
மனம் எனும் முதலாளிய தொழில்நுட்பம்
தந்தை என்கிற ஆணாதிக்கம் முற்றதிகாரமாக மாறியதைதான் பிராய்ட் தனது இடிபல் முக்கோணத்தின் வழியாக இயல்பாக்கம் செய்தார். நவீன குடும்பங்கள் உருவாக்கிய இந்த இடிபல் முக்கோணம் மனம் என்கிற ஒன்றின் கட்டமைப்பில்தான் தனக்கான வேர்களை கொண்டு உள்ளது. இந்த மனதை உருவமைத்த பிராய்ட் நவீன விஞ்ஞானத்தின், மறுமலர்ச்சியின் கார்டீசிய சொல்லாடலின் பிளவை அப்படியே ஏற்றதின் வழியாக முதலாளித்துவத்திற்கான மனஅமைப்பை வெளிப்படுத்தினார். இன்று நாம் மனமாக உணர்நதுகொண்டிருப்பது இந்த கார்டீசிய மனதைதான். இந்த மனம் எல்லாவற்றையும் இருமையாக பகுக்கும் தன்மை கொண்டது. எப்போதும் எதிர்மையுடன் உறவுகொண்டது. சொல்வதற்கு எதிரானதாக இயக்கம் கொள்வது. இந்த மனம் எதிரெதிரான சக்திகள் நடிக்கும் ஒரு நாடக அரங்கு போன்றது. இந்த அரங்கின் திரைக்கதை ஆசிரியன் சூப்பர்ஈகோ என்றாலும், கதையின் கருவை தருவது இத். நடிப்பது ஈகோ என்பதாக உள்ளது. இது உலகின் அனைத்து சிக்கலையும் குடும்பத்துடன் இணைப்பது. தாயை அறியாத நாடோடிக் குழந்தை, குடும்பம் உருவாகாத அல்லது இல்லாத குழந்தை, தாயை அறியாத தொட்டில் குழந்தை ஆகியவற்றின் இருப்பையோ நிராகரிப்பது. அவர்களையும் குடும்பம் என்ற அமைப்பிற்குள் திணிப்பது. எல்லா சமூக நடவடிக்கைகளையும் தனிமனிதனின் சிக்கலாக மாற்றுவது. தனிமனிதனை அவனது மனமாகச் சுருக்குவது. மனதை நினைவிலியாகவும், நினைவிலியை இத்தாகவும், இத்தை இடிபலாகவும் மாற்றியமைப்பது. குடும்ப பிரமிடின் உச்சியில் தந்தையும் அடியில் தாயுமாக கட்டமைப்பது. தாய் என்கிற உடலின்மேல், உறவின்மேல் மகனையும் தந்தையையும் சுமப்பது. பெண் என்கிற இருப்பை மறுப்பதால் மனம் என்பதே ஆணிய தொழில்நுட்பமாக வடிவமைத்தது.
மனம் என்பதில் நினைவிலியை தனிமனிதனின் எல்லைக்குட்படுத்துவது. அதன்வழியாக முதலாளித்துவத்திற்கான எல்லைகளை மறுவரையறை செய்தது. முதலாளித்தவத்திற்கு தேவையான உற்பத்தி சக்திகளான மனிதர்களின் உடலை அவர்களது விருப்பத்தை முதலாளித்துவ எல்லைக்குள் வரையறை செய்தது. விருப்பத்தை உட்செறித்த வேட்கையாகவும், அது இன்மையால் திருப்பதியற்றதாக உள்ளதாகவும், அதனை பதிலீடுசெய்வதற்காக சமூகத்தின் உற்பத்தியில் பங்குபெறச் செய்வதாகவும் எதிர்மறையான கருத்தாக்கத்தை கட்டமைத்தது. விருப்பு சமூக உற்பத்திக்கான ஆற்றல் அதனை இன்மையாக்கியதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி எந்திரங்களில் விருப்பின் பதிலீடுகளை தேடும் மனதாக உருவானது. முதலாளித்துவத்தின் பித்துநிலை என்பது இப்படி இருப்பு-இன்மை என்கிற இருமைக்குள் சிக்கியதால், மனமும் முதலாளித்துவத்தின் இருப்பு-இன்மை என்பதற்குள் சிக்கிக்கொண்டுவிட்டது.
பின்குறிப்பு – இந்திய இடிபலாக்கம் என்பது மேற்கத்திய பிராய்டிய இடிபலாக்கத்திற்கு தலைகீழாக உள்ளதாக இந்தியவியல் ஆய்வாளர்கள் குறிப்பாக ஏ.கே. ராமனுஜன் போன்றவர்கள் ஆராய்ந்துள்ளனர். அதை ஒட்டிய இந்தியமனம் என்பதன் இச்சிக்கல்பற்றி பிறிதொரு கட்டுரையாக எழுதப்படவேண்டும் என்பதால் அது குறித்து இங்கு எழுதப்படவில்லை.
(முற்றும்)
- ஜமாலன் 16-04-2011 jamalan.tamil@gmail.com
மந்திரச்சிமிழ் - (ஏப்ரல் 2011 மார்ச் 2012) – 7 இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை பகுதியாக பிரித்து வெளியிடப்படுகிறது. புத்தகச்சந்தையில் தற்போது அன்னம் புத்தக நிலையத்தில் இவ்விதழ் கிடைக்கும். உள்ளடக்கத்தை கீழ்கணட் இணைப்பை கிளிக் செய்து பார்த்துகொள்ளலாம்.
[1] இதற்கு இடிபஸ் விடுவிக்கும் ஸபிங்சின் புதிரில் விடை உள்ளது. அதாவது அப்புதிரில் காலையில் நான்கு கால்களும் மதியத்தில் இரண்டு கால்களும் மாலையில் மூன்று கால்களும் உள்ள உயிரி எது? என்பதே ஸ்பிங்ஸின் புதிர். இப்புதிருக்கு இடிபஸ் முன்வைக்கும் பதில் ஆண் (Man) என்பதுதான். அதாவது தந்தைமையின், ஆணாதிக்கத்தின் மேலாண்மை என்பதற்கான குறியீடே இந்த ஆண் என்கிற பதில்.




0 comments:
கருத்துரையிடுக