மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –2

மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –1

globalization cartoons, globalization cartoon, globalization picture, globalization pictures, globalization image, globalization images, globalization illustration, globalization illustrations

உலகமயமாதல் என்பது இரண்டாம் உலகப்போருக்கு பின்பு, உருவான தேசிய எழுச்சிகைளை கட்டுக்கொள் கொண்டுவந்து நாடுகள் பல உருவானதன் வழியாக, பரஸ்பர ஒப்பந்தங்களின் வழியாக, உலக மூலதனச்சந்தையை திறந்ததால் உருவானது. அதற்காக உலக அமைப்பில் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள், உலகை வழிநடத்துவதாக மாறியது. அந்த சர்வதேச அமைப்புகளை தங்களது கைப்பாவைகளாக அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் பயன்படுத்திக்கொண்டு வந்து உள்ளன. உலக ஒழுங்கு என்கிற சொல்லாடல்வழி அமெரிக்க-சோவியத் பனிப்போர் முடிவிற்கு கொண்டுவந்தபின், வளைகுடாப்போரைத் துவங்கி, மத்திய-கிழக்கு நாடுகளையும், இஸ்லாமிய-அடிப்படைவாதத்தையும் தனது எதிரியாக மாற்றிக்கொண்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய இன்றைய உலகவரலாற்றினை மாற்றியமைத்தவர்கள் மூன்றுபேர். சோவியத் பனிப்போரை முடிவிற்கு கொண்டுவந்த மிகைல் கோர்பச்சேவ், வளைகுடா யுத்தத்தை துவக்கி மத்தியகிழக்கு அரேபிய நாடுகளை போர்களமாக்கிய சதாம் உசைன், இரட்டைக்கோபுர தாக்குதலை நடத்தி பயங்கரவாதத்தின் உலகப் பேரரசை நிறுவிய ஒசாமா பின்லேடன். இவர்கள் அமெரிக்கா நிகிழ்த்திய தனது மேலாண்மை நாடகத்தில் கதாநாயகர்களாக அறிமுகமாகி இறுதியில் கட்டமைக்கப்பட்ட வில்லன்களாக மாற்றப்பட்டவர்கள்.

இந்த உலக மேலாண்மை நாடகத்தை “பயங்காரவாத்த்திற்கு எதிரான யுத்தமாக” நடத்திய அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போர்களுக்காக செலவழித்த தொகை 3.2 டிரில்லியன் டாலர்கள் (The Costs of War since 2001, Eisenhower Study Group, June 2011) மாதத்திற்கு 10 மில்லியன் டாலர் செலவழித்து உள்ளது. அதே சமயம் இத்தகைய யுத்தங்களால் தாலிபான் போன்ற அமைப்புகள் உளவியல்ரீதியாக வலுவான நிலையை அடைந்து உள்ளன (Financial Times, 30 June 2011, p 8). இதனால் அமெரிக்காவில் 1993-2006 வரை 7 சதவீதத்திற்கு மேலான மிதமான வருமானம் தரும் பணிகள் மறைந்தொழிந்துவிட்டன (Financial Times, 30 June 2011, p 4). சமத்துவமின்மை என்பது உலகிலேயே அதிகமாக உள்ளது அமெரிக்காவில்தான் என்கிறார் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ் (Multi-Billion-Dollar Terrorists and the Disappearing Middle Class - James Petras Economic & Political Weekly EPW October 1, 2011 vol xlvi no 40). அமெரிக்கா இந்த யுத்தச் செலவீனத்தால் மத்தியதரவர்க்கத்தின் வாழ்வை படுகுழிக்குள் தள்ளியதை விவரிக்கிறது இக்கட்டுரை. ஒரு சில முதலாண்மை நிறுவனங்கள் தங்கள் வருவாயை பெருக்க ஒட்டுமொத்த தேசத்தையும், அதன் அரசையும் பயன்படுத்தும் இந்த முறைதான் தற்போதைய பேரரசு உருவாக்கத்தில் கவனிக்க வேண்டிய அம்சம். அரசு முதலாண்மை நிறுவனங்களை காப்பதற்கு என்கிற கோட்பாடுகள் மாறி, அரசை முதலாண்மை நிறுவனங்கள் பொறுப்பேற்று நடத்தும் (ஸ்பான்ஸர்) நிலைக்கு வளர்ந்துவிட்டன. முதலாண்மையாளர்களுக்கு தேசம், நிறம் எல்லை எதுவும் இல்லை. அவர்கள் உலகளாவியவர்கள். அதனால் உலகமயத்துடன் உலகை ஓரமைவாக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர்.

இது முதலாளித்துவத்தின் மிகச்சாதரண நுட்பம் மட்டுமல்ல. முதலாண்மை (கார்பரேட்) எப்படி பிற நாடுகளை சூறையாடி தன்னை நிர்மாணித்துக் கொள்கிறது என்ற உத்தியும்கூட. காட்சி-1ல் சாப்ளின் செய்யும் குற்றம் படத்தில் குற்றமாகவே பதிவாகும். ஆனால் இன்றைய இயல் உலகில் முதலாண்மை நிறுவனங்கள் இதனை தேசபக்தி, சமூக பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர், சிவில் சமூகத்தை காப்பது, ஜனநாயகத்தை உருவாக்குவது என்கிற பெயரில் நிகழ்த்துகின்றன. இவற்றை அவை குற்றமாக செய்வதில்லை. இதுதான் நீதியாக பறையறிவிக்கின்றன. நீதியை மேலிருந்து இறக்குமதி செய்கின்றன. நீதியை வழங்குவதன் வழியாக, தங்களை நீதிமான்களாக உயர்த்திக்கொள்கின்றன. உலகநீதி என்கிற ஒன்றை இதன் வழியாக உருவாக்கி நிலைநிறுத்துகின்றன.

காட்சி-1 உருவகிக்கும் பிம்பம் பல தளத்திலானது. குறிப்பாக, முதலாளியம், ஏகாதிபத்தியம் உள்ளிட்ட பலவும் செய்யும் சித்துவேலை இதுதான். அதாவது பிள்ளையை கிள்ளிவிடுவது, தொட்டிலை ஆட்டுவது. இங்கு பிள்ளையை உலக நிதிநிறுவனங்கள் கிள்ளிவிட, தொட்டிலை ஆட்டும் பணியை செய்வது இந்த அரசுசாரா நிறுவனங்கள். உலக நிதி நிறுவனங்களின் வழியாக கடன்சுமையை ஏற்றி, ஒருபுறம் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்துவது, மற்றொருபுறம் இத்தகைய நிறுவனங்கள் வழியாக மக்கள் நலத்திட்டத்திற்கு சார்பாக அரசை எதிர்த்து போரிடுவது. இதான் பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும் வேலை.

கதை-1

கதை-1 ல் உள்ள முதலாவது ஆராய்ச்சியாளன் பொதுபுத்தி அடிப்படையில் இயங்குபவன். உலகம் இப்படி இயற்கையாக இருப்பதாக நம்புபவன். இரண்டாமவன் முதலாண்மை கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளை கற்றவன். ஒன்றை உருவாக்கி அதற்கு தீனிபோடும் கலாச்சார கட்டுமானம் பற்றி அறிந்தவன். மனிதர்களை கலாச்சாரத்தின் வழியாக நுகர்வாளர்களாக உருவாக்க முனைகிறான். முதலாண்மை வாழ மனிதர்கள் தேவையில்லை. நுகர்வாளர்கள்தான் தேவை. அந்த நுகர்வை உருவாக்க கலாச்சாரக் கட்டுமானம் தேவை. அதை உருவாக்கவேண்டியது முதலாண்மை நிறுவனங்களின் முதல் பணியாக உள்ளது. அப்பணிகளை சர்வதேச அளவில் செவ்வனே நிறைவேற்றுபவைதான் கலாச்சார நிறுவனங்களான ஊடகங்கள், நவீன இலக்கியங்கள், நவீன கலைகள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் எனப்படும் அரசுசாரா நிறுவனங்கள்.

செவ்வியல் முதலாளித்துவம் மறைந்து அந்த இடத்தில் உலக முதலாண்மை நிறுவனங்கள் அதிகாரம் பெற்றுவிட்ட ஒரு சூழல்தான் உலகமயமாதலின் வெளிப்பாடு. (நண்பர் ராஜன்குறை இந்த வகை முதலாளியத்தின் பண்பியல் மாற்றத்தை குறிக்க முதலீட்டியம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். முதலீட்டியம் என்பது உலகளாவியது, அது தனிமுதலாளிகளைக் குறிப்பது அல்ல. உலகில் “பேரரசு” ஒன்றின் செயல்பாட்டிற்கான பின்புலமாக முதலீட்டியத்தை குறிக்கிறார் என்று நினைக்கிறேன். இது குறித்து அவரது ”முதலீட்டியமும் அதன் பிறகும்” என்கிற நூலில் முதன் நிலையான ஒரு அறிமுகம் உள்ளது. நான் முதலாண்மை நிறுவனங்கள் என்பதற்கு கார்பரேட் கம்பெனிகள் என்பதற்கான தமிழ் சொல்லாகவே பாவிக்கிறேன்.*) இந்நிறுவனங்கள் தனக்கான உலகை கட்டமைக்க பல அரசாங்கங்களை நடத்திக்கொண்டு உள்ளன. அவ்வரசாங்கங்கள் சர்வதேச நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் வழியாக ஓர் உலக ஆட்சியை நிறுவி உள்ளன. இந்த உலக ஆட்சிக்கான சிவில் சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதே உலக கார்பரேட் மற்றும் அரசுகளின் நிதிஉதவி பெற்று இயங்கும் என்.ஜி.ஓ.க்கள்.

இவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சிவில் சமூகங்கள் பற்றிய ஆய்வும், இடையீடும், பணிகளும் செய்து அதை சர்வதேச சிவில் பண்புகளாக உருவாக்கப்பட்டுள்ள “ஜனநாயகம்” ”சுதந்திரம்” ”சமத்துவம்” “சகோதரத்தவம்” ”மனிதநேயம்” உள்ளிட்டவற்றிற்கான கருத்தியல்சார்ந்த மனித குழுக்களை கட்டமைப்பதும், மனிதர்களை நுகர்வாளர்களாக உருவாக்குவதையும் செய்கிறார்கள். கருத்தியல் பண்டங்களை இறக்குமதிசெய்து விநியோகிப்பதும், அதை நுகரச்செய்வதும் இவர்களது முக்கிய பணி. சமீபத்திய அரேபிய புரட்சிகள் துவங்கி இந்தியாவில் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு “இரட்சக அரசியல்வரை“ (Messianic Politics) சிவில் சமூகம் பற்றிய பேச்சு உலகளவில் அதிகமாகி உள்ளது. இந்த “இரட்சக அரசியல்” மனநிலை அதிகாரத்தை தூக்கி எறியும் அளவிற்கு அரேபிய நாடுகளில் ஒரு பாலைவன புயற்காற்றைப்போல சுழற்றி அடித்தது. அரேபிய புரட்சி மற்றும் இந்திய சிவில் சமூக கட்டமைப்பில் இச்சுழல்காற்றை உருவாக்கிய என்.ஜி.ஓ.க்களின் இடையீடுபற்றிய ஒரு கவனத்தை ஏற்படுத்திக்கொள்ள முனைவது அவசியம்.

உண்மையில், இந்தியாவில் சிவில் சமூகம் உள்ளதா இல்லையா? என்கிற விவாதங்கள் ஒருபுறம் உள்ளன. அரசியல் சார்ந்த சிவில் சமூகம் உருவாகும் முன்பே, பிராமண அல்லது ஆரிய தர்மாவை அல்லது வரணாசிரம-தர்மத்தை பின்பற்றும், சாதிய குழுக்களை அடிப்படையாகக் கொண்ட தர்ம-சமூகம் உருவாகிவிட்டது. பழங்குடிகளின் கூட்டாச்சியை, சம-தர்ம சமூகத்தை உருவாக்க முனைந்த பௌத்தம்கூட பின்னாளில் இந்த வர்ண-தர்ம-சமூகத்தால் உள்வாங்கப்பட்டது. காரணம், தர்ம-சமூகம் அரசியலின் இடத்தில் தர்மத்தை வைத்தது. உரிமையின் இடத்தில் கடமையை வைத்தது. நிர்வாகத்தின் இடத்தில் குடும்பத்தை வைத்தது. அமைப்புகளின் இடத்தில் விசுவாசத்தை வைத்தது. தனிமனிதனின் இடத்தில் குழுமனிதனை வைத்தது. உள்ளுணர்வின் இடத்தில் கண்காணிப்பை வைத்தது. மனதின் இடத்தில் மனசாட்சியை வைத்தது. அறிவின் இடத்தில் உணர்வை வைத்தது. அறத்தின் இடத்தில் குழு-தர்மத்தை வைத்தது. சுதந்திரத்தின் இடத்தில் மோட்சத்தை வைத்தது. சிவில் சமூகத்தின் இடத்தில் சாதிய-தீண்டாமையை கொண்ட வர்ண-தர்ம-சமூகத்தை வைத்தது. அரசியலின்-தர்மத்தை, அரசியலின் அறத்தை தர்மத்தின் அரசியலாக மாற்றியது. தர்மா வர்ணங்களால் ஒழுங்கமைக்கப்பட்டது. புராணங்களின், கதையாடல்களின் வழியாக ராஜதர்மம்கூட வர்ணதர்மத்தை காப்பதற்கானதாக உருவானது. வர்ண-தர்மத்திற்கு அப்பால் ஒரு சிவில் சமூகம் என்கிற பொதுவெளி சாத்தியமற்ற நிலையில், சிவில்சமூகம் பற்றிய நிறைய பேச்சுகள் சமீபகாலங்களில் பெருக்கப்படுகின்றன. இந்திய சிவில் சமூகத்தில் சாதியத்தின், சாதியக் குழுக்களின் பங்கு என்ன? என்பதை தீர்க்காமல், சிவில்சமூகம் என்கிற குடியாண்மை சமூகத்தை உருவாக்கமுடியாது.

இப்படி பெருக்கப்படுவதற்கு காரணமாக இந்திய அரசு மாறிவரும் உலகயமயமாதலில் சிவில்சமூக உருவாக்கத்தை தனது அதிகார அமைப்பிற்கு ஏற்ப ஒருவகை அதிர்ச்சி-உறிஞ்சியாக (shock absorber) உருவாக்க முனைகிறது. அதற்கான முயற்சியில் அரசுசாரா நிறுவனங்களின் பணிகளை அரசே நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்துகிறது. சிவில்சமூக உருவாக்கத்தில் என.ஜி.ஓ.க்கள் எனப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பணியும் பங்கும் ஆராயப்படவேண்டிய ஒன்று. எகிப்தில் நிகழ்ந்த புரட்சி துவங்கி அரேபியா முழுவதும் பரவிய அரேபிய புரட்சிகளுக்கு பின்னுள்ள அரசுசாரா நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்நிறுவனங்கள் சமூகத்தின் மைக்ரோ லெவல் எனப்படும் மிகச்சிறிய அளவிலான ஒரு குழுவிற்குள் துவங்கி விரிந்து பரவுகிறது. வேர்க்கால்மட்ட அரசியலே இக்குழுக்களின் அடிப்படை செயல்களமாக உள்ளது. இந்தியாவில் அன்னா ஹசாரே போன்ற நடுத்தரவர்க்கத்தின் புதிய அதிகாரத்தை பங்கிட துடிக்கும் சிவில் சமூக “மெசையாக்“களை உருவாக்குவது இத்தகைய அரசுசாரா நிறுவனங்களின் முக்கியப்பணியாகும். அதற்காக முதலாளிய அரசுகள் நிறைய நிதிகளை அளிக்கிறது. உலகம் இன்று ஒருவகையில் இந்த கண்ணிற்கு தெரியாத சிறு சிறு நிறவனங்களின் வழியாக பேரரசின் அதிகார முகவர்களாக செயல்படுகிறது. இந்நிறுவனங்கள் என்ன செய்கிறது எப்படி தங்கள் வலைப்பின்னலை விரிக்கிறார்கள் என்பதை இவற்றின் அசுர வளர்ச்சியிலிருந்து அறியலாம்.

2009 ஆம் ஆண்டு கணக்கின்படி சர்வதேச அளவில் இயங்கும் அரசுசாரா நிறுவனங்கள் சுமார் 40,000 வரை உள்ளது என்கிறது ஒரு அறிக்கை. தேசிய அளவில் பார்த்தால் அதன் எண்ணிக்கை இதைவிட அதிகம். ரஷ்யாவில் மட்டும் 2,77,000 ம் அமைப்புகளும், இந்தியாவில் 33,00,000 அமைப்புகள் இயங்கி வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது 400க்கும் குறைவான இந்தியர்களுக்கு ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகதார நிலையம் என்ற கணக்கில் ஓர் அரசுசாரா நிறுவனம் இயங்கிவருகிறதாம். அதாவது இந்நிறுவனங்கள், அரசின் பொதுநிறுவனம், அரசிற்கு வெளியல் உள்ள தனியார் நிறுவனம் இரண்டையும் போல ஒரு மூன்றாவது நிறுவனமாக செயல்படுகிறது. அரசையும், மக்களையும் இணைக்கும் கண்ணியாக இது செயல்படுகிறது.

அரசு இரண்டுவடிவங்களில் தனது அதிகாரப்பரவலை செயல்படுத்துகிறது. காவல்துறை, இராணுவம், நீதி-பரிபாலன சட்ட அமைப்பு உள்ளிட்டவற்றைக் கொண்ட வன்முறை சார்ந்த கருவிகளை வெளிப்படையானதாக வைத்து உள்ளது. குடும்பம், கல்வித்துறை, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட குடியாண்மை சமூகம் கருத்தியல் வழியாக இணக்கமான மனநிலையை உருவாக்குவதாக உள்ளது. ஓர் அரசமைப்பு வன்முறைக் கருவிகளைக் கொண்டு மட்டுமே ஆளமுடியாது, அதிகாரம் செலுத்த முடியாது. தனது ஆளுகையை ஏற்கக்கூடிய தன்னிலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு இந்த அரசுசாரா, தன்னார்வ, தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. சீர்திருத்தம், அடிப்படை மாற்றம் என்கிற இரு சொல்லாடல்களுக்குள், சீர்திருத்தம் என்பதை முன்வைப்பதன்மூலம், அடிப்படை மாற்றத்தை பற்றிய அக்கறையின்மையை உருவாக்கக்கூடியதாக உள்ளது. தன்னிலைகளை திருத்தம் செய்து சீர்திருத்தி அரசின் ஆளுகைக்குள் நிலைநிறுத்துவதாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய என்.ஜி.ஓ. என்றால் அது மதம் சார்ந்த இயக்கங்கள்தான். சான்றாக, இந்திய தேசியத்தின் பாதுகாவலனாக, மரபின் மைந்தனாக தன்னை அறிவித்துக்கொண்டு, தேசிய சுயசேவகர்கள் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சொல்லலாம். இவ்வமைப்பு அரசுசாரா நிறுவனங்களுக்கு, சிவில் சமூக சேவைகளுக்கு ஒதுக்கபட்ட அமெரிக்க நிதி ஆதாரங்களைக்கொண்டு இயங்குவதை பெரியார்தளத்தில் உள்ள இக்கட்டுரை விவரிக்கிறது. (http://www.periyarthalam.com/2011/12/09/rss-run-by-american-money/)

இந்தியாவில் 1.5 மில்லியன் என்.ஜி.ஓ. அமைப்புகள் உள்ளன. 26.5 சதவீதம் என்.ஜி. ஓக்கள் மதநடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். 21.3 சதவீதம் சமூக சேவை இயக்கங்கள். ஐந்திற்கு ஒன்று கல்வியிலும், 17.9 சதவீதம் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள். 6.6 சதவீதத்தினர் சுகாதரப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். (Overview of civil society organizations INDIA – Asian Development Bank) இத்தகைய வேர்க்கால்மட்ட நடவடிக்கைகளால்தான் இந்தியாவில் சிவில் சமூக உருவாக்கம் நிகழ்கிறது. இத்தகைய பணிகளால், மக்களின் மனசாட்சி என்பது சிவிக் பண்புகளால் கட்டப்படுகிறது.

சிவிக் பண்புகளாக மேற்கத்தியம் முன்வைக்கும் அடிப்படையான ஒன்று ஜனநாயகம். ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவ அரசியலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதே ஒழிய, பங்கேற்பின் அசியலாக அல்ல. ஜனநாயகம் என்பது சமத்துவ பண்பை அடிப்படையாகக் கொண்டது. அது மற்றமையுடன் பங்கேற்பதன்வழியாக ஒரு சமத்துவநிலையை உருவாக்க்க்கூடியது. ஆனால், இந்திய தர்மா-வர்ணப்பண்புகளால் கட்டப்பட்ட மனதில், ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவமாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குழுவின் பிரதிநிதியாக ஜனநயாகம் கையாளப்படுகிறது. தனிமனிதனின் பண்பாக ஜனநாயகம் இங்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. காரணம் இந்தியாவின் அடிப்படை அலகாக தனிமனிதன் இல்லை. குழுக்களே உள்ளன. அந்த குழுக்கள் சாதிகளாக, இனமாக, பாலினமாக இப்படி ஏதோ ஒரு நிலையான அடையாளம் (மோலார் அடையாளம்) கொண்டதாக உள்ளது. அடையாளத்தின் ஜனநாயகம் மட்டுமே அரசியல் கோரிக்கையாக உள்ளது. தனி உடலின் ஜனநாயகம் என்பது சிந்தனை அளவில்கூட சாத்தியமற்றதாக உள்ளது. தனக்கும் மற்றமைக்கும் குறைந்தபட்சம் சகமனிதனுக்கும் இடையில்கூட ஒரு சமநிலையை தரும் சமத்துவத்தை தரும் ஜனநாயகப்பண்பு இல்லை. எப்போதும் தன்மோகத்தின் உச்சியில் நின்று, தன்னை உயர்வாகக் கருதும் ஒரு ”புனித தெய்வீக” தன்-மையவாத பிம்பமே மேலோங்கி உள்ளது. அதனால்தான் ஜனநாயகம் என்பது எப்போதும் ஒரு பிரதிநிதித்துவ அரசியல் சொல்லாடலாக உள்ளதே தவிர, பங்கேற்கும் கலாச்சார சொல்லாடலாக மாறவில்லை.

(தொடரும்)

- ஜமாலன் (jamalan.tamil@gmail.com) 16/12/2011  - அடவி 2012

* – இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நணபர் ராஜன்குறையின் நூலின் பெயர் ”முதலீட்டியமும் மானுட அழிவும்” (கீற்றில் இதனை வாசிக்கலாம். சுட்டி தந்த ஜெ.பி. ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி.) எனது கவனக்குறைவினாலும், நேரமின்மையினாலும் சரிபார்க்காமல் நிகழ்ந்த தவறுக்கு வாசகர்கள் மற்றும் ராஜன்குறையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதில் ராஜன்குறையின் கருத்தாக நான் குறிப்பிட்டிருப்பவை அவரது நூல் வாசிப்பில் எனக்கு ஏற்பட்ட புரிதலே தவிர இவை ராஜன்குறையின் கருத்துக்கள் அல்ல. அவரது கருத்தை அறிய விரும்பும் வாசகர்கள் அவசியம் புலம் வெளியிட்டு உள்ள அந்த நூலை வாசிக்கவும்.  இது குறித்து பேஸ்புக்கில் நிகழ்ந்த எங்கள் உரையாடலை இதில் வாசிக்கலாம்.

http://www.facebook.com/jamalan.tamil/posts/215402001884495?notif_t=share_comment

இந்த வரிகளை நீக்கிவிடுகிறேன் இக்கட்டுரையில் நன்றி.

1 comments:

பெயரில்லா சொன்னது…

Dear Jamalan,

Thanks for your recent Artcle.

It is very interesting.

I will try to understand the content of your writtings as much as possible.

Regards
krishnan