மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 1
ஒருமுறை சென்னையில் ஒரு பஸ்ஸில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, கடைசி சீட்டிற்கு முன்பு உள்ள பெண்கள் இருக்கையில் நானும் மற்றொருவரும் அமர்ந்திருந்தோம். அப்பொழுது இரண்டு திருநங்கைகள் ஏறினார்கள். அவர்கள் எனது சீட்டு அருகில் வந்தவுடன், பெண்கள் இருக்கை என்பதால் நான் எழுந்துவிட்டேன். என் அருகில் அமர்ந்தவர் எழவில்லை. அவர்கள் இது பெண்கள் சீட்டு எழுந்து இடம்விடும்படி கூறினார்கள். அவர் எடக்காக அது பெண்களுக்குத்தான் உங்களுக்கில்லை என்றார். அவர்கள் நடத்துனரிடம் சொன்னார்கள். நடத்துனர் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் விடுவதாக இல்லை. அத்தனைபேர் மத்தியிலும், அந்த சீட்டை பெறுவது தங்கள் உரிமை என்பதாக அவர்கள் அவருடன் சண்டையிட்டார்கள். அவன் நீங்கள் பெண்கள் இல்லை என்பதாக வாதாடிக்கொண்டிருந்தான். அங்க உள்ளவர்கள் யாரும் இவர்களுக்கு ஆதரவு தரவில்லை. நான் உட்பட. சென்னை இன்றுவரை கிராமங்களைச் சேர்ந்த எனக்கு ஒரு பேரச்சம் தரும் நகரம் மற்றும் என்னைப் போன்றவர்களின் நாகரீக நடுத்தரவர்க்க மொன்னைத்தனம் என்பதும் காரணம். பேச்சு முற்றியதுடன் தாங்கமுடியாத கோபம் வந்த அவர்களில் ஒருவர் நாங்கள் பெண்கள் இல்லாமல் யார்? பார்த்துக்கோ எங்களிடம் என்ன இருக்கிறது என்று தங்கள் பாவாடையை தூக்கி தங்கள் குறி உள்ள இடத்தை அத்துனை கூட்டத்தின் மத்தியில் காட்டி நல்லா பார்ரா நான் ஆம்பளயா என்றார்கள்.
கூட்டம் உறைந்துபோக, அவமானமாக கருதிய அவன் அனைத்து சென்னை வசவுகளிலும் அவர்களை திட்டிக்கொண்டே எழுந்து, அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கியவன் வண்டி புறப்படும் தருணத்தில் சன்னல் வழியாக அவர்களில் ஒருவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டான். அவர் வலி பொறுக்காமல் அவனை திட்டிக்கொண்டே வந்தார். இதை யாரும் ஒரு ஆணிடமோ, பெண்ணிடமோ பொது இடத்தில் செய்யமுடியாது. அங்கு உள்ளவர்கள் அதற்காக எதாவது செய்வார்கள். இவர்கள் அடிவாங்கியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. அந்த வன்முறை எனக்கு நீண்டநாட்கள் மனதில் உறைந்துபோய் இருந்தது. அது ஒரு அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆணாக அந்த நிர்வாணத்தை நான் பார்த்த்தும், ஆணாக மற்றொருவன் அதை வன்முறையாக எதிர்கொண்ட விதமும். அவர்களது நிர்வாணம் ஒரு ஆணை அம்மணமாக்கிவிட்டதை பொறுக்காத தன்முனைப்பு, இயலாமை, ஆண் என்கிற அகங்காரம், எல்லாம் அவனது அந்த ஒரு குத்தின் வன்முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. ஆணிய லிங்க அதிகாரம் தனது வன்முறையை பிற உடல் மீது செலுத்துவதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றதாக உள்ளது. பொது வெளிகளை தனக்கு உரியதாக அது அதிகாரம் செய்கிறது. தனிவெளிகளை பெண்களின் இருப்பியல் புலமாக ஆக்கி உள்ளது. இந்த பொது/தனி வெளி பிரிவனை நவீன சமூக உருவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட ஆண்-பெண் எதிர்பாலின விதியமைப்பின் விளைவாக உருவானது. ஆணுடல் பொதுவெளியிலும், பெண்ணுடல் தனிவெளியிலும் செயல்படுவதற்கான விதிமுறைகளை வகுத்து வைத்து உள்ளது. இந்த இரண்டு வெளிகளும் மறுக்கப்பட்டவர்களான மாறியப்பாலினத்தினர், தங்களுக்கென்று தனிப்பட்ட வெளிகள் அற்றவர்களாக உள்ளனர். அல்லது புதிதான வெளிகளை உருவாக்கிக்கொண்டு உள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட இருபாலியலுக்கு அப்பால் உள்ளதை, இருபாலியலில்கூட மற்றொரு பாலினமான பெண்களை தனது அதிகார எல்லைக்குள் வைத்துக்கொள்வதன்மூலம், ஆணுடல் தன்னை அடையாளப்படுத்தி இன்புற்றுக்கொள்கிறது. ஆண் தன் உடலை மையமாக வைத்துக்கொள்வதற்காக பெண் மற்றும் இருபால் உடல்களை விளிம்பில் வைக்கிறது. ஆணுடலை உருவமைக்க இந்தவகை உடல்கள் பற்றிய கதையாடல்கள பல்கிப் பெருக்கி, சமூகத்தில் புறக்கணிப்பின் விளிம்பில் வைக்கப்படுகின்றன. இவற்றினை ஒரு திட்டமிட்ட ஆணிய சதியாக கருதிக்கொள்ள வேண்டியதில்லை. இருபாலின-எதிர்வை அடிப்படையாக்க் கொண்ட சமூகம் கட்டப்பட்டு அதன் இயக்கத்தின் போக்கில் ஏற்பட்ட அதிகாரச் செறிவிற்கான நுட்பமாக உருவானவையே இவை. இரண்டு பாலினங்களே இயற்கையானது மற்றது இயல்பற்றது, குறைபாடுடையது என்ற அதிகாரம் உருவாக இந்த சமூக செயலியக்கம் நிகழ்கிறது. மற்றொருவகையில் இந்த மற்ற பாலினங்களின் இருப்பில்தான், தனது இருப்பு உள்ளது என்பதால், அந்த இருப்புக்களை ஒவ்வொரு கணத்திலும், நிகழ்விலும் அதற்கான அடையாளச் செயல்களை வெளிப்படுத்தியப்படி உள்ளது ஆண் என்ற பெரிருப்பு.
இவ்வாறான, ஆணியம் என்கிற லிங்கத்தின் அதிகாரம் பரவிய ஒரு சமூகவெளியில்தான் மூன்றாம் பாலாக அறியப்படும் இவர்கள் தங்கள் வாழ்தலை நிகழ்த்த வேண்டி உள்ளது. உடை தோலாக மாறிவிட்ட ஒரு சமூகத்தில், தோலையே உடலாக கொண்டவர்கள்தான் இத்தகையவர்கள். ஒருவகையில் சமூகத்தின் மையஅச்சாக உள்ள கிரேட்-பேலஸ் எனப்படும் மஹா-லிங்கத்தை பகடி செய்து அதை வெட்டி எறிந்தவிட்டு, தனது நிர்வாணத்தின் மூலம் சமூகத்தின் அம்மணத்தை அம்பலப்படுத்துபவர்கள். குறிகளால் இணைக்கபட்ட பாலின-சமூகத்தில், குறிகளை வெட்டி எறிவதன்மூலம், சமூகத்தில் தங்களது இணைப்பு சங்கிலியை அறுத்துவிடுகிறார்கள். சமூகத்தின் பாலுமை மற்றும் பாலின பேரெந்திரத்தை பகடி செய்து அதன் இயக்கத்தை முட்டி நிறுத்துபவர்களாக உள்ளனர். இருபாலின இயக்கவிதிகளுக்கு உட்படாத இவ்வுடல்களைக் கண்டு திகப்படையும், பாலின எந்திரம், தான் இயங்க, இத்தகைய உடலிருப்பை புறக்கணித்து ஒதுக்கிவைத்து சமூகத்தின் உடலெந்திரங்களை ஒழுங்கமைத்தபடி உள்ளது.
இந்தியாவில் இவர்கள் ஹிஜ்ரா[1]க்கள் என்கிற அரபு-உருது சொல்லால் அழைக்கப்பட்டாலும், நபும்சகர், அரவாணிகள் என்கிற சமஸ்கிருதப் பெயரைக்கொண்டிருந்தாலும், திருநங்கை-திருநம்பி என்கிற அழகான தமிழ்ச்சொல்லால் அழைக்கப்பட்டாலும், அல்லது அலி என்கிற பழக்கச்சொல்லால் அழைக்கப்பட்டாலும், பேடி, பொட்டை என்கிற வழக்குச்சொல்லால் அழைக்கப்பட்டாலும் இவர்களது தோற்றம் பற்றிய தொன்மங்கள் இன்றைய ஆண்-பெண் என்கிற அங்கீகரிக்கப்பட்ட இருபால்-உடல் என்கிற கட்டமைப்பின் மையமாக உள்ளதை விளக்குவதாக உள்ளது. அதாவது, இருபாலாக இருந்த பூர்வீக உடலிலிருந்தே இன்றைய ஒருபாலாக உள்ள ஆண் பெண் உடல்கள் தோற்றம் கொண்டதாக மேற்கத்திய தத்துவத்தின் ஊற்றுக்கண்ணாக உள்ள கிரேக்க தோற்றவியல் தொன்மம் ஒன்று விவரிக்கிறது.

கிரேக்க த்த்துவஞானியான பிளேட்டோவின் சிம்போஸியத்தில் உரையாடும் அரிஸ்டோபென் காதலின் வரலாற்றை அறியும் முன் உடல்கள் ஆதிகாலத்தில் தோன்றிய வரலாற்றை விவரிக்கிறார். அதில் உடல்கள் இன்றுபொல் ஒன்றாக இல்லை எல்லாம் இரட்டையாக இருந்தது. உடல்கள் உருளைவடிவமாக இரண்டு தலைகள் நான்கு கைகள் நான்கு கால்கள் என இருந்தன. அன்று மூன்று பாலுமை இருந்தது. இரட்டை ஆண்கள், இரட்டை பெண்கள் மற்றும் ஆண்ட்ரோஜைனஸ் எனப்படும் ஆண்-பெண் கலந்த உடல்களாக இருந்தது. ஆண்கள் சூரியனின் சந்ததி, பெண்கள் பூமியின் சந்ததி, மூன்றாம் பாலினர் சந்திரனின் சந்ததியைச் சேர்ந்தவர்கள். எந்த திசையில் வேண்டுமானாலும் நடக்கும் ஆற்றல் பெற்ற இவ்வுடல்கள், கடவுளையே சண்டைக்கு அழைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவையாக இருந்தன. இவ்வுடல்களது பேராற்றலைக்கண்ட கடவுள் இவ்வுடல்களை அழித்துவிடலாம் என தனது தேவதைகள் அடங்கிய குழுவில் தீர்மானிக்கிறார் அப்போது சீயஸ் தேவதை, இவ்வுடல்களை அழிக்காமல் ஆற்றலைக் குறைக்க ஒரு திட்டம் இருப்பதாக கூறுகிறது. அவ்வுடல்களை இரண்டாக பிரித்துவிடலாம் என்கிறது. அதன்படி, அவர்களை இரண்டாக பிரித்து, அப்போலா தெய்வத்திடம் வெட்டப்பட்ட திறந்த பகுதியை தோளால் மூடி முடிச்சிட சொல்கிறது. அவர்களது தலையை திருப்பி வைத்துவிடும்படி சொல்கிறது. அதாவது அந்த முடிச்சிட்ட பகுதிதான் தொப்புளாகவும், பின்புறம் இருந்த தலை முன்புறமாக திருப்பவும் படுகிறது. இப்படி செய்வதன் வழியாக திரும்ப அவர்கள் இணையமுடியாத நிலையை சீயஸ் உருவாக்கிவிடுகிறது.
அதாவது ஒரு தோளிற்குள் இருந்த உடல்களை இரண்டாக பிளந்து முடிச்சிட்டு, தலையை திருப்பி வைப்பதன்மூலம், அதன் சம்சீர் குலைந்து இணையமுடியாத நிலை உருவாகிவிடுகிறது. தொடர்ந்து தான் இழந்த பாதியோடு இணைய மறுபாதியை தேடி அலைகிறது. ஒரு உடல் இறந்தவுடன் மற்றொரு உடலை தேடி ஒட்டிக்கொள்வது நடக்கிறது. இந்நிலையில் அவர்கள்மீது பரிவுகொண்ட சீயஸ், அவர்கள்து பழைய உடலில் முன்புறமும், புதிய உடலில் பின்புறமும் உள்ள ஆண், பெண் குறிகளை முன்புறம் மாற்றி திருப்பிவிடுகிறது. அதன் பின் அவ்வுடல்கள் ஆண் பெண் என்கிற எதிர்பாலினத்துடன் இணைவது நடக்கிறது. ஆணிலிருந்து பிரிந்த ஆண்உடல், ஆண்உடலான தனது பாதியை தேடுவதால் அது ஹோமோசெக்ஸ் எனப்படும் ஆண்-தன்பால் புணர்ச்சியின் விருப்புடையதாகவும், பெண் உடலிலிருந்து பிரிந்த பெண் உடல், தனது பாதியாக பெண் உடலை தேடுவதால் லெஸ்பியன் என்கிற பெண்-தன்பால் புணர்ச்சியில் விருப்புடையதாகவும், ஆண்டிஜைனஸ் என்கிற ஆண்-பெண் இருபாலின உடல்களில் இருந்து பிரிந்த உடல்கள் ஆண்-பெண் உடலை தேடும் ஹெட்ரோசெக்ஸ்வல் எனப்படும் எதிர்ப்பால்-புணர்ச்சியில் விருப்புடையதாகவும் உருவானது. உடல் மீதான காதல் உருவான கிரேக்கத் தொன்மைக்கதை இதுதான். இறுதியாக இக்கதையை சொல்லிய அரிஸ்டோபென் ஒரு எச்சரிக்கையை விடுகிறார். கடவுளை புறக்கணிப்பவர்கள் இப்படி கடவுளால் பிரிக்கப்பட்டு தண்டனைக்கு ஆளாவார்கள் என்று.
இத்தொன்மத்தை வாசித்தால், இதில் இன்றைய பாலியலில் உள்ள மூன்று முக்கிய பாலியல் நடவடிக்கையும், ஒரு உடல் மற்றொரு உடலை தேடுவது தனது மூலாதார உடலை தேடுவதே என்கிற இயல்புணர்ச்சியின் வடிவமைப்பு பற்றிய தொன்மத்தை அடையலாம். இதில் நாம் கவனம் கொள்ள வெண்டியது என்னவென்றால், இன்றைய ஆண்-பெண் எதிர்ப்பால் வேட்கை (ஹெட்ரோசெக்சுவல்) உள்ள இயல்பானவர்களாக சமூகம் அறுதியிட்டு உள்ள உடல்கள், ஆதியில் கலப்பு பாலினமாக அதாவது இருபால் உறுப்புகளைக்கொண்ட இரட்டை உடல்களாக கதையாடப்பட்டு உள்ளது என்பதே. மூன்றாம் பால் என்பது தொன்மரீதியாக உடல்களின் உற்பத்தியான பாலற்றதாக இருந்து உள்ளது. இன்றைய உலகெங்கிலும் பாலியலாக அங்கீகரிக்கப்ட்ட எதிர்பாலியல் மோகம் என்பது இருபாலியல் உடல்களிலிருந்தே உருவாகி வந்துள்ளது என்பதே இத்தொன்மத்தின் அடிப்படை. இந்த அடிப்படைக்குள், பாலினம் என்பதற்கான கட்டுமானக்கதையாடல் உள்ளதை அறியலாம். அதாவது பாலினம் என்பதற்கான தோற்ற மூலமான ஒரு வரலாற்றை கட்டுகிறது. பாலினம் என்பது இயல்பானது என்பதாக அது கடவுளின் தோற்றத்தில் உருவானது என்பதும், உடலின் தோற்றத்தில் தங்கி உள்ளது என்பதாகவும் சொல்கிறது. பாலினம் என்பது ஒரு கலாச்சார கட்டமானம் என்பதை மறைக்க, அது மூலமுதலானது, வரலாறு கொண்டது, ஒரு உடலின் பிறப்போடு உருவானது என்பதாக விளக்க முனைகிறது. அல்லது பாலுமை வேறுபாட்டை பாலினமாக்கிய தொன்மக்கதையாடல் எனலாம்.
பிராஜபதி என்பது பாலற்ற ஒன்றாகவும் அதிலிருந்து ஆண் பெண் உடல்கள் பிரிந்தன என்பதும் இந்திய வேதமதத்தின் தொன்மங்களில் ஒன்றாகும். இது கிரேக்க ஆண்ட்ரோஜைன் தொன்மத்தை ஒத்த ஒன்று. அதேபோல் இருபாலின உடலைக்கொண்ட கிரேக்க ஹெர்மோபுரோடைட் என்கிற தொன்மத்திற்கு இணையான ஒரு தொன்மமாக அர்த்தநாரீஸ்வரத் தொன்மத்தை கூறலாம். படைப்புக்கடவுளான பிரம்மன் தொடர்ந்து கடவுள் மற்றும் ஆண்களை படைக்க, அவர்களால் மறுஉற்பத்தி செய்யமுடியவில்லை. பிரம்மன் பெண்கடவுள் தன்மையை பிரிக்கும்படி சிவனிடம் வேண்ட, சிவன் பிரம்மனின் முன்பு பெண்ணியத்தன்மையை வெளிப்படுத்துகிறார். அதிலிருந்து பிரம்மன் பெண்ணிய ஆற்றலைப்பெற்று மனித உடல்கள் உற்பத்தி செய்கிறார் ஆண் பெண்கள் என. அதன்பின் ஆண் பெண் உடல்கள் பிற உடல்களை உற்பத்தி செய்யத் துவங்குகின்றன. சிவனிற்குள் உள்ள இந்த பெண்மைய ஆற்றலே, அர்த்தநாரீஸ்வரத்தின்[2] அடிப்படை ஆகும். இப்புராணக்கதையாடலில், ஆண் பெண் என்கிற இரண்டு பாலுமைகளும், சிவன் என்ற ஒற்றை உடலுக்குள்தான் உள்ளன என்பதும், உற்பத்தியின் பொருட்டு இரண்டு பாலுமையாக வடிவமைவதையும் சொல்கிறது. இதில் ஆண்மை என்பதும் பெண்மை என்பதும் பாலினம் சார்ந்தவை. இவை தனித்த உடலாக மாறும்போது ஆண் பெண் என்கிற பாலுமைகாளக மாறுகின்றன. அதாவது பாலுமையே பாலினத்தால் கட்டப்படுவதாக, பாலினமாதல் விதிக்கு எதிரானதாக இப்புராணக்கதையாடல் உள்ளது. பாலுமையால் பாலினம் குறிக்கப்படுவதில்லை, பாலினத்தால்தான் பாலுமை குறிப்பிடப்படுகிறது எனபதே. ஆதிகாலங்களில் பாலினத்தை உருவாக்க அல்லது பாலுமையை புரிந்துகொள்ள இத்தகைய தொன்மங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்தொன்மங்கள் வழிதான் பாலினம் என்பது உடலின் ஆண்-பெண் குறிசார்ந்த பாலுமையுடன் இணைத்து அடையாளப்படுத்தப்பட்டது. ஒன்றின் தோற்ற வரலாற்றை கதையாடுவதன்மூலம், அது இயற்கையானதாக, இயல்பானதாக சாராம்சப்படுத்தப்படுகிறது. இச்சாராம்சங்கள், தன்னிலையாக்கத்தின் வழியாக அடையாளமாகிவிடுகிறது. இந்த அடையாளங்கள் சமூகத்தின் அங்கமாக உடல்களை மாற்றிவிடுகிறது. இவ்வாறாக நிலையான அடையாளங்கள் வழியாக உடல் சமூகவயப்படுத்தப்படுகிறது. சமூகத்தின் மிகப்பெரு அச்சுறத்தல் உடல்கள் அடையாளமற்று இருப்பதே. காரணம் அடையாளமற்ற உடல் சமூகத்தின் அங்கமற்ற உடல்களாக உள்ளது.
(தொடரும்)
-ஜமாலன் jamalan.tamil@gmail.com (23-10-2011 - 25-11-2011)
நண்பர் நேசமித்திரனின் வலசை என்கிற இதழுக்காக திருநங்கைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை. இதழ் அநேகமாக புத்தகக்கண்காட்சியில் வெளிவந்திருக்கலாம். மிக நீண்ட கட்டுரை என்பதால் பகுதி பகுதியாக இங்கு வெளியிடப்படுகிறது.
[1] ஹிஜர் என்கிற அரபிச்சொல்லின் வேரடியாக உருதில் உருவாகி உள்ள சொல் இது. அரபி மூலத்தில் இச்சொல்லிற்கு பொருள் வெளியேற்றப்படுதல், இனக்குழுவிலிருந்து வெளியேறுதல் இப்படி பலபொருட்கள் உள்ளது. மூன்றாம் பாலினமாக இவர்கள் பாலியல்-நில-எல்லைகள (sexual territory) விட்டு வெளியேறுதலை குறிப்பதாகவும், தாங்களது வாழ்நிலை குழு அல்லது அமைப்பிலிருந்து வெளியேறுவதையும் குறிப்பதாக கொள்ளலாம். http://en.wikipedia.org/wiki/Hijra_(South_Asia)#cite_note-4 முகமது நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வெளியேறியதை குறிப்பதற்கான சொல் ஹிஜ்ரத் என்பதும், இஸ்லாமிய ஆண்டு துவக்கமாக இது கொள்ளப்படுவதும் இச்சொல் மூலத்தைக்கொண்டதே. வெளியேறுதல் என்பதை குறிப்பதே.
[2] பக். 43 - Encyclopedia of Hinduism - Constance A. Jones and James D. Ryan J. Gordon Melton, Series Editor 2007 - Facts On File, Inc. An imprint of Infobase Publishing




2 comments:
அருமையான, பயனுள்ள, அரிய செய்திகள் அடங்கிய பதிவு. ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
நன்றி ரத்னவேல்
கருத்துரையிடுக