இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 2

இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 1

மனதின் வரைபடம்

clip_image002நவீன காலத்திற்கான மனம் குறித்து முழுமையான ஆய்வை செய்தவர் சிக்மண்ட் பிராய்ட். மனம் என்பதற்கான கார்டீசிய வரையறை அடிப்படையில் பிரக்ஞையை தனது ஆய்வுப்புள்ளியாகக் கொண்டு மனம் குறித்த வரைபடத்தை வரைகிறார். மனிதன் பிற உயிரினங்களின் பரிணாமத் தொடர்ச்சி என்கிற டார்வினியமும், மனம் சிந்திக்கும் பொருள் என்கிற கார்டீசியமும் கலந்த கலவையில்தான் பிராய்டியம் பிறக்கிறது. சிந்தனை சுயபிரக்ஞையின்பாற்பட்டது என்பதால் ‘நான்‘தான் மனதின் அடிப்படை ஆதரமாக உள்ளது. நான் என்பதே மனித உடலின் தனிச்சிறப்பான மையம். இந்த மையம் எப்படி நானாக வடிவமைகிறது என்பதை கண்டடைந்த ஒரு கருத்தாக்கமே பிராய்டியம். மனிதஉடல் பரிணாமம் அடைந்தாலும் மனம் மிருகஉணர்ச்சிகளைக் கொண்டது என்கிற உடல்/மனம் என்கிற இருமைவாத பிளவை ஏற்றுக்கொண்டது. மிருகஉணர்ச்சிகள் என்று சொல்லப்பட்ட இயல்புணர்ச்சிகளே மனித செயலுக்கான அடிப்படை விருப்பாற்றலை தருவதாக உள்ளது. மிருக உணர்ச்சி என்பது வழிமுறைப்படுத்தப்படாத பாலுந்த ஆற்றல். அவ்வுணர்ச்சிகள் சாவு மற்றும் வாழ்வு என்கிற இயல்புணர்ச்சிப் பாற்பட்டவை என்கிறது பிராய்டியம். டார்வினின் இருத்தலுக்கான போராட்டமே பிராய்டிய மொழியியல் சாவு-வாழ்வு என்ற இயல்புணர்ச்சியாக வடிவமைகிறது. இது உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஒரு உயிர்த்தலின் செய்தியாக உள்ளது. உயிர்உறை ஆற்றலான இச்செய்தியை பிராய்ட் உயிர்-வாழ் உணர்வு (life instinct), உயிர்-சிதை உணர்வு (death instinct) என்கிற இருமையாக பகுக்கிறார். இந்த இருமையில் உயிர்-வாழ் இயல்புணர்விற்கான அடிப்படை பாலியல் உணர்ச்சிகள்தான். இதுவே மனதின் அடிப்படை ஆதாரம் என்கிறார். இந்த ஆதாரத்தைக்கொண்டு பிராய்ட் மனதை மூன்றடுக்குகளாகப் பிரிக்கிறார். இவ்வடுக்கில் ஆழ்தளத்தில் ஒடுக்கப்பட்ட பாலியல் இச்சைகளின் ஆற்றலை இத் என்றார். இந்த இத் என்பது நினைவிலி எனப்படும் மனதின் ஆழ்தள அடுக்காகும். இதன்மீது ஈகோ எனப்படும் நினைவுமனம் நீரில் கிடக்கும் பனிக்கட்டிப் போல அமிழ்ந்தும் ஒரு பகுதி வெளியேவும் மிதக்கிறது. நீர்-பனிக்கட்டி உருவகத்தில் உள்ள மற்றொரு எண்ணம், நீர் குளிர்வில் திடமடைந்துதான் பனிக்கட்டியாகிறது என்பதால் மனதின் இந்த அடுக்குகள் சமூக-கலாச்சார குளிர்விப்பால் (பதங்கமாதலால்) திடமடைந்தவை என்பதே. ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் மனம் என்பது சலனமற்ற நீராக மாறிவிடும் என்பதே. இது ஒருவகை மனம் பற்றிய ஆன்மீகம்சார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஈகோ மிதப்பதால் கரையவும், அமிழவும் ஆன ஒரு உருவகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் இணையாக சூப்பர்-ஈகோ என்கிற பகுதி அமைகிறது. அதாவது இத் என்பது உயிர்த்தல் என்கிற இயல்புணர்ச்சி சார்ந்தது. அடிப்படை மன ஆற்றல் செறிந்த உயிர் வாழ்வின் பகுதி. ஈகோ என்பது சமூகத்தின் கலாச்சார வாழ்விலிருந்து பெற்ற ஆற்றலைக்கொண்டு இத்தை கட்டுப்படுத்தி வழிமுறைப்படுத்துவது. கலாச்சார மனித உருவாக்கத்தை செய்யும் தன்முனைப்பான பகுதி. நான் என்கிற சமூகத்தன்னிலையை உருவமைக்கும் பகுதி. சூப்பர் ஈகோ என்பது ஆளுமையை சமைக்கும் சமூக-அரசியல்-அதிகார வாழ்வின் பகுதி. சமூகத்தில் என்னவாக வாழவேண்டும் என்பதை உருவாக்கும் பகுதி. நல்லது/கெட்டது, நன்மை/தீமை போன்ற சமூக அறம் சார்ந்த மதீப்பிடுகளைக்கொண்ட பகுதி. இம்மூன்றில் மனதின் அடுக்குகளாக உள்ள நினைவிலியில் முழுக்க அமிழ்ந்துகிடப்பது இத். ஈகோ மற்றும் சூப்பர்ஈகோ என்பது நினவிலி மற்றும் நினைவுமுன் மற்றும் நினைவு அடுக்கில் உள்ளவை.

இத் ஒழுங்கமைக்கப்படாத இயல்புணர்ச்சிகளை இயக்குவது. ஈகோ யதார்த்த்திற்கு ஏற்ப ஒழுங்கமைக்கும் பணியை செய்கிறது. சூப்பர்ஈகோ ஆராய்க்கூடிய அறம்சார்ந்த பணியை செய்கிறது. இத்திற்கும் சூப்பர்ஈகோவிற்கும் இடையிலான முரண்பாடுகளை சமப்படுத்தி இயக்குவது ஈகோவின் பணி. மனசாட்சி என்று சொல்லப்படுவது சூப்பர்ஈகோவினால் இயக்கப்படுவதே. அதான் ஆசிரியன், மனதின் அதிகாரி. அதுதான் தந்தை. ஒவ்வொரு மனதிற்குள்ளும் வரையப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள தந்தை. தாய் என்கிற புராதன தன்மை கொண்ட இத் என்கிற ஒழுங்கற்ற ஆற்றலை வழிமுறைப்படுத்தி தனக்குக்கீழ் அடக்கி வைக்கும் தந்தை. இந்த தாய் தந்தையிடம் சிக்கிய மகன் இருவருக்கும் இடையில் நின்று மத்தியஸ்தம் செய்யும் பணியை செய்வது ஈகோ. இத்திற்கும் சூப்பர் ஈகோவிற்கும் இடையிலான போராட்டத்தை ஒழுங்கமைத்து வெளிப்படுவதே ஈகோ. பிராய்டின் இந்த வரைபட மாதிரியில் அவர் கண்டடைந்ததுதான் இடிபல் சிக்கல் எனப்படும் இடிபஸ் காம்பளக்ஸ்.

இடிபலாக்கமும் மனமும்

இத்-தின் அடிப்படையாக பிராய்ட் முன்வைத்தது இடிபல் சிக்கல் என வர்ணிக்கப்பட்ட தாய்மீதான் மோகம். ஒரு குழந்தை பிறந்தவுடன் தனது தாயை மோகிக்கிறது. இதனை பிராய்ட் வாய்வழி கட்டம் (ஓரல் பேஸ்) என்கிறார். உண்ணுதல் என்கிற உடலிற்கான ஆற்றலை பெரும் வாய் மற்றும் அதன் சுவைகள் உணரப்படுதல். வளரும் குழந்தை தனது உற்பத்தியாக வெளிப்படுத்தும் மலத்தினால் அடையும் இன்பம் என்பதை குதவழி கட்டம் (ஏனல் பேஸ்) என்கிறார். அதாவது கழிவு வெளியேறும் நிலையில் பெறும் அடக்குதலால் பெறும் இன்பம். அதன்பின் குழுந்தை லிங்ககட்டம் (பாலிக் பேஸ்) எனப்படும் பாலியல் இன்பக்கட்டத்தை அடைகிறது. அதாவது பாலியல்குறிகளின் வழி பெறும் இன்பம். இக்கட்டத்தில்தான் குழந்தையின் ஈகோ உருவாக்கம் நிகழ்கிறது. இக்கட்டத்தில் குழந்தை தாய்மீதான தனது மோகத்தை, தந்தையால் இழக்க வேண்டியதாக உணர்கிறது. இதனை காயடிப்பு சிக்கல் என்பார் பிராய்ட். வளரவளர தாயின்மீதான மோகம் என்பது தடைசெய்யப்பட்டதாக உள்ளதால், அதனை தனது ஆழ்மனதிற்குள் அடக்கிவிடுகிறது. இப்படி அடக்கப்பட்ட பாலுணர்ச்சி அதன் “இத்“-என்கிற ஆழ்மனதின் மையமாகிறது. இது பல பதிலீடுகள் வழியாக வெளிப்பாடு கொள்கிறது. ஒரு மனிதனின் மொத்த வாழ்விலும் இது ஆதிக்கம் செலுத்தி, நினைவற்ற நிலையில் செயல்பட்டு நினைவு செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், சிலவேளைகளில் கட்டுப்பட்டு வேறு வடிவில் வெளியேறவுமான இயக்கமாக உள்ளது. மனிதனின் அனைத்தையும் வடிவமைப்பது இந்த இடிபல் சிக்கல் என்கிற இத்தின் அடக்கப்பட்ட தாய்-மோக நனவிலி செயல்பாடுதான் என்பது பிராய்டியத்தின் மையமான சிந்தனை.

”டாடி-மம்மி-மீ” அதாவது ”தந்தை-தாய்-நான்” என்பதுதான் உலகப் புகழ்பெற்ற பிராய்டின் இடிபல் முக்கோணம். அதாவது நவீன குடும்ப முக்கோணத்தின் அடிப்படை சட்டகம்[1]. இந்த சட்டகம் உருவாகும் முறையியலையே இடிபலாக்கம் எனலாம். அதாவது ஒரு உடல் குடும்ப அமைப்பிற்குள் இருத்தப்படுவதே இடிபலாக்கம் எனலாம். இதனை முன்சொன்ன மனதின் ஒரு அடுக்கமைவு வரைபடமாக வாசிக்கலாம். தாய்-நனவிலி (இத்), தந்தை-நனவு மனம் (ஈகோ), நான்-பேரகம் (ஸுப்பர் ஈகோ)[2]. நானின் விதி மீறல் என்பதற்கான தடை “டாடி-மம்மி”. அல்லது நான் என்பது இந்த முக்கோணத்தில் சிக்கியுள்ள ஒரு உடலின் விருப்பாற்றல் எனலாம். சமூகம் என்கிற பொதுத்தளத்திற்குள் நவீன குடும்பம் என்கிற தனித்தளத்தை மறுசங்கேதப்படுத்திய கதைதான் இந்த இடிபலாக்கம். அதாவது கூட்டுக்குடும்பத்தை எல்லைநீக்கம் செய்துவிட்டு தனிக்குடும்பங்களை (நியுக்ளியர் குடும்பம்) எல்லைப்படுத்திய கதை. அல்லது தடைகள் வழி கட்டப்பட்டு சமூகம் பற்றிய வர்ணனை எனலாம். இவ்வர்ணனை வழியாக தடை உருவாக்கிய அமைப்பிற்குள், தடைமீறலும், தடைபடுத்தலுமான அதிகார விளையாட்டிற்கான களத்தை அமைத்தல். அக்களத்தில் உடல் என்பதற்கான மனதை கட்டமைத்தல். உடலெனும் சிறையில் நனவிலியை வைத்து, சமூக நனவுகள் வழியாக கண்காணித்தல். கார்டீசிய இருமை பிளவை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கான மனதை உருவமைத்தல். இதுதான் பிராய்டியம் என்கிற கருத்தாக்கத்தின் வளர்ந்தகதை வாழ்ந்தகதை வாழும்கதை மட்டுமல்ல வாழப்போகும் கதையுமாக உள்ளது.

தெகார்த்தால் மறுமலர்ச்சியடைந்த முப்பரிமாண நவீன உலகில் பிராய்டால் மறுகண்டுபிடிப்பு செய்யபட்டதே இந்த முக்கோணம். இடிபலாக்கம் தனித்த உடலின் விருப்பை நரம்புநோய்க்கொண்ட இந்த முக்கோணத்திற்கு நகர்த்தியதன் மூலம் நிறைவேறா வேட்கையாக மாற்றியது. அல்லது இம்முக்கோணத்திற்குள் வைத்து உடலின் பாலியல்-விருப்பாற்றலை வாசித்தது. பிராய்ட் ஆரம்ப நாட்களில் பல மன-நோயாளிகளை ஆய்வு செய்தபோது அவர்களது குழந்தை பாலுமை தவறாக கையாளப்பட்டதுவே காரணம் என்பதாக தனது கோட்பாட்டை நிறுவினார். இத்தகைய நோயாளிகளின் கதைகளை ஒரு அதிபுனைவாக (பேண்டஸியாக) நம்பத்துவங்கினார். இவை குழந்தை பாலுமையில் அடக்கப்பட்ட அல்லது பதுக்கப்பட்ட சுய-இன்ப நினைவின் வெளிப்பாடாக கருதினார். இதிலிருந்து நார்சிசம் என்கிற தற்காதல் மனநிலைபற்றிய கோட்பாடுகளை உருவாக்கினார். பிறகு பதுக்கப்பட்ட அல்லது அடக்கப்பட்ட தாய்மீதான பாலியல் மோகத்தின் விளைவாக வெளிப்பட்ட இடிபல் சிக்கலின் அதிபுனைவுகள் என்பதாக இதனை வளர்த்தெடுக்கிறார். இப்படி சுய-இன்பத்திலிருந்து இடிபலுக்கு நகர அவர் பின்பற்றியது கிரேக்க புராணக் கதையாடலை. இந்த முக்கோணத்தை புரிந்துகொள்ள அந்த கிரேக்க புராணத்தை வாசித்தறிவது அவசியம்.

(தொடரும்)

- ஜமாலன் 16-04-2011 jamalan.tamil@gmail.com

மந்திரச்சிமிழ் - (ஏப்ரல் 2011 மார்ச் 2012) – 7 இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை பகுதியாக பிரித்து வெளியிடப்படுகிறது.  புத்தகச்சந்தையில் தற்போது அன்னம் புத்தக நிலையத்தில் இவ்விதழ் கிடைக்கும். உள்ளடக்கத்தை கீழ்கணட் இணைப்பை கிளிக் செய்து பார்த்துகொள்ளலாம்.

http://issuu.com/jamalan/docs/contents


[1] குடும்பத்தை கட்டுப்படுத்த தடைசெய்ய வரையப்படும் சிவப்பு முக்கோணம் இதிலிருந்துதான் பெறப்பட்டிருக்கும் போலிருக்கிறது.

[2] இத், ஈகோ, சூப்பர்-ஈகோ என்பது பிராய்டு பயன்படுத்திய சொற்கள் அல்ல. அது அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டதே. பிராய்ட் ஜெர்மன் மொழியில் das Es," "das Ich," and "das Über-Ich" –என்ற சொற்களை முறையே ”the It," "the I," the "Over-I" (or "Upper-I"); பயன்படுத்தினார என்றும் அவரது ஜெர்மானிய மூலச்சொற்கள் சுயவிளக்கம் தரக்கூடியவையாக உள்ளதாகவும் ஜெர்மானிய வாசிப்பாள்கள் சொல்வதாக குறிப்பிடப்படுகிறது..