மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 1

நண்பர் நேசமித்திரனின் வலசை என்கிற இதழுக்காக திருநங்கைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை.  இதழ் அநேகமாக புத்தகக்கண்காட்சியில் வெளிவந்திருக்கலாம்.  மிக நீண்ட கட்டுரை என்பதால் அதன் ஒரு பகுதி இங்கு வெளியிடப்படுகிறது.

பாலினப் பிரிவு தற்கால பண்பாட்டிற்குள் உள்ள “மனிதமாகியதனியர்களின் பகுதியாக உள்ளது; அதனால், யார் தங்களது பாலின உரிமையை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைகிறார்களோ அவர்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுகிறார்கள். ஏனெனில், பாலினம் எந்த “சாரத்“-தையும் வெளிப்படுத்துவதும் அல்லது புறநிலைப்படுத்துவதும்மில்லை, எந்த ஒரு ஆதர்ச லட்சியத்திற்காக ஏங்குவதுமில்லை; ஏனெனில் பாலினம் என்பது ஒரு உண்மை அல்ல, பல்வேறுவிதமான பாலின நடவடிக்கைகள் பாலினம் என்ற கருத்தை படைக்கின்றன, இந்த நடவடிக்கைகள் இல்லாமல், பாலினம் என்கிற ஒன்றே இல்லை. பாலினம் என்பது ஒரு கட்டமைப்பு அது தொடர்ந்து தனது தோற்ற மூலத்தை மறைத்தபடியே உள்ளது.” - ஜீதித் பட்லர்[1]

Portrait+of+a+reputed+hermaphrodite+%2528Hijra%2529+and+companions+-+Eastern+Bengal+1860%2527s

Portrait of a reputed hermaphrodite (Hijra) and companions - Eastern Bengal 1860's. Hermaphrodites, also known today in South Asia as 'hijra', are often followers of the Hindu goddess Bahuchara Mata.
Source: British Library (bl.uk)

கண்ணம்மா என்கிற சொல்லிலிருந்து இதனை துவங்கலாம். கண்ணம்மா என்பது மஹாகவி பாரதியால் பரவலாக்கப்பட்ட ஒரு சொல். அதற்குமுன்பு அச்சொல் இருந்திருக்கலாம். ஆனால் பாரதிக்குபின்தான் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. பாரதி தமிழ் மொழிக்குள், தமிழ் உடலுக்குள் பாய்ச்சிய பல ஆற்றல்களில் ஒன்று. அதனுள் காதல், அனுக்கம், நேசம், நட்பு, அன்பு என உணர்வீர்ப்பான சொற்களின் பொருள் அடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எனக்கோ இச்சொல் இளம் வயதில் என்னை பயமுறுத்திய ஒரு திருநம்பியை குறிக்கும் சொல். அவரை அன்று வழங்கிய “அலி“ “ஒம்பது” போன்ற சொற்களால்கூட சொல்ல அஞ்சுவோம். அவர் பற்றிய பல கதைகள் காற்றில் பரவிக்கொண்டிருக்கும் அதை “மித்“ என்றுதான் சொல்லவேண்டும்.

அவரை எங்கள் ஊரில் குறிப்பாக எங்கள் தெருவில் அனைவருக்கும் தெரியும். எனது கிராமத்தில் பிளஸ்-டு இல்லை என்பதால் எங்கள் ஊரிலிருந்து 3 கி.மி. தூரத்தில் இருந்த ஊரில்தான் பெரும்பாலவனவர்கள் படித்தோம். காலையிலும், மாலையிலும் கருங்கல்சாலையில் நடைதான். பேருந்து கிடையாது. சாலையின் இருமருங்கிலும் தோட்டங்கள், வயல்கள். மாணவர்கள், மாணவிகள் என கும்பல் கும்பலாக போவோம். எங்கள் தெருமுடியும் பள்ளிவாசலுக்கு பின்புற சாலையில் நடந்தால் குளம், அதன்பின் பத்ரகாளி கோவில், அதைதாண்டினால் கிறித்தவர்களின் இடுகாடு, அப்புறும் இருபுறமும் நஞ்சை வயல்கள் முடிந்து வரும் புஞ்சைமேடு. அதில் வேலி அடைக்கப்பட்ட ஒரு பெரிய தோட்டம். அதன் நடுவில் ஒரு குடிசை. அக்குடிசைதான் கண்ணம்மாவின் வீடு. அந்த வீட்டிலிருந்து கால் கி.மீ. நடந்தால் ரயில்வே கேட் அதன்பின் ஒரு சின்ன ஊர் அதை தாண்டினால் எங்கள் பள்ளி. இரவில் எந்த வெளிச்சமும் இல்லாமல் இருண்டு கிடக்கும் அந்த சாலையில், தன்னந்தனியாக அந்த குடிசையில் வாழ்ந்தவர்தான் கண்ணம்மா.

நல்ல உயரமான, திரளான தொள்களை உடைய, எப்போதும் மடித்து கட்டிய வேட்டி, கைவைத்த பனியன், தலையில் முண்டாசு, அதற்குள் அவரது கூந்தல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும், ஆணாக தோற்றம் தரும் ஆணுடைக்குள் ஒரு பெண். வயது அப்போதே 50 முதல் 60க்குள் இருக்கலாம். நாங்கள் அந்த வயலை தாண்டியவுடன் தயராகிவிடுவோம். அவரது தோட்டம் முடிந்து ரயில்வே கேட்டை அடையும் வரை திரும்பிகூட பார்க்காமல் ஒரே ஓட்டம். அந்த கண்ணம்மா ஒரு கொலைகாரர், முரடர், பிள்ளை பிடிப்பவர் இப்படியாக பல ”பூச்சாண்டி” பயங்கள்தான் காரணம். நான் ரகசியமாக அவரை அவர் அறியாமல் சிலமுறை பார்த்து உள்ளேன். தடை செய்வதை அறிவது மனதின் ஒரு அடிப்படை இயக்கம்தானே. இத்தனைக்கும் எனது தாத்தாவிற்கு அவரை நன்றாகத் தெரியும். ஒருமுறை எனது தாத்தாவை பார்க்க வீட்டிற்குகூட வந்தார். அப்போ அவரை வீட்டிற்குள்ளிருந்து எட்டி எட்டி பார்த்தோம் நாங்கள். ஆனாலும், அவர் ஒரு பெண் ஏதோ ஒரு காரணம் பொருட்டு ஆணாக இருக்கிறார். தனியாக அந்த இருள் அடர்ந்த பகுதியில் என்பது மட்டும் தெரியும்.

அப்போது பாரதி கவிதைகளை படித்து காற்று வெளியடை கண்ணம்மாக்களை (பன்மைதான், காரணம் ஒரு கண்ணம்மாவை வெளியூரில் வைத்துக்கொண்டு பள்ளியில் மற்றொன்று தேடுவதால்) தேடிக்கொண்டிருந்த காலகட்டம். இடைக்கிடை இந்த கண்ணம்மா பயம்வேறு. அவர் கையில் எப்போதும் ஒரு ஆயுதத்துடன்தான் இருப்பார். இடுப்பில் திருக்கைவால் கட்டியிருப்பார். பிச்சுவா எனப்படும் கத்தி வைத்திருப்பார். பல பஞ்சாயத்துகளையும் தீர்த்துவைப்பார். களவாடுவார். கள்ளுகுடிப்பார். இப்படி பலநூறு கதைகள். சிலநேரங்களில் இளைஞர்கள் வயதானவர்கள் அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து அவருடன பேசுவதைக் கேட்டிருக்கிறேன். எப்போதும் தனது தோட்டத்தில் எதாவது வேலைகள் செய்து கொண்டிருப்பார். ஒருமுறை நாங்கள் ஓடியதை பார்த்து, “ஏம்பா இப்படி ஓடுகிறீர்கள், இங்க வாங்க மாங்காய் தருகிறேன்“ என்று கூப்பிட்டு உள்ளார். ஒருமுறைகூட எங்களை அவர் மிரட்டியதில்லை. ஆனால் அவர்பற்றிய பயம் போனதே இல்லை. ஊரில் குழந்தைகளை பயமுறுத்த கண்ணம்மாவிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று அம்மாக்கள் மிரட்டுவது உண்டு. பலவருடங்கள் கழித்து நான் திரும்ப ஊருக்கு போனபோது கண்ணம்மா இறந்துவிட்டதாக சொன்னார்கள். அந்த வீடு சிதிலமடைந்துவிட்டிருந்தது. தோட்டம் வெறிச்சோடி இருந்தது. வேறுயாரோ அவரது உறவினர்கள் அதை வைத்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் 25 ஆண்டுகள் கழித்து இதை எழுதும்போதும் எனக்கு அவரது அந்த வெள்ளை உடையுடன் தனது நீண்ட கூந்தலின் கொண்டையை மறைக்கும் முண்டாசுடன் கற்பு, கன்னிமை, வீரம், அச்சம் தருதல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் புராதனத்தாய்போன்று ஒருவித உக்கிரமும், சாந்தமும் கலந்த முகத்துடன் தோற்றம் தருகிறார்.

இன்று அவரது அந்த தனிமையின் காரணம் புரிகிறது. அது ஒரு சமூக புறக்கணிப்பு. பெண் ஆணாக மாறி வாழும் வேட்கையால் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கலாம்[2]. ஒரு பெண்ணாக தனிமையில் வாழ ஆணுடை தரித்து ஆணாக மாறி வெளிப்பாடு கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வீரமும் துணிச்சலும், அந்த பகுதியில் ஒரு அச்சத்தை உருவாக்கி இருந்தது உண்மை. புறக்கணிப்பின் துயரமே அவரிடம் வீரமாக மாறிவிட்டது. சமூகம் ஏற்படுத்திய அச்சத்தை, அதற்கு எதிராக பாவித்தார் போலிருக்கிறது.

எங்கள் தெருவில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் எனது தூரத்து உறவினர். மற்றொருவர் தெருவில் உள்ளவர். இருவரும் ஆண்கள்தான். இஸ்லாமியர்கள். ஊர் ஜமாத்தை[3] சேர்ந்தவர்கள். அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ஆனால், இருவரும் பெண்மையாக அல்லது பெண்பாலினமாக அறியப்பட்ட பாவனைகளைக் கொண்டவர்கள். இன்றுவரை அப்படித்தான் உள்ளனர். சென்றமாதம் அவரை சந்தித்தபோதுகூட, அவர் வந்து ”மச்சான், மச்சான்” என்று அதே பெண்மை நாடகத்தின் நளினத்துடன்தான் பேசிவிட்டு போனார். பேச்சில் பேண் குரல், நளினம், நடை, எல்லாம் பெண்மையின் நிகழ்த்துதலாகவே அவர்களிடம் உள்ளது. ஊரில் தனித்தன்மை கொண்ட அவர்கள் இருவரும், கொஞ்சகாலம் ஒன்றாக திரிந்தார்கள். ஆனால் அவரவர் குடும்பத்தில்தான் இருந்தனர். ஆண்கள் அனைவரையும் மச்சான் என்று விளிப்பார்கள். இளைஞர்கள் அவர்களிடம் வம்பளந்தால், நடுவீதியில் அவர்களது குறிகளைப் பிடிக்க முயல்வார்கள். வெட்கம் கெட்டவர்கள் என்று மற்றவர்கள் அவர்களை வசைபாடுவார்கள். அவர்களுக்கு பிற ஆண்கள் மீது ஈர்ப்பு இருந்ததே காரணம். பெண்களுடன் அதிகம் புழங்கமாட்டார்கள். ஆனால் உடைகள் மற்றவை எல்லாம் ஆண்களுக்கானவைதான். மாற்றுப்பால் உணர்வை உள்ளுக்குள் கொண்ட வெளித்தோற்றத்தில் ஆண்பாலாக உள்ளவர்கள். இவர்களது பிரச்சனை உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? என்பது புரியாத புதிர். இன்றுவரை அது புரியாத புதிராகவே வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிரை மருத்துவத்துறை சொல்லாடல்கள்தான் உருவாக்கி, அதற்கு கீழ்கண்டவாறு விதிமுறைகளையும் உருவாக்கி உள்ளன. அதாவது, இருபாலுமைக்கொண்டவர்களை (intersexuality) சரியான மனமும், தவறான/குழப்பமான உடலும் கொண்டவர்களாக கருதி, உடல்ரீதியான பிரச்சனை உரியவர்களாகவும், மாறியப்பாலினத்தை (transsexuality) சேர்ந்தவர்கள், குழப்பமான/தவறான மனமும், சரியான உடலும் கொண்டவர்களாக கருதி மனம்ரீதியான பிரச்சனைக்கு உரியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். நவீன மருத்துவத்துறை, இவர்களது உடல்களை மாற்றுப்பாலின அறுவைச்சிகிச்சைகள் மூலம் இரு-பாலின உடலமைப்பிற்குள் ஒழுங்கமைக்க முயல்கிறது.

இவ்வாறு, இன்றைய பாலின உடல்கள் மருத்துவ-உடல்களாக (medicalized body) கட்டப்பட்டது. அதாவது உடல்பற்றிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உயிர்மருத்துவம் உருவாக்கிய உடல்[4]. இது நமது மூதாதைகளிடம் இருந்த, அல்லது அவர்களது உடலாக இருந்த, உடலல்ல. நவீனத்துவம் உருவாக்கிய மருத்துவ உடல். உலகின் மருந்து நிறுவனங்களிற்க்கான நுகர்வு உடல். மாற்றுப்பாலுணர்வு கொண்டவர்களை நோயாளிகளாக, மருத்துவத்தால் குணப்படுத்த வேண்டியவர்களாக கருதப்படுவது இதனால்தான். இது மேற்கத்திய பண்பாடு உருவாக்கிய உடல்-மருத்துவ-விதியாகும். உடல் ஒரு பாலுமையாக, பாலினமாக கட்டப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து விலகியவர்களை நோயாளிகளாக காணும் போக்கு உருவாகுகிறது. பாலியல் சிறுபான்மையாக உள்ள இத்தகையவர்களை பெரும்பான்மை பாலியலுக்குள் கட்டுப்படுத்தும் போக்கும் சரிசெய்யும் போக்கும் நிலவுகிறது. இவர்களை கோணல்கள் (queer) என்றும், எதிர்பாலின-வேட்கை கொண்டவர்களை நேராளர் (straight) என்றும் வகைப்படுத்தும் போக்கு உருவாகுகிறது. இந்த வகைப்பாட்டிற்குள், லெஸ்பியன், கே எனப்படும் தன்பால் புணர்ச்சியாளர்கள், டிரான்ஸ்செக்ஸவல் எனப்படும் மாற்றப்பாலுணர்வாளர்கள், டிரான்ஸ்ஜென்டர் எனப்படும் மாறியபாலினத்தார், எல்லோரையும் அடக்குகிறார்கள். மாறியப்பாலினத்தார்[5] பற்றிய இந்த உரையாடலில் இந்த புதிரின் அரசியலை விளங்கிக்கொள்ள முயலலாம். அதற்கு முன்பாக நான் பார்த்த மற்றொரு நிகழ்வையும் விவரித்துவிடலாம்.

(தொடரும்)

-ஜமாலன் jamalan.tamil@gmail.com (23-10-2011 - 25-11-2011)


[1] ”Discrete genders are part of what “humanizes” individuals within contemporary culture; indeed, those who fail to do their gender right are regularly punished. Because there is neither an “essence” that gender expresses or externalizes nor an objective ideal to which gender aspires; because gender is not a fact, the various acts of gender create the idea of gender, and without those acts, there would be no gender at all. Gender is, thus, a construction that regularly conceals its genesis.” - Judith Butler, “Performative Acts and Gender Constitution: An Essay in Phenomenology and Feminist Theory” (1988)

[2] மகராசன் என்பவரால் தொகுக்கப்பட்ட ”அரவாணிகள் உடலியல் உளவியல் வாழ்வியல்” தோழமை வெளியீடு 2007 என்கிற நூலில் அரவாணிகள் பற்றிய பல தகவல்கள் உள்ளன. அவர்களது உடலியல், அறிவியல், உளவியல் பற்றிய இந்தியா சார்ந்த தொன்மங்கள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்வியல், சடங்குகள், இலக்கியங்கள் வரை தொகுக்கப்பட்டு உள்ளது என்பதால் அவற்றை தவிர்த்த வேறு ஒரு தளத்தில், கோணத்தில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. தொகுப்பு என்பதால் அந்நூலில்கூட கூறியதுகூறலாக பலரும் அரவாணிகள் பற்றிய வரலாற்று, தொன்ம, வாழ்வியல் குறிப்புகளை கூறுகிறார்கள். எல்லோரும் அரவாணிகள் பற்றிய வரலாற்றை அரவாண் பலியிலிருந்தே துவங்குகிறார்கள் அதில்.

[3] ஜமாத் என்கிற அரபிச் சொல், சமூகக் குழுவாக வாழ்வதை குறிப்பதாகும். இஸ்லாமியர்களது குழு அமைப்பை குறிக்கும் சொல். மாறியப்பாலினத்தை சேர்தவர்களும் ஜமாத்தாகத்தான் வாழ்கிறார்கள். அவர்களது குழுவாழ்வை குறிப்பதும் இந்த ஜமாத் என்கிற சொல்தான். வடஇந்திய இஸ்லாமிய சமூகம் இவர்களை அரவணைத்ததால் இந்த சொல் வந்திருக்கலாம். இக்குழுவினர் பயன்படுத்தும் பல சொற்கள் அரபு-உருதுச் சொற்கள். ஓரமைவாக்க இஸ்லாமிய அடிப்படைவாதம் இவர்களை நிராகரிக்கிறது என்பதையும், சவுதி அராபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கடுமையான தண்டனைகளை இவர்களுக்கு எதிராக சட்டமாக்கி வைத்து உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

[4] பக்-218 Encyclopedia of Sex and Gender – Men and Women in the World’s Culture – edited by Carol R. Ember and Melviln Ember - ©2003 Kluwer Academic/Plenum Publishers,New York “நீரின்றி அமையா உலகு“ என்பதைப்போல “மருந்தின்றி வாழா உடல்“ என்ற நிலை உருவாகி உள்ளது.

[5] Transgender எனப்படும் ஆங்கிலச்சொல்லையே இங்கு மாறியப்பாலினத்தார் என்றும், Transsexual என்பதை மாறியப்பாலுணர்வாளர் என்ற சொல்லாலும் குறிக்கிறேன். Gender என்பது பாலினம் என்ற சொல்லாம், Sex பாலுமை என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது.

5 comments:

Rathnavel சொன்னது…

அருமையான, பயனுள்ள பதிவு.
நன்றி ஐயா.

Rathnavel சொன்னது…

உங்களது கட்டுரையை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் / Gnanasekaran.M சொன்னது…

தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. அடுத்தடுத்த தோடர்களைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

நன்றி ரதன்வேல். உங்கள் வாசிப்பிற்கும் பகிர்விற்கும்

ஜமாலன் சொன்னது…

நன்றி எம். ஞானசேகரன் தொடர்ந்து வெளிவரும். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.