வெளிவர உள்ள அடவி என்கிற இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. அநேகமாக நாளை அது புத்தகக் கண்காட்சியில் கிடைக்கலாம். இங்கு பகுதியாக வெளியிடப்படுகிறது.
”உண்மைக்கு மாபெரும் எதிரியாக இருப்பது -வேண்டுமென்றே திட்டமிட்ட நேர்மையற்ற - பொய் அல்ல ஆனால் -தொடர்ந்த போலியான மற்றும் யதார்த்தமற்ற- ஒரு புராணம்”[1]. – ஜான் எப். கென்னடி.
காட்சி:1. ஒரு கண்ணாடி சரிசெய்பவனும் அவனால் வளர்க்கப்படும் ஒரு அனாதை சிறுவனும் சாலையில் நடந்து வருகிறார்கள். சிறுவன் ஒரு குறிப்பிட்ட தெருவிற்குள் போய் தனது கால்சராயில் வைத்து உள்ள கற்களால் கண்ணில்படும் முதல் வீட்டின் சன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடிவிடுகிறான். கண்ணாடி உடைந்தவுடன் வீட்டுக்காரப் பெண்மணி வந்து இப்படி ஆகிவிட்டதே என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். அச்சமயத்தில் உடைந்த கண்ணாடிகளை சரிபார்ப்பவன் அவ்வழியாக வந்து அந்த கண்ணாடியை பேரம்பேசி சரி செய்து கொடுக்கிறான். இது 1921–ல் சார்லி சாப்ளினால் எடுக்கப்பட்ட “த கிட்ஸ்“ படத்தின் ஒரு காட்சி. இரண்டு பேரும் அனாதைகள், வருமானத்திற்காக இப்படி செய்வதாகக் காட்டப்படும் ஒரு காட்சி இது.
கதை:1. செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட ஒரு தீவில் தனது நிறுவனத்தை துவக்கினால் எப்படி இருக்கும் என ஆராய இரண்டு நபர்களை தனித்தனியாக அனுப்புகிறது. ஆராய்ச்சி முடிந்தபின் ஒருவன் சொன்னான் அந்த தீவில் யாரும் செருப்பு அணிவதில்லை அதனால், அங்கு செருப்பு தயாரிப்பு நிறுவனம் துவங்குவது புத்திசாலித்தனம் இல்லை என்று. ஆனால், மற்றொருவன் சொன்னான் அந்த தீவுதான் செருப்பு தயாரிக்கும் நிறுவனம் துவக்க சரியான இடம். அங்கு யாருமே செருப்பு போடவில்லை. நாம் செய்யவேண்டியது, செருப்பு போடும் கலாச்சாரத்தை அவர்களிடம் பிரச்சாரம் செய்து உருவாக்குவதுதான். அப்படி ஒரு கலாச்சாரம் உருவாகிவிட்டால் செருப்பு வியாபாரம் நன்றாக நடக்கும். நிறுவனத்திற்கும் கொள்ளை லாபம் என்றான்.
காட்சி -1
காட்சி-1 ல் உள்ளபடிதான் ‘தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் அமெரிக்கா ஈராக், ஆப்கானில் ஒரு யுத்தத்தை நிகழ்த்தியது. கிட்ஸ் படத்தில் வரும் அந்த சிறுவனின் பணியைப் போல அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும், ஐக்கிய நாட்டு சபை அனுமதியுடன் ஈராக், ஆப்கான் யுத்தத்தை நடத்தின. யுத்தம் நடப்பதற்கு முன்பே மறுநிர்மாணம் என்ற பெயரில் பெரும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தங்களை தயாரித்துக் கொண்டு களமிறங்கின. 1997-ல் உருவாக்கப்பட்ட புதிய அமெரிக்க சகாப்தம் (Project for the New American Century (PNAC)) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க தாராளவாத ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தி எதேச்சதிகார ஆட்சிகளை தூக்கி எறிவதற்காக ஈராக், சவுதி அரேபியா, சிரியா, பாலஸ்தீன் போன்ற இலக்குகளை தீர்மானித்து தங்கள் செயல்திட்டத்தை துவங்கினார்கள். உண்மையில் 9/11 அதன் பிறகே நடந்தது. அந்த நிகழ்விற்கு முன்பாகவே அந்த நிகழ்விற்கான போக்கை உருவாக்கியது சர்வதேச அமைப்புகளும், அமெரிக்காவும். பால் கிரேக் அறிக்கையின்படி அமெரிக்காவின் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்பது உண்மையில் ஹாலிபர்டன், பெக்டல் போன்ற முதலாண்மை நிறுவனங்களின் எண்ணை மற்றும் எரிவாயு தொழிலுக்காகவே நடத்தப்பட்டது. 2003 மார்ச்சில் ஈராக்கிற்கு படைகளை அனுப்புவதற்கு முன்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலராக இருந்த ராம்ஸ்பெல்ட் உலகின் மிகப்பெரும் எண்ணை நிறுவனமான ஹாலிபர்டன் நிறுவனத்திடம் 7 பில்லியனுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு என்கிற ஒன்றே இல்லை என்பதும், அது ஆப்கானில் சோவியத்தை வீழ்த்த உருவாக்கப்பட்ட முஜாஹீதீன்கள் அமைப்பிற்கான ஒரு “தகவல்தொகுப்பாக” (database) அமெரிக்க வெளி உறவுக்கொள்கையை அமல்படுத்தவென அமெரிக்க உளவுநிறுவனம் மற்றும் அதன் துனை அமைப்புகளான சர்வதேச உளவு நிறுவனங்கள் உள்ளிட்ட வலைப்பின்னலில், பனிப்போருக்கும், பனிப்போருக்குப் பிறகான “புதிய உலக ஒழுங்கு” என்பதை நிலைநிறுத்தவும் உருவாக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஓர் இஸ்லாமிய படையோ அல்லது பயங்கரவாத குழுவோ இல்லை. அது பொதுமக்களை நம்ப வைப்பதற்காக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு “பேய்”. அது தொலைகாட்சி பார்வையாளர்கள் பயங்காரவாதத்திற்கு எதிரான போரின் தலைமையை ஏற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒன்று. அதை நடத்தியது அமெரிக்க மற்றும் அமெரிக்க சார்புநாடுகளின் பணவெறிகொண்ட ஆர்வலர்கள் என்கிறது குளோபல் ரிசர்ச் என்கிற வலைதளம். (The Imperial Anatomy of Al-Qaeda. The CIA’s Drug-Running Terrorists and the “Arc of Crisis” Part I by Andrew Gavin Marshall - http://globalresearch.ca/index.php?context=va&aid=20907) மேலும் சர்வதேச போதைப்பொருள் வலைப்பின்னல் அரசியலுடன் இது தொடர்புகொண்டுள்ளதையும், அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உளவு நிறுவனங்கள் உருவாக்கிய ஸபாரி கிளப் (The Safari Club) என்பதே இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு பின்புலமாக செயல்பட்டதை விவரிக்கிறது இக்கட்டுரை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்த காரணமாக அமைந்த இரட்டைக்கோபுர தாக்குதல் நிகழ்த்துவதற்கான நிதி ஆதாரம் எப்படி அவர்களுக்கு வந்தது என்பதை பற்றி உளவுத்துறை எதையும் அறிவிக்கவில்லை. இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது அமெரிக்க உலகத்தலைமையை நிலைநாட்ட நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பதும், அதற்கு காரணமாக அமைந்தது இந்தத் தாக்குதல் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சோவியத் பனிப்போருக்கு பிறகு அமெரிக்கா தன்னை உலகத் தலைமையாக நிறுவிக்கொள்ள நிகழ்த்தப்பட்டதே வளைகுடா யுத்தம். இந்த யுத்தத்திற்கு காரணமாக சொல்லப்பட்ட சதாம் உசேன், ஈரானிற்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர் என்பதும் வளைகுடா யுத்தம் எண்ணைக்காக நடத்தப்பட்ட போர் என்பதும் உலகறிந்த உண்மை.
ஆனால், அது உலகில் பேரரசு தனது எதிரியை அமைப்பாக்கம் செய்த ஒரு யுத்தம். தனது எதிரியை பலம் மிக்கவனாகக் காட்டி, அவனைவிட தனது பலத்தை அதிகமாகக் காட்டிய ஒரு நாடகம் அது. அமெரிக்க மற்றும் உலக மக்கள் மனதில் ஒரு பயத்தை உருவாக்கவே தீவிரவாதம் பற்றிய சொல்லாடல்கள், காட்சிகள், கதையாடல்கள் பெருக்கப்பட்டன. உண்மையில் மக்கள் வறுமையால், அதுவும் பேரரசுகளின் ஆசைக்கனவுகளால் ஏற்பட்ட வறுமையால், பஞ்சத்தால், பட்டினியால் பசி, ஏழ்மை, இல்லாமை என கண்ணிற்கு தெரியாத அதிகாரத்தின் வெடிகுண்டுகளால் கொத்து கொத்தாக சாகடிக்கப்படுகிறார்கள். ஆனால், தீவிரவாதத்தால் கொல்லப்படும் மக்களையே வண்ண வண்ணமாகக் காட்சிப்படுத்துவதன்மூலம் ஒரு நிச்சயமற்ற வாழ்வுபற்றிய பயத்தை உருவாக்குகிறார்கள். பேரரசு தனக்கு எதிராக இப்போது நாடுகளை உருவாக்காமல், உலக-தீவிரவாதம் என்கிற கண்ணிற்கு தெரியாத கருத்தியல்சார் எதிரிகளை உருவாக்கிக்கொண்டு உள்ளது. உலகமயமாதல் வழியாக தனது அதிகாரத்தையும், உலக-தீவிரவாதத்தை எதிரியாக சித்திரித்து எதிர்-இருப்பையும் கொண்டு தன்னை தகவமைத்துக்கொண்டு உள்ளது. தீவிரவாதத்தையும், ஜனநாயகத்தைப்போல உலகமயமாக்கிவிட்டது.
(தொடரும்)
- ஜமாலன் (jamalan.tamil@gmail.com) 16/12/2011
[1]“The greatest enemy of the truth is not the lie – deliberate, contrived, and dishonest – but the myth – persistent, pervasive, and unrealistic.” - John F. Kennedy




0 comments:
கருத்துரையிடுக