”தாயின் மீது காதலும், தந்தைமீது பொறாமையும் என்னிடம் நிலைத்திருப்பதை கண்டேன். இப்போது இதனை குழந்தைமையின் அகில உலக நிகழ்வாக கருதுகிறேன்.” - சிக்மண்ட் பிராய்ட்
அறிமுகம்
மனிதஉடல் சமூகவயமாகியபின் தன்னை மையமாக வைத்து சிந்திக்கத் துவங்கியது. மறுதலையாக சமூகவயம் என்பது மனிதஉடலை மையமாக வைத்து சிந்திப்பதில் துவங்குகிறது. இப்படி சிந்திப்பதற்கு உயர்வகை பாலூட்டி என்கிற உயிரியல் பரிணாம வளர்ச்சி ஒரு காரணம். இவ்வளர்ச்சியை இயற்கை
தேர்வு என்கிறார் டார்வின். சிந்தனை என்கிற மனித-வரலாற்று கதையாடலால் இயற்கை தேர்ந்தெடுத்த மனிதஉடல், இயற்கையை தேர்வதாக மாறியது. இக்கதையாடலால் இயற்கையை புறமாக்கி தன்னை அகமாக்கிக் கொண்டது. இதற்கான முறையியலாக, புறஉலகையும், அகஉலகையும் புரிந்துகொள்வதற்கான அறிதலாக உருவாக்கிய கருத்தாக்கங்கள்தான் தத்துவங்கள்[2] என்று அறியப்படுகிறது. தத்துவத்தின் பேசுபொருளாக கருதப்பட்டு வந்த உள்-வெளி அகநிலை-புறநிலை, அகம்-புறம், சிந்தனை-வாழ்நிலை, மனம்-உடல், என்பதான இருமைக் கருத்தாக்கங்களில் ஒருகூறான உள்-அகநிலை-அகம்-சிந்தனை-மனம் ஆகியவற்றினை ஆராய்ந்து பார்க்க முனைவதே இங்கு எழுத்தாகிறது. அகநிலை அகமாகி, மனமாகி வரலாற்றில் வளர்ந்து சிந்தனையை வந்துடைந்துள்ள கதைதான் அது. அகத்தின் செயல் சிந்தனையாக வர்ணிக்கப்பட்டது தெகார்த்தால். அகநிலை புறநிலை என்கிற இருமையை உருவாக்கிய கார்டீசியத்தில் சிந்தித்தல் என்பதே மனம் என்பதற்கான சிறப்புக்கூறாக முன்வைக்கப்பட்டது. அகநிலை பொருண்மையற்றது என்பதையும், அதன் இருப்பை அறிய சிந்திக்கும் செயலையும் முதன்மைப்படுத்தியது. ஒரு உடலின் “சிந்திக்கும் பொருளே“ மனம் என்றது. மனம் என்ற ஒன்றை எப்படி புரிந்துகொள்வது? அதற்கான வரையறை என்ன? அதற்கான வரைபடம் என்ன? மனம் என்கிற ஒன்று உண்டா? எங்கு உள்ளது? அதன் செயல் என்ன? இப்படி அடுக்காக கேள்விகளை எழுப்புவது நமக்குள் எது? அதுதான் மனமா என்பதும் இத்துடன் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
மனம் என்றால் என்ன?
சிந்திக்கும் பொருளான மனதை புரிந்துகொள்ள சிந்தனை என்றால் என்ன? என்பதில் இவ்விசாரணையை துவக்கலாம். சிந்தனை என்பது மனித உடலின் உள்ளே அதாவது அகத்திற்குள் நடக்கும் ஒரு செயல். இதனை அகத்திற்குள் செய்வது எது? அகம் என்பது ஒரு உடலின் உள்ளார்ந்த பகுதி அல்லது உள்ளமைந்துள்ள வெளி எனப்படுகிறது. ஒரு உடலை தோல் என்கிற எல்லைக்கொண்டு அகம், புறம் என்று பிரிக்கப்படுவதாக கொள்ளலாம். அதாவது ஒரு உடலுக்கு அதாவது உடலின் எல்லையாக உணரப்பட்டுள்ள தோலிற்கு வெளியே உள்ளவற்றை புறம் என்பதாகவும், தோலிற்கு உள்ளே நிகழ்பவை அகம் என்பதாகவும் கொள்ளலாம். ஆனால், அகம் உடலின் உள்ளே உள்ள ஒரு உருப்பா? இடமா? செயலா? மொழியா? என்பது குறித்து பல கருத்தாக்கங்கள் விவாதத்தில் உள்ளன. பொதுவாக, அகம் உடலின் உள்ளார்ந்துள்ள ஒன்று என்பதில் மாறுபாடு இல்லை. இப்படி உள்ளார்ந்த அகத்தை எப்படி உணர்வது? இக்கேள்வியே சிக்கலானது. காரணம் உணர்தல் என்பதும் அகத்தின் ஒரு பகுதிதான் எனும்போது, அகத்தை உணரவே அகம் தேவைப்படுகிறது. ‘நானை‘ உணர ஒரு ‘நான்‘ தேவைப்படுகிறது. ”நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்” என்கிற புகழ்பெற்ற தெகார்த்தின் கூற்றில், உள்ள முதல்சிக்கல், சிந்திப்பதற்கு முன் அல்லது சிந்திப்பதற்கு என ஒரு நான் வேண்டும் என்பதால், நான் சிந்திக்கிறேனா, அல்லது சிந்திப்பதுதான் நானா? என்ற முரண்பாடு வந்துவிடுகிறது. ஆனால், தெகார்த்தின் சிந்தனையில் ‘நான்‘தான் அகத்தின் மையம் என்பதாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு உடலின் அகம் என்பது அதன் ‘நான்‘தான் எனும்போது, அகம் என்கிற நானை உணரும் ஒரு பொறியை மனம் என்பதாக கார்டீசியம் முன்வைக்கிறது எனலாம். அல்லது நானாகிய மனமே அகம் எனப்படுகிறது என்று மாற்றி சொல்லலாம்.
அகமாகிய மனம் ஒரு உடலினை இயக்கக்கூடிய, புறத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய, உடலின் செயல்-எதிர்ச்செயல்களால் மாறிக்கொண்டிருக்கிற, புற உலகை அறியக்கூடிய, உடலின் உணர்வு, அறிவு, தியானம் என்கிற செயல்களை செய்யக்கூடிய உடலின் உள்ளார்ந்துள்ள ஒரு இயக்கி என்பதாக வரையுறுத்துக் கொள்ளலாம். சமூக-கலாச்சாரத்துடன் ஒரு உடலை அடையாளப்படுத்தும் நானாகவும், சுய இயக்கம் கொள்ளும்போது சிந்தனையாகவும், விசாரத்தில் ஈடுபடும்போது சுயமாகவும், சஞ்சாரத்தில் ஈடுபடும்போது ஆத்மாவாகவும் பல பாத்திரங்களாக ஏற்றி சொல்லப்பட்டுள்ளது. பண்டைய மதங்கள் துவங்கி இந்த அகநிலை என்பது குறித்த வாதவிவாதங்கள் நடந்துகொண்டே உள்ளன. இது ஒருவிதமான கடந்துசெல்லும் தத்துவங்களால் அப்பாலை கருத்தியலாக விளக்கப்பட்டு வந்துள்ளது. தெகார்த் இந்த பண்டைய கருத்துருவங்களின் மேல் தனது தத்துவக்கருவியான சந்தேகம் என்பதைக்கொண்டு அகநிலை என்பதை சிந்தனையாகவும், மனம் என்பதை சிந்திக்கும பொருளாகவும் அதாவது மூளையின் ஒரு பகுதியாகவும் முன்வைத்தார். மூளை பிரக்ஞை என்கிற ஒன்றுடன் சேர்வதால் மனமாகிறது என்பதே தெகார்த்தின் மனம் பற்றிய கருத்தாகச் சொல்லலாம். அதாவது பிரக்ஞையை பிரக்ஞைப்படுத்தியவர். சிந்தனை என்று தெகார்த் பயன்படுத்திய சொல் ஒருவகையில் பிரக்ஞை என்பதற்கான லத்தீன் பொருட்பொதிந்த சொல்லே. காரணம் பிரக்ஞை என்பதற்கான conscious என்கிற ஆங்கிலத்தின் மூலச்சொல் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு அதாவது தெகார்த்தேவிற்கு முன்பு மேற்குலகில் பயன்பாட்டில் இல்லை. கிரேக்க-லத்தினிலும்கூட இல்லை என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை[3].
மனம் என்னும் இருமை – கார்டீசியமும் பிராய்டும்
தெகார்த்திற்கு முன்பு மேற்கத்திய தத்துவவியலாளர்கள் மனம் என்பதை ஆத்மா மற்றும் சுயம் என்பதான பிளாட்டோனியக் கண்ணோட்டத்தில்தான் அனுகிவந்தனர். அரிஸ்டாட்டில் பொதுபுத்தி (common sense) என்பதைத்தான் பிரக்ஞை என்பதற்கு பகரமாக பயன்படுத்தியதாக சொல்கிறது இக்கட்டுரை[4]. தெகார்த் மனம் என்பதை “சிந்திக்கும் பொருளாக“ வர்ணித்த 17-ஆம்நூற்றாண்டிற்கு பிறகே மனம் பற்றிய விஞ்ஞான சிந்தனைகள் உருவாகிறது. தெகார்த்தின் இருமைவாத சிந்தனைக்குப் பிறகுதான் மனம் என்கிற தத்துவம் சார்நத சொல்லாடல் விஞ்ஞானக் கருத்தாக்கமாக மாறியது. அதற்கு முந்தைய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மூளை என்பது ஒரு உறுப்பாக மட்டுமே இருந்தது. தெகார்த் சிந்தனை என்பதுடன் இணைந்த மூளையின் செயல்பாட்டிலிருந்து, சிந்திக்கும் பொருள் என்கிற தனிச்சிறப்பாக ஒன்றை பிரித்ததின் வழியாக மனம் என்கிற நவீனக்கருத்தாக்கம் உருவாகியது. அதாவது பொருளில் பொருளாயுதப் பொருள்(physical substance), சிந்திப்பதற்கான பொருள் (mental substance) என்ற ஒரு இருமையை உருவாக்கியதன் வழியாக, சிந்திப்பதற்கான பொருளாக மனம் என்கிற ஒன்று அறிவிக்கப்பட்டது. இன்று மனம் என்று புரிந்துகொள்ளப்பட்டிருப்பது தெகார்த் முன்வைத்த மூளையிலிருந்து பிரிக்கப்பட்ட தனிச்சிறப்பான மனம்தான், அதாவது “கார்டீசிய மனம்”. சிந்திப்பதால் ‘நானா‘க கட்டப்பட்ட தனிமனிதனின் மனம். இம்மனம் மூளையால் இயக்கப்பட்டாலும், உடலிற்குள் ஒரு அக-வெளியாக உள்ளது. இன்றைய உலகின் அடிப்படை அலகாக உள்ள தனிமனிதனின் மனமாக அறியப்பட்டிருப்பது, இயங்குவது, சிந்தனை மற்றம் பிரக்ஞையாக அறியப்பட்டிருப்பது. அதாவது ‘சிந்திக்கும் பொருளாக‘ இருப்பது. பொதுபுத்தியில் மனம் என்பதாக உணரப்பட்டுள்ளது. பௌதீகரீதியாக உடலிற்குள் இல்லாத ஒன்று. இடமோ, நிறையோ, வடிவமோ, நிறமோ, குணமோ, சுவையோ, மணமோ, சூடோ, குளிர்ச்சியோ உள்ளிட்ட எந்த பொருட்பண்பும் அற்றது. அலையா, துகளா என்கிற இயற்பியல் இருமையின் அறிவியலுக்குள் அடங்காதது.
மனம் “சிந்திக்கும் பொருள்” என்பதற்கு தெகார்த் பயன்படுத்திய சொல் கோஜிட்டன்ஸ் (cogitans) என்பதும், லத்தீனில் உள்ள conscientia என்கிற சொல்லை சிந்தனை என்பதை வரையறுக்கவும் தெகார்த் பயன்படுத்துகிறார்[5]. இதன்பொருள் லத்தீனில் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் கான்சியஸ், தமிழில் பயன்படுத்தப்படும் ஓர்மை, சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் பிரக்ஞை என்பதாகும். இதனை தெகார்த் இன்று பயன்படும் முழுமையான அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும், சிந்தனை என்பதை பிரக்ஞை என்பதுடன் ஒருங்கிணைத்து தத்துவரீதியாகவே தனது இருமைவாதத்தை முன்வைத்துள்ளார்[6]. சிந்திப்பது இருப்பிற்கான பிரக்ஞையாக (being consciousness) அவரால் முன்வைக்கப்பட்டது.
அறிவார்ந்த சிந்தனை என்பது மதிப்பீட்டுடன் சம்பந்தப்படுத்தியே தெகார்த்தால் முன்வைக்கப்பட்டது. பகுத்தறிவிற்கான அடிப்படை என்பது சந்தேகம் கொள்வது, சிந்திப்பது, தீர்ப்பு வழங்குவது உள்ளிட்ட அறிவுச் செயல்பாடாகவே உள்ளது. இந்த அறிவுச்செயல்பாடு என்பதே அதிகாரத்தின் செறிவுப்புள்ளியாக உள்ளது. ஆக, மனம் சிந்திப்பதின் வழியாக சுற்றிவளைத்து அதிகாரத்துடன் உறவுகொண்டதாக உள்ளது. சிந்திப்பதற்கான எல்லைகளை புறநிலைகள் வழியாக சமூக அமைப்புகள், மொழி, அறிவு ஆகியவற்றால் கட்டுப்படுத்திவிடுவதன்மூலம், அதிகாரத்திற்கான இயங்கு புள்ளிகளை, களனை வடிவமைத்துவிடுகின்றன. இவ்வாறாக, அதிகாரத்திற்கான விருப்பு மனதின் உள்ளார்ந்த (immanence) பண்பாக மாறியுள்ளது. அதாவது, விருப்பு அதிகாரவேட்கை என்கிற இயல்புணர்ச்சியாக வடிவமைந்துள்ளது. ஒன்றின்மீதான விருப்பம் அதை அடைவதற்கான அதிகார உணர்வாக மாறும்போது வேட்கையாக வடிவமைகிறது. வேட்கை என்பதை அதிகாரம் செறிந்த விருப்பாற்றல் எனலாம். குறிப்பாக, விருப்பு அதிகாரப்பாய்விற்கான வெளியாக கட்டப்பட்டுள்ளது. விருப்பின் திடவடிவமாக மாறிவிட்ட மனம் அதிகாரத்தின் நுண்-இயங்கு வெளியாக உள்ளது. அல்லது மனமாக கட்டமைக்கப்பட்ட இருமைவாத கருத்தாக்கம் அதிகாரத்திற்கான உற்பத்திக்களனாகவும், அதன் வழி சமூக அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கு வழிவகுப்பதாகவும் உள்ளது. மனம் அதிகாரத்தின் நுண்-வேதிச்செயலாக உள்ளது. அதுதான் அதிகாரத்திற்கான வேட்கையாக நீட்ஷேவால் வர்ணிக்கப்பட்டது. அதுதான் உழைப்பின் அந்நியமாதலுக்கு காரணமாக மார்க்ஸால் வர்ணிக்கப்பட்டது. அதுதான் பாலியலுக்கான வேட்கையாக பிராய்டால் வர்ணிக்கப்பட்டது.
(தொடரும்)
- ஜமாலன் 16-04-2011 jamalan.tamil@gmail.com
மந்திரச்சிமிழ் - (ஏப்ரல் 2011 மார்ச் 2012) – 7 இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை பகுதியாக பிரித்து வெளியிடப்படுகிறது. புத்தகச்சந்தையில் தற்போது அன்னம் புத்தக நிலையத்தில் இவ்விதழ் கிடைக்கும். உள்ளடக்கத்தை கீழ்கணட் இணைப்பை கிளிக் செய்து பார்த்துகொள்ளலாம்.
http://issuu.com/jamalan/docs/contents
[1] இடிபல் என்கிற ஆங்கில உச்சரிப்பு தெரியாததால் இதனை ஓடிபல் என்பதாக முன்பு பயன்படுத்தினேன். தெகார்த்தே என்பதும் தெகார்த் என்ற உச்சரிப்பு தெரியாமல் பயன்படுத்தி உள்ளேன். இப்படி பெயர்ச்சொல்களை உச்சரிப்பதில் பல மாறுபாடுகள் மொழிக்கு ஏற்ப உள்ளன. ஆனால், சரியாக உச்சரிக்க தெரியாததால் அந்த சிந்தனையே தெரியாத அறிவற்றவன் என்பதான கருத்தை உருவாக்கி மகிழ்பவர்களுக்குதான் இந்த குறிப்பு. மோகன்தாஸ் கரம்சந்த காந்தியை சரியா உச்சரிக்க தெரியாத ஒரு ஆங்கிலேய சிந்தனையாளரை நாம் இப்படி முட்டாளாக கருதவதில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
[2] தெல்லூஸ்-கத்தாரி ஒரு கருத்தாக்கத்தை வடிவமைக்கும், கண்டுபிடிக்கும், கட்டமைக்கும் ஒரு கலையாகப் தத்துவத்தை பார்க்கிறார்கள். Philosophy is the art of forming, inventing and fabricating concepts. - Deleuze and Guattari தங்களது What is Philosophy என்கிற நூலில்
[3] Imagination, Elimiatocism and the Pre-History of Consciousness by Nigel J.T. Thomas – California State University, Los Angels. 1998. http://www.imagery-imagination.com/ieph/ieph.htm
[4] Same article
[5] Page-2:Essays on the Concept of Mind in Early-Modern Philosophy - Edited by Petr Glombíček and James Hill- Cambridge Scholars Publishing -2010
[6] அதேநூல்




0 comments:
கருத்துரையிடுக