அழகிய மையங்களும் அதிகார விளிம்புகளும்

காலக்குறி 1995 நகலச்சு இதழில் வெளிவந்த கட்டுரை.  அதன் பின் பிரேம் நடத்திய அமீபாவில் மீள் பிரசும் செய்யப்பட்டது. 2003-ல் வெளிவந்த மொழியும் நிலமும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன்பு அழிகியல்பற்றிய ஒரு அரசியல் விசாரணையாக எழுதப்பட்ட கட்டுரை.  புதிய சாபட்வேர் ஒன்றில் வெளியிட்டு பார்க்கும் நோக்குடன் இங்கு வெளியிடப்படுகிறது. - ஜமாலன்.

ஜெயமோகனின் அறமும் மாண்டோவின் நிராகரிப்புகளும் – பகுதி-3

பகுதி-1

பகுதி-2

அவர் இலக்கியவாதிகள் பற்றிய தொடராக எழுதிய நூல்வரிசைகளின் முன்னுரையில் தனது இலக்கியக் கோட்பாடு ரசனை சார்ந்தது என்று முன்வைத்துள்ளார். அது குறித்து தனது அடிப்படைகளை விரிவாக எழுதி உள்ளார். சாரமாக அதில் அவர்சொல்வது, "இலக்கிய விமரிசன அணுகுமுறையை ரசனை விமரிசனம் என்ற வகைக்குள் அடக்குவேன். இதன் அடிப்படைகளாக அமைவது என் சொந்த வாழ்க்கையனுபவங்களும், என் படைப்பனுபவங்களும், என் வாசிப்பனுபவங்களுமே." (பக்.3:முதல்சுவடு:ஜெயமோகன்:2003) இலக்கிய அளவுகோல் அவரது தனிப்பட்டரசனை சார்ந்தது என்றால், அதை மாண்டோ முற்றிலுமாக நிராகரிப்பவரே. அப்படி நிராகரிக்கும் இலக்கியவாதியை, ரசனைசார்ந்த விமர்சனமுறையில் தான் முன்வைக்கும் இலக்கியவாதியுடன் ஒப்பிடக்கூடாது. வாசித்தவரை அசோகமித்திரனின் இலக்கியக் கோட்பாடு ரசனைவாதமாக இருக்க வாய்ப்பில்லை. அவர் குறித்த விரிவான ஆய்வின்மூலமே அதைக் கண்டடைய முடியும்.

ரசனைவாதம் உயர்நவிற்சிக் கற்பனாவாதம் மற்றும் சமூகத்தின் வாழ்நிலையில் புழங்கும் அழகியலுடன் அதிக உறவு கொண்டது. அதன் மற்றொரு பிரச்சனை எது ரசனைக்கு உரியது என்பதை வரையறுப்பதும் அதன் வழியாக கீழ்-மேல் மதிப்பீடுகளை உருவாக்குவதும். அதுதான் மக்களை அதிலும் இலக்கியம் அறியாத எளிய மக்களை சாமான்யர்கள் என்றும் அவர்களது ரசனை தாழ்வானது என்றும் சொல்ல வைப்பது. ரசனை ஒரு சமூக அடையாளமாக உள்ளது. அதன்வழியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும், மேல்நிலையில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதுதான் தன்னை அறியாமல் தன்னை ஒரு அதிகார மையமாகக் கட்டிக்கொள்கிறது. இலக்கியத்தைத் தீர்மானிக்கும், உற்பத்தி செய்யும் மையமாக மாற்றிவிடுகிறது. தனது ரசனைக்கு ஒத்துவராத ஒன்றை நிராகரிக்கவும் அதற்கு இருப்பே இல்லை என்கிற எதேச்சதிகாரக் குரலாக வெளிப்படுகிறது. ரசனைவாதத்திற்குள் இத்தனை சிக்கல்கள் உள்ளன. மாண்டோ இத்தகைய ரசனைவாதத்தை முற்றிலும் நிராகரித்தவர். அதுதான் இலக்கியத்தில் அவர் நிகழ்த்திய கலகம். அவர் ஒருவகையில் அழகியலுக்கு எதிரானவர் பிறிதொருவகையில் விளிம்புநிலை அழகியலை முதன்மைப்படுத்தியவர். பாலியல் தொழிலாளி (விலைமாது), பெண் தரகர்கள் துவங்கி தன்னை காக்க வந்த பணிப்பெண்ணையே உறவு கொள்ளும் காந்தியவாதியான பேராசிரியர் வரை ஒதுக்கபட்ட விளிம்பிற்கு தள்ளப்பட்டவர்கள் பற்றி எழுதியவர். (மாண்டோ குறித்து மிகவிரிவாக 2 கட்டுரைகள் ஏற்கனவே எழுதிவிட்டதால் இங்கு விரிவாக சொல்ல தவிர்க்கிறேன்.)

ஜெயமோகனின் பதிலில் முதல்வாக்கியம் இப்படி துவங்குகிறது. "18 வது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப் பார்க்கும்கதை. ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் அந்தக்கதையின் முக்கியத்துவம் தெரியும். நாம் அந்த வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக்கொள்வதுவரை எதையுமே கவனிக்காமல் நம் அன்றாட எளிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம்." எந்த வரலாற்று தருணத்திலும் நிகழ்வின் பாத்திரமாக உருவாகுதல், அச்சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் நிர்பந்தமாகிறது. வரலாற்றை மீறி நிற்கமுடியாது என்பதால் அதன் உருவாகுதலில் ஓர் அடையாளமாக எஞ்சுதல் நிகழ்கிறது. அந்த "வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக் கொள்வதுவரை", என்று எழுதுவதன் உள்ளமைப்பில், வரலாற்றில் நாம் முட்டாமலும் போகலாம் என்கிற தேர்வு சாத்தியம் இருக்கிறது என்பதே. அப்படி ஒரு சாத்தியத்தை வரலாற்றின் நிகழ்வுக் கணங்கள் யாருக்கும் தருவதில்லை. வரலாற்று எந்திரம் இயங்கத் துவங்கியபின் சமூகத்தின் அனைத்து எந்திரங்களையும் அது முட்டி மோதி உரசி தள்ளி இயக்குகிறது. தனிமனிதன் என்கிற உடலியந்திரம் அதனுள் அரைபடுகிறது. தனிமனிதனின் எந்த விருப்பமும், வரலாற்றின் விருப்பத்தில் ஒன்றை தேர்ந்து அதன் அடையாளத்தை பெற்று இயங்குவதை தவிர ஏதுமற்றதாக மாறிப்போகிறது. இதைத்தான் மாண்டோவின் கதைகளில வரும் சாமானியர்கள் செய்கிறார்கள். அவர்களிடம் எந்த அறப்பிரக்ஞையும் அத்தகைய தருணங்களில் செயல்படாது. காரணம் பொது அறம் ஒன்று அங்கு இல்லை. அரசியல் கலவரம் பொதுஅறமற்றது. அக்கலவரங்களில் வரலாறு முன்வைக்கும் அறத்திற்குள்தான் தனிமனிதன் நிற்க நிர்பந்திக்கப்படுகிறான். அப்போது சாமான்ய பிரக்ஞை மற்றும் அதிமானிட பிரக்ஞை என்பதெல்லாம் அந்த வரலாற்று அறத்திற்குள் அடிபட்டு போய்விடும். மனிதன் எந்த தயாரிப்பும் அற்ற கைவிடப்பட்ட நாடக பாத்திரமாக மாறிவிடுகிறான்.

மாண்டோ இங்குதான் நேர்மையாக அறம் பற்றிய இத்தகைய சாராம்சப் பார்வைகளை கேள்விக்கு உட்படுத்துகிறார். இத்தகைய கேள்விகள் நாடக உச்சமாக தெரிவது, இலக்கியம் பற்றிய பழகிய “அழகியல் ரசனைவாத“ பார்வையான "உன்னத உணர்வு" "உள்ளொளி" "பொறி" "சுயவிசாரம்" "அறப்பிரக்ஞை" போன்ற காரணிகளால்தான். இலக்கியம் தனிமனிதனை சமூகவயப்படுத்துகிறதே தவிர சமூகமனிதனை தனிமனிதவயப் படுத்துவதில்லை. 18-வது அட்சக்கோடு நாவலில் வரும் சந்திரசேகரன் இறுதியில் "அறப்பிரக்ஞை" கொள்வதாகவும் அதனுடன் அவன் தனித்து வாழப் போவதாகவும் காட்டுவதாக குறிப்பிடுகிறார். அவரது வாதப்படி இப்படி அவன் பெறும் அறப்பிரக்ஞையால், வரலாற்று தருணத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சாமான்யன், காந்தி கொலைக்கான தவறான ஊகத்தில் (இத் தவறான ஊகம் அன்றைய இந்துக்களை இந்துத்துவவாதிகளாக கருத்தியல் கட்டமைப்பு செய்தது என்பதுவேறு) இந்துவாக அடையாளம் பெறும் அவன், தனக்குள் உள்ள ஆழத்து அறத்தைக் கண்டுகொள்கிறான். அதாவது அடையாளம் துறந்த சமூக அறத்திற்குள் மனிதர்கள் அனைவரும் சமம், தனித்த அடையாளம் அற்றவர்கள் என்பதை உணர்கிறான் என்பதே பொருள். இங்கு அசோகமித்திரன் துவங்கி ஜெயமோகன் வரை அறமாக முன்வைக்கப்படுவதின் உள்தர்க்கம் “மதச்சார்பின்மை” என்பதே. மதச்சார்பின்மை என்கிற கருத்தியலை இந்திய குறிப்பாக இந்துத்துவ அரசியல், பெரும்பான்மை/சிறுபான்மை என்கிற புள்ளியியல் சார்ந்த ஒன்றாக மாற்றி உள்ளது. அதாவது பெரும்பான்மையினரின் பரிவில், பாதுகாப்பில் வாழும் உயிரிகளாக சிறபான்மையிரைக் கருதுவது என்கிற ஒரு பெருந்தன்மை அல்லது பெருநோக்காக உள்ளது. இது ஒருவகை மிரட்டலை, அச்சத்தை உள்ளடக்கியது. எந்த தருணத்திலும் தலைகீழாகக்கூடிய கருத்தியலாக உள்ளது. அதாவது மதச்சார்பின்மை ஒரு அறமாக இருப்பதான ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. அது அறமல்ல, ஒரு அரசியல் சார்ந்த கருத்தாக்கமே. அறம் என்பது மற்றமையை தானாக உணர்வது. எச்சூழலிலும் சிறுபான்மையாக உணர்தலும் மற்றும் உருவாகுதலுமே.

18வது அட்சக்கோடில் சந்திரசேகரன் ஆழத்து அறஉணர்ச்சிபெற்று சமூகவயப்படுவதன் வழியாக வாசிக்கும் நாமும் சமூகவயமாகிறோம். அதாவது அங்கு நிகழ்ந்த வரலாற்றின் கணத்திலிருந்து, வரலாற்று இயக்கத்திலிருந்து விடுபட்டு, தனக்கான சமூகப்பாத்திரத்தை ஏற்பதையே இங்கு சமூகவயம் என்று குறிக்கிறேன். அல்லது அப்படி ஒரு வரலாற்று தருணத்தை எதிர்கொள்ளும்போது நாம் இந்நாவலின் உந்தம் தரும் அறப்பிரக்ஞையைப் பெறுகிறோம். அச்சமூகப்பாத்திரம் அல்லது அறப்பிரக்ஞை என்பது மதச்சார்பின்மை என்கிற அறத்தை பெறுவதுதான் என்பதாக இந்நாவல் வழியாக குறிக்கப்படுகிறது. அதாவது ஒரு யதார்த்தவாத புனைவினுள் வாழ்ந்து பழகும் ஒரு உடல், நிஜத்தில் அதை எதிர்கொள்ளும்போது, அதனை கையாள்வதற்கான முன்அனுபவத்துடன், உணர்வுடன், தயாரிப்புடன் உள்ளது. இதைதான் யதார்த்தவாத இலக்கியங்களின் ஆகப்பெரும் சமூகப்பயனாக கொள்ளலாம்.

இந்நாவல் தரும் அறப்பிரக்ஞை மதச்சார்பின்மை என்கிற பெரும்பான்மையினரின் பரிவுணர்ச்சிதான். ஒரு மன்னிக்கும் குணம். இதனுள் “இந்து“ பெரும்பான்மை என்ற மனநிலைப் பெருமிதம் ஒளிந்துள்ளதைக் காணலாம். அது இன்னொரு வரலாற்றுத் தருணத்தில் வேறுவடிவில் வெளிப்படலாம். இதுதான் இந்தவகை மையத்துவ-யதார்த்தவாத-அழகியல் எழுத்துக்களின் பிரச்சனை. ஒன்றை வெளிச்சமாக்கி மற்றதை இருட்டாக்கி காட்டுவது. மாண்டோ இந்த மதச்சார்பின்மையின் இருட்டை வெளிச்சமாக்குகிறார். அவரது கதையில் எல்லா மதத்தினரும் வன்முறையாளர்களாக உள்ளனர். வெளிச்சமும், இருட்டுமாக மாறி மாறி வருகின்றனர். வெளிச்சத்தில் கொல்பவனும், இருட்டில் கொல்லப்படுபவனும் நிற்கிறார்கள். யார் யாரைக் கொல்கிறார்கள் என்பதை பொறுத்து இருட்டும் வெளிச்சமும் மாறிவருகிறது. இங்கு ஒன்றை நினைவு கொள்வது அவசியம். தனது மதத்தை மிகக்கடுமையாக விமர்சித்தவர் மாண்டோ. அதற்கான தண்டனைகளை வறுமை துவங்கி சிறைவரை அனுபவித்தவர். மதச்சார்பின்மையை மாண்டோ பயனபடுத்தியவரோ, அதை ஒரு அறமாகவோ முன்வைத்ததில்லை. மாறாக, மனிதனாக இருப்பது, சாத்தியமற்றதாக மாறிவிட்ட வரலாற்று அவலத்தின் குரலே மாண்டோவினுடையது.

ஆனால், 18-வது அட்சக்கோடு தரும் அறப்பிரக்ஞை மூலம் ஜெயமோகன் சொல்லும் சாமான்ய மனிதனாக எளிய மனிதனாக இல்லாமல் ஒரு சமூக மனிதனாக மாற்றப்படுகிறோம். இதுதான் இலக்கியத்தின் சமூகப்பயன். அல்லது இலக்கியம் இந்த உலகை உருவாக்குவது இப்படித்தான். அதாவது, சமூகத்திற்குள் ஒரு மனிதன் வாழ்வதற்கான பாத்திரங்களை உருவாக்கி தருகிறது. மனிதர்களை சமூகவயப்படுத்துகிறது. இப்படி சமூகவயப்படுத்துவதால், மனிதனை சமூக அதிகாரத்தின் ஊடகமாக மாற்றிவிடுகிறது. ஆனால், ஜெயமோகன், இத்தகைய இலக்கியத்தின் பணி தனிமனித அறப்பிரக்ஞையை உருவாக்குவது என்பதாக அதன் சமூகவயத்தையும், முக்கியத்துவத்தையும் விட்டுவிடுகிறார். இவர் இலக்கியத்தை முதன்மைப் படுத்தவதைப்போன்று தோன்றும் ஆனால், இவர்கள் முதன்மைப் படுத்துவது தன்முனைப்பான அழகுணர்ச்சியை, அழகியலை, அது தரும் அதிகார சுகத்தை. இலக்கியத்தை அல்ல இலக்கிய கர்தாக்களை.

அடுத்து, தனிமனித அறம் என்று ஒன்று உண்டா என்பது விவாதத்திற்கு உரியது. காரணம் அறம் என்பதே பொதுமையானதுதானே. தனக்கு மட்டுமே ஒருவன் அறம் என்கிற ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறம் மற்றொருவர் உள்ளபோதே அவசியப்படுகிறது. அதனால் தனிமனித அறம் அல்லது பிரக்ஞை என்பதே தர்க்கரீதியாக ஏற்கத்தக்கது அல்ல. அல்லது தனிமனிதன் தன்னையே பிறராக உணராமல் அறம் சாத்தியமில்லை, அது தேவையுமில்லை. "தனிமனித அறம்" என்பதே விவாதத்திற்குரிய கருத்தாக்கம். பொதுஅறமும் தனிமனித அறமும் பிளவாக, இரண்டாக இருப்பதில்தான் எல்லாவிதமான அறச்சிக்கலும் வருகிறது. இந்த சிக்கல்தான் அசோகமித்திரனை உயர்த்திப்பிடிக்க மாண்டோவை போகிறபோக்கில் “கண்டுவிட்டார்களாம்” என்று தட்டிச் செல்லும் குறிப்பாக வெளிப்படுகிறது.

குறிப்பு-1. "உலக இலக்கியத்திலேயே குறைவுதான். நான் ஐசக் பாஷவிஸ் சிங்கரை மட்டுமே அவருக்கு நிகராகச் சொல்வேன்." இப்படி எழுதப்படும் வரிகளில் எனக்கு எப்போதும் பிரச்சனை உண்டு. காரணம் இந்த வரிகள் காட்டும் உட்பொருள் அல்லது சொன்னவர் தனக்கு தானே உருவாக்கிக்கொள்ளும் "அத்தாரிட்டி" (அதிகாரம்) முக்கியமானதாகப்படுகிறது. உலக இலக்கியம் என்பது பரந்து விரிந்தது என்பதால் உலக இலக்கியம் என்ற சொல்லை பயன்படுத்தும் சாத்தியம் பிரச்சனைக்குரியது. வணிகநோக்கில் சொல்லப்படும் உலக இலக்கியம் என்பது வேறு. ஒப்பீட்டளவில் ஒரு இலக்கியவாதி பற்றிப் பேசும்போது இத்தகைய வாசகங்கள் சொல்பவரின் பரந்த அறிவை நிலைநாட்டுவதுடன், வாசிப்பவருக்கு ஓர் ஒப்பீட்டு வாசகத்தை தருகிறது. மற்றபடி இப்பதிலில் ஜெயமோகன் இந்திய அரசியலில் தேசிய உருவாக்கம் பற்றியும், காந்தி பற்றியும் குறிப்பிடும் விஷயங்கள் விமர்சனத்திற்கு உரியவை. மாண்டோ பற்றிய குறிப்பு என்பதால் அவற்றை விரிவஞ்சி விட்டுவிடலாம்.

குறிப்பு-2. "கண்முன், நம் சமகாலத்தில், இலக்கியமேதை ஒருவர் தன் மகத்தான ஆக்கங்களுடன் வாழ்கிறார். நாம் தொலைநோக்கி வைத்து திசைகளை துழாவிக் கொண்டிருக்கிறோம்." என்கிற அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் இக்கருத்து தமிழ் இலக்கிய விமர்சனம் பற்றிய விமர்சனமாக கருதி அவரது உணர்வை நாமும் பகிர்ந்து கொள்ளலாம். பிளஸ் டூ படித்தபோது நாங்கள் நடத்திய "ஜனகணமண" என்கிற பத்திரிக்கையுடன் மூன்று நண்பர்கள் கும்பகோணத்திற்கு வந்திருந்த அசோகமித்திரனை “லாட்ஜ் லவுன்ச்சி“-ல் சந்தித்தோம். அவரது ஒற்றன் மற்றும் 18 வது அட்சக்கோடு பற்றி பேசினோம். சிறுவர்களான எங்களிடமும் மதித்து உட்கார்ந்து சமமாக பேசிக்கொண்டிருந்தார். நான் முதன்முதலாக சந்தித்த எழுத்தாளர் அவர்தான். பயமுறுத்தாத பந்தா இல்லாத அவரது எளிமை எழுத்தாளனாக ஆக வேண்டும் என்கிற நம்பிக்கையை தந்தது. அசோகமித்திரன் குறித்து பரவலான கவனம்பெறும் இச்சூழல் அவர்குறித்த ஆய்வுகள், மதிப்பீடுகள் நிறைய வருவது தமிழின் புனைகதை சூழலுக்கு ஆரோக்கியமானது.

-ஜமாலன் (13-02-2011)

ஜெயமோகனின் அறமும் மாண்டோவின் நிராகரிப்புகளும் – பகுதி-2

பகுதி-1

இலக்கிய படைப்பு அதிர்ச்சி ஊட்டித்தான் உரையாடலை வாசகனுடன் துவங்குகிறது. “இலக்கியஅமைதி“ என்பது இலக்கியத்தின் அமைதியாகிவிடாது. அந்த அதிர்ச்சிதான் அவனது பழகிய இயல்பான வாழ்வில் சிந்தனையை தூண்டுவதாக அமையும். அது அகத்தில் நடக்கலாம், மாண்டோவிடம் அது புறத்திலேயே நின்றுவிடுகிறது என்கிறார் ஜெயமோகன். இந்த அக-புற விளையாட்டில் உள்ள சிக்கல், புறத்தை தள்ளிவிட்டு அகத்தை முதன்மைப்படுத்தும் மேற்சொன்ன அதே போக்குதான். முகம் எப்படி ஒன்றாக இல்லையோ அதைப்போலத்தான் அகமும் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. முகங்கள்போல அகங்கள் உண்டு. முகங்கள்கூட ஒருவருக்கே ஒன்றாக இருப்பதில்லை. அது அனுபவங்களின் வார்ப்பில் சூழலின் தருணங்களின் மாறிக்கொண்டிருப்பது. ஒருவருக்கே பல அகங்கள் உண்டு என்றால், எந்த அகத்திற்கான சித்திரிப்பை இலக்கியம் ஒருவருக்கு வழங்கும். அப்படியே அகம் என்ற மையம் மட்டுமே இருந்தாலும் புறம் இன்றி அகம் சாத்தியமா? புறச்சித்தரிப்புகள்தான் அகச்சித்தரிப்பை உருவாக்கும். புறமின்றி அகம் எதனுடன் தொடர்புகொள்ளும். இலக்கியம் அகத்திலோ அல்லது புறத்திலோ இயங்குவதில்லை. அக-புற இணைப்பில் உள்ள அடையாள வெளியில்தான் இயங்குகிறது. அதைத்தான் கதையாடல் வெளி என்கிறோம். மாண்டோவின் கதையாடல்-வெளி இந்த அக-புற விளையாட்டை தள்ளிவிட்டு, சமூகத்தின் கதையாடல் வெளியில், அகமும், புறமும் எப்படி அரசியல் அடையாளங்களால் மாறிக்கொண்டே உள்ளது என்பதை சொல்கிறது. அதிகாரத்தின் அடையாள வெளியாக உள்ள அரசியல் வெளியை கதையாடல் வெளியாக மாற்றி வைக்கிறார் மாண்டோ.

ஓர் எழுத்தாளரை மற்ற எழுத்தாளருடன் ஒப்பிட்டு விரிவாக எழுதாமல் அவசரகதியில் ஒரு கருத்தை போட்டுவிட்டு அது வளரட்டும் என போகும் செயலே இது. கடிதத்திற்கான பதில் என்பதால் விரிவாக இன்றி ஒரு கருத்தாகக்கூற உரிமை உண்டு. ஆனால் அக்கடிதம் பொதுத்தளத்தில் வைக்கப்படும்போது, அது உருவாக்கும் அல்லது வளர்த்துவிடும் கருத்து கவனப்படுத்த வேண்டியதாக உள்ளது. 18-வது அட்சக்கோடு ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது உருவான கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால், ஜெயமோகனுக்கு இந்திய-பாகிஸ்தான் பிரிவினையினால் ஏற்பட்ட கலவரங்களை எழுதிய மாண்டோ நினைவிற்கு வருகிறார். ஒருவகையில் இது மாண்டோ குறித்த அவரது வாசிப்பின் ஆழத்தைக்காட்டுகிறது. ஆனாலும், மாண்டோவின் படைப்புலகை செயற்கையான நாடக உச்சங்களாக பார்க்கிறார். மாண்டோவின் பிரிவினை பற்றிய கதையாடல் தனிமனிதனின் உடலில் உருவாக்கிய அடையாள நெருக்கடி பற்றியது. இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட "பிரிவினை" என்கிற அரசியல் எப்படி தனிமனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது என்பதையும், வரலாறு என்கிற ஒன்றின் கட்டமைப்பு ஏற்படுத்திய அரசியலையும் அம்பலப்படுத்துகிறது. தனிமனிதன் என்பவன் சாராம்ச இருப்பைக் கொண்டவன் அல்ல, அவன் வரலாற்றில் எப்படி பொருண்மையற்ற வெற்று அடையாளங்களாக உருவாக்கப்படுகிறான் என்பதை கிழித்து காட்டுகிறது. தனிமனிதன் என்கிற உள்ளீடற்ற வெற்றுக்குள் எப்படி அரசியல் தனது பொருண்மையை அடையாளமாக திணிக்கிறது என்பதை சொல்கிறது.

ஜெயமோகனின் அடிப்படையான "வரலாறு" மற்றும் "மனிதன்" பற்றிய புரிதலே அவரை மாண்டோவின் படைப்புலகை நாடக காட்சியின் உச்சமாக பார்க்க வைக்கிறது. மனிதன் என்கிற கார்டிசீயம்-உருவாக்கிய இருமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அவரது தர்க்கம் கட்டப்படுகிறது. (இந்திய தத்துவத்தின் சுதேசியத் தன்மைபற்றி அதிகம் பேசும் இவர், இப்படியாக காலனிய கருத்தாக்கத்திற்குள் நின்றே சிந்திக்கிறார் என்பது பிறிதொரு ஆய்விற்கானது.) இப்பிளவில் மனதை முதன்மைப்படுத்தும் போக்கில் அகம் என்பதை முன்வைக்கிறார். தமிழில் “அகம்“ என்பது ஒரு உள்-வெளி. அதை மனமாக கற்பிதம் செய்துகொள்வது கார்டிசிய பிளவின் விளைவுதான். அகத்தெழுச்சியை ஒரு மனவெழுச்சியாக புரிந்துகொள்ள முடியாது. இப்படியொரு மனவெழுச்சியாக புரிந்துகொள்வது அசலான தமிழ் கோட்பாட்டுச் சிந்தனையாகுமா? என்பது விவாதத்திற்கு உரியது. அகம் சமூகம் என்கிற புறவெளி உடலக்குள் பதிவுற்று, உடலை சமூகத்துடன் இயைபு படுத்தும் ஒரு உடல்-வெளி. வரலாறு என்பதும் சமூக-அரசியல் தருணங்கள்தான். அந்த தருணங்களுக்குப் பின் வரலாறு ஒரு புனைவாகவும் கதையாடலாகவும்தான் உள்ளது.

இக்கதையாடல்தான் மாண்டோ மற்றும் அசோகமித்திரனின் கதைதளம். 18-வது அட்சக்கோட்டில் சொல்லப்படும் வரலாற்று தருணத்திற்கும் தனிமனிதனுக்கும் இடையிலான சிக்கல்தான் பிரிவினை காலத்திய மாண்டோவின் பேசுபொருள் என்றாலும், மாண்டோ நகர்புற நடுத்தரவர்க்க போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறார். மாண்டோவின் காலம் ஜெயமோகன் குறிக்கும் அசோகமித்திரனின் காலத்தைவிட கொந்தளிப்புகள் அதிகம் இருந்த காலம் என்பதை கவனத்தில் வைப்பது அவசியம். தனிமனிதன் வரலாற்றின் உருவாக்கமாகவும், அவன் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் ஒரு அடையாளமாக உருவாகுதலையும் எடுத்துக்காட்டுகிறார் மாண்டோ. வரலாற்றை புனைவாகவும் அதில் ஒரு அடையாளமேற்கும் பாத்திரமாகவும் தனிமனிதன் மாறுவதைச் சொல்லிச் செல்கிறார். மனிதன் ஒரு நிகழ்வின் பங்கேற்பாளனாக மாறும்போது, அவனது உடல்-மனம்-ஆத்மா என்கிற பிளவுகள் எல்லாம் அர்த்தமற்றதாக மாறி வெறும் அரசியல் அடையாளமாக மாறும் தருணங்களை சொல்லிச்செல்கிறார். அசோகமித்திரனின் நாவலிலும் இதைதான் அவர் காட்டிச் செல்கிறார். இரண்டிலும் இலக்கிய குணாம்சம்தான் வேறுபாடு என்றும், ஒன்று புனைவு மற்றது நாடகம் என்றும் சொன்னால், புனைவையும் நாடகத்தையும் வரையறுத்து சொல்லவேண்டும். அப்புறம் நாடகம் எந்தவகையில் புனைவைவிட கீழானது என்பதையும், நாடகத்தின் உச்சகாட்சி ஏன் இலக்கிய குணாம்சமாகக் கொள்ளப்படக்கூடாது என்பதையும் விளக்கவேண்டும். இவற்றை எல்லாம் விட முக்கியம் ஜெயமோகனின் இலக்கியக் கோட்பாட்டிலிருந்தே இந்த பிரச்சனைகள் துவங்குகிறது.

(தொடரும்)

- ஜமாலன் (13-02-2011)

picture courtesy: http://www.positive-thinking-for-you.com/positivethinking-selfesteem.html

ஜெயமோகனின் அறமும் மாண்டோவின் நிராகரிப்புகளும் – பகுதி-1

அசோகமித்திரனின் 18-வது அட்சக்கோடு பற்றிய ஒருவரின் கேள்விக்கு ஜெயமோகன் தனது வலைதளத்தில் சில கருத்துக்களை விரிவாக முன்வைத்துள்ளார் (<http://www.jeyamohan.in/?p=11891>). அசோகமித்திரன் தமிழ் புனைவிலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் என்பதில் மாறுபாடு இல்லை. அவரது எழுத்தில் மெலிதான நகைச்சுவை ததும்பம் சமூக அவலம் பற்றிய எடுத்துரைப்புகள் தமிழில் மற்ற எழுத்தாளர்களால் பேசப்படாதவை. ஆனால் அரசியல்ரீதியாகவும் சமூகவியல்ரீதியாகவும் அசோகமித்திரனின் படைப்புகள் பற்றிப் பேச நிறைய உள்ளது. நடுத்தரவர்க்கம் மற்றும் நகர்சார் வாழ்க்கையை நுட்பங்களுடன் சொன்னவர் அசோகமித்திரன். "நகர்சார் நடுத்தரவர்க்கம்" என்பதே பார்ப்பன வாழ்நிலையை பிரதிபலிப்பதுதான் என்பதை இந்திய காலனியக்காலத்தில் உருவான குடும்பங்களின் மறுசீரமைப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். இதற்கான இலக்கிய உதாரணமாக மௌனியின் "குடும்பத்தேர்" என்கிற கதையை முன்வைத்து வாசித்துகாட்டமுடியும். காலனியக் கலப்பினமாதலின் சமூக விளைவாக உருவானதே "இந்திய நடுத்தரவர்க்கம்". காலனியம் தன்னை தகவமைத்துக்கொள்ள உருவாக்கிய படித்த, மேல்தட்டு, நகர்சார்ந்த இந்த வர்க்கம், "நாகரீக"-த்தையும். தனது மத, சாதிய ஆச்சார மரபுகளையும் கலந்துகட்டி உருவானது. "நாகரீக"-த்தை தனது மரபான அமைப்பிற்குள் தகவமைத்துக்கொண்டது. ஒரு வினோதமான மன அமைப்பைக் கொண்டது. இம் மனஅமைப்பை கதையாடல்களில் முன்வைத்தவர் அசோகமித்திரன்.

இத்தகைய நகர்சார் நடுத்தரவர்க்க நாயகன் ஒருவனைக் கொண்டு எழுதப்பட்ட நாவலே 18-வது அட்சக்கோடு. ஜெயமோகன் இந்நாவலை ஒருவரின் "இந்து" மனநிலை வரலாற்று தருணம் ஒன்றில் முட்டி ஆழத்து "அறபிரக்ஞை"யை கண்டடைவதாக வாசித்து உள்ளார். இது தனிமனிதன் என்கிற மையம் சார்ந்த வாசிப்பு. தனிமனிதன் வரலாற்று தருணத்தில் கொள்ளும் அடையாளச் சிக்கல்கள் அவனை எப்படி இயக்குகிறது, அவனை எப்படி உருவாக்குகிறது என்பதையும் அதன் அபத்தத்தையும் வெளிப்படுத்தி வரலாறு என்கிற அவல நாடகம் பற்றிய விமர்சனமாக இந்நாவலை வாசிக்கலாம். இது தனிமனிதனை உருவாக்கும் அமைப்பு அல்லது நிறுவனம் சார்ந்த வாசிப்பு. ஏனோ ஜெயமோகன் இதனை ஒரு இந்து-மனநிலை நாவலாக வாசிக்கிறார். ஒருவகையில் இந்நாவல் பேசும் “அறம்“ பற்றிய மதிப்பீடு “இந்து அறம்“-தான். இதனை ஜெயமோகனின் வாசிப்பும் தடம் காட்டி உள்ளது.

பல வாசிப்புகள் சாத்தியம் என்ற வகையில் இது அவரது தன்னுரிமையான வாசிப்பு என்று கொள்ளலாம். ஆனால், அசோகமித்திரன் குறித்த கருத்துக்களை முன்வைக்கும்போது இறுதியில் இப்படி எழுதுகிறார் ஜெயமோகன் "சதத் ஹசன் மாண்டோவைத் தமிழில் சிலர் திடீரென்று தூக்கிப்பிடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பின் கண்டுவிட்டார்களாம். மாண்டோவோ அல்லது பீஷம் சாஹ்னியோ [தமஸ்] எழுதியவை அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்புகள், செயற்கையான நாடக உச்சங்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆன்மாவின் ஆழத்தால் அடையாளம் காணும் வாழ்க்கைத்தருணங்கள் அல்ல அவை. அசோகமித்திரன் எழுதுவதும் நாமனைவரும் அறியும் நமது ஆழத்தை." "கண்டுவிட்டார்களாம்" என்கிற வார்த்தையின் எள்ளல் வெளிப்படுத்தும் அரசியல்-உளவியலை பதிய வைத்துக்கொண்டு இந்த "ஆன்மஆழத்தை" கண்டுவிட முயலலாம்.

போகிறபோக்கில் பொருத்தமற்ற இடத்தில் மாண்டோ பற்றி எழுதிச்செல்லும் ஜெயமோகன் இலக்கியம் அல்லாதது என்பதாக மூன்று விஷயங்களை முன்வைக்கிறார். 1. அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்புகள் 2. செயற்கையான நாடக உச்சங்கள் 3. ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆன்மாவின் ஆழத்தால் அடையாளம் காணும் வாழ்க்கைத்தருணங்கள் இல்லாமை. இதன் எதிர்நிலைகளை அவரது இலக்கியம் பற்றிய அளவுகோல்களாகக்கூடக் கொள்ளலாம். இம்மூன்றிலும் அகம், இயல்பு, ஆன்மா என்பதுவே மையம். ஆக, இலக்கியம் இயல்பான அகச்சித்தரிப்புகளால் தனிமனித ஆன்மாவின் ஆழத்தால் அடையாளப்படும் வாழ்க்கை தருணத்தை உருவாக்குவது என்பதே. சுருக்கமாக, இலக்கியம் ஓர் ஆன்ம உணர்ச்சி அல்லது ஆன்மத்தேடல் என்று இதனை புரிந்துகொள்ளலாம். இந்தவகை இலக்கியம் பற்றிய பார்வை, இலக்கியத்தின் சமூகப்பணியை மறுப்பது மட்டுமல்ல இலக்கியத்தின் முக்கியத்துவத்தைக்கூட ரசனையாக சுருக்கிவிடுகிறது.

இலக்கியம் தனிமனித ஆன்மீக செயலாக சுருக்கப்படுவதால் எழும் கேள்வி, ஒரு படைப்பு ஆன்மாவின் ஆழத்துள் சென்று அடையாளம் காண வேண்டிய அவசியம் என்ன? அது ஏன் தேவைப்படுகிறது? ஒரு தனிஉடல் தன்னை சமூகவயப்படுத்திக் கொள்ளவோ அல்லது சமூகத்தின் முன்னணியாக தன்னை மாற்றியமைத்துக் கொள்ளவோதான். ஆன்மாவின் ஆழத்துள் அடையாளம் காணுதல் என்றால், அடையாளம் என்கிற புறமான ஒன்றைத்தான் அல்லது அடையாளமாக ஏற்கனவே புழங்கிவரும் ஒன்றைத்தான் காணமுடியும். அல்லது ஒரு வாழ்க்கை தருணத்தை ஓர் ஆன்மீக உணர்வாக அடையாளம் காணுதல் என்பது, முற்றிலும் புதிதான ஒரு ஆன்மீக வெளிப்பாட்டைக் கொள்ளவேண்டும். அப்படி ஒரு ஆன்மீக வெளிப்பாட்டைக் கொள்வதன் வழியாக அவன் தன்னை சமூகத்தின் முன்னணியாக நிலைநிறுத்திக் கொள்கிறானே ஒழிய காட்டில் சென்று தன்னந்தனியனாக அந்த ஆன்மீக உணர்வுடன் வாழ்வதில்லை. இலக்கியப்படைப்பு வாழும் சமூகத்தில் முன்னணிகளையும், வருங்கால சமூகத்தின் போக்குகளையும், எதிர்கால சமூகத்தின் பொது மனஅமைப்பையும் உருவாக்குவதாக உள்ளது. சங்க இலக்கியங்கள் இல்லாமல் இன்றைய இலக்கிய போக்குகளோ, தமிழ்மனம் என்ற பொதுமனமோ இல்லை.

இலக்கியத்தின் ஆன்மீகப்பணி அதன் மற்றமையான லௌகீகத்தால்தான் அடையாளப்படுத்தப்படுகிறது. அதாவது, ஒருவரின் ஆன்மீகத்தை மற்றமைகளின் லௌகீகமே அர்த்தப்படுத்துகிறது. ஜெயமோகனின் இலக்கியக்கோட்பாடு இந்த ஆன்மீக-லௌகீக எதிர்மையில்தான் தனது கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தை முதன்மைப்படுத்துவதன் வழியாக லௌகீகத்தை விளிம்புக்கு தள்ளுதல் நிகழ்கிறது. லௌகீகம் என்பதைக்கூட ஆன்மீகத்திற்குள் அடக்க முனைகிறது. ஆக இலக்கியம் சாமான்யர்களின் லௌகீகம் எனப்படும் "தினவாழ்வு" சார்ந்தது அல்ல என்பதே இதன் நீட்சி. இதன் மறுதலை இலக்கியம் சாமான்யர்களுக்கானது அல்ல என்பதே. இப்படித்தான் "இலக்கிய உன்னதம்" சாதரணர்களின் பிரச்சனைகளிலிருந்து விலகி ஆன்மீகப் பயணமாக மாறிவிடுகிறது. இலக்கியம் தெரியாதவர்கள் என எள்ளிநகையாடும் "கண்டுவிட்டார்களாம்" என்கிற மனப்போக்கு இப்படித்தான் வெளிப்படுகிறது. மாண்ட்டோவின் எழுத்து சாதரண மக்களின் விளிம்புநிலை வாழ்வைச் சொல்வதால், அதில் ஆன்மீகம் இல்லை என்றும், அதனால் அது இலக்கியம் இல்லை என்றும் ஒதுக்கும்படி செய்கிறது.

உண்மையில் இலக்கியம் இப்படியான குறுகிய எல்லையில் செயல்படுவதில்லை. இலக்கியம் ஒவ்வொரு சமூக அமைப்பையும் மொழிவழியாக புத்தாக்கம் செய்து கொண்டே உள்ளது. அந்தவகையி்ல் இலக்கியம் ஒரு மொழிநிறுவனமாக அல்லது மொழிஎந்திரமாக செயல்படுகிறது. ஜெயமோகன் தனது இலக்கிய கோட்பாடாக கொள்ளும் “ரசா-கோட்பாடு“ இலக்கியத்தின் மொழிச்செயலை மறுப்பது. சான்றாக விஷ்ணுபுரம் வாசித்தவர்கள் அனைவரும் அதில் அடையாளம் கண்ட ஆன்மாவின் ஆழத்து உணர்வை, தங்களுக்குள் வைத்து பாதுகாப்பதில்லை. இந்த ஆழத்து உணர்வு மொழியாக அதாவது உணர்வின்மையாக (நனைவிலியாக) கட்டப்படுகிறது என்கிற லக்கானிய விளக்கத்தைக் கொண்டது. அதாவது ஆழத்து உணர்வு என்பது உணர்வின்மையாக (நனைவிலியாக) அமைந்து விடுகிறது. ஒன்று உணர்வின்மையாக மாறியபின் அது உடலின் ஒரு அனிச்சை செயல்போக்காக மாறிவிடுகிறது. அது சூழலில், வாழ்நிலையில் ஒருவர் அறிந்தோ அறியாமலோ இயங்குகிறது. அவ்வியக்கம், ஒருபோக்காக மாறி சமூகத்தில் பற்றிப் பரவிவிடுகிறது. வாசிப்பவர்களின் வலைபின்னலில், விஷ்ணுபுரத்தை பார்க்காத-படிக்காத-கேட்காத ஒருவர்கூட அது ஏற்படுத்திய ஆன்ம உணர்வில் செயல்பட்டுக் கொண்டிருக்க முடியும். இப்படித்தான் இலக்கியம் மொழிவழியாக சமூகத்தின் போக்குகளை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. சங்கப்பாடல்கள் எப்படி பிந்தைய சாமான்ய தமிழர்களிடம் காதலையும் போரையும் சமூகவயப்படுத்தியதோ அப்படித்தான் இலக்கியம் எதிர்கால சமூகத்தின் சமூவயமாக்கலை உருவாக்கும் நிறுவனங்களாக செயல்படுகிறது.

இலக்கியத்தின் இச்சமூகவயமாதலை நிரகாரிக்கும் ரசனைவாதம், மாண்டோவின் கதைகளை எதிர்கொள்ளும்போது அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்பு என்பதாக வெளிப்படுகிறது. இதன் துணைபிரதி அதிர்ச்சியூட்டுவது இலக்கியத்தின் பணி அல்ல என்பதுவே. அப்படி அதிர்ச்சி ஊட்டினாலும் அது புறத்தில்தான் நிற்கிறது அகத்தில் அல்ல என்பதாக இது நியாயப்படுத்தப்படுகிறது. ஒருவன் வாழ்வில் சந்திக்காத தருணங்களை சொல்வதன் வழியாக அதிர்ச்சியூட்டுவது இலக்கியத்தின் பணிகளில் ஒன்றே. ரசனைக்கோட்பாட்டின் அடிப்படைகளான எட்டு மெய்ப்பாடுகளில் (இதில் ஸாந்தம் சேர்க்கப்பட்டு பிறகு நவரசமாக அறியப்பட்டது) ரௌத்ரம், பயம் என்கிற பாவங்கள், உணர்வுகள், அதிர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டவைதான். நாடகம் என்கிற நிகழ்த்துக்கலைகளுக்கு உருவாக்கப்பட்ட ரசா-கோட்பாட்டை எழுத்திலக்கியத்திற்கு பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விரிவாக ஆராயப்படவேண்டும். அக்கோட்பாட்டை பிற்காலங்களில் காவியங்களில் பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் சமஸ்கிருத அறிஞர்களால் விரிவாக நடத்தப்பட்டுள்ளது. இதனை இங்கு குறித்துக்கொண்டு தொடர்வோம்.

(தொடரும்)

- ஜமாலன் (13-02-2011)

குறிப்பு – இக்கட்டுரை நண்பர் ஒருவரின் பத்திரிக்கைக்காக எழுதப்பட்டது. இதுவரை இது வெளியிடப்பட்டதா என்கிற தகவல் இல்லை. அதனால்,தாமதம் (வெறும் 6 மாதங்கள்தான்) கருதி இங்கு பதிவில் வெளியிடப்படுகிறது.