கவிதையும் சிதைவாக்கமும் - சில பிரச்சனைகளும் கேள்விகளும். பகுதி:3

பகுதி-1

பகுதி-2

3.

உடல் X மனம் – என்கிற இணைஎதிர்வு (binary opposition) இலக்கியத் தளத்தில் பேச்சு X எழுதுதலாக வளரும்போது, தத்துவக்களத்தில், பொருள் X கருத்தாக – உருமாற்றம் கொள்கிறது. இத்தகைய எதிர்வுகளைக் கட்டமைத்ததன் மூலம் மொழியானது பொருளை – கருத்தைக் கொண்டும், கருத்தைப் பொருளைக் கொண்டும் அளவிடுகிறது. கருத்தைக் கொண்டு பொருளை அளத்தல் என்பது.. கருத்தின் செயல் வினைக்கான விளைப்பொருளாகப் பொருளை ஒடுக்குவதும் – பொருளைக்கொண்டு கருத்தை அளவிடுதல் என்பது பொருளின் செயல் வினைக்கேற்ப கருத்தை ஒடுக்குதலும் ஆகும். இதுவே, தத்துவத்தளத்தில் கருத்து X பொருள் – இணை எதிர்வு களத்தில் செயல்படும் “ஒடுக்கம்” (repression) அதிகாரம் (power) – என்கிற களத்தைக் கட்டமைக்கிறது. இக்களத்தின் செயல்பரப்பானது அனைத்துச் சமூக நடவடிக்கைகளையும் இணைக்கும் கண்ணியாகச் செறிவடைகிறது. இச்செறிவானது ஒற்றைப் புள்ளியில் குவியாமல், பலமட்டங்களிலும் விரிந்து பரந்து உள்ளது. இதையே அதிகாரத்தின் பல படித்தான (heterogeneous) தன்மை ‘சமுகம்‘ என்கிற நெசவின் ஊடுபாவாக அமைந்துள்ளது என்கிறோம்.

மொழியின் இணைஎதிர்வாக உருவான கருத்து X பொருள் முரண் அதிகாரத்தின் அமைப்பாக்க உத்தியாகச் செயல்படுகிறது. பொருளின் மீது கருத்தின் ஆதிக்கம் செலுத்தப்படும்போது பொருளானது, கருத்தின் புனைவு வடிவமாக உள்ளது என்கிற தத்துவச்சிந்தனை வளர்கிறது. இதுவே, பின்னால் கருத்துமுதல்வாதம்[1] போன்ற அபெளீகத் த்த்துவங்களாக வளர்கிறது.

அதிகாரக் களத்தின் உத்தியாக உருவான ‘அமைப்பாக்கம்‘ – சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் அமைப்பாக்கியதின் விளைவாக ‘மனித உடல்‘ – என்கிற பொருளும், கருத்துருவப் பிம்பங்களாக மாற்றியமைக்கப்படுகிறது. இதன் விளைவாக மனித உடலின் இருப்பில் ‘மனிதன்‘-என்கிற பிபம்பம் சார்ந்த கருத்தாக்கமே எஞ்சுகிறது. எனவே, சமூக மட்டத்தின் அனைத்துத் தளங்களிலும் அமைப்பாக்கத்தை உடைப்பதற்கான செயல்பாடே இந்நூற்றாண்டிக் அரசியல் செயல்பாடாகும் என்கிற இரண்டாம் நிலை அறிதலைப் பெறுகிறோம்.

சமூகத்தின் அமைப்பாக்கத்தினைக் கொண்டியங்கும் மொழியே அமைப்பாக்கத்தைச் சிதைக்கும் என்கிற உள்முரணைக் கொண்டிருப்பதால், சிதைவாக்கப்படாத மொழியைக் கொண்டியிங்குதல், பிறிதொருவகையில் இணை அதிகார அமைப்பாகச் செயல்படுதல் ஆகும். இவ்வகையில் சமூகத்தில் இயங்கும் அனைவரும் ஒருவகையில் இன்றைய அதிகாரக் களத்தின் கட்டமைப்பிற்கும், இருத்தலுக்கும் காரணமாக இருக்கிறார்கள். இப்படிக் கூறுவதால், வர்க்கம் சார்ந்த ஒடுக்குதலையும் புறக்கணிக்கவில்லை. ஆனால், வர்க்கப்பிரிவினைக்கூட மொழியியல் களத்தில் ‘பொதுமனிதநேயம்‘-என்கிற கருத்தியல் தொழில்நுட்பத்தின் வழியாக பதுக்கப்பட்ட வர்க்கமற்ற ‘மனிதஇருப்பு‘ – என்பதாக அமைப்பாக்கப்பட்டிருப்பதை உணரவேண்டும்.

அமைப்பாக்கத்தின் செயல்வெளியாக ‘மனிதஉடல்‘-இருக்கும்போது, செயல் உத்தியாக ‘மனம்‘-இயக்கமடைகிறது. எனவே, மனம் சார்ந்த மொழிகொண்டு எழுதப்படும் கவிதை ஒரு வகையில் சமூக அமைப்பாக்கத்திற்கு இணையாகவே செயல்படுவதுடன் சமூக அறிவுருவாக்கத் தளத்தின் அமைப்பாக்க உத்தியாகவும் இயக்கமடைவதை நம்மால் அறியமுடிகிறது.

அமைப்பாக்கம், சார்பற்ற முழுமுதல் பொருட்களை நோக்கியே தனது வினையில் விளைபொருளை கட்டமைக்கிறது. இவ்வாறு முழுமுதல் பொருளை அறிதலே அல்லது குறித்தலே மதம் சார்ந்த மொழியாக அறியப்படும்போது, கவிதையின் குறித்தலும் இதே செயல்பாடாக இயக்கமடைகிறது. எனவே, மத்த்தின் ‘கடவுள்‘ முழுமையான மனிதன் – என்ற தொழில்நுட்பமாக இணைவடிவம் கொள்கிறது. இந்நோக்கில் கவிதையின் இடமும், கடவுளின் இடமும் ஒப்பு நோக்கக்கூடியவை என்கிற நமது முற்கோள் நிரூபணமாகிறது.

(தொடரும்)


[1]கருத்துமுதல்வாதம்‘- என்பதற்குள் ‘தேடல்‘, ‘கடந்துசெல்ல்‘ – தொழில்நுட்பத் த்த்துவங்கள் போன்றவற்றைக் குறிக்கிறோம். முதலில் தோன்றிய த்த்துவச் சிந்தனை ‘பொருள்முதல்வாதமே‘- பிறகே ‘கருத்துமுதல்வாதம்‘ என்கிற த்த்துவச் சிந்தனை வளர்ந்து மேலோங்கியது என்கிறார், Devi Prasad Chattopadyaya. அக்கருத்து வரலாற்று ரீதியானது. அதற்கான கோட்பாட்டு பின்னணியாக இகைகொள்ளலாம் என்கிற புரிதலே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மொழியியல்ரீதியாக பார்த்தால் கருத்து /பொருள் –முதல்வாதங்களை கராறாகப் பிரித்துணரமுடியாது. ஏனெனில், கருத்தும் செயல்தன்மைக் கொண்ட பொருளே. பொருளும் செயலற்று ஒடுங்கிய கருத்தாக எஞ்சக்கூடியதாக உள்ளது.

- ஜமாலன் (மேலும். 1991)

கவிதையும் சிதைவாக்கமும் - சில பிரச்சனைகளும் கேள்விகளும். பகுதி:2

பகுதி-1

2

பெயரிடப்பட்ட பொருட்களினை அர்த்தங்களாக (குறிப்பீடுகளாக) மாற்றியமைத்ததன் மூலம் – பெயரிடுதல் (naming) தொழில்நுட்பம் அமைப்பாக்கத்திற்கு[1] உட்படுத்தப்பட்டு மொழியின் இரண்டாம்நிலை வினையாக அறிவுருவாக்கம் நிகழ்கிறது. பொருட்கள் பெயரிடப்பட்டவுடன், அவற்றைப் புரிந்து கொள்வதற்காக.. புதிய அறிதலுக்கு உட்படுத்தி.. பொருளின்மீது மேலும் பல புனைவுகளை உருவாக்குவதே அறிவுருவாக்கம் ஆகும். இக்கட்டத்தில் பொருளினைப்பற்றிய புதிய அறிதலானது, புதிய அறிவுநிலைகளாகக் கிளர்ச்சியுறுகிறது. இக்கிளர்ச்சியே பொருளையும், மனிதனையும் வித்தியாசப்படுத்த முனைகிறது. இதன் விளைவாக ‘மனம்‘ என்கிற தொழில்நுட்பத்தின் உருவாக்கம் நிகழ்கிறது.

மனம்-என்ற மொழிச்செயல் அல்லது மொழியாலான மொழி ஒன்றை கண்டறிவித்த்தன்மூலம், மனித உடலானது பொருளினால் சூழப்பட்டு ஏதுமற்று விகசித்து இப்பிரபஞ்சத்தைத் தனது செயல்பரப்பிற்குள் ஒழுங்கமைக்க முனைகிறது. இம்முனைதல், பொருட்களை அதன் இருப்பிலிருந்து பிம்பங்களாக மாற்றயமைத்து, அதன் மீது ‘மனம்‘ எனும் அபௌதீகப் பொருள்கொண்டு அதிகாரம் செலுத்துதலாக அமைகிறது. இதிலிருந்து மனம்-என்பதே பொருட்களின் இருப்பியற் புலமாக உருவான ஒருவகை கால-வெளித்தொடர்ம்ம் (time-space continuum)[2] என்கிற மனம் பற்றிய விஞ்ஞானக் கருத்தாக்கத்தை பெருகிறோம்.

இங்கு மனித உடல் ஒழுங்கமைத்த மொழியை இரண்டாகப் பகுக்க வேண்டிய தேவை எழுகிறது. உடல் சார்ந்தும்/மனம் சார்ந்தும் பிளக்கப்பட்ட மொழியானது கீழ்கண்டவாறு நடைபெற்று முழுவினையாக நிலைபெறுகிறது.

மனித உடல் பொருளுடன் புரிந்த முதல் வினையாக மொழியும்,

மொழியுடன் புரிந்த இரண்டாம்நிலை வினையாக அறிவும்,

அறிவுடன் புரிந்த மூன்றாம் வினையாக மனமும்,

மனதுடன் புரிந்த நான்காம் வினையாக கருத்துருவமும்,

கருத்துருவங்களுடன் புரிந்த தொடர்வினையாக

தத்துவ, படைப்பிலக்கியங்களும் உருவாகுகின்றன.

இவ்வினையானது இருமுனை உறவுகளைக் கொண்டிருப்பதால் ஒன்றையொன்று வளப்படுத்தி, பல்கிப்பெருகுகின்றது. இப்பெருக்கம் மொழியின் பலதள அடுக்குகளை உருவாக்குகிறது. இவ்வடுக்குகள் ஒருவகை ஒடுக்கத்தை பொருளின் இருத்தல்மீது சுமத்துகின்றன. இவ்வாறு உடல் சார்ந்து உருவான மொழியை ஒடுக்கி வளர்ந்த மனம்சார்ந்த மொழியன் விளைபொருளே மனித உடல் இன்று பெற்றுள்ள கலாச்ச்ரம், வாழ்க்கை, தத்துவம், இலக்கியம்.... இன்னபிற எனலாம். எனவே. இன்றைய மொழிக்குள் அடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு அடுக்குகளைச் சிதைப்பது பொருளை அதன் இருப்பில் எதிர்கொள்வதற்கான ஒரு செயலாகும் என்கிற முதல்நிலை அறிதலைப் பெறுகிறோம்.

(தொடரும்..)


[1] அமைப்பாக்கம் (structuration) என்பதை வரையறுத்தால் இயங்கும் ஸ்தூல உலகை, இயக்கமற்ற மொழியைக்கொண்டு மூடுவதன் மூலம், இயங்கியல்சார் அனுபவங்களை இறுகச்செய்து (fixed) இயங்காவியல் – என்கிற அபௌதீக்க் கருத்தாக்கத்தினால் சமூகத்தில் இயங்கும் அமைப்புகளை இயக்கமற்று ஒடுக்குதலே ஆகும்.

[2] time-space continuum காலவெளித்தொடர்மம் என்பது மினோவஸ்கி (Minowsky) என்கிற கணிதவியல் அறிஞரால் உருவாக்கப்பட்ட வடிவியல் இயற்பியல் கருத்தாக்கமாகும். ஒரு ‘பொருள்‘ இருக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட வெளியை (space) நிரப்பிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் (time) இருக்கிறது என்று பொருள். எனவே, பொருளின் முப்பரிமாண வெளிசார் அளவீடுகளுடன் காலம் என்கிற நான்காவது பரிமாணத்தைச் சேர்த்தே கூறமுடியும். இதையெ கால-வெளித்தொடர்ம்ம் என்கிறோம். இது நாற்பரிமாணத்தில் (four dimensional) காலத்தையும் வெளியையும் இணைக்கும் ஒரு கருத்தாக்கமாகும். இது காலத்துடன் ஒருபடித்தான நேரியல் (linear) உறவைக் கொண்டிருக்கிறது. அதனால்தான் காலம் என்ற ஒன்றினை (நேற்று-இன்று-நாளை) என நேர்க்கோடு வளர்ச்சியில் பார்க்கிறோம். “மனமானது இதேபோல் காலத்தையும் வெளியையும் இணைத்து கால ஒழுங்கிற்கு ஏற்ப வெளியைச் செயல்பட வைக்கிறது.

- ஜமாலன் (மேலும். 1991)

கவிதையும் சிதைவாக்கமும் - சில பிரச்சனைகளும் கேள்விகளும் – பகுதி: I

இக்கட்டுரை மேலும் 1991 இதழில் வெளிவந்தது. “மொழியும் நிலமும்” (2003) நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.  கவிதை பற்றிய தொடர்கட்டுரைகளின் புரிதலுக்காக இங்கு வெளியிடப்படுகிறது.  இருபது வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்று இதில் பல கருத்துக்களில் விமர்சனங்கள், மாறுபாடுகள் இருந்தாலும், அடிப்படைகளில் பாரிய மாற்றம் இல்லை என்பதால், பழைய புகைப்படம் தரும் நினைவுடன மீள்பதிவு செய்யப்படுகிறது.

நான் கவிதையைப்பற்றிப் பேசப்போகிறேன். கவிதையைப் பேசுவது ஒரு மதவாதி கடவுளைப் பேசுவது போல் - என்கிற மேற்கோளைக்கொண்டு பேச்சைத்துவங்குவோம்.

கவிதை மனித உழைப்பிலிருந்து விளைந்தது[1] - என்கிற மார்க்சிய ”உண்மையை” அறிவோம். கவிதை மனித உழைப்பின் பிறிதொரு விளைவான மொழியினை மூலப் பொருளாகக் கொண்டு விளைந்த ஒரு செயலபாடாகும் என்பதால், மொழி குறித்த நமது சிந்தனைகளைப் படிப்போம்.

1

மனிதனின் அடிப்படை அலகாகிய உடல், இயங்குதல் மூலம் பெற்ற இயக்க ஆற்றலை (mechanical energy) ஒலி ஆற்றலாக (sound energy) மாற்றுகிறது- என்பது ஒரு விஞ்ஞான உண்மை. இதன்படி மனித உடலின் இயக்கம் – இருகூறுகளைக் கொண்டிருக்கிறது. 1. உடலின் தசைசார்ந்த இயக்கம் 2. இயக்கம் வெளிப்படுத்தும் சப்தம். இவை மனித உடலுக்கு மட்டுமே கிடைத்த சிறப்பு வினையாகக் கொள்ள முடியாது. என்றாலும் வெறுமையாய் உருவாகிய இப்பிரபஞ்சத்தை இவ்வினையின் மூலமே மனித உடலானது, தன்னை மையமாகக் கொண்ட ஒரு மனிதவியல் பிரபஞ்சத்தை (humanized universe) கட்டியமைத்துள்ளது. இதனை சாத்தியமாக்கிட மனித உடல் கண்ட தொழில்நுட்பமே மொழி.

மனித உடலானது, தனது தசை சார்ந்த உடலியக்கம் மற்றும் இயக்கம் எழுப்பிய சப்தத்தின் மூலம் – தான் எதிர்கொண்ட பொருளுடன் வினைபுரிந்து அதனைத் தனது இருப்பிற்குள் கொண்டுவர முனைகிறது. “தானேயான பொருளை” –“தனேக்கேயான பொருளாக”- மாற்றியமைக்க முனைகிறது. அதற்கான காரணிகளாக உடலியக்கம், சப்தம் – ஆகியவற்றைக் கொள்கிறது. இவற்றால், தான் எதிர்கொண்ட, தனது இருப்பிற்கு அப்பால் உள்ள, தன்னை அச்சுறுத்தும் பொருளை (ஏதோ ஒன்றை) தனக்கேயான, தனது இருப்பிற்குள்ளான பொருளாக மாற்றியமைக்கிறது. இம்மாற்றமே சைகைகள் அல்லது உடலியக்கம், சப்த ஒழுங்கு அல்லது பெயரிடுதல் – என்பதாகச் செயல்படுகிறது. தான் எதிர்கொண்ட பொருளைத் தனது உடலியக்கம் மூலம் குறித்தோ அல்லது பெயரிட்டோ தனது மூளையின் நினைவுப்பதிவக அமைப்பில்[2] (memory storage unit) பதியவைக்கிறது. இவ்வாறு பதியவைக்கப்பட்ட பல பெயரிடுதல்கள் அல்லது குறித்தல்களே மனித உடலின் முதல் தொழில்நுட்ப வளர்ச்சியாக மொழியை உருவாக்குகின்றன.

எனவே, மனித உடலானது தான் எதிர்கொண்ட பொருட்களைக குறியிட்டு, பெயரிட்டதன் மூலம், பொருட்களின் மீதான விரிவான அதிகாரக் களத்தைக் கட்டமைக்கிறது. இந்நிகழ்வின் எதிர்வினையாக மொழியும், மொழிசார்ந்த சொல்லாடல்களும் மனித இருப்பை நிர்ணயிப்பதாக உருமாறுகின்றன. இந்நிலையில் பொருட்களின் ‘தானேயான அம்சம்‘ இருப்பழிந்து ‘தனக்கேயான அம்சம்‘ பெயர் அல்லது குறியீடு மட்டுமே எஞ்சுகிறது. ‘மரம்‘ என்ற பொருளைக் குறிக்க உருவான ‘மரம்‘ என்ற சொல், ‘மரம்‘ – என்ற சப்தம் குறிப்பதே மரம் – என்ற பொருள் என்பதாக மாற்றியமைக்கப்படுகிறது. ‘மரம்‘ என்கிற சொல் இல்லாவிட்டாலும், மரம் – என்கிற பொருள் இருக்கும். ஆனால் அதன் இருப்பு மனித பிரபஞ்சத்திற்குள் இருக்காது. அதனால் மரம் சார்ந்த கருத்துக்கள், புனைவுகள், அறிவுகள் – உருவாகி இருக்காது. மரம் குறித்த இவ்வறிவு இல்லாதபோது மரம் – மனித உடலின் வெளிக்குள் இயக்கமற்றதாக, இருத்தலற்றதாக இருக்கும். எனவே, பொருளின் மீதான அதிகாரக்களம் அறிவுருவாக்கத்தின் மூலமாக கருத்துக்களின் அதிகாரகக்களமாக விரிவடைகிறது. மனித உடல் தான் எதிரிகொண்ட பொருளின் அச்சத்துடன், தான் உருவாக்கிய கருத்துக்களின் அச்சமும் சேர்ந்து இரட்டை ஒடுக்குதலுக்கு உட்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இவ்வொடுக்குதலின் சாத்தியப்பாட்டிற்குள்ளேயே ‘மனிதன்‘ – என்கிற கருத்துப் புனைவு மனித உடலைக் குறிப்பதாகப் புனையப்பட்டுள்ள்து. இதனையே நாம் மனிதன் கைக்கொண்ட தொழில்நுட்பமான மொழி பிறகு மனிதனையே கட்டமைப்பதானது என்கிறோம்.

(தொடரும்..)


[1] கவிதையின் தோற்றம் குறித்த பிரிட்டிஸ் மார்க்சிய அறிஞரான ஜார்ஜ் தாம்சனின் “மனித சமூக சாரம்“ (Human Essence) என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

[2] Memory Storage Unit என்கிற computer-ன் உள் அமப்புகளில் ஒன்றையே `நினைவுப் பதிவக அமைப்பு‘ என்று கூறியுள்ளேன். இவ்வமைப்பானது நாம் எவ்வெவற்றை நினைவில் பதியவைக்க விரும்பி எழுதுகிறோமோ அவற்றைப் பதியைவைத்துக் கொள்ளும். நமது தேவைக்கு ஏற்ப அந்நினைவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே அமைப்பே நியூரான்களைக் கொண்டு மூளையில் பதிக்கப்படுகிறது மனித உடலில்.

- ஜமாலன் (மேலும். 1991)