திரையில் விளையாடும் மனப்பிறழ்ச்சி கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - பகுதி : 4

பகுதி –1

பகுதி – 2

பகுதி - 3

கிம் கி-டுக் திரைப்பயணம்

vlcsnap-2011-08-06-02h41m28s36 கிம் கி-டுக்கின் படங்கள் ஆசிய காட்டுமிராண்டித்தனத்தை காட்டுவதான ஒரு வாசிப்பை ஐரோப்பிய மையவாதப் பார்வையிலிருந்து தருவிக்கலாம். ஐரோப்பா கீழ்திசை நாடுகளை வர்ணித்த பாலியலும், வன்முறையும் நிறைந்த நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் என்கிற கருத்தாக்கத்தை இப்படங்கள் நிதர்சனமாக காட்டுவதாக இதனை நீட்டிக்கலாம். இதன்மூலம் ஐரோப்பா இத்தகைய படங்களை கொண்டாடி முன் வைப்பதன்மூலம், ஒருவித ஐரோப்பிய மையவாத அரசியலை மறுஉருவாக்கம் செய்வதும், அதற்கான சான்றாக இதனை உள்ளீட்டு அளவில் இயக்கமடையச் செய்வதாகவும் கொள்ளலாம். அரேபிய இஸ்லாமியத்திற்கு எதிராக ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் படங்களை உலகப்படங்கள் என்கிற வகைத்திணையில் ஐரோப்பிய திரைஉலக-தீர்மானிப்பாளர்கள் முன்வைக்கிற அரசியலுடன் இதனை இணைத்துக்காணலாம்.

இவரது படங்கள் முற்றிலும் வித்தியாசமான உடல்களை காட்சிப்படுத்துவதால், குறிப்பாக பெண் உடல்களை கீழ்நிலைப்படுத்துவதாக புரிந்துகொள்ளப்பட்ட பெண்ணியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டன. இப்படங்ளில் உள்ள உடல்கள் முன்சொன்னதைப்போல யதார்த்த உடல்களாக கருதுவதால் வரும் சிக்கலே இது. சினிமா காட்டும் உடல்கள் யதார்த்த உடல்கள் அல்ல. அவை சினிமாட்டிக் உடல்கள் எனும்போது அந்த உடல்கள் ஏற்படுத்தும் புலனியக்க செயல்பாடுகளே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இப்படங்கள் பெண்ணை ஒரு நுகர்வுப்பொருளாகவோ, அல்லது மீக்காமம் கொண்ட யதார்த்த உடல்களாகவோ சித்தரிக்கவில்லை, மாறாக உடலின் சாத்தியப்பாடுகளை விவரிக்க முயல்கிறது. பார்த்து பழகிய புலனிற்குள் ஒரு உடசைலை ஏற்படுத்துகிறது.

அழகியல்ரீதியாக இப்படங்கள் ஒரு இயங்கும் ஓவியங்களைப்போன்று நமக்குள் யதார்த்தை மீறிய ஒரு அழகுணர்ச்சியை கட்டமைக்கிறது. காதல் என்பது அடிப்படையாக உள்ளது இவரது படங்களில். காதலை பலவிதமான சொல்லாடல் தளங்களில் வைத்து ஆராயும் ஒரு திரை முயற்சி. காதலையும் குரோதத்தையும், பாலுறவு, வன்முறை என்கிற மனித மனதின் அடிப்படை இயல்பூக்கங்களை தனது பேசுபொருளாக கொள்வதால், இப்படங்கள் இயல்பு திரிந்த பிம்பங்களின் இயக்கமாக உள்ளது. ஒருவகையில் இப்படங்களை ஆழமன இயக்கமாக கொண்டு வாசிக்கலாம். பொரும்பாலான படங்களிலும் கண்காணிப்பு என்பது அடிப்படிடையான அரசியல் ஆயுதமாக அல்லது மீ-காணுதல் என்பது இன்றைய உடலரசியல் நிலையாக மாறி உள்ளதை சொல்லக்கூடிய காட்சிகள் உள்ளன. அரசு மற்றும் இந்த உலகின் சமூக அதிகாரம் கண்காணிப்பின் வழியே இப்படி தனிமனித உடல்களை தனது அதிகாரத்தின் விருப்புறுதி பாயும் எந்திரங்களாக கட்டமைத்துள்ளது என்பதை பலவிதமாக காட்சிப்படுத்த முனையும் படங்களே இவைகள்.

டெல்யுஸ்-கத்தாரியால் முன்வைக்கப்பட்ட அங்கங்களற்ற உடல் (body without organs) அல்லது உறுப்புகளற்ற உடல்[1] என்கிற ஒன்றின் ஒரு குறிப்பிட்ட தன்மையை விளக்கக்கூடியதாக உள்ளது இவரது படங்கள். அங்கங்களற்ற உடல் அல்லது உறுப்புகளற்ற உடல் என்பது சமூகவிதிகளினால், சமூக அதிகாரத்தினால் கட்டப்பட்ட எந்த ஒரு அங்கத்திலும் அல்லது அமைப்பிலும் அல்லது நிறுவனத்திலும் (ஆர்கனைசேஷன்) பங்குபெறாத உடல். இந்த உலகை ஒரு அங்கமாக சுருக்கிவிட்ட நிலையில், எந்த ஒன்றும் ஒரு அங்கத்தின் பிரதிநிதியாக மாறிவிட்ட நிலையில், உடலானது ஒரு உயிர்-மருத்துவ அங்கமாக மாறிவிட்ட நிலையில், சமூகத்தின் எந்த விதிமுறைக்கும் மேல்-கீழான அதிகார வரிசைக்கும் உட்படாத, அங்கங்களை இழந்த உடல்களாக மாறிவிட்ட உடல்களுக்கான முயற்சியே கிம் கி-டுக்கின் படங்களில் வரும் உடல்கள் எனலாம். அவர்கள் சமூக-வெளியின் அங்கங்களாக இருப்பதில்லை. எந்த சமூக-அறவிதிக்கும் உட்படுவதில்லை. முற்றிலும் அங்கங்களை விட்டு வெளியேறிய உடல்களாக உள்ளனர். உடலின் விருப்பு என்பது உருவாகி பாய்ந்து செல்லும் புள்ளிகளைக்கொண்ட உடல்களாக உள்ளனர். சமூகத்தின் விருப்பை தனக்குள் பாயவிடும் சமூக-அங்கத்தினராக உள்ள உடல்களாக அல்லாமல், தனக்கான விருப்பை தன்னிலிருந்து பாயச்செய்யும் உடல்களாக உள்ளது. கிக் கி-டுக்கின் திரைப்பட உடல்கள் இத்தகைய அங்கங்ளற்ற உடல்களாக நிறுவனம் சாராத பழகிய அங்கங்களின் (அக்சுவலைஸ்) செயல்பாடுகளை மறுத்து கற்பனார்த்தம் பொருந்திய (விர்ட்சுவலஸை) செயல்பாடுகளில் அதிகம் செயல்படுபவையாக உள்ளன. ஒருவிதமான மனப்பிறழ்ச்சி உடல்கள் அவை. சமூக விதிகளுக்கும், அதன் நிறுவன அமைப்பிற்கும் எதிராக செயல்படும் உடல்கள். இத்தகைய உடல்களை தனது சினிமா மூலம் காட்சிப்படுத்தியதன் மூலம் நமது புலனில் ஒரு மூலக்கூறு மாற்றத்தை செய்ய முயல்கிறது இப்படங்கள்.

(முடிந்தது.)

ஜமாலன் (02-07-2011 – 05-09-2011) -  நிழல் அக்.-டிசம்பர் 2011


[1] Body without organ என்பதை தமிழில் சொல்வதில் உள்ள சிக்கல் ஆர்கன் என்கிற சொல் உறுப்பு (organ) என்பதையும் அமைப்பு (organization) அல்லது நிறுவனம் என்பதையும் குறிக்கும். அ ங்கங்களற்ற அல்லது உறுப்புகளற்ற உடல் என்பதை ஒரு உடலின் உறுப்புகள் அற்ற நிலையாக புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது சமூகவிதிகளுக்குள் அல்லது எதாவது ஒரு சமூக அங்கத்திற்கு உட்பட்ட உடல் அல்ல என்பதையே குறிக்கும். இன்றைய சமூக வாழ்க்கை என்பது நிறுவனமயமாகிவிட்ட நிலையில், அதாவது நமது உடல் உறுப்பகள்கூட நிறுவனவிதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது என்பதாக புரிந்துகொள்ள வேண்டும், இந்நிறுவனங்களின் விதிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு உடலே பன்மைத்தன்மைக் கொண்டதாக, பாசிசத்திற்க எதிரானதாக இருக்கும் என்பது இவர்களது நிலைபாடு. இது ஒரு கருத்தாக்கம் அல்ல. ஒரு இச்சமூகத்திற்க எதிரான சோதனை, செயல்முறை அல்லது பாசிசத்திற்க எதிரான வாழ்நிலை. இது விரிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

ஜமாலன் சொன்னது…

நன்றி தனபாலன்