காட்சிவிளையாட்டு கவிதைகளாக சிலவற்றை வாசித்து பார்க்கலாம். ”மதில்” கவிதை முதல் வாசிப்பில், ஒரு பாலியல் உந்தம் சார்ந்த கவிதையாக தெரிகிறது. பூனை படிமமாகவும் இருக்கலாம். பூனை போன்றதாகவும் இருக்கலாம். பூனை என்ற பெயர் பெற்றதாக இருக்கலாம். பூனையை பகடி செய்வதாகவும் இருக்கலாம். ஒரு கனவுக்காட்சியாக விரிகிறது இக்கவிதை. இருளில் உறங்கும் ஒருவரின் நள்ளிரவுக்கனவில் நிகழும் காட்சி மதில் மேல் நகரும் பூனை. துணைவிடுத்த விழாநாளில் என்பதில் துணை பிரிந்த ஒரு உடல் காட்சியாகிறது. சங்ககாலத்தில் நிகழ்வதைப்போன்ற காட்சியமைப்பில் இன்றைய ”கள்ளப்பாலியல்”(?) காலந்தாண்டி விகசித்திருப்பதை சொல்லும் கவிதை. இக்கவிதையை தொல்காப்பிய இறைச்சி முறைமையை பயன்படுத்தி திணை அடிப்படையில் வாசித்துப் பார்க்கலாம். கவிதையில் வரும் யாமம் குறிஞ்சித்திணை. அதன் உரிப்பொருள் புணர்ச்சி. கார்காலக் கவின்மரம் என்பதில் கார்காலம் மருதத்திணை. அதன் உரிப்பொருள் ஊடல். கவிதை புணர்ச்சியில் துவங்கி ஊடலில் முடிகிறது. கவிதையின் உள்ளமைப்பின் ஆழ்தளதம் இது. துணையற்ற உடலின் காமம் புணர்ச்சி-ஊடல் என்பதற்கு இடையிலான சிக்கலாக மாறி உள்ளது. ”சுற்றும் நாரும்”..... என்பதால் பாலியல் கள்ளங்கள் பற்றியதற்கான குறிப்பு பொருள் உள்ளது. பூனை வழக்கு மொழியில் ”கள்ளப்பாலியலின்” ஒரு குறியீடு. பூனையாகுதல் என்கிற நிலையிலேயே ”கள்ளப்பாலியல்” நிகழ்வுகள் நடப்பதும் சகஜம்.
”கண்” கவிதையில் மூன்று காட்சிகள் வருகிறது. சங்கப்பாடலின் அகச்சித்தரிப்பு போன்றதொரு இயற்கை வருணனை. காடு அருவி... குளம் வண்டு... குழலி கண்.. என்பதாக ஒரு சிக்கலான வளர்ச்சி உள்ளது கவிதையில். மேலோட்டமாக இது ஒரு இயற்கை வர்ணனை.. இறைச்சியில் பார்த்தால்.. திரும்பவும் குறிஞ்சி.. மருதம் என்பதாகத்தான் வளர்கிறது. காடு.. குளம்.. இந்த பரப்பில் பயணிக்கிறது கவிதை. இதன் அகப்பரப்பு.. புணர்ச்சி.. ஊடல்.. என்பதாக இருக்கலாம். சிக்கல் என்ன வென்றால் மறையும் கண்.. பொதுவாக புராணிகத் தொன்மத்தில்... கண் என்பது யோனியையும்.. பாம்பு என்பது லிங்கத்தையும் குறிக்கும் அடையாளங்கள். அகக்கண்ணும் ஒன்று உண்டு. மறையும் கண் என்பது இன்னும் கொஞ்சம் நுட்பமாக உள்வாங்கப்படவேண்டும். வளியிலா அருவி. காற்றில்லா அருவி எப்படி வேறிடம் விரையும். தடம் மாறிச் செல்வதாக கொள்ளலாம். காட்சி எளிமையானது. குளத்தின் மலரில் தேன் குடித்த வண்டைக் கண்டு கூவும் குஞ்சின் வாயில் பச்சைக்காட்டில் தடம்மாறிச் செல்லும் அருவியில் உள்ள நதிமீன் ஓடும். இது ஒரு அகக்காட்சியாக கண்ணில் தோன்றி மறைகிறது. இது ஒருவகை உணவுச்சுழற்சிபோல.. இரைதேடும் வேட்டையாகிப்போன வாழ்வின் சுழற்சி பற்றியது எனலாம். ஒன்றின் உயிர்ப்பு மற்றொன்றின் இரை என்கிற உள்ளோட்டம் ஒன்று உள்ளது இதில்.
கருத்தாக்க விளையாட்டாக சில கவிதைகளை வாசித்து பார்க்கலாம். ”புகைந்திட்ட பசுஞ் சாம்பல்” இக்கவிதை மொழி புணரப்பட்ட நிலையில் இணைத்து எழுதப்பட்டுள்ளது. இதனை கீழ்கண்டவாறு பிரித்து பொருள்கொள்ளலாம். பெரும்பாலான கவிதைகளில் முபீன் இத்தகைய உத்தியை கையாள்கிறார். சொற்களை இணைத்து சப்தக்கூறுகளாக பிரிப்பது. சற்று தமிழ் இலக்கணமுறைப்படி வார்த்தைகளை பிரித்து வாசிக்கவேண்டும். இப்படி பிரிக்கமுடியாமை வாசிப்பிற்கான சங்கடத்தை தருவதாக உள்ளது. மொழிப்பரிச்சயமற்ற வாசிப்பாளர் இக்கவிதைகளை எதிர்கொள்வதில் பெரும் இடர்ப்பாட்டை அடைகிறார்.
குழையுந் தீ திறன் நள்ளும் மாலை
மஞ்சிளம் கவ்வியது இல்லாது ஆகினும்
இவ்வுயரில் ஆகாதா எம் மஜ்ஜையும் மேவி அங்கனத்தில்
உலகம் முயங்கல் இல்லாது உய்யச் சிறும் விளை நீலத்தில்
ஆகாயத்து உய்யும் முகை அந்தியில் அகவி இடமாகத் திட பசுஞ் சுவையது உவப்ப
மையல் ஆலில் அலய யவ்வனத் தீகை அடர்கோவை பகரும்
லிங்கம் யார்த்திட்ட கையறு வெளிர் சாந்த மிக
மடுவுடன் அது அவ்விய அடங்கா உரு பரந்தக்கப் பொன் கண்ணின்
நக நைய்ய அல்லாக அதிற்பட நாடி இன்னி இக்கரும் புகை
அகலல் ஆகா மந்தையின் நந்தியின் இடர் பசுமை கலில்
உலவி கண்ணி அங்க அயித் திறம் அடர் சாம்பலாலே.
திருநீற்றில் துவங்கும் இக்கவிதை பசு இடபம் லிங்கம் என சுத்தமான சைவசிந்தாந்த கவிதையாக உள்ளது. இது திருமந்திரத்தை நினைவூட்டக்கூடியது. சைவ ஆகமத்தில் முக்கியமானது திருமந்திரம். மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூலன் ஒருநாள் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு திருமந்திரம் எழுதியதாகக் கதை உண்டு. “தன்னை நன்றாக தமிழ் செய்யும் பொருட்டு என்னை படைத்தனன் இறைவன்” என்கிறார் திருமூலர். சிவத்தை சைவ சித்தாந்தத்தை தமிழ் படுத்தியது திருமந்திரம். அதைப்போல் இக்கவிதை ஏதோ ஒன்றை தமிழ்படுத்த முயல்கிறது. இப்படி சைவக் கருத்தாக்க விளையாட்டாக தமிழ் மொழியை போலச் செய்கிறது இக்கவிதை.
“இடைச்செருகல்“ தொல்காப்பியத்தின் ஐம்புலன் வரையறையை இடையீடு செய்கிறது. தொல்காப்பியம் உயிர்களை புலன் அடிப்படையில் வகைப்படுத்தியதை இக்கவிதை, புலனற்ற நிலையில் எதிர்நிலையில் வகைப்படுத்தி இடைச்செருகல் செய்கிறது. நிறை உள்ளது உற்றறியக்கூடியது என்றால் நிறையற்றதை என்ன செய்வது? என்பதாக மனம் என்கிற ஆறாம் அறிவுவரை இக்கேள்வியை நீட்டிச் செல்கிறது கவிதை. ஆராயும் அறிவற்ற மனம் மனமற்றது என்பதாக புலனின் நுட்பங்களை பயன்படுத்தாதவர்களை இந்த வகைப்பாட்டிற்குள் வைத்து விளையாடும் ஒரு கருத்தாக்க விளையாட்டு இக்கவிதை. புலனின் கூர்திறத்தை வலியுறுத்துகிறது.
“இன்மை..நிகர்..உயிர்..புகா..அறா..துயில்..புல..ஆழ..ஓடும்..களி..கூட எனும் எழுத்து...“ என்ற கவிதை தொல்காப்பியத்தின் எழுத்து பிறப்பியல் சூத்திரத்தை போலச்செய்யும் கவிதை. அதாவது எழுத்தின் வரைபட விளக்கமாக காட்டி, அதன் சப்தக்கூறை நீக்கிவிடுகிறது. தொல்காப்பிய எழுத்து பிறப்பியலில், எழுத்தின் சப்த உருவாக்கம் பற்றிய சூத்திரங்களை வடித்தார். இக்கவிதை எழுத்தை அதன் வரைபட விளக்கமாக மாற்றி விவரிக்கிறது. ஒருவகையான பேச்சு எழுத்து என்கிற முரணாக தொல்காப்பியத்துடன் விளையாடும் கவிதை இது. “அவளகரம் அவனகரம்“ இக்கவிதையும் ளகரம் னகரம் என்கிற மொழியின் சப்த வித்தியாசம் எப்படி பால்வேறுபாட்டு நிலையாக பாலினமாதலை குறிநிலைப்படுத்துகிறது என்பதை பகடி செய்யும் கவிதை.
“அன்பின் ஆறாமொழி“ அன்பை எப்படி எல்லாம் உருவகப்படுத்தியும், படிமப்படுத்தியும். காட்சிப்படுத்தியும் மொழிவழியாக அன்பு என்பதை சொல்லி மாளமுடியாத நிலையாக உள்ள இலக்கிய-காதல்-அன்பு என்கிற மொழிதலை விளக்கும் கவிதை. “அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்“ என்கிற வள்ளுவத்தின் நவீன மொழிதலாக உள்ளது. இன்றுவரை தாழ்கிடைக்காத தவிப்பாக உள்ளது இந்த அன்பும், காதலும் என்கிற எள்ளலாக இதை வாசிக்கலாம்.
தமிழ் கவிதைகளில் சித்திரக்கவி எனப்படும் பழைய வகைப்பட்ட வரைபடக் கவிதைகளை உருவாக்கி வரைபட விளையாட்டாக எழுதப்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பாம்பு நெளியும் வடிவில் பத்திகளை எதிர் எதிராக பிரித்து எழுதப்பட்ட கவிதை “அரவக்கனா“. இக்கவிதைக்கு இடையில் உள்ள வெற்றிடத்தை உற்று நோக்கினால் கருப்பெழுத்துக்கள் மறைந்து இடையில் உள்ள வெள்ளை வெற்றிடம் பாம்பாக நெளிவதைக் காணலாம். ஒருவகையான கட்புலக் கவிதை இது. இக்கவிதையை மரபான உளவியலில் வாசித்தால்.. (மரபான உளவியல் சிந்தனைகளை விட்டு விலகிச் செல்லும் ஒன்றைப் பற்றி சிந்திக்கிறேன் என்பதால்) இது ஆதித் தொல்மனப் படிமமான அரவம் என்பதைக் குறிக்கும் லிபிடனல் ஆற்றல் அல்லது உட்செறிக்கப்பட்ட பாலியல் ஆற்றல் பற்றியதாக வாசிக்கலாம். கனவுகளில் பாம்பு என்பது ஆதிக்காலம் முதல் ஆண்குறியின் (லிங்கம்) குறியீடுதான். இது ஏவாளின் தொன்மத்தில் துவங்குகிறது. பாம்பு பரமபதத்தில் தீமையாக சித்தரிக்கப்படுதல் என்பதும் பாலியல் தீமை என்கிற மதம் சார்ந்த கருத்துப்புனைவின் ஒரு குறியியல் விளையாட்டு வடிவம்தான். சின்ன சின்ன ஏணிகளில் முன்னேறி பாம்பால் (பாலியலால்) தீண்டப்பட்டவன் தாழ்நிலைக்கு வந்த வாழ்வை துவக்க வேண்டும் என்பதே பரமபதத்தின் உள்சட்டகம். பெரிய பாம்பு கடித்தால் சனியன் பிடித்துவிட்டது என்பார்கள். சின்ன சின்ன பாம்புகளும், தற்காலிக பாலியல் விருப்பை குறிப்பதே. கவிதையின் ஆழ்தளம் இந்த ஆண்குறியாதிக்க பாலியல் பற்றியதாகவே உள்ளது. இக்கவிதை பரமபத வரைபடத்தை வைத்து எழுதப்பட்டள்ளது.
கவிதையில் நாகத்தின் ரத்தின படிகம் துவங்கி முழுதும் பாலியல் குறியீடாக வளர்கிறது. கவிதையை முடிக்கும் வரிகள் அருமை. முயங்கிய சேர்ப்பில் மறந்து / தயங்கிய கூடலில் தொலைந்து /இயங்கிய சூதில் கலைந்து /பதுங்கிய வேடத்தில் அலைந்து / பறிபோனது பரமபதத்து படி. பாண்டவர்களின் சூதாட்டத்தை நினைவூட்டுகிறது. பெண் உறவை, உடமையாக்கி அவளது உடலை வைத்து சூதாடிய கதைதானே அது. பரமபத விளையட்டிற்குள் சிக்கிக்கொண்டுள்ள வரலாறு மற்றும் உடல்கள் பற்றிய அறிவை சிந்திக்கத் தூண்டுகிறது. சொற்களின் அர்த்தங்களை நீக்கிவிட்டு சப்தங்களில் விளையாடுவதில் திளைக்கும் இவரது கவிதை பாணியில் இது சற்றே வித்தியாசமானது. இருந்தும், விடம்-படம்-இடம்-தடம்-உடன்.. என வரும் இந்த வார்த்தைகளின் சப்தசேர்க்கை லயத்தை தருவதாக உள்ளது. "இணைபிரிந்த மோகஊழ்" நல்ல சொற்சேர்க்கை. கவிதைக்குள் காதல், ஊடல், கூடல், முயங்கல், திளைத்தல் என்கிற ஒரு வாசிப்பும் வந்துபோகிறது. காதல், களவு, காமம் என்கிற மொழிச் சேர்க்கைக்குள்ளும் நகர்கிறது கவிதை. வழக்கமான தத்துவச் சிக்கல்கள் பற்றிய மாயாவதம் இல்லாமல் மனதின் உள்மனப் படிமங்களின் நுட்பத்தில் நகர்கிறது கவிதை. இது சற்றே ஆழ்மனதின் ஒட்டுதலுடன் வெளிப்பட்ட "நான்" உள்ள கவிதையா? "நானி"ன் துயர் வெளிப்படும் கவிதையா?
“அமிழும் உலகு“ மணற்கடிகை வடிவில் எழுதப்பட்டுள்ள கவிதை. உலகம் காலத்தில் மேலும் கீழுமாய் குவியும் மணற்துகளாய் உள்ளதை காட்சியாக்கிறது. சொற்கள் காலக்கடிகையின் சிறுதுளையில் மேலிருந்து கீழே வீழ்ந்து கொண்டிருப்பதைப்போல் எழுதப்பட்டுள்ளது. சொற்களின் மணற்குவிப்பு மேலும் கீழுமாய் கடிகையை சுழற்றினால் சொற்களும் மாறி புதிய பொருளைத்தரலாம். உலகம் காலத்தில் மணற்துகளாய் அமிழும் என்கிற படிமம், வரைபட வடிவத்தில் உருவாகுவது இக்கவிதை. “வலி“ கவிதையும் வலி பெருகப்பெருக விரிந்து சென்று வலி மின்னலைப் போல் தோன்றி பெருகிக் கொண்டிருப்பதை வரிகளின் பெருக்கமாக.. வலிக்கும் கணமாகவே கவிதை எழுதப்பட்டுள்ளது. வலியும் கவிதையின் வளர்ச்சியும் ஒன்றாக பெருகுவதாக, அதாவது வலி உணரஉணர பெருகிக்கொண்டிருப்பதை அந்த கணத்தையே மொழியாக்கி எழுதப்பட்ட கவிதை. “குகை வயங்கு கேணி“ என்கிற கவிதையும் கேணி போன்று அரைவட்டவடிவில் எழுதப்பட்டுள்ளது. இக்கவிதைக்குள் முன்சொன்னதைப்போல சொற்கள் பிரிக்கப்படாமல் கோர்த்து எழுதப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் புரிந்துவிட்டதாகவோ அல்லது விளக்கமுடிந்தவை என்றோ சொல்வதற்கில்லை. புரியாமை என்பது தன்முனைப்பு சார்ந்தது என்ற வகையில், புரியாத ஒன்றை எதிர்மறையாகவோ, புறம்பானதாகவோ பார்க்க வேண்டியதில்லை. இது ஒரு பயிற்சி என்பதாக வாசிப்பை விரிவுபடுத்துகிறது. வாசிப்பில் புதிய சிந்தனைகளைத் தூண்டுவதாக அமைகிறது. புதிய உணர்வுகளை தருவதாக உள்ளது. பழகிய வெளியிலிருந்து அப்புறப்படுத்திவிடுகிறது. புதிய வெளிக்குள் கவர்ந்திழுக்கிறது. இக்கவர்ச்சி ஏற்படுத்தும் கேள்வி இத்தகைய ஒரு புதிய முயற்சி அல்லது மொழிச்சிதைவு கொண்ட படைப்பு உருவாகுவதற்கான தேவை என்ன? இது ஏன் தனிப்போக்காக உருவாகி உள்ளது? ஏன் ஒருவர் இப்படி எழுதமுனைகிறார்? தனக்கென்று தனிப்பாணி உருவாக்க முனையும் தன்முனைப்பா? அல்லது வெறும் நுட்பம் சார்ந்த விளையாட்டா? அல்லது தனக்கு ஏற்பட்ட ஒருவித கனவுநிலை, காட்சிநிலை அல்லது சிந்தனை நிலையின் விளைவா? இயல்புமொழியில், பதனப்படுத்தப்பட்ட வாழ்வில், தெளிந்த அறிவில் புழங்குவதாக நம்பும் நமக்கு ஒரு மனப்பிறழ்ச்சியின் சொல்லாடல் வெளியாக விரிந்து கிடக்கிறது இத்தொகுப்பு. உண்மையில், இயல்பான வாழ்வில் உள்ளவர்களின் மனப்பிறழ்ச்சியை பகடி செய்வதைப்போல, ஒரு தெளிவான சிந்தனையும் இதற்குள் அமைவுற்று உள்ளது. அதற்கான அரசியலும், சூழலும் என்ன என்பதே இக்கவிதைகளை வாசிப்பதற்கான கவர்ச்சியைத் தருகிறது.
இக்கவிதைகள் முற்றிலும் தமிழையும் தமிழ்வாழ்வையும் எல்லை நீக்கம் செய்ய முயல்கிறது. தமிழை உருதுபோலவோ அல்லது உருதை தமிழ்போலவோ சிந்தித்து எழுதப்பட்டிருக்கலாம். அதற்கு பின்புலமாக ஆங்கில அறிவும், கோட்பாடுகளும் துணை செய்திருக்கலாம். கோட்பாட்டு ரீதியாக. அது ஏன்? என்கிற கேள்வி உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் ஏன் இப்படி ஒரு போக்கு உருவாகுகிறது என்பது முக்கியம். மௌனி, புதுமைபித்தன், பிரமிள் போன்று இந்த போக்கிற்குள்ளும் ஒரு சமூக மனம் உள்ளது. அது வேதனை கொள்கிறது. அந்த வேதனையை வெளிப்படுத்த ஒரு ரகசிய மொழியைத் தேடுகிறது. அந்த மொழிமூலம் பெருமொழியாக பாசிசமாக உருவெடுக்கும் ஒரு மொழியை நிராகரிக்கவும் அல்லது அதை புரியாமல் செய்யவும் ஆன ஒரு பித்துநிலை மொழிவிளையாட்டை நிகழ்த்துகிறது. அவ்விளையாட்டுதான் இக்கவிதைகள். அதை சராசரி தமிழ்மனம் வாசிக்கமுடியாது. அப்படி வாசிக்க முடியாமல் போனது ஏன்? என்பதில்தான் அதற்கான அரசியல் அடங்கி உள்ளது. அது தனியான ஆய்வு. தமிழ் இனம் இந்துப் பெருமதமாக மாற்றப்பட்டிருப்பது இந்த தமிழ் இன, மொழி மேலாண்மை சைவப்பாசிசத்தில்தான். இது இவருக்குள் ஒருவித நெருக்கடியை எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. அதை சொல்ல மொழியின் கண்காணிப்பிலிருந்து தப்பி ஒரு ரகசிய மொழியை உருவாக்குகிறார். அதுவே அவரது கவிதைகளாக மாறி உள்ளது.
இவரது கவிதைகளில் வரும் மிருகங்கள் பற்றிய சில குறிப்புகள் முக்கியமானவை. நிறைய கவிதைகளில் மிருகங்கள் என்பது சொற்களாக, படிமங்களாக, உடல்களாக, காட்சிகளாக, சப்தங்களாக அதன் தன்மையில் மாறிய நிலையில் எழுதப்பட்டுள்ளன. மிருகங்களாதால் அதாவது “பிக்கமிங் அனிமல்“ என்பதாக மனித தன்னிலையிலிருந்து விலகி ஒரு மிருகமாக உருவாகுதல் என்ற நிலை எனலாம். மனிதமொழியை மிருகங்களின் பேச்சுமொழி வழியாக எல்லை நீக்கம் செய்வதும், மனப்பிறழ்ச்சியின் நாடகமாக சொல் உற்பத்தியாக மாறிவிட்ட குழந்தைமையின் ஸ்கிசோவாக வெளிப்படுவதும் மனம்பிறழ்ந்த இந்த சமூகத்திற்குதான். உண்மையில் அதுதான் வாழ்வதற்கான தெளிவான வெளி என்பதை முன்வைக்கிறது இக்கவிதைகள்.
பிரஞ்சு சிந்தனையாளர்களான டெல்யுஸ்-கத்தாரி காஃப்காவை வாசித்து முன்வைத்த சிறுவாரி இலக்கியம் (மைனர் லிட்டரேச்சர் என்பதற்கான தமிழ் சொல்லாக இது பாவிக்கப்படுகிறது. சிறுபான்மை இலக்கியம் என்பது பொருத்தமானதாக இல்லை என்பதால்.) என்பதற்கு மூன்று பண்புகளை சொல்கிறார்கள். 1. மொழியின் எல்லை நீக்கம் 2. அரசியலில் இடிபல்-பேமலி நீக்கம் 3. குழுத்தன்மை அதாவது தனிமனிதன் தன்னிலையின்மை குழுப்பேச்சாக வெளிப்படுதல். இக்கவிதைகளில் ஊடாடும் இம்மூன்று பண்புகளையும் மேலே விளக்கியுள்ளோம். தமிழ் பெருமொழியாக மத-இனவாத மொழியாக பெரியார் சொன்ன கறைபடிந்த மொழியாக மாறிவிட்ட நிலையில், அதை எல்லை நீக்கம் செய்கிறது இக்கவிதைகள். பழந்தமிழ் சொற்களால் நவீன தமிழ் மறுக்கப்பட்டு, சங்ககால மொழி நவீன இலக்கியபரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. கவிதைகளில் காதல், கற்பனாவாதம், யதார்த்தவாதம், இலட்சியவாதம், பெண்ணியம் இப்படியாக பெருங்கதையாடல் சார்ந்த
ஆர்ப்பாட்டங்கள் இல்லை. கவிதைகளில் தற்காலக் குடும்பம், அரசு உள்ளிட்ட எந்த நிறுவனங்களும், தாய்-மகன்-குடும்பம்-காதல் உள்ளிட்ட மனிதார்த்த இருப்பும் அதன் இடிபலாக்க சொல்லாடல்களின் பாற்பட்ட தன்னிலைகளும் இல்லை. முற்றிலுமாக அரசியல் சார்ந்த தன்னிலைகள் நீக்கப்பட்டு உள்ளது. இதில் அடையாளப்படுத்திக் கொள்வதற்கான அரசியல் எதுவும் இல்லை. இதன் அரசியல் சமூவயப்பட்டதாக இல்லாமல், ஒரு உடலின் அது உருவாக்கி வாழும் மொழியின் மூலக்கூறுகளின் அரசியலாக உள்ளது. அதாவது மொழிசார்ந்த அரசியலே இக்கவிதைகளின் அரசியல். இதைமீறி இக்கவிதைகள் பற்றிய மேலதிக விமர்சனங்களை இந்த அறிமுக உரையில் தவிர்க்கலாம். குறிப்பாக ஒன்றைச் சுட்டலாம், இக்கவிதைகள் எல்லாம் ஒருவகை மாயாவாத சொல்லாடலுக்குள் சிக்கிவிட்ட தமிழ்மொழியின் மதவாத இறுக்கத்தை பகடி செய்வதாக. இப்படியாக இக்கவிதையின் வாசிப்பில் நாம் ஒரு பாலைவனத்தில் திக்கற்று எல்லைகளை வரைந்து செல்வதைப்போல செல்கிறது கவிதை.
ஜமாலன் - 01-10-2011.




0 comments:
கருத்துரையிடுக