திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – பகுதி : 1

பாலம் பதிப்பகம் வெளியிட்ட முபீன் சாதிகாவின் அன்பின் ஆறாமொழி கவிதை தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை பகுதிகளாக பிரித்து வெளியிடப்படுகிறது.

 

தன்னிலை என்பது இல்லை: பேச்சின் தொகுப்பு வரிசை ஒழுங்கமைப்பு மட்டுமே உள்ளது, மேலும் இலக்கியம் இவ்வரிசை ஒழுங்கமைப்பினை வெளிப்படுத்துகிறது, அவை புறத்திற்கு தரப்படுபவை போன்றவை அல்ல, ஆனால் குரூரமான அதிகாரத்திலிருந்து அல்லது புரட்சிகர சக்திகள் கட்டமைக்கப்படுவதிலிருந்து வருவதைப் போன்றது[1].

– ஜீல் டெல்யுஸ் & பிலிக்ஸ் கட்டாரி (Kafka: Towards A Minor Literature Ch.3 Page:18).

இக்கவிதைகளை தொகுப்பாக வாசிக்கையில், காஃப்கா என்று ஓர் எழுத்தாளன் தனக்காக எழுதுகிறான் என்று மௌனி சொன்னதைப்போல இவ்விருவரும் தனக்காக எழுதினார்கள் என்று முபீன் சாதிகா என்கிற இக்கவிஞர் சொல்லக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது. காரணம், அவர்களின் புனைவுகளில் உள்ள புரியாமையே இக்கவிதைகளுடன் ஏற்படும் முதல் பரிச்சயம். இப்படி சொல்வதால், இக்கவிஞரை இலக்கிய மாஸ்டர்களாக அறியப்படும் அவர்களுக்கு இணையாக வைப்பதான வழக்கமான ஒப்பீட்டு சிந்தனைதரும் மேல்-கீழ் தோற்றத்தையோ கற்பனையோ கொள்ளவேண்டியதில்லை. இவ்வொப்பீடு அவர்களது படைப்பு வெளிப்பாடு கொள்ளும் நுட்பம் சார்ந்தே இங்கு கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஒப்பீட்டிற்குக் காரணம், புரியாமை என்கிற ஒற்றுமை மட்டுமல்ல, மொழியை சிதைப்பதன் வழியாக, இலக்கியம் என்ற வகைமையை வாழ்தலுக்கான வெளியாக மாற்றிக் கொள்வதும், பெரும்பான்மையினர் மொழியை அவர்களைவிட ஒரு குறிப்பான வடிவத்தில் பயன்படுத்தும் முறை, பரிமாற்றுமொழியை கையாளும் திறன், தங்களது பூர்வீகமொழியில் அரூபமாக சிந்திக்கும்முறை, என்பதாக வழக்குமொழி (வர்னாகுலர்), பரிமாற்றுமொழி (வெகிகுலர்) மற்றும் தொன்மமொழி (மித்திக்கல்) என்கிற மும்மொழியில் இயங்கிய தன்மை எனலாம். இப்படி இயங்குவதால் பெருமொழியினை எல்லை நீக்கம் செய்து, அங்கு பரிச்சயமற்ற மாற்றுவடிவம் ஒன்றை முன்வைப்பவர்களாக உள்ளனர். இக்கவிதைகள் பரிச்சயமான மொழியில், பரிச்சயமற்ற வடிவத்தில், பழக்கமற்ற உணர்வுகளுடன் முன்வைக்கப்பட்டுள்ளதே, புரியாமைக்கான காரணம் என எண்ணத்தோன்றுகிறது.

புரியாமை என்பது என்ன? என்ற கேள்வி முக்கியமானது. புரியாமை அர்த்தமாக்கலோடு உறவுடையது. அர்த்தமாக்கல் மொழியின் அரசியலோடு உறவுடையது. எனவே, புரியாமை மொழிசார்ந்த அரசியலோடு அல்லது வாசிப்பின் அரசியலோடு தொடர்புடையதாக மாறிவிடுகிறது. தெளிவாகவும், அர்த்தம் உள்ளதாகவும், ஒழுங்கமைப்பிற்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒருவகை “மதவாதம்”, “அரசுவாதம்” மற்றும் “நிறுவனவாதம்” என்கிற இருக்கும் நிலையை காப்பதும், அதில் மகிழ்வடைவதும் அல்லது அதில் துயறுருவதும் ஆன இன்றைய அமைப்பை அப்படியே ஏற்பதாகும். இக்கவிதைகள் அதற்கு எதிரானவையாக உள்ளன என்பதே இதை வாசிக்க தூண்டும் முதல் விஷயம். ஒருவகையில் இக்கவிதையின் அரசியல் பழகிய செண்டிமெண்டலான உணர்வுகளை பகடி செய்வதும், புதிய உணர்வுகளுக்கான உந்துதலை முன்வைப்பதும், சிலவேளை மொழியின் சப்தங்களை வெளிப்படுத்தும் மனப்பிறழ்ச்சியின் குரலாகவும் வெளிப்பட்டுள்ளது. அதனால் சிதைவுற்ற குரலை ஒழுங்காக உணர்ந்து கொண்டிருக்கும் மனநிலையில் வாசிக்கமுடியாமல் அல்லது அப்படி வாசித்தபின் இது ஒரு பைத்தியக்குரல் என்பதாக ஒதுங்கிவிடும் பாதுகாப்பு மனநிலைக்கு தள்ளிவிடுகிறது. வாசிப்பின் மனநிலை இப்படி என்றால், எழுதப்பட்ட மனநிலை என்னவாக இருந்திருக்கலாம் என்று சற்றே ஊகித்துப் பார்க்கலாம்.

மௌனி போன்று எழுத்தை ஓர் உடலாகக் கொண்டாடும் தன்மை இக் கவிதையில் உள்ளது. அதனோடு விளையாட, கோபிக்க, காதல் கொள்ள, காமுற, சண்டையிட இப்படி ஓர் அணுக்கமான சக உடலாக எழுத்தை கொள்பவர்கள் மிகக் குறைவு. இது ஒருவகை எழுத்தில் வாழ்தல். அல்லது எழுத்தை ஓர் உருவாகுதலாகக் (becoming) கொள்ளுதல். அவர்கள்தான் “உனக்கு புரிவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை“ என்று எழுதுவார்கள். ஏனென்றால் எழுத்தும், எழுதுதலும் ஒரு செயல்பாடு என்கிற நிலைதாண்டி அதுவாக மாறிவிடுவது. அதாவது எழுத்தின் வழி ஆசிரிய உடலாக உருவாகி, எழுத்திற்கு பின் சமூக உடலாக மாறுதல். இப்படித்தான் எழுத்து ஒரு மர்மமாக, மாயமாக, கூடுவிட்டு கூடுபாயும் மந்திரமாக மாறிவிடுகிறது. இது ஒரு சித்துநிலை. பித்துநிலை அல்ல. சித்துநிலையில் பிரக்ஞை தெளிவுடன் இயங்கும். பித்து நிலையில் பிரக்ஞை தெளிவற்றதாக ஆகிவிடும். இது வித்தியாசமான ஒரு படைப்பாதல் நிலை.

இப்படைப்பாதலால் இக்கவிதைகள் மரபார்ந்த சொல்லாட்சிகள் வழி மரபுகளை எல்லைநீக்கம் (de-territorialize) செய்துவிடுகிறது. மரபாக வாசித்துப் பழகியவரின் இடம் நீக்கப்பட்டுவிட்டதால், இடமற்ற வெளியில் நின்று வாசிக்கும் பழக்கமற்ற வாசிப்பில் கவிதை பித்தின் உளறலாக தெரிகிறது. அடையாளம் மறுக்கும் இம்மொழியால் வாசகன் பெரும் மனக்கிலேசத்தை அடைந்துவிடுகிறான். மொழியின் இலக்கணம் சிதையும் போது வாசகனின் பதனப்படுத்தப்பட்ட வாழ்வும் சிதைந்துவிடுகிறது. விதிமறைந்து நிகழும் இவ்விளையாட்டில், விதியோடு போனவர்கள் விளையாட முடியா திகைப்பில் ஆழ்ந்து “புரியாமை”யின் விதிக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

“புரியாமை” பற்றிய இந்த அலசல் நுகர்விற்கான படைப்பு பற்றியதல்ல. படைப்பாக சொல்லப்படுகிற ஒன்றைப் பற்றியது. பரவசத்தின் ஓர் உச்சநிலையை தரும் படைப்பு செயல்பாடு பற்றியது. அத்தகைய பரவசநிலையை இக்கவிதைக்குள் பயணிக்கும் வாசகமனம் அடைய உழைப்பு அவசியப்படுகிறது. இந்த உழைப்பின் வழி நுகர்வாளனை வாசகனாக, வாசகனை ஆசிரியனாக உருவாக்கும் கவிதைகள். அதனால் படைப்பவரின் தன்னிலையாக்கமாக அல்லது தன்னிலை வெளிப்பாடாக இல்லை. மொழிவினைபடும் ஓர் உடலின் பாதிப்பாக உள்ளது. கவிதைக்குள் “நான்“ என்கிற தன்னிலை மையம் இல்லை. அதாவது மொழி பதிக்கவேண்டியதை எழுத்தாக பதித்துவிட்டு வெளியேறிவிடுவதைப்போல உள்ளது. ”வானினது அது நின் வான் இனிது இனிது வான் இது இது வான்” இப்படி சொல்லப்பட வேண்டியதை ”வானினதுவதுநின்வானினிதினிதுவானிதுவிதுவான்” இப்படி சொல்லக்கூடிய “நான்“ மையமுள்ள நானாக இருக்கமுடியாது. அது போதம் சிதைந்ததாக, மொழியை வெளித்தள்ளி தனது தன்னிலையை சிதைத்துக்கொள்வதாக மட்டுமே இருக்கமுடியும். இப்படி, சில கவிதைகளில் வெறும் ஒலிக்குறிப்புகளும், உணர்வை அல்லது ஒரு கற்பனையை அல்லது ஒரு படிமத்தை வைத்து சிந்திப்பது நிகழ்கிறது. சிந்தித்தவற்றை சொற்களைக் கொண்டு ஓவியங்களாக வரைவது. வரையப்பட்ட ஓவியத்திற்கான மன இயக்கமாக கவித்துவத்தை முன்வைப்பது இப்படியாகக் கவிதை ஒரு வரைகலையாக மாறி உள்ளது.

மொழிகொண்டு வரையப்பட்ட மையமற்ற ஒரு பின்நவீன ஓவியம் போன்றவை இக்கவிதைகள். பின்நவீனத்துவ நிலை முன்வைக்கும் மொழி விளையாட்டுகள் தான் இக்கவிதைகள். மிகவும் உக்கிரமான தோற்றத்தைத் தந்தாலும், அத்தோற்றத்திற்குள் மொழியை கலைத்துப்போட்டு விளையாட அழைக்கும் தன்மையே உள்ளது. வாசிப்பவரை உக்கிரமடைய வைக்கும் தொந்தரவை தந்துகொண்டு கவிதையின் மொழி நம்மை பார்த்து நகைப்பதைப் போல நகைத்து நகர்ந்துவிடுகிறது. இக்கவிதைகள் ஒருவகை மொழியின் சோதனைமுயற்சி எனக்கொண்டால், சோதனை முயற்சி எப்போதும் அர்த்தமாக்கலுக்கு ஒரு மாற்றாகும் என்பதால், அர்த்தமாக்கல் என்கிற பழகிய விளையாட்டிற்கு மாற்றாக அர்த்தமின்மையைப் போன்ற தோற்றம் தருபவையாக உள்ளது. ஆனால், கவிதையின் இந்த விளையாட்டை புரிந்துகொள்வது சவாலாக உள்ளதால் வாசிப்பவர் அயர்ச்சியடைவதாக உள்ளது. வாசகனின் மந்தையான வாசிப்பை சவாலுக்கு அழைக்கிறது. அல்லது பழகிய புரிதலுக்குள் அடைபட மறுக்கிறது. அதை மீறி வாசிப்பவனை வேறு அறிதலுக்கும் சிந்தனைக்கும் நகர்த்துகிறது. ஆசிரியன்-பிரதி-வாசகன் என்கிற முப்பரிமாணத்தில் ஆசிரியன் முற்றிலுமாக மறைந்து போய்விட்ட பிரதி. அதனால் வாசகனிடம் எஞ்சியிருப்பது பிரதியும் வாசிப்பும் மட்டுமே. ஆசிரியனின் சுவடும், தடமும் இல்லாமல் பிரதியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தைக்கோரும் கவிதைப்பிரதி. ஆசிரியன் என்ன சொன்னான் என்கிற புதிரை விடுவிக்கும் விமர்சன விளையாட்டு சாத்தியமற்றதாக உள்ளது.

பிரதி வாசிப்பவரை வாசகராகவோ அல்லது நுகர்வாளராகவோ மாற்றுகிறது. வாசகராக மாற்றக்கூடிய பிரதிகளை வாசகப்பிரதி அல்லது படைப்பு என்று சொல்லலாம். நுகர்வாளராக மாற்றும் பிரதியை நுகர்வுப்பிரதி அல்லது சரக்கு எனலாம். வாசகப்பிரதியான இக்கவிதைகள் ஆழ்ந்த மற்றும் பலமுறை வாசிப்பிற்கு பிறகே கவிதைக்கான உணர்தலைப் பெறும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. அதாவது வாசகரை உருவாக்க முனையும் எழுத்துப் பிரதியாக உள்ளது. முதல் வாசிப்பில் கவிதை வாசகனை விலக்கித் தள்ளுகிறது அல்லது மீண்டும் மீண்டும் வாசிக்க நிர்பந்திக்கிறது. ஒருவேளை கவிதை தானே நுகர்வை நிராகரிப்பதாக உள்ளதோ? எப்படியோ? நான் இக்கவிதைகளை அறிந்துகொண்ட முறையை இங்கு முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

(தொடரும்…)

- ஜமாலன் - ஜெத்தா, சவுதி அரேபியா - 01-10-2011.

குறிப்பு-


[1] There is no subject: there are only collective arrangements of utterance-and literature expresses these arrangements, not as they are given on the outside, but only as diabolic powers to come or revolutionary forces to be constructed. – Gilles Deleuze and Felix Guattari - (What is minor literature – page 18).

2 comments:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

எழுத்து வடிவப் புரியாமை குறித்து மட்டும் நீங்கள் சொல்வது பொருந்தும் என எண்ணுகிறேன்.

காட்சி வடிவ , இசை வடிவ, உணர்வு வகைப் புரிதலுக்கு/அர்த்தப் படுத்தலுக்கு மொழியின் உதவி தேவையா என்று தெரிய வில்லை.

ஜமாலன் சொன்னது…

நன்றி ராம்ஜி_யாஹூ

இது குறித்து காட்சி வடிவ, இசை வடிவ, உணர்வு வகை புரிதல் அர்த்தப்படுத்தல் எப்படி மொழிவழியாகவும் நிகழும் என்பதை எனது மற்றொரு கட்டுரையில் விவரித்து உள்ளேன். புரிதல் அர்த்தமாதல் என்பது வெளிப்பட மொழியோ அல்லது உடல்மொழியோ தேவை.