சீட்டாட்டம் மொழிச்செயல் வாழ்க்கை

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம்   “ரெம்மி“ விளையாடலாம் சூதாட்டம் விளையாடுவது குற்றம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதை ஒட்டி நண்பர் வாசு ஒரு குறிப்பு ஒன்றை முகநூலில் பகிர்ந்துகொண்டு உள்ளார். அதை படித்தபோது எண்பதுகளில் தமிழவனால் அறிமுகமாக ஸ்டரக்சுரலிஸம் என்கிற அமைப்பியலை படித்து, கற்றுக்கொள்ளும் நோக்கில் அமைப்புகள் பற்றிய ஆய்வாக விளையாட்டாக சீட்டாட்டம் என்கிற விளையாட்டைப்பற்றி 1989-ல் எழுதிவைத்த கட்டுரை இது. இதை வெளியிடுவதில் தயக்கம் இருந்ததால், அப்படியே விட்டுவிட்டேன். இப்போ பதிவில் ஜாலியாக வாசிக்கலாம் என்று வெளியிடப்படுகிறது. இக்கட்டுரையை. வாசிப்பதற்கான தகுதி உங்களுக்கு ரெம்மி விளையாடத் தெரியனும் என்பது மட்டுமே.

நம்மில் பலருக்கும் சீட்டு விளையாட தெரிந்திருக்கிறது. சீட்டு விளையாடுதல், 'சூதாட்டம்' என்று நல்லொழுக்க வாதிகளால் ஒதுக்கப்பட்ட ஒன்று. அதை சூதாட்டம் என்று ஒதுக்குபவர்களால் வாழ்க்கையை வைத்து மிகச் சாமர்த்தியமாக சூதாட முடிந்திருக்கிறது. அது ஒரு புறமிருக்க, சீட்டாட்டத்தின் உள் ஒழுங்கைப் படிப்பதன் மூலம் நாம் சிலவற்றை புரிந்துகொள்ள முயல்வதின் விளைவே இக்கட்டுரை.

முதலில் சீட்டாட்டத்தின் விதிமுறைகளை படிப்போம். அதனை மொழியின் விதிமுறைகளோடு ஒப்பிட்டு, பிறகு வாழ்க்கை என்கிற செயல்நுட்பத்தின் ஒழங்கமைப்பைக் கண்டடையும் ஒரு விளையாட்டு இது. அதாவது, சீட்டாட்டத்தின் ஒழுங்குகள் மொழியியல் மற்றும் வாழ்வின் ஊடாட்டங்களின் ஒழுங்குகளை கொண்டுள்ளதாக ஒரு ஒப்புமை அமைப்பு விதிகளை படிப்பதே நமது நோக்கம்.

1. சீட்டாட்டத்தின் விதிமுறைகள்.

Hoyle Card Games For Macஅ. ஒரு சீட்டுக்கட்டில் 54 கார்டுகள் உள்ளன. இதில் 'டைமண்ட்', 'ஹாட்டின்' , 'ஸ்பேட்', 'கிளாவர்' - என 4 பூக்களைக் கொண்ட A முதல் K வரையிலான 13 எண்ணிலக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. சீட்டாட்டம் என்ற இந்த மொத்த அமைப்பும் இந்த 54 கார்டுகளை மட்டுமே சார்ந்துள்ளது.

ஆ. 54 கார்டுகளில் ஒரு ஆட்டக்காரருக்கு சில கார்டுகள் (13 அல்லது 10) போடப்படுகின்றன. இந்த கார்டுகளை ஒன்றுடன் ஒன்று உறவு படுத்தி ஒரு ஒழுங்கமைப்புக்குள் (அந்த ஒழுங்கற்ற அமைப்பை) கொண்டுவர வேண்டும்.

இ. இந்த ஒழுங்கமைப்புக்கான உறவுகள் இரண்டுவிதமாக செய்யப்படலாம். (1) குத்துக்கோட்டு தளவைப்பு முறையிலான வரிசையிலோ அதாவது 4,5,6... இப்படி பூக்களின் ஒழுங்கில் வைத்தல் (2) நேர்க்கோட்டு வரிசையிலோ அதாவது 9,9,9 இப்படி எண்களின் ஒழுங்கில் வைத்தல். மேற்கண்ட இரண்டுவித உறவுகளைக் கொண்டு சீட்டுக்கட்டின் மொத்த 'கார்டுகளும்' ஒருவகை உருளையின் (சிலிண்டரிக்கள்) வடிவமைப்பை கொண்டிருக்கினறன எனலாம்.

ஈ. ஆட்டத்தில் ஈடுபடும் மனிதர்களின் இட ஒழுங்கமைப்பு ஒருவகை அதிகாரத்திற்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் மனப்போக்கைக் கொண்டதாகும். அதாவது 'கட்பார் போடுதல்' என்ற செயலின்வழி பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணை நோக்கி ஒழுங்கமைக்கப்பட்ட வரிசையில் மனிதர்களின் இடம் அமைக்கப்படுகிறது.

உ. இந்தவகை இடஒழுங்கு நிர்ணயிக்கப்பட்டபின் ஆடுகளத்தின் அமைப்பினுள் இரண்டுவித விதிமுறைகள் கையாளப்படுகிறது.

  1. ஒரு குறிப்பிட்ட நபரின் இடம் அடுத்தடுத்துள்ள இரண்டு நபர்களுக்கு இடையில் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. அதனால் தனக்குமுன் உள்ள நபர் விடும் கார்டை எடுக்கவோ, மறுக்கவோ ஆன..சுதந்திரம் உண்டு. இந்த ஒருவகை உறவானது அடுத்த இரு ஆட்டக்காரர்களின் கண்காணிப்புக்குள் ஒவ்வொருவரும் இருத்தப்பட்டுள்ளதைக் கொண்டு இயங்குகிறது.
  2. மூடி வைக்கப்பட்டுள்ள எஞ்சிய கார்டுகளுடன் ஆட்டக்காரர் அனைவரும் ஒரு பொதுவான உறவினை கொண்டுள்ளனர். இது மர்மத் தன்மையூட்டும் உணர்வினை கொண்ட உறவாகும்.

ஊ. எல்லா ஆட்டக்காரர்களின் செயல்படும் விதிகளில் ஒரு 'ஒருமைத் தன்மை' உள்ளது. இது உடைக்கப்பட முடியாதது. தனித்தன்மை என்பது நமக்கு கிடைத்திருக்கும் கார்டுகளைக் கொண்டு நாம் சேர்க்க முனையும் 'செட்'-டுகளின் அமைப்பே. இந்த அமைப்பு இரண்டுவிதமான வடிவ ஒழுங்கை கொண்டது. அதாவது இருபுறமும் உறவுடைய திறந்த அமைப்புடைய செட்டாக இருக்கலாம். உதாரணமாக.. -} 7,8{ - அல்லது ஒறறை உறவை மட்டுமே கொண்ட மூடிய அமைப்பாக இருக்கலாம் {7, ...,9}.

எ. 'ஜோக்கர் வெட்டுதல்' - என்ற செயலால், எண்களுக்கான தனிமதிப்புகளுக்கு ஒரு பொது மதிப்பு கூடுகிறது. இத ஒருவகை குறியீட்டு அமைப்பை திறந்தவிடுகிறது. போடப்பட்ட கார்டுகளுக்கான எண் தனது குறிப்பான் (signifier) என்ற வெறும் எண்ணியல் தளத்திலிருந்து தேவையான ஒன்றைக் குறிக்கும் குறிப்பீட்டு (signified) அந்தஸ்த்தை பெறுகிறது. இந்த குறிப்பீட்டு அந்தஸ்து அதனை பலதள குறியமைப்பாக செயல்பட வைக்கிறது.

ஏ. கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள கார்டுகளின் மீதான கவனம் முழுவதும் புரிந்து கொள்ளுதல் அல்லது அறிவுபூர்வமான அனுகுமுறையைக் கொண்டதாகும். இங்கு யதார்த்தம் என்பது நமக்கு முன் உள்ளவரால் விடப்பட்ட கார்டு மட்டுமே.

ஐ. இங்கு ஆட்டக்காரரின் செயல் அல்லது தனித்தன்மை என்பது எதிர்பார்ப்புகள், தேவைகள், ஆட்டத்தின் போக்கு இவைகளை கவனத்தில் கொண்டு தனது கைக்கார்டுகளின் உறவு நிலைகளை களைத்தும், புதிய ஒழுங்கிற்கு மாற்றியும் விளையாடுதல் மட்டுமே. விளையாடுதல் என்ற இந்த இயக்கம் மட்டுமே மொத்த ஆட்ட அமைப்பிற்குள் அர்த்தம் தந்து உயிர்வாழ வைக்கிறது.

ஒ. சீட்டாட்டத்தின் அடிப்படையும், விசேஷ முக்கியத்துவமும் ஒட்டுமொத்த ஆட்டத்தின் போக்கு முழுவதும் சார்புத்தன்மை வாய்ந்ததாக இருப்பது. கார்டுகள் கலைத்துப் போடப்பட்ட விதம், நமக்கென விழுந்திருக்கும் 13 அடிப்படை கார்டுகளின் நிலை, நமக்கு முன் உள்ள ஆட்டக்காரரின் நிலை, நம்மை அடுத்த ஆட்டக்காரரின் நிலை, நம்மை அடுத்த ஆடடக்காரனும், நாம் அடுத்த ஆட்டக்காரனையும் கட்டுப்படுத்த முனையும் போக்கு, இவை எல்லாம் இயங்கும் ஆட்டத்தின் ஒழுங்கமைப்பில் பிரிக்க முடியாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்த சார்புநிலை உறவுகளாகும்.

ஓ. வெற்றியும், தோல்வியும் அமைப்பின் இயங்கு தளத்தை புரிந்துகொண்டு, போக்குகளுக்கு ஏற்ப தனது கார்டுகளை உறவு படுத்த தெரிந்த ஆட்டக்காரனையும், கார்டுகள் கலைந்து விழுவதையும் பொறுத்த சார்பு நிலை விளைவுகளாகும்.

மேற்கண்ட விதிமுறைகளைக் கொண்ட ஒரு அமைப்பே சீட்டாட்டத்தின் உள்ளே இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் ஒழங்குகளுடன் மொழி அமைப்பின் ஒழுங்கை இனி ஒப்பிடுவோம். இந்த ஒப்பிடல் நுட்பம் சார்ந்தது என்பதை மட்டும் இங்கு நினைவில் வைப்போம்.

2. மொழி அமைப்பின் விதிமுறைகள்.

அ. மொழி என்பது அடிப்படையான சப்தக்கூறுகளைக் கொண்டது. உதாரணமாக, தமிழ் மொழியை எடுத்தக்கொள்வோம், இதில் 13 உயிர் மற்றும் ஆயுத எழுத்தும் 18 மெய் எழுத்தும் இணைந்து மொத்தம் 234 சப்தக்கூறுகளின் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றது. இச்சப்தக்கூறுகளின் ஒழுங்குவரிசையே இம்மொழி பேசுவர் அனைவருக்கும் அடிப்படையானது.

ஆ. ஒரு மொழியை பேசுபவருக்கென குறிப்பிட்டவகை வாக்கிய அமைப்புகளும், அர்த்தப்படுத்துததல்களும் உருவாக்கித் தரப்பட்டுள்ளன அல்லது உருவாகி உள்ளன. எனவே, மொழியை பேசும் ஒவ்வொரு தனிமனிதனும் அவனது மொழிக்கூட்டம் அல்லது மொழியைக் கொண்ட சமூகம் உருவாக்கித்தந்த மொழிக்கிடங்கிலிருந்து (laung) தனக்கான பேச்சை (parol) உற்பத்தி செய்து கொள்கிறான். 54 கார்டுகளிலிருந்து 13 கார்டுகளைக் கொண்டு விளையாடுவதுபோல.

இ. பேச்சு என்பது பலவாக்கிய அமைப்புகளைக் கொண்டது. இந்தவகை வாக்கிய அமைப்பை மனம்போன போக்கில் உருவாக்கிவிடமுடியாது. அதாவது வாக்கிய அமைப்புகள் சில அடிப்படை இலக்கண விதிகளைக் கொண்டது. உதாரணமாக ”இருந்தது, கரும்பு, இனிப்பாக ..“ என்ற வார்த்தைகளை 'கரும்பு இனிப்பாக இருந்தது' , என்று அடுக்கும்போதே பேச்சிற்கான வாக்கிய ஒழுங்கு ஏற்படுகிறது. இவ்வகை வாக்கிய அமைப்புகளின் ஒழுங்குவரிசை இரண்டுவிதமான தளவைப்பு முறைகள் மூலம் அர்த்தப்படுகின்றன.

1. நேர்க்கோட்டு அல்லது தொடரியல் தளவைப்புமுறை (sintagmatic relationship)

உதாரணம்.: 'கரும்பு இனிப்பாக உள்ளது" . அடுத்தடுத்து தொடரான வரிசையில் அர்த்தம் உருவாகுகிறது.

2. குத்துக்கோட்டு அல்லது சேர்க்கை உறவுமறை (paradigmatic relationship)

உதாரணம்: மேற்கண்ட வாக்கியத்தில் கரும்பு என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பினால் அது இரும்பு, துரும்பு ... ஆகியவையுடன் ஏற்படுத்தும் சப்த வித்தியாசத்தினால் பெறப்படும் அர்த்தமாகும்.

இந்த இரண்டுவகை உறவே மொழியின் இயங்கு தளத்தில் உள்ளோடும் அமைப்பாகும். இந்த ஒழுங்கே மொழியை இயல்பான ஒன்றாய், விதிமுறைகளின் பிரக்ஞையின்றி சரளமாய் பேசும் ஒன்றாய் மாற்றுகிறது.

ஈ. மொழிபேசும் மனிதர்கள் தாங்கள் இயங்கும் களங்களுக்கு ஏற்ப சொல்லாடல்களை அமைத்துகொள்ள ஒருசில தகுதிகளை பெற வேண்டி உள்ளது. சடங்கில் பங்கேற்பவர், ஒரு குழுவில் இடம் பெறுபவர், ஒரு வர்க்க அங்கீகாரத்தை பெறுபவர் ஒரு கோட்பாட்டை பின்பற்றுபவர்- என மனிதர்கள் சமூகக் குழுவின் படிநிலை அமைப்பில் இடம்பெற என... குறிப்பிட்ட சில சொல்லாடல்களை கையாளும் தகுதியை பெற வேண்டி உள்ளது. இது 'கட்பார் போடுதல்' போல் நமது விருப்பத்திற்கு வெளியே, புறநிலையாக நிர்ணயிக்கப்படும் ஒன்றாகவே இன்றைய சமூகமும், மொழி அமைப்பும் உள்ளன. இந்த நிர்ணயக் கூறுகள் இன்றைய நிலையை அப்படியே மனமுந்து ஏற்பவர்களுக்கு புரியாத ஒன்றாகவே உள்ளது. இத்தகைய தகுதிபெற்ற சொல்லாடல்களங்களின் (discourse) வழியே சமூக அதிகாரம் மனிதர்களுக்குள் இறக்கப்படுகிறது. எனவே, அடங்கிப்போகும் மனித தன்னிலையை (subject) கட்ட இன்றைய நிர்ணயவாத மொழியமைப்பின் சொல்லாடல் களங்கள் ஒரு காரணமாகும்.

உ. மொழியும், சீட்டாட்டம் போல இயங்குதளத்தில் மட்டுமே உயிர் பெற்று வாழக்கூடியது. மொழியும் இரண்டுவித இயங்கும் உறவுகளைக் கொண்டுள்ளது.

  1. நாம் பேசும் மொழியை அர்த்தப்படுத்தவோ, நிராகரிக்கவோ சமூக அமைப்பு சுதந்திரம் பெற்றிருக்கிறது. வழக்கொழிந்த சொல்லாடல்கள் சமூக அங்கீகாரத்தை இழந்து அர்த்தமற்றுப் போவதும், புதிய சொல்லாடல்கள் நிறுவப்படுவதும் நாம் அறிந்ததே. டிஸ்கார்டை எடுத்து புதிய செட்டுகளை சேர்ப்பதும் நிராகரிப்பதுமான ஒரு நிலை.
  2. சமூகத்தில் இயக்கமற்ற மூடிக்கிடக்கும் பல சொல்லமைப்புகளை திறந்து புதிய, புதிய அர்த்தங்களை நம்மால் உருவாக்க முடியும். இவை மொழி மற்றும் சமூக அமைப்பின் உள் ஒழுங்கின் இயல்பையும், நமக்கு கிடைக்கும் சொல்லாடல்களை கையாளும் விதத்தையும் பொருத்தது. கட்டில் உள்ள கார்டை எடுத்து விளையாடுவதைப்போல.

ஊ. எல்லோரும் ஒரே மொழியை பேசுகிறோம் என்பதில் ஒரு ஒருமைத்தன்மை நிலவுகிறது. ஆனால் மொழியை புதுப்பித்து, உடைத்து புதிய அர்த்தங்களை உருவாக்குவதும், இருக்கும் அர்த்தத்தை இறுகச் செய்வதும் மொழியை கைளாளும் செயல் போக்கிலும், மொழியால் சமூகத்துடன் கொள்ளும் உறவிலும் அமைந்துள்ளது. இவ்வகை உறவானது ஒற்றைப் பரிமாணம் கொண்ட மூடிய அமைப்பாகவே, பன்முகத் தன்மைக்கொண்ட திறந்த அமைப்பாகவே இருக்கிறது.

எ. மொழி இயங்குவதால் சொல்லமைப்புகளானது ஒற்றை அர்த்தத்திலிருந்து பன்முக அர்த்தங்களுக்கு மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு சொல் குறிக்கும் தனி அர்த்தத்திலிருந்து அது பன்முக அர்த்தத்தை குறிப்பதாக மாற்றப்படுதல் சமூகத்தின் இயங்கு தளத்தில் நடைபெறக்கூடியதே. சொற்கள் குறியீட்டுத்தன்மை வாய்ந்தவை. ஒரு குறிப்பிட்ட குறிப்பீட்டு ஒழங்கைக் கொண்ட சொற்கள் வேறு ஒரு குறிப்பிட்ட ஒழுங்கிற்குள் பொருத்தப்படும்போது வேறுவித அர்த்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது. இப்படி சில சொல்லமைப்புகள் சமூகத்தில் தேர்ந்தெடுகக்ப்பட்டு ஒரு குறிப்பிட்ட சமிக்ஞைத் தொகுப்பிற்குள் கொண்ட வரப்படுகின்றன. பிறகு அது பொதுமைப் படுத்தப்பட்ட சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன. உதாரணம் 'பெண்தன்மை' என்ற சொல்லமைப்பு. இச்சொல்லமைப்பானது பெண்ணிலை நோக்கில் சாதரணமானது. ஆனால், இன்றைய ஆணாதிக்க சமூகத்தில் வீரமற்ற, கோழைத்தனமான, பேடியான.. இப்படி நிறைய ஆணாதிக்க அம்சங்களை குறிக்கும் சொல்லமைப்பாக கையாளப்பட்டு வருகிறது. இதை பெணகளே கூட சரளமாக 'பொட்டப்பயல்', 'பொட்டையன்' என்றெல்லாம் கையாள்வதை நாம் சமூகத்தில் அவதானிக்கலாம்.

ஏ. பொதுவாக மொழியானது மூடிய கார்டுகளைப்போல மர்மத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. மொழியும் மொழிச் சுட்டும் போருளையும் வித்தியாசப் படுத்தி உணர நம்மால் முடிவதில்லை. உதாரணமாக... 'புத்தகம்' - என்ற சொல் புத்தகம் என்ற பொருளிலிருந்து வேறுபட்டது. பு..த்..த..க..ம்.. என்ற 5 சப்தங்களை ஒருங்கிணைக்கும் சொல் தன்னளவில் அர்த்தமற்றது. ஆனால், இது சுட்டும் பொருளான புத்தகம் என்ற பொருளால் இச்சொல் அர்த்தத்தின் தன்மையைப் பெறுகிறது. புத்தகம் என்ற சொல்லானது யதார்த்தத்தில் உள்ள புத்தகத்தின் அனுபவத்தை நமக்கு கொடுப்பதில்லை. அனால், நாம் புத்தகம் என்ற சொல்தரும் மனப்படிமத்தால் (image) புத்தகத்தின் யதார்த்த அனுபவத்தை, அப்பொருளையே அடைந்ததான புனைவான உணர்வை பெருகிறோம். மொழிக்குள் அமைந்த யதார்த்தத்தையும், நிஜமான யதார்த்தத்தையும் பிறித்துணரும் மன அமைப்பு இல்லாததால் நாம் யதார்த்தம் பற்றிய புனைவிற்குள் ஆழ்ந்து போகிறோம். நமக்கு ஏற்கனவே தரப்பட்ட சமிக்ஞைகள் மற்றும் குறிகளினால் கட்டப்பட்ட மொழியே யதார்த்தமானதாக தோன்றுகிறது (டிஸ்கார்ட் போல). எனவே, மோழி யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்பது மூடிய கார்டுகள் ஏற்படுத்தும் ஒருவித புனைவையே ஏற்படுத்துகிறது.

ஐ. தேவைகள், எதிர்பார்ப்புகள், தனித்தன்மைகள்,மொழியின் செயல்போக்கு இவைகளைக் கொண்டு மொழியை மாற்றி, மாற்றி மொழியில் புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டே போகலாம். அதாவது மொழியை வெவ்வேறு ஒழுங்கமைப்புக்குள் வைத்து அர்த்தப்படுத்தலாம்.

ஓ. மொழியியல் உறவும் சார்புத்தன்மை வாய்ந்ததே. நாம் பேச்சை மொழிக்கிடங்கிலிருந்து பெருகிறோம். மொழிக்கிடங்கு பேச்சின் வழி உற்பத்தியாகி விரிவடைகிறது. எனவே, நமது பேச்சு மற்றவர்களுடைய பேச்சுடன் கொள்ளும் உறவு, நமது பேச்சை கட்டுப்படுத்தும் தனித்தன்மை வாய்ந்த சூழல், பொதுச்சூழல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இயங்கியல் ரீதியான உறவு கொண்டவை. எனவே, மொழி சமூகச் செயல்பாடு... என்றவகையில் சார்புத்தன்மை வய்ந்ததாகவே உள்ளது.

ஓ. மொழியை வெற்றிகரமாக கையாள முனைபவர்கள் இன்றைய அல்லது காலத்தின் வரிசையில் மொழியில் ஏற்படும் அமைப்பாதலை (structuration) மற்றும் நீர்த்துப்போன அமைப்புகளை புரிந்துகொண்டு அதனை உடைத்து புதிய மொழிக்களங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி உருவாக்கிக் கொள்பவர்களே வெற்றி பெருகிறார்கள்.

இங்கு ஒரு தனிச்சீட்டை மொழியின் சொல்லமைப்பிற்கும் ஒரு கணத்தை (செட்டை) வாக்கிய அமைப்பிற்கும் ஒப்பிட்டோம். இது நுட்பரீதியானது என்றாலும், இரண்டின் உள்தர்க்கமும் ஒரே ஒழுங்கைக் கொண்டிருக்கின்றன. இது ஏன்? இது எவ்வாறு நிகழ்ந்தது? என்கிற கேள்விகளுடன், மேற்குறித்த அலசலினால் நமக்கு ஏற்படும் முக்கியமான கேள்விகள் கவனமான ஆய்விற்கும், பரிசீலனைக்கும் உடையவை எனக்கூறி கேள்விகள் முன்வைப்போம்.

1. சீட்டாட்டத்தின் வெற்றியுடன், மொழியினால் சாத்தியப்படக்கூடிய இலக்கிய வெற்றிகளை ஒப்பிட முடியுமா? ஆமெனில் மொழி கைளாயப்படத் தெரிந்தவனுக்கே வெற்றி உரித்தானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. மொழியின் தர்க்கமும், சீட்டாட்டத்தின் தர்க்கமும் ஒன்றுபொல செயல்படுவதாக கொண்டால் சீட்டாட்டத்தின் தோற்ற வரலாறு குறித்து நாம் ஆரய வேண்டிய நிலை உள்ளது. காரணம் மொழியின் தர்க்கம் திட்டமிட்டோ அல்லது இயல்பாகவே சீட்டாட்டத்தின் தர்க்கமாக அமைய வேண்டிய தேவை என்ன? அல்லது இதன் அடிப்படையில் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் மொழியின் தர்க்கம் செயல்படுவதாக கொள்ள முடியுமா?

3. மொழி 'யதார்த்தமானது', 'ஒழுங்கமைப்புகள்" வழி இயங்குகிறது போன்ற பார்வை 'யதார்த்தவாதம்' குறித்தும், 'இயல்பானது' என்பது குறித்தும் இயங்கிவரும் இன்றைய பார்வை நிலைக்குக் காரணமாக இருந்திருக்குமா?

4. மொழியமைப்புகள் இறுகி அமைப்பாதலை அடைந்ததைப் போன்று 'யதார்த்தம்' குறித்தும், “இயல்பாதல்“ குறித்தும் இயங்கிவரும் இன்றைய பார்வை நிலை அமைப்பாதலை அடைந்திருக்குமா?

5. சீட்டாட்டம் இன்று எல்லோராலும் விரும்பப்படுவது அதன் பொருளியல் லாப நோக்கினால் மட்டுமா? அல்லது அதன் உள்ளோடும் மர்ம விதிகளினால் ஏற்படும் லயமும், ஒழுங்குப்படுத்துதல் என்ற செயலும்தான் காரணமா? அதேபோல் மொழியின் புனைவு குணமும், ஒழங்கமைப்பும்தான் அதனை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் சிந்தனை ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா?

6. சீட்டாட்டம் சிதறுண்ட (பிளவுண்ட) மனித தன்னிலைக்கு (சப்ஜெக்ட்) சிதறிக் கிடக்கும் கார்டுகளை ஒழங்கமைப்பதன் மூலம் 'அடையாளம் கானுதல்' என்னும் செயலை நிறைவு செய்கிறது. இத்தகைய கலாச்சாரப் பொய்களும் மனிதன் காண நினைக்கும் 'அடையாளம் கானும்' செயலை ஒத்ததா? மொழி புனைவான அடையாளத்தை தன்னிலைக்கு வழங்குவதன் மூலம் மனிதனை மாயையில் ஆழ்த்துகிறதா?

இக்கேள்விகள் மேலும் ஆழமானதும், அறிவுபூர்வமானதும் ஆன ஒரு அனுகலுக்கு நம்மை இட்டுச் செல்லலாம் என்பதுடன், வாழ்க்கையின் இயங்கு தளம் குறித்து மேற்கண்ட அனுகுமுறைகள் மூலம் புரிந்துகொள்ள முயல்வோம்.

3. வாழ்க்கையின் இயங்குதளம்.

இங்கு குறிக்கப்படும் 'வாழ்க்கை' என்ற சொல் தத்துவார்த்த, கோட்பாட்டு அர்த்தங்களில் பிரயோகிக்கப்படவில்லை. ஒரு பாமரக்கருத்து நிலையில் உள்ள மனிதனின் பார்வையில் உள்ள 'வாழ்க்கை' என்ற கணணோட்டத்திலான அர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.

முதலில் ஒரு மனிதனுக்கு வாழ்க்கை என்பது ஒழுங்கற்ற, புரிந்துகொள்ள முடியாத, குழப்பந்தரக் கூடியதாக இருக்கிறது. சீட்டாட்டத்திற்கு முன் கலைக்கப்பட்டுள்ள கார்டுகளைப்போல. பிறகு ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளுடன், ஏற்கனவே நமக்கு கற்றுத் தரப்பட்டவைகளுடன் வாழ முனைகிறோம். பிறகு இச் சமூக அமைப்பில் ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைகள் இருக்கின்றன. 13 கார்டுகள் தரப்படுவதுபோல, அந்த வாழ்க்கைச் சூழலுக்குள் நின்று அதை நமக்கு ஏற்ப (நமது கருத்துருவ பின்னனியுடன்) ஒரு ஒழுங்குக்கு உட்படுத்தி புரிந்துகொண்டு, அதை நம்முடன் உறவுபடுத்த முனைகிறோம். தொழிலாளி, விவசாயி, அறிவுஜீவி இப்படி புதிய சமூக உறவுகளுடன் வாழ முனைகிறோம். நாம் எப்படி ஆடப்போகிறோம் என்பதை கார்டுகள் தீர்மானிப்பதுபோல நமது வாழ்நிலையை புறத்தே உள்ள சூழல்கள் தீர்மானிக்கின்றன. 'செட்'டுகள் சேர்க்க தரப்பட்ட கார்டுகளை அடுக்க ஆரம்பிக்கிறோம். இந்த உறவு படுத்தல்கள் மூலம் தேவைகள், எதிர்பார்ப்புகள், இயலாமைகள், நமது அடுத்த இலக்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்கிறோம். இந்தவகை புரிதலுடன் சமூகத்தில் இயங்க முனைகிறோம். நமது சக மனிதர்கள் அல்லது நமது சூழலுக்குள் நமது உறவிற்குள் கட்டப்பட்டவர்களால் ஸ்தூலமான அனுபவங்கள் நமக்கு முன் தரப்படுகிறது. டிஸ்கார்ட் செய்யப்பட்டு விட்டது. அந்த அனுபவத்தின் விளைவு நமக்கு பொருந்தலாம், பொருந்தாமல் போகலாம். இங்கு அனுபவத்தை படித்து சரியாக பிரயோகிப்பவன் அதாவது வாழ்வின் போக்கை புரிந்துகொள்பன் பிறரின் அனுபவ விளைவுகளை சரியாக பிரயோகித்துக் கொள்கிறான். எனவே, சக மனிதர்களுடன் நம் உறவு தவிர்க்க முடியாததாகிறது. சக மனிதர்கள் இல்லாமல் வாழ்க்கை என்கிற சமூக ஆட்டம் சாத்தியமில்லை. பிறரின் அனுபவம் நமது சூழலுடன் முரண்படும்போது நாம் புதிய, முன் அறிந்திராத அனுபவத்தை தேடிப்போகிறோம். ஏனெனில், மனிதன் இயங்கியே ஆக வேண்டும். கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள களக்கார்டுகளை நாடி போக வேண்டும். அதுவும் நமக்கு பொருந்தலாம், பொருந்தாமல் சூழலுடன் முரண்படலாம். ஆனால், நாம் நமது சகமனிதனுக்கு நமது சூழலிலிருந்து ஒரு அனுபவத்தை, சமிக்ஞையை தந்தாக வேண்டும். நாமும் டிஸ்கார்ட் செய்யவேண்டும். அதைப் பற்றிக்கொண்டோ அல்லது புதிய அனுபவத்தை தேடிக்கொண்டோ சகமனிதன் இயங்குவான். இப்படி நமக்கு முன் இருவேறுபட்ட அனுபவங்கள் இருக்கின்றன. நாம் எதிர்பாராத அனுபவத்தை நாடிப்போகும்போது அது நமக்கு பொருந்துமா? என மனச் சஞ்சலப்பட்டு, நமது அறிவுக்கு அப்பாற்பட்ட, பகுத்தறிவற்ற உணர்வுகளால் நாம் ஆட்கொள்ளப்படுகிறோம். மூடப்பட்ட இச்சமூக இயக்கப்போக்கு முன்திட்ட முடியாத நமது அனுபவங்க்ள் நம்மை 'மர்மத்தன்மை' வாய்ந்த விஷயங்களை நாடிப்போகச் செய்கின்றன.

கீழிருக்கும் கார்டின் மர்மம், நமது உணர்வுகளில் ஒரு மர்மமான எதிர்பார்ப்பை நிறைவு செய்யக்கோரி வேண்ட ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் இதன் நீட்சியே நமது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட மர்மமான சக்திகளின் ஊடாட்டக் களமாக நமது மன அமைப்பு அமைந்துவிட காரணமாகிறது எனலாம்.

சீட்டாட்டத்தை இயக்கும் விதிகள் வாழ்க்கையை இயக்கும் விதிகளுடன் ஒத்திருக்கின்றன. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமக்கு கிடைத்திருக்கும் கார்டுகளை கொண்டுதான் விளையாடவேண்டும். நமது சூழலை கொண்டுதான் வாழவேண்டும். இந்த நிர்பந்தம் சூதாட்டத்தின் ஆர்வம்போல வாழ்வின் ஆர்வமாக பரிணமிக்கிறது. சீட்டாட்டத்தினால் பெறப்படும் ஒழுங்கு தேடும் உள்ளார்ந்த 'அடையாளம் கானுதல்" என்னும் செயலினால் ஏற்படும் மாயையான, பொய்சுகத்தை தருகிறது. அதனால் எத்தனைமுறை தோற்றாலும், வாழ்க்கையை வாழ அடுத்த சுற்றை நாடிப்போய்க்கொண்டு இருக்கிறோம். இங்கு வாழ்க்கையை ஸ்தூலமற்ற விதிகளால் ஆன அமைப்புகளே ஆள்கின்றன. நமது பணி கார்டுகளை கையில் வைத்தக் கொண்டு அடுக்கி, அழகு பார்ப்பதும், திறமையை பிரயோகித்து அவற்றை ஒழுங்குபடத்த முனைவதும்தான். மொழியமைப்புகளின் சொல்லாடல்களத்தின் வழி இறக்கப்படும் இதே போன்ற விதிகள் சமூக அதிகாரத்தை இறக்கி நம்மை அதன் கீழான ஆளுகைக்கு உட்படுத்தி இயங்கவைக்கின்றன என்று இதனை புரிந்துக் கொள்ளலாம்.

நாம் இந்த விதிமுறைகள் அற்ற ஆட்டத்தை ஆடமுடியுமா? முடியுமெனில் அதன் அமைப்பு எப்படி இருக்கும்? வாழ்க்கை, மொழியமைப்பு ஆகியவற்றை இன்றைய ஒழுங்கமைப்புகளுக்கு எதிராக செயல்பட வைப்பது எப்படி? இன்றைய நம்பிக்கைக்குரிய புரிதல்.. மேற்கண்ட மர்மவிதிகளின் இடத்தில் புரிந்துக் கொள்ளக்கூடிய, பகுத்தறிவுக்கு ஏற்ப, தர்க்கநெறிக்கு உட்பட்ட ஒழுங்கமைப்புகள் கொண்ட ஸ்தூலமான விதியை மாற்றாக முன்வைக்க வேண்டும், இயங்கச் செய்யவேண்டும். மார்க்சியர்களின் வார்த்தைகளில் கூறினால் புதிய சமூக அமைப்பும், அதன் விதிகளும் ஸ்தூலமான ஒன்றாய் அமையும்போது வாழ்க்கை அர்த்தம் உள்ளதாய் இருக்கும் என்பதைப்போல.

எனவே, இன்றைய வாழ்க்கையின் இயங்குமுறையின் உள்தர்க்கமும் தவிர்க்க முடியாத மர்மவிதிகளை கொண்டியங்குகிறது. பந்தயங்களுக்குள் அடுத்தவன் தோல்வியும் நமது வெற்றியுமே முக்கியம். அதுதான் பந்தயத்தின் விதி. சகமனிதன் இருத்தல் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்துவதாக அல்லது இயக்குவதாக உள்ளது என்பதான தர்க்கம் அறிதலாக. ஒரு புரிதலாக உள்ள ஒரு அரசியல் நிலை இது. ஒருவரது வெற்றி மற்றவரது தோல்வி என்பதே இன்றைய கலாச்சாரத்தின் மர்ம விதியாகும். இதற்கு காரணம் இன்றைய சமூக அதிகாரம் தந்த சமூக உள் ஒழுங்கு விதியாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழமுடியும் என்ற சூதாட்ட விதியாகும். இதைத்தான் “இயல்பானது“ “யதார்த்தமானது“ என நம்புகிறோம். சமூக அதிகாரத்தின் வழி இன்றைய அமைப்புகள் நம்மிடம் மனதளவில் ஏற்றியிருக்கும் 'யதார்த்தம்' என்ற ஒன்றின் உள்தர்க்கம் இதுதான். இன்றைய மனிதனும், அவனது வாழ்க்கையும் சிக்கியிருக்கும் நெருக்கடி அல்லது பதனப்படுத்தியிருக்கும் வாழ்க்கையின் இயக்கமுறை இதுதான். இதிலிருந்து நம்மையும், நமது வாழ்வையும் எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம்? வாழ்வெனும் சூதாட்டதில் எப்படி வெற்றியடையப்போகிறோம்? என்பதே நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வியாகும்.

-ஜமாலன் (31-11-1989)

4 comments:

சீனி மோகன் சொன்னது…

மிகவும் ஆச்சரியமான பதிவு. சீட்டாட்டத்தையும், மொழியையும், வாழ்க்கையையும் இப்படிக்கூட இணைக்க முடியுமா ? மேலும் கடந்த 20 ஆண்டுகளில் சீட்டாட்டத்தில் 13 கார்டுகளுக்குப் பதிலாக 18, 21, 28 என்று வளர்ந்து கொண்டே போயிருப்பது மொழியிலும் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றத்தைப் போலவே கவனம் கொள்ளத் தக்கது. அதிலும் வாழ்வைப் போலவே பலவித ஒழுங்கமைப்புகளும் ஆடும் முறைகளும் கவனிக்கத் தகுந்தது.

ஜமாலன் சொன்னது…

நன்றி சீனிமோகன்

manjoorraja சொன்னது…

நல்லாதான் ஆராய்ந்து இருக்கிறீர்கள். ஒப்பிடல் பிரமாதம்.

நன்றி.

ஜமாலன் சொன்னது…

நன்றி மஞ்சூர் ராசா..