கவிதையும் சிதைவாக்கமும் - சில பிரச்சனைகளும் கேள்விகளும். – இறுதி பகுதி

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4

7. கவிதை தனிமனித/சமூக அனுபவம் என்கிற எக்கருத்தைக் கொண்டியங்கினாலும் அனுபவம் என்கிற சுதந்திரமற்ற இருப்பையே பேசும் பொருளாகக் கொள்கிறது. இதனூடே இது உருவாக்கும் “தனிமனிதன்” – என்கிற பிம்பமானது ஒப்பிடற்கரிய “கடவுள் நிலை” – பிம்பத்தைக் கொள்கிறது. சமூக வரையறைகளுக்கு அப்பால் இருக்கும் இந்தனிமனிதன் – தனது தனித்துவம் வேண்டி உருவாக்கும் பிம்பங்களின் வெளியிலேயே கவிதைகளின் சாகாத்தன்மை காக்கப்படுகிறது.

இன்றைய அகவயம் சார்ந்த கவிதைகளில் “தனிமனிதன்“ – என்பவனின் சுயம், பிரக்ஞை – பற்றிய ஒருவகை அதீத நுட்பமான சித்தரிப்புகளைக் காணலாம். இவை பேசும் மனிதத் தன்னிலையானது “நுண்னுணர்வு”, பிரக்ஞை, உள்ளுணர்வு, பொறி போன்ற நுட்பமான கருத்தியல் மொழிகளால் பின்னப்படுபவையே.

8. கவிதையின் அறிதல் (அ) பரிட்சயம் (familiarization) ஏற்படுத்தும் புதிய உணர்வுகள் கவிதையின் “பெயரிடுதல்“ செயலினால் ஏற்படுதலே ஆகும். ஏற்கனவே அர்த்தப்படுத்தப்பட்ட ஒரு பொருளின்மீது மனித உடல் எதிர்கொள்ளும் புதியவகை உணர்வையும் உள்ளடக்கி எழுதப்படும் கவிதையானது அப்பொருளுக்குப் புதிய பெயரிடுதலைச் செய்கிறது. இப்புதிய பெயரிடுதலைக் கண்டுகொள்ளும் வாசகன் உணர்வெழுச்சியடைகிறான். இதுவே, கவிதையின் அனுபவமாகச் சுட்டப்படுகிறது.

இன்றைய புதுக்கவிதைகளில் பயன்படுத்தப்படும் சாதாரணப் பொருள் பற்றிய படிமங்கள் (இழுப்பறை, மேஜை, காகம்... இப்படி) இன்றைய மனிதனின் நெருக்கடிமிக்க அவல உணர்வுடன் பின்னலாக்கப்பட்டுப் புதிய குறியீடுகளாகத் தளமாற்றம் செய்யப்படுகின்றன. இது பழைய வகைப்பட்ட “இழுப்பறை“-க்குப் பதிலாக அவல உணர்வை உள்வயப்படுத்திய “இழுப்பறையாக“ புதிய அர்த்தப் படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே, இழுப்பறையை எதிர்கொள்ளும் வாசகன் – தனது அவல உணர்வைக் கற்பனையாகப் பங்கிட்டுக் கொள்வதன்மூலம் – உணர்வின் அழுத்தத்திலிருந்து விடுபடுகிறான். இது அவல உணர்வின் யதார்த்த்த்துடன் அவனை இயைபுபடுத்துகிறது.

9. கவிதை “புதிய பெயரிடுதலை”- கொண்டியங்குவதால், புதிய ஒழுங்கமைப்புகளை உருவாக்குவதாகத் தோற்றம் கொள்கிறது. புதிய ஒழுங்கமைப்பு பழைய ஒழுங்கமைப்பின் போதாமையை அல்லது சிதைவை – மீள் ஒழுங்குக்கு இட்டச் செல்வதன் மூலம் கவிதையும் உடல்/மனம் - பொருள்/கருத்து – என்ற முரணைக் கேள்விக்கு உட்படுத்தாமல் அங்கீகரித்துச் செல்வதாக அமைகிறது. இதிலிருந்து அதிகாரத்தின் பிறிதொருவகை அமைப்பாக்க உத்தியாகவே கவிதை செயல்படுவதை அறியலாம்.

10. “பெயரிடுதல்” – பண்பின் பிறதொரு செயலே “காலத்தை மீறிய கவிதை” என்கிற கருத்துப்புனைவாகும். ஒவ்வொரு காலத்திலும் கவிதையின் குறிப்பான் மாறுவதில்லை. குறிப்பீடுகள் மாறுகின்றன. அதற்குத்தக உருவாகும் புதிய அர்த்தப்படுதல் பெயரிடப்பட்ட பொருளின் சொல்லாடல் களத்தின் இயக்கத் தளத்தை விரிவு படுத்துகிறது. இது புதிய அனுபவமாக ஏற்கப்பட்டவுன் புதிய பெயரிடதல் நிறைவு பெறுகிறது. புதிய அனுபவம் – பழைய ஒழுங்கமைப்பின் போதாமையை உடைத்தெறியாமல் புதிய பெயரிடுதல் மூலம் – மறு ஒழுங்கமைப்புக் கொண்டுவரப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. இது ஒருவகைச் சொல்லாடல்களின் மறு உற்பத்தியாக (Reproduction of discourse) செயல்பட்டு, பழைய அமைப்பைப் பாதுகாக்கும் அரணாகக் கவிதையைச் செயல்படவைக்கிறது.

11. கவிதை மனம், மனம்சார்ந்த அழுகுணர்வு – ஆகியவற்றுடன் பிணைவுற்றிருப்பதால் பிற இலக்கிய வகைகளைவிட இறுக்கமாகவும், சிதைவுக்கு உட்படமுடியாததாகவும் அமைகிறது. இப்பண்பினால் இது மொழிக்குள் உருவாகிச் செயல்படும் இணைமொழியாக (Parallel Language)[1] இருக்கிறது. இவ்வினை மொழியானது மனித உடலை ஒழுங்கமைப்பதில் பிறமொழிகளைவிட வலிமையாகவும், செறிவுற்றும் செயல்படுவதால் சிதைவாக்கம்-என்கிற மொழியியல் பண்பினூடே ஒருவகை தூரப்படுத்தலைக் (distantiation) கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கவிதை, மனம் சார்ந்த மொழியின் சொல்லாடல் களத்தை விரிவுப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

12. கவிதை இணைமொழியாக இருந்து, மொழியை கட்டமைக்கும் மூலப்பொருளாக சுயஇயக்கம் (automation) பொறுவதால் கவிதைக்கான வடிவமே மொழியை சிதைவுக்கு உட்படுத்துமா? என்கிற கேள்வி எழுகிறது. இதன்மூலம் “கவிதை“ என்பது மொழியைச் சிதைக்க இயலாத சுய இயக்கம் பெற்றுவிட்ட ஒருவகைக் கட்டளைத் தொகுப்பாகும் (Programmable Packages) என்கிற புதிய அறிதலை பெறுகிறோம். கணிப்பொறி மொழியில் கூறினால்-இது ஒருவகை Package[2] ஆகும். இதனைப் பயன்படுத்தி, சிதைத்தலைச் செய்ய இயலாமல், ஒழுங்கமைத்தலையே சாத்தியப் படுத்தமுடியும். ஏனெனில், இது மொழியல்ல, மொழியால் மொழிக்குள் உருவாக்கப்பட்ட பிறிதொரு இனைமொழித் தொகுப்பாகும். இது ஒழுங்கமைத்தல் என்ற செயலுக்கென உருவாக்கப்பட்ட மொழி.

13. கவிதைக்குள் இயங்கும் சமிக்ஞைகள் (codes) சமூகத்தின் நினைவிலி மனப்புலத்தில் படிவுற்றிருக்கும், “ஒழங்கமைத்தல்” – என்கிற செயலை அர்த்தப்படுத்துவதாக அமைவதால், வெவ்வேறு சமூக இருப்புகளிலும், கவிதை வெவ்வேறுவகை அர்த்தப்படுத்தல்களைச் செய்கிறது. ஆதிச்சமூகங்களில் “காதல்“ பாலியலுடன் அர்த்தப்படுத்தப்பட்டது. இன்றைய சமூகங்களில் காதல் பாலியலுடன் ஒரு தூரப்படுத்தலை ஏற்படுத்திக் கொண்டு மதம் சார்ந்த அர்த்தப்படுத்தலைச் செய்வதாக அமைகிறது. ஆதிச்சமூகங்களில், பாலியல் உந்துதலான காதல் (sexual drive) இன்று “புனித”ச் சடங்காகக் கொள்ளப்படுகிறது. எனவே, கவிதை மொழியினுள் காதல் அன்று பாலியல் குறிப்பீடுகளையும், அர்த்தப்படுத்தல்களையும் கொண்டிருந்தால், இன்று மதக்குறியீடுகளால் பின்னப்பட்ட அர்த்தப்படுத்தப்படுகிறது. அன்றைய கவிதைப் பனுவல் (text) இன்று மத ஒழங்கமைப்புகளின் அர்த்தத்தைத் தரக்கூடிய கருத்துப் புனைவாகவே இயக்கமடைகிறது.

14. பிற எழுதுதலுக்கும், கவிதை என்கிற எழுதுதலுக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் உள்ளது. பிற எழுதுதலான (உரைநடை, நாவல்..etc.) உடலியக்கம் போன்ற வரையறுக்கப்பட்ட சமிக்ஞைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், கவிதை மனோவியக்கத்தைக் கொண்டிருப்பதால் சமிக்ஞைகளை வரையறுப்பதையே தள்ளிப்போடுகின்றன.

5

நமது பேச்சினூடே வந்தமைந்துள்ள புதிய அறிதலானது – கவிதையும்/மதமும்-இருவகை இணை ஒழுங்கமைப்புகள் (Parallel Sstems) ஆகும். கவிதை – என்பது அறிவுருவாக்கத் தளத்தினை ஒழுங்கமைக்கும் மதத்தின் பிறிதொரு இணைமொழியாகும். “கவிதை” – என்ற சொல்லுடன் பிணைக்கப்பட்டுள்ள – மன உணர்வுகளின் இயக்கம், நிலைப்பு – ஆகியன இதை நமக்கு உணர்த்துகின்றன. இந்நோக்கில் நாம் அறிந்த “கவிதை“ என்ற குறித்தல் ஏற்படுத்தும் குறிப்பீடு மனித மனத்தில் நினைவிலிதளத்தை ஒழுங்கமைப்பதே ஆகும். எனவே, கவிதையின் வாய் எதைப்பற்றி பேசினாலும் ஒழுங்கமைத்தலையே செய்கிறது என்பதால் “புதிய கவிதை“ – என்பது முற்றிலும் சிதைவாக்கப்பட்ட மொழியைக் கொண்டே கட்டமைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில் நமது வாசிப்பு ஏற்படுத்தும் விவாதத்திற்குரிய பிரச்சனைகளாகக் கீழ்கண்ட சில கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

1. கவிதையின் செயல் “ஒழுங்கமைத்தலாக” இருப்பதால் அதனை சிதைவாக்கப்பட்ட மொழிகொண்டு எழுத முடியுமா?

2. சிதைவாக்கப்பட்ட மொழி கொண்டு எழுதப்படும் கவிதை – வாசிப்பவனின் நினைவிலி தளத்தில் “சிதைத்தல்” பற்றி “வன்முறை” – உணர்வைத் தோற்றுவிக்குமா?

3. இயக்கமுடைய ஆய்வு மொழியால் சிதைக்கப்படாத இன்றைய கவிதையின் நினைவிலித் தளத்தை மறுகட்டமைப்புக்கு (reconstructh) உட்படுத்த முடியுமா?

இப்படி, இன்னபிற, கேள்விகளுடன் பேச்சை முடிப்போம்.

- ஜமாலன் - மேலும் – 1991 (மொழியும் நிலமும் -2003).


[1] Parallel Language – இணைமொழி என்கிற புதிய கருத்தாக்கத்தை அறிமுகம் செய்வதன்மூலம் சிலவற்றை இன்னும் ஸ்தூலமாகப் புரிந்துகொள்ள முடியும். இணைமொழி என்பதை இங்கிவரும் மொழிக்கு இணையான தளத்தில், ஒரு குறிப்பிட்ட செயலை மையமாகக் கொண்டு கட்டமைத்து, உருவாகிவரும் புதிய மொழித்தளமாக வரையறுக்கலாம். இது மொழியினால், மொழிக்குள்ளாக ஒரு குறிப்பிட்ட செயல் ஒழுங்கைச் செய்யவென உருவாகி வருகிறது. கவிதை ஒரு மொழியின் செயலை மொழிக்குள் செய்வதாக அமைவதால், அதை ஒரு இணைமொழியாக கருதலாம். இதேபோல் சிதைவாக்கம் (deconstruction) என்கிற மொழியியல் பண்பினை செயலுருவில் பெறக்கட்டமைக்கப்பட வேண்டிய ஆய்வியக்க மொழியும் ஒரு இணைமொழியே இதன் செயல்மையம் மொழித்தளத்தின் அபௌதீக இறுகல்களை உடைத்துச் சிதைவாக்கம் செய்வதாகும்.

[2] Package என்பது Computer Language-ல் உள்ள ஒருவகை இயக்கம் உள்ள, குறிப்பிட்ட ஒருவரால் உருவாக்க முடிந்த கட்டளைத் தொகுப்பாகும் (programmable system). உதாரணமாக இன்றுள்ள dBase III, III plus, Lotus 123, WordStar ஆகியன இவ்வகை Programme..களே ஆகும். இவை குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக பிறதொரு கம்யுட்டர் மொழியால் உருவாக்கப்பட்ட தொகுப்புகளாகும். (business purpose, typing இப்படி.) கம்யுட்டர் மொழியும் பொதுமொழிகளைப்போலவே (Natural Language) பல படிவுகளின்மேல் உருவாகி வந்ததே. கம்யுட்டருடன் நேரடியாக பேச அதன் உள்ளமைப்பிற்கென உருவான மொழி Machine Language. அதிலிருந்து வளர்ந்த Assembly Language என்பது இரண்டாம் படிவாகும். பிறகு ”சி” போன்ற அமைப்பு மொழிகள் (Strctural language) middlw level- ல்உருவாக்கப்பட்டன. அதன்மேல் உருவானதே High level language எனப்படும் Basic, Cobol ஆகியன. இவற்ற்ல் “சி“ மொழியால் எழுதப்பட்டவையே Packages ஆகும். இதேபோல் மொழியில் பல படிவுகளில் உருவாகி கட்டமைக்ப்பட்ட தொகுப்பே கவிதையின் எழுதுதலாகும். இதன் சுய இயக்கம் உருவாக்கும் மொழியே இணைமொழியாகும்.