கவிதையும் சிதைவாக்கமும் - சில பிரச்சனைகளும் கேள்விகளும். பகுதி:4a

பகுதி-1 பகுதி-2 பகுதி-3

4

மேற்கண்டவைகள கவிதையின் நுட்பதிட்பங்களுடன் பொருத்துவோம்.

1. ‘கடவுள்‘ – என்கிற அபௌதீகத்துகள் செயல்படும் புலமாக மதத்தைக் கொண்டால், ‘கவிதை‘ – செயல்படும் புலமாக மனதைக் கொள்ளலாம். மனம் பொருளின்மீது ஆதிக்கம் செலுத்துதலாக அமைகிறது. பெரும்பாலான இயலக்கியங்களின் தோற்றம் கவிதையிலிருந்தே துவங்குகிறது – என்கிற வரலாறு இதை நமக்கு உணர்த்துகிறது. புராதன மனிதனின் குகை ஓவியங்களுக்குப்பின் உருவான பாவனை நடனங்களுடனே “கவிதை தோற்றம் பெறுகிறது[1]. தமிழிலும் கவிதை உணர்வுடைய செய்யுள்களே முதலில் தோற்றம் பெற்றுள்ளன என்பதே சான்றாகும். அக/புறநானூறுகளில் இன்றைய கவிதை என அறியப்படும் கவித்துவம் சார்ந்த உணர்வுடைய செய்யுள் நிகழ்வுகளைப் படிக்கிறோம். எனவே, இன்று இலக்கியக் குணம் எனக் கருதப்படும் ‘கவித்துவம்‘ – என்பதன் உருவாக்கப் பின்னணியை ஆதிநிலை மனித உடலின் இயக்கு நிலைகளில் படித்துணரமுடியும்.

2. மனம் சார்ந்தும்Xஉடல்சார்ந்தும் பிளவுண்ட மொழியானது உடல்Xமனம் என்கிற முரணை முன்னுக்குக் கொண்டு வந்து மனதை உடல்மீது ஆதிக்கம் செய்யும் தொழில்நுட்பமாகக் கட்டமைத்த மூலங்களில் ஒன்றாகவே கவிதையின் செயல்பாட்டை அறிய முடிகிறது.

சான்றாக, மனித உடலை ஒழுங்கமைப்பதாகப் புறப்பாடலையும், மனதை ஒழுங்கமைப்பதாக அகப்பாடலையும் கொள்ளலாம். ஆதிநிலை மனிதனின் இன ஒழுங்கமப்புகளான இனவிரிவு X இனவலிமை – என்கிற செயலாக்கங்கள் காதல் X வீரம் என்கிற கருத்துப் புனைவுகளாகப் பின்னப்படுகின்றன. பிற்காலங்களில், புறத்துறையானது, அகத்துறையை உள்வாங்கி வீரத்தைக் காதல் கொண்டு அளவிடுதலாக அமைகிறது. இதுவே, மனதின் ஆதிக்கம் உடலை ஒடுக்குவதாகச் செயல்படுகிறது. வீரம், காதலைப்பெற என்பதாக அமைகிறது. ”விழுப்புணர்வற்ற மார்புகள் பெண்களால் தழுவப்படா”- எனவே, வீரம் ‘ஆண்மையாகவும்‘ காதல் ‘பெண்மையாகவும்‘ குறியிடபட்டு வளர்கின்றன. ஆண்மை-என்கிற ஆதிக்கநிலைப் புனைவானது, பெண்மையை வெல்லவே என்பதாக வளர்சிதை மாற்றம் அடைகிறது. வீரர்களே ... பெண் உடலின் காதலைப்பெறும் தகுதியுடையோர் என்பதாக இலக்கிய உருவாக்கங்கள் நிகழ்கின்றன.

3. உடல் X மனம் - என்கிற முரண், மொழியியலில் பேச்சு  X எழுதுதலாக அமைப்பாக்கம் பெறுகிறது. பேச்சு என்கிற ஒழுங்கமைவுக்கு உட்படாத உழைப்பானது, எழுதுதல் என்கிற ஒழுங்கமைவுக்கு உட்படும்போது அந்நியமாக்கப்பட்ட உழைப்பாக மாறுகிறது. இவ்வாறு பேசும் தன்னிலையிலிருந்து பேச்சை எழுதுதல் அந்நியப்படுத்துகிறது. இதனால் பேச்சு உற்பத்தியில்/சூழலில் அர்த்தம்பெற, எழுதுதல் சூழலைத் தாண்டிய குறியமைப்பாக அமைப்பாக்கம் பெறுகிறது. எனவே, வாய்மொழியாக உருவான இலக்கியங்கள், எழுதுதலுக்கு உட்படும்போது.. வாய்மொழி, பேச்சை ஒடுக்குகின்றன. இந்நோக்கு பேச்சுசார் கவிதைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்போது எழுத்துசார் கவிதைகளின் உள்ளார்ந்த குணமான அதிகாரப்பரவலைச் சுட்டுகிறது. கவிதையானது உடல்சார் அனுபவங்களை, சூழலை ஒட்டிப் பேசுவதாக உற்பத்தியாகாமல், அனுபவத்தை, சமூகம் தந்த குறியமைப்புகளுக்கு உட்பட்டு எழுதுதலாக அமைகிறது. இங்கு பேச்சு/எழுதுதல் என்கிற முரணை வெறும், வாய்மொழி, எழுத்துமொழி – என்கிற வடிவவியல் நோக்கில் நாம் கூறவில்லை. பேச்சு –சிதைவாக்கப்பட்ட மொழியாகவும், எழுதுதல் ஒழுங்கமைக்கப்ட்ட மொழியாகவும் கொள்கிறோம். எனவே, கவிதையில் அடிப்படைக்குணம் எழுதுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் வெவ்வேறு சமூக ஒழுங்கமைப்பிலும் கவிதையானது – சூழலைத் தாண்டி அர்த்தம் விகசிக்கும் என்பது போன்ற கருத்தேற்றம் செய்யப்படுகிறது. இதுவே, கவிதையின் பொதுக்குணமாகக் கொள்ளப்பட்டு வாசக கவிதை பன்முக உறவாக ஏற்கப்படுகிறது.

சங்ககால ‘யானேயாக நின் நெஞ்சு நேர்பவள்‘- என்கிற உணர்வும், வருணனை மொழிகளும் – இன்றைய கவிதைகளிலும் விடுபடாமல் இருப்பதைப் பார்க்கிறோம். காரணம் அன்றைய ‘எழுதுதல்‘ முறைகளே இன்றைய கவிஞனின் எழுதுதலாக உள்ளது. அன்றைய மொழியே – இன்றைய அமைப்புக்குத்தக செய்தியை அறிவிப்பதாக உள்ளது.

4. வாசகனின் மனம் கவிதையின் மனத்துடன் பிணைக்கப்படுவதால் ஏற்படும் உணர்வெழுச்சிகளைக் கொண்டு, கவிதை அளந்தறியப்பட்டது. இதனூடே இரசனைமுறை- என்கிற நாகரீகம் சார்ந்த கருத்துப்புனைவு பின்னப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டு.. அதனைப் பொதுமைப்படுத்துவதன் மூலம் அழகியல் போன்ற சமூக ஒழுங்குமுறை சார்ந்த வன்முறைக் கருவிகள் கட்டமைக்கப்படுகிறது. இதுவே கலாச்சாரம், நாகரிகம்... என்பதாக அமைப்பாக்கம் பெறுகிறது.

5. மேற்குறித்தவாறே ‘மதம்‘- என்கிற அபௌதீகக் கட்டமைப்பும் இயக்கம் பெறுவதை வாசித்தறியலாம். மதம் அறவியலையும், கவிதை ‘அழகியலையும்‘-தனது நினைவிலிதள ஒழுங்கமைவாகக் கொண்டுள்ளன. எனவே, மதம் – மனித உடலை அறவியல் மதிப்பீடுகளகை கொண்டு அளவிட, கவிதை – அழகியல் மதிப்பீடுகளைக் கொண்டு அளவிடுகிறது.

6. சமூக, அனுபவங்கள் ஒழுங்குமுறைக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதே மத – அறவியல் கோட்பாடாகும். இதனை ஒப்பிடவென மதம் ‘கடவுள்‘ – என்கிற புனிதபிம்பத்தைப் படைத்தளிக்கிறது. இப்பிம்பத்துடன் ஒப்பிட்டு ஒழங்கமைத்து – இதனுடன் தன்னைப் பிணைத்தக் கொள்வதன்மூல் ‘இயக்கமற்ற‘ ஒரு பிம்பவெளியில் வைத்து மனித உடலானது விரை நசுக்கப்பட்டு வீர்யம் இழுக்கச் செய்யப்படுகிறது. இதேபோல சமூக அனுபவத்தை தனிமனிதன் எனும் ஒழுங்கமைப்பைக்கொண்டு அளந்து, அர்த்தப்படுத்துவதே கவிதை- அழகியல் கோட்பாடாகும். இது மனித உடலின் சுயஅனுபவம் என்கிற அதிகாரத்தின் நிகழ்தகவுக்கு உட்பட்டு தேர்ந்துகொள்ளக்கூடிய ஒரு வாழ்தலை ஒப்பிடவென ‘கவித்துவம்‘ என்ற மனம் சார்ந்த மொழியைக் கொண்டு, ஒரு புனைவு வெளியைக் கட்டமைக்கிறது. இவ்வெளியுடன் தன்னைப் பிணித்துக் கொள்ளும் மனித உடலானது – ஒரு கற்பனைவயப்பட்ட நிலையை அடைகிறது. மதத்தின் மொழியில் இதுவே ‘சரணாகதி, அர்ப்பணிப்பு‘ – என்று குறிக்கப்படுகிறது. ஆண்டாளின் பாசுரங்கள், திருவாசகம், தேவாரம் தொடங்கி இன்றைய பாரதியின் கண்ணன் பாடல்கள்வரை இத்தகைய ‘பிம்பவெளி-பிணைப்பு‘ இலக்கியங்களை உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைய புதுக்கவிதைகளில் பேசப்படும் காதல் பற்றியக் கவிதைகள் பெரும்பாலும் இத்தன்மை வாய்ந்தவையே.

(தொடரும்)


[1] இது குறித்து முன்பே கூறப்பட்ட ‘மனித சமூகசாரம்‘ – நூலைப்பார்க்கவும் விரிவான ஆதாரபூர்வமான விளக்கங்கள் அதில் உள்ளன.

- ஜமாலன் (மேலும். 1991)