3.
உடல் X மனம் – என்கிற இணைஎதிர்வு (binary opposition) இலக்கியத் தளத்தில் பேச்சு X எழுதுதலாக வளரும்போது, தத்துவக்களத்தில், பொருள் X கருத்தாக – உருமாற்றம் கொள்கிறது. இத்தகைய எதிர்வுகளைக் கட்டமைத்ததன் மூலம் மொழியானது பொருளை – கருத்தைக் கொண்டும், கருத்தைப் பொருளைக் கொண்டும் அளவிடுகிறது. கருத்தைக் கொண்டு பொருளை அளத்தல் என்பது.. கருத்தின் செயல் வினைக்கான விளைப்பொருளாகப் பொருளை ஒடுக்குவதும் – பொருளைக்கொண்டு கருத்தை அளவிடுதல் என்பது பொருளின் செயல் வினைக்கேற்ப கருத்தை ஒடுக்குதலும் ஆகும். இதுவே, தத்துவத்தளத்தில் கருத்து X பொருள் – இணை எதிர்வு களத்தில் செயல்படும் “ஒடுக்கம்” (repression) அதிகாரம் (power) – என்கிற களத்தைக் கட்டமைக்கிறது. இக்களத்தின் செயல்பரப்பானது அனைத்துச் சமூக நடவடிக்கைகளையும் இணைக்கும் கண்ணியாகச் செறிவடைகிறது. இச்செறிவானது ஒற்றைப் புள்ளியில் குவியாமல், பலமட்டங்களிலும் விரிந்து பரந்து உள்ளது. இதையே அதிகாரத்தின் பல படித்தான (heterogeneous) தன்மை ‘சமுகம்‘ என்கிற நெசவின் ஊடுபாவாக அமைந்துள்ளது என்கிறோம்.
மொழியின் இணைஎதிர்வாக உருவான கருத்து X பொருள் முரண் அதிகாரத்தின் அமைப்பாக்க உத்தியாகச் செயல்படுகிறது. பொருளின் மீது கருத்தின் ஆதிக்கம் செலுத்தப்படும்போது பொருளானது, கருத்தின் புனைவு வடிவமாக உள்ளது என்கிற தத்துவச்சிந்தனை வளர்கிறது. இதுவே, பின்னால் கருத்துமுதல்வாதம்[1] போன்ற அபெளீகத் த்த்துவங்களாக வளர்கிறது.
அதிகாரக் களத்தின் உத்தியாக உருவான ‘அமைப்பாக்கம்‘ – சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் அமைப்பாக்கியதின் விளைவாக ‘மனித உடல்‘ – என்கிற பொருளும், கருத்துருவப் பிம்பங்களாக மாற்றியமைக்கப்படுகிறது. இதன் விளைவாக மனித உடலின் இருப்பில் ‘மனிதன்‘-என்கிற பிபம்பம் சார்ந்த கருத்தாக்கமே எஞ்சுகிறது. எனவே, சமூக மட்டத்தின் அனைத்துத் தளங்களிலும் அமைப்பாக்கத்தை உடைப்பதற்கான செயல்பாடே இந்நூற்றாண்டிக் அரசியல் செயல்பாடாகும் என்கிற இரண்டாம் நிலை அறிதலைப் பெறுகிறோம்.
சமூகத்தின் அமைப்பாக்கத்தினைக் கொண்டியங்கும் மொழியே அமைப்பாக்கத்தைச் சிதைக்கும் என்கிற உள்முரணைக் கொண்டிருப்பதால், சிதைவாக்கப்படாத மொழியைக் கொண்டியிங்குதல், பிறிதொருவகையில் இணை அதிகார அமைப்பாகச் செயல்படுதல் ஆகும். இவ்வகையில் சமூகத்தில் இயங்கும் அனைவரும் ஒருவகையில் இன்றைய அதிகாரக் களத்தின் கட்டமைப்பிற்கும், இருத்தலுக்கும் காரணமாக இருக்கிறார்கள். இப்படிக் கூறுவதால், வர்க்கம் சார்ந்த ஒடுக்குதலையும் புறக்கணிக்கவில்லை. ஆனால், வர்க்கப்பிரிவினைக்கூட மொழியியல் களத்தில் ‘பொதுமனிதநேயம்‘-என்கிற கருத்தியல் தொழில்நுட்பத்தின் வழியாக பதுக்கப்பட்ட வர்க்கமற்ற ‘மனிதஇருப்பு‘ – என்பதாக அமைப்பாக்கப்பட்டிருப்பதை உணரவேண்டும்.
அமைப்பாக்கத்தின் செயல்வெளியாக ‘மனிதஉடல்‘-இருக்கும்போது, செயல் உத்தியாக ‘மனம்‘-இயக்கமடைகிறது. எனவே, மனம் சார்ந்த மொழிகொண்டு எழுதப்படும் கவிதை ஒரு வகையில் சமூக அமைப்பாக்கத்திற்கு இணையாகவே செயல்படுவதுடன் சமூக அறிவுருவாக்கத் தளத்தின் அமைப்பாக்க உத்தியாகவும் இயக்கமடைவதை நம்மால் அறியமுடிகிறது.
அமைப்பாக்கம், சார்பற்ற முழுமுதல் பொருட்களை நோக்கியே தனது வினையில் விளைபொருளை கட்டமைக்கிறது. இவ்வாறு முழுமுதல் பொருளை அறிதலே அல்லது குறித்தலே மதம் சார்ந்த மொழியாக அறியப்படும்போது, கவிதையின் குறித்தலும் இதே செயல்பாடாக இயக்கமடைகிறது. எனவே, மத்த்தின் ‘கடவுள்‘ முழுமையான மனிதன் – என்ற தொழில்நுட்பமாக இணைவடிவம் கொள்கிறது. இந்நோக்கில் கவிதையின் இடமும், கடவுளின் இடமும் ஒப்பு நோக்கக்கூடியவை என்கிற நமது முற்கோள் நிரூபணமாகிறது.
(தொடரும்)
[1] ‘கருத்துமுதல்வாதம்‘- என்பதற்குள் ‘தேடல்‘, ‘கடந்துசெல்ல்‘ – தொழில்நுட்பத் த்த்துவங்கள் போன்றவற்றைக் குறிக்கிறோம். முதலில் தோன்றிய த்த்துவச் சிந்தனை ‘பொருள்முதல்வாதமே‘- பிறகே ‘கருத்துமுதல்வாதம்‘ என்கிற த்த்துவச் சிந்தனை வளர்ந்து மேலோங்கியது என்கிறார், Devi Prasad Chattopadyaya. அக்கருத்து வரலாற்று ரீதியானது. அதற்கான கோட்பாட்டு பின்னணியாக இகைகொள்ளலாம் என்கிற புரிதலே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மொழியியல்ரீதியாக பார்த்தால் கருத்து /பொருள் –முதல்வாதங்களை கராறாகப் பிரித்துணரமுடியாது. ஏனெனில், கருத்தும் செயல்தன்மைக் கொண்ட பொருளே. பொருளும் செயலற்று ஒடுங்கிய கருத்தாக எஞ்சக்கூடியதாக உள்ளது.
- ஜமாலன் (மேலும். 1991)




0 comments:
கருத்துரையிடுக