இக்கட்டுரை மந்திரச்சிமிழ் அக்டோகர்-2010 – மார்ச்-2011 – இதழில் வெளிவந்துள்ளது. இது நீளம் கருதி பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
முன்னோட்டம்.
நவீன மனிதன் கார்டீசிய மனமும் கார்டூன் உடலும் கொண்டவன் என்பது பற்றிய ஒரு வர்ணனையை விளங்கிக்கொள்ள முயல்வதே இங்கு எழுத்தாக நிகழ்கிறது கார்டீசியன் என்பதை தமிழ் படுத்தமுடியாது என்கிற இடைஞ்சலில்தான் இவ்வெழுத்து துவங்குகிறது. இந்த இடைஞ்சலுக்குப் பின்னணியில் ஓர் அரசியல் உள்ளது. அந்த அரசியலுக்குப்பின் ஒரு மன அமைப்பு உள்ளது. அந்த மனஅமைப்பை தாங்கிய ஒரு உடலமைப்பு உள்ளது. அந்த உடலமைப்பிற்கு மனிதன் என்கிற ஒரு உலகளாவிய அடையாளம் உள்ளது. அமெரிக்க வங்கிகள் பொருளாதார மந்தத்தில் சரியும்பொது, தமிழனாக தன்னை உணரும் அந்த இடைஞ்சலுக்குட்பட்ட மனித உடல் பாதிக்கப்படுகிறது. உலகில் பல மனித உடல்கள் பதற்றுத்துக்கு உள்ளாகிறது. பில்கிளின்டன் மோனிக்காவை காதல் கொண்டதாக அறிவிக்கப்பட்டபோது, உள்ளுர் தமிழனாக உள்ள அந்த உடல் கிளர்சியடைந்தது, வம்பளந்தது, ஆர்வம் கொண்டது, தனது ‘கள்ள' உறவுடன் அதை இணைத்து ரசித்தது. குடும்ப அமைப்பிற்குள் அமர்ந்து குதர்க்கம் பேசியது. பிள்கிளின்டனும் தானும் மனிதன் என்கிற ஒரே உடல், ஒரே உணர்வு கொண்டதாக எண்ணி இருமாந்தது. உணர்வுரீதியாக உலகெங்கும் மனித உடல் என்பது ஒன்றுதான் என்று எண்ணிக்கொண்டது. உயிர்வாழ்தலுக்கான அச்சம் துவங்கி பேருண்மைகளை அறிந்து ஞானமாக மாறிவிடும் விடுதலை அல்லது மோட்சம் வரை பலவகை உணர்வுகள் பாய்ந்து சென்றபடி உள்ளது. ஒரு உடல் மனிதனாக வாழ இத்தகைய உணர்வுகளை உணர்வது அவசியமாகிறது. உடல் இந்த உணர்வுகளால் மனிதர்களான கதையை துவக்கிய சொல், தத்துவம், அறிதல்முறைதான் கார்டீசியம் என்பது.
கார்ட்டூன் என்பதற்கு கேலிச்சித்திரம், குறும்புச்சித்திரம் போன்ற தமிழில் அறிமுகமாகி உள்ள தொலைக்காட்சி சொற்களை பயன்படுத்தி விளக்க முடியாது. இங்கு அதற்கான பொருள் வேறு. கார்ட்டூன் என்பதை ஒருவரது சுயத்தை பகடியாக வரையப்பட்ட அவரது உருவத்தின் வரைபடம் எனக் கொள்ளலாம். ஒரு உடலில் ‘மனிதன் என்கிற குறிப்பான சில பண்புகளை உருவாக்கி, அந்த பண்புகளை ‘சுயம்’ என்பதாக குறியிட்டு அச்சுயத்தை உணர ஒரு பிறரை உருவாக்கி, அதை வெளிப்படுத்தும் வண்ணம் வரையமுயன்ற ஒரு நவீனத்துவ ஓவியம் இறுதியில் கார்ட்டூனாகிவிட்டதை குறிப்பதற்கே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. சுயமாகவும், பிறராகவும் ஆகிவிட்ட மனிதர்கள், ஒருவரை ஒருவர் கண்டு கார்ட்டூனாகக் களிக்கும் விளையாட்டுப் பரப்பாக விரிக்கப்பட்டுள்ளது இச்சமூகம். ஆனால், அது விளையாட்டு அல்ல ஆழ்ந்த பொருளுள்ள அரங்கோ, கடவுளால் உருவாக்கப்பட்ட மேடையோ என ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மாயத்தோற்றம் உடல்களின் மனிதன் என்கிற கார்ட்டீசியம் உருவாக்கிய கார்டூனியத் தன்னிலையை, கார்டூனிய வாழ்வை மறைக்கிறது. அதாவது, உடல்களின் வாழ்தல் என்பது உருவங்களின் அதிலும் கேலிச்சித்திர உருவங்களின் வாழ்தலாகிவிட்டது. இந்த கேலிச்சித்திரங்களின் சுயம் கார்டீசிய தத்துவச் சித்தனை உருவாக்கிய ‘மனம்' என்கிற அல்லது ‘ஆத்மா' என்கிற 'சுயம்' என்கிற 'தன்னிலை' என்கிற ஒன்றின் விளைவு..
அறிமுகம்.
தத்துவம் ஒரு தியானமாக, உள்ளுணர்வாக, ஆத்ம விசாரமாக, உரையாடலாக, கோட்பாடாக, விஞ்ஞான அறிவாக, தொகுப்பறிவாக, புலனறிவாக, புலனுணர்விலிருந்து அறிதலுக்கு செல்லும் முறைப்படுத்தப்பட்ட அறிவாக, திண்ணைப் பேச்சாக, குருபரம்பரை விவாதங்களாக, தவப்பயனில் விளைந்த விசாரமாக, தெய்வகடாட்சமாக, ஞானமாக, யோகமாக, கர்மமாக, மர்மமாக, மாயமாக, மந்திரமாக, தந்திரமாக, விழிப்புணர்வாக, உள்ளொளியாக, தரிசனமாக. கரிசனமாக, செயல்பாடாக, நடைமுறையாக, புரியாமையாக, தெளிவாக, தனிமனித தன்முனைப்பாக, … இன்னபிறவாக... பல வடிவங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து விலகி தத்துவத்தை ஓர் அறிதல் எந்திரமாக முன்வைத்து ஆராய முனையலாம்.
தத்துவம் என்றால் என்ன? என்கிற கேள்வியைவிட தத்துவம் எதற்கு? தத்துவத்தின் பணி என்ன? என்கிற கேள்விகள்தான் முக்கியமானவை. இதுநாள்வரையிலான தத்துவத்தின் அடிப்படை பிரச்சனை ஓர் உடலுக்கு அல்லது சமூகம் என்கிற கூட்டுஉடலுக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தை அறிவது. பிரபஞ்சத்தை உடலின் அறிவிற்கு உட்பட்டு விளக்கப்படுத்துவது. உடல் எந்திரத்தின் அறிதல் கருவிகளை இயங்கிக்கொண்டிருக்கும் பிரபஞ்ச எந்திரத்துடன் இணைப்பது. இப்படி இணைப்பதன் வழியாக ஓர் உடலின் அறிதல் எந்திரத்தின் இயக்கத்தை துவங்கிவைத்து, இடையறாது இயக்குவது. அதை முடுக்கிக்கொண்டிருப்பது. புறப்பொருளை பற்றிய புரிதலை மற்றும் அறிதலை உருவாக்குவது. உடலுக்கும் புறஉலகிற்கும் இடையிலான உறவை உருவாக்குவது, இயைபுபடுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஓர் உடலின் பிறப்பு மற்றும் இறப்பு என்பதற்கிடையிலான ஊடாட்டத்தில், வாழ்தலில், அறிதல்புலனை கட்டமைப்பது தத்துவத்தின் முக்கியப்பணியாக உள்ளது. இப்புலன்வழி இதம்-வாதை என்கிற உடலின் உயிர்த்தல் செயல்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டு அறிதலின் விளைவாக அடையாளப்படுத்தப்படுகிறது. சமூகத்தின் மகிழ்வுந்தங்களை இயக்குவதில் தத்துவம் அறிதல்புலனாக மாறி மன அமைப்புகளை உருவாக்குவதாக உள்ளது.
தத்துவம் என்கிற சொல் சமஸ்கிருதத்திலிருந்து ஆளப்படுகிறது. தமிழில் அது மெய்யறிவு என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. அர்த்தரீதியாக மெய்யறிவு என்பது தத்துவத்தின் உட்பொருளை சொல்லும் சொல்லே. அர்த்தம் என்பதும் சமஸ்கிருதச் சொல்தான். அர்த்தம் என்பது matter, thing and meaning [i] என்கிற ஆங்கிலச் சொல்லின் மூன்று அர்த்தங்களையும் குறிப்பதற்கான சொல்லாக உள்ளது. இங்கு ஆங்கிலச் சொற்களின் அடிப்படையாக கொண்டு இதனை ஏன் விவரிக்கிறோம் என்பதற்கான காரணங்களை கண்டறிவதும் இக்கட்டுரையின் நோக்கங்களில் ஒன்று என்பதால் இறுதியில் இதனை புரிந்துகொள்ளலாம். அர்த்தத்தை தொடர்வோம். அர்த்தா என்பது பொருள் மற்றும் பொருள்கொள்ளப்படும் என்பதற்கும் பகரமான சொல்லாகவே சமஸ்கிருதத்திலும் உள்ளது[ii]. சொல்லை பொருள்கொள்வது (meaning) என்பது சொல்லை பொருளாக (matter) கொள்வதுதான். ஆக, சொல்லும் பொருளும் ஒன்றுதான். சொல் சொல்லாக இருப்பதும், பொருளாக இருப்பதும் அது இயங்கும் புலம் சார்ந்ததாக உள்ளது. இயக்கமற்ற சொல் பொருளாக உள்ளது. இயங்கும் பொருள் சொல்லாக உள்ளது. e=mc2 என்பதைப்போல. சொல் சொல்லாகவும் பொருளாகவும் இயங்குவதில்தான் தத்துவத்தின் விளையாட்டு துவங்குகிறது. மொழியை ஒரு பொருண்மைமிக்க ஊடகமாக மாற்றுவது தத்துவம்தான். அதனால்தான் எல்லா மதங்களும் மொழியை படைப்பின் முக்கியக் கூறாகக் கொள்கின்றன. மதம் என்கிற இந்த சொல் தரும் பொருள், மதங்கள்தான் ஒரு முறைப்படுத்தப்பட்ட உலகை உருவாக்கின என்பதாற்காகத்தான். மதங்கள்தான் அப்பாலை என்கிற கடந்துசெல்லும் கறபனைகளை மொழி சார்ந்த புலத்தில் இறக்கின. மதங்களுக்கு முன்பாக இதனை தத்துவங்கள் செய்தன. தத்துவத்திலிருந்து இந்த கற்பனை மதங்களின் சொத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது புழக்கத்தில் மெய்யறிவைவிட தத்துவம் என்ற சொல்லே தத்துவம் சார்ந்த வினைகளுக்கான திறப்புச் சொல்லாக உள்ளதால் அதையே இங்கு பயன்படுத்தலாம். தத்துவம் தத்+துவம் என்கிற இரண்டு வேர்ச்சொல்களை இணைப்பாகக் கொண்டது. “தத்“ என்பது ‘that’ என்கிற ஆங்கிலச்சொல்லிற்கு இணையான “அது“ என்கிற பொருள்கொண்டது. “துவம்“ `ness’ என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான “நிலையை குறிப்பது” (state off). அதாவது “that-ness’ ஒன்றின் சாராம்சத்தை அல்லது சாராம்ச-இருப்பை அறிதல் என்று இதனை பொருள்கொள்ளலாம்[iii]. அதாவது, தத்துவம் என்ற சொல்லின் வேர்ப்பொருள் எந்த ஒன்றினதும் சாராம்சத்தை அறிதலே. பொருட்களின் தானேயான பண்பை விளக்குவது. வேர்ச்செல்லை தேடுவது செல்லின் உருவாக்ககால சிந்தனையை புரிந்துகெள்ளவே. இவ்வேர்ச்செல்லிலிருந்து, தத்துவத்தின் சொல்லாடல் (discourse) என்பது ‘இறைமை அல்லது முழுமுதல் உண்மை (பேரிருப்பு), தனி உடல் (individual) மற்றும் அண்டம் (பிரபஞ்சம்) என்கிற மூன்றையும் விளக்குவது. அவற்றின் உண்மையான இருப்பை தேடுவது. அவற்றை உறவுபடுத்தி விவரிப்பது’[iv]. தத்துவம் குறித்த இந்திய சிந்தனையின் சுருக்க வருணணை இது.
‘குறிப்பாகச் சொன்னால் பேருண்மைகளை (Nobel truth or Absolute truth) அறிவதுதான் தத்துவத்தின் அடிப்படையான செயல்பாடு’. என்று ஒற்றை வாக்கியமாகச் சுருக்கலாம். இந்த வாக்கியத்தை நவீனத்துவ வாக்கியமாக இன்றைய பொதுபுத்தி சார்ந்த புரிதலில்தான் எழுதுகிறோம் வாசிக்கிறோம். இவ்வாக்கியத்தில் உள்ள ‘அறிவதுதான்' என்பதில் பேருண்மையின் இருப்பை அங்கீகரிக்கும் தன்மை இருப்பதை உணரலாம். இந்த வாக்கியத்தை சொல்பவர்கள் விவாதிப்பவர்கள் அனைவரும் இந்த பேருண்மையின் இருப்பை அங்கீகரித்த நிலையில்தான் இதனை பயன்படுத்துகிறோம். இப்பேருண்மைகள் ஓர் உடலுக்கு உள்ளாகவா? வெளியிலா? என்கிற வாதவிவாத விளையாட்டில் தத்துவ முகாம்கள் பல கிளைகளாக பிரிகின்றன. இக்கிளைகள்தான் தத்துவம் குறித்த பல பேச்சுக்களை, அதன் பொழிப்புரைகளை, அதன்வழியாக பல இருப்புகளை பெருக்குகின்றன. இவ்வாக்கியங்களின் எடுத்துரைப்பில் உள்ள இத்தன்மையை தலைகீழாக்கினால், தினவாழ்வில் உள்ள யதார்த்த உண்மைகளைவிட பேருண்மைகள்தான் அறிதலின் அதிகபட்ச எல்லையாக உள்ளதை உணரலாம். யதார்த்த உண்மைகள் என்பது இந்த எல்லைப்படுத்தலுக்கு உட்படுவதால், இவற்றை கடந்தே பேருண்மையை உணரமுடியும் என்பதான கடந்து செல்லுதல் என்கிற தொழில்நுட்பமாக தத்துவம் மாறிவிடுகிறது. இங்கு வாழ்விற்கும், வாழ்விற்கு அப்பாலும் என்பதாக உண்மை பிளவுபடுத்தப்படுகிறது. இப்பிளவின் அடிப்படை அனுமானத்திலிருந்துதான் தத்துவம் தனது சொல்லாடல் விளையாட்டைத் துவங்குகிறது.
மேற்கண்ட வாக்கியம் எப்படி எழுதப்படவேண்டும் என்றால், ‘குறிப்பாகச் சொன்னால் பேருண்மைகளை மொழிதல், கதைத்தல் மற்றும் சொல்லுதல்தான் தத்தவத்தின் அடிப்படையான செயல்பாடு’ என்பதாக. இவ்வாக்கியம் பேருண்மையின் கடந்தநிலைவாதத்தை (transcendence) அல்லது தேடலை விடுவித்துவிடுகிறது. பேருண்மை என்பது ஒரு கதையாடலாக மாறிவிடுகிறது. இக்கதையாடல் சமூகக்கதையாடலாக இருப்பதால், சமூக அறிவை. உலகப்பார்வையை கட்டமைப்பதாக உள்ளது. இயல் உலகு ஒன்று உருவாகுகிறது. இந்த இயல் உலகின் பிரதிபிம்பமாகவும், இலட்சிய பிம்பமாகவும் பேருண்மைக்கொண்ட உலகு படைத்தளிக்கப்படுகிறது. தத்துவத்தின் பணியாக இந்த பேருண்மை விவரிக்கப்படுகிறது. அதை அடைவதற்கான வழிமுறைகள் கதைக்கப்படுகின்றன. இக்கதைகளில் உடல் எந்திரம் அரைபடத் துவங்குகிறது. இவ்வரைபடலில் தத்துவம் என்பது ஓர் அறிதல் எந்திரமாக உடலின் போக்குகளை இயக்குவதாக செயல்படுகிறது.
டெல்லியுஸ்-கத்தாரி கூறுவதைப்போல தத்துவம் என்பது புதிய கருத்தாக்கங்களைப் படைப்பதே (create). இதன்பொருள், தத்துவங்கள் பேருண்மையை தேடுவதல்ல, வாழ்வதற்கான பல கருத்தாக்கங்களை உருவாக்குவதே. இப்படியாக, தத்துவங்களின் பேருண்மை தேடும் பணி கழன்று போய்விட்டிருக்கிறது. இனி தத்துவஞானியின் தரிசனங்கள் என்பது அவரது பதிய கருத்தாக்க உருவாக்கத்தின் வழியாக, வாழ்வை பாதிப்பதே (affect). தத்துவத்திற்கு விளைவு இல்லை பாதிப்புகளே உண்டு (philosophy is having no effects but it only affects). விளைவு என்பது விஞ்ஞானம் சார்ந்த சொல்லாடல். பாதிப்பு என்பது கலைசார்ந்த சொல்லாடல். ஆக, தத்துவம் விஞ்ஞான விசாரத்திலிருந்து நிரூபணங்களில் இருந்து வாழ்வின் கலையாக மாறிவிட்டது. எந்த ஒன்றையும் அறிய தத்துவம், கலை, அறிவியல் என்கிற மூன்றுவித பார்வைகளே சாத்தியம் என்கிறார்கள் டெல்யுஸ்-கத்தாரி. தத்துவம் கலையையும் விஞ்ஞானத்தையும் இணைத்த ஒன்றாக இருப்பதால், அது உலகப்பார்வையை, அறிவை சுட்டுவதாக உள்ளது. விஞ்ஞானமோ கலையோ இரண்டுமே தத்துவத்தால் இயக்கப்படுகிறது என்பதே முக்கியம்.
தத்துவங்கள் மேற்கில் தத்துவ விசாரங்களை அடைந்த சிந்தனையாளர்களின் பெயராலும், இந்தியாவில் தத்துவத்தின் உள்ளடக்கத்தின் பெயராலும் குறிக்கப்படுகிறது. சங்கரரின் வேதாந்த தத்துவம் அத்வைதம் என்கிற அச்சிந்தனையின் மையமான இரண்டாவது இல்லை (அல்-துவைதா) என்கிற சாராம்ச சிந்தனையின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. மேற்கில் பிரஞ்சில் தோன்றிய தெகார்தேவின் அல்லது கிரேக்கத்தில் தோன்றிய அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் அவர்களது பெயரால் அழைக்கப்படுகிறது. சங்கரவாதம் என்று சொல்லப்படுவதில்லை, ஆனால் கார்டீசியவாதம் என்று சொல்லப்படுகிறது. இது கிழக்கின் மற்றும் மேற்கின் பெயரிடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல உலகப்பார்வையில் உள்ள தொகுப்பாய்வு, பகுப்பாய்வு அடிப்படையிலான சிந்தனை வேறுபாடும்கூட. இந்திய தத்துவ சிந்தனை தொகுப்பை நோக்கியது என்றால், மேற்கின் சிந்தனை பகுப்பை நோக்கியது எனலாம். தத்துவத்தின் இந்த பகுப்பாய்வு முறையை விஞ்ஞானம் பற்றிய அறிவிற்கான அடிப்படையாக மாற்றியது கார்டீசியவாதம். பொதுப்புத்தியில் இது மனிதர்களின் பகுத்து அறியும் அறிவுவாதமாக மாறியது. ஆக, பகுத்தணர்தல், தொகுத்துணர்தல் என்கிற மரபான தத்துவ அறிதலில் கருவிகளை கைவிட்டு கார்டீசியத்தை சிதைவாக்கம் செய்வதன் வழியாக இன்றைய மனிதனின் அறிதல் முறையை புரிந்துகொள்ள முடியும்.
[i] இவ்விரண்டு சொற்களும் வேறு நுட்பமான அர்த்தங்களைக்கொண்டவை. என்றாலும் கார்டீசய தத்துவம் திங் என்பதை பயன்படுத்துவதால் அதையும் இணைத்து சிந்திக்க வேண்டி உள்ளது.
[ii] Artha – Wealth, meaning of a word; object; thing; purpose; aim (from the verb root arth = ‘to request the sense, to point out”) A concise Dictionary of Indian Philosophy Sanskrit Terms Defined in English. John Grimes. State University of New York. (1996) Page 54
[iii] A concise Dictionary of Indian Philosophy Sanskrit Terms Defined in English. John Grimes. State University of New York. (1996) Page 318.
[iv] A concise Dictionary of Indian Philosophy Sanskrit Terms Defined in English. John Grimes. State University of New York. (1996) Page 318 .
(தோடரும்.)
-ஜமாலன் (07-12-2010) மந்திரச்சிமிழ் (அக்டோபர்-2010-மார்ச்-2011)




2 comments:
அருமையான எழுத்து. கார்ட்டூன் என்பது களிமிகும் தோற்றமொன்றைத் தருகிறது. Caricature என்று பாவிக்கும் போது இந்த நவீனமனிதர்களுடைய அந்த அவலத்தை அதிகம் சொல்லமுடியுமோ என்று தோன்றியது.
உடலை கார்ட்டீஸிய மனதின் நீட்சியாய்ப் பிழைத்துப் போன caricatureஆக உணர நேர்வது அவலமா வரமா தெரியவில்லை.
மனம்/உடல் என்கிற கார்ட்டீஸிய dualismஇனைப் புரிந்துகொண்டபின் வேடமேற்றல், அரங்கிலிருத்தல். பிறருக்கு அளிக்கையாக்கல்/அளிக்கையாதல். இந்த நவீன தன்னிலையின் chaotic விளைவுகளை தவிர்க்க/குறைத்துக்கொள்ளத் தத்துவ விசாரணைகளைப் பயன்படுத்துவது எப்படி என்பதுதான் இருக்கும் மிகப்பெரிய கேள்வி.
அடுத்த அடுத்த பகுதிகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி ஹரி.
யார்? இது என்று குழப்பம் இருந்தது. எழுத்துமுறையைப் பார்த்து நீங்களாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன. பேஸ்புக்கில் பார்த்தவுடன் ஊர்ஜிதமாகியது.
உங்களது Caricature பதப்பிரயோகமும் சரிதான். கார்டூன் என்பதில் நீங்கள் சொன்னதுபோல களிப்பும் இயக்கமும் உள்ளது. வாழதலுக்கு உயிர்ப்புடன் இருக்க இவை இரண்டும் முக்கியம். இக்கட்டுரையின் பிறபகுதிகளில் இந்து இரமைவாத விசாரம் விவரிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசியுங்கள். பேஸ்புக்கில் பகிர்ந்தமைக்கு நன்றி.
கருத்துரையிடுக