பகுதி-4
‘கழுவேற்றப்படுதல்’ கதையில் கூறப்பட்ட ‘தத்துவார்த்த மோசடி’ அன்றைய அரசியலில் காந்தியால் முன்வைக்கப்பட்ட ஒரு புலனடக்க சாதனமாக பிரம்மச்சர்யம் என்கிற தத்துவம்தான் இச்சாதனத்தை ஒரு மிகப்பெரிய கதையாடலில் மத தேசிய அடையாளத்துடன் இணைத்து அலசுகிறது‘சுதந்திரத்திற்காக’ கதை. கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் இரண்டு வகை உண்டு. 1. கதை சொல்லுதலின் வழியாக ஒரு கருத்து மையத்தைக் கட்டிக்கொள்வது இது சொல்பவனின் நினைவற்ற நிலையில் மொழிவழியாகப் பதிவுற்று விடும். 2, கருத்து மையத்திற்காக ஒரு கதையை விரிப்பது, இது சொல்பவனின் திட்டமிட்ட ஒழுங்கில் பதியவைக்கப்படும் இக்கதை147 இரண்டாவது வகையைச் சேர்ந்தது. மண்டோவின் சுதந்திர இயக்கம், காந்தி குறித்த விமர்சனக் கதையாடலாக எழுதப்பட்டுள்ளதால் கதையைவிடச் சூழல் விவரணைகளும் நேர்ப்பேச்சான விமர்சனமுமாக நகர்கிறது கதை.
இந்தியா சுதந்திரம் அடையாததற்கு மிகச் சரியாக காரணம் நம் நாட்டில் உண்மையான தலைவர்களைக் காட்டிலும் வியாபாரிகள்தான் அதிகம் இருக்கிறார்கள். இருக்கும் ஒரு சில தலைவர்களும் இயற்கை விதிகளுக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்டெடுத்த அரசியல் நம்பிக்கைகளும் உண்மைகளும் பிறப்புக் கொள்வதைத் தடுத்து விடுகின்றன. இந்த அரசியல்தான் சுதந்திரத்தின் கருவறையை அடைத்து விட்டது’ என்கிற கடுமையான விமர்சனத்தின் அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தை ஒரு பொழுதுபோக்காகக் குறிப்பிடும் இக்கதையாடல், இவ்விளையாட்டில் வாசிப்பாளனாகிய நாமும் அன்றிருந்தால் இழுக்கப்பட்டிருப்போம் என்பதை ‘நீ வெளியே வருவாய், வேறு ஒரு கோஷம் போடுவாய் மீண்டும் கைது செய்யப்படுவாய்’¢எனச் சொல்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு முதிர்ச்சியற்ற விளையாட்டு. அதனால் அது சறுக்கல்களையும் பலனற்ற விளைவையும் கொண்ட ஒன்றாக இருந்தது என்கிறது. சுதேசி இயக்கம் மக்களின் கரகோஷத்திற்காகத் தேவையில்லை என்று நினைத்த புடவையை எரிப்பதும் ‘பிரிட்டிஷ் அடிவருடியின் மகன்’ உணர்ச்சிவசப்பட்டுத் தங்கப்பொத்தான் உள்ள பட்டுச் சட்டையை நெருப்பில் போடுவதும் என்கிற அளவிலேயே இருந்தது.
பொறுக்கி என்றோ தியாகி என்றோ பெயர் எடுப்பதற்கு நீண்ட நாட்கள்
தேவைப்படாத அமிர்தசரசி காங்கிரஸ் கட்சி ‘சர்வாதிகாரியாக’ நியமிக்கப்பட்ட குலாம் அலி பாபாஜியின் தலைமையில் இஸ்லாமியப் பெண்களின் முதன்முதலாக பர்தாவைக் கழற்றிவிட்டுக் கட்சிப் பணியாற்ற வந்த நிகார் என்பவரைத் திருமணம் செய்துகொள்கிறான். பாபாஜியின் திருமணம் குறித்த பேச்சில் பிரம்மச்சர்யம் அதாவது மனைவியிருக்கும் போதே தனது இச்சைகளை அடக்கித் ‘தன் வாழ்க்கையின் மிருக உணர்வுகளை வென்றெடக்க வேண்டும்’ என்கிற கருத்தில் மயங்கி இந்திய சுதந்திரம் அடையும்வரை ‘அடிமைக் குழந்தை’ யைப் பெற்றெடுப்பதில்லையென்று சவால் விடுகிறான். பிறகு சுதந்திரப் போராட்டத்தில் ‘விசித்திரமான சோர்வு கவிழ்ந்து கிடந்த’ நிலையில் சவாலிற்காக அவனது மனைவியும் அவனும் தங்களது மிருக உணர்வை நசுக்கிப் பாலியல் உந்தங்களை ஒடுக்கிக்கொள்கிறார்கள். இந்த வலியிலிருந்து விடுபட அவர்கள்‘ரப்பர்’ ஆணுறைகளைப் பயன்படுத்துகிறார்கள். பிரம்மச்சர்யத்தையும் காப்பாற்றி மிருக உணர்விற்கும் தீனி போட ஒரு யுத்தி இந்த ‘உபயோகப் படுத்தப்பட்ட வாளின் உறை’. இங்கு கதையாடல் பிரம்மச்சர்யம் என்கிற இயற்கைக்கு முரணான ஒரு கருத்தியலை நவீனத் தொழில்நுட்பமான148 ஆணுறையைக் கொண்டு எதிர்கொள்கிறது. ஒரு இல்லறத்தில் பிரம்மச்சர்யம் பின்பற்றப்படுவதை மற்றவர்கள் குழந்தை பிறக்காததன் மூலம் மட்டுமே அறிய முடியும். உலகை ஏமாற்றிப் பிரம்மச்சர்யத்தைக் காப்பாற்றக் கண்ட தொழில்நுட்பமே ஆணுறை.
‘ஒற்றைக்கண் பார்வை’ போல பாலுறவை ஆக்கவிடும் இந்த ஆணுறை மனிதனை ரப்பர் பொம்மைகளாக ஆக்கிவிடுகிறது. ரப்பர் என்பது நவீனத் தொழில் நுட்பத்தின் வலிமையான குறியீடாக இக்கதையில் ஆளப்படுகிறது. இயற்கைக்கு எதிராகச் செயல்பட முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அப்படிக் கொடுத்த விலை தான் மனித இனம் தன்னை ரப்பராக மாற்றிக்கொண்டது. இக்கதையாடலானது மூன்று முக்கியமான சொல்லாடல்களை கிழித்துப்போட்டு விடுகிறது. 1. இந்திய சுதந்திரம். 2. தேசியத் தலைமை 3. மதம் மற்றும் தேசிய நிறுவனங்களான ஆசிரமம், இஸ்லாமியப் பள்ளிகள், வித்தியாலயங்கள், ஜமாத்கானாக்கள், தக்கியாக்கள், தர்காக்கள் பற்றிய புனைவுகள்.
ஜாலியன்வாலாபாக் கிணற்றைக் கதையில் ஒரு குறியீடாக்கி இந்தியச் சுதந்திரப் போர் எந்தப் பாடமும் படிக்கவில்லை என்பதுடன் அதன் பலனைக்கூட அது அறுவடை செய்துகொள்ளவில்லை என்கிறது. நமக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் ஒரு ஆணுறை போன்ற ஜவ்வால் ஆன மதில் உள்ளது. சுதந்திரம் பெற்றாலும் அது ஆணுறை அணிந்து பெற்ற இன்பத்தைப் போன்ற ஒரு பாசாங்கான இன்பம் அல்லது போலியானது. இதனால் இந்திய மாதாவும் எந்த திருப்தியும் பெற்றுவிட முடியாது. இது ஒற்றைக்கண் பார்வை போன்றது என்கிறது. தேசியத் தலைமையாகக் கதையில் வரும் பாபாஜி சிம்மாசனத்தில் அமர்ந்துக்கொண்டு மனித பலவீனம் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பதுடன் அதைப் பற்றி அவர் அறிவதே இல்லை என்கிறது பிரதி. நற்காரியங்கள் செய்வதற்காகத் தன்னுடைய தலையைச் சிரைத்துக்கொள்வது, காவித் துணி கட்டிக்கொள்வது, உடம்பு முழுக்க சாம்பலைப் பூசிக்கொள்வது போன்று ஒருவன் தனது சொந்த விருப்பத்தில் செய்துகொள்ளும் இந்நாடகத்தனம் தான் மக்களை திசைமாறிப் போக வைக்கிறது என்றும் இந்த நாடகத்தின் மூலம் வழங்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட தாயத்து மக்களை அவரது மாயப்பிடிக்குள் வைக்க மகிழ்வோடு அணிந்துக்கொள்ளப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டி விடுகிறது. காந்தியின் ‘ஏழ்மை’யையும் ‘எளிமை’யையும் காப்பாற்ற பிர்லா போன்ற பண முதலைகள் மிக அதிகம் செலவழிக்க வேண்டி வந்தது. இந்நாடகம் தான் இந்தியத் தேசியத் தலைமை ஆன்மிகத்தையும் அரசியலையும ஒன்றுபடுத்த ‘அஹிம்சையை’ ஆயுதமாக்கி நடத்திய நாடகம்.
காந்தியின் அஹிம்சை என்பது புத்த, சமணக் கோட்பாட்டில் சொல்லப்படும் அஹிம்சா இம்சைக்கு எதிரானது. உயிர்களைக் கொல்லாமை என்ற பொருளில் இல்லை. இது தனக்குள் இம்சைகளை ஒழித்துக்கொள்வதன் மூலம் தன்னை இம்சிப்பவனைக் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்துவது எதிர்ப்பை அலட்சியப்படுத்துவதன் மூலம் எதிரியை அதீத கோபத்தின் எல்லைக்குக் கொண்டுசென்று ஒரு கட்டத்தில் எதிரி தனது செயலுக்கு எதிர்விளைவைக் கெஞ்சிப் பெறும் நிலைக்கு ஆளாக்குவது. பலமுள்ளவன் முன்பு பலமற்றவன் பயன்படுத்தும் இந்த உத்தியின் மூலம் பலமுள்ளவன் தன்னையே பலவீனனாக உணர வைப்பது. இந்த மனநிலையின் நீட்சி தான் இயற்கையான உணர்வை ஒடுக்கி (பாலின்பத்தை ஒடுக்கும் பிரம்மச்சர்யம்) தன்னைத் தனது தான் என்கிற கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது இந்த தான் என்பதே பிறர் மூலம் அங்கீகரிக்கப்படுவதுதான் அடிப்படையில் தான் என்பது பிறர் குறித்த பிரதிபலிப்புதான் அல்லது பிறரின் வேட்கையைத் தான் பிரதிபலிக்கிறது. பிறர உணரத்தான் எனது தானை உருவாக்குகிறேனே தவிர நானே உணர எனது தானை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. தானே காந்தி தனது தானை உருவாக்கிக் கொள்ள யாரைப் பிறராக உணர்ந்தார் என்பது ஒரு முக்கியமான கேள்வி? அது சமூக-உளவியல் ஆய்விற்கு உரியது என்று சொல்லி மேற்செல்வோம். மக்களைத் திசை திருப்பும் இந்த நாடகம் கணப்பொழுதில் காற்றில் கரைந்து காணாமல் போகின்றது. அது நிலைத்து நிற்கிறது என்றால், சிரைக்கப்பட்ட தலை, காவி உடை, சாம்பல் அப்பிய உடல்களின் பிம்பங்கள் மட்டும்தான் எனும்போது பிரதியானது தேசியத் தலைமையின் பிம்பங்களைக் கிழித்துப் போட்டு விடுகிறது. தேசிய இயக்கம் பற்றி அதன் காலத்திலேயே ஒரு சாட்சியாக முன் வைக்கப்பட்ட இக்கதையாடல் ஒரு முக்கியமான ஆவணத்தைப் போன்றது.
அடுத்து, மத நிறுவனங்கள் எல்லாம் மனிதர்களின் மிருகத்தனத்தை அழிப்பதில்லை. பாபாஜியின் ஆசிரமம் பற்றிய விவரணை அந்த நிறுவனம் குறித்துச் சொல்லப்பட்ட எல்லாவிதப் புனைவுகளையும் உடைத்தெறிந்து விடுகிறது. அது மனிதர்களின் இயற்கைக்கு முரணான நடத்தைகளுக்கு உட்படுத்தப்படும் இடம் என்பதைச் சொல்லும் பிரதியானது ஒரு படி மேலே போய் மக்களைக் காய்கறிகளாக மாற்றி, அழகுணர்வு மொத்தமாய் நெரிக்கப்பட்டு, உயிரற்ற சவங்களைப் போல உலவும் மனிதர்களைக் கொண்ட இடமாகக் காட்சியளிக்கிறது என்கிறது இக்கதையாடல். கருத்தியலுக்காகக் கட்டமைக்கப் பட்டிருப்பதால் மையத்திலிருந்து விரிந்துசெல்வதும் திரும்ப அதனைக் கதையின் ஓட்டத்திற்கு இழுத்துவருவதுமான ஒரு இழுபறிப் போராட்டம் கதையின் வேகத்தை சிதைக்கிறது. இது இக்கதையில் கதைசொல்லியால் உணரவும் பட்டிருக்கிறது என்பது கதையின் கருத்தியல், ஒருதிட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. குலாம் அலி தனது பிரம்மச்சர்யத்திற்கு எதிரான கிளர்ச்சியில் பிறந்த அடிமை மகனின் கையிலிருந்து பலூனை உடைத்து அதைத் தனது இரண்டு விரல்களால் பிடித்துப் போலித் தனத்திற்குச் பாசாங்கிற்கு அல்லது நவீனத் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ள ரப்பர்தனத்திற்கு எதிராக முடிவே இல்லாமல் புரட்சி செய்யும் பொருளைப் போல வெளியே விட்டெறிந்தான் என்பதாகக் கதையாடல் இந்திய சமூக விடுதலை ஒரு முடிவற்ற புரட்சியால்தான் சாத்தியம் என்பது சுட்டிக்காட்ட முடிகிறது.
‘இது 1919இல் நடந்தது’ ஜாலியன் வாலாபாக் படுகொலை உருவாவதற்கான ஒரு உள்ளூர்க் கதையாடல் பற்றியது. வரலாற்றின் பெரும் நிகழ்வுகள் ஒரு சிறு நிகழ்விலிருந்துதான் தொடங்குகின்றன. அந்நிகழ்வுகள் சாமானியர்கள் எனப்படுபவர்களால் உருவாகி அதன் இறுதி எல்லையில் ஒரு சில தலைவர்களின் பெயருடன் வரலாறாக உருமாற்றப்படுகிறது. இக்கதையில் ஒரு விலைமாதுவின் மகன் முகமது தஃபைல் தனது தாய்நாட்டிற்காகப் போராடி இறக்கிறான். அந்த மோதலில் இறந்த வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்காகப் பலி வாங்கவே நான்கு நாட்கள் கழித்து ஜெனரல் டயரால் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடத்தப்படுகிறது என்கிறது இக்கதை. அவன் ஒரு ‘விலைமாதின் மகன்’ சகத்தில் எந்த அந்தஸ்திலும் இல்லாமல் இருந்ததால் பஞ்சாபில் இரத்தம் சிந்தி, தியாகியானவர்கள் பட்டியலில்கூட இடம்பெறாது. அப்படி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்குமா என்றுகூடத் தெரியாது. இதுதான் அனைத்து வன்முறைகளுக்கும் காரணமாக நமக்குத் தரப்பட்டிருக்கும் வரலாறு. எழுதப்படாத எண்ணற்ற வரலாறுகள் இப்படித் தான் வாய்மொழிக் கதையாடலாக இருக்கின்றன.
இக்கதையாடலாகவே இதன் தொடர்ச்சியாகத் தரும் அடுத்த நிகழ்வில் அந் நகரத்தின் மிகவும் அழகான நாட்டியப் பெண்களான இறந்தவனின் இரு சகோதரிகள் கலவரத்தில் கொல்லப்பட்ட மிஸ் ஷாவுட் என்கிற வெள்ளைக்கார பெண்மணிக்காகப் பழிவாங்க வெள்ளைக்கார சாயபுவால் பாலியல் பலாத்காரத்திற்காக நாட்டியத்திற்கென அழைக்கப்படுகிறார்கள். அன்று இரவு எல்லோராலும் பிரமாதம் என்று புகழப்படும் அளவிற்கு மகாராணிகள் போல அலங்கரித்துக்கொண்டு சென்ற அவர்கள் நாட்டியம் முடிந்தவுடன் ஜொலிக்கும் வண்ணமயமான ஆடைகளை அவிழ்த்துப்போட்டு நிர்வாணமாக நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் தோட்டாக்களால் துளைத்து எடுக்கப்பட்ட இந்த நாட்டை நேசித்த ஆன்மாவான ‘தாய்லாவின் சகோதரிகள்’ இந்த அழகான உடலை உங்களின் காமம் தணியும்வரை அனுபவிக்க வரிசையாக வாருங்கள். ஆனால் இதை நீங்கள் செய்வதற்குமுன் நாங்கள் உங்கள் முகத்தில் காறி151 உமிழ்கிறோம் என்கிறார்கள். அவர்கள் இருவரும் சுடப்பட்டுச்சாகிறார்கள்.
இக்கதையாடலில் மண்ட்டோ வெள்ளையர்களின் படுகொலைகளுக்குப் பின்னால் உள்ள மோதல்களை ஒரு பழிவாங்கல் நிகழ்வுகளாக முதன்மைப்படுத்துகிறார். இது அவரது அதீத தனிமனிதச் சார்பின் விளைவே விலைமாதுவின் மகன், நாட்டியப் பெண்கள் வரலாற்றின் பாத்திரமாக்கப்படுகிறார்கள். கர்பலா யுத்தத்தில் முகமது நபியின் பேரர்களான அசேன், உசேன், தங்களை இரத்த சாட்சிகளாக்கிக்கொண்டதைப் போல் இதில் தய்லா எனப்படும் முகதமு தஃபையலும் அவனது சகோதரிகளும் தாங்கள் கொல்லப்படுவோம் என அறிந்தும் முன்சென்று தம்மை இரத்த சாட்சிகளாக்கிக் கொள்கிறார்கள். இக்கதை இந்தியா-பாகிஸ்தான் உருவாக்கக் கலவரங்களுக்குப் பின்னால் ஒருவரால் நினைவுப்கூரப்பட்டுச் சொல்லப்படுவதாக எழுதப் பட்டிருப்பதும் தாய்நாட்டிற்காக உயிரை விட்டவர்கள் என கூறப்படுவதும் இந்தியா இங்குள்ள இஸ்லாமியர்களுக்குத் தாய்நாடு தான் என்பதைக் கதையாடலாகப் பதியவைக்க முயல்வதைப் போல இருக்கிறது. இந்திய வரலாற்று எழுதுதலில் இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் பெண்களின் பங்களிப்புகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் - இந்தி வரலாறே வகுப்புவாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதை இப்பிரதி தனது மொழித் தடத்தின் வழியாக முன்னுணர்ந்திருக்கிறது.
- (தொடரும்)
- ஜமாலன் (14-12-2005)



