நாரத ராமாயணத்தை முன்வைத்து “பாரத“ வரலாறும், படைப்பின் ஆழ்தளங்களும் (பகுதி-3,4)

பகுதி-1

பகுதி-2

3

ஒரு சிறந்த படைப்பாளி தனது படைப்பின் ஆழ்மன வீச்சில் தனது சமூகம் என்னவாக மாறப்போகிறது என்பதை உணர்ந்தறிந்து, தனத படைப்பின் சிக்கலான இயக்கத்தில், அதன் எதிர்காலம் பற்றிய அறிகுறிகளை சுவடுகளாக விட்டுச் செல்லமுடியும்.  இச்சுவடுகளாக இப்படைப்பில் அயொத்தியில் கட்டுவதும், இடிப்பதுமாக முன்வைக்கப்படும் ராமர்கோவில் பற்றிய சம்பவத்தைக் குறிப்பிடலாம். முதலில் ராமர்கோவில் அயொத்தியின் மத்தியில் விபீஷணர்களுக்காக அன்றைய அரசு கட்டுகிறது (பக். 935) அன்றே அந்த கோவிலுக்குள் குக வம்சத்தினர் (சூத்திரர்கள்) நுழைவது மறுக்கப்படுகிறது.  இவ்வாலய பிரவேச மறுப்பு என்பது பின்னைய சரித்திரம் முழுவதும் வருகிறது.  இதனை குக வம்சத்தினருக்கு விபீஷணப் புத்திரர்கள் அளித்த நரகம் என்பதாகச் சொல்லிச் செல்கிறது பிரதி.

பின்னாளில் படை எடுத்துவரும் முசலிவாகணன் என்கிற அந்நிய நாட்டு மன்னனின் வம்சத்தை சேர்ந்தவன் அக்கோவிலை இடித்து தனது மதக்கோவிலை கட்டுகிறான் (பக். 940).  பிறகு பரதன் படையெடுத்து, அந்நியரை விரட்டுகிறான்.  அவன் பட்டத்திற்கு வந்தபின் மீண்டும் அங்கு ராமர் கோவில் கட்டப்படுகிறது. இந்நிகழ்வுகளை இன்றைய இந்துத்துவ எழுச்சியின் ஒரு குறியீடாக ராமர் கோவில் மாற்றப்பட்டிருப்பதின் அங்கமாக வைத்துப் பார்க்க முடியமெனில், தனது படைப்பாற்றலின் ஒளி வீச்சில் எதிர்காலம் பற்றி தனக்கான குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தும் தொல்குடி மாந்ரீகனைப்போல புதுமைப்பித்தன் செயல்பட்டிருப்பதை அறியலாம்.

4

இங்கு நம்மை இடரும் அடுத்த கேள்வி, ஒரு படைப்பாளி எப்படி எதிர்காலத்தினைப் பற்றிய சுவடுகளை விட்டுச் செல்லமுடியும்?  அந்த வகைச் செயல்பாட்டிற்கான முறையியில் அல்லது “அறிவியல்”  என்னவாக இருக்கும்? இந்தச் செயல்பாட்டிற்கான தேடலை இப்பிரதியை முன்வைத்து நிகழ்த்த முனைவோம்.

வரலாறு என்பது என்ன? என்பதற்கு புதுமைப்பித்தன் தனது கட்டுரை ஒன்றில் கூறுகிறார் “தென்னிந்திய வரலாற்றை இருவர் எழுதி உள்ளனர். ஒருவர் எழுதியது வரலாறு, மற்றவர் எழுதியது இலக்கியம்“ என்று. புதுமைப்பித்தனுக்கு வரலாறும் கூட இலக்கியமாக இருக்க வேண்டும். பிறிதொரு முன்னுரையில் எழுதுகிறார் -  “நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர் பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும், மூட்டைப் பூச்சிகள்(4) அபேதவாதம் சொல்லும்.  அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது.  நீங்கள் கண்கூடாக காணும் உலகத்தில் மனிதன் “கல்லுப்பிள்ளையார்” மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து விட்டப் போகட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு(5). ஆக, வரலாறு, இலக்கியம் என்பதெல்லாம் ஒருவகை கதை சொல்லல் என்பதுவும், எழுத்தின் புனைவு என்பது நமக்கே உரிய தொன்மத் தன்மையைக் கொண்டது என்பதுவும் அவரது பார்வையாக இருக்கிறது என்று கூறமுடியும்.

வரலாறு என்பது குறித்த இரண்டு வேறுபட்ட அடிப்படை பார்வைகள் இருக்கிறது. ஒன்று காலவரிசையைக் கொண்ட பகுத்தறிவிற்கு உட்பட்ட தர்க்கரீதியான வரலாறு (History by Reasons). இது மேற்கத்தியம் உருவாக்கிய வரலாறு பற்றிய கார்ட்டீசிய பார்வை. உலகில் வரலாறு என்று பொதுவாக சொல்லப்படுவது இப்பார்வை அடிப்படையில்தான்.  மற்றொன்று வரலாற்றை அதர்க்கமாக அணுகி தொன்மத் தன்மைக் கொண்ட கதையாடல்கள் மூலம் உருவாக்குவது (History by Myhts). இது நமது மரபான கீழைத்தேய பார்வையாகும். இந்த மரபான வரலாற்றைக் கூட இரண்டுவிதமாக கதைக்க இயலும்.  ஒன்று பேரினங்களை உருவாக்கும் நோக்கில் பல சிற்றினங்களை தொகுக்கும் வண்ணம், அவர்களது இன வரலாற்றுக் கதையாடல்களை, வழக்கங்களை, சடங்குகளை, பண்பாட்டை, மதத்தை ஒரு பெருங்கதையாடலுக்குள் கரைப்பது.  இதற்கு உதாரணம் மகாபாரதத்தைக் கூறமுடியும் (6).  மற்றொன்று வாய்வழிக் கதைகளாக, பழமொழிகளாக, சொலவடைகளாக, விடுகதைகளாக, சடங்காக, வழிபாடாக, திருவிழாவாக, காகலகாலமாய ஒரு இனம் தனது அகப்பரப்பிற்குள் காத்து வரும் நாட்டார் வழக்காற்றின் அடிப்படையில் இயங்கும் சிறகதையாடல்கள் உருவாக்கும் வரலாறு.  இதற்கு “பிரகத் கதா“ முதல் சமீபத்திய நாட்டுப்புறக் கதைகள் வரை உதாரணம் கூறலாம்.

இவ்விரண்டு வரலாறுகள் தவிர்த்து ஒரு மூன்றாவது வரலாற்றிற்கான முயற்சியே புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம் என்று கூறலாம்.  அதாவது, வரலாறு - தர்க்கம், தொன்மம் இவற்றைத் தாண்டி புனைவு என்ற தளத்திற்கு நகர்த்தப்படுகிறது (History of Fiction).  ஆக, வரலாறு என்பது ஒருவகை புனைவு என்பதே புதுமைப்பித்தன் என்கிற படைப்பாளியின் வரலாறு பற்றிய பார்வையாக இருக்கிறது எனலாம்.  இக்கண்ணோட்டம் கீழைத்தேய தொன்மமும், மேலைத்தேய தர்க்கமும் இணையும் ஒரு படைப்புத்தளத்தில் உருவாகுகிறது.  இதுவே, இந்திய காலனிய காலத்து நவீன இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையாகும். *

இப்படைப்பை, இந்திய வரலாற்றையும், இராமாயணத்தையும் அங்கதமாகக் கொண்டு எழுதப்பட்டதாக முதல் வாசிப்பிலேயே உணர முடியம். படைப்பின் ஒட்டு மொத்த அங்கதச்சுவை இந்த இரண்டு வரலாறுகளின் ஊடாட்டம் என்பது எத்தகைய அரசியல் அவலமமாக மாறப்போகிறது என்பதற்கான நாட்டுப்புற நகைச்சுவைக்கேயுரிய ஒரு வலி நிறைந்த மௌனத்தின்-விளைவு என்று கூறலாம்.  இதனை நாம் பேரளவில் இங்கு விளக்க வேண்டியதில்லை. உண்மையில், இந்த அங்கதத்தை மட்டுமே கொண்டிருந்தால் இப்பிரதியானது தனது படைப்பியல் நோக்கில் சாதாரண பிரச்சார இலக்கியமாக மாறி இருக்கும்.  ஆனால், பிரதி தன்னை வெளிப்படுத்திக் கொள்வது இந்த அங்கதத்தை மீறிய ஒரு படைப்புத் தளத்திலேயே.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

4. புதுமைப்பித்தன் காஞ்சனை தொகுப்பிற்கான முன்னுரை பக்.3 - புதுமைப்பித்தன் படைப்புகள் சிறுகதைத் தொகுப்பு - ஐந்திணைப் பதிப்பகம் (1987).

5. ஐராவதி கார்வேயின் - யுகாந்தா. மகாபாரதத்தில் பல சிற்றினங்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றை மகாபாரதத்தினூடாக ஆய்வுசெய்யும் ஒரு மானுடவியல் நூல்.  மேலும் விளக்கம்பெற டி.டி. கொசாம்பியின் - “பண்டைய இந்தியா“ - பக்கம் - 168.

* – இந்த காலனிய காலத்து நவீன இலக்கிய உருவாக்கம் புதுமைப்பித்தனில் அமைவுருவதை அவரது “சிற்பியின் நரகம்“ கதையில் விளக்கியுள்ளேன். அது இப்பதிவு முடிந்துதான் அதை தட்டச்ச வேண்டும்.

- ஜமாலன். காலக்குறி மார்ச் 1998.

நாரத ராமாயணத்தை முன்வைத்து “பாரத“ வரலாறும், படைப்பின் ஆழ்தளங்களும் (பகுதி-2)

 

பகுதி- 1

2

புதுமைப்பித்தனால் நாற்பதுகளில் எழுதப்பட்ட இந்த புனைகதை குறித்து இதுவரையில், நமக்கு தெரிந்த அளவில், எந்தவித எதிர்வுகளும் இல்லாதது, கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  இன்று நவீன எழுத்து முறையில் அழிததெழுதப்பட்ட வரலாறு பற்றி பேசுகிறோம்.  ஆனால், புதுமைப்பித்தன் ஒரு தொன்மக் கதையை அழித்தெழுதுகிறார்.  வரலாற்றை அழித்து அதனை தொன்மமாக மாற்றும் எழுத்துமுறைக்கு பதிலாக, தொன்மத்தை அழித்து அதனை வரலாற்றாக மாற்றுகிறது இப்பிரதி.  வரலாற்றை அழித்தெழுதலில் - “வரலாறு“ என்கிற ஒன்று இருப்பதற்கான சாத்தியம் இருப்பதால், பிரதியானது அதையும் மறுத்துவிட்டு நேரடியாக தொன்மத்தை அழித்தெழுத முனைகிறது.  அப்படியெனில், நவீன வரலாறு என்பது என்ன? அதற்கு பிரதி தரும் பதில் சமூகத்தின் ஆதிக்க மையம் அழித்தெழுதிக் கொண்டிருக்கும் நவீன தொன்மமே. இவ்வாறாக, இந்திய வரலாற்றையே “பரதன்“-என்கிற தொன்மத்தின் பிரதியியல் பெருக்கமாக அனுமானிக்கும் இப்பார்வை சில முக்கிய அரசியல் மற்றும் வரலாற்று உண்மைகளைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.

இங்கு எழும் கேள்வி ஏன் புதுமைப்பித்தன் இராமாயணத்தை தனது படைப்பிற்கான அல்லது தனது பார்வைக்கான ஒரு பரப்பாக எடுத்துக் கொண்டார் என்பதுதான். பொதுவாக ஒரு பழங்கதையை எடுத்துக் கொண்டு அதனை தற்கால சமூக அமைப்பிற்கு ஏற்ப, மறு உருவாக்கம் செய்தல் அல்லது அம்மூலத்தை போலவே பிரிதொன்றை உருவாக்குதல் அல்லது தனது நோக்கத்திற்கு ஏற்ப மூலக்கதையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு உள்ளடக்கமாக தனது கருத்துக்களை வைத்தால் என்பதெல்லாம் தமிழில் புதிதல்ல, புதுமைப்பித்தனின் காலத்திலும்கூட.  பொதுவாக இந்திய தேசிய எழுச்சியின் ஓர் அங்கமாக இத்தகைய வடிவங்கள் கதையாக, நாடகமாக பல வடிவங்களில் வெளிப்பட்டிருப்பதை காண முடிகிறது.  நமக்கு எழும் பிரச்சனை எல்லாம், சமகால அரசியலில் மற்றும் இந்திய வரலாற்றினை உள்ளடக்கிய ஒரு புனைவிற்கு இராமாயணத்தை தேந்த்தெடுத்தது ஏன்?

இதனை புதுமைப்பித்தனின் வரலாற்றின் ஊடாக பயணப்பட்டு காண்பது சாத்தியமற்றது. நமக்கு கிடைத்திருக்கும் அவரது வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. எந்த குறிப்புகளிலும், நமக்கு தெரிந்தவரை, இப்படைப்பு பற்றிய செய்திகள் எதுவும் இல்லை.  இதன் காலம்கூட 40 மற்றும் 45க்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என பழைய தமிழ் புத்தகாலயம் வெளியிட்டுள்ள இப்படைப்பின் தனிப் பிரசுரத்திலிருந்து அறிய முடிகிறது. இப்படைப்பினூடாக அமைந்திருக்கும் காந்தியின் சிறை உண்ணாவிரதம், இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றைக் கொண்டு இது 40-களில் எழுதப்பட்டது என்று யூகிக்க முடியும்.

நமது கேள்விக்கான பதிலை இப்படைப்பினூடாக காண முயலலாம்....

1. இராமாயணம் மற்றும் மகாபாரதக் காப்பியங்களின் அடிப்படையில் மனு உள்ளிட்ட தர்ம சாஸ்திரக்காரர்கள், நால்வர்ண தர்மங்களை எண்ணற்ற படிப்பறிவற்ற நாட்டுப்புற மக்களுக்கு போதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கதையாடல்கள் என்பதே அதன் அரசியல் உள்ளடக்கம் என்கிற சட்டோபாத்யாவின் கருத்து(2), இப்பிரதி இந்திய சமூகத்தின் அடிப்படை தர்மக் கோட்பாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக இருப்பதிலிருந்து இம் முடிவிற்கு வரலாம். இதற்கு பிரதியின் இரண்டு பகுதிகளிலும் பல நிகழ்வுகளை கொண்டிருக்கின்றன.

இராமனின் பேரன்கள் நால்வரையும், அடிப்படையாகக் கொண்டு நான்கு வர்ணங்களின் உருவாக்கம் பற்றி பேசுகிறது. “புருஷ ஷீக்தத்தின்“ அடிப்படையான பிரம்மம் என்கிற தொன்மத்திற்கு இணையாக லவனின் நான்கு பிள்ளைகள் நான்கு வர்ணங்களாக உருவாகுகிறார்கள்.  (8-வது வளர்ச்சி சருக்கம்) குகன்-சூத்திரனாகவும், விபீஷணன்-பிராமணராகவும், சுக்ரீவன் - வைசியனாகவும்,  பரதன்-சத்திரியனாகவும் என நான்கு வசதியான தொழில் பிரிவினைகளை தேர்ந்து வளர்கிறார்கள்.  இதில் விபீஷணர்கள் பின்னால் இந்திய ஆதிக்கத்தின் (அயோத்தி மாநகரம் - இந்திய நிலப்பரப்பாக உருவகப்படுத்தப்படுகிறது) தலைமைப் பொறுப்பிற்கு வருவது வரையிலான அவர்களது வளர்ச்சி நுட்பமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நான்கு குறியீட்டுப் பெயர்களின் பின்னால் ஒரு குறிப்பிட்ட மனப்போக்கு முன்வைக்கப்படுகிறது. குகன் என்கிற கூட்டம் அடிமைகளாக்கப்படவதும், சுக்ரீவர்கள் ஆடம்பரமோகம் மற்றும் மதுவிற்குள் கரைகிறார்கள். விபிஷணர்கள் ஆரம்பம் முதல் பூசைகளின் மூலம் இராமனின் பாராயண வாரிசுகளாக மாறி பின்னாளில் ஆதிக்க வகுப்பாக மாறுகிறார்கள். இந்த தன்மையை - இராமயணத்தில் வரும் விபீஷணன், ஆட்சி அதிகாரத்திற்காக, தனது சகோதரனிற்கு எதிராய் இராமனுடன் கூட்டு சேருவதை - விபீஷண யுக்தி (அர்த்த சாஸ்திரத்தை “விபிஷண யுக்தி” - என்கிற தர்க்க நூலாக அறிவி்க்கிறது இப்படைப்பு) என்றும் எதிர்த்து போரிடுதல் இராவண புத்தி என்றும் சுட்டப்படுகிறது.  இந்த விபீஷண மனப்போக்கு பிற்கால காரியவாதமாக மாற்றமடைவதையும்கூட பிரதி முன்வைத்து விடுகிறது.

2. இராமயணம் இந்துப் பெருமதத்திற்கான ஆன்மபலமாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே பிரதி அவதாரங்களாக கூறப்பட்ட இராமயணப் பாத்திரங்களை மனிதர்களின் நிலைக்குள் வைத்து தொன்ம-நீக்கம் செய்கிறது. மனிதர்கள் என்கிற நிலையில் அவர்களது உடல் உபாதைகளை சுட்டிக்காட்டுவதால் இராமாயணம் என்ற தெய்வீகப்பிரதியின் பாத்திரங்களின் ஆன்ம பலத்தை விமர்சிக்க முயல்வது ஒரு காரணமாக இருக்கலாம்.

சீதை குளிரில் நடுங்குகிறார், ராமர் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார், லவன் கடுமையான காசநோயாளியாக இறுமிக் கொண்டிருக்கிறான், அனுமார் பல்விழுந்து, மேலே பேன்குத்திக்கொண்டு அல்லாடுகிறார், ராமன் குழந்தையை தூக்ககூட திறனற்றவனாக இருக்கிறான். சீதை வயது முதிர்ந்த கூனியாக காட்சி அளிக்கிறாள் ராமனுக்கு.  அரக்கர் வதம் என்பதுவே இராமனின் கர்மப்பலன் என்பதை கிண்டலடிக்கும் பகுதிகள் (5-ஆம் பகுதி வனம்புகு சர்க்கம்) இராமகதையின் மிக அடிப்படையான தர்க்கத்தினை அபத்த நிலைக்கு உயர்த்திவிடுகிறது. இராமன் தனது “சிங்காதனம்“ இடிக்கும் சாரமற்ற வாழ்விற்கு அர்த்தம் தேடி,அரக்கர் வதத்திற்காக இமயமலையில் அலைதல். அது நிறைவேறாத நிலையில் தற்கொலைக்கு முயல்தல்.  அதிலும் தோல்வி அடைந்து, சீதையை நாடிவருதல்.  இராமனின மனநிலையில் புரிந்துகொள்கிறாள் சீதை.  அப்பகுதி இப்படி முடிகிறது ”அன்று இரவு குகையில் இருவர் தூங்கவில்லை” (பக். 919), இநநிகழ்வின் உள்ளார்ந்த தளத்தின் மனம் மற்றும் உடல் வாதைகளை வாசகனின் அர்த்தத்திற்கு விட்டுவிடுகிறது படைப்பு.

3. கதைகளின் மறு உருவாக்க அரசியலில், இராமயணம் பல்வேறு விதமாக பல சமூகங்களிலும் வாசிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தற்கால சமூக வாசிப்பிற்கான பிரதியாக இராமாயணம் எடுக்கப்பட்டு அதனை தலைகீழாக்கி வாசிப்பதன் மூலம் ஒரு எதிர்-பிரதியை உருவாக்க வேண்டிய அவசியம் காரணமாக இருக்கலாம்.

பிற்காலத்தில் இராமன் வாழ்வது தன்னைப் பற்றிய கதைகளின் மூலமே என்பதை இராம-அனுமான் பாராயணம் மூலம் உணர்த்த முயல்கிறது.  இப்பாராயணம் நெஞ்சை உயலர்த்திவிடும் (பக்.923) என்பதாக, இது புண்ணியம் என்பதற்கு எதிராக உலர்ந்த மனநிலையை உருவாக்குவதாக தனது அரசியலை முன்வைக்கிறது பிரதி.  இராமகதை, இராமன் மற்றும் அனுமாரின் நினைவுகளின் அடிப்படையி்ல் பலவிதமாக மாற்றி மாற்றிச் சொல்லப்படுகிறது. இராமயணமே, பலவிதமான கதைகளாக இருப்பதை இதனுடன் சேர்த்துப் பார்க்க முடியும்.  உதாரணமாக புத்த ஜாதகக் கதைகளில் இராமனின் தங்கையாக சீதை கூறப்படுகிறாள் (3).  இலங்கேஸ்வரன் என்கிற தமிழ் நாடகம் ஒன்றில் சீதை இராவணனின் மகளாக வருகிறார்.

4.  இந்துப் பெருமதத்தின் கடவுளாகவும், அவதாரமாகவும், அதேசமயம் “இந்து ராஜ்யம்” என்கிற கற்பிதத்தின் பெரும் மன்னனாகவும் இராமன் இருப்பதால், வரலாறு மற்றும் கடவுளின் ஒருங்கிணைவை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் பிரதி என்பதும் காரணமாக இருக்கலாம். இதனை இராமனின் கடவுள் தன்மையை பிரதி நாட்டுப்புற நகைச்சுவைக்கு உட்படுத்துவதை கொண்டு அறியலாம்.

விஷ்ணு ராம அவதாரமாக போய்விட்டதால் பாற்கடல் பாசிபிடித்து விட்டதாகவும், சேஷசயனத்தில் காளான்கள் முளைவிட்டு விட்டதாகவும், “அங்கு வந்து தூங்குவதற்கு திருவுளம் எப்படியோ“ என தேவேந்திரன் தனது ஆயிரம் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர்வடித்து அழைப்பதாக “உத்திர ராமச் சருக்கத்தி்ல் (பக்.929) கூறப்படுகிறது.

5. இறுதியாக, புதுமைப்பித்தன் இந்திய வரலாற்றையும் அதன் தொன்மக் கட்டமைப்புகளையும் தனது படைப்பியல் நோக்கில் அணுகும் முயற்சியாக, இதனை பார்க்க முடியும்.  முழுமையாக படைப்புத் தளத்தில் மட்டுமே இயங்கிய அவர், தனது படைப்பியல் நோக்கில் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை தொன்மமாக இயங்குவதும், இயங்கப்போவதும் இராமயணமும், பரதனும் என்பதை தொலைநோக்காக தனது படைப்பின் நுண்திறனால் கண்டு கொண்டிருக்கிறார் எனலாம். பிரதியில் எதிர்கொள்ளும் இம்முக்கியமான தளம் படைப்பு பற்றிய பல புதிய அடிப்படைகளை தருவதால் அதனை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியுள்ளது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

2. இராமாயாணம் மற்றும் மகாபாரதம் இரண்டும் வேதங்களிலும், உபநிஷத்துகளிலும், பிரமாணங்களிலும் கூறப்பட்ட தர்மங்களை படிப்பறிவற்ற நாட்டுப்புற மக்களுக்கு உபதேசிக்கும் நோக்கத்தில் கதையாடல்களாக உருவாக்கப்பட்ட தர்ம நூல்களாகும் என்றும் சாஸ்திரக்காரர்களின் அரசியல் நோக்கத்தை பரவலாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கதையாடல்கள் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாய. (பார்க்க -“இந்திய தத்துவ ஞானத்தில் மறைந்திருப்பவையும், நிலைத்திருப்பவையும்” மொழிபெயர்ப்பு - கரிச்சான்குஞ்சு - பக்கம்:249)

3. Page -47-48 - History of the Tamils - P.T. Srinivasa Iyengar - Asian Educational Services - 1995.  இராமனும், கிருஷ்ணனும் விஷ்னுவின் அவதாரம் என்பதாக பிற்காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஏனெனில் வேதங்களில் ஒரு ராமன் வருகிறான்.  அவன் பெரிய அளவில் புரோகிதர்களுக்கு தட்சிணை வழங்கியவன் என்பதாக மட்டுமே குறிப்பிடப்படுகிறது.  விஷ்னுவைப் பற்றிய பிற்கால எழுச்சிகள் இராமனையும், கிருஷ்ணனையும் அவதாரங்களாக உருவமைத்தன என்றும், பிற்கால பக்தி இயக்க அலைகள் இக்கதையாடல்களின் பரவலாக்கத்திற்கு காரணமாக அமைந்தன என்றும் அய்யங்கார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

- ஜமாலன். காலக்குறி மார்ச் 1998.

நாரத ராமாயணத்தை முன்வைத்து “பாரத“ வரலாறும், படைப்பின் ஆழ்தளங்களும்

காலக்குறி மார்ச் 1998 இதழில் வெளிவந்த இக்கட்டுரை. பிறகு மொழியும் நிலமும் தொகுப்பில் வெளிவந்தது. காலக்குறி பதிவிலிருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. புதுமைப்பித்தனின் நாரதராமாயணம் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் உயிர்மை மார்ச்-2010 இதழில் எழுதி உள்ளார். 

”காலம் என்ற அரங்கில் சரித்திரம் மீண்டும் ஒருமுறை பழையபடி நடித்தது.” - புதுமைப்பித்தன் (பிரம்மராக்ஷஸ்)

1

“பாரத நாடு“ பற்றிய கதை இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. (எழுபதுகளில் நான் படித்த ஆரம்ப வகுப்பு பாடப்புத்தகத்தில் நமது நாடு என்கிற முதல் பாடமும் இந்தியாவைப் பற்றி இப்படித்தான் சொல்கிறது) - “இந்திய தீபகற்பம் முன்னொரு காலத்தில் பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டதால் பாரத நாடு என்று அழைக்கப்படுகிறது.“ இவ்வாசகம் வரலாற்று ரீதியானதல்ல. வேத, புராண, இதிகாசக் கதையாடலைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு generative statement (பெருக்கச் சொற்பாடு என கூறலாமா?) ஆகும்.  இச்சொற்பாடு இந்திய வரலாறு மற்றும் அரசியல் போக்கின் தீர்மானகரமான பங்கை செலுத்திவரும் ஒன்று. இச்சொற்பாட்டிற்குள் கட்டமைந்திருக்கும் இரண்டு முக்கிய காரணிகளை புரிந்துகொள்வது அவசியம்.

1. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் என்கிற நில எல்லையை வரைவதன் மூலம், இந்திய தேசம் என்கிற பெருநிலப்பரப்பு ஒன்று நமது நினைவுள் தளத்தில் உருவாக்கப்படுகிறது.

2. இதனை பரதன் என்கிற இந்துப் பெருமித தொன்மங்களால் உருவாக்கப்பட்ட மன்னன் ஒருவரின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டதாக கூறுவதன் மூலம் இந்துப் பெருமத ஆட்சியின் பொற்காலம் பற்றிய கனவுகள் நமது நினைவுகளுக்குள் திணிக்கப்படுகின்றன.

இந்த பரதன் என்கிற சொல்லாடலின் பெருந்தேச, பெருமத மற்றும் பெருங்கலாச்சார வரலாற்று பெருமிதம் பற்றிய அரசியலே, குறிப்பாக இன்றைய இந்திய அல்லது இந்துத்துவா அரசியலின் உந்து சக்தியாக ஆக்கப்பட்டுள்ளது.

பரதன் பரவலாக அறிமுகமானது இராமாயணம் என்கிற பெருங்கதையாடலின் மூலமே.  ஆனால், பல்வேறு புராண, இதிகாசங்களில் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் ஒரு பெயர் பரதன். ஆக, பரதன் வரலாற்று  ரீதியானவன் என்பதைவிட தொன்மங்களால் (மித்) உருவமைக்கப்பட்டவன் என்பதுவே, இந்த ”பாரத நாடு” என்கிற பெருங்கதையாடல் கட்டமைத்துள்ள ஒரு தேசத்தின் அச்சாணியாக இருக்கிறது.

ஒரு தேசம் என்பது கதைகளின் மூலமே கட்டமைக்கப்படுகிறது.  எந்த ஒரு மக்கள் கூட்டமும் கதைகள் இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை.  “உலகிற்கு பகுததறிவைத் தந்த கிரேக்கத்தை போல கதைகளை அதிகம் கொண்ட ஒரு நாடு இருக்க முடியாது“(1). ஆக, இந்திய தேசத்தை கட்டமைத்ததில் இந்த பரதனின் கதைக்கு பெரும் பங்கு உண்டு. இந்தியப் பெருநிலமான “பாரதநாடு“-என்கிற கற்பிதத்தை வரலாற்றுக்கு முந்தையக் காலத்திலிருந்தே ஆண்டுவரும் இந்த பரதனை, தனது “நாரத ராமாயணம்“ என்கிற “புனைகதை அவதாரத்தின்“ மூலம் “சிக்“-கெனப் பிடித்துக்கொண்டவர்.  42-வது வயதில் தமிழ் இலக்கிய உலகம் தந்த காசநோயால் தனது சாவை ஒரு “மணி-ஆர்டரை“ப்போல் எதிர்பார்த்து இறந்தபோன புதுமைப்பித்தன்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

1. இக்கட்டுரையில் “நாரத ராமாயணம்“ பற்றி குறிப்பிடப்படும் பக்க எண்கள் – ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “புதமைப்பித்தன் படைப்புகள்” மூன்றாம் தொகுதி (மொழிபெயர்ப்பு தழுவல்கள் – 1992) என்பதிலிருந்து எடுத்தாளப்படுகிறது.

- ஜமாலன். காலக்குறி மார்ச் 1998.