சுமார் ஏழுமாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழக, ஈழ அரசியல் சூழல் ஏற்படுத்திய நெருக்கடிகளால் எழுத்து என்பது அரசியல் தாண்டி சிநத்திக்க இயலாமல் இருந்ததால், ஒரு இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுதும் உந்ததலை துவக்கும் முகமாக இதனை இங்கு வெளியிடுகிறேன். சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவல் குறித்து இப்பொழுதாவது இதனை வெளியிட்டுவிட வேண்டும் என்கிற உள்நோக்கமும் ஒரு காரணம். இந்நாவல் குறித்து நண்பர்கள் நாகார்ஜீனனின் எல்லை கழன்ற அ-தர்க்கமும் எழுத்தின் உடைவும் மற்றும் சண்முகத்தின் பரஸ்பர பிரதியாக்கம் இரட்டைகள் - இன்மைகள் கட்டுரைகளையும் இணையாக வாசிப்பது பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்தக்கூடியவை என்பதால் அதனையும் வாசி்க்கும்படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
“சாத்தான் என்பது அடக்க முடியா ஸெக்ஸ் ஆசையின் நாமரூப வடிவம்”
- பக்.-181
"எந்த ஆண் தனக்குள் இருக்கும் பெண்ணை அறிகிறானோ, அவன் தான் முழு மனிதன். அதுபோல் எந்தப் பெண் தனக்குள் இருக்கும் ஆணைப் புரிகிறாளோ, அவளே முழுமையானவள்.”
- பக்.-338
'வார்சாவில் ஒரு கடவுள்'- தமிழவனின் நான்காவது நாவல். தமிழ் நாவல்களில் இவரது நான்கு நாவல்களினதும் வருகையும் தமிழின் சமூக அரசியல் பின்புலங்களின் வழியாக உருவாகி, தமிழ் சமூக அரசியல் வரலாற்றை கதை வடிவில் எழுதிப் பார்க்கப்பட்டவை என்று சொன்னால் மிகையாகாது. 60-களில் கொந்தளிப்புகளை தமிழக அளவிலும், இந்திய அளவிலும் உருவாக்கி பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய திராவிட எழுச்சியின் பின்புலத்தில் தென் தமிழகத்தில் நிழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை மாந்திரிக யதார்த்த வடிவி்ல் எழுதிப்பார்க்கப்பட்டக் கதையாடலே “ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்”. அதன் பின் திராவிட எழுச்சி தேசிய அரசியலில் கலந்துபோனதின் விளைவாக உருவான சமரசத்தின் உச்சமாக வெளிப்பட்ட எம்ஜியார் காலகட்டமான 70-களில் தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியலின் விளைவால் உருவான தமிழ் சமூகத்தின் அழித்தெழுதப்பட்ட வரலாறாக எழுதிப்பார்க்கப்பட்ட கதையாடலே “சரித்திரத்தில் படிந்த நிழல்கள்“. எம்ஜியார் அரசியலின் தொடர்ச்சிக்கு பின் தமிழகத்தில் மீண்டும் இனஉணர்வை உருவாக்கி தமிழச்சமூக அரசியலை கட்டமைத்த 80-களின் தமிழீழப் பிரச்சனையையும், யாழ்நூலக எரிப்பு மற்றும் பௌத்தத்தின் இறுகிப்போன மடாலயங்களின் அதிகாரம் ஆகியவற்றின் பின்னணியில் அழித்தெழுதப்பட்ட மற்றொரு கதையாடலே “ஜே.கே. எழுதிய மர்மநாவல்”. 90-களில் உருவாகி வந்த உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்ட “உலகத்தமிழனின்“ பண்பாட்டு மோதல்கள் துவங்கி உலகமயமாகிவரும் தமிழனின் சிந்தனை முறைகளை பின்னணியாகக் கொண்டு இலக்கிய இரட்டைகள் எனப்படும் இலக்கிய நுட்பத்தின் அடிப்படையில் “கோத்திக் நாவல்“ வகையினத்தைப் போன்று கறபணாவாதமும், மாயமும், கூடவிட்டுக் கூடுபாய்தலும், பேசும் இடம் (வீடு), பேசும் காலம் (கடிகாரம்), மீயதார்த்த கனவுகள், வசியம் மற்றும் கவர்ச்சி கலந்துவரும் இரட்டைகளான எழுத்துருக்களால் எழுதப்பட்டுள்ள நாவலே “வார்சாவில் ஒரு கடவுள்“.
இனசாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய மையவாத சிந்தனை மரபு மனிதனை எந்திரமாக்கிவிட்ட சூழலில், உலகப் பொருளாதாரமும், அதிகார மையமும் ஆசிய நாடுகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சிறுபான்மையினங்களின் நாடுகள் என்பது அகதி முகாம்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் உலக அரசியல் சூழலில் வெளிவந்திருக்கிறது இந்நாவல். உலகமயமாதலின் விளைவாக உருவான தகவல்தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த சந்திரன் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து ஐரோப்பிய சமூகமான போலந்தின் தலைநகரமான வார்சாவிற்கு தொழில்முறையாக செல்வதில் துவங்கி ஐரோப்பிய மற்றும் தெற்காசிய வரலாறு, தத்துவம், அரசியல், பண்பாடுகளினைப்பற்றிய உரையாடலை அவன் வழியாக செய்யும் கதையாடலே இந்நாவல்.
இந்நாவலின் முக்கிய எழுத்துருவான சந்திரனின் கால்வழி வரலாறு என்பது இரண்டாம் உலக யுத்தத்தில் விரட்டப்பட்ட மங்கோலிய முகம் கொண்ட பெண் ஒருவரின் மகன் என்பதாக சொல்கிறது கதையாடல். ஆங்கிலேயப் போர்த்தளபதி ஒருவனின் வன்பாலுறவை எதிர்கொண்ட வான்சூயி என்பவள் அவனது ஆண்குறியை கடித்தெரிந்ததின்மூலம் ஐரோப்பிய ஆண்மையவாத போர் வெறிக்கு எதிர் அடையாளத்தை தந்தவளின் இனத்தைச் சேர்ந்த பர்மியப் பெண். ஆங்கிலேய காலனியப்படையால் எரிக்கப்பட்ட வான்சூயின் கிராமமான மிலானர் வழியாக வரும்போது சந்திரனின் தாத்தாவால் கண்டெடுக்கப்பட்டவள்தான் அந்த 3 வயது பெண் குழந்தை. நெருப்பு எரிவதை உணரும் ரகசிய ஆற்றல் கொண்ட அப்பெண் அந்த எரிந்த கிராமத்துடன் தொடர்பு கொண்டவளாக ஊகிக்க பிரதி சில தடங்களைத் தருகிறது என்றாலும், நெருப்புணரும் ஆற்றல் கொண்டவளான அவளுக்கும், மரபான முறையில் நிலத்தடி நீரை அறியும் ஆற்றல் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்த ஒருவருக்கும் பிறந்த மகன் சந்திரன். ஆக, இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களின் இணைவால் உருவானவன் மட்டுமல்ல, இரண்டு முரணாண அமைப்புகளின் இணைவால் உருவானவன் சந்திரன். இவ்விரண்டு கலாச்சாரங்களுமே ஐரோப்பியாவிற்கு அந்நியமான கலாச்சாரம் என்பதுடன் ஐரோப்பாவால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட தென்கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரம் என்பது முக்கியம். விளிம்புகளின் இப்பண்பாடுகள் மையத்துடன் நிகழ்த்தும் ஒரு உரையாடலின் கதைவடிவமே இந்நாவல்.
சந்திரன் லிடியாவிடம் கூறுவதுபோல- “என் சரித்திரம்-என் ரத்தம்-தென்கிழக்காசியாவின் மொத்த பரப்பளவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்று”. என்பதால் சந்திரன் ஒரு புவிப் பரப்பளவின் குறியீடாக மாறுகிறான். அவன் நெருப்பாலும் நீராலும் செய்யப்பட்டவன். நெருப்பு/நீர் என்கிற முரண் ஒருவித புராதனக் கலாச்சார கலப்படையாளமாக இருக்கிறது எனலாம். அவனது தந்தை நீரை அறியும் ஒரு மரபான அறிவைப் பெற்றவர். அவனது தாய் நெருப்பை அறியும் ஒருவகை புராதன குணம் கோண்டவர். கருப்பு மற்றும் மஞ்சள்நிற கலப்பினால் உருவானவன். நெருப்பும் நீரும் இணைந்ததால் பிறந்தவன். அல்லது “நெருப்பாலும் நீராலும் செய்யப்பட்ட மனம் கொண்டவன்“. நெருப்பு/நீர் என்கிற இந்த அடிப்படையான முரண் நாவலின் பல தளங்களில் வேறுபல முரண்களாக வளர்ந்து கிளைக்கிறது. பெண்/ஆண் என்பதாகவும் அதன் நீட்சியாக கிழக்கு/மேற்கு என்கிற இரு வேறுபட்ட கலாச்சாரத்தின் சந்திப்பு புள்ளிகளாகவும் நாவல் விரிவடைகிறது. இந்நாவலில் மிகமுக்கியமான உலக அரசியல் நிகழ்வுகளான இரண்டாம் உலகப்போரின் ஹிட்லரின் பாசிச வதைமுகாம்கள் துவங்கி, தற்போதைய ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு, ஆதிவாசிகளின் அழிப்பு மற்றும் இந்திய அரசியல்வாதிகள் வரை விரிவடைந்து செல்கிறது. உலகெங்கும் பூர்வக் குடிகளான ஆதவாசிகள் அழிக்கப்படுகிறார்கள், ஐரோப்பாவில் ரஷ்யா, ஜெர்மன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் மக்கள் பாசிச ஆட்சியால் அழிக்கப்பட்டார்கள். ஈழத்தமிழர்கள், இன அழிப்பிலிருந்து தப்பி எல்லை தாண்டி புலம் பெயரும் வழிகளில் அழிக்கப்பட்டும் தப்பிப்பிழைத்தும் வாழ்கிறார்கள். இந்நிலையில் தேசஉருவாக்கம் என்கிற பெருந்திட்டத்தின் விளைவாக உருவான போர் என்கிற கூட்டுப் பலிச்சடங்குகளின் பின்னணியில் எழுதப்படுகிறது இந்நாவல்.
மற்ற நாவல்களைவிட இந்நாவலில் தமிழவனின் படைப்புத்தன்மை தனிச்சிறப்பான ஒரு உலகைப் படைத்துச் செல்கிறது. நாவலின் பல காட்சிகளும், கதை சொல்லும் முறையும், பல வாக்கியங்களை தொடர்ந்து வாசிக்க இயலாமல் ஆழ்ந்த சிந்தனையைக் கோருகின்றன. சில வாக்கியங்களை விளக்கினால் அது ஒரு கட்டுரையாக மாறிவிடும் அடர்த்திக் கொண்டவையாக உள்ளன. கடும் உழைப்பையும் வாசிப்பையும் உள்ளடக்கியவை அவை. சான்றாக பக்.53-ல் வரும் ஒரு வாக்கியம் - ”ஒரு பெண்ணின் கையும் ஆணின் குறியும்”. இவ்வாக்கியத்தில் எதிர்பாலினமாகக் கட்டமைக்கப்பட்ட இரண்டு உடல்களின், உறுப்பின் பதிலீடு பாலியல் அரசியலின் முக்கியமான கூறுகளைச் சுட்டுவதாக உள்ளது. ஆண்குறி என்கிற அதிகாரத்தின் குறியீடு, பெண்ணின் கையாக பதிலீடு செய்கிறது. இது வெறுமனே பாலியல் பதிலீட்டுக் கருவி மட்டுமல்ல. அதாவது ஆண்குறியைவிட பெண்ணின் கை என்பது வளமையுடன் சமூக உழைப்புடன் உறவு கொண்டதாக உள்ளது. இப்படி பல வாக்கியங்கள் ஆழ்ந்த அவதானத்திற்குரியதாக இதில் எழுதப்பட்டுள்ளது.
இதுவரை தமிழில் தொடப்படாத ஒரு பிரதேசத்தில் பயணிக்கிறது நாவல். பாலியல் பற்றிய இருவேறுப்பட்ட உலகப்பார்வைகளின் தொடும் புள்ளி அது. முக்கியமாக கிழக்கைப்பற்றிய மேற்கின் கருத்தாக்கங்கள் குறித்து இதில் வரும் நீண்ட உரையாடல்களைச் சொல்லலாம். மேற்கு தன்னை எப்படி தேடி கிழக்கில் அடைகிறது என்பதைக் குறிக்கும் அந்த உரையாடல் வாசகங்களின் நுட்பம், தாந்ரீகம் பற்றிய தேடல் என்பதாக செல்கிறது. மேற்கால் தனது உடல் அல்லது மனம் அல்லது பாலியலை தேடும் பயற்சிப் பற்றியதான சித்திரிப்புத்தான் முக்கியமானதாக இந்நாவலின் எனது வாசிப்பு-பிரதியாக இருக்கிறது. இநநாவலை வேறு வேறு விதமாக வாசிக்க முடியும் என்றாலும், எனது குவிமையம் இதன் பாலியல் அரசியல் பற்றியதே.
பக்.181-ல் சந்திரனின் மனதால் உருவாக்கப்பட்ட மாக்தா கருதியதாக சொல்லப்படும் வாசகமான “லியோன் ஒரு புதவிதமான ஐரோப்பியக் கலாச்சாரத்துக்காக இந்தியாவைத் தேடியவர். அது இந்தியாவுக்கு இன்று பயன்படாது. ஆனால் ஐரோப்பாவுக்குப் பயன்படும என்பது லியோனின் அடிப்படை எண்ணம் என்றாள்.” அதில் இந்த தேடல் இந்தியாவிற்கு ஒத்துவராது என்பதைச் சொல்லும் புரிதல் முக்கியமானது. ஜீலியா கிறிஸ்த்தவா கூறியதுபோல ஐரோப்பா தனக்கான கடந்த காலத்தை அதாவது வேரைத் தேடத்துவங்கியுள்ளது. ஒருபடி மேலாக இந்நாவல் ஐரோப்பா தனது மனதை தேடத்துவங்கியுள்ளதை விளக்கிச் செல்வதாக உள்ளது. அது கிழக்கிலா? என்பது உரையாடலாகக் கொண்டு செல்லப்படுகிறது. அதை தமிழவன் தனது அனுபவ மற்றும் புரிதலின் எல்லைப் பரப்பிற்குள் ஒரு நாவல் எழுத்தாக மாற்றுகிறார். ஏனென்றால், ஹிட்லரின் படையெடுபப்பில், இரண்டாம் உலகப்போரின் பாசிசப் போக்கினால், ஐரொப்பா தனது அடிப்படை அறங்கள் குறித்து மீள்பார்வை செய்யப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நாவலில் பக். 355-ல் சொல்லப்படுவதைப் போல 1939, செப்டம்பர் ஐரோப்பியாவை மாற்றிய ஒரு முக்கியமான புள்ளி. ஹிட்லரின் உருவாக்கம் மொத்த ஐரோப்பிய சமூகத்தின் அனைத்து அறங்களையும் கேள்விக்கு உட்படுத்தியது. நாகரீகம் அதன் உயர் மனப்பான்மை அத்தனையும் தூக்கியெறியப்பட்டது. இந்த குற்றஉணர்ச்சி நாவலில் வரும் ஐரோப்பிய கதாபாத்திரங்களின் ஆழ்மனக் கட்டமைப்பாக காட்டிச் செல்கிறது இந்நாவல்.
இந்நாவலில் பேசப்படும் முன்னுணர்வு பற்றிய வாசகங்கள் முக்கியமானவை. முன்னுணர்தல் என்பதன் வழியாக லியோன் என்கிற 32-வயதில் இறந்தவனை அவனது 60-வது வயதில் சந்திக்கும் சந்திரன், அவனது போட்டோவைப் பார்த்த பிறகே அவனை அறிகிறான். இசையை கேட்கும் நாம் அது முடிந்தபின்னும் அதனை மனதிற்குள் இசையாக உரணமுடியும் எனில், புகைப்படத்தில் பார்ப்பதற்கு முன்பாக ஒருவரை உணர்வது சாத்தியமில்லையா? என்கிற கேள்வி காலத்தின் முன்பின் மனநகர்வு பற்றிய ஒரு நுட்பமான புரிதலை முன்வைப்பதாக உள்ளது.
ஆதிவாசிகளுக்காக போராடிய அஷ்வினியின் காதலன் பிரதாப்பை எண்கவுண்டரில் கொல்கிறது போலிஸ். அதற்காக காவல்துறை அதிகாரியான தனது தந்தையை சுட்டுக் கொல்லும் அஷ்வினியின் செயலை சடங்காக விளக்கும் பகுதி முக்கியமான அவதானத்திற்குரியது. அதிகாரம் என்கவுண்டர் என்பதை ஒரு பலியிடல் சடங்கைப்போல நிகழ்த்தும்போது, அதனை எதிர்கொள்வது மற்றொரு பலிச்சடங்காக நிழ்கிறது. தனது தந்தையைக் கொல்வதன் வழி, காதல் என்கிற ஒருவித சடங்கை அழிக்க முனையும் தந்தைவழி அதிகாரத்தை தகர்க்கும் செயலாக அந்த குறியீட்டு நிகழ்வு நடந்துமுடிகிறது. வழக்கமாக தந்தைகள் வழியாக அடையாளப் படுத்தப்படும் தாய்களுக்கு மாறாக, இந்நாவலில் தாய்வழியாகவே தந்தைகள் அடையாளமாகிறார்கள். நாவலில் தந்தைகள் யாரும் இல்லை என்பது ஒரு முக்கியமான அவதானமாகும். விஜயாவின் தாய், அஷ்வினியின் தாய், சந்திரனின் தாய், மாக்தாவின் தாய், லிடியாவின் தாய் எல்லோரும் அன்பானவர்களாக புரிதல் உள்ளவர்களாக உள்ளனர். தந்தைகளுக்கு நாவலில் பிரத்யேகமான இடமோ, வெளியோ இல்லை. அஷ்வினியின் தந்தை அவளால் கொல்லப்படுகிறார். மாக்தாவின் தந்தை ஒற்றைப்படல் உள்ள சைக்கிளாக கனவுகளில் வந்து போகிறார். ஆணாகவும், பெண்ணாகவும் அல்லது கடவுளாகவும் உள்ள சந்திரன், சிவநேசன் தவிர எல்லா ஆண்களும் இறந்து போகிறார்கள், பியோத்தர் மனச்சிதைவடைகிறான். காரணம் இந் நாவலானது பெண்கள் பற்றிய பெண்களின் வேட்கைப் பற்றியதான ஒரு பாலியல் அரசியலை தனது ஆழ்தளமாக கொண்டிருப்பதே. .
பாலியல் அரசியலின் முக்கியக்கூறான வேட்கை என்பது கீழ்திசை நாடுகளிலும், மேல்திசை நாடுகளிலும் எதிர் எதிரான செயல்களமாக இயக்கமடைகிறது. கீழ்திசை நாடுகளில் வேட்கை என்பது ஒரு ஆற்றலாக மாறுகிறது என்றால், மேற்றிசை நாடுகளில் ஒரு இன்மையை இட்டு நிரப்பும் பதிலியாக உள்ளது. இந்நாவலில் வரும் விஜயா, அஷ்வினி, அமலா போன்ற இந்தியப் பெண்களின் வேட்கை என்பது ஒரு ஆற்றலாக மாறி அவர்களை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கிறது. ஆனால், அன்னா, மாக்தா, லிண்டா போன்றவர்களின் வேட்கை அவர்களது இன்மையை போக்கி இருப்பை அடையாளப்டுத்தும் ஒரு பதிலியாக செயல்படுகிறது. வேட்கையின் இந்த வித்தியாசம் இரண்டு பண்பாடுகளின் பாலியில் கட்டமைப்பையும் நுட்பமாக விளக்கிச் செல்வதாக உள்ளது.
நாவல் உடல் என்பதை ஒரு அறிதல் தளமாக முன்வைக்கிறது. நாவலில் வரும் புணர்ச்சிகள் பற்றிய பகுதிகள் அனைத்திலுமே, உடலை அறிவதற்கான வேட்கையும், வேகமும் மட்டுமே எழுத்தாகியுள்ளது. உடலை அறிதல் புணர்ச்சியின் வழியே சாத்தியம் என்பதும் ஐரோப்பிய பாலியல் உடலை ஒடுக்கிவிட்டதாலும், கீழ்திசைவியல் பாலியல் பற்றிய தந்திரயோகம் மூலம் உடலை பாலியல் வழி அறியமுடியும் என்பதாக நாவலின் முக்கிய உரையாடல் தளங்கள் நகர்த்தப்படுகிறது. நாவலில் வரும் இரண்டு முக்கிய புணர்ச்சிகளை ஒப்பிட்டால் இந்தவகை உரையாடலின் நுட்பமான தளத்தை புரிந்து கொள்ளமுடியும். விஜயாவிற்கும் சந்திரனுக்கும் இடையிலான குகைப்புணர்ச்சி. இதில் விஜயா சந்திரனை ஒரு கருவியாக்கி அதாவது ஆணுடலை ஒரு கருவியாக்கி தனது வேட்கையின் சுதந்திர வெளிப்படல் மூலமாக, தன்னுடலை அறிய முனைகிறாள். ஐரோப்பிய பெண்ணான மாக்தாவுடன் சந்திரன் புணர்ச்சியில் ஈடுபட முனையும்போது, அவனது வேட்கை கனவில் ஒருவகையாகவும், இயல்பில் வேறுவகையாகவும் அமைகிறது. மாக்தா கிழக்கத்திய கருப்பு உடலான அவனது உடல் வழியாக தனது உடலை அறியமுனைவதாக எண்ணுகிறான். அப்புணர்ச்சி முழுமையடையாமல் விலகிவிடுகிறான். சந்திரனின் ஆண்குறி பற்றிய பல கதையாடல்கள் சொல்லப்படும் இந்நாவலில், சந்திரனின் புணர்சிகள் மற்றும் வேட்கைகள் கனவுகளாகவும், நிஜத்தில் பெண்களின் மீதான வேட்கையுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ளாமல் விலகிச் செல்பவனாகவும் உள்ளான். சிவப்பு ஊற்றைக்காட்டும் சிறுபெண் துவங்கி நாவலில் வரும் பெண்கள் பலரும் சந்திரன் மீது பாலியல் வேட்கை கொள்கிறார்கள். சந்திரன் ஆணாகவும், பெண்ணாகவும் மாறி மாறி அமையும் ஒரு விளையாட்டாக நாவலின் கதையாடல் அமைகிறது.
இயந்திரமாகிவட்ட இன்றைய உடலை, அதன் இயல்புநிலையில் உணர புணர்ச்சியின் அதி சாகசங்கள் தேவைப்படுவதையும், அதனை இந்திய தாந்ரீகம் முயன்றிருப்பதையும் அறிந்து, அதனை நோக்கிய தேடலை செய்த லியோன் ஐரோப்பியாவின் பாலியலை மறுகட்டமைப்பு செய்வதற்கு முயல்கிறான். ஐரோப்பாவின் ஒடுக்கப்பட்ட வேட்கை எதிர்மறை ஆற்றலாக மாறி வெளிப்பட்ட வடிவமே பாசிசம். நாஜிகள் கம்யுனிஸ்டுகளைவிட பாலியல் தொழிலாளிகளான பெண்களிடம் அதிகம் அச்சம் கொண்டிருந்ததை சொல்லும் பக்.346-ல் வரும் பியோத்தர் பாட்டியின் தோழி மாட்டின் உடலும், மனித மனமும் கொண்ட ஒரு காளை மனிதனுடன் புணர்ச்சிக் கொள்கிறாள். அப்புணர்ச்சியில் வெளிப்படும் மிருக இச்சை என்பது ஐரோப்பிய உடல்களின் பாசிச எந்திர மனப்போக்காக மாறியிருப்பதை சுட்டுகிறது நாவல். பிறகு நாஜிப்படைகளுக்கு எதிராக செயல்படும், அவளது பெண்குறியில் வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள் நாஜிப்படையினர். பாசிசம் என்பது ஓழுங்கற்ற உடல்கள் மீதும், பாலியல் மீதும் பேரச்சம் கொண்டிருந்தது. அந்த பாசிசத்திலிருந்து விலகிச் செல்ல முனைவதற்காக வேட்கையை வெளிப்படுத்தி அதனை ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் தந்திரமாகவே, இந்திய தாந்ரீகத்திடம் தஞ்சம் அடைகிறான் லியோன். அதன் ஒரு உச்சமாக கிறித்துவ கத்தோலிசத்தால் அவன் சாத்தான் வழிப்பாட்டாளனாக கருதப்படுகிறான். ஒரு மதத்தின் கடவுள் பிற மதத்தின் கடவுளை சாத்தானாகவே அறிவிக்கிறது. ஆனால் எல்லா மதக் கடவுள்களும் பாலியலை சாத்தானாகவே கருதுகின்றன என்பது முக்கியம். பாலியல் என்பது உடல் மற்றும் அதன் வேட்கை சார்ந்தது என்பதால், எல்லா மதங்களின் ஆழ்தளத்தில் பாலியல் பற்றிய அச்சமும், அதனை கண்காணித்து கட்டுக்குள் வைப்பதன் மூலம் உடல்களை தனது இயந்திரவியலுக்கான அரைபடும் மூலப்பொருளாக தக்கவைத்துக் கொள்ளும் செயலும் நடைபெறுகிறுது. அதனால்தான் அடக்கமுடியா பாலியல் இச்சையை சாத்தானாக கணிக்கின்றன மதங்கள்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இடைவிடாத போர் உடல்-பாலியல் தளத்திலேயே நடத்தப்படுகிறது. உடல்கள் மீதான கடவுள்கள் மற்றும் சாத்தான்களின் விளையாட்டு ஆதிமனிதனின் “ஆதிபாவம்“ துவங்கி இப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கத்திய கடவுளான பிராமண சிவநேசமும், மேற்கத்திய கடவுளான கத்தோலிக்க லியோனும் நாவலில் பின்னணியில் முக்கிய பாத்திரங்களாக உலா வருகின்றனர். இந்த இரு கடவுள்களும் இரண்டாம் உலகப்போர் மற்றும் உலக மயமாதலின் விளைவாக திசைமாறி இடம் மாற்றம் அடைவதையும் நாவல் தனது கதையாடலின் வழியாக முன்வைக்கிறது. அதாவது பிராமண சிவநேசம் ஐரோப்பியாவிலும், கத்தோலிக்க லியோன் இந்தியாவிலும் தஞ்சம் அடைகின்றனர். சிவநேசம் பிராமணராகவும், ஐரோப்பியாவின் நவீன கடவுளாகவும் சொல்லப்படுவதில் ஒரு முக்கியமான அரசியல் முன் அனுமானம் உள்ளது. இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளாக சமூக அதிகாரம் செய்துவந்த “பிராமணத்துவம்“ என்கிற “கடவுள் தன்மை” புலம்பேயர்ந்து கொண்டிருப்பதற்கான குறியீடே அது.
சுயபால் புணர்ச்சியாளனான லியோன், லெஸ்பியனோ என தன்னையே சந்தேகிக்கும் மாக்தா, அவளது தந்தையான ஒற்றைப்படல் உள்ள சைக்கிள் (இது துண்டிக்கப்பட்ட ஆண்குறியின் ஒரு குறியீடாக உள்ளது எனலாம்) ஆகிய மூவரும் ஒரு தடைசெய்யப்பட்ட வேட்கையின் வெளிப்படுகளாகவே உள்ளனர். மாக்தாவின் ஆழ்மனதில் உள்ள வேட்கை தந்தையுடன் ஆன புணர்ச்சிப் பற்றியதாக இருப்பதால் அவளோடு உறவு கொள்பவர்களிடம் அது ஒரு லெஸ்பியன் வேட்கையாக தெரிகிறது. லெஸ்பியன் வேட்கை என்பது ஆணிணால் முழுமையாக்க முடியாத ஒன்று என்பதால், மாக்தாவின் வேட்கையில் உள்ள அந்த இயல்பின்மை சுட்டப்படுகிறது எனலாம். சந்திரனிடம் உறவு கொள்ள முனையும் அவள், இந்த தந்தைவழி உறவினால் ஈர்க்கப்பட்டவளாகவும், அதன் குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாக புணர்ச்சியை முழுமையாக செய்யமுடியா நிலைக்கு ஆளாகிறாள். உண்மையில் பிரதி தரும் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி மாக்தா ஒரு கற்பனையான எழுத்துருதான். அதாவது, அவள் லி்ண்டாவின் இலக்கிய இரட்டையாக உருவாக்கப்பட்ட கற்பனை உரு. அதாவது, லியொனின் தங்கையான லிண்டாதான் மாக்தாவா பிரதியால் இலக்கிய இரட்டையாக மாற்றப்படுகிறாள். பிரதி மௌனிக்கும் பகுதிக்குள் ஒடுக்கப்பட்டிருக்கும் வேட்கை என்பது ஒருவகை விலக்கப்பாலியல் வேட்கைதான் (இன்செஸ்ட்). லிண்டா தன் அண்ணன் லியோன் மீது கொண்ட இச்சையை இந்தியனான சந்திரன் வழியாக தீர்க்க முனைகிறாள் மாக்தாவாக. லிண்டா மாக்தாவாக கூடுபாய்கிறாள் எனலாம். லியோனுக்கும் லிண்டாவிற்கும் இடையிலான உறவு தந்தை மகள் மற்றும் அண்ணன் தங்கை என்கிற சகோதர உறவு. பின்னால், இந்த உறவிலிருந்து முற்றிலுமாக விலகி சாத்தானிடமிருந்து, கடவுளான சிவநேசத்திடம் தஞ்சம் அடைகிறாள் லிண்டா.
லூயி புனுவல் தனது புகழ்பெற்ற படமான 'The Obscure Object of Desire' ல் Conchita என்கிற நாயகி பாத்திரத்தின் இரண்டு மன உணர்வுகளை சித்தரிக்க இரண்டு வேறுபட்ட நடிகைகளைப் பயன்படுத்தியிருப்பார். காமவெறி கொண்டவளாக, பொய் சொல்பவளாக உள்ளபோது ஒரு நடிகையும், காதல் கொண்டவளாக, உண்மையானவளாக உள்ளபோது ஒரு நடிகையும் நடித்திருப்பார்கள். கதைப்படி அவர்கள் ஒரே பாத்திரம்தான். இது ஒருவகை இலக்கிய இரட்டை உத்திதான். காமவெறியுடன் சண்டையிட்டுவிட்டு திரைச்சீலைக்குள் புகுவது ஒரு நடிகை, காதலுடன் அடுத்த நொடியில் திரைச்சீலையிலிருந்து வெளிவருவது மற்றொரு நடிகை. இந்தவகையான அதியதார்த்த உத்தியை அப்படம் முழுக்கவும் பயன்படுத்தியிருப்பார் புனுவல். அதாவது change blindness என்கிற ஒருவகை உளவியல் பார்வைக் கோளாறு, பார்க்கும் காட்சியில் உள்ள மாற்றங்களை உணரச் செய்யாமல் செய்துவிடும். இப்படத்தில் இந்த நடிகையின் மாற்றம் என்பது அதனை சோதிப்பதற்கான ஒரு உத்தி. அதேபோல, இந்நாவலில் வரும் பாத்திரங்களின் சித்தரிப்புகளில் ஒரே பாத்திரம் இரட்டைநிலையில் இரண்டு பாத்திரமாக மாறிவருகிறது. இது ஒருவகை இலக்கிய இரட்டை எனப்படும் கதை உத்தியாகும். இந்த மாற்றத்தை மறைப்பது பிரதியின் மொழி மற்றும் கதையாடல் மட்டுமின்றி நாவலை இரத்தமும் சதையுமான மனிதர்களின் கதையாக நாம் வாசிப்பதில் உள்ள நமது பழகிய உளவியல் கோளாறும்தான்.
இங்கு இலக்கிய இரட்டை என்கிற கருத்தாக்கத்தை விளங்கிக் கொள்வது இந்த நாவலை இன்னும் நுட்பமாக புரிந்துகொள்ள உதவும். எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படையான முரணான நன்மை/தீமை என்பதிலிருந்து உருவாகும் இரண்டு மன அமைப்புகளின் உடல் வடிவமே இரட்டைகள் எனலாம். ஒரு உடலின் இரணடு மன உணர்வுகள் இரண்டு பாத்திரங்காளக மாறிவரும். சான்றாக தமிழ் படங்களில் வரும் இரண்டுவேட கதாநாயகன்கள். நல்ல எம்ஜியார்/கெட்ட எம்ஜியார், வீரன்/கோழை, ஏழை/பணக்காரன் இப்படி. இவை எல்லாம் ஒரே மன அமைப்பில் உள்ள முரண்கள். தமிழில் மௌனியின் சிலகதைளில் இந்த உத்தி கையாளப்பட்டிருக்கிறது. அவரது புகழ்பெற்ற கதையான “மனக்கோட்டை“-யில் வரும் சங்கரன்/சேகரன் என்பவர்களும் இந்தவகையான இரட்டைகளே. சுமி என்கிற தங்கை மீதான அண்ணன் சங்கரனின் வேட்கையை, சேகரன் வழியாக நிறைவேற்ற முனையும் இரட்டைகள் பற்றிய கதையாடலே அக்கதை. இவ்வாறு, இலக்கியத்தி்ல் ஒடுக்கப்பட்ட மன உணர்வுகள் இரட்டைகளாக இரண்டு வித்தியாசமான பாத்திரங்களாக படைக்கப்படுகிறது. மேற்றிசை சிந்தனையில் மனிதனின் உள்ளார்ந்துள்ள பிரக்ஞை நன்மை, தீமை என பிளவுபட்டே உள்ளதாக நம்பப்படுகிறது. கிறித்துவ சிந்தனையின் நன்மை, தீமை என்கிற வேரிலிருந்து கிளைத்ததே இச்சிந்தனை. வெளிப்படையாக மனிதன் மரியாதைக்குரியவனாக இருந்தாலும் உள்ளார்ந்து மிகவும் காமவெறிக் கொண்டவனாக உள்ளான் என்கிற அடிப்படையில்தான், காமத்தை ஒழுங்கமைப்பதற்கான பல தத்துவ ஆன்மீக சிந்தனைகள் படைக்கப்பட்டன. மேற்கத்திய பாலியல் கருவிகளின் கட்டமைப்பில், பாலியல் வேட்கை என்பது மிருக இச்சையாகவே கருதப்பட்டு அது நாகரீகம் என்ற பெயரால் ஒழுங்கமைக்கப்பட்டது.
ஆக. எல்லா மதங்களினதும் அடிப்படை ஊகம் இததான், மனிதன் அடிப்படையில் மிருக இச்சை (அதை அப்படி சொல்லாம் என்றால்) கொண்டவன் என்பதே. அதனால் அதனை அடக்கி நாகரீகம் என நல் வழிப்படுத்த முனைந்தது ஐரோப்பிய சமூகம். இந்த ஒழங்கமைப்பே ஐரோப்பிய ரொமாணடிசிசத்தால் அச்சமூகத்தின் உள்ளுறை ஆற்றலாக மாறியது. அதைதான் லியோன் ஐரொப்பிய பாலியல் அடக்கப்பட்டுவிட்டது, அதை மீண்டும் உயிர்பிக்கும் சக்தி தந்திரயோகத்தில்தான் உள்ளது என கீழ்திசை நாடுகளை தேடிச் செல்வதாக நாவல் சுட்டுகிறது.
இதே லியோனின் இலக்கிய இரட்டையாக வருபவர்தான் கீழ்திசை நாட்டைச் செர்ந்த கும்மாங்குத்து எனும் சிவநேசம். நாவலின் கடவுள்/சாத்தான் இரட்டையாக இவர்கள் இருவரையும் சொல்லலாம். சந்திரனிடம் இவர்கள் இருவரும் பேசுகிறார்கள். ஒருவர் நிறமற்ற குரலாலும், மற்றொருவர் மஞ்சள் குரலாலும். சந்திரன் இந்த மஞ்சள் குரல் என்பதை தனது பொதுபுத்தி சார்ந்த பாலியல் குரலாக உணர்வதையே பிரதி இங்கு நுட்பமாக சுட்டுகிறது எனலாம். அதேபோல் சிவநேசம் உங்களுக்குள் நீலம் புகுந்துவிட்டது என்கிறார். இந்த நீலம் என்பது ஒருவகை காமஇச்சை என்கிற சாத்தானின் குறியீடுதான். காம இச்சை வரும்போது சிவநேசம் வந்து சந்திரனை பல இடங்களில் எச்சரிக்கைப் படுததுகிறார். சிவநேசம் சந்திரனை சாத்தானிலிருந்து ஆற்றுப்படுத்துபவராகவும், லியோன் சந்திரனிடம் ஒருவித சமூக சிந்தனையைத் தூண்டுபவனாகவும் வருகிறார்கள். லியோனை முதன்முதலாக சந்திரன் சந்தித்த பின் அந்த இயல் முழுக்க மாக்தாவுடன் உறவு கொள்ளும் ஆழ்மன வேட்கையுடன் இருப்பதை பிரதியானது அவளது உடலை நுட்பமாக கவனித்து வர்ணிப்பதன் மூலம் தடம் காட்டிச் செல்கிறது. கல்லிற்குள் நுழைய முடியுமா? என்கிற சந்திரனின் கேள்விக்கு கல்லுக்குள் நுழையலாம் என்கிற மஞ்சள் குரலின் பதில் என்பது மாக்தாவுடன் அவனது புணர்ச்சிக்கான ஒரு முன் அனுமான வாசகம் எனலாம். சந்திரனை மாக்தாவுடன் உறவு கொள்ள தூண்டுவது இந்த சாத்தானின் குரல்தான்.
அதேபோல் சந்திரன் மற்றும் அன்பழகன் என்கிற ராஜேஷ், இருவரும் ஆண்மை/ஆண்மையின்மை என்கிற இரட்டைகளாக உள்ளனர். சந்திரனின் ஆண்மைபற்றி, கதையாடல் பெரும் மௌனம் சாதிப்பது, இந்த இரட்டைகளின் இயக்கத்திற்கானதாகவே கருத இடமுள்ளது. விஜயா என்கிற களத்தின் மீதான போராக இவர்களது வேட்கைகள் மாறி அதற்காக அவள் பலிகொள்ளப்படுகிறாள். அவளால் யார் ஹீரொவாகிறார்கள் என்பதன் அடிப்படையில் இந்த மன இயக்கங்கள் நிகழ்கிறது. பெண்ணாக இருப்பது ஆணாக ஒருவன் தன்னை அறிவதற்கான முன்நிபந்தனை என்பதுடன், அதுவே அவளை அடிமை கொள்வதற்கானதாகவும் மாறுவதாக கதையாடல் நகர்த்தப்படுகிறது. தற்கொலை என்பது சமூகத்தின் இயல்பு நிலையை காப்பதற்காக தனிமனிதன் தன்னை அர்ப்பணிக்கும் பலிச்சடங்குதானே?
மற்றொரு இரட்டையாக இருப்பவர்கள் விஜயா/அமலா. இந்த இரட்டை கோழை/வீரம் என்பதாக உள்ளனர். விஜயா இந்திய இலட்சியப் பெண்ணாகவும், அவளுக்குள் ஒடுக்கப்பட்டு கிடந்து வெளிப்படத் துடிக்கும் சுதந்திரப் பெண் என்கிற இயல்பான அடையாளமாகவும் அமலா இருக்கிறாள். அமலா ஹீரோக்களை உருவாக்க முடியாதவள். விஜயாவால் மட்டுமே ஹீரோக்களை உருவாக்க முடியும். அதனால்தான், அமலா பெண்ணாகவும், விஜயா மணைவியாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இரட்டையாக மட்டுமின்றி கூடுவிட்டு கூட பாய்ந்துவிட்ட உடல்களாக உள்ளனர். அதாவது விஜயாவின் இறந்த இடத்திலிருந்து அமலா என்கிற எழுத்துரு முளைக்கிறது. தற்கொலைத்த விஜயா அமலாவின் உடலுக்குள் புகுகிறாள். இதனை பிரதி அமலாவின் துண்டிக்கபட்ட கட்டைவிரலை பார்க்கும் சந்திரன், அவளை அம்மணமாக பார்ப்பதாக அவள் சொல்வதிலும், விஜயா சிறுவயதில் தனது கால்களை பிறர் பார்ப்பது அம்மணமாக தன்னை பார்ப்பதற்கு ஒப்பும் என்பதை சொல்வதிலும் இணைப்பதைக் காணலாம். அமலாவை பார்க்காமலேயே சந்திரன் அவளது குணங்களை ஊகிக்கும் பகுதியும், சந்திரனைப் பார்த்த மாத்திரத்தில் அவன் மீது அமலா தனது இச்சையால் பாதிக்கப்பட்டு, கட்டைவிரலை நன்றாக பாருங்கள் என அனுமதிப்பதும், அதாவது தன்னை நிர்வாணமாக பார்க்க அனுமதிப்பதும் பிரதியில் மிகவும் நுட்பமாக காட்டப்படுகிறது. கடைசி இயலில் சந்திரன் அமலாவை சந்திப்பதும் தனது காதல் வேட்கையை வெளிப்படுத்த முடியாமல் அவளது விரலற்ற காலைப் பார்த்து கிளர்ச்சி அடைவதும் இதனுடன் இணைந்து நோக்கத்தக்கது. அமலா விஜயாவின் உயிர்ததெழுந்த மற்றொரு உடல். விஜயாவின் மரணத்திற்காகவே அவள் அன்பழகன் என்கிற ராஜேஷை பின்தொடர்வதும், இறுதியில் சந்திரனிடம் வந்து அடைக்கலமாவதும் கதையாடலின் ஒரு முக்கியத் தடம் எனலாம். அமலா சந்திரன்மீது தீவிர காதல் கொண்டவளாக இருப்பது இந்த உள்ளார்ந்துள்ள விஜயாவின் உள்ளருவின் ஒரு வெளிப்பாடுதான்.
ஆதிவாசிகளுக்காக பாடுபடும் புரட்சிகர இளைஞனான பிரதாப், அன்பழகன் போன்ற அரசியல் வாதிகளுக்காக போலிஸால் எண்கவுண்டர் செய்யப்படுகிறான். அந்த அன்பழகனை ஆதிவாசிகள் பலி வாங்கிவிடுகிறார்கள். இதில் அஷ்வினியின் காதலான புரட்சிகர எழச்சியில் பாதிப்புறும் பிரதாப்பின் இரட்டையாக வருபவன் அன்னாவின் காதலன் பியோத்தர். இந்த இந்திய இளம் ஜோடிகளின் ஒரு ஐரோப்பிய வடிவம்தான் அவர்கள். இந்தியாவில் உள்ள இந்த புரட்சி உணர்ச்சி என்பது ஒரு மனநிலைப் பிறழ்ச்சியாக ஐரோப்பாவில் வெளிப்படுகிறது எனலாம். அஸ்வினியின் கடிதமும் அன்னாவின் கடிதமும் ஒப்பு நோக்கினால் இவை ஒருவரால் வேறு இடச்சூழலில் எழதப்பட்ட கடிதங்கள் என்பதை அறியலாம். இக்கடிங்களில் உள்ளார்ந்து வரும் பாலியல் இச்சை என்பது சந்திரனனின் மீதானதாக இருப்பதை அறியலாம். ஆக, இந்தியாவிலிருந்து இந்த ஜோடியை ஐரோப்பாவிற்கு நகர்த்தினால் அவர்கள் பெறும் உறுமாற்றமே அது. சந்திரன் சரளமாக ஜோக் அடித்து, தன்னை இளமையானவனாகக் கருதி பேசுவது இவ்விரு பெண்களிடம்தான் என்பது பிரதி நமக்குக் காட்டும் தடம். நாவலில் அஷ்வினியும் அன்னாவும் தங்களது கடிதத்திற்கு பின்பு மறைந்து போகிறார்கள். அஸ்வினி-சந்திரன், அன்னா-சந்திரன் என்கிற இந்த உறவு எத்தன்மை வாய்ந்தது? அது என்னவாக சமூகத்தி்ல் அமையமுடியும்? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. அன்னா தனது கடிதத்தில் குறிப்பிடும் இந்த வரிகள் முக்கியமான சிந்தனையை தூண்டுபவை. ”இது புது உறவு. இத்தனை நூற்றாண்டுகளில் மனிதகுலம் புதிய உறவை ஸ்தாபிக்காதது பரிதாபம் என்று நினைக்கிறேன்.” ஆம், மனித குலம் தோன்றிய காலம் முதல் குடும்பம் என்கிற அமைப்பைத்தாண்டி என்ன புதிய உறவுகளை உருவாக்கி உள்ளது? ஹோமோ, லெஸ்பியன் போன்ற மாற்றுக் குடும்ப உறவுகளைக்கூட சில அரசுகள் “சாபவிமோசனமாக“ அனுமதித்தாலம், சமூகம் “பாபவிமொசனமாக” அனுமதிப்பதில்லைதானே?
பல எழுத்துமுறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த நாவல் பல கதையாடல்களின் வழியாக ஒரு பெரிய நிலப்பரப்பை நம்முன் நிறுத்துகிறது. ஒருவகையில் உலகமயமயாதலை முதலாளித்துவத்திற்கு எதிரான முறையில் கீழ்நிலையிலிருந்து செய்யும் கம்யுனிஸ சர்வதேசியவாதம் போன்றது. இது கம்யுனிஷம் இழந்த ஆன்மாவை மீட்கும் முயற்சி. இங்கு பகுத்தறிவின் உச்ச வன்முறையை செயலிழக்கச் செய்யும் பணியாக, பல சம்பவங்கள் எழுத்தாக்கப்பட்டுள்ளன. “வறட்டு நாத்திகவாதம் பல புராதன ரகசியங்களை பகுத்தறிவு கொண்டு முடக்கியது. (பக்.-42.)“ எனக்கூறும் இந்நாவல் வாசகங்கள் மிகவும் திட்டமிட்டமுறையில் இச்சம்பவங்களை எழுத்தாக்கியுள்ளது. குறிப்பாக தாந்ரீகம் மற்றும் முன்னுணர்வு ஆகியவை பற்றி வரும் சம்பவங்கள். நெருப்புணரும் பர்மியத்தாயும் அந்நிய வாசம் நுகரும் ஆதிவாசிகளும் என நிறைய பேசலாம்.
ஆணைக் கட்டமைக்கும் பல பெண்கள் பற்றியதான இந்த நாவல். ஆண் அல்லது ஆண் மையம் என்பது என்ன? என்கிற கேள்வியை எழுப்பிச் செல்கிறது. ஆண் பெண்ணை உருவாக்கியதன்மூலம் தன்னை உருவாக்கிக் கொள்ளும் வினைகள் பற்றியதாக உள்ளது. சந்திரனை உருவாக்குபவர்கள் இந்நாவலில் வரும் விஜயா, அஷ்வினி, லிடியா, அன்னா, மாக்தா மற்றும் பிற அம்மாக்கள்தான். முக்கியமாக சந்திரனின் மணைவி விஜயாவின் தம்பி பிரதாப்பின் காதிலியான அஷ்வினி ஒரு விலக்க முடியாத பிம்பமாக மாறிவிடுகிறார். அதேபோல் மாக்தாவும். பர்மியமுகம் கொண்ட தாய் இந்நாவிலின் ஒரு முக்கியப் பாத்திரம். மற்றும் லியோனின் அந்த மஞ்சள் குரல்.
இந்நாவிலி்ல் நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 1. குலசிங்கத்தின் காதலியுடனான இறுதி உரையாடல். அப்பெண்ணின் அந்த முதிர்ச்சி.. அதிர்ச்சிகளை உருவாக்கிய ஒரு காட்சி. பென் நிர்வாணம் என்பது எதிர் கொள்ளப்படாதவரைதான் காமம், எதிர்கொண்டால் ஏற்படுவது பதற்றம்தானே? அந்தப் பதற்றத்தின் குரல்தான் தாய்தெய்வ வழிபாடு மற்றும் தாந்ரீகம் எல்லாம். அச்சிறு ஈழப்பெண் தனது மார்புகளை அவனுக்கு வெளிப்படு்தி தரும் காட்சியில் ஏற்படும் பெண்மையின் புரிதல் அற்புதமானது. 2. குகையில் நடைபெறும் இரண்டில் இரண்டாவது புணர்ச்சி. அங்கு ஆண் என்பவன் கருவியாக மாறும்நிலை மிகச்சிறப்பாக வந்துள்ளது. 3. பியொத்தரின் தாய் அவளது கணவனால் ஆர்கஸம் வருவதற்கு முன்பாக அவளை பலிவாங்கும் வண்ணம் விட்டு விலகிப்போவதும், அவள் அதற்காக எரிச்சலுற்று தனது உடல் மற்றும் மனவாதைகளை வெளிபபடுத்துவதும் பெண் பாலயில்பற்றிய முக்கியமாக அவதானங்களைத் தரக்கூடியவை. வதைத்தலிதம் (சாடிஸம்) என்கிற ஆணிய அதிகாரத்தின் வழியாக பெண்ணின் பாலியல் நிராகரிக்கப்படுவதை சுட்டும் ஒரு கதையாடல் அது.
இந்நாவல் பாலியல் அரசியல் பற்றிய பல நுட்பங்களைக் கொண்டதாக உள்ளது. அதற்குள் பிரதியின் மொழி தயங்கி சொல்லாமல் விட்டவை அதிகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. பிரதி சமூகத்தின் எழுதுதல் என்கிற கண்காணிப்பு எந்திரத்தால் பல இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் மொழியையும், கதையாடலையும் சிதைத்து பாதியில் மௌனமாக விட்டுவிடுகிறது. விஜயாவுடன் ஆன குகைப்புணர்ச்சியும் மார்த்தாவுடன் ஆன கனவு நிலைப் புணர்ச்சியும் வேறுபட்ட பண்பாட்டில் விளைந்த மற்றும் விழைந்த இரு உடல்கள் பற்றிய ஒப்பிடலுக்குரியவை. தவிரவும் இரண்டு முக்கியப் பண்பாடுகளின் உடல் மற்றும் வரலாற்று உரையாடலாக நகரும் இந்த நாவல் ஒரு முக்கியமான இடைவெளியை இட்டு நிரப்ப முயல்கிறது.
நாவலின் எழுத்துநடை மிகத்துல்லியமானதாக உள்ளது. சந்திரன் தங்கியிருக்கும் விடுதயிலிருந்து அந்த மால்களுக்கு ஒரு நடை போய்வந்துவிடலாம். அந்த அளவிற்கு அசாத்திய வர்ணிப்பு ஓவியங்கள் பற்றிய உரையாடல் எல்லாம் சேர்ந்து நாவலை ஒரு சுய அனுபவமாக மாற்றுகிறது. அஸ்வினி பேசுவது சந்திரன் பேசுவதேபோல் உள்ளது. பாத்திரங்களின் மொழியில் அல்லது குரலில் சில சிக்கல்கள் இருப்பதாகப் படுகிறது. பாததிரங்களக்கான தனித்தவமான மொழிநடை அல்லது பேச்சுப்பாணி அமையவில்லை. எல்லா பாத்திரங்களும் ஒரே குரலில் பேவதான ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அஸ்வனி சில இடங்களில் சந்திரனாக மாறுவதும் குறிப்பாக ஒரே கனவைக் கானுதல் போன்றவை. நாவல் ஐரோப்பா அதிமனிதனைத் தேடுகிறது என்பதை அன்னாவின் கடிதம் வழியாக வெளிப்படுத்துகிறது. இந்த அதிமனிதன் என்பவன் நீடஷேயிஸ அதிமனிதன் எனலாம். கிழக்கத்தியம் நோக்கிய தேடலில் உள்ள லியோன்தான் அந்த அனிமனிதனா? அல்லது “நடுவில் புகுந்து எதுவும் செய்யாதீங்க” என்று இருக்கும் நிலையைக காப்பாற்ற முனையும் சிவநேசமா? கடவுள் இறந்துபோனதை அறிவித்த நீட்ஷே அதிமனிதனின் வருகை பற்றியும் தேவை பற்றியும் கட்டியங் கூறினார் என்றால், அந்த அதிமனிதன் மற்றொரு கடவுளாகவோ தேவதூதனாகவோ மாறும் நிலையை இந்த நாவல் முன்வைக்க முனைகிறதோ என்று தோன்றுகிறது.
- ஜமாலன். 25 ஜீன், 2009.
-----------



