பிரம்மச்சர்யமும் ஆணுறைகளும் - மண்ட்டோவின் மதம், தேசியம் மற்றும் உடல் பற்றிய வெள்ளை அறிக்கை – பகுதி -2

பகுதி-1

2

image

‘ஒருவயது முடிவதற்குள் தனது ஒரே மகன் இறந்துவிடுவான்’ என்கிற உள்மனக் குரலை முன்வைத்து நகரும்  ‘காலித்’ என்கிற கதை மனதின் இருள் பகுதியில்  ஒலிக்கும்  இயல்புக்கு  முரணான  குரலின்  உண்மையான அறிக்கையிடலாக உள்ளது. வழக்கமான கதைக் களத்தைக் கொண்டிருந்தாலும், மையமான பிரச்சினை கதைசொல்லிக்குள் ஒலிக்கும் இந்தக் குரல்தான். மனித மனதின் தொல்மனச் சிக்கல் தான் அந்தக் குரல். இந்தக் குரல் இயற்கை சார்ந்தது.  அது அடையாளமற்றதான ஒரு உடலின் இறப்பு பற்றிப் பேசுகிறது. ஆனால் கலாச்சாரம் அந்த அடையாளமற்ற உடலிற்கு மகன் என்கிற அடையாளத்தைத் தந்திருப்பதால் இறப்பை ஏற்க மறுக்கிறது. இங்கு குடும்பம் என்கிற அலகின் அடையாளம் நவீன சமூகம் சார்ந்தது என்றால், அடையாளமற்ற உடல்கள் புராதன சமூகம் சார்ந்தவை. இந்தப் புராதன மனம்தான் மாந்தரீகத் தன்மையுடன் குரலாக முன் அனுமானித்து உள்ளுக்குள் ஒலித்து விடுகிறது. அக்குரலிற்கு ஏற்ப குழந்தை இறந்து போவதுடன் கதை முடியவில்லை. அந்தக் குரலை இறந்த காலித் அழைத்துப் போனதாக அவன் நம்புவதுடன் கதை முடிகிறது. இந்த நம்பிக்கை மனதை இயல்பு நிலையில் வைத்துக்கொள்ள  கதைசொல்லி ஏற்படுத்திக் கொண்ட ஒரு சமாதானம் அதாவது பாதுகாப்புச் செயலியக்கம் (defence mechanism) அவ்வளவே. 

இங்கு  நுட்பமாகக்  கதையானது  தந்தை  மகன்  என்கிற  கலாச்சார உணர்விற்கும், அவனது குரலான இயல்புணர்விற்கும் ஆன முரணை மகன் இறப்பதன் மூலம் தீர்த்து வைக்க முயல்கிறது. கலாச்சார வேட்கையை இயற்கை வேட்கை வெல்கிறது. மண்ட்டோ கதைகளின் அடிப்படைச் சட்டகம் இதுதான்.  இயற்கையா?  கலாச்சாரமா?  என்றால்  மண்ட்டோ  இயற்கையையே முதன்மைப்படுத்துகிறார்.  அதனால்தான்  இயல்புணர்விற்கும்  அதன் வேட்கைகளுக்கும் எதிரான எல்லாவற்றையும் மறுத்து ஒதுக்குவது அவரது பெரும்பாலான  கதைக்களனாக  மாறுகிறது.  ‘இயற்கைக்கு  எதிராகப் போராடுவதில் வீரம் ஏதும் இல்லை’ என்கிறது மற்றொரு கதையின் பாத்திரமான குலாம் அலி  (சுதந்திரத்திற்காக  : பக்  253) இயற்கையுடன் இயைந்து போதல் என்பதுதான் இவரது அடிப்படை மனச்சட்டகமாக இருக்கிறது. 

மூன்றரையணா  திருடியதற்காகச்  சிறை  சென்ற  பாகு    கொலைக் குற்றத்திற்காகச் சிறையிலிருந்து விடுதலையான ஒருவனால் சொல்லப்படும் கதை‘மூன்றரையணா’. குற்றம் என்பதன் உள்ளடக்கம் என்ன? சட்டம் குற்றம் பற்றி வைத்திருக்கும் பார்வையில் உள்ள வறண்ட தன்மையையும் வெளிப்படுத்தும் இக்கதையில்  ‘எல்லோரும்  ஏன்  நேர்மையை  நற்குணத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள்’ என்கிற கேள்வி அலசப்படுகிறது, நேர்மை தனி மனிதனுடனும் நற்குணம் சமூக அறத்துடனும் உறவுடையது. குறிப்பாக நற்குணம் சமூக கட்டமைப்பின் வழியாக உருவாக்கப்பட்ட கலாச்சாரக் கூறுடன் சம்பந்தப்பட்டது. நேர்மை என்பது ஒருவனது நடத்தை சம்பந்தப்பட்டது. அக்கதையில் ரிஸ்வி கூறுகிறான். ‘ஒரு சமூகத்தில் நல்லது என்று கருதப்பட்டது மற்றொரு சமூகத்தில் கெட்டதாகக் கருதப்படுகிறது’. ஆனால் நேர்மை தனி மனித ஒழுக்கம் சார்ந்தது, இன்னும் நுட்பமாகக் கூறினால், எந்தச் சமூக அமைப்பிலும் ஒருவன் நேர்மையாக இருப்பது சாத்தியம். நற்குணத்தைத் தனி மனிதன் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நேர்மை தனி மனித தேர்வைச் சேர்ந்தது. மண்ட்டோ  தனி  மனிதனின்  தேர்விற்கு  முக்கியத்துவம்  கொடுத்ததால் இறுதிவரைத்  தனக்கும்  தனது  எழுத்திற்கும்  நேர்மையாக  இருந்தார். அதனால்தான் நற்குண அறம் பேசும் சமூக அமைப்பை  ஒடுக்குமுறைக் களமாக அவரது  கதைகள் நிராகரித்தன. அவரது செயல்பாடுகள்  நற்குணத்துடன் உறவுடையவையா? இல்லையா என்பது அறம் பற்றிய நமது பார்வை சார்ந்தது. அதைப் பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை.

கடவுளிடம் ரிஸ்வி கேட்கிறான்  ‘மனிதன் உருவாக்கிய சட்டங்களை உடைத்தெறி. மனிதன் உருவாக்கிய இந்தச்  சிறைச்சாலையைத் தரைமட்டமாக்கு’ சிறைச்சாலை அரசு எந்திரத்தின் ஒரு ஒடுக்குமுறைக் கருவி. அது உருவாக்கப் பட்டது குற்றவாளிகளைத் திருத்துவதற்கு அல்ல, சமூகத்தில் குற்றம் பற்றிய அச்சத்தை நிலைநிறுத்தவும், குற்றவாளிகளாக குறியிடப்பட்ட உடல்களைப் பிரித்தெடுத்துச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கவுமே. வெளிப்படையான குற்றங்களைச் செய்வதற்கான அச்சத்தைத் தருவது சிறைச்சாலை என்றால், ரகசியமாக  அல்லது  ஒரு  உடல்  தன்னிச்சையாக  விரும்பும்  செயலைச் செய்வதற்கான அச்சத்தை நிலைநிறுத்தவே கடவுளின் சிறைச்சாலை இருக்கிறது. மேலும் ரிஸ்வி கூறுகிறான் ‘பிறகு உன்னுடைய சிறைச்சாலைகளை ஆகாயத்தில் கட்டிக்கொள்’ நீயே உன் நீதிமன்றத்தில் மனிதர்களுக்குத் தண்டனை கொடு.  வேறு எதற்கு இல்லை என்றாலும் நீ கடவுள்  என்பதற்காகவேணும் இதைச் செய்’ இங்கு கடவுளுக்குத் தரப்படும் வரையறை ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. கடவுளின் இருப்பே மனிதர்களைக் குற்றங்களைச் செய்ய வைத்து அதைத் தண்டிப்பதில்தான் இருக்கிறது. கடவுள் எப்படிக் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதன்மூலம் மட்டுமே தனக்கான இருத்தலைப் பெறுகிறார் என்பது ஒரு கொலைகாரனால் சொல்லப்படுகிறது. மறுதலையாக கூறினால் குற்றச்செயல்கள் இல்லாத இடங்களில் கடவுள் தேவையில்லை. மதங்கள் ஒரு கண்காணிப்பு நிறுவனமாக மாறுவது இப்படித் தான். முதலில் மறைகளில் குற்றச் செயல்களைப் பாவம் என்கிற பெயரில் அறிக்கையிடுகின்றன. பிறகு அதனை  கண்காணிக்கும் கடவுளைப் படைத்தளிக்கின்றன. மதங்கள்  ‘சிறைச்சாலை கண்காணிப்புக் கோபுரம்’ என்றால் கடவுள் காவல் கூண்டில் இருக்கும் காவல்காரன். அறிந்து கொள்ள முடியாத உயரத்தில் காவல் கூண்டு இருப்பதால், காவல்காரன் இல்லாதபோதும் சிறையிலிருந்து எவனும் தப்ப முயலவிடாமல் நிற்கிறது கோபுரம்  பற்றிய அச்சம்.  மதம்  மனிதனின் ஆழ்மனதில்  ஒரு அச்சமாக உட்கார்ந்திருப்பது இப்படித்தான். தனிமனிதனும் மதம் மற்றும் சமூக அமைப்பும் முரண்படும் இந்த எல்லைதான் மண்ட்டோவின் கதைக்களனாக இருக்கிறது. தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள முரண் அவரது கதைகளில் அதன் தீவிர எல்லைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

imageகுடும்ப  ‘வாரிசை’ பெற்றுக் கொள்ளாத பெண் உடல் மீதான வன்முறை ‘ஜுபைதா’  வை பிளவாளுமை  (சீஸோபெரனியா) எனும் மனச்சிதைவிற்கு ஆளாக்குகிறது. அவளது அடையாளம் சிதைந்து பிளவுபட்ட ஆளுமைக்குள் வாழத் தள்ளப்படுகிறாள். அவளது தாயின் வழியாக வாரிசு பற்றிய உணர்வு ‘ஒரு குழந்தைதான் ஒரு பெண்ணின் மொத்த இருப்பின் அடையாளம்’ என்று அவளுக்குள் இறக்கப்படுகிறது. அதுவே அவளை மனச்சிதைவுக்கு இட்டுச் செல்வதன்மூலம்  சமூகத்தின்  கண்காணிப்பு  குடும்ப  அமைப்பிற்குள் செயல்படுவதை பதியவைத்து விடுகிறார். இக்கண்காணிப்பிலிருந்து விலகிச் செல்லும்  ரகசிய  வெளிகளைக்  குற்றச்  செயலுடன்  தொடர்புடையதாக குறியிட்டுள்ளன. சமூக அதிகார அமைப்பு இக்குற்ற அமைப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஒரு உடல் தன்னிலிருந்தே அல்லது தன்னைச் சிதைத்துக் கொள்வதன்மூலம் இவ்வெதிர்ப்பை பதிய வைக்க முயல்கிறது. ஜுபைதா தனது பால்தராத முலைகளை வெட்டிக் கொள்வதன் மூலம் தனது அதீத தாய்மை உணர்வு என்கிற ஆளுமையின் வழியாகவே பெண் உடலிற்கு இச்சமூகம் தந்துள்ள தாய்மை என்கிற அடையாளத்தை சிதைத்து விடுகிறாள்.  இந்த எதிர் வன்முறை அவள்மீது சுமத்தப்பட்ட தாய்மை மற்றம் பெண்மை என்கிற பிம்பத்தின் வன்முறைக்கு எதிராக முன் வைக்கப்படுகிறது.  ‘ஒரு முலை இழந்த திருமா பத்தினியான கண்ணகியும் தன்மீது சுமத்தப்பட்ட அத்தனை வன்முறையும் பத்தினிப் பெண் என்கிற பிம்பத்தின் மூலம்தான் என்பதால் பெண் என்பதற்கான புறஅடையாளமான தனது முலையைத் திருகி எறிவதன்மூலம் அப்பிம்பத்தை சிதைக்கிறாள்.’ அவளுள் ஒடுக்கப்பட்ட பாலியல் ஆற்றல் (லிபிடனல் எனர்ஜி) வீறிட்டு கிளம்புகிறது. மதுரையை எரிக்கும் நெருப்பாக பெண் தனது ஆற்றலை வெளிப்படுத்தி அழிக்க முடியாத சக்தியாக மாறும் போது நம் சமூகம் அவளுக்குத் தரும் பிம்பம் தானே தாய் தெய்வம்.

‘மரபு ரீதியாக வளர்க்கப்பட்ட’ ஜுபைதாவின் கனவு ஒன்று கதையில் சுட்டப்படுகிறது. அவள் பலவிதமான கனவுகளைக் காணத் தொடங்கினாள். பாலைவனத்தில் கையில் குழந்தையை ஏந்திக் கொண்டிருப்பதைப் போல் கண்டாள். திடீரென ஆகாயத்தில் இருந்து எவரோ அதைப் பிடுங்கிக் கொண்டு போனது போல, அந்தக் குழந்தை காணாமல் போகும். இக்கனவு இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றான  ‘ஹஜ்’ என்கிற புனித சடங்குடனும் மக்காவின் வரலாற்றுடனும் ஒப்புமை உடையதாக இருக்கிறது. இப்ராஹிம் நபி தனது மனைவி ஹாஜிரா மற்றும் மகன் இஸ்மாயிலுடன் சிரியாவிலிருந்து அல்லாவின் கட்டளைக்கிணங்க மெக்காவில் தனது மனைவியையும் மகனையும் விட்டு விட்டுச் சென்று விடுகிறார். அப்பொழுது மெக்கா பரந்த ஆளற்ற பாலைவனமாக இருந்தது. பின்னொருநாள் அல்லாவின் கட்டளைக்கிணங்க (கனவில் அவர் தனது மகனைப் பலியிடுவதாக காண்கிறார்) பருவ வயது வந்து விட்ட தனது மகனை அறுத்துப் பலியிட மெக்கா வந்து ஹாஜிராவிடமிருந்து மகனைப் பிரித்தெடுத்துப் போய் பலியிட முயல்கிறார். பிறகு அப்பலிச் சடங்கு அல்லாவால் தடுக்கப்பட்டு அதற்கு பகரமாக ஆட்டை அறத்துப் பலியிட கட்டளை வருகிறது. இதுவே குர்பான் எனப்படும் இஸ்லாமிய சடங்குகளில் ஒன்றாகும். இக்கதையாடலில் குழந்தை தரப்பட்டு வானத்திலிருந்து பிடுங்கப்படுவதாக  கனவு காட்டப்படுவது இச்சடங்கு அல்லது பலியிடல் நிகழ்வுடன் ஒப்பு நோக்கத்தக்கது. இதில் ஹாஜிரா என்கிற தாயின் பங்கு என்ன? அவரது உணர்விற்கான மதிப்பு எங்கே? என்பதுவே ஜுபைதாவின் வழியாக முன் வைக்கப்படுகிறது. கருணை உள்ள கடவுள் தந்த குழந்தையை  கடவுளே  பறிக்க  முயன்றுவிடும்  இக்கனவு  அவளது மனச்சிதைவிற்கான அறிகுறியாக மாறிவிடுகிறது. சிறுகதையின் நுட்பம் கெடாமல் பாத்திரம் தனது மரபிலிருந்து இக்கனவைப் பெறுவதாக காட்டுவது மண்டடோவின் இலக்கிய ஆளுமைக்கு ஒரு சான்று.

“தயவுதாட்சண்யம்  இல்லாமல்  சுத்தத்தை  எதிர்பார்க்கும்”  ஹமீது அழுக்கடைந்தப் பிச்சைக்காரப் பெண்களோடு படுத்துவிட்டு அந்த அனுபவம் தான் ரொம்ப சந்தோஷமானது எனும் பாபு ஹர் கோபால் என்கிற இருவரையும் ஒப்பிடும் ‘சுத்தமான ரத்த வாரிசு’ பற்றிய கதைதான் ‘ஹமீதின் குழந்தை’, ‘காந்தி, விவேகானந்தர் மற்றும் சுபாஷ் பாபு’ வின் படங்கள் மாட்டப்பட்ட மிகச் சுத்தமான வீட்டில் அலமாரி நிறைய புத்தகங்கள் அடுக்கப்பட்ட துல்லிய விவரணைகளுடன் மிக மென்மையான பாதங்கள் கொண்ட ஒரு பெண் என வாசகனை மயக்கும் வர்ணனைகளுடன் மயங்கிச் செல்லும் மொழிநடையில் எடுத்துரைக்கப்படும் இக்கதையின் முற்பாதியில் ஹமீதின் சுத்தம், நேர்த்தி, ஒழுங்கு (இவ்வார்த்தைகள் ராணுவத்துறை சார்ந்த சொல்லாடல்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது) என்கிற அழகியல்  ரசனையில் மயங்கிச் செல்கிறது. நமது வாசிப்பு அப்பெண் குழந்தை உண்டாகியிருப்பது தெரிந்தவுடன் ஹமீதின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றத்தில் கதை சுத்தம் என்கிற மன உணர்வினை பிரச்சனைப்படுத்தி விடுகிறது. அதாவது சுத்தமான ரத்தத்தில் உருவாக வேண்டிய தனது குழந்தை அசுத்தத்தில் உருவாகிவிட்டது என சுத்தம் என்கிற உணர்வு அசுத்தத்தை தூய்மைப்படுத்துவதற்காக உடனடியாக கொலை உணர்வாக மாறிவிடுகிறது. அவனது அழகியலில் உள்வயப்படுத்தப்பட்டிருக்கும் அசுத்தம் மீதான வெறுப்பு என்கிற வன்முறை வெளிப்படுகிறது. பிராமண அழகியலுக்குள் உள்வயப்படுத்தப்பட்டுள்ள தலித்துகள் மீதான வெறுப்பு வெள்ளை அழகியலில் உள்வயப்படுத்தப்பட்டிருக்கும் கருப்பர்கள் மீதான வெறுப்பு என்கிற வன்முறையைப் போல அதிலும் பிரபலமான குற்றவாளி கூட கொலை செய்ய மறுக்கும் பச்சிளங் குழந்தையைக் கல்லால் நசுக்கிக் கொல்லும் ஒரு கொடூரமான உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறான். அக்குழந்தையின் முகம் அவளுடன் வாழ்ந்து வந்த ஒருவனின் முகச்சாயலாக இருந்தவுடன் குழந்தையைக் கொல்லாமல்   விட்டுவிடுகிறான். கதை நகைச்சுவையாக முடிந்தாலும் அது எழுப்பும் பிரச்சினை  - இதில் யார் மனித முகத்துடன் இருக்கிறார்கள். சுத்தம் காக்க கொலை செய்யத் துணிந்த ஹமீதா? அசுத்தம் பற்றி அக்கறையற்ற அவன் போக்கில்  வாழும்  பாபு  ஹர்  கோபாலா?  பச்சிளம்  குழந்தையை கொல்லமாட்டேன் என்கிற பிரபல குற்றவாளி கரீபா? சுத்தம் பற்றிய உணர்விற்கு கதை அதிகம் அழுத்தம் கொடுப்பதே, சுத்தம், தூய்மை என்கிற அழகியல் கண்ணோட்டம் வெறுப்புணர்வுடன் கொண்டிருக்கும் உறவை விளக்கத்தான் சுத்த ஆரிய இரத்தத்திற்காக எண்ணற்ற யூதர்களைக் கொன்று குவித்து கொலையின் அழகியலை  உருவாக்கிய  ஹிட்லரின்  பாசிசம்  கூட  தூய்மை  ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையைக் கொண்டது என்பது தானே வரலாறு.

இந்தக் கதை எந்த விதத்திலும் என் பலவீனத்தைப் பற்றியது இல்லை என்று துவக்கத்திலேயே கதை வேறு ஒருத்தரின் பலவீனத்தைப் பற்றியது என்கிற யூகத்துடன் எழுதப்பட்டுளள ‘கழுவேற்றப்படுதல்’ கதை ‘உயிரை ஒரு மெல்லிய நூலில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த’  நோயாளிகளின் உடல்களை  எண்களால் அடையாளமிட்டுள்ள மருத்துவமனை வழியாக ஆசையைக் கொல்வது அல்லது ஏக்கங்களை மரணம் கொள்ள வைப்பது பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனைக் கொலை செய்வது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவனின் இயல்பான உணர்வுகளைக் கொல்வது என்பது தான் மிகக் கொடூரமானது. கதையின் மையத்தில் இயல்பான X இயல்பற்றதான உணர்வு என்பது அலசப்படுகிறது. பெண் உடல் மீதான ஒரு ஆணின் வேட்கையும், ஆணுடல்மீதான பெண்ணின் வேட்கையும் இயல்பானது. இந்த இயல்பை கதையில் வரும் பேராசிரியர் ஒருவர் தனக்கு ஒரு அடையாளத்தை அல்லது பிம்பத்தை உருவாக்க கொலை செய்துவிடுகிறார்.  (இதே கொலையை ‘சுதந்திரத்திற்காக’ கதையில் தேசத் தொண்டாகச் செய்கிறார்கள் குலாம் அலி - நிஷார்  தம்பதியினர்)  அந்த  ஆசையின்  மரணம்  அவரது  வாழ்வையே வெறுமையாக்கிவிடுகிறது. ஆனால் இறுதிவரை அந்த ஆசையை மனதிற்குள் அடக்கிப் போராடுவதிலேயே ‘இயல்பான’ மனிதனின் ஆசையைவிட அதிகமாக அந்த ஆசையுடன் வாழ்ந்து சாகிறார். ஒடுக்கப்பட்ட ஆசையானது பெரும் ஆவல் கொண்டதாக மாறிவிடும் என்பது தானே மனதின் சூட்சுமம்.

‘நான் பொய். மிகப்பெரிய பொய் என் வாழ்க்கை முழுக்க எனக்கு நானே பொய் சொல்லிக்கொள்வதிலும், அது உண்மை என்று நம்புவதிலும் கழிந்து விட்டது’ என்கிற பேராசிரியர் நடைமுறைக்கெல்லாம் முரணான அந்தச் செயலை ஒரு தத்துவார்த்த மோசடி எனும்போது கதை அடுத்த தளத்திற்கு நகர்ந்து விடுகிறது. மேலும் அப்பழுக்கற்ற ஒழுக்கசீலனாக வைத்திருக்க நினைத்து, அதன் போக்கில் போக அது சோர்வூட்டும் புதை மணலில் கொண்டு விட்டு விடுகிறது.  தன்னை மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில் ஒரு தேவனாக அனுப்பப்பட்டவன் என்று  சொல்வார்கள்  எனக்  கூறும்போது  கதையாடலில்  ஆழ்தளத்தில் சலனப்படும் அமைப்பு வெளித்தெரியத் துவங்குகிறது. கதை தேவனாக அனுப்பப்பட்டவர்கள் அல்லது தீர்க்கதரிசிகள்  அல்லது சாதுக்கள் அல்லது பக்கீர் என்று தன்னை அழைத்துக்கொண்ட பாபாஜி போன்ற அரசியல் சாதுக்களை நினைவூட்டி விடுகிறது. இவர்கள் இயல்பான மனித உணர்வுகளைக் கொன்று தன்னை  தேவனாக்கிக்  கொண்டவர்கள்.  அதாவது,  தேவனாக்கிக் கொள்வதற்காகத்  தனக்குள்  உள்ள  மனிதனைக்  கொன்றவர்கள்.  தனது வாழ்க்கையையே ஒரு சிலுவையாகச் சுமந்துகொண்டு தனது மரணத்தை நோக்கி நடந்த இவர்களைக் ‘கழுவேற்ற’ முயல்கிறது இக்கதை. இவர்கள் இறைவனால் ரட்சிக்கப்பட்டார்களா? தெரியாது ஆனால் கதையில் வரும் பேராசிரியர் எனது மகளைப் போல என்று அவரால் கூறப்பட்ட சகினா என்கிற பெண்ணால் ரட்சிக்கப்படுகிறார். இறந்துபோவதற்குமுன் அவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார், பரிசாக சகினாவுக்குக் காசநோயைத் தந்துவிட்டு. இக்கதைக்கான கருவை  மண்ட்டோ  அசோக்குமார்  பற்றிய  அலசலில்  பெறுகிறார். (நினைவோடை பக்.6) அசோக்குமார் ஒரு நடிகையோடு படுக்கைக்குப் போக விரும்பினார். அவரது நடிகன் என்கிற பிம்பத்திற்காக அந்த ஆசையை அவர் தனக்குள் அமுக்கிவிடுகிறார். இதனைக் கதையாக்கும்போது மண்டோ தனது அலசலில்  நடிகனைத்  தேவனாக்கி  - இருவரது  பிம்ப  வேட்கையையும் கழுவிலேற்றிவிடுகிறார்.

- (தொடரும்)

- ஜமாலன் (14-12-2005)