குறிப்பு – இக்கட்டுரை
நண்பர் ராமானுஜத்தால் மொழிபெயர்க்கப்பட்ட மண்ட்டோ படைப்புகள் என்கிற நூலிற்கு நிழல் பத்திரிக்கைக்காக 14-12-2005-ல் எழுதப்பட்டு அதில் வெளிவந்த கட்டுரை. நண்பர்கள் சிலரின் வேண்டுகோளிற்காக இங்கு மீள்பதிவிடப்படுகிறது.
“நான் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்படும் ஒவ்வொரு தேவ தூதர்களின் உடலிலும் ஒரே ஒரு முடிகூட இல்லாத அளவிற்கு மிகச் சுத்தமாகச் சிரைத்துவிடுகிறேன்”
- சாதத் ஹஸன் மண்டோ
1
பிரித்தானிய இந்தியாவிலிருந்து 1947-இல் இந்தியா-பாகிஸ்தான் என்ற இரண்டு புதிய நாடுகள் உருவாக்கப்பட்டபோ
து (பிரிவினை - என்பது வகுப்புவாத நோக்கில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் (1) அதனைத் தவிர்ப்போம்) ஏற்பட்ட வகுப்புக் கலவரம் பற்றிய படைப்புகளில் முதலில் நினைவுகூரத்தக்க ஒரு படைப்பாளி சாதத் ஹஸன் மண்ட்டோ. அவரது டோபா டெக்சிங் என்கிற கதையில் வரும் பீஷான் சிங் - லாகூரில் மனநலக் காப்பகத்தில் இருந்துகொண்டு தன் கிராமமான டோபா டெக்சிங்-கிற்குத் திரும்ப வேண்டும் என்று இயற்கையான அடையாளத்தை மட்டும் வேண்டி வரலாற்றால் கட்டமைக்கப்பட்ட ‘இந்தியன்’, ‘பாகிஸ்தானி’ என்கிற அடையாளத்தை மறுத்ததைப் போல இறுதிவரை தனது அடையாள நெருக்கடியில் வாழ்ந்து மனச்சிதைவிற்கு ஆளானவர். இந்தியாவா? பாகிஸ்தானா? எங்கு தன்னிச்சையாக இருக்க முடியும் என்பதே அவரது முக்கிய பிரச்சினையாக இருந்தது. பாகிஸ்தானில் அவர் வாழ்ந்த இறுதி 8 ஆண்டுகளில் முழுக்க முழுக்கத் தன்னை போதைக்குள் திணித்துக்கொள்வதன் மூலம் நிரந்தரமான மயக்கத்தில் ஆழ்ந்து தனது உடலைக் கொண்டு அவர் இவ்வுலகிற்கு எதிராக நடத்திய கலகமே அவரது மரணம்.
மண்ட்டோ -குறிப்பிடத்தகுந்த, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பாளி. அதிலும் கலக எழுத்துக்கள், புனித உடைப்புகள், விளிம்பு நிலை எழுத்துக்கள் பற்றி அதிகமாகச் சிலாகிக்கப்படும் தமிழ்ச் சூழலில் விரிவான ஆய்விற்கும் விவாதத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டியவர். சிறுகதைகளின் களத்தையும் கருவையும் சூழல்களையும் அதன் கன பரிமாணங்களோடு மிக நுட்பமாக எழுதிச் செல்லும் விதம் தமிழின் நவீன எழுத்திற்கு ஒரு பயிற்சிக் களமாக இருக்கும்.
மண்ட்டோ பற்றி எழுதும்போது புதுமைப்பித்தன் குறித்து நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாதது. படைப்புத் தளத்தில் இருவரும் இருவேறு தளங்களில் இயங்கியவர்கள் என்றபோதும், மண்ட்டோ நகர் சார்ந்த பின்புலத்தையும் பு.பி. கிராமம் சார்ந்த பின்புலத்தையும் கதைக்கான புனைவமைப்பாக கொண்டவர்கள். மண்ட்டோவின் சமூக அவலம் பற்றிய உணர்வும் அதிகார எதிர்ப்புணர்வும் பு.பி.யிடம் இல்லை. நிறுவன அமைப்புகளுக்கான எதிர்ப்புணர்வும், நிறுவப்பட்ட கருத்துக்களை மறுதலிப்பதும், எழுத்திற்கான அர்ப்பணிப்பும் இருவரிடமும் இருந்தது. மண்ட்டோவிற்கு ஏற்பட்ட அடையாள நெருக்கடி, அந்நியமாதல் உணர்வு பு.பி.க்கு இல்லை. தமிழ்ச் சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை, காரணம் சாதிய அடையாளம் ஆழமாக வேரூன்றி உள்ளதால் ‘தனிமனிதனைக்’ கண்டடைவதற்குச் சாத்தியமில்லாத சூழலே உள்ளது.
பு.பியின் எள்ளல் மண்ட்டோவின் சொற் சித்திரங்களில் வெளிப்படுவதைக் காணலாம். இந்த எள்ளல் பு.பி.யைப் போல் ஐரணித் தன்மை வாய்ந்தது அல்ல. இது ‘பிளாக் ஹுயூமர்’ (ஙிறீணீநீளீ பிuனீஷீக்ஷீ) எனப்படும் பிராய்டால் முன்வைக்கப்பட்ட நினைவிலி நிலையில் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் அச்சம் நரம்புகளை அதிர வைக்கும் நகையுணர்வாக மாற்றீடு செய்யப்பட்டு வெளிப்படும் வடிவமாகும். சொற்சித்திரங்களில் மனதிற்குள் ஒடுக்கப்பட்ட அச்சம், அவசம் ஆகியவை நகையுணர்வாக வெளிப்படுவதுடன் வாசகனை ஒருவித இறுக்கமான மௌனத்திற்குள் ஆழ்த்திவிடுகிறது. இது சொல்லப்படும் சூழலுக்குள் உறைந்திருக்கும் வன்முறையை அதன் அவலத்தை வாசகனின் மனதில் மெலிதான நகைச்சுவையுடன் உள்ளிறக்கிவிடுகிறது. ஆயிரம் புள்ளி விவரங்களை விடவும் ஆய்வறிக்கைகளை விடவும் இவை ஏற்படுத்தும் தாக்கம் அதிகமானது சொற்சித்திரங்கள் ஒவ்வொன்றும் மனதை உறையவைக்கும் உண்மைகளை நாடகத் தன்மையுடன் காட்சி அமைப்புகளாக நம்முன் விரித்து வைக்கின்றன. இது எல்லா வித கலவரங்களினது கொலைகளையும் சூறையாடல்களையும் பொதுமைப்படுத்தப்பட்ட அவல நாடகமாக எல்லாச் சூழல்களிலும் பொருந்தி நிகழக்கூடியவையாகவும் உள்ளன. இவை குறித்த ஆய்வு ஒரு புதிய இலக்கி வகையை (litrerary genre) தமிழுக்கு அறிமுகப்படுத்தும்.
பாகிஸ்தான் சென்ற பிறகு 7 ஆண்டுகள் கழித்து மண்ட்டோவால் எழுதப்பட்டவை இவை. பாகிஸ்தானில் எந்தவித அடையாளமுமின்றி முற்றிலும் அந்நியமாக்கப்பட்ட நிலையில் மனித ஆளுமையை அல்லது கதைசொல்லியின் இருப்பை நிராகரித்து எழுதப்பட்டதால் இது பல்வேறு மொழிச் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளனின் குரல், வானொலி அறிக்கை, தெருமுனை உரையாடல், சின்னச் சின்ன கதையாடல்கள், வெறும் குரல்கள் எனப் பல வித எழுத்தமைப்புகளைக் கொண்ட மண்ட்டோவின் அசாத்திய இலக்கிய ஆளுமையைக் காண முடிகிறது. இது புரியாமல் மண்ட்டோ பிறரின் வேதனையில் இன்பம் காண்பவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அன்று என்பது வேதனைமிக்க வேறு கதை.
கலாச்சாரம் மற்றும் அரசியல் சார்ந்த பிம்பங்களைக் குறியீடுகளாக்கி, தனது மத தேசிய அடையாளங்களை நிராகரித்து மனித உயிர்ப்பின் வலிகளை எழுத்தாக்கி மனம் என்கிற விசித்திரக் கட்டமைப்பின் உள்ளார்ந்த அலகுகளைக் கிழித்து வெளியே போட்டு எல்லாவித புனிதங்களையும் கேள்விக்கு உட்படுத்தி ‘ப்பூ’ என்று காறித்துப்பும் மண்ட்டோ - விளிம்பு நிலை மனிதர்கள் என்று சமூகம் ‘அறுவறுத்து’ ஒதுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ள விலைமாதுகள், காமத்தரகர்கள், பொறுக்கிகளை நாயகர்களாக்கிப் போலி நாகரிகக் கற்பிதங்களைக் கொண்ட மத்திய தர வர்க்கத்தை உளவியல் ஆய்விற்கு உட்படுத்தி நம்மைக் குற்ற உணர்வு கொள்ளும்படி செய்கிறார். தன்னைப் பற்றியும் தனது எழுத்தாள ‘பிரம்மா’ பிம்பங்களைப் பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல் நேர்மையாகத் தனது எழுத்தை முன்வைக்கிறார். முதல் கவிதை நூல் பிரசுரமானவுடன் தனக்கென்று கோஷ்டிகளை உருவாக்கி தன்னையே சொறிந்து சொறிந்து அதன் புண்களைப் பளபளக்கும் வைரங்கள் என விற்றுத் திரியும் தமிழ் எழுத்தாளக் கூட்டத்திற்கு இது முற்றிலும் புதிய ஒன்று. மண்டோவின் படைப்புலகிற்குள் பிரவேசிப்பதன் மூலம் முதலில் எழுத்தின் நேர்மையையும் பாசாங்கற்ற எழுத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ராமானுஜத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் ‘மண்டோ படைப்புகள்’ என்கிற தொகுப்பில் உள்ள 21 கதைகளும் விரிவான ஆய்விற்கு உரியவை. சொல்லுதலில் ஏற்படும் இடைவெளிகளில் பல அர்த்த சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ள இக்கதைகள் சமூகத்தின் அடிப்படை முரணியக்கமான இயற்கை X கலாச்சாரம் மனித உடலையும் மனதையும் எப்படி உருவமைத்து இயக்குகிறது என்பதைச் சொல்லிச் செல்கிறது. கதைகளில் இடைவெளிகள், மௌனங்கள், தொடர்ச்சியின்மை திட்டமிட்டு வாசிப்பாளனைப் பங்கேற்கச் செய்யுமாறு உருவாக்கப்படுகிறது. இது நிகழ்வுகளின் நிஜத்தன்மைக்கும் புனைவிற்குமான எல்லையைச் சிதைத்து விடுகிறது. இந்த இடைவெளிகளால் திகைப்படையும் வாசகன் தனக்கான பிரதியை உற்பத்தி செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். மையநோக்கு யதார்த்தவாத புனைவுகளைப் போல ஒற்றை மையங்களின் வழியாக வாசகன் குடியேற நிலப்பரப்புகளையோ அல்லது குடிமகனுக்கான அடையாள அட்டைகளையோ வழங்கும் கலாச்சார போலிஸ்தனத்திற்கு மாறாக, வாசிப்பாளனின் அடையாளத்தை மறுத்து புனைவிலிருந்து அவனை விலக்கித் தள்ளும் மைய விலக்குப் புனைவாக இருக்கிறது. இக்கதைகள் இயங்கும் களம் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். 1. தின வாழ்விற்கான அடையாளங்களைத் தரும் குடும்பம், மருத்துவமனை, சிறைச்சாலை போன்ற நிறுவனங்கள் (காலித், மூன்றரையணா, ஜுபைதா, கழுவேற்றப்படுதல், ஹமீதின் குழந்தை) 2. மத அடையாளங்கள் இயங்கும் வகுப்புக் கலவரம் (திற, குருமூத்சிங்கின் கடைசி விருப்பம், கடவுள் மீது சத்தியமாக, ஷரிபான் மோஸல், சில்லிட்டுப்போன சதைபிண்டம், சஹாய், ஒருநாள்) 3. தேசிய அடையாளம் இயங்கும் சுதந்திரப் போராட்டம் (இது 1919இல் நடந்தது, சுதந்திரத்திற்காக) 4. கருத்தியல் அடையாளங்களற்ற விலைமாதுகளின் இல்லங்கள் (அவமானம், கருப்பு சல்வார், குஷியா, நூறு விளக்குகளின் வெளிச்சம்) 5. சுய அடையாளங்களைக் கொண்ட தனி அறைகள் மற்றும் விடுதிகள் (ஜானகி, மம்மி).
முதல் மூன்று களங்களும் அடையாளங்களை ஒரு மனித உடலின் மேல் இருத்துவதன் மூலம் அவ்வுடலின் வன்முறையையும் அவ்வுடல்மீதான வன்முறையையும் இயக்குவதற்கான அதிகார நுண் அமைப்புகளாகச் செயல்படுபவை, இவைதான் அரசு என்கிற நிறுவனத்திற்கான இணக்கத் தன்னிலைகளை உருவாக்கும் களங்கள் ஆகும். இந்நிறுவனங்கள் வழியாகத்தான் ஒவ்வொரு தனி மனித உடல்களும் சக அமைப்பிற்குள் கரைக்கப்படுகின்றன. ஒரு தனித்த உடலானது அதிகாரத்தின்முன் ஏதுமற்றதாக அதன் அடையாள எல்லைக்குள் தன்னை இருத்திக்கொள்வதே இதமாக, இருப்பாக உணர்கிறது. அரசானது இந்தக் கலாச்சார நிறுவனங்களைக் கட்டுவித்துக் காப்பதன் மூலமே தனது இயக்கத்திற்கான இறையாண்மையைப் பெறுகிறது.
எந்தவொரு உடலும் ஒற்றை அடையாளத்தில் இயங்குவதில்லை. அது, தான் இயங்கும் ஒவ்வொரு களத்திலும் ஒரு அடையாளத்தைப் பெற்று இயங்குகிறது அல்லது ஒவ்வொரு களத்திலும் தனது அடையாளத்தை நங்கூரமிட்டு நிலைநிறுத்த முயல்கிறது. ஆக, ஒவ்வொரு உடலும் தனக்குள் பன்முக அடையாள சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளது. சமூகக் களத்தில் இயங்கும் இப்பன்முக அடையாளங்கள் அரசின் அதிகார அமைப்புகளாலும் பல்வேறு கலாச்சார நிறுவனங்களாலும் கண்காணித்து ஒழுங்கமைக்கப்படுகின்றன. சமூகக் களத்தில் மிதக்கும் பன்முக அடையாளங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கும் உடலானது ஒரு குறிப்பிட்ட அடையாளம் மதமாகவோ தேசியமாகவோ நங்கூரம் பாய்ச்சி நிற்கும்போது அதனை முழுக்கப் பற்றிக்கொண்டு அதன் கருத்தியலில் திசைவழிப்படுத்தப்படுகிறது. இக்கருத்தியலானது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தனக்கான எதிர் அடையாளக் கூறைக் கட்டமைக்கிறது. அதாவது கருத்தியல் தளத்தில் பிறர் என்பதாக ஒரு எதிரி உருவாக்கப்படுகிறது. தாம் X பிறர் (same X other) என்கிற அடையாளத்தைக் குறியிடுவதன் மூலம் ஒவ்வொரு உடலும் பிறர் பற்றிய அச்சத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இந்த இருத்தலின் பயம் உடல்களை அதீத வன்முறையின் எல்லைக்குக் கொண்டுசெல்கின்றது. ஒவ்வொரு உடலின் இருப்பும் அச்சமூட்டப்பட்ட நிலையில் உடல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறுகின்றன. அவ்வுடல்களின் இயல்நிலை மறக்கடிக்கப்பட்டு மத-தேசிய அடையாளத்தின் கருத்தியல் நிலையில் செயல்படுவதால் ஒரு ‘பைத்திய நிலை’க்கும் அதனால் உருவாகும் அதீதமான மூர்க்க நிலைக்கும் ஆளாக்கப்படுகிறது. கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் வன்முறையின் செயல்பாடு இந்த அடையாள அரசியலை அடிப்படையாகக் கொண்டது தான்.
வகுப்புக் கலவரங்களின் போது நடந்த வன்முறை அரசியல், நிறுவனம், மனிதநேயம் போன்றவற்றையெல்லாம் தாண்டி மனித உடலின் உட்செறிக்கப்பட்டுள்ள வன்முறை பற்றிய தேடலாக மாறுகிறது. இந்த வன்முறை இயல்பூக்கம் சார்ந்ததா? அல்லது கலாச்சார ரீதியாகக் கட்டமைக்கப் பட்டதா? கலாச்சாரக் காரணிகளான மதம் மற்றும் தேசிய அடையாளங்களின் அடிப்படையில் நடைபெறும் இவ்வன்முறை வரலாற்றுரீதியாகக் கட்டமைக்கப் பட்டதை உணர்ந்த மண்ட்டோ தனது மத தேசிய அடையாளத்தைத் துறந்த ஒரு நாடோடி உணர்விற்காக ஏக்கங்களுடன் சுதந்திரமான வெளிகளைத் தேடி அலைவதையே அவரது ‘மம்மி’, ‘ஜானகி’ போன்ற கதைகள் உணர்த்துகின்றன. அதனால் தான் அவரது கதைகள் கலாச்சாரமாக சொல்லப்பட்டவற்றின் வன்முறையை உணர்ந்து அதனை எதிர்ப்பதற்கான இருள்பகுதிகளை நாடிச் செல்வதாக அமைகின்றன. கலாச்சார உலகால் ஒடுக்கப்பட்டு மௌனிக்கப் பட்டுள்ள இயல் உலகாக விளிம்பு நிலையாளர்களால் ஆன ஒரு உலகு வெளிப்படுத்தப்படுகிறது. இந்த உலகில் உடல்கள் சிதைவதில்லை, வன்முறை இல்லை மாறாகக் கொண்டாடப்படுகின்றன. உறவும் நேசமும் உதவிகளும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்னும்சொல்லப் போனால் எந்தவிதப் பொதுநோக்குமின்றிப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மம்மி, ஜானகி, கருப்பு சல்வார், மோஸல், சஹாய் போன்ற கதைகளில் வரும் பெண்கள் மனித உறவுகள் பற்றிய புதிய நோக்கைக் காட்டிச் செல்வதாக இருக்கிறார்கள். கற்பைக் காலில் போட்டு மிதித்த இவர்கள்தான் தனது சக மனிதனுக்காக தன்னுடைய எல்லைவரை சென்று உதவத் தயாராக இருக்கிறார்கள். இவர்களில் யாருமே ஒரு குடும்ப வாழ்க்கை பற்றிய கனவுகளோ, கற்பனைகளோ ஏன் ஏங்கவோகூடச் செய்வதில்லை. இவர்கள் யாருக்குமே அடையாளம் என்கிற ஒன்று இருப்பதான எண்ணமோ கூட இல்லை. அடையாளம் கருத்தியலுடனும், வரலாற்றுடனும் உறவுடையது. இவர்களுக்கு கருத்தியலோ, தத்துவ பின்புலமோ, வரலாறோ கிடையாது. இவ்வுலகு பற்றிய ‘தவறாக பிரக்ஞை’ இவர்களுக்கு இல்லை. அடையாளமற்ற இவர்கள்தான் சமூகத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஒழுங்கான நம்மைப் போன்ற மனிதர்களுக்கான அடையாளத்தைத் தருபவர்கள். இவர்கள்தான் எண்ணற்ற பெண்களின் கற்பை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் அளவுகோல்கள்.
- (தொடரும்)
அடிக்குறிப்பு – 1. இந்தியா - மௌரிய, குப்த, முகாய மற்றும் பிரித்தானிய அரசுகளின் கீழ் பல நில எல்லைகளைக் கொண்டதாக இருந்து வந்திருப்பதே வரலாறு. இந்தியா என்கிற “தேசம்“ உருவானது 1947-ஆகஸ்டு 15-ல்தான். இதனை பிரிவினை என்று சொல்வது இந்தி-இந்திய-இந்து பெருமித உணர்வைக் கட்டமைத்து வகுப்புவாதத்தை காப்பாற்றி வருவதற்கே.
- ஜமாலன் (14-12-2005)




4 comments:
மிக சிறப்பான கட்டுரை சார். என்னிடம் இந்த புத்தகம் உள்ளது. அவரது எழுத்து கலக எழுத்து. தமிழில் கலகக்கார்கள் 'கழகக்காரர்களை ' மோசமாய் இருக்கிறார்கள். மண்டோவின் பல கதைகள் என்னை தூக்கம் இழக்க செய்திருக்கின்றன.பதிவுக்கு நன்றி..முகநூலில் இதை பரிந்துரை செய்திருக்கிறேன்..
நன்றி சந்தனார். அவசியம் படியுங்கள். இது கொஞ்சம் பெரிய கட்டுரை என்பதால்.. பகுதி பகுதியாகவே வெளிவரும். முழுவதும் படியுங்கள்.
முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி.
முதலில் இந்தியா என்பது ஒரு தேசம் கிடையாது.அது ஒரு நாடு. அதேபோல வங்காள தேசத்தை மறுத்த பாகிஸ்தான் , பங்களாதேஷ் என்னும் நாட்டை உருவாக்கியது.
வானேறி என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை தெளிவாக சொன்னால் நலம். கருத்திற்கு நன்றி.
கருத்துரையிடுக