காலக்குறி மார்ச் 1998 இதழில் வெளிவந்த இக்கட்டுரை. பிறகு மொழியும் நிலமும் தொகுப்பில் வெளிவந்தது. காலக்குறி பதிவிலிருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. புதுமைப்பித்தனின் நாரதராமாயணம் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் உயிர்மை மார்ச்-2010 இதழில் எழுதி உள்ளார்.
”காலம் என்ற அரங்கில் சரித்திரம் மீண்டும் ஒருமுறை பழையபடி நடித்தது.” - புதுமைப்பித்தன் (பிரம்மராக்ஷஸ்)
1
“பாரத நாடு“ பற்றிய கதை இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. (எழுபதுகளில் நான் படித்த ஆரம்ப வகுப்பு பாடப்புத்தகத்தில் நமது நாடு என்கிற முதல் பாடமும் இந்தியாவைப் பற்றி இப்படித்தான் சொல்கிறது) - “இந்திய தீபகற்பம் முன்னொரு காலத்தில் பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டதால் பாரத நாடு என்று அழைக்கப்படுகிறது.“ இவ்வாசகம் வரலாற்று ரீதியானதல்ல. வேத, புராண, இதிகாசக் கதையாடலைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு generative statement (பெருக்கச் சொற்பாடு என கூறலாமா?) ஆகும். இச்சொற்பாடு இந்திய வரலாறு மற்றும் அரசியல் போக்கின் தீர்மானகரமான பங்கை செலுத்திவரும் ஒன்று. இச்சொற்பாட்டிற்குள் கட்டமைந்திருக்கும் இரண்டு முக்கிய காரணிகளை புரிந்துகொள்வது அவசியம்.
1. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் என்கிற நில எல்லையை வரைவதன் மூலம், இந்திய தேசம் என்கிற பெருநிலப்பரப்பு ஒன்று நமது நினைவுள் தளத்தில் உருவாக்கப்படுகிறது.
2. இதனை பரதன் என்கிற இந்துப் பெருமித தொன்மங்களால் உருவாக்கப்பட்ட மன்னன் ஒருவரின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டதாக கூறுவதன் மூலம் இந்துப் பெருமத ஆட்சியின் பொற்காலம் பற்றிய கனவுகள் நமது நினைவுகளுக்குள் திணிக்கப்படுகின்றன.
இந்த பரதன் என்கிற சொல்லாடலின் பெருந்தேச, பெருமத மற்றும் பெருங்கலாச்சார வரலாற்று பெருமிதம் பற்றிய அரசியலே, குறிப்பாக இன்றைய இந்திய அல்லது இந்துத்துவா அரசியலின் உந்து சக்தியாக ஆக்கப்பட்டுள்ளது.
பரதன் பரவலாக அறிமுகமானது இராமாயணம் என்கிற பெருங்கதையாடலின் மூலமே. ஆனால், பல்வேறு புராண, இதிகாசங்களில் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் ஒரு பெயர் பரதன். ஆக, பரதன் வரலாற்று ரீதியானவன் என்பதைவிட தொன்மங்களால் (மித்) உருவமைக்கப்பட்டவன் என்பதுவே, இந்த ”பாரத நாடு” என்கிற பெருங்கதையாடல் கட்டமைத்துள்ள ஒரு தேசத்தின் அச்சாணியாக இருக்கிறது.
ஒரு தேசம் என்பது கதைகளின் மூலமே கட்டமைக்கப்படுகிறது. எந்த ஒரு மக்கள் கூட்டமும் கதைகள் இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை. “உலகிற்கு பகுததறிவைத் தந்த கிரேக்கத்தை போல கதைகளை அதிகம் கொண்ட ஒரு நாடு இருக்க முடியாது“(1). ஆக, இந்திய தேசத்தை கட்டமைத்ததில் இந்த பரதனின் கதைக்கு பெரும் பங்கு உண்டு. இந்தியப் பெருநிலமான “பாரதநாடு“-என்கிற கற்பிதத்தை வரலாற்றுக்கு முந்தையக் காலத்திலிருந்தே ஆண்டுவரும் இந்த பரதனை, தனது “நாரத ராமாயணம்“ என்கிற “புனைகதை அவதாரத்தின்“ மூலம் “சிக்“-கெனப் பிடித்துக்கொண்டவர். 42-வது வயதில் தமிழ் இலக்கிய உலகம் தந்த காசநோயால் தனது சாவை ஒரு “மணி-ஆர்டரை“ப்போல் எதிர்பார்த்து இறந்தபோன புதுமைப்பித்தன்.
(தொடரும்)
அடிக்குறிப்புகள்
1. இக்கட்டுரையில் “நாரத ராமாயணம்“ பற்றி குறிப்பிடப்படும் பக்க எண்கள் – ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “புதமைப்பித்தன் படைப்புகள்” மூன்றாம் தொகுதி (மொழிபெயர்ப்பு தழுவல்கள் – 1992) என்பதிலிருந்து எடுத்தாளப்படுகிறது.
- ஜமாலன். காலக்குறி மார்ச் 1998.




1 comments:
பரதனைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.மகாபாரதக் கதையில் வரும் பரதமுனி பற்றி ஒன்றுமே தெரியாதா?
இன்னும் சொல்லலாம்...வேண்டாம் தெரியதவர்களிடம் ........
கருத்துரையிடுக