இந்திய அரசிற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தொடர்கிறது - அறிவிப்பு

Cover Storyமுத்துக்குமாரின் தீக்குளிப்பிற்கு பின்பு தமிழகம் ஒரு விழிப்பு நிலை கொள்ளத் துவங்கியிருக்கிறது. இதற்கிடையில் பல தகவல் புரளிகள் பரப்பப்பட்டு வருவதும், சர்வதேச அளவில் பத்திரிக்கைகளின் குரல்வளையை நெறிக்கும் சிங்கள அரசை எதிர்த்தும். போர் நிறுத்தங்கோரியும் பல ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் வழக்கமாக நடைபெறும் தமிழின் தனிச்சிறப்பான (ஆரிய- திராவிட மற்றும் பார்ப்னிய-அ.பார்ப்பனிய) அரசியல் சண்டைகள்  இதில் இனம் காணப்படுவது வருந்ததக்கதாக உள்ளது.

தமிழகத்திலிருந்து நேற்று காலை தோழர் லீனாமணிமேகலை ஒரு போராட்டம் பற்றிய அறிவிப்பை குறுஞ்செய்தியாக எனக்கு அனுப்பியிருந்தார். அதனை அறிவிக்கவே இப்பதிவு.

“இனப்படுக்கொலைக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து மாணவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், திருநங்கைகள் (அரவானிகள்) பங்கேற்கும் மாபெரும் தொடர் உண்ணாநிலைப் போராட்டம தில்லி பராளுமன்றத்திற்கு முன்பாக பிப்ரவரி 12ல் தொடங்க இருக்கிறது. அதற்கான ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி –1 சென்னை எக்மோர் மீசியம் அருகில் உள்ள IKSHA Center –ல் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.   அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் இக்கூட்டத்தில் ஈழ இனப்படுகொலைக்கு எதிரான அனைவரும் பங்கு கொள்ளவருமாறு அழைக்கிறோம்.”

நன்றி. தொடர்பிற்கு தோழர் லீனாமணிமேகலை - 09841043438

ஈழம் தொடர்பான மற்ற சுட்டிகள்.

1. வன்னியிருந்து ஒரு செய்தி தமிழில். இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில்

2. வன்னியிருந்து ஒரு செய்தி ஆங்கிலத்தில். Between Two Armies

3. மறைந்த முததுக்குமாரின் மரண சாசனம்.  விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை- முத்துக்குமார்.

4. பிரபாகரனுக்கு எழதப்பட்ட சூன்யத்தின் விமர்சனத்திற்குரிய திறந்த கடிதம்-   இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

5. கருத்தப்படம் - ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் !

6. முத்துக்குமார் மரணம் பற்றிய மாலனின் பார்வை – முத்துக்குமார்

7. முத்துக்குமார் மரணம் பற்றி வினவு - ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

8. தற்போதைய ஈழச்சூழல் பற்றிய எனது பதிவு - தமிழா இன உணர்வுகொ(ல்)ள் – தமிழீழமும் தமிழர்களும்.

9. சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம்

10. ஈழம் - சாதலும் புதுவது அன்றே – நண்பர் நாகார்ஜீனனின் பதிவான இது ஈழம் குறித்து வந்த மிக முக்கிய பதிவகளில் ஒன்று. இதில் தொடரும் உரையாடல் பெரும் ஊடகங்களில் நிகழ்த்ப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டியவை. (தாமதமாக பார்க்க நேர்ந்ததால் இன்று இதனை இணைக்கிறேன்.)

இச்சுட்டிகள் மாறுபட்ட பல பார்வைகளைத் தரக்கூடியவை. சிங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை இந்தியக் கழுகுகள் மேலிருந்து கூர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அவலச்சூழலில், தமிழ் மக்களைக் காப்பாற்ற பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் நிறைந்த ஒன்று. கருத்த மோதல்களையும் பழைய வஞ்சங்களயும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெறுப்பின் அரசியலை விதைக்காமல் விருப்பின் அரசியலை உருவாக்க நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு. ஒன்றுபடுவோம், நமது வலிமையை திரட்டிக்காட்டுவோம். நமக்குள் உள்ள வேறுபாடுகளையும், வெறுப்பையும் களைவோம்.

இந்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நடைபெறும் இவ்வுண்ணாவிரதத்திற்கு நம்மால் முடிந்து ஆதரவை தரும்படி தமிழக மக்களையும், மாணவர்கள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்

- ஜமாலன். 31-01-2009

தமிழா இன உணர்வுகொ(ல்)ள் – தமிழீழமும் தமிழர்களும்.

tamil-elam-2 தமிழீழப்போராட்டம் ஒரு வெகுமக்களின் அரசியல் நிகழ்வாக மாறவேண்டியதொரு முக்கியத் தருணத்தில்,  வெந்ததை தின்று விதிவந்தால் சாவோம் என்கிற வேடிக்கை  பார்க்கும் ஒரு கூட்டமாக பெருவாரியான தமிழர்கள் மாறியுள்ளனர். கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான போரில் எண்ணற்ற தமிழர்கள் கொல்லப்பட்டும், துரத்தப்பட்டும் ஒரு அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, தமிழகத்தில் எந்தவிதமான கொந்தளிப்பையும் அது ஏற்படுத்தவில்லை என்பது நமது அரசியல் உணர்வை நினைத்து வெட்கித் தலைகுனியச் செய்கிறது.  தமிழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களிலும், வேறுபல போராட்டங்களிலும் ஈடப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்களிடம் காணப்படும் மெத்தனம் கவலைக்கிடமானது.  அங்கங்கு தன்னெழுச்சியாக நடத்தப்படும் எதிர்ப்பு போராட்டங்கள், தமிழகமெங்கும் ஒருங்கிணைத்து வலுவானதாக நடத்தப்படவில்லை. மாணவர்களுடன் செர்ந்து தெருவில் இறங்கிப் போராடி மத்திய-மாநில அரசுகளுக்கு அறவழியிலான நெருக்கடிகளைத் தரவேண்டிய இந்த முக்கியத் தருணத்தில் மக்களின் இந்த மௌனநிலை பெரும் கேள்விக்குறியாக உள்ளது. புலியை முறத்தால் அடித்து துரத்தியதாக புறநானூற்றுப் பெருமை பேசும் நாம் ஏன் இன்று இந்த நிலைக்கு ஆளானோம் என்கிற கேள்வி நமது  தமிழ் சமூகவரலாற்றை சமூகஉளவியல் மற்றும் அரசியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. 

மணிரத்தினத்தின் “இருவரி“-ல் வரும் தமிழ்ச்செல்வன் பேசும் கவிதை வரிகள் போல “நமது புறநானூற்று வீரம் எங்கே? போர்பரணி எங்கே?“  தமிழ்திரையின் பாத்திரங்களாக மாறிப்போன நமது அரசியல் வரலாற்றுத் தலைவர்கள் உருவாக்கி உள்ள ஒரு மீ-யதார்த்த  (ஹைபர்-ரியல்) உலகில் தமிழனின் அகம் புறம் எல்லாம் அதீத உணர்விற்கு ஆட்பட்டு உண்மைகளின் நகல்களின் நகல்களின்….. நகல்களை அடைந்து, அது ஏற்படுத்தும் அதீ-யதார்த்த உணர்விலும்/உலகிலும் சஞ்சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம். போர் என்பது தொலைக்காட்சியின் மின்திரைப்பரப்பில்  வந்துபொகும் ஹாலிவுட் படக்காட்சிகளைப் போல எந்த உறைப்பும், உணர்வும் இல்லாமல் ஒரு “காட்சிகானும் எந்திரமாக“ மாறிவிட்டோம்.

நண்பர் முபாரக் மின்-அஞ்சலில் அனுப்பிய  பேசப்படா உண்மைகள் ஈழத்துயரம், மனித mullaikferrd9[1] அவலம் பற்றிய பெருந்துயரை நமக்குள் உறையச்  செய்கிறது.  வாழ்வதற்கு இடமற்றதாக துரத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் இன்று சாவதற்கும் தனது சொந்த மண்ணற்றவர்களாக  சிதறடிக்கப்படுகிறார்கள். மரணம் என்பது எண்ணிக்கையாக மாறிவிட்ட இந்த அவலத்தில் மனிதம் என்பது வெறும் காட்சிகளின் நகல்களாக  மாறிவிட்டது. தொலைக்காட்சியின் நெடுந்தொடர், விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு மத்தியில் கட்டமைக்கப்படும் செய்திகள் என்கிற  “உண்மைகளில்“ வரும் காட்சிகள்கூட தமிழக மக்களை உறையவோ அல்லது உலுப்பவோ இல்லை என்பது கடந்த 25 ஆண்டுகாலமாக ஈழத்தை  வைத்து செய்யப்பட்ட தமிழக அரசியலின் ஒரு உச்ச விளைவு எனலாம். இந்த உணர்வு புலிகளையும் அவர்களது செயல்பாடுகளையும்  முன்வைத்து சிறுக சிறுக கட்டமைக்கப்பட்டது. இன்று ஈழத்தமிழினம் என்கிற ஒன்றே இல்லை அவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான் என்று  திராவிடர்கள் பெயரில் கட்சி நடத்தும் அம்மையார் ஜெயலலிதா பி.பி.சி. என்கிற உலகச் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும் ஒரு  வெளிப்படையான நிலையை அடைந்துள்ளது. தமிழகமக்களிடம் இதற்கு ஒரு முனுமுனுக்கும் எதிர்ப்புக்கூட இல்லை என்பது அதைவிட  வருந்ததக்கது.

பொதுவாக இனஅடையாளம் என்பது ஒரு கற்பிதம். அதற்குள் இனம் சார்ந்ததான எந்தவொரு சாராம்ச உணர்வும் இருப்பதில்லை  என்பதையெ இந்த எழச்சியற்ற தன்மை நமக்கு உணர்த்துகிறது என்றபோதிலும், இந்த கற்பித அடையாளத்தைக் கொண்டுதான் சிங்கள இனம்  என்கிற பேரினவாதம் தன்னை அடையாளப்படுத்தி தமிழர்களை அழித்தொழிக்கிறது.  எதிரி ஒரு அடையாள நெருக்கடியை நோக்கி உந்தி தள்ளும்  ஒரு நிலையில் தவிர்க்கமுடியாமல் ஒரு தன்னடையாளத்தைப் பெற்று தன்னை ஒரு இனமாக உணரும் நிலை தமிழர்களுக்கு ஏற்படுகிறது. ஒருவன் தன்னை “தமிழனாக“ ஒரு தேசிய இனத்தவனாக உணர்வது என்பது இன்றைய அரசியல்-சமூக-பொருளியல்-உளவியல் வலைப்பின்னலில் தவிர்க்க முடியாததாக உள்ளது. பிரச்சனை இந்த வலைப்பின்னல் உள்ளாக மடிக்கப்பட்டு இன்று மேலே வேறோரு அரசியல் வலைப்பின்னல் உருவமைக்கப்பட்டு அதில் இயங்கும் அல்லது அந்த வலைப்பின்னலுக்கு ஏற்ப ஆடும் பாத்திரங்களாக தமிழக மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த வலைப்பின்னலை கடந்த 25 ஆண்டுகளாக  தமிழ் இன் உணர்வினால் அச்சமூட்டப்பட்ட சக்திகள் தமிழீழத்திற்கு எதிரான தங்களது “வஞ்சம்“ தீர்க்கும் நிலைப்பாட்டால் பின்னலாக்கி உள்ளன என்பது மிகையாகாது. இந்திய தேசியத்தில் தமிழ் தேசியம் கரைக்கப்பட வேண்டும் என்கிற கருத்துடன் இந்த வலைப்பின்னல் பின்னலாக்கப்பட்டு வருகிறது. ஈழமுரண்பாடு என்பது ஒரு தேசியஇன முரண்பாடு. அதனால் தமிழர்களின் பிரிந்து போவதற்கான சுயநிர்ணய உரிமையை முன்வைப்பது உலக  மக்களினது ஜனநாயகக் கடமை. இந்த குறைந்தபட்ச ஜனநாயக உணர்வுகூட அற்ற ஒரு அரசியல் சூழல் இன்று நிலவுகிறது. 

1983-ல் நடந்த ஜீலைக் கலவரங்களுக்கு பின்பு தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல்kprababunker4[1] நிகழ்வாக எழுச்சியாக தமிழீழக் கொரிக்கை மாறியது.  சரியாக 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த துவக்கப் புள்ளிக்கே வந்து சேர்ந்துள்ளோம். முன்பு இருந்த அதே பித்துநிலையுடன் ஆனால்  முன்பிருந்த நம்பிக்கையோ, வெளிச்சமோ அற்று, குறைந்தபட்சம் தமிழ் என்கிற இனஉணர்வற்று. 25 ஆண்டுகளாக நடந்துவரும் ஒரு இன  மக்களின் அவலக்கதையிது. அன்று இருந்த ஒரு அரசியல் தன்னெழுச்சி எங்கு போனது? ஏன் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு  இனமும், அதன் பெயரைச் சொல்லி ஆள்பவர்களும் உள்ள ஒரு நாட்டில், குறைந்தபட்சம் தன்னினம் என்கிற உணர்வு இல்லாவிட்டாலும், கண்முன் ஒரு  இனத்தை அழித்து சுத்தீகரிக்கும் ஒரு அநீதி போருக்கு எதிரான உணர்வு என்ன ஆனது? உலகிலேயே தனது சொந்த நாட்டின் மீது போர் தொடுக்கும், விமானக் குண்டுகள் வீசும் ஒரு இனவெறிப்பிடித்த அரசு ராஜபக்ஷேவின் சிங்கள பேரினவாத அரசாகத்தான் இருக்கும்.  சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் இதனை நமது மனதில் பேரதிர்ச்சியாக உறையச் செய்கிறது. இத்தலையங்கத்தில் தனது நண்பரான சிங்கள இனவாத ராஜபக்ஷேபற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார் சிங்கள ஜனநாயகவாதியான லசந்தா, தான் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள்.  ராஜபக்ஷே என்கிற இனப்பாசிச நவீன  ஹிட்லருக்கு காவடித் தூக்கும் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்றவை தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த ஒரு இனத்தை பலியிடும் பெரும் சடங்கில் மணியாட்டிக்கொண்டு உள்ளன. தமிழக கட்சிகள் இனத்தை உண்டு அதிகார மலத்தை சுவைப்பதைத்தவிர  வேறு ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தைகளாக கள்ள மௌனம் சாதிக்கின்றன.  இந்திய தேசியவாதிகள் தமிழின அழிவைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டுள்ளனர்.  ஒரு உயிருக்காக ஒரு இனத்தை பலியிடும் ஒரு போர்சடங்காக இதனை மாற்றிக் கொண்டுள்ளது இந்திய அரசும் அதன் தேசியவாதிகளும். இப்போர்ச்சடங்கில் குலவையிடும் வெறிகொண்ட கூட்டமாக நாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

உலகின் ஒரே தமிழினத்தலைவர் யார்? என்கிற தன்முனைப்பின்  தீவிரத்திற்கு தமிழின மக்களை கொன்றொழிப்பதைக் கண்டு மத்திய அரசு அதை செய்யும் இதை செய்யும் என்று வானம் பார்த்த பூமிபோல வராது  வந்து மாமழை பொழியாத என உளியடித்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபக்கம் என்றால், தனது அறைக்குள் முனுகிக்கொண்டிருந்த மற்றொருவரோ இன்று  அறிக்கை விடுகிறார். இலங்கையில் நடப்பது அவர்களது உள்நாட்டுப் பிரச்சனையாம். அதில் இந்தியா தலையிடக்கூடாதாம். இந்தியா  அமைதிப்படை அனுப்பியபோது இவர் எங்கே போயிருந்தார்? நடக்கும் நாடகங்களில் கொல்லப்படுவது தமிழினம் அல்ல தமிழா இன உணர்வுகொள் என்கிற வாசகத்தின் இறுதி எழுத்தும்தான்.

ராஜிவ்கொலை என்பதை முன்வைத்து ஒரு இன அழிப்பிற்கு தூபம்போடும் கட்சிகள், ராஜிவைக் கொல்லவேண்டிய தேவை ஏன்? அதில்  உண்மையில் நலம் அடைந்தவர்கள் யார்? அதை செய்யத் தூண்டிய சக்திகள் எவை? அச்செயலால் பலன் அடைந்தவர்கள் யார்? என்பதை  வெளிப்படையாக அறிவிக்கவுமில்லை. அந்த ஒரு காரணத்தை முன்வைத்து ஒரு இனத்தை அழிப்பதற்கு அனுமதி தருவதுபோல நடந்தகொள்ளும்  இந்திய அரசின் நிலை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழினம் குறிப்பாக இந்திய தமிழர்கள் ஏற்படுத்தி உள்ள அரசியல் கசப்புணர்ச்சியின்  விளைவாக, இன்று இந்தியாவின் எந்த மாநிலமும் குரல்கொடுக்கத் தயாரில்லை என்பது மற்றொரு பேரவலம்.  இந்திய அரசின் வெளியுறவுக்  கொள்கைகளை தீர்மாணிப்பவர்களின் சொந்த வெறுப்புணர்ச்சியின் விளைவாக, சிங்கள பேரினவாத அரசு இன்னும் ஊக்கமும் உற்சாகமும் பெற்று  ஈழத்தமிழர்களை புவியில்ரீதியாக நெருக்கி முல்லைத் தீவு என்கிற சிறு நிலப்பரப்பிற்குள் அடைத்துவிட்டது. உணவு, மருந்து மற்றும் வாழிடம்  என்கிற எந்த அடிப்படை வசதியுமற்ற நிலையில் நெருக்கடியான நிலையில் மக்கள் வசிக்கும் ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றி உள்ளது  முல்லைத்தீவை. இந்நிலையில் உலக அரசுகள் காட்டும் மெத்தனம் நிலமையை இன்னும் மோசமான நிலைக்கு எடுத்துச்சென்றுகொண்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேனன் ராஜபக்ஷே சந்திப்புக்குப் பின்னர் “இந்திய, இலங்கை உறவு வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு பாரம்பரியமானது. ஆழமானது. காலத்தையும் கடந்து இது நிலை பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான தீவிரவாதத்திற்கு எதிரான போரில், இலங்கை, இந்தியாவுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது என்றார் மேனன். ரோகித போகல்லகாமா கூறுகையில், நிலைமையைப் புரிந்து கொண்டு இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது பாராட்டுக்குரியது. இலங்கை இனப் பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு காண வேண்டும். இந்திய, இலங்கை ஒப்பந்தம்தான் தீர்வுக்கான சாத்தியமாகும்.“ இந்திய அரசின் தமிழினம்  மற்றும் இலங்கை குறித்த வல்லாண்மை செய்யும் அல்லது தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு “தாதாவாக“ மாற்றிக்கொள்ளும் நிலையை  வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு பேச்சே இது. உண்மையில் தற்போதையபோர், இந்தியாவின் ஆசியுடன் நடத்தப்படும் அல்லது இந்தியாவே நடத்தும் ஒரு மறைமுகப்போர் (proxy war) எனலாம். அதற்கான அறிவிப்பே இது.

தமிழகமக்களை அரசியல் படுத்தி பரவலான எதிர்ப்பை நாடு தளுவிய அளவில் இந்தியா முழுமைக்குமானதாக கொண்டு செல்வதற்கான ஒரு மக்கள் கட்சி என்பதோ ஒரு மக்கள்  முன்னணி என்பதோ இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் பெரிய இரண்டு கட்சிகள் கள்ள மௌனமும் நல்ல மௌனமும் சாதிக்கின்றன.  எதிர்கட்சித்தலைவரான ஜெயலலிதா நேரடியாக எதிர்நிலையை எடுத்துள்ளார். ஆளுங்கட்சியான கருணாநிதியோ இந்திய அரசிடம்  மனுப்போட்டுக்கொண்டுள்ளார். தமிழக மக்களிடம் 25 ஆண்டுகாலமாக ஏற்படுத்தப்பட்ட புலிகள் மீதான பல அபிப்ராயங்கள், தமிழ் ஈழம்  என்றாலே புலிகள் என்பதான ஒரு சங்கேதமாக மாறிவிட்டது. ஒருவகையில் புலிகள் தவிர எந்த ஜனநாயக அமைப்புகளோ அல்லது ராணுவ  அமைப்புகளோ இல்லை என்கிற ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஈழப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுவிட்டது. பலகுரல்களை நசுக்கி  தன்னை ஒற்றைக் குரலாக மாற்றிக்கொள்ளும்போது பெச்சின் பிரதிநிதித்துவம்கூட அந்த ஒற்றைக்குரலின் பிரதிநிதித்துவமாக மாறிவிடுவதும், அந்த ஒருவரின் பலம் பலவீனம் அந்த பேச்சின்  நியயாத்தை சிக்கலாக்கிவிடுவதும் ஆன ஒரு கையறுநிலைதான் இன்று எஞ்சி உள்ளது.

தற்சமயம் பிரச்சனை இயக்கங்கள் அவர்களின் அரசியல்  நிலைபாடுகள் பற்றிய விமர்சனங்கள் அல்ல. தமிழக இந்திய உலக அரசுகளின் அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள் பற்றியதும் அல்ல.  உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான். உள்நாட்டில் சிதறடிக்கப்பட்ட  மக்கள் தங்கள் வீடு திரும்பி தினசரி வாழ்வை துவங்க  வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருள்கள் வாழ்வாதாரங்கள் வழங்கப்படுவதுடன், அவற்றை  பெறுவதற்கான உத்திரவாதம் தரப்பட வேண்டும்.  கிழக்கு திமூர் இந்தோனேசியாவிலிருந்த பிரிந்து செல்வதற்கு உலக அமைப்புகள்  தலையிட்டதைப்போல இப்பிரச்சனையிலும் உலக அமைப்புகள் தலையிட்டு ஒரு அமைதி தீர்வை நிலைநாட்ட வேண்டும். அதற்கு ஜனநாயக  உணர்வுள்ள அனைவரும் ஒன்று திரண்டு நமது எதிர்ப்புக்குரலை முன்வைப்பதும், தமிழகமே ஒரு சில மணி நேரங்களாவது ஸ்தம்பிக்கச் செய்யும் வண்ணம் தமிழக மககள் அனைவரும் தெருவில் இறங்கி நின்று தங்கள்து சிங்கள - இந்திய ஆதிக்க அதிகாரத்திற்கான எதிர்ப்பை உலக அறியச் செய்வது இன்றைய உடனடி அரசியல் நடவடிக்கையாகும்.

தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுப்போம்
ஈழச் சகொதரர்களுக்கு கரம் கொடுப்போம்.
வீழ்வது நாமாக இருந்தாலும்
வெல்வது மானுடமாகட்டும்.

-ஜமாலன். 27-01-2009

தொடர்புடைய சுட்டிகள்.

யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்.

கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.

பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம் – மாயா

பனுவலியல் அராஜகத்திற்கு எதிராக சாருநிவேதிதாவின் புதிய நாவல் - இறுதிபகுதி

சாருநிவேதிதாவின் முதல் நாவலான 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும்' நாவலுக்கு 1990- பறை இதழில் எழுதிய விமர்சனம் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

முந்தைய பகுதிகள்.

1. பனுவலியல் அமைப்பில் செயல்படும் அரசியல்

2. பனுவலில் சுட்டப்படும் எதிர் அழகியல் மதிப்பீடுகள்.

3. பனுவலில் எதிர்கொள்ளப்படும் பாலியல் அரசியல்

4. பனுவலின் மாயை -  அழிப்புக் கூறுகள்

departure நாவலின் முகவிரை மற்றும் 3, 4, 15-ஆம் பகுதிகள் இத்தகைய கட்ட்மைப்புகளை கொண்டியங்குகின்றன.  நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளான சூர்யா - ஒரு எக்ஸிஸ்டென்ஷியல், மார்க்சிய, அழகியல் சார்ந்த கருத்தமைப்புகளின் உலகில் சஞ்சரிப்பவன்.

சூர்யாவின் நாவலில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகள் முழுமையும் பாலுணர்வு எழுச்சிகளைப் பற்றிக் கூறுவது, தனது பாலுணர்வு சார்ந்த வேட்கைகளைப் பற்றிய அறிக்கையிடலை வெளிப்படுத்தி தனது பிம்பங்களை கிழித்தெறிய தயாரற்று எரித்து விடுகிறான். இன்றைய இலக்கியப் பிரதிகளின் பிம்பங்களுக்கு அடியில் சலனமுறும் இத்தகைய பதுக்கப்பட்ட பகுதிகளை சுட்டுவதே இந்நிகழ்வு. எனவே 'சூர்யா' என்ற குறி, பிம்பம் முழுமையும் மாயை - அழிப்புக்கு உட்படுத்தப்படுவது கிளிங்கோவிட்ஸால்.

மாயை அழிப்பு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆதிக்கநிலை பிம்பங்களுக்கு எதிராக, பிம்பங்களின் அடித்தளத்தில் சலனமுற்று, அவற்றை உருவாக்கிய நிகழ்ச்சிகளை முன்வைப்பதன் மூலம் நடைபெறுகிறது.  துகள்களும், எதிர் துகள்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது மோதி பிணைவுற்று அழிந்துபோவதைப்போல. (****).

சூர்யாவின் ஆதிக்கநிலை சார்ந்த பிம்பங்களை கட்டமைப்பவை: சார்த்தரின் critique-ஐ, 5-நாள் லீவுபோட்டு படிப்பதும், தமிழ்வீறு என்ற பெயரில் 'கதிரொளி' நடத்துவது, செகுவேராவின் 'பொலிவியன் டைரியை' உலகில் சிறந்த இலக்கியம் என்ற ரீதியில் அங்கீகரிப்பது, ஒரு நாளைக்கு 5 படம் வீதம் 15 நாளைக்கு 70 படங்கள் பார்ப்பது இப்படி இதுவும் நிஜம், இதற்கு எதிராக கிளிங்கோவிட்ஸால் நினைவு கூறப்படும் சூர்யாவின் பால்ய கால பாலியல் நடவடிக்கையும் நிஜம், இவை ஒன்றை ஒன்று எதிரிடும் போது சூர்யாவின் இன்றைய குறி, பிம்பம் ஆகியன உடைபட்டுச் சிதுறுகின்றன.  இதில் வெளிப்படும் ஆற்றல் புதிய சூர்யா என்ற கலகக்காரனை கட்டமைக்கிறது.  இச்சிதறலை பின்னிச் செல்வதே எழுத்து. இவ்வெழுத்து இன்றைய ஆதிக்க மாயைகளுக்கு எதிரான கலகமாகும்.

நாவலின் பல தளங்களில் இவ் எதிர்வைப்புகள் நடைபெறுகின்றன. சிறுவயதில் விஜயலட்சுமி என்ற சக பள்ளி மாணவியின் 'அல்குலை' விலகும் அவளது தொடை துணிகள் வழியே பார்க்க பிரயத்தனப்படும் சூர்யா நகர்ப்புற நடுத்தர வர்க்கப் பண்பாட்டை அடியொற்றி மறுகட்டமைப்புக்கு உட்படும்போது டெல்லியில் பஸ்ஸில் பிராயணமாகும் பெண்களின் அக்குள் ரோமத்தைப் பார்க்கும்போது யோனியின் ஞாபகம் வர குமட்டுகிறான். மனதிற்குள் பதுக்கப்பட்ட நினைவிலிமனக் கட்டைமப்பின் முரண்பாடு இதுதான். நடுத்தர வர்கக்த்தின் பாலியல் வேட்கைகள் ஒடுக்கப்படுவதின் வழி செயல்படும் பாலியல் கருவிகளின் செயல்ரீதியான வெற்றி இது.

கமலநாதன் எழுதிய விமர்சனக் கூறுகள் கொண்ட கடிதத்தை கிளிங்கோவிட்ஸிடம் சூர்யா காட்டவில்லை.  இது சூர்யா அணிய விரும்பிய பிம்பத்தை பற்றிய உணர்த்தலாகும்.  அடுத்து மிஸ்ரா, கிரண், ஆதி போன்றவர்களிடம் தனது பிம்பத்தை அடையாளம் காண முனையும் சூர்யா அவனிடம் அடையாளம் காணமுனையும் பாலா, நீரஜா போன்றவர்களின் செயலை உடைக்கிறான்.  பிம்பங்களும், அவற்றின் ஊடுருவல் மட்டுமே இன்றைய இணைக் கலாச்சார இலக்கியங்கள் காட்டும் போலி உலகமாகும். தனது பாலியல் வாழ்க்கையை எரித்து விட்ட சூர்யா.  கிரனிடம் ஏற்படும் உறவில் தந்தையின் நிலையும், உடலுறவு நிலையும் ஒருசேர ஏற்படுத்திக் கொள்ளும் போது மீண்டும் அதே பகுதிகளால் கட்டமைக்கப்பட்ட இறுக்கங்களிலிருந்து (fixation) மீளமுடியாதவனாகிறான்.

அருண், குரு, சூர்யா மூவரும் ரயிலில் கிடைத்த பெண்ணை அனுபவிக்க முனையும்போது கிரனுடன் வேறாரு ஆடவனை உறவு ஏற்படுத்திக் கொள்ள சூர்யா அனுமதிப்பதில்லை.  இதுபோன்ற முரண்கள் நாவலின் நுட்பமான அமைப்பாக்கத்தில் செயல்படுகிறது. நிர்வாணமான வேறொரு ஆணை பார்த்தவுடன் உறைந்து போகும் சூர்யா (கிரனிடம்) தனபாலுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவன். ஆதி என்ற இருட்குகையிலும், நிலவறையில் இருந்து கொண்டிருந்தவனிடம் சூர்யாவின் உறவு பற்றிய கரோலின் போர்ச்சோவின் செய்திகளும், கிரனுடன், சூர்யா பிணக்கு ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படும் பகுதிகளும், இரண்டுவித interpretation-ஐ தருகின்றன. இதில் எது உண்மை என்பதைவிட, கிரணிடம் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிணக்கிற்கு இருவகை புனைவாக்கங்கள் சுட்டப்படுவதே முக்கியமானது.

கிரனின் சம்பவங்களை விளக்கும் மூன்றாம் பகுதி இன்று உற்பத்தியாகித் தமிழ் படிப்போர் சரித்திரத்தை ஆக்கிமித்து வரும் Pocket Novel-களின் எழுத்து முறையை கொண்டமைக்கப்பட்டிருப்பது நிகழ்வினைப் பற்றிய மற்றொரு பரிமாணத்தை தருகிறது. கிரனுடன் சூர்யா ஏற்படத்திக்கொண்ட உறவு.. ஒரு மர்ம நாவலின் கற்பனார்த்த குணம் படிந்த புனைவியல் எதார்த்தத்தை (fictional reality) நுட்பமான எழுத்துமுறைகளின் வித்தியாசம் நமக்கு உணர்த்தி விடுகிறது.

இப்படி நிறைய சம்பவங்களை இணைகளாக்கி எதிர் எதிரே மோத விடுவதன் கூலம் நாவல் தனது இறுக்கமான கட்டமைப்பிலிருந்து உடைபட்டு சிதறலடைகிறது. இச் சிதறலே இன்றைய ஆதிக்க குணம் படிந்த மாயையை அழிக்கும் செயலாகும்.

பகுதி நான்கு இன்றைய அறிவார்ந்த இலக்கிய உலகின் மாயையை அழித்துவிடக் கூடிய எழுத்தாகும். பாலியல் வேட்கைகளே பின்னால் கற்பனார்த்தம் கொண்ட புனைவாக்கத்தினைக் கட்டமைக்கின்றன என்பதையும், இலக்கியவாதிகள் ஏற்படுத்தும் இணைக் கலாச்சார மாயை வெறும் பிம்ப வேட்கையும் ஊடாட்டுமே ஆகும் என்பதையும் பாலா, நீரஜா, போன்றவர்களின் பொய் உலகம் அழிக்கப்படவேண்டியது என்பதையும் நாவல் நமக்கு உணர்த்துகிறது. இதுவே இந்நாவலின் செயல்மயமாகும்.

நாவலின் முழுமையிலும் புதிய நாவல்களுக்கே உரித்தான பலகுரல் தன்மைகளும் சிதைவுகளும், சிதறல்களும் உள்வாங்கப்படவில்லை.  சில இடங்களில் வழக்கமான நாவல் தன்மைகள் ஏற்பட்டு விடுகிறது.  இது இத்தகைய ஊடகங்களை கையாள்வதில் மேலதிக கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது. சாருநிவேதிதாவின் இம் முயற்சி நமது 'விசித்திர' சூழலில் உள்வாங்கப்படுமா? என்ற கேள்வியுடன் நிறுத்திக் கொள்வோம்.

குறிப்பு:
(****)  துகள் பெளதீகத்தில் எலக்ட்ரான், எதிர்மின்னணுத்துகள் (-e), பாசிட்ரான் நேர்மின்னணு எலக்ட்ரான் (+e). இந்த துகள்களும் எதிர் துகள்களும் ஒன்றை ஒன்று சந்தித்தால் மோதிப்பிணைவுற்று பெரும் ஆற்றலை வெளிப்படுத்தும்.  இவ்வாற்றல் 'புலக்குவாண்'டுகள்' எனப்டும்.  இப்படி நாம் வாழும் உலகிற்கு எதிர்-உலகு (anti-world) இருக்கலாம் என பெளதீகவாதிகள் நம்பகின்றனர்.

ஜமாலன்.  - பறை 1990.

image : Dali, Departure

பனிப்போருக்கு பணியமறுத்த போர்வாள் - மண்ட்டோவின் கடித இலக்கியம்.

அமேரிக்க சாம் மாமனுக்கு சாதத் ஹஸன் மாண்ட்டோ எழுதிய கடிதங்கள் நண்பர் எஸ். ராமானுஜத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் பயணி வெளியீட்டகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நான் எழுதிய குறிப்புரைக் கட்டுரையே இது.

"சாதத் ஹசன் ஒருநாள் இறந்து போவான், ஆனால் மண்ட்டோவிற்கு மரணம் கிடையாது"
                                                         - சாதத் ஹஸன் மண்ட்டோ.

uncle-sam-wrapper-front-01 "எனக்குத் தெரியவேண்டியதெல்லாம் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்த பூமியின் முகத்திலிருந்து எத்தனை நாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பது மட்டும்தான். என்னுடைய அக்கா குழந்தை, நேற்று உலக வரைபடத்தை வரையச் சொல்லி கேட்டுக் கொண்டது. ஆனால் சற்று காத்திருக்க வேண்டுமென்றும், முதலில் நிலைத்து நிற்கப் போகிற நாடுகளின் பெயர்களை அங்கிளிடம் பேசி, தெரிந்து கொள்கிறேன் என்றேன். உங்களிடம் பேசியபிறகு உலக வரைபடத்தை வரைந்து கொடுப்பதாக உறுதி தந்தேன்."  இன்றும் உயிர்ப்புடன் உள்ள இந்த வரிகள் எழுதப்பட்டது அமேரிக்க-ரஷ்யப் பனிப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த 1951-1954-ற்கு இடைப்பட்ட ஆண்டுகளில்.  அமேரிக்க அரசின் குறியீடான அங்கிள் சாமி-ற்கு தெற்காசியாவின் மிகச்சிறந்த கதைசொல்லியான சாதத் ஹஸன் மண்ட்டோ எழுதிய ஐந்தாவது கடிதத்தில் உள்ள வரிகள் இவை.

சூரியன் மறையாத நாடாக உலகை ஆண்ட 'பெருமிதமிக்க' பிரித்தானிய ஏகாதிபத்தியம் நள்ளிரவில் கடுமையான இரத்தப் போக்கிற்கு மத்தியில் பெற்றெடுத்த  குழந்தைகளான இந்தியா-பாகிஸ்தான் என்கிற இரட்டைக் குழந்தைகள் தவழ்ந்து வளர்ந்த சூழல் அது. பிரிவினை என்கிற உலக வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் இடம் பெயர்ந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கையின் இரத்த சகதியை, அது வெளிப்படுத்திய மனிதனின் வன்முறை என்கிற கோரமுகத்தை தனது கதைகளின் முக்கியக் களமாக எழுதிய ஒரு தவிர்க்கமுடியாத இலக்கிய ஆளுமைதான் மண்ட்டோ. பிரிவினையை “இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியும்“ என்று தனது முதல் கடிதத்தில் கேட்கும் மண்ட்டோ, பிரிவினை குறித்த ஆழ்ந்த துயரத்தில் இருந்தவர். அத்துயரத்தின் மற்றொரு பரிமாணத்தை, அரசியல் தீர்க்கதரிசனத்தை, ஆழ்ந்த அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணங்களே அங்கிள் சாமிற்கு அவர் எழுதிய இந்த ஒன்பது கடிதங்கள். அன்றைய சமகால வரலாற்றையும் அதன் எதிர்காலப் போக்கையும் பதியவைத்துள்ள ஒரு ஆவணம் என்றால் மிகையாகாது.

மண்ட்டோவின் கூர்மையான அரசியல் பார்வையில், தீவிர இலக்கிய ஆளுமையில் தப்பமுடியாமல் போன அமேரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இஸ்லாம், அரேபிய அரசுகள், ரஷ்யா, கம்யூனிசம், கலாச்சாரம், ஏகாதிபத்தியம், அனு ஆயுதம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி, மேக்கப் சாதனங்கள், வளவளப்பான மில்லியன் கால்கள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் அலசல்களை வெளிப்படுத்தக் கூடியவை இந்த கடிதங்கள். மேல்தட்டு மக்கள் அவர்களது உலகால் மறுக்கப்பட்ட மத்தியதர வர்க்கப் பிண்ணனியின் போலித்தனம் என உலக அரசியல் போக்கு பற்றிய தீர்கக்தரிசனமாக எழுதப்பட்டுள்ளன. அரசியல் நேர்ப்பேச்சு தன்மையில் தரவுகள் மற்றும் தகவல்கள் அடங்கிய அதி நுட்பமான மயிர்பிளக்கும் ஒரு ஆய்வைவிட இக்கடிதபாணி எழுத்தின் இலக்கியச்சுவையும், அங்கதமும் அதிக வலிமையையும், பாதிப்பையும் உருவாக்கக்கூடியவை. அமேரிக்க அங்கிள் தனது காலாவதியான ஆயுதங்களை விற்க என ஏற்படுத்தும் இந்திய-பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தையும், அந்த ஆயதங்களை ஒப்பந்தங்கள் மூலம் விற்பதையும் இதில் நகைச்சுவையுடன் அனாவசியமாக எழுதிச் செல்கிறார் மண்ட்டோ. 

இக்கடிதங்கள் முன்அனுமானிக்கும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று எப்படி அமேரிக்கா உலக ஏகாதிபத்தியமாகத் தன்னை கட்டமைத்துக்கொள்ள அவ்வப்போது எதிரிகளை கட்டமைக்கிறது என்பதுதான். பனிப்போர் காலத்தின் துவக்க கட்டத்தில் எழுதப்பட்ட இவை, ரஷ்யாவையும் கம்யூனிசத்தையும் ஒழிப்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுக்கும் அமேரிக்காவின் நீண்டகால யுத்ததந்திர நடவடிக்கையை அம்பலப்படுத்தும் தனிச்சிறப்பான பார்வையை முன்வைப்பதுதான் மண்ட்டோவின் இலக்கிய முன்நோக்கு பார்வைக்கும் தீர்கக்தரிசனத்திற்கும் சான்று எனலாம்.

நான்காவது கடிதத்தில் மண்ட்டோ எழுதுகிறார் "ருஷ்ய கம்யூனிஸத்திற்கு மிகச் சிறந்த எதிர்ப்பு மருந்து எங்களுடைய முல்லாக்கள் தான். இராணுவத் தளவாடங்களை இங்கு குவிக்கத் தொடங்கியவுடன், அதையெல்லாம் முதலில் எங்களுடைய முல்லாக்களிடம் தான் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரார்த்தனை பாயும், ‘தஸ்பிஹ்’ கூட தேவைப்படலாம். மறந்துவிடாதீர்கள் சிறுநீரின் கடைசி சொட்டுகளை உறிஞ்சிக்கொள்வதற்கு களிமண் கட்டிகளையும் அனுப்பிவையுங்கள். கழுத்தை வெட்டக்கூடிய பிளேடுகளும் கத்திரிக்கோல்களும் இந்தபட்டியலில் முதலில் இருக்க வேண்டும். இவைகளோடு அமெரிக்காவின் தலைமுடி சாயமும் சேர்க்கப்பட வேண்டும். இவை இந்த முல்லாக்களையெல்லாம் சந்தோஷமாக வைத்திருப்பதை சாத்தியப்படுத்தும்."

"மிகத்துல்லியமாக ‘ஷரியா’படி தயாரிக்கப்பட்ட அமெரிக்க கத்திரிக்கோல்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட தலையோடும், அமெரிக்க இயந்திரத்தால் தைக்கப்பட்ட பைஜாமாக்களோடும் உள்ள முல்லாக்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சிறுநீர் சொட்டுகளை பிடித்துக்கொள்ள அவர்கள் உபயோகிக்கும் களிமண் கட்டிகூட - எந்த மனிதக் கைகளாலும் தொடப்படாதது, அமெரிக்க தயாரிப்பாகத்தான் இருக்கும். அவர்களுடைய பிரார்த்தனை பாய்கள்கூட அமெரிக்க தயாரிப்பாகத்தான் இருக்கும். பிறகு எல்லோரும் உங்கள் முகாமை சேர்ந்தவர்களாக மாறிவிடுவார்கள். வேறு எவருக்கும் அல்லாமல் உங்களுக்கு மட்டுமே விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள்."

இந்த நீண்ட மேற்கோள் ஒன்றுபோதும். இன்று தலிபான்கள், முஜாகிதீன்கள் துவங்கி, பின்லாடன், ஹமாஸ் உள்ளிட்ட இன்னபிற  இஸ்லாமிய அடிபபடைவாத அமைப்புகளும் அமேரிக்க தயாரிப்பு என்பதும், கம்யூனிசத்தின் வீழ்ச்சி என அறிவித்துக் கொள்ளப்படும் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின், தனது எதிரியாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் கட்டமைத்துக் கொள்ள இவர்களை பயன்படுத்திக் கொண்டதும் வரலாற்றில் இன்று நாம் படித்துக்கொண்டிருக்கும் பக்கங்கள்தான். சிவப்பு பயங்கரவாதம் என்று கூறி கம்யூனிசத்தை ஒழிக்க பச்சை பயங்கரவாதத்தை கட்டமைத்துள்ளது அமேரிக்கா. உலக மக்களின் எதிரியாக அதனால் கட்டமைக்கப்பட்ட அடிப்படைவாத இஸ்லாமை முன்வைப்பதன் மூலம், இஸ்லாமிய நாகரீகத்தை ஒட்டுமொத்தமாக துடைத்தழிக்க முயல்கிறது அல்லது இஸ்லாம் என்பதே ஒரு பயங்கரவாத மதமாக கட்டமைக்கப்படுகிறது எனலாம். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் அமேரிக்க மேலாண்மைக்காக உலக அரசியலில் உருவாக்கப்பட்ட “கள்ளக்குழந்தைகளே“ என்பது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. ஆனால், மண்ட்டோ இதனை மிக ஆரம்பநிலையிலேயே தீர்க்கமாக யோசித்திருப்பதும், அமேரிக்காவின் இந்தப்போக்கை முன் அனுமானித்திருப்பதும்தான் அவரது ஆளுமையின் அல்லது அரசியல் நுண்னுணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. முல்லாக்கள் இஸ்லாமை காப்பாற்றுபவர்கள் அல்ல மாறாக அமேரிக்க பாணியிலான இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் அறிந்தோ அறியாமலோ அமேரிக்காவைத்தான் காப்பாற்றுபவர்களாக உள்ளனர் என்கிற செய்தி மண்ட்டோவின் மிக முக்கிய அவதானமான இருப்பதுதான் நமக்கு வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. மதத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான இந்த கள்ள உறவை முன்னுணர்ந்து தனது கடிதங்களில் அங்கதமாக அதனை முன்வைக்கிறார்.

அமேரிக்க வாழ்க்கைமுறையையும், பாகிஸ்தானிய முல்லாத்தனமான “கைபடாத களிமண் கட்டிகள்“ உருவாக்கும் வாழ்க்கையையும், ருஷ்யபாணி “பண்பாட்டு பரிவர்த்தனை“ மற்றும் அடக்குமுறை வாழக்கையையும் விமர்சிப்பதுடன், முல்லாக்களின் இஸ்லாம் பற்றிய தீர்க்கமான விமர்சனங்களையும் முன்வைப்பதாக இவை எழுதப்பட்டுள்ளன. பொது இடங்களில் பைஜாமவிற்குள் கைகைளைவிட்டு களிமண் கட்டிகளை தேய்த்து சிறுநீரின் இறுதி சொட்டை பிடிப்பது மட்டுமே இஸ்லாமிய வாழக்கை ஆகிவிடாது என்பதை பல இடங்களில் மிகவும் எரிச்சலுற்ற நிலையில் விவரிக்கிறார் மண்ட்டோ. அவரது கோபத்தின் உச்சம் சிறு சிறு அனுகுண்டுகளை அங்கிளிடம் வேண்டுகிறது. இதில் பெரும் நகைச்சுவை என்னவென்றால் அந்த அனுகுண்டுகளை அந்த “களிமண் கட்டி“ முல்லாக்களிடம் போட்டு களிமண் புகைந்துபோக வேண்டும் என எழுதப்படும்போது, களிமண் கட்டி என்பது இஸ்லாம் என்கிற பெயரில் முல்லாக்கள் முன்வைக்கும் வறண்ட வாழ்வின் குறியீடாக மாறிப்போகிறது.  

துவக்கத்தி்ல் சுட்டிக்காட்டப்பட்ட வரிகள் அமேரிக்கா இன்றுவரை உலக புவியியலை மீண்டும் மீண்டும் மாற்றி வரைவதும், புதிய நாடுகளை உருவாக்குதல், சில நாடுகளை அழித்தல் என புவிசார் அரசியலில் அமெரிக்க மேலாண்மையை பற்றிய நுட்பமான விமர்சனமாக இருப்பதைக் காணலாம். இக்கடிதங்கள் எழுதப்பட்ட ஆண்டுகளில் உலக அரசியலில் பிரித்தானிய ஏகாதிபத்தியம்  பின்னடைந்து அமேரிக்க உலக வல்லரசாகவும், ரஸ்யா ஒரு சமூக வல்லரசு நாடாகவும் உருவாகி உலகம் இரண்டு முகாம்களாக மாறிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். இவற்றின் பனிப்போரில் அதிகம் இழந்ததும், அதிகம் பாதிப்பிற்குள்ளானதும் இஸ்லாமிய நாடுகளே.  இக்காலக்கட்டத்தில் அமேரிக்கா ரஷயாவையும், கம்யூனிசத்தையும் உலக வரலாற்றிலிருந்து துடைத்தழிப்பதற்கு தீவிரமாக முயன்றுகொண்டிருந்தது. உண்மையில் அமேரிக்க தன்னை வல்லரசாக கட்டமைப்பதற்காக தனக்கு பலமான ஒரு எதிர்வை அதாவது மற்றமையை கட்டமைப்பதற்கு ரஷ்யாவையும் கம்யூனிசத்தையும் எதிரியாக கட்டமைத்துக்கொண்டிருந்த காலம். அதற்காக ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஷ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளை தனது புவிசார் அரசியலுக்காக தனது நவகாலனிகளாக மாற்றிக்கொண்டிருந்தது.

அப்பொழுது புதிதாக உதயமாகியிருந்த பாகிஸ்தானை தனது செல்லக் குழந்தையாக சகோதரனாக பாவித்து ஆயதம் முதல் பொருளாதார உதவிகள் வரை செய்யத் துவங்கியிருந்தது. இங்கு மண்ட்டோவின் ஒரு முக்கிய அவதானத்தை சுட்டுவது பொருந்தும். அங்கிளிடம் மண்ட்டோ ஒரு வேண்டுகோள் வைக்கிறார். அதாவது ஆயுதங்கள் அனுப்புவதற்கு பதிலாக உங்கள் நாட்டுப் பெண்களை அனுப்பி வையுங்கள். அல்லது மாக்ஸ் பேக்டர் போன்ற காஸ்மட்டிக்ஸ்களால் சீரழிந்த பாகிஸ்தானியப் பெண்களை பயிற்றுவிக்கவாவது சில பெண்களை அனுப்பும்படி கேட்கிறார். அதாவது இது கலாச்சார ஏகாதிபத்தியத்தை சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய அவதானம் மட்டுமின்றி, பெண்களும், அவர்களது உடல்களும் எப்படி ஆயுதமாக உள்ளது என்பதையும், இத்தகைய உயர்புருவ-பண்பாட்டு ஆதிக்கம் என்பது நிஜ ஆயுதங்களைவிட வலிமையானது என்பதையும் சொல்வதாகிறது. இதன்பொருள் தானும் தனது எழுத்தும் ஒரு கருத்தியல் அமேரிக்க ஆயுதமாக மாறிவிடக்கூடும் என்பதை நுட்பமாக அவர் உணர்ந்திருப்பதையும், அதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள இக்கடிதங்களை அவர் எழுதுவதற்கான திட்ட உருவாக்கமும் உள்ளர்த்தமாக வெளிப்படுவதைக் காணலாம்.

எந்த குறுங்குழு வாதத்திற்குள்ளும் தன்னை அடக்கிக்கொள்ளாத மண்ட்டோ, தனது கம்யூனிச எதிர்ப்பு என்பது அமேரிக்க பாணியிலான எதிர்ப்பு இல்லை என்பதையும், தனது அரசியல் ஏகாதிபத்திம் துவங்கி அனைத்து அடக்குமுறைகளுக்கும், அதிகாரத்திற்கும் எதிரானது என்பதையும் முன்வைக்கும் ஒரு எழுத்தாக இவை அமைகின்றன. மண்ட்டோ தீவிர கம்யூனிச எதிர்ப்பாளராக அடையாளம் காட்டப்படும் நிலையில், இக்கடிதங்கள் அவரது கம்யுனிசம் மீதான விமர்சன அனுகுமுறையையும், அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைக்கண்ட ஆதிபத்திய வெறியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒருவேளை அவர் கம்யுனிஸ்டாக மாறினாலும், தனது நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை தனது இறுதிக் கடிதத்தில் சுட்டிக்காட்டுகிறார். அதனால்தான் நிராகரிக்கப்பட்டபோதிலும் இக்கடிதங்களை எந்த பலாபலனும் இன்றி எழுதித் தள்ளுகிறார் மண்ட்டோ. இது அவரே தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அரசியல் செயல்பாடு எனலாம்.

இந்தியா ரஷ்ய சார்புநிலை எடுத்திருந்த நிலையி்ல் பாகிஸ்தானை அமேரிக்க தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டதாக மட்டுமே இதனை பார்க்கமுடியாது. அமேரிக்காவின் பாகிஸ்தானிய சார்பில் உள்ள பல நலன்களை இக்கடிதங்கள் சுட்டுகின்றன. உண்மையில் பாகிஸ்தான் தெற்காசியப் பிராந்தியத்தில் அமேரிக்காவின் நின்று தாக்கவதற்கான ஒரு யுத்தகளமாகவே உருவாக்கப்படுகிறது என்பதை நுட்பமாகச் சொல்கிறது. அதில் ஒன்று இந்தியாவுடனான அமேரிக்காவின் இரட்டை நிலைப்பாடு. இதனையும் இக்கடிதம் நேருவை முன்வைத்து விமர்சிக்க தவறவில்லை. இதில் முக்கியம் என்னவென்றால், பாகிஸ்தான்தான் இந்தியா ரஷ்ய சார்பு நிலை எடுப்பதற்கும் முக்கிய காரணம் எனலாம். ஆக, புவிசார் அரசியலில் அமேரிக்காவிற்கு பாகிஸ்தான் ஒரு முக்கிய யுத்ததந்திரக் களமாக மாறியதை மண்ட்டோ இதில் நுட்பமாக அறிவிக்கிறார்.

அமேரிக்கா பாகிஸ்தானை தனது நவகாலனியாக மாற்றுவேண்டிய தேவையின் ஒரு திட்டமாக, பாகிஸ்தானிற்குள் அமேரிக்காவை உயர்த்தியோ அல்லது ரஷ்யா மற்றும் கம்யூனிசத்தை தாக்கியோ எழுதக்கூடிய அல்லது அமேரிக்கச் சார்பான  கருத்தியல் தளத்தை உருவாக்கக்கூடிய இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பாக பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டதுதான் USIS [United States Information Service]என்கிற நிறுவனம். இந்நிறுவனத்தின் வழியாக எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக அமேரிக்க சார்புநிலை கருத்தாக்கத்தை பரப்ப முயன்றன அமேரிக்க தூதரக அலுவலகங்கள். 1951-ல் வாசிங்டனிலிருந்து பாகிஸ்தான் வந்த ஸ்மித் என்கிற தூதரக அதிகாரி, மண்ட்டோவின் கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களை அறிந்திருந்ததால், அவரை சந்தித்து அமேரிக்க சார்பாக எழுதித் தரும்படியும் அதற்கு அமேரிக்கா ஒரு கட்டுரைக்கு 500 ரூ வரை தரும் என்றும், அப்படி எழுதப்படும் உருது மொழி கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் பரப்பப்படும் என்றும் கூறியதாக, இந்த அதிகாரியின் சந்திப்பை ஏற்படுத்தி தந்த காலித் லத்திப் எழுதுகிறார். மண்ட்டோ இந்த சம்பவத்தை தனக்குரிய அங்கதம் தொனிக்கும் நகைச்சுவையுடன் இரண்டாவது கடிதமாக எழுதுகிறார்.

மண்ட்டோ தான் தனது விருப்பப்படி எழுதுவேன் என்றும் எந்த மாற்றங்களும் அதில் செய்யக்கூடாது அதற்கு எனக்கு 200 ரூ போதும் என்றும் கூறுகிறார்.  500 ரூ தருவதாகக் கூறி அதை மறுத்த மண்ட்டோ, 300 ரூ-விற்கு சம்மதித்து தனது முதல் கடிதத்தை எழுதி அந்த நிறுவனத்திடம் தருகிறார். அக்கடிதத்தை படித்த அந்த நிறுவன பொறுப்பாளர், காலித் லத்தீப்பிடம் “இனி மண்ட்டோ எதுவும் எழுதித் தரவேண்டாம், அவர் நம்மீது சவாரி செய்ய விரும்புகிறார், இவற்றை வெளியிட முடியாது, இத்துடன் மண்ட்டோவை மறந்துவிடுங்கள்” என்று கூறிவிடுகிறார். அதன் பின் மண்ட்டோ அடுத்து சில வருடங்களில் மற்ற 8 கடிதங்களை எழுதுகிறார். அவை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் இல்லை என்றபோதும், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், தன்னைச் சுற்றி நிலவிய அந்த வறுமையிலும், தனது அரசியல் கலகத்தன்மையில் அவர்கொண்டிருந்த உறுதி. அமேரிக்கா பற்றி எழுத என தொடர்ந்து அந்நாட்டு நடவடிக்கைகள் பத்திரிக்கைகளை படித்து இக்கடிதங்களை தனது அங்கதம் கலந்த நகைச்சுவையுடன் இலக்கிய சுவை நிரமிபிய புகழ்பெற்ற கடித இலக்கியங்களில் வைத்து பேசும் வண்ணம் உருவாக்கி உள்ளார். இதில் நம்மை வியப்பிலாழ்த்தும் விஷயம் என்னவென்றால், அதன் தற்கால அரசியல் சூழலுக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ள முன்னுணர்வுதான். ஒரு சிறந்த அரசியல் நுண்நோக்காளர்களால், அரசியல்வாதிகள், அரசின் திட்ட அமைப்பாளர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்களால் மட்டுமே கணிக்க முடிந்த அரசியல் போக்கை ஒரு இலக்கிய ஆளுமையாக இருந்துகொண்டு மண்ட்டோ செய்திருப்பதுதான்.

இக்கடிதங்களில் அமேரிக்கா பற்றி அவர் உருவாக்கும் சித்திரம் அல்லது அமேரிக்காவை அவர் வரைய முனையும் விதம் முக்கியமானது. அதன் ஜனநாயகம் என்பதும் ஏழுசுதந்திரம் என்பதும் எத்தனை வேடிக்கை என்பதை சுட்டிக்காட்டும் இடங்கள் அருமையானவை.  நல்லொழுக்கம் பேசி எழுத்தாளனை கோர்ட்டில் நிறுத்துவதில், தனது ஏழை நாடான பாகிஸ்தான் அரசாங்கமும்,  பணக்கார அமேரிக்க அரசாங்கமும் அரசு என்கிற அடிப்படையில் ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்தும் மண்ட்டோ,  ஏழு சுதந்திரம் என்பது அதன் அதிகாரத்தில், பணபலத்தில்தான் உள்ளது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறார். காரணம், அரசால் கோர்ட்டில் நிறுத்தப்பட்ட ஒரு எழுத்தாளன் மண்ட்டோ. அதேபோன்று அமேரிக்காவும் ஒரு எழுத்தாளனை கோர்ட்டில் நிறுத்துகிறது. ஆக, எங்கும் சுதந்திரம் என்பது இல்லை என்பதையே இது சொல்வதாகிறது. இங்கு மண்ட்டோ மற்றொரு பிரச்சனையை நுட்பமாக வேறுபடுத்தி பார்க்கிறார். குறைந்தபட்சம் அமேரிக்க நீதிபதி அந்த எழுத்தாளனை விடுதலை செய்கிறார். பாகிஸ்தானிலோ அதற்கான வாய்ப்பும் இல்லை என்பதுதான். காரணம், எழுத்தாளனை புறக்கணிப்பதே பெரிய சிறை தண்டனையாக உள்ள ஒரு சமூகம் நம்முடையது.

அமேரிக்க பெண்களின் வழவழப்பான மில்லியன் கால்கள் பற்றிய சித்திரம், பாகிஸ்தானிய இஸ்லாமிய ஒடுக்குமுறையில் பெண்கள் கால்களை மறைப்பது என்கிற இரு நிலைகளையும் சுட்டி அமேரிக்க முல்லாக்கள் ஆதரவும் இதனுடன் இணைப்பதுடன் தனது சொல்லாடலை தீர்க்கதரிசிகள் வருகை வரை எடுத்துச் செல்லும் மண்ட்டோ அமேரிக்கா என்பது ஒரு அதிகாரமிக்க அரசாங்கம் மட்டுமின்றி தனது நலனுக்காக எதையும் செய்யக்கூடிய ஒன்று என்பதையும் போட்டு உடைக்கிறார் அதன் அனு சோதனைகள் மற்றும் நைட்ரஜன் குண்டுகள் பற்றிய பேச்சில். நைட்ரஜன் குண்டுகள் போட்டபின் அமேரிக்காவிற்கு ஒரு தீர்க்கதரிசி தேவை என்கிறார் மண்ட்டோ. காரணம், உலகம் அழிந்துபின் புதிய உலகை உருவாக்க தீர்க்கதரிசிகள் தேவைதானே? இங்கு மண்ட்டோ தீர்க்கதரிசிகள் தேவை எனில் ஒருவரை அனுப்பி வைப்பதாக குறிப்பிடுவது அன்று இஸ்லாமிற்குள் நிகழ்ந்த தீர்க்கதரிசி பிரச்சனையை உள்தளத்தில் வைத்து பேசும் ஒரு அங்கதமாகும்.

மண்ட்டோ தான் காதியானியாக மாறுவேனே தவிர கம்யூனிஸ்டாக மாட்டேன் என்று ஒன்பதாவது கடிதத்தில் தெரிவிக்கிறார். காதியானிகள் என்பவர்கள் அகமதியா ஜமாத் என்கிற புதிய இஸ்லாமிய பிரிவு ஒன்றைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாதப்படி முகமது நபிகளுக்கு பிறகு ஒரு வாக்களிக்கப்ட்ட தீர்க்கதரிசி வருவார், அந்த தீர்க்கதரிசியே மீர்சா குலாம் அகமது என்பதாகும். இதனை முற்றிலுமாக நிராகரிக்கும் மையநீரோட்ட இஸ்லாம், அவர்களை ஒரு கட்டத்தில் இஸ்லாமியர்கள் அல்ல என அறிவித்தது. அவர்களுக்கும் மையநீரொட்ட இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடந்த கலவரம் பற்றியும் இக்கடிதத்தில் குறிப்பிடும் மண்ட்டோ, முரட்டுப்பயல்களான காதியானிகளுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையில் நடைபெறும் சண்டைகளில் தனக்கு உடன்பாடில்லை என்பதை முன்வைக்கிறார். அதாவது கம்யூனிஸ்டுகள் மதரீதியான அமைப்புகளை கையாள்வதில் உள்ள சிக்கலை இங்கு நுட்பமாக முன்வைக்கிறார் எனலாம். காரணம், கம்யூனிஸ்டுகள் மதங்களை கையாள்வதில் வறட்டுத்தனமான அனுகுமுறைகள கையாள்வதும், அவற்றிற்குள் உருவாகும் சிறுபான்மைக்கான ஜனநாயக எதிர்ப்புக்குரல்களை கணக்கில் எடுக்காததும் இங்கு சுட்டிக்காட்டப்படுவதாகக் கொள்ளலாம்.

அகமதியாக்களால் உரைவிளக்கம் செய்யப்பட்ட குரானின் தத்துவஞானம் மையநீரொட்ட இஸ்லாமிய விளக்கங்களிலிருந்த விலகி இருந்ததுடன், இறை மற்றும் மறைஞானம் என்பதை ஒரு குறியியில் விளக்கமாக பார்த்தனர். அதன்படி குரானின் பல வசனங்கள் உருவகத்தன்மை வாய்ந்தவை என்றும் அந்த உருவக அடிப்படையில் சாத்தானாக அமேரிக்காவும் அல்லது மேற்குலகப் பண்பாடும் இருப்பதாக அவர்களால் முன்மொழியப்பட்டது. இந்த புள்ளி அமேரிக்கபற்றிய மண்ட்டோவின் சித்திரிப்புகளில் வெளிப்படும் அதே வேளையில், பண்பாட்டு இறுக்கமாக ஆக்கப்பட்ட இஸ்லாமிய மத ஒடுக்கமுறையையும், காதியானிகளையே சில இடங்களில் விமர்சிப்பதாகவும் உள்ளது தீர்க்கதரிசிபற்றிய இவரது சித்திரம். அதாவது இஸ்லாம் குறித்த இவரது விமர்சனங்களில் அன்றைய ஆதிக்க சொல்லாடலாக இருந்த இஸ்லாம் மதக் கருத்தியல் என்பது ஆழ்தள கண்காணிப்பில் செயல்பட்டிருப்பதையும், அதையும் மீறி பல இடங்கிளில் தனது விமர்சனங்களை அவர் முன்வைப்பதையும் இக்கடிதங்களில் வாசிக்க முடிகிறது. தீர்க்கதரிசி குறித்த அங்கதம் என்பது மிகவும் நுட்பமானதாக அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து, அனுகுண்டுகள் பற்றிய அவரது அங்கதம் அதாவது பிளாக் ஹியுமர் எனப்படும் அவலநகச்சுவையாக வெளிப்படுகிறது. மண்ட்டோ எழுதுகிறார், ”நைட்ரஜன் குண்டுகளுக்கான பதில் ஆக்ஸிஜன் குண்டுகள்தான். எட்டாம் வகுப்பில் நைட்ரஜனும், ஆக்ஸிஜனும் சந்தித்தால், அது தண்ணீராக மாறிவிடும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. ருஷ்யர்கள் அவர்களுடைய நைட்ரஜன் குண்டுகளை மேலே விட்டெறிய, நீங்கள் உங்களுடைய ஆக்ஸிஜன் குண்டுகளை கீழே விட்டெறிய, அவையெல்லாம் தண்ணீராகமாறிவிட... இந்த உலகம்தான் எவ்வளவு வேடிக்கையானதாக இருக்கும்." நைட்ரஜன் குண்டுகள் பற்றிய அவரது உவமையும், அதன் போர்ப் பயன்பாடு பற்றிய எள்ளலும் அருமையானவை. ஆக்கத்திற்குதான் அனுகுண்டு என்பவர்களை இதைவிடவும் சிறப்பாக கிண்டலடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. பள்ளிநிலை விஞ்ஞானத்தை உயர் விஞ்ஞான ஆய்விற்குள் வைத்து செய்யப்படும் இப் பகடியில், அனுவிஞ்ஞானம் ஆக்கபுர்வமானது என்பதன் அவலம் வெளிப்படுகிறது.

ஒரு கடிதத்தில் இந்தியாவிற்கு மேற்சட்டையும், பாகிஸ்தானிற்கு கால்சட்டையும் அனுப்புங்கள் என்று அங்கிலுக்கு வேண்டுகோள் வைக்கும் மண்ட்டோ, யுத்தம் வந்தால் கால் சட்டையும் மேல் சட்டையும் சண்டையிடும் காட்சி பற்றி கூறும்போது ஏற்படும் போர்பற்றிய பதற்றமும் அது ஏற்படுத்தும் அவலமும் நமக்கு ஏற்படுத்தம் ஒருவித கசப்பான நகை உணர்ச்சி என்பது.. இவரது இக்கடித எழுத்துக்களின் உயர்ந்த இலக்கியச் சுவையாக உள்ளது. ஒரு மனிதனின் இரண்டு ஆடைகள்தான் இந்த இரண்டு நாடுகளும் என்பதையும் இந்த பிரிவினை அறைகுறையாக மனிதனை அரைநிர்வாணநிலைக்கு தள்ளியதையும் நுட்பமாக இந்த உருவகம் சொல்கிறது. டவுசரற்ற இந்தியனும், சட்டையற்ற பாகிஸ்தானியும் ஏற்படுத்தும் அவலம்தான் இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பதாக மண்ட்டோ முன்வைபப்தாகக் கொள்ளலாம்.

சவுதி மன்னர் சவுத் வருகை மற்றும் பாகிஸ்தான் மேட்டுக்குடி பெண்களின் அமைப்பும், அது “ஜம்பர்“ சுருக்கமாக மாறிவிட்டதையும் விவரிக்கும் இடங்கள் மனதிற்குள் ஒரு தொடர் நகை உணர்வையும், அதே நேரத்தில் ஒரு அவல உணர்வையும் நமக்குள் உருவாக்கிக்கொண்டே உள்ளது.

இக்கடிதங்களை வாசிக்கும்போது ஏற்படும் எள்ளல், அங்கதம், நகைச்சவை, அவலம், சோகம் எல்லாம் சேர்ந்த ஒரு உன்னத இலக்கியச்சுவையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆய்வாளரான உஸ்மான் கூறியதுபோல ”மண்ட்டோ ஒரு வாழும் வரலாறு, இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பண்பாட்டு குறிப்புரை. ரஷ்ய இலக்கியத்தில் செக்கவ் என்னவோ? அல்லது பிரஞ்சு இலக்கியத்தில் மாப்பசாண்ட் என்னவோ அதைப்போல பாகிஸ்தான்-இந்திய இலக்கியத்தில் மண்ட்டோ”

இந்த கடிதங்களுக்கு எந்த விளக்கங்களும் தேவையில்லை. அரசியலை வெளிப்படையாகவும், துணிச்சலுடனும் முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. பொதுவாக உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் மண்ட்டோ படைப்புகளில் uncle-sam-wrapper-back-01 உருதுவில் உள்ள உயிர்ப்பு இருப்பதில்லை என்கிற கருத்து உண்டு. இக்கடிதங்கள் உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாகன கவனத்தைப் பெற்றவை. அதனை ஆங்கிலத்திலிருந்து இயல்பான தமிழில், அதன் உயிரோட்டத்துடன் தந்துள்ளார் ராமானுஜம். மேலே நாம் பேசியவை அனைத்தும், ஒரு ஆர்வக் கோளாறின் விளைவாக எழுதப்பட்டவையே. நேரடியாக வாசிப்பவர்களுக்கு, இது இன்னும் பல பரிமாணங்களைக் காட்டிச் செல்லும் ஒரு பன்முக வாசிப்பிற்கான கூறுகளைக் கொண்டவை இக்கடிதங்கள். இறுதியாக, துவக்கத்தில் நாம் குறிப்பிட்ட மேற்கோளில் உள்ள மண்ட்டோவின் அக்கா மகள், இன்னும்கூட அந்த வரைபடத்தை வரையமுடியாமல் இருப்பதுதான் இன்றைய அரசியலின் மிகப்பெரிய அவலம். அக்கா மகள் என்பது எதிர்காலத் தலைமுறையினரான நம்மைப் பற்றியக் குறியீடுதான். ஏகாதிபத்திய லாபவேட்டை, கொலைவெறி மூர்க்கம், மத அடிப்படைவாதங்கள், பயங்கரவாதங்கள் ஆகியவற்றால் இன்னும்கூட உலக வரைபடத்தை நம்மால் தீர்மானித்து வரைய இயலாத நிலைதான் உள்ளது என்பதையே மண்ட்டோ இங்கு சுட்டிக்காட்டுவதாகச் சொல்லி முடிக்கலாம்.

- ஜமாலன்
07-01-2009.

References:
1. 'Discovering Manto" - BY LINDA WALDRON - Green Left Weekly, February 16, 2005.
2. Manto in uncle sam's camp - by Khalid Hasan

அங்கில் சாம்’க்கு மண்ட்டோ கடிதங்கள்
சாதத் ஹசன் மண்ட்டோ
தமிழாக்கம்: ராமாநுஜம்
முதல் பதிப்பு: 2008 டிசம்பர்

வெளியீடு: பயணி வெளியீட்டகம்
6/11, 4வது குறுக்குத் தெரு,
எல்லையம்மன் காலனி,
தேனாம் பேட்டை,
சென்னை 600 086
செல்: 94451 24576

நூல் வடிவமைப்பு: ஜீவமணி - 96000 99112

அச்சாக்கம்: ரவிராஜா அச்சகம், சென்னை
விலை: ரூ. 100

தொடர்புடைய சுட்டிகள்

1.  இக்கடித பாணியில் ஆயிஷா ஜலால் முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பேயிக்கு எழுதிய கடிதம்.

2. மண்ட்டோவின் நான்கு கடிதங்கள் ஆங்கிலத்தில்.

3. மண்ட்டோவின் எழுத்தாளுமை குறித்த ஆங்கிலக்கட்டுரை

பயங்கரவாதம் என்கிற “பக்க“-வாதம் - இறுதி பகுதி.

பயங்கரவாதம் என்கிற “பக்க“வாதம் - பகுதி-1

பிரச்சனை யார் வைக்கிறார்கள் என்பதல்ல? இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் எத்தன்மை வாய்ந்தவை என்பதுதான். மத பயங்கரவாதிகள், அரசு, அதிகாரிகள், காவல்துறை, ஊடகங்கள், மதவாத அறிவுஜீவிகள், இராணுவம் என ஒரு பெரும்படையே இன்று மதவாத அடையாளம் கொண்ட ஒரு அமைப்பாக மாறி குடியாண்மை (சிவில்) வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்ட நிலையே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் இத்தகைய குண்டுவெடிப்புகளின் பயங்கரங்கள் யாரால் செய்யப்படுகிறது? என்கிற ஆய்வுகள் முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில் நேரடியாக இஸ்லாமிய அமைப்புகளின் பெயர்களும், அதற்கு ஆதாரமாக காட்டப்படும் மின்_அஞ்சல் உள்ளிட்ட மற்ற தகவல்கள் ஆகியன எல்லாம் சேர்ந்து என்ன நடக்கிறது? என்பதே புரியாத ஒரு குழப்பமான நிலையே நீடிக்கிறது. இங்குதான் நாம் இந்த நிகழ்வுகளின் பின்னணிகளும் இதனை கையாள்பவர்கள், இதனை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் பொதுவானதாகக் கருதப்படும் அரசு எந்திரம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் என எல்லாம் நிகழ்த்தும் ஒருவித செயல்போக்கின் விளைவுகள் மற்றும் நோக்கங்களை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பயங்கரவாதம் என்பது ஒரு அரசியலற்ற நடுநிலை சொல்லாடலாக ஊடகங்கள் மற்றும் அரசின் ஆய்வறிக்கைகள் செய்திகள் வழியாக கட்டமைக்கப்படுகிறது. ஒருகாலத்தில் உள்நாட்டு கலகமாக, விடுதலைப்போராக, புரட்சியாக, தீவிரவாதமாக கருதப்பட்ட இத்தகைய எதிர்நடவடிக்கைகள் இன்று பயங்கரவாதம் என்கிற ஒற்றைச் சொல்லாக பாவிக்கப்படுகிறது. இந்த சொற்கள் ஒவ்வொன்றிலும் அரசின் ஒடுக்குமுறை வடிவங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, அரசு எதிர்ப்பு போராட்ட வழிமுறைகளும் அந்தந்த கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறுபாடுகள் அடைந்து வந்துள்ளது. இன்றைய அரசுகள் மற்றும் அரசியலுக்கான வளர்ச்சியடைந்த சொல்லாடலாக உள்ள ஜனநாயகம் என்பதன் அடிப்படை வடிவங்களிலும் ஏற்பட்ட மாறுதல்கள் இந்த எதிர்வடிவங்களிலும் மாறுபாடுகளை ஏற்படுத்தி வந்துள்ளது. எதேச்சதிகார முடியாச்சிகளில் நிகழ்ந்த உள்நாட்டு கலகங்கள் தேசிய அரசுகளின் தோற்றத்தில் விடுதலைப் போர்களாக வடிவமடைந்து பின் அரசை தூக்கி எறியும் புரட்சிகளாக மாறி அதன் பின் ஜனநாயக அரசுகளின் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களால் தீவிரவாதமாகி இன்று அரசு மற்றும் மக்கள் எதிர்ப்பு என்கிற பயங்கரவாதமாக மாறியுள்ளது.

இதன் மற்றொருபுறம் ஜனநாயக அமைப்புகளை முற்றிலுமாக மறுத்து ஒதுக்கும் ஒருவகை இணை அரசுகளாக அதாவது மக்களை ஒடுக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்ட எதிர் - அதிகார அமைப்புகளாக இவை மாறியுள்ளன. அரசு மக்களை எப்படி பார்வையாளர்களாக வைத்துக் கொள்கிறதோ, அதேபோல இத்தகைய இயக்கங்களும் மக்களை ஒரு பார்வையாளர்களாகவே வைத்துக் கொண்டுள்ளன. காரணமற்ற முறையில் தங்களது உடலும், உயிரும் சிதைக்கப்படும் அரசின் ஒடுக்குமுறைகளில் அல்லது இத்தகைய பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்படுபவர்களாக மட்டுமே மக்கள் பங்கேற்பு என்பது உள்ளது. அதிகாரம் இந்த இரு எதிர்நடவடிக்கைகள் வழியாக இறுகி மக்களின் குரல்வளையை நெரிப்பதாக மாறியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை இனத்தினரை தனிமைப்படுத்தும் ஒரு மதவாத கருத்தியலை ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்பாக இன்றைய இந்திய அரசும், அரசியலும் மாறியுள்ளது. அரசு எந்திரத்தின் உறுப்பமைவுகளை இயக்கி வழிநடத்தும் கருத்தியலாக மதவாதம் உள்ளது. இதன் ஒரு வெளிப்பாடே பயங்கரவாதம் குறித்து பெருக்கப்படும் சொல்லாடல்களில் பரப்பப்படுகிறது.

உண்மையில் மதத்தை நம்பிக்கையாக கொண்ட பாமர மக்களுக்கிடையில் வேறுபாடுகளோ, வெறுப்போ, பிரச்சனைகளோ இல்லை. பிரச்சனைகளின் மையம் மதத்தை ஒரு கருத்தியலாக முன்வைக்கும் அரசியல் மதவாத அமைப்புகளே. உண்மையில் இந்த அமைப்புகள் மதத்தை காப்பதற்கானவை அல்ல, அடிப்படையில் இவைகள் மதங்களை பயங்கரவாதம் என்கிற அழிவுப்பாதை நோக்கியே அழைத்துச் செல்கின்றன. தனது குரல் நசுக்கப்பட்ட, தனது ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியாத இந்திய பெரும் சிறுபான்மையினரான முஸ்லிம்களில், உரிமைக்கான போராக ஆயுதம் தாங்கிய முஸ்லிம்களாக ஒரு சிறுபிரிவினர் மாற்றப்பட்டுள்ளனர். மற்ற பாமர முஸ்லிம்களின் வாழ்விற்காக தங்களது வாழ்வை பணயம் வைப்பதாக சொல்லும் இந்தப் பிரிவினர், நேற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களாகவும், இன்றைய வன்முறையாளர்களாகவும் மாறியுள்ளனர். அல்ஜீரிய விடுதலைப் போராளியான பிரான்ஸ் பேனன் கூறியதுபோல் `இத்தகைய வன்முறைகளின் நோக்கம் பிறரைக் கொல்வதல்ல, தங்களது சொந்த வாழ்வை தனது சொந்த பொறுப்பில் பணயம் வைப்பதே'. ஆனால், ஒரு பிரச்சார தந்திரமாக, பொதுமக்கள் அல்லது பொதுஇடங்களின் மீதான இவர்களது தாக்குதல் என்பது அரசை தண்டிப்பதற்கு பதிலாக மக்களை தண்டிப்பதாக மாறுகிறது. இத்தகையவர்களை குறிவைத்து பிடிக்க முடியாத அரசு, ஒரு மீனைப் பிடிக்க தொட்டி தண்ணியையும் திறந்துவிட்டு எல்லா மீன்களையும் பாதிப்பிற்குள்ளாகும் நிலையே உள்ளது.

பொதுவாக, பயங்கரவாதம் என்பது இரண்டு வடிவங்களைக் கொண்டது. 1. அரசு எதிர்ப்பாக உருவாகும் பயங்கரவாதங்கள், கலகக்காரர்கள், புரட்சியாளர்கள், தீவிரவாதிகள், விடுதலைப் போராளிகள் இப்படி பல பெயர்களால் அழைக்கப்பட்டவர்களும் இன்று பயங்கரவாதி என்கிற ஒற்றைச் சொல்லிற்குள் அடக்கப்பட்டுவிட்டார்கள். 2. சில அரசுகளே தங்களது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ளவும் பிற நாடுகளின் போராளிக் குழுக்களை பயன்படுத்தி தனக்கு எதிரான அரசுகளுக்கு நெருக்கடிகளை தருவதுமாக பயங்கரவாதத்தை பயன்படுத்துவது. அதாவது அரசு பயங்கரவாதம். இன்று இஸ்லாம் பயங்கரவாதத்தை தலைமை ஏற்றும் நடத்தும் முஜாகிதீன்கள் அமெரிக்க அரசால் வளர்க்கப்பட்ட பயங்கரவாதிகள் என்பது பேசிப் பேசி சலித்துப்போன ஒன்றே. அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ரொணால்ட் ரீகன்தான் பெப்சி, கொக்ககோலா, ஆயுதங்கள், உயிர்கொல்லி எய்ட்ஸ் போன்ற அமெரிக்க பண்டங்களுடன் முதன்முதலாக சுதந்திரம், விடுதலை, ஜனநாயகம் போன்ற கருத்தியல் பண்டங்களையும் (ideological commodities) உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். அடிப்படையில் ரீகன் அமெரிக்க அரசின் கருத்தியலாக கிறித்துவத்தை மாற்ற முயன்றதின் ஒரு விளைவே இது. அவரது ஆட்சியில்தான் ஆப்பிரிக்க, தென்அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் விடுதலைப் போராளிகள் என்ற பெயரில் பல குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த கருத்தியல் பண்டங்களை விநியோகிக்க முயன்றன. இக்குழுக்களே பயங்கரவாதக் குழுக்களாக மாறின. ஆக, உலக பயங்கரவாதத்திற்கான முகவராக இருந்த அமெரிக்காதான் இன்று உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போராளியாக தன்னைக் காட்டிக் கொள்கிறது.

குறிப்பாக, பயங்கரவாதம் என்பது ஒரு குறிப்பிட்டவகை அடையாளமிட்ட மக்களின் பெயரால் நடத்தப்படும் மக்களை உள்ளடக்காத குழுக்களின் நடவடிக்கையே. சமீபத்திய இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளை எடுத்துக்கொண்டால் அவை எந்த சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக வைக்கப்பட்டதான அறிவிப்புகளுடன் நிகழ்த்தப்பட்டாலும் அடிப்படையில் அது அரசையும், முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் குழுக்களையும் வளர்ப்பதாகவே மாறி உள்ளது கண்கூடு. இந்திய முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு ஜனநாயக அரசியல் அமைப்போ, அரசியல் தலைவரோ அற்ற நிலையில் முஸ்லிம்ளின் குரல்களை தாங்களே பிரதிபலிப்பதாகவும், தாங்களே முஸ்லிம்களின் பிரதிநிதி என்பதான ஒரு பொய்த்தோற்றத்தையும் இவை உருவாக்குகின்றன. உண்மையில் இவை முஸ்லிம்களின் அரசியலுக்கு எதிரான ஒரு அரசியலை வளர்ப்பதாகவும், முஸ்லிம்களின் அரசியல் வெளிகளை முற்றிலுமாக அழிப்பதுமாக உள்ளது.

இன்றைக்கான அரசியல் செயல்படும், மனத்தளம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. நேர்மறையான அரசியல் போக்குகளுக்கு பதிலாக எதிர்மறையான அரசியல் போக்குகளே இன்றைய அரசியல் அமைப்புகளை வளர்ப்பதாக உள்ளது. அதாவது தன்அடையாள அரசியலின் ஒரு பாரதூரமான விளைவு தனது வரையறைக்கு வெளியில் தள்ளப்படும் ``பிற'' என்பவையே, மையத்தை கட்டுவதாக இருப்பதே. அல்லது தன் அடையாள அரசியல் பிறவற்றை அம்பலப்படுத்தும் செயல்கள் மையத்துவ அரசியலால் ஏற்புடையவையாக மாறுகிறது. சான்றாக, அமெரிக்க தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷின் வெற்றிக்கு தேர்தலின் முன்பாக வெளியிடப்பட்ட பின்லாடனின் ``எச்சரிக்கை'' ஒளிப்படம் ஒரு முக்கிய பங்காற்றியதைப்போல, சென்ற குஜராத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தெகல்ஹா அம்பலப்படுத்தல்கள் மோடியின் வெற்றிக்கு ஒரு பங்களிப்பைச் செய்ததைப்போல, தன் அடையாள அரசியல் என்பது எதிர்மறைச் சொல்லாடல்களில் கட்டப்படும் மற்றமைத் தளத்திலான நிகழ்வாக மாறியுள்ளது. இறுதியில் `தர்மம் வெல்ல பாடுபடும் நன்மை பயக்கும்' நாயகர்களைவிட, சதிகளில் ஈடுபடும் வில்லன்களே இன்று பெருமைக்கு உரிய எதிர் நாயகர்களாக மாறிவிட்ட ஒரு அவலநிலை இது. நன்மைகள் பற்றிய கனவுகளுடன், தீமைகள் ஆளும் ஒரு எதிர்மன உலகில் நாம் வாழ்கிறோம் என்பதுதான் இன்றைய அரசியலின் பேரவலம் எனலாம். விதிகளைவிட எதிர்விதிகள் ஆதிக்கம் செய்யும் ஒரு சமூக அமைப்பாக உள்ளது. அதனால்தான் பயங்கரவாதம் என்பது எதிர்விதிக்கான தளத்தில் செயல்படுவதால் வெற்றியடைவதாகவும், அதனால் உருவாகும் வெறுப்பின் அரசியல் என்பதே இன்றைய மையமான அரசியலாகவும் இந்தியாவில் உருவாகி வருகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இன்றைய இந்திய அரசியலின் அதிகார விறுப்புறுதிக்கு இந்த பயங்கரவாதம் என்பது தேவைப்படுகிறது என்பதுதான். விருப்பின் அரசியலுக்கு மாற்றாக வெறுப்பின் அரசியல் என்பது வளர்ந்து இந்திய சமூக அமைப்பு ஒரு பாசிச நிலைநோக்கி நகர்வதாக உள்ளது.

உண்மையில் இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது இந்தவகை பயங்கரவாதங்கள், அரசியலற்று, இஸ்லாமிய ஜனநாயக அமைப்போ தலைவர்களோ அற்ற நிலையில், தனக்கும் தனது மக்களுக்கும் குழி தோண்டும் வேலையையே செய்கிறது. இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் பயம் மற்றும் பதற்றத்தையும், தாங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதான கையறுநிலையையும் உருவாக்குவதில் அரசைவிட ஒருபடிமேலாக இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் புதிய புதிய பெயர்களால் உருவாக்கிக் கொண்டே உள்ளன. சென்ற பிஜேபி ஆட்சியில் இத்தகைய பயங்கரவாத குண்டுவெடிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவும் கட்டுப்படுத்தப்பட்டும் இருந்ததான தோற்றம், இஸ்லாமிய மக்களிடம் ஒரு எதிர்மறையான அரசியல் சார்பநிலையை அல்லது ஓட்டுவங்கி அரசியலில் எதிர்நிலை எடுப்பதற்கான போக்கையே துரிதப்படுத்துகிறது. இந்தவகை சொல்லாடல்களின் துணைப்பிரதியான ஒரு வாசிப்பு. அமைதியாக வாழ மதவாத சக்திகளுக்கு ஓட்டளிக்கும் வெறுப்பின் அரசியலாக உருவாகி வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் ஒரு கடினமான காலகட்டத்தை கட்டியங் கூறுபவையாக இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்றால் மிகையாகாது. குஜராத் சோதனைச்சாலை கலவரங்களுக்குப் பின்னும் மோடி சிரித்துக் கொண்டே ஓட்டுக்கேட்க முடிவது அதனால்தான்.

உண்மையில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? யாரை நம்புவது? யாரிடம் சொல்வது? யாரை பின்பற்றுவது? என்பதே அறிய முடியாத நிலை உருவாகி உள்ளது. இத்தகைய குண்டுவெடிப்புகளில் அரசும் ஊடகமும் சொல்லிவரும் வாசகங்கள் பொதுவாக மாற்றப்படாத ஒரேவகைப்பட்ட வாக்கியங்களே. சிலவேளைகளில் குண்டுவெடித்துக் கொண்டிருக்கும்போதே, இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டுவைத்துவிட்டதான பிரச்சாரங்கள் குண்டைவிட வேகமாகப் பரப்பப்படுகிறது. இத்தகைய குண்டுவெடிப்புகள் குறித்த முறையான விசாரணைகளோ, கைதுகளோ, தண்டனைகளோ தர இயலவில்லையா? அல்லது விருப்பமில்லையா? என்பதை புரிந்து கொள்ளமுடியாத ஒரு மர்மபடுத்தப்பட்ட நிலையே நீடிக்கிறது. உண்மையில் இந்தியாவின் `குடிமகன்களாக' உள்ள எல்லா மதத்தினரும் இன்னும் குறிப்பாக சிறுபான்மையினரும் விரும்புவது ஒன்றுதான் அரசு இத்தகைய நடவடிக்கைகளை முறையாக கண்காணித்து விசாரித்து தண்டனை வழங்கவேண்டும் என்பதுதான். குடிமக்களின் பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை அரசால் ஏன் வழங்க இயலவில்லை என்பது ஒரு புதிராக உள்ளது. இங்குதான் அதிகாரத்தின் விளையாட்டை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பங்காரவாதம் என்பதை அரசு ஒரு பொதுசொல்லாடலாக மாற்றுவதையும் அதன் வழியாக தனது அதிகாரத்தை பரவலாக்கிக் கொள்வதையும், தனது வன்முறைசார் நிறுவனங்களான காவல்துறை, நீதித்துறை மற்றும் இராணுவத்தை நியாயப்படுத்துவதையும், தனது அதிகார இறையாண்மையை உறுதி செய்துகொள்வதையும் புரிந்து கொள்ளவேண்டி உள்ளது.

மற்றொருபுறம் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் 4 முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. 1. முஸ்லிம்களை அரசானது தனிமைப்படுத்துவதற்கும் நேரடியாக அவர்கள்மீது ஒடுக்குமுறைகளை செய்வதற்குமான நியாயம் வழங்கப்படுகிறது. 2. இந்திய முஸ்லிம்களுக்கான உரிமைகைளக் கோருவதற்கான ஒரு ஜனநாயக வெளி மறுக்கப்படுகிறது. 3. எந்த மதக்கருத்தியலும் அற்ற அப்பாவியான முஸ்லிம்களும் இதனுடன் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். 4. முக்கியமாக முஸ்லிம் எதிர்ப்பு மதவாத அமைப்புகள் சொல்லும் இஸ்லாம் மதமே அடிப்படையில் ஜனநாயக விரோதமான சகிப்புத்தன்மையற்ற ஒன்று என்கிற கருத்திற்கான நடைமுறைச் சான்றை வழங்குவதாக உள்ளது.

ஆக, யாருக்கு ஆதரவாக இந்த பயங்கரவாதங்களை செய்வதாக சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு எதிரானதாகவே இவை யதார்த்தத்தில் செயல்படுகின்றன. உண்மையில் இந்தியாவில் வளர்ந்து வரும் மதவாத `இந்துத்துவா' பாசிசத்திற்கு துணைபோவதாகவே இத்தகைய நிகழ்வுகளின் விளைவுகள் அமைகின்றன. ஒருபுறம் இந்துத்துவா அமைப்புகள் கிறித்துவ சிறுபான்மையினராக உள்ள மாநிலங்களில் கிறித்துவர்கள் குறிவைத்து தாக்குவதும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள மாநிலங்களில் முஸ்லிம்களை தாக்குவதுமான நடவடிக்கைகளில் இறங்குவதும், அதனை கண்டிப்பதற்கான ஒரு ஜனநாயக தளமும் அற்ற நிலையே இன்றைய இந்திய அரசியல் போக்காக உள்ளது. குண்டுவெடித்து இறப்பதைவிடக் கொடுமையான மனிதத் தன்மையற்ற முறையில கிறித்துவர்களும், முஸ்லிம்களும் உயிருடன் கொழுத்தப்படும் ஒரு கொடூரம் `அஹிம்சையை உலகுக்கு ஒரு அரசியல் நெறியாக, அறநெறியாக அறிவித்த புண்ணிய பூமியில்தான்' நிகழ்கிறது. பெரும்பான்மை மக்களின் பாதுகாப்பு என்பது முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அவர்களது தினவாழ்வை பதற்றத்திற்குள்ளும், பயங்கரத்திற்குள்ளும் வைப்பதன்மூலம், அவர்களையும் மத துவேஷத்திற்குள் ஆளாக்கும் ஒரு அரசியல் போக்கை விரைவுபடுத்தும் நடவடிக்கையாகவே இவை உள்ளன. அடிப்படையில் மதவாத பாசிச அமைப்புகளின் வளர்ச்சிக்கு ஒரு திட்டமிட்ட செயல்திட்டம் போன்று அமைந்துள்ளன இத்தகைய நடவடிக்கைகள்.

இவற்றின் வழியாக திரும்ப திரும்ப, இஸ்லாம் அடிப்படையில் ஜனநாயகமற்ற மதம் என்கிற கருத்தியல் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முகலாய மன்னர்கள் எதேச்சதிகாரிகள் எனவும், அவர்கள் இந்திய மக்களை கொடுமைப்படுத்தினார்கள் என்பதான ஒரு வரலாற்றுக் கதையாடல் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. குறிப்பாக கஜனி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து கோவில்களை கொள்ளை அடித்தான் என்கிற வரலாற்று நிகழ்வு ஒன்று `ஆறா மனப்புண்ணாக'' திரும்ப திரும்பச் சொல்லப்படுகிறது. கஜினி முகமது இஸ்லாமின் வழிகாட்டுதல் அடிப்படையிலோ அல்லது இஸ்லாத்தை பரப்பும் நொக்கிலோ, இந்த கொள்கைகளை நிகழ்த்தவில்லை. அதாவது இதனை ஒரு மதரீதியான படையெடுப்பாக பார்க்க முடியுமா? என்பதுதான். ராஜராஜசோழன் இலங்கைமீது படையெடுத்ததை இலங்கைமீதான இந்து மேலாண்மைக்கான முயற்சியாகவோ, அல்லது அவனது சைவநெறி பரவலாக்கத்திற்கானதாகவோ, அதாவது ஒரு மதஅடிப்படையிலான படையெடுப்பாகவோ புரிந்துகொள்ளமுடியுமா? கஜனி முகமது ஒரு மன்னன் என்கிற அடிப்படையில் தனது ஆதிக்கத்திற்கான போரைத்தான் நடத்தினான். போர்களின் அடிப்படை பொருளை கொள்ளை அடிப்பதுதானே. தற்போது பெட்ரோலை கொள்ளை அடிக்க அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கான் மீது போர் தொடுத்ததைப்போல. அதனால் கஜனியை முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதியாக கொள்வது என்பது ஒரு வரலாற்று நிகழ்வை தொன்மமாக மாற்றி கட்டப்படும் கதையாடலே. இதுபற்றி ரொமிலா தாப்பர் முன்வைக்கும் வரலாற்றுத் தகவல்கள் வரலாற்று உருவாக்கத்தில் இந்தவகை கதையாடலின் (narrations) அரசியலை அவை நிகழ்த்தும் வன்முறையை வெளிப்படுத்துகிறது. (இப்பகுதியை எனது மொழியும் நிலமும் என்கிற நூலிலிருந்து பொருத்தப்பாடு கருதி அப்படியே தருகிறேன்.)

இப்படையெடுப்பு குறித்து 5-வகை கதையாடல்கள் உள்ளன என்கிறார் தாப்பர்.

1. துருக்கிய-பார்சிய கதையாடல் - தென்மேற்கு ஆசிய வரலாற்றில் அரேபிய - பார்சிய அதிகார உருவாக்கம், இஸ்லாத்துடன் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டே உருவாகுகிறது. கஜனி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு, பார்சிய கதையாடலில், கஜனியை ஒரு `இஸ்லாமிய வீரனாக' (Champion of Isalm) காட்டுவதன் மூலம், அரேபிய இஸ்லாமின் மீது ஆதிக்கம் வகிக்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதாவது குர்ரானில் சொல்லப்பட்ட அரேபிய சமூகத்திற்கு முந்தைய லாட் (Lat),உஸ்ஸப (Uzza)  மற்றும் மனாத் (Manat) என்கிற மூன்று கடவுள் சிலைகள் உடைக்கப்பட வேண்டியவையாக இஸ்லாமை உருவாக்கிய தூதர் முகம்மதுவால் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இரண்டு முகம்மது காலத்திலேயே உடைக்கப்பட்டது. பிறிதொன்றான மனாத் (சோமனாத் என்பதை ஷி–விணீஸீணீ‡  மனாத்தின் இடம் என்கிற அரபி சொல்லாக கூறப்படுகிறது.) சோமநாத புரத்தில் இருப்பதாக நம்பப்பட்டு அதனை உடைக்கும் ஒரு புனிதப் போராக வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் பார்சி_துருக்கிய ஆதிக்கம் இஸ்லாத்திற்குள் நிறுவப்படுவதற்கான முயற்சியை உணரலாம். தென்மேற்கு ஆசியாவில், அரேபிய, துருக்கிய, பாரசீக வரலாறு என்பது இஸ்லாமின் வளர்ச்சி/வீழ்ச்சியுடன் தொடர்பு கொண்டதாக இருந்ததை, அவ்வரலாற்றை படிப்பவர்கள் காணமுடியும்.

2. ஜைன-சைவ முரண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கதையாடல், சிவனைவிட மகாவீரர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவரது சிலைகள் உடைக்கப்பட வில்லை என்பதைப்போல இப்பிரச்சனையை சைவ/ஜைன முரணாக விளக்குகின்றன.

3. சமஸ்கிருத கல்வெட்டுகள் சோமநாதபுரம் கோவில் தாக்கி அழிக்கப்பட்டதைப் பற்றி அதிகமாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் அக்கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்களை தாக்குவதும், திருடுவதும் அருகில் இருந்த இந்து மன்னர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. சோமநாத புரத்தில் மசூதி ஒன்று கட்டுப்படுவதற்காக, அங்கு குடியேறி இருந்த அரேபிய மு:ஸலிம்களுக்கு நிலம் ஒன்று விற்கப்பட்டதிற்கான பத்திரம் அன்றே அரேபி சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து, சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த துருக்கிய சுல்தான்களுக்கு எதிராக, சோமநாதபுரத்தைச் சேர்ந்து அரேபிய முஸ்லிம்களும் போராடி உள்ளனர். அப்போராட்டத்தில் இறந்து போன பரீத் என்கிற முஸ்லிமின் நினைவாக ஒரு கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது.

4. பிரிட்டிஸ் House of Commence-ல் இப்பிரச்சனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு, இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கூறிக் கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்பட்ட இரண்டு சோமநாதபுரம் வாயிற்கதவுகளை, ஆங்கிலேயப்படை பாரசீகத்திலிருந்து மீட்டு வந்தது. ஆனால், அவ்விரண்டு கதவுகளும், எகிப்திய வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதால் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதில்லை என நிரூபணம் ஆனவுடன், அதனை ஆக்ராவில் ஒரு கோட்டைக்குள் தூக்கிப் போட்டுவிட்டனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியமே முதன் முதலாக இந்த பிரச்னையின் வகுப்புவாத விதையை ஊன்றி, நீரூற்றி வளர்த்தது.

5. K.M. முன்சி என்பவரால் முன்வைக்கப்பட்ட `இந்துக்களின் ஆழ் மனதிற்குள்ளான அவமான உணர்வு' துடைத்தெறியப்பட வேண்டும் என்பதான வகுப்புவாத கதையாடல். (Somanatha and Mahmud - Romila Thapar - Frontline April 23, 1999)

ஆக, ஒரு வரலாற்று நிகழ்வு என்பது பல்வேறு கதையாடல்மூலம் அரசியல் நிகழ்வுகளாக மாற்றப்பட்டு, மக்களினத்தின் வாழ்வுடன் பங்கு பெறுவதாகிறது. ஒவ்வொரு சமூகமும், வரலாற்றை வாசிப்பதன் மூலம், தனதுகால அரசியல் வரலாற்றாக அதனை மாற்றிவிடுகிறது. கஜினி முகமதுவின் சோமநாதபுர படையெடுப்பு என்பது இந்திய வகுப்புவாத சக்திகளின் கையில் நிகழ்கால வரலாறாக  மாற்றப்பட்டுள்ளது. அது முன்சி கூறியதுபோல `இந்துக்களின் ஆழ்மனதில் ஒருவகை `அவமான உணர்வாக' இறக்கப்பட்டதாக கூறி அதனை கிளறிவிடுவதாக இன்றைக்கான அரசியல் நிகழ்வுகள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டுள்ளன. ``இந்நீண்ட பகுதியில் உள்ள ஒரு முக்கிய குறிப்பு கஜனி முகமதுவை எதிர்த்து சண்டையிட்ட ஒரு இஸ்லாமியரும் குறிப்பிடப்படுவதுதான். ஆக, கஜனி படையெடுப்பு என்பது ஒரு வழக்கமான ஆக்ரமிப்பு போரே தவிர அதில் இஸ்லாமின் மதரீதியான பங்கு என்ன? என்பது அதை முன்வைப்பவர்களுக்கே வெளிச்சம்.

இறுதி முகலாய மன்னரான பகதூர் ஷா-வின் ஜனநாயகப் பண்புகள் நண்பர் ராமானுஜத்தால் கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளது. (பார்ப்பனிய இந்திய தேசியம் உருவாக்கத்தின் தொடக்கப்புள்ளி; 1857, ராமானுஜம், தீராநதி) இந்தியாவை ஆண்ட பேரரசர்களில் ஒருவரான அக்பர் மிகப்பெரிய ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவராக மாற்று மதங்களை அங்கீகரித்து அதற்கு முழு வழிபட்டு உரிமைகளையும் அனுமதித்தவராகவும், ஒருபடி மேலாக அவரே ராஜபுத்திர பெண்களை திருமணம் செய்துகொண்ட மதச்சார்பற்ற மன்னராகவும் இருந்துள்ளார். முஸ்லிம் மன்னர்கள் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவர்களாக சுட்டிக்காட்டுவது நமது நோக்கமில்லை. ஒருவருக்கு ஜனநாயகப் பண்பையோ, சகிப்புத் தன்மையையோ ஊட்ட மதங்கள் மட்டுமே அடிப்படை காரணங்களாகிவிடாது. கிறித்துவரான ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் பாசிஸ்டுகளாக ஆனதற்கு கிறித்துவத்தை குறைகூற முடியாது. பிறமத வெறுப்பு என்பது எல்லா மதங்களினதும் அடிப்படையாக உள்ளது. இந்துமதம் என்று சொல்லப்படும் ஆரிய - வேதமதம், பழமையான மதம் என்பதால் தன்னை பிறமதத்துடன் ஒப்பிட்டு மதவெறுப்பை விதைப்பதற்கான வாய்ப்பற்ற காலத்தில் அது நிறுவனமானதே காரணம் எல்லாம். அதே மதம் வரலாற்றில் பௌத்தத்தை அழித்ததை வைத்து அதனை பொதுப்பண்பாக வரையறுக்க முடியுமா?

ஆக, அடிப்படையில், மதங்கள் எல்லாமே ஜனநாயகத் தன்மை அற்றவைதான். காரணம் அவை ஒரு குறிப்பிட்ட மனிதர்களை தனது மத அடையாளத்திற்குள் வரையறுப்பதும், தனது மதமே, நிலைபாடே உயர்ந்தது என்று சொல்வதும் அடிப்படையில் அவற்றில் பிற மத நிராகரிப்பு இருப்பதையே காட்டுகிறது, தவிரவும், இன்று நவீன தேசியப்பார்வை கொண்ட ஒரு சொல்லாடல்களத்தில் மதங்களின் ஜனநாயகம் பற்றி பேசமுடியாது. காரணம், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ காலத்தில் உருவாகி வந்த பகுத்தறிவுக் கருத்தியல் அடிப்படையைக் கொண்ட ஒரு அரசியல் சொல்லாடலாகும். அது இன்றைக்கான அரசியல் பார்வையே ஒழிய அதைக்கொண்டு பண்டைய மதங்களை நாம் அறுதியிட முடியாது. ஜனநாயகம் என்பதன் அடிப்படை படிநிலை அமைப்பாகும். மேற்கத்தியம் பின்பற்றும் கிறித்தவ மதத்தில், இந்த படிநிலை அமைப்பு இருப்பதால் பெரும்பான்மை, சிறுபாண்மை என்கிற ஜனநாயகக்கருத்தியல் அவசியமானதாகும். இஸ்லாமில் இந்த படிநிலை அமைப்போ அல்லது உலகம் முழுவதற்குமான ஒரு தலைமையை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ இல்லை. அதனால், அம்மதத்திற்குள் ஜனநாயகம் என்கிற பண்பிற்கு பகரமாக சமத்துவம் என்கிற பண்புநிலை இருப்பதைக் காணமுடியும். ஆயுத்துல்லா கோமேனிக்குப் பிறகே உலகத் தலைவர் என்பதான கருத்தாக்கம் இஸ்லாமிற்குள் நுழைந்ததை மம்தானி சுட்டிக் காட்டுகிறார்.

சான்றாக, வேதமதங்களில் நிலவிய சமத்துவமின்மை என்பது அன்றைய சமூக வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக பணியை ஆற்றியிருக்கலாம், ஆனால் இன்று அது என்னவாக இயக்கம் கொள்கிறது என்பதே அதன் தன்மையை தீர்மானிக்கிறது. இஸ்லாம் ஒரு முடியாச்சிமுறையை மட்டும் கொண்ட அரசு மதமல்ல. அதில் `உம்மா'என்கிற ஒரு ``சகோதரத்துவ'' அரசாட்சிமுறை உள்ளது.அது ஒருவகை வணிக ஜனநாயக்ததை அல்லது உரிமைகளைக் கொண்டது. அது சரியானது என்பதோ அதுவே உலகை உய்விக்கும் வழி என்பதோ அல்ல இங்கு நாம் சொல்ல வருவது. இஸ்லாம் தனது மத அடிப்படைகளில் ஒன்றாக சகிப்புத்தன்மையின்மையையும் ஜனநாயக மறுப்பையும் கொண்டதாக இல்லை என்பதே. ஆக, ஜனநாயகம் என்கிற பண்பை பண்டைய மத அமைப்புகளில் தேடுவது, நவீன அறிவியலை புனிதமறைகளில் தேடுவதைப்போலத்தான்.

சான்றாக, இன்றைய சவுதிஅரேபிய இஸ்லாமிய முடியாச்சியை எடுத்துக் கொள்வோம். அந்நாட்டின் அரசாட்சி முறையை இஸ்லாமிய அரசாட்சிமுறை என்று கூறிவிட முடியாது. ஆனால், தனது ஆளுகை தொழில்நுட்பத்திற்கு இஸ்லாமிய நவீன தேசியக் கருத்தியலைக்கொண்ட வகாபிமிசத்தை ஆளும் கருத்தியலாகக் கொண்டிருக்கிறது. இங்கு நாம் கூறவருவது இந்து மதம் என்பதை எப்படி ஒற்றையான அல்லது ஒருபத்தானதாக வரையறுக்க முடியாதோ அப்படியே இஸ்லாமையும் வரையறுக்க முடியாது அது ஒவ்வொரு தேசியத்திலும் ஊன்றப்பட்டு அந்த தேசியத்தின் பெரும்பான்மை மதங்களின் பாதிப்புகளில் திருத்தி தன்னை தகவமைத்துக் கொண்டதால்தான் அது பல தேசிய இனங்களின் பண்பாட்டிலும் தனது இருப்பைக் கொண்டிருக்க முடிகிறது. இந்து பௌத்த மத பாதிப்பைக் கொண்ட இந்தோனேசியாவில் உள்ள இஸ்லாமும், இந்துமத பாதிப்பைக் கொண்ட இந்தியாவில் உள்ள இஸ்லாமும், பார்சி மத பாதிப்பைக் கொண்ட ஈரானில் உள்ள இஸ்லாமும், நவீன வகாபிசத்தின் ஓரமைவாக்க மதத்தன்மைக் கொண்ட அரேபியாவில் உள்ள இஸ்லாமும் ஒன்றல்ல. இஸ்லாம் பல பண்பாடுகளைக் கொண்ட மதம். அதனை ஒருபடித்தான ஒற்றைப் பண்பாட்டைக் கொண்டதாக சுருக்க முடியாது.

குறிப்பாக தமிழகத்திற்குள்ளேயே உருது பேசும் முஸ்லிமும் தமிழ் பேசும் முஸ்லிமும் ஒருபடித்தானவர்கள் அல்ல. இன்னும் குறிப்பாக தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் கலாச்சாரமும் நம்பிக்கைகளும், தென்னாற்காடு முஸ்லிம்களின் கலாச்சாரமும் நம்பிக்கைகளும் வெவ்வேறானவை. பிரச்சனைஇன்று இஸ்லாமிய வகாபிச தீவிரவாத அமைப்புகள் ஒருபடித்தான இஸ்லாமை கட்டமுயல்வதைப்போலவே இந்து தீவிரவாத அமைப்புகள் ஒருபடித்தான இந்து மதத்தை கட்ட முயல்கின்றன. இவை வரலாற்றின் வழியாகப் பெறப்படும் ஓரமைவாக்க கருத்தியலின் வன்முறை சார்ந்த பிரச்சனையே ஒழிய, அடிப்படையில் இரு மதங்களுக்கிடையிலான பிரச்சனை அல்ல. பிரச்சனையின் அடிப்படை இவை தேசியக்கருத்தியல் போன்ற ஒற்றை அடையாளத்தை திணிக்க முயலும் நவீன அரசியல்வாதத்தின் விளைவே. இது ஒருவகை நவீனத்துவத்தின், தேசியத்தின், உலகமயமாக்கலின் ஒரு படித்தான அரசியல் கருத்தியலின் விளைவாகும். மதங்களுக்கும் ஜனநாயகத்திற்கும் உள்ள உறவு என்பது நேரெதிரானது என்பதைவிட இன்றைய ஜனநாயக சொல்லாடலைக் கொண்டு பண்டைய மதங்களின் தன்மைகளை வரையறுக்க முடியாது என்பதே முக்கியம்.

உண்மையில் முகலாயர்கள் இஸ்லாமைவிட தாங்கள் பிறந்து வளர்ந்த நாடுகளின் குடியாண்மைக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களே. இன்னும் குறிப்பாகச் சொன்னால், முகமது நபியால் உருவாக்கப்பட்டு, அதன்பின் வந்த 5 கலீபாக்களால் பரவலாக்கப்பட்ட இஸ்லாமியக் முடியரசு என்பது தனது ஆளுகைக்கு உட்பட்ட எல்லா நாடுகளையும் இஸ்லாமிய நாடுகளாக மாற்றவில்லை. மேலும், அவை மாற்றுமத நம்பிக்கைகளை ஒழித்ததாகக் கூறமுடியுமா? வழக்கமாக இந்திய முஸ்லிம்களை முகலாய வரலாற்றுடன் இணைத்து அவர்களை வரையறுப்பது என்பது இந்திய தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தி வெறுப்பை விதைக்கும் வேலையே. நுட்பமாக இந்திய முஸ்லிம்களை தேசியத்திற்கு வெளியில் நிறுத்தும் முயற்சியே. முகலாயர்கள் இஸ்லாத்தை தங்கள் மதமாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதால் அவர்களது ஆட்சிமுறையை ஒரு மதவாத ஆட்சிமுறையாக பார்க்க முடியுமா? அது மதவாத ஆட்சிமுறை என்றால் பெரும்பாண்மையான இந்து மக்கள் அதை எதிர்த்து போராடாமல், முகலாயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற ஆங்கிலேயர்கள் வரவேண்டிய நிலைக்கு ஆளானது எப்படி? முகலாயர்கள் பல நூற்றாண்டுகள் இந்நாட்டை ஆண்டபோது அவர்கள் முற்றிலுமாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லிம் மதத்தை பரப்பியிருக்க முடியும். அதேபோல் கிறித்துவ பிரிததானியர்கள் ஆண்டபோது இந்தியாவில் கிறித்துவத்தை முழுமையாக பரப்பியிருக்க முடியும். அப்படி ஒன்று வரலாற்றில் நிகழுவது சாத்தியமில்லை. காரணம் அன்று மதம் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்ததே ஒழிய, அரசியலாக இல்லை. ஆனால், இன்று மதம் என்பது மனித வாழ்வில் அங்கமாக இல்லை அரசியலாக உள்ளது. 

சுருக்கமாகக் கூறுவது இதுதான், மதங்கள் ஜனநாயகத்திற்கும் இன்றைய புதியவகை அரசியல் அமைப்பிற்கும் தகவமைத்துக் கொள்ளமுடியாதவை. சமூகத்தை பின்னோக்கிய `உன்னத கற்பிதங்களுக்கு' இழுப்பவை.அவை இன்றைய மனிதன் முகங்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எந்தவித தீர்வையும் தராதவை. அதனால் மதத்தின் பெயரால் செய்யப்படும் எல்லா அரசியல் நிலைபாடுகளும் நிராகரிக்கப்பட வேண்டியவை. பயங்கரவாதம் என்பது மதங்களின் வரலாற்றுத் தன்மையால் ஒரு வன்முறையை நிகழ்த்தும் உரிமை பெற்றதாக தங்களைக் கருதிக் கொள்கின்றன. அரசும் இந்த வரலாற்றை பெருக்கியபடி இருப்பதில்தான் தனது அதிகாரத்தை தக்க வைக்கிறது. ஆக, பயங்கரவாதம் என்பது அதிகாரத்தின் ஒரு நுண்விளையாட்டே அதிலிருந்து தப்பி பிழைப்பதே இன்றைக்கான ஜனநாயக அரசியலுக்கான அடிப்படையாகும். இந்திய முஸ்லிம்கள் ஒரு ஜனநாயக அமைப்பை கண்டடைந்து அதை வலுப்படுத்துவது மட்டுமே இந்த பாசிச அவலச் சூழலில் அவர்களை காத்தருளுவதாக இருக்குமே ஒழிய புனித ஜிகாத்துகள் மேலும் அவர்களை கொன்றொழிப்பதற்கும், தனிமைப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்குமே தள்ளிச்செல்லும். `அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம். யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல்' என்றார் லெனின். இன்றைக்கான இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினருக்குத் தேவை அரசியல் அதாவது ரத்தம் சிந்தாத ஒரு யுத்தம். பயங்கரவாதம் எனும் இரத்தம் சிந்தும் அரசியல் அல்ல.

-ஜமாலன்.                                                             தீராநதி-01-01-2009.

பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம் - மாயா

தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீன் என்கிற இரண்டு   தேசங்களும் பெருந்தேசிய இனவாதத்தால் கடுமையான போரை சந்தித்துள்ளன. சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த அநீதி யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு அவலமான நிலைக்குத் தள்ளப்பட்ட இரண்டு இனமக்களும் இன்று கடுமையான அச்சுறுத்தலுக்கும் உயிரச்சத்திற்கும் ஆளாகி உள்ளனர். தினமும் இரண்டு தேசங்களிலும் நடைபெறும் போர் கொண்டுவந்து கொட்டும் செய்திகளும் அவை ஏற்படுத்தம் மனத்துயரும் நமது மனசாட்சியை உலுக்கக்கூடியதாக உள்ளது. இவ்விரு தேசங்களின் பிரச்சனைகளை ஒப்புநோக்கி பேசும் மாயா என்பவரின் உயிரோசைக் கட்டுரை இங்கு மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நடைபெறும் இந்த யுத்தம் பற்றிய ஒரு இஸ்ரேல் செய்திப் பத்திரிக்கையின் செய்தி இது.  இச்செய்தியாளர் முன்வைக்கும் செய்தி முக்கியமானது. ஹமாசின் ராக்கெட் தாக்கதலைக் காரணம் காட்டி இஸ்ரேல் படைகளின் அநீதியான தாக்குதலை நியயாப்படுத்திவிட முடியாது. அதேபோல், புலிகளின் செயல்களுக்காக சிங்கள இனவெறியர்களையும் இனவெறி அரசையும் நியாயப்படுத்திவிட முடியாது.  இந்திய தமிழக அரசியல் சூழலில் நிகழும் உள்ளநாட்டு அரசியல் குழப்பம் ஈழப்பிரச்சனையிலும் பிரதிபலிப்பதால் அழிக்கப்படுவது ஒரு இனம் என்பதை நாம் உணரவேண்டும். ஈழத்தில் மற்றும் பாலஸ்தீனத்தில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்கிற சர்வேத நிர்பந்தத்தை ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் முன்வைப்பது “அரசியல் சரி“ என்கிற மொன்னை வாதத்தையும் தாண்டி மிகமுக்கியமானது. ஆண்டுத் துவக்க்தில் நாம் முகங்கொடுக்க வேண்டிய மிக முக்கியப்பிரச்சனைகள் இவை.

காஸாபகுதயிலிருந்து வந்த இரண்டு நேரடி குரல்களை நண்பர் நாகார்ஜீனன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதன் சுட்டிகள்

1. காஸாவிலிருந்து ஒரு குரல் - ஸாமி அப்துல் ஷாஃபி

2. காஸாவிலிருந்து இன்னொரு குரல் - ஃப்ரீஸ் அக்ரம்

பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம் - மாயா

ரண்டு இனவாத அரசுகளின் ராணுவங்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இணை அரசுகளுக்கு நேர்ந்த பின்னடைவு கடந்த வாரம் உலகெங்கும் செய்தியாகின. ஒன்று இஸ்ரேல்-பாலஸ்தீனம், இன்னொன்று இலங்கை-தமிழ் ஈழம். பாலஸ்தீன காசா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை 400ஐத் தாண்டி வளர்ந்துகொண்டிருக்கிறது. வான் தாக்குதலை அடுத்து தரைவழி தாக்குதல் தொடுத்திருக்கிறது யூத இஸ்ரேல் அரசு.

பல மாதங்களின் முயற்சிக்குப் பிறகு விடுதலைப் புலிகள் காலி செய்துவிட்டுப் போன கிளிநொச்சியை சிங்கள இனவாத இலங்கை ராணுவம் கைப்பற்றியது. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் சிங்கள விமானங்களின் குண்டு மழையில் எத்தனை பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. "பயங்கரவாத" அமைப்பாக கருதப்படும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் செம்பிறை (செஞ்சிலுவையின் மற்றொரு பெயர்) போன்ற நிவாரண அமைப்புகள் இருப்பதால் பாதிப்பு பற்றிய நம்பத்தகுந்த கணிப்பு உண்டு. வடக்கு இலங்கையில் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து செஞ்சிலுவை போன்ற அமைப்புக்களை இலங்கையின் சிங்கள ராணுவம் புத்திசாலித்தனமாக வெளியேற்றிவிட்டதால் அப்பாவிகள் எத்தனை பேர் செத்தாலும் கணக்கில்லை. இலங்கை-ஈழம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பொதுவான அம்சங்களும் உண்டு வேறுபாடுகளும் உண்டு.

நாஜிக்களின் அழித்தொழிப்பை அடுத்து தங்களுக்கென சொந்தமாக ஒரு தேசம் என்ற கனவை நனவாக்குவதற்கான உடனடித் தேவையை யூதர்கள் உணர்ந்தார்கள். முன்னொரு காலத்தில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த ஜெருசலேமின் சுற்று வட்டாரப் பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்தது உணர்வுப்பூர்வமான முடிவு. ஆனால் "ஆளற்ற ஒரு பிரதேசத்திற்கு, நிலமற்ற யூதர்கள்" என்று அப்போது வெளியிடப்பட்ட கவர்ச்சிகரமான கோஷம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஏமாற்று வாசகம் என்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது தெரிகிறது. 1948ல் ஐ.நா சபையின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநீதி விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு அந்தப் பகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. 1919ன் கணக்குப்படி அங்கு 7 லட்சம் அராபியர்கள் இருந்தார்கள். யூதர்களின் "ஊடுருவல்" 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள். இன்று இஸ்ரேலின் உளவுப் படை மொஸாத் செய்வது போன்ற அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடந்தது. பணமும் பலவந்தமும் கொண்டு மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரேயடியாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அடால்ப் ஹிட்லரின் யூத அழித்தொழிப்பு வெறித்தனம்.

நாஜிக்களின் அழித்தொழிப்பால் உலகமே யூதர்களின் மீது பரிதாபம் கொண்டிருந்த சமயத்தில், பாலஸ்தீனத்தில் யூதர்கள் செய்த ஆரம்ப கால அநீதிகள் கண்டும் காணாமல் விடப்பட்டது. அராபியர்களிடமிருந்து நிலங்கள் காசு கொடுத்து வாங்க முயற்சி நடந்தது. அந்த நிலங்களை மீண்டும் ஒரு அராபியருக்கு விற்க முடியாது என்ற விதியின்கீழ் நில வர்த்தகங்கள் நடந்தன. அராபியர்களின் தேசத்தை கபளீகரம் செய்யும் முயற்சி இது என்று விரைவில் உணர்ந்துகொண்ட அராபியர்களை நேர் வழியில் விரட்ட முடியாமல் போனதால், பிரிட்டன் ராணுவத்தின் உதவியுடன் பலவந்தமாக அராபியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தார்கள். கடந்த நூற்றாண்டில் ஒரு இனக்குழுவுக்கு எதிராக நடந்த முதல் மாபெரும் அழித்தொழிப்பின் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த யூதர்கள், மறு நொடியில் அராபிய இனக்குழுக்களை ரகசியமான வழிகளில் அழித்தொழிக்கும், விரட்டியடிக்கும் புதிய நாஜிக்களாக மாறினார்கள். அகதிகளாக, நாடற்றவர்களாக விரட்டப்பட்ட அராபியர்கள் தங்களுக்கென ஒதுக்கிக்கொண்ட சிறிய பகுதியில்கூட முழு சுதந்திரத்துடன், தன்மானத்துடன் வாழ அனுமதிக்கக்கூடாது என்ற இஸ்ரேலின் வன்முறை மனோபாவம்தான் ஹமாஸ் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவைப் பெருக்குகிறது. இரண்டு சமூகங்களும் ஒரு தேசமாக இணைந்திருப்பதை எதிர்க்கும் இஸ்ரேல், தனது நாட்டில் சிறுபான்மையினராகக்கூட அராபியர்கள் இருப்பதை அனுமதிப்பதில்லை. "தென்னாப்ரிக்காவின் நிறவெறி (அபார்தீட்) கொள்கையைப் போன்றதுதான் இஸ்ரேலின் பாலஸ்தீனிய கொள்கை. அதனால் நிறவெறிக்கெதிராக உலக நாடுகள் எவ்வாறு கடுமையாக நடந்துகொண்டதோ அதே போல இஸ்ரேலிடமும் நடந்துகொள்ள வேண்டும்" என்கிறார் ஐ.நா பொது சபையின் தலைவர் மிகேல் டி-எஸ்காட்டோ புராக்மேன்.

புராக்மேன் இஸ்ரேலை வெறுப்பவர், அதனால்தான் இவ்வாறு சொல்கிறார் என்ற வாதத்தை முன்வைக்கிறது இஸ்ரேல். எனினும் ஜூவ்ஸ் பார் ஜஸ்டிஸ் இன் த மிடில் ஈஸ்ட் என்ற யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரால் நடத்தப்படும் இயக்கம் இஸ்ரேலின் பல பொய்களை அம்பலமாக்கி வருகிறது. மண்ணின் மைந்தர்களுக்கு தங்கள் வாழ்விடம் குறித்த எந்த உரிமையும் இல்லை என்ற காலனியாதிக்க மனோபாவத்துடன் அராபியர்களை விரட்டியடித்ததுதான் இத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை. எவ்வாறு யூதர்கள் மிகவும் திட்டமிட்டு அங்கிருந்து அராபியர்களை விரட்டிவிட்டு, அதை ஒரு யூத தேசமாக்கினார்கள் என்பதை அந்த அமைப்பு முழுமையான பதிவு செய்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன அராபியர்கள் வாழ வழியே இல்லை என்பதால்தான் நோம் சோம்ஸ்கி போன்ற அறிஞர்கள்கூட யூதர்களுக்கும் பாலஸ்தீன அராபியர்களுக்கும் தனித் தனி தேசங்களை கொடுத்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல், லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு நடுவில் ஒண்டிக்கொண்டு வாழும்படி உருவாக்கப்பட்ட தேசம் பாலஸ்தீனர்கள் உண்மையில் விரும்பிய தேசம்தானா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இவ்வளவு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகு யாசர் அராபத்தின் கட்சி சரிவைச் சந்தித்திருக்காது.

வரலாற்றுரீதியாக பாலஸ்தீனர்களுக்கு உள்ள வாழ்வுரிமையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்ய யாசிர் அராபத் பெரும் பங்காற்றினார். தான் தலைவராக வேண்டும் என்பதற்காக யூதர்களுக்குத் தனி தேசம், அராபியர்களுக்குத் தனி தேசம் என்ற சமரசத்தையே முன்வைத்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்படுவது உண்டு. எனினும் யூத-அராபிய தரப்பில் நிலவிய மிகுந்த மனக் கசப்பால் அவர்கள் ஒரு தேசத்தின்கீழ் வாழ்வது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பது ஏற்கக்கூடிய வாதம்தான். ஆனால் யாசர் அராபத்தின் சமாதான முயற்சிகளுக்கு நடுவே ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வந்தது. யாசர் அராபத்தின் மரணத்திற்குப் பிறகு அவரது கட்சி இன்னும் பலவீனமானது. அவருடைய கட்சியுடனும் இஸ்ரேலும் அதன் காட் பாதரான அமெரிக்காவும் கைகுலுக்கத் தொடங்கியது பாலஸ்தீனியர்களிடையே எதிர்மறை எண்ணத்தை விதைத்திருக்க வேண்டும். அரபு நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை நிறுவும் அமெரிக்கக் கனவு மீண்டும் பலித்துவிட்டது போல் தெரிந்த சமயத்தில் பாலஸ்தீனத்தில் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. அரை நூற்றாண்டு காலமாக பாலஸ்தீனியர்கள் மனதில் விதைக்கப்பட்ட வெறுப்பு ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தின் வடிவில் வளர்ந்து நின்றது. 2006 நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் பெரு ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதுவரை தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திய அமைப்பு சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றதை இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. புதிய பாலஸ்தீன அரசுக்கு கொடுத்து வந்த அத்தனை நிதியுதவியையும் நிறுத்தினார்கள். ஒரு தேசத்திற்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருந்த பாலஸ்தீனத்திற்கு அது பேரிடி. வெளிநாட்டு உதவி இல்லாவிட்டால் அரசு ஊழியர்கலின் சம்பளத்தைக்கூட போட முடியாத நிலை. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கா தேர்தலில் தோற்ற பிரதமர் மஹ்மூத்தின் பதா கட்சியின் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அணிவகுத்தன. ஹமாஸ்-பதா இடையே குட்டி போர் வெடித்தது. அமெரிக்கா செய்த அரசியலால் இன்று பாலஸ்தீனம் ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காசா, பதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் கட்டுப்படுத்தும் வெஸ்ட் பேங்க் என தனித் தனி பிரதேசங்களாக பிளவுபட்டிருக்கிறது.

இடையிடையே பயங்கரவாதி என்று வர்ணித்த ஹமாஸுடன் தற்காலிக அமைதி ஒப்பந்தங்களை செய்துகொள்ளத் தயங்காத இஸ்ரேல், அந்த ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசியில் கையெழுத்தான ஒப்பந்தத்திபடி பாலஸ்தீனுக்குள் வரும் பொருட்களை அனுமதிக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் ஒன்று பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதே இல்லை அல்லது மிகக் குறைவான அளவிலான பொருட்களையே அனுமதித்து வருகிறது. இதனால் மருந்து, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை பாலஸ்தீனத்தை ஒரு குட்டி சோமாலியா போல மாற்ற அச்சுறுத்துகிறது. இந்த நிலையில்தான் இந்த டிசம்பரில் முடிவுக்கு வரும் அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாததைக் கண்டித்து கடந்த நான்கு வாரங்களில் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை அதிகரித்தது ஹமாஸ். அதையே ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீனை மீண்டும் ஆக்கிரமித்திருக்கிறது இஸ்ரேல். அத்தியாவசியப் பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வருகிறார்கள் என்று இஸ்ரேலும் பிரிட்டனும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன.
தேசங்களின் இறையாண்மையைவிட தங்களின் நோக்கங்களே பெரிது என்று கருதும் இஸ்ரேல் மற்ற பல நாடுகளின் எல்லையில் ரகசிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. இன்னும் முழுமையான தேசமாக உருவெடுக்காத பாலஸ்தீனத்தினத்திற்குள் அப்படி எக்கச்சக்கமான "ஆபரேஷன்கள்" நடத்தப்பட்டுள்ளன. தனக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதும் ஆட்கள் கடத்திச் செல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் நிரந்தரமாக காணாமல் போவார்கள். அப்படி சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதிகளை கடத்திச் சென்றதுதான் ஹமாஸ் இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் கடத்தக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி. இஸ்ரேல் சிவிலியன்களை பிடித்துச் செல்வதை பிரச்சனையாக்காத உலக நாடுகள், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி மிகுந்த அக்கறை காட்டுவதில் உள்ள அரசியலை கண்டிக்கிறார் சாம்ஸ்கி.

பாலஸ்தீனுக்கு உதவ வேண்டிய சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் ஆளுக்கொரு அரசியல் காரணங்களால் ஒதுங்கி நிற்பது அதைவிட பெரிய வேடிக்கை. எகிப்தின் எல்லையில் உள்ள பாலஸ்தீன எல்லைகூட அத்தியாவசியப் பொருட்களுக்காக திறந்துவிடப்படவில்லை. எவ்வாறு இலங்கையில் புலிகள் நலனையும் தமிழர்கள் நலன்களையும் பிரித்துப் பார்க்க மறுக்கிறார்களோ அதே போல பாலஸ்தீனத்தில் ஹமாஸின் நலனையும் அராபியர்களின் நலனையும் பிரித்துப் பார்க்க அராபிய தேசங்கள் மறுக்கின்றன. தங்களின் ஜனநாயகமற்ற அரசுகளுக்கும் ஹமாஸின் எழுச்சி அச்சுறுத்தலாக மாறும் என்று அராபிய தேசங்கள் அஞ்சுகின்றன. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா இந்த விஷயத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருப்பது தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பயத்தால்தான்.

யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற பெயரில் ஒரு தேசமாக வாழும் உரிமையையே மறுக்கும் அளவுக்கு தீவிரமான கொள்கை கொண்ட ஹமாஸ் ஒரு சகிப்புத்தன்மைமிக்க சக்தி அல்ல என்பது உண்மைதான். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்கள்கூட ஜனநாயக சக்திகள் அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். பிப்ரவரியில் நடக்கவிருக்கும் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்காமலிருப்பதற்காகத்தான் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பராக் பாலஸ்தீனுக்குள் தனது படைகளை ஏவியுள்ளார். முன்னாள் பிரதமர் பின்யாமின் நெதன்யாகூதான் ஜெயிப்பார் என்ற கணிப்புகளை சிதறடிக்க அவருக்கு இந்த வாய்ப்பு உதவியிருக்கிறது என்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் முழு ஆதரவாளராக இருக்கும் அமெரிக்க அதிபர் புஷ் இந்த மாத இறுதியில் பதவியிறங்கும் முன்பு இந்தத் தாக்குதலை நடத்தியாக வேண்டும் என்று அவசர அவசரமாக இதைச் செய்துள்ளார்கள். ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகள் அவர்களுக்கு ஜெயிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

சொந்தமாகத் தயாரித்த அரைகுறை ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவியது ஒரு வகை கவன ஈர்ப்புதான். தங்கள் மீது போடப்பட்டிருக்கும் பொருளாதார, வாழ்வாதார முற்றுகையை உடைக்க உலக நாடுகளின் கவனத்தை மத்திய கிழக்கை மூலம் திருப்ப வேண்டியிருந்தது. ஹமாஸ் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியிருந்தாலும் அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. ஆனால் இஸ்ரேலின் ஒரு வார வான் தாக்குதலில் 400க்கு மேற்பட்ட பாலஸ்தீன பெண்கள், குழந்தை, போலீஸ்காரர்கள் இறந்திருக்கிறார்கள்.

யூதாயிசம், இஸ்லாம், கிறிஸ்தவம் என உலகின் மூன்று பழம்பெரும் மதங்களின் பிறப்பிடம் ஜெருசலேம். மதங்களின் பிறப்பிடம் இன்று, மதங்களுக்கிடையிலான மோதலுக்கான ஊற்றுக்கண்களாக மாறியிருக்கிறது. தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து, தங்களையே அகதிகளாக விரட்டிய இஸ்ரேலுக்கும் அந்நாட்டுக்கு உதவும் அமெரிக்காவுக்கும் எதிரான உலக முஸ்லிம்களின் கோபத்தை கிறிஸ்தவ, யூத மதங்களின் மீதான கோபமாக அடிப்படைவாதிகள் திருப்புகிறார்கள். யூதர்களோடும் அமெரிக்காவோடும் தொடர்புடைய இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் அதன் பின்விளைவுகளை சந்திக்கின்றன. வெறுப்பு விதைக்கப்பட்ட இடங்கள் எல்லாம் அடிப்படைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வேட்டைக் களமாக மாறுகின்றன. இதில் அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலிய யூதர்களும் இலங்கையின் சிங்களர்களும் வெறுப்பை விதைக்காமலிருந்திருந்தால் ஒரு ஹமாஸ் உருவாகியிருந்திருக்காது ஒரு எல்.டி.டி.இ உருவாகியிருந்திருக்காது.

அரசின் அரியணையில் அமர்ந்திருக்கும் பெளத்த மதம். அனைத்திலும் பெரும்பான்மை இனத்திற்கே முன்னுரிமை தரும் சிங்கள தேசக் கனவு. அதே மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் உரிய இடத்தினை மறுப்பது. இஸ்ரேலும் இலங்கையும் ஒடுக்குமுறை வரலாற்றில் பெரும் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தில் வெறுப்பு விதைக்கப்பட்ட அதே 1948ல் இலங்கையில் வெறுப்புக்கு பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் கொடுத்தது. சிங்கள ஆட்சி மொழி, அரசு உயர் பதவிகளை சிங்களரே வகிக்க முடியும் என்பது போன்ற அம்சங்கள் இலங்கையின் சக மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு சவால் விட்டன. தமிழர்களின் கவலையால் எழுந்த குரல்களை சகித்துக்கொள்ளும் அளவுக்கு பரந்த உள்ளம் கொண்டதாக சிங்கள தேசியம் இருக்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு மன்னர்கள் இலங்கையின் மீது போர் தொடுத்து வென்ற பழங்கால வரலாற்றின் பயங்களை இன்றும் கொண்டிருக்கிறார்கள் சிங்கள பெரும்பான்மையினர். இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்கள் இந்தியாவின் தமிழர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சிங்கள தேசத்தைக் கைப்பற்றுவார்கள் என்று சிங்கள இனவாதக் கட்சிகள் சிங்களப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டார்கள். அந்த பயத்தால் உருவான ஆதரவைக் கொண்டு அன்று முதல் இன்று வரை இன அழித்தொழிப்பை சோர்ந்து போகாமல் நிறைவேற்றி வருகிறார்கள் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாபெரும் அழித்தொழிப்பை நிகழ்த்தி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத பாணி இயக்கங்களுக்கு வித்திட்டது இலங்கை இனவாத தேசியம். காலப் போக்கில் ஆயுத வழிகளைக் கைவிட்ட அமைப்புகள் யாசர் அராபத்தின் கட்சியைப் போலவே மக்கள் ஆதரவை இழந்துவிட்டன. சிங்கள அரசுடன் சமரசம் செய்துகொண்டு தங்களுக்கு பதவிகள் பெற்றுக்கொள்ளும் பட்டியலில் முன்னாள் புலித் தலைவர் கருணா வரை நிறைய பேர் சேர்ந்துவிட்டார்கள். 21 ஆண்டுகளாக இருக்கும் ஹமாஸ் இப்போது தேர்தலில் பெரும்பான்மையுடன் வென்றுவிட்டது. 33 ஆண்டுகளாக இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு முழு மக்கள் ஆதரவு உள்ளதா என கண்டறிய முழு சுதந்திரத்துடன் நடத்தப்படும் தேர்தல்கள் ஏதும் வட இலங்கையில் இதுவரை இல்லை. ஆனால் வட இலங்கையின் தமிழர்கள் புலிகளைத்தான் தங்கள் காப்பாளர்களாகக் கருதுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சிங்கள ராணுவம் கைப்பற்றிய பிறகு தாங்கள் எவ்வாறு நடத்தப்படுவோம் என்ற தமிழர்களின் பயம் நியாயமானதே.
தனது கைப்பாவையாக மாறிவிட்ட கருணாவிடம் கிழக்குப் பகுதிகளில் குத்தகை விட்டிருக்கும் சிங்கள அரசு, வடக்கிலும் அதே போன்ற "ஜனநாயகத்தை" அமல்படுத்தப் போவதாகக் கூறுகிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டதால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை வைத்து ஒரு கோமாளி அரசை திணித்துவிட்டு ஜனநாயம் மலர்ந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவிக்கும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்வது போல மெல்ல மெல்ல தமிழ்ப் பகுதிகளில் சிங்களர்களை புகுத்துவது அவர்களின் அரசியல் திட்டங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் யூதப் படைகள் நீண்டகாலம் அங்கிருக்க முடிவதில்லை. அதேபோல கிளிநொச்சி போன்ற பகுதிகளில் சிங்கள ராணுவம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என தெரியவில்லை. 1996ல் இதே போல கைப்பற்றிய கிளிநொச்சியிலிருந்து சிங்கள ராணுவம் 1998ல் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்ததை மறக்க முடியாது. கெரில்லா போர் முறையில் பின்வாங்குவதும் அடர்ந்த வனங்களுக்கு தப்பியோடுவதும் எதிரி பலமாகும் போது மேற்கொள்ளப்படும் அடிப்படை வியூகம்.  அதை வைத்து கெரில்லா இயக்கம் தோற்றுவிட்டதாகக் கூற முடியாது. மாறாக இனவாத பெரும்பான்மையினர் எந்த அளவிற்கு சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள், எந்த அளவுக்கு சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை பிறக்கிறது என்பதே மாற்றத்தைக் கொண்டு வரும். சிங்கள ராணுவத் தளபதி பொன்சேகா, அதிபர் ராஜபக்ஷே போன்றவர்களின் இன துவேஷக் கருத்துக்களைப் பார்க்கும் போது மாற்றம் கண்ணில் படவில்லை.

இஸ்ரேலைப் போலவே இலங்கையிலும் அரசியல் கணக்குகள்தான் தமிழர்களுக்கெதிராக கடுமையாக நிலையெடுக்கக் காரணம். தீவிர தேசியவாதத்தைத் தூண்டிவிடுவது மூலம் தனக்கான ஆதரவை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் ராஜபக்ஷே. ஜனநாயக அரசுகள் எல்லாம் நல்லவை, ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் எல்லாம் கெட்டவை என்ற பார்வை எவ்வளவு முட்டாள்தனமானது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன சிங்கள அரசும் இலங்கை அரசும். இன்று அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை போன்றவை ஜனநாயக அரசுகள் ஆளும் நாடுகள். ஆனால் சிறுபான்மையினர் மீது சகிப்புத்தன்மையற்ற அரசுகளான இவை ஜனநாயகம் என்ற பெயரில் தங்களது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றன. ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் இந்த பயங்கரவாத அரசுகளைவிட, பயங்கரவாதத்தை வெளிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள் எவ்வளவோ மேல். ஹமாஸ் மீதும் புலிகள் மீதும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தடை விதிக்க முடியும். அமெரிக்க, இஸ்ரேல், இலங்கை மீது தடை விதிக்க முடியாது. உலகின் மிகவும் அஞ்சப்படும் ராணுவத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்காவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சனை வருவதை அமெரிக்கா அனுமதித்ததே இல்லை. இலங்கைக்கு பிரச்சனைகள் வருவதை இந்திய அரசும் சமீப காலமாக அனுமதிப்பதில்லை.

பாலஸ்தீனத்திற்கு அதனைச் சுற்றியிருக்கும் அரபு நாடுகள் சமீப காலங்களாக  செய்து வரும் துரோகத்தையே இந்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்கிறது. ஹமாஸின் எழுச்சியை தங்களுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் அரபு நாடுகள் போல, புலிகளின் எழுச்சியை தனக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. ஆனால் பாலஸ்தீனத்தைவிட தமிழ் ஈழத்தின் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியிருக்கிறது. இலங்கையும் ஈழமும் தனித் தனி தேசமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போல இன்னமும் தெளிவாகவில்லை என்றாலும் மனம் திருந்தாத சிங்கள இனவாத அரசின்கீழ் தமிழர்கள் முழு சுதந்திரத்துடன் வாழ முடியுமா எனத் தெரியவில்லை. பாலஸ்தீன விவகாரங்களில் உலகின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. ஆனால் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு சிங்கள விமானப் படை நடத்தும் குண்டு வீச்சில் அப்பாவிகள் இறக்கிறார்களா என்று பார்ப்பதில்கூட உலக நாடுகளின் கவனம் திரும்பவில்லை. இந்தியாவே அதைக் கண்டுகொள்ளாத போது உலக நாடுகளைக் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலின் காட் பாதராக தன்னை பாவித்துக்கொள்ளும் அமெரிக்காவும் "பயங்கரவாத ஹமாஸ் இயக்கமே சமீபத்திய மோதல்களை ஆரம்பித்து வைத்தது" என்று தீர்ப்பு கூறிவிட்டது. உலக ஊடகங்கள் இந்த வாதங்களையே பிரதியெடுக்கின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் சிங்கள அரசுக்குச் சாதகமான பார்வையே பெருவாரியான ஊடகங்கள் முன்வைக்கின்றன. கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றியதை வட இந்திய ஊடகங்கள் கொண்டாட்டமாக அறிவிக்கின்றன. வட இந்தியர்களுக்கு இந்தியாவின் தமிழர்கள் மீதே பெரிய மரியாதை இல்லாத போது இலங்கைத் தமிழர்கள் மீது அவர்களுக்கு கரிசனம் இருக்குமா? இன்று, இஸ்ரேலுக்கு அமெரிக்கா போல இலங்கையின் சிங்கள அரசிற்கு வட இந்திய அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசு காட் பாதராக மாறிவிட்டது. தமிழக கூட்டணி அரசை நம்பியிருப்பதால்தான் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஒளிந்து மறைந்து உதவிகள் செய்கிறது, இலங்கையை கண்டிப்பது போல நடிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் செல்வாக்கு இல்லாமல் போயிருந்தால் சிங்கள ஆதரவு, இலங்கைத் தமிழர் எதிர்ப்பு இந்திய அரசியல் சாஸனத்திலேயே புகுத்தப்பட்டிருக்கும். 

துன்புறுத்தும் இஸ்ரேலுக்கு பதில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீன் ஒதுக்குதலுக்கு ஆளாகிறது. தமிழ் ஈழத்தின் நிலையும் மாறுபட்டதல்ல. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே காரணத்திற்காக அப்பாவிப் பொது மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முடக்கி வருகிறது சிங்கள அரசு. அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை நிறுத்தி அல்லது தேவையைவிட குறைவான வினியோகத்தையே அனுமதிக்கும் இஸ்ரேலின் கொள்கை உலக நாடுகளுக்கு ஒரு பொருட்டல்ல. தனி தேசமாகி வரும் பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ரகசியமாக புகுந்து அந்த நாட்டு குடிமக்களை கடத்துவது உலக நாடுகளுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. ஹமாஸ் ராக்கெட் ஏவுவது மட்டும்தான் பிரச்சனை. அதே போல இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது இடம் பொருள் பாராமல் விமானத் தாக்குதல் நடத்துவதோ, அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தைத் தடுப்பதோ, செஞ்சிலுவை போன்ற நிவாரண அமைப்புக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விரட்டுவதோ இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் ஹமாஸ் மற்றும் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள் மட்டும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய பிரச்சனைகள். அத்தியாவசிய பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் சொல்கிறது, நிவாரணப் பணிகள் என்ற பெயரில் சர்வதேச மரியாதையைப் பெற்ற செஞ்சிலுவை போன்ற அமைப்புக்கள் புலிகளுக்கு உதவுவதாக இலங்கை சொல்கிறது. அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொல்கிறது. புலிகளோ ராணுவ இலக்குகள், ராணுவ-அரசியல் தலைவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் யார் பயங்கரவாதிகள்?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்கள் தீவிரம் அடைவதாகக் கூறப்படும் இன்றைய அரசியல் சூழலில் ஐ.நாவும் உலக நாடுகளும் சிறுபான்மை நலன்களைப் பாதுகாப்பதில் புதிய நிலைபாடு எடுத்திருக்கின்றன. பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் சிறுபான்மையினர் அத்தனை பேரும் இல்லாமலாக்கப்பட்ட பிறகு, பயங்கரவாதம் ஒழிந்தது ஜனநாயகம் வென்றது என்று உலகமே கூத்தாட வேண்டும். அந்த பொன்னாள் மலர்வதைத் தடுக்கும் பாலஸ்தீன ராக்கெட் ஏவுதல்களும் புலிகளின் ராணுவ-அரசியல் நிலைகள் மீதான தாக்குதல்களும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும். சிறுபான்மையினரின் கழுத்தை நெரிக்கும் விஷயத்தில் ராக்கெட்டுகளும் செஞ்சிலுவைகளும் தடையாக இருப்பதை அரச பயங்கரவாதத்தால் ஜீரணித்துக்கொள்ள முடியாததை புரிந்துகொள்ள முடிகிறது.

- நன்றி உயிரோசை - 05-01-2009