மேதினம் – அடையாளங்கள் எனும் அமுக்குப்பிசாசு.

சென்ற வருட மேதினத்திற்கு எழுதிய பதிவு. இந்த ஆண்டு மேதின நினைவுக் கூறலாக மீள்பதிவு செய்யப்படுகிறது.
karlMarx-125_125_zc ”மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள். இறந்துபோன தலைமுறையினரின் மரபு, உயிருள்ளவர்களின் மூளையை ஒரு அமுக்கு பேய்போல அமுக்கிக் கொண்டிருக்கும்.”  - கார்ல் மார்க்ஸ்
இன்று மேதினம். உலகத் தொழிலாளர்கள் தங்களையும், தங்கள் உரிமைகளையும் உணர்வதற்கான நாள். தமிழகத்தில் இருந்த காலங்களில் மேதின ஊர்வலங்களில் தவறாமல் கலந்துகொள்வது உண்டு. நான் இருக்கும் சூழலில் மேதினம் என்பதெல்லாம் அர்த்தமற்ற ஒன்று. என்றாலும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளி வர்க்கத்திற்கு இதன் மூலம் மேதின வாழ்த்துக்களைச் சொல்வோம்.

உலகில் தேசம் இனம், மதம், சாதி, பால் என்பவை australiaமனிதன் மற்றும் வரலாறு கட்டமைக்கும் மனிதமைய சாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனின் பெருந்துயரங்களுக்கு காரணமாக உள்ள இப்பல்வேறு அடையாளங்களின் கூறுபாடுகளிலிருந்து, மனிதனை ஒடுக்கப்பட்டவன், ஒடுக்குபவன் என்கிற சாராம்சமற்ற, வலைப்பின்னல்களில் உருவாகும் இணைந்தும், கலைந்தும் போகக்கூடிய நெகிழ்ச்சியான ஒரு அடையாளமாக மார்கசியர்களால்  முன்வைக்கப்பட்டதே “பாட்டாளி வர்க்கம்“. அது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அடையாளம் அல்ல. எளிமையாக ஏற்கவும், விலகவுமான ஒரு அடையாளம். வரலாற்றில் ஒரு புதிய மக்கள் தொகுதியை உருவாக்கிய அடையாளம். அதற்குள் மனித குலத்தோற்றத்திலிருந்து உருவாகிவந்ததான  வரலாற்றுக் கதையாடலின் தொடர்ச்சியோ,  அல்லது மனித உடலுக்குள் தங்கி உள்ளதாக சொல்லப்படும் மூலப்படிம உணர்வின் சாராம்சப் பண்போ இல்லை. பாட்டாளி வர்க்க அடையாளம் என்பது மார்க்ஸ் மரபு என்கிற பழங்கதைகளை உருவகப்படுத்தி சொன்னதைப்போல, ஒரு அமுக்குப்பேய் அடையாளம் அல்ல. அது ஒருவர் உளப்பூர்வமாக  ஏற்றுக் கொள்ளும் தன்னிலை சார்ந்த அடையாளம். அதாவது, பாட்டாளிவர்க்க அடையாளத்தில் சாராம்சம் இல்லை, இருப்பு அல்லது இருத்தல் மட்டுமே உள்ளது. நீங்கள் உணர்வுபூர்வமாக இயங்கும் சூழல் மற்றும் உங்கள் வாழ்நிலையில் அல்லது நீங்கள் இயங்கும் வலைப்பின்னல் அமைப்பில் தங்கியுள்ள ஒரு அடையாளம். அல்லது பாட்டாளிவர்க்கம் என்பதை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். 

உலகத் தொழிலாளிவர்க்கம் என்பது பிழைப்புவாத, தொழிற்சங்கவாத, கூலி-வாத சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு பல அரசியல், சாதி, மத, இன அடையாளங்களுக்குள் இறுகி இன்று ஒற்றுமையற்று எண்ணற்ற குழுக்களாக பகைகொண்ட அமைப்புகளாக மாறிவிட்டது.  சமூகப் பொருளாதாரப் புரட்சியின் தலைமைச் சக்தியாக மார்க்ஸால் கணிக்கப்பட்ட பாட்டாளிவர்க்கம் என்பது இன்று தன்னை ஒரு சராசரி பிழைப்புவாத வர்க்கமாக மாற்றிக்கொண்டுவிட்டது.  ஆனால், “மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை“ என்பதைப்போல.. இன்றைய கடுமையான பொருளாதார நெருக்கடி மீ்ண்டும் பாட்டாளிவர்க்கத்தை ஒற்றுமைக்கு கொண்டு செல்லும்.   புரட்சி, விடுதலை என்பது மார்க்சியம் கண்ட ‘உன்னதக் கனவா‘? அல்லது பின்நவீனத்துவவாதியான லியோதார்த் கூறியதுபோல ‘உன்னதக் கதையாடலா‘ (Grand Narration)? என்பதை வரலாறு வெளிப்படுத்தும்.

மார்க்ஸின் மேற்கொண்ட குறிப்marx-2பில் ஒரு நுட்பமான செய்தி உள்ளது. அது வரலாறு என்பதன் வழியாகத்தான் மனித குலத்திற்கு ஒரு தொடர்ச்சி உருவாக்கப்படுகிறது என்பதுதான். இந்த வரலாற்றுத் தொடர்ச்சி என்பதே அனைத்து வன்முறைக்கும் அடிப்படையாகும். அதாவது “அமுக்குப்பேய்“.  அதாவது செத்தொழிந்தவர்களின் மரபு, வாழ்ந்தழிபவர்களின் மண்டைக்குள் ஒரு அமுக்குப் பேய்போல உட்கார்ந்து  கொண்டிருக்கும் என்பதுதான். இனம் என்கிற ஒன்றின் வரலாற்றுத் தொடர்ச்சி ஒரு கதையாடலாக கட்டப்பட்டு, மனிதனின் சாராம்சப் பண்பில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி” போன்ற கதையாடல்களால் கனவாகவும், பெருமிதமாகவும் இறக்கப்பட்டுள்ளது. இந்த கனவும் பெருமிதமும்தான் மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வரலாறு என்கிற அமுக்குப்பேய். மனிதன் வரலாற்றினால் வழிநடத்தப் படுகிறான். தனது உடலின் அல்லது உயிரின் இருப்பு என்பது வரலாற்றின் சமூகவெளிக்கு வெளியில் ஏதுமற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.  ‘மனிதன்‘ மற்றும் ‘மனிதகுலம்‘ என்கிற கருத்தாக்கம் இந்தவகை வரலாற்று சாராம்சத்தின் ஒரு தொடர்ச்சியின் நவீன சொல்லாடல்தான். 

வரலாறு என்பதை மனிதன் உருவாக்குவதில்லை. அது ஒரு அமைப்பின் கட்டமைப்பு. அதாவது சூழலின் தேர்வு. மனிதன் சூழலால் தீர்மாணிக்ப்பட்டு, சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு வரலாற்று இயக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. வரலாறுதான் மனிதர்களை உருவாக்குகிறது. சான்றாக, இன்று ஒவ்வொரு தமிழனும் ஈழத்தின் கடுமையான போரால் உளப்பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் பாதிக்கப்பட்டிருப்பதிலிருந்து இதனை உணரலாம். தமிழகத்தில் 60-களில் வெளிப்பட்ட இனஉணர்வு முகிழ்த்த ”தமிழன்” மீண்டும் இன்றைய வரலாற்றால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். பழைய ஆரிய/திராவிட பார்ப்பனீய/தமிழின முரண்பாடு துவங்கி இந்தி/தமிழ் முரண்பாடுவரை தமிழ் வரலாற்றில் திரும்ப புதிய இனவாத சக்திகளால் மேலெழும்பி வருகிறது. முத்துக்குமார் நண்பர்கள் வட்டம் துவங்கி “புரட்சித்தலைவி” (?) வரை இந்த வரலாற்றின் திசையியக்கியை (ஸ்டீரியிங்கை) தாவிப்பிடிக்கும் தன்முனைப்பை உணரமுடிகிறது. இன்றைய இனமானத் தமிழனை மீண்டும் வரலாறு உருவாக்கியிருப்பதை நாம் கண்கூடாக காணமுடிகிறது.  முந்தைய முரண்பாட்டில் திராவிட இயக்கங்கள் அரசியல் அதிகாரம் பெற்றதுடன் வரலாற்றை முடித்தன. ஆனால், இன்றைய அதே முரண்பாடுகள் வந்தால் இந்திய பெருந்தேசிய அரசானது ராஜபக்சேவை முன்னுதாரமாகக் கொள்ளும் உத்தியை அதிகாரம் கண்டடைந்துள்ளது. தமிழகம் ஒரு பாலஸ்தீனியமாக மாற்றப்படக்கூடும். வெடிகுண்டுகளுக்கு மத்தியில் நாம் வாழப்பழக்கிக் கொள்ள நேரலாம். வரலாற்றின் இந்த திரும்பவரல் இனம் எனும் அமுக்குப்பேயுடனும், அதற்கான பயங்கரவாத இராணுவத் தந்திரத்துடன் வருகிறது என்பதுதான் மிகப்பெரும் சோகம். வரலாற்றின் திரை இழுவையில் நமது மரணத்தைக் கூட வரலாறே தீர்மானிக்கப்போகிற ஒரு எதிர்காலமே நம் கண்முன் காட்சியாகிறது. தற்கொலை என்பது அதிகாரம் நிர்பந்திக்கும் மரணத்தை ஏற்காமல் நாமே மரணத்தை தேர்ந்துகொள்ளும் சுதந்திர போராட்ட வடிவமாக மாறலாம். இவையெல்லாம் ஊகக் காட்சியாக மட்டுமே எஞ்சி கெட்ட கனவாக மட்டுமே போகவேண்டும் என்பதே நமது ஆசையும் விருப்பமும்கூட.

ஆனால் உண்மையில், முதலாளித்துவம் இனம் என்கிற கருத்தாடலை தனது வரலாற்றுக் கதையாடல்கள் மூலம் பெருக்கியப்படியே உள்ளது. இனம் என்பதை பிறப்பின் அடையாளமாக மாற்றுகிறது. அதற்கு ஒரு மூலப்படிம உணர்வு இருப்பதாக கதைகளை எடுத்துரைக்கிறது.  அதற்கு வரலாறு என்கிற ஆதார அடிப்படையிலான ஒரு அறிவியல் சார்ந்த பகுத்தறிவு விளக்கம் சொல்கிறது. மனிதனை அழிக்கும் வரலாற்றைவிட, மனித குலத்தை வாழவைக்கும் தொன்மங்கள் மேலானவையே. ஏனென்றால் தொன்மங்கள் அழித்ததைவிட வரலாறு அழித்தவை ஏராளம். அதனால்தான் தொன்மங்களை காட்டுமிராண்டிகளின் கதையாடல் என்கிறது. அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர்களை அவர்களது உடலை எண்ணி அளந்து அறுதியிட்டு இனம் என்பதாக பிரிக்கிறது. அதற்கு மொழியை மூலமாக ஆக்குகிறது. காரணம் மொழிதான் உலகை படைக்கிறது என்பதை நம்மைவிட அதிகாரம் மிகச்சிறப்பாக புரிந்துகொண்டு உள்ளது. மொழியற்ற உடலால் இந்த உலகை உணரமுடியாது என்பதால் மொழிகளை பெருக்கி, பரவலாக்கிக்கொண்டே உள்ளது தனது ஊடகங்கள் வழியாக. ஆக, மொழி, இனம் போன்ற கூறுகளை சாராம்சமாக ஆக்குவதன்மூலம் மனிதனின் மண்டைக்குள் மரபு என்கிற வரலாற்றை ஒரு அமுக்குப்பேயாக உட்கார வைத்துள்ளது. இதுதான் மார்க்சின் இக்கருத்திலிருந்து நான் புரிந்துகொள்வது. இது இன்றைய புதிய வரலாற்றுவாதத்தினை முன் அனுமானிக்கும் ஒரு வாசகம் எனலாம்.  மார்க்ஸ் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துவதாகிறது.

elephant chain1 மேதினமான இன்று தொழிலாளர்களின் நிலையை எண்ணும்போது ஒரு சின்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. ஒரு பெரிய யானையை ஒரு சிறிய சங்கிலியில் கட்டிப்போட்டிருந்தானாம் ஒரு யானைப்பாகன். அவ்வழியாக வந்த ஒரு வழிப்போக்கன் கேட்டானாம் “இத்தனை பெரிய வலுவுள்ள யானை, இந்த சின்ன சங்கிலியை அறுத்தெறியமுடியாதா?“ என்று. அதற்கு யானைப்பாகன் கூறினானாம், “இந்த யானை சிறியதாக இருந்தபோது இதே சங்கிலியால்தான் கட்டிப்போட்டேன், அப்பொழுது இந்த சங்கிலியை அதனால் அறுக்க முடியவில்லை. இன்று யானை வலுவானதாக வளர்ந்துவிட்ட போதிலும், அதனது சிந்தனையில் பழைய சங்கிலின் வலுதான் உள்ளது. அதனால் அது இன்றும் இதனை அறுக்க முயலவில்லை” என்று. இந்தக் கதையில் உள்ள “பழைய நினப்பு“ என்கிற அமுக்குபேய்தான் மரபாக சிந்தனைகளில் உட்கார்ந்து கொண்டுள்ளது. இன்றைய பாட்டாளிவர்க்கம் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த யானையைப்போல்தான். சங்கிலிப்பற்றிய பழைய நினைப்புதான் இன்றைய சங்கிலியை அறுத்தெறியக்கூடிய தனது வலுவை உணரமுடியாமல் ஆக்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

தோழர்களே! மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தங்களது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறிய இறுதிவாசகத்தை மேதின செய்தியாக மீண்டும் நினைவு கூறுவோம்.elephant1-chain2
“நாம் இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர, வெல்வதற்கோ ஒரு பொன்னான உலகம் இருக்கிறது.”

-ஜமாலன் 01-05-2009.
இன்று இப்பதிவு எழுதக் காரணமாக இருந்த – குறுஞ்செய்தியில் மேதின வாழ்த்து சொன்ன தோழர் லீனா மணிமேகலைக்கும், மின்-அஞ்சலில் வாழ்த்துச்சொன்ன நண்பர் றஞ்சனி அவர்களுக்கும் நன்றி. மார்க்ஸின் இக்குறிப்பிற்கு விளக்கம் கேட்டு அதை பதிவாக மாற்றத்தூண்டிய நண்பர் முபாரக் அவர்களுக்கும் நன்றி.

16 comments:

இலக்குவண் சொன்னது…

“நாம் இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர, வெல்வதற்கோ ஒரு பொன்னான உலகம் இறுக்கிறது

மிக அருமையான பதிவு.
அந்த கதையும் மிக பாதித்தது.
பகிர்ந்தமைக்கு நன்றி

gayathri சொன்னது…

anname they 1st ta

gayathri சொன்னது…

anna yanai kathai super

ஜமாலன் சொன்னது…

நன்றி இலக்குவன்.

நன்றி தங்கை gayathri.

கலையரசன் சொன்னது…

மேதின வாழ்த்துக்கள்.

Rajan Kurai Krishnan சொன்னது…

ஜமாலன் என்னுடைய பின்னூட்டம் உங்கள் பார்வைக்கு வந்ததா? இந்திய நேரப்படி மே 2 காலை 11 மணி வாக்கில் பின்னூட்டமிட்டேன்.

ஜமாலன் சொன்னது…

Rajan Kurai Krishnan கூறியது...

//ஜமாலன் என்னுடைய பின்னூட்டம் உங்கள் பார்வைக்கு வந்ததா? இந்திய நேரப்படி மே 2 காலை 11 மணி வாக்கில் பின்னூட்டமிட்டேன்.//

அன்புள்ள நண்பர் ராஜன் குறை.. இந்த பின்னோட்டம் மட்டுமே வந்துள்ளது. முந்தைய பின்னோட்டத்தை திரும்ப அனுப்பி வைக்க முடியுமா? ஏன் வரவில்லை என்று காரணம் தெரியவில்லை. இல்லாவிட்டால் மெயிலில் அனுப்பி வையுங்கள் நான் போஸ்ட் செய்துவிடுகிறேன்.

Rajan Kurai Krishnan சொன்னது…

நான் இட்ட பின்னூட்டத்தின் சுருக்கம்:

1. பிற அடையாளங்களைப்போல பிறப்புடன் தொடர்புடையதல்ல பாட்டாளி வர்க்கம் என்பதை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். அதற்காக அது வலைப்பின்னல் சந்தி என்றெல்லாம் கூறுவதை மார்க்ஸீயமாகக் கொள்ள முடியாது. பாட்டாளி வர்க்கத்தை வரலாற்றின் காரணியாகக் கண்ட மார்க்ஸீய சிந்தனை அதன் பிரக்ஞை குறித்தெல்லாம் மிக விரிவான விவாதங்களில் ஈடுபட்டதை இங்கு நினனவு கூறவேண்டும். எனவே கடுமையான சாராம்சங்கள் ஏற்றப்பட்டதே பாட்டாளி வர்க்கம்.

2. ஹெகலோ மார்க்ஸீய சிந்தனையில் வரலாறு என்றால் என்ன என்பதை நாம் கவனமாக அணுக வேண்டும். என்னுடைய கட்டுரைகள் பலவற்றில் நான் இந்த முக்கியமான விஷயத்தை வலியுறுத்தியுள்ளேன்; ஓரளவு விளக்கியுள்ளேன் (பார்க்க: முதலீட்டியமும் மானுட அழிவும்).

3. "வரலாறுதான் மனிதனை உருவாக்குகிறது" "மொழிதான் உலகை படைக்கிறது" போன்ற சொற்றொடர்கள் மிகுந்த சிந்தனைக் குழப்பத்தை ஏற்படுத்தும். தத்துவத்தின் முரண்புள்ளிகளை அவசரப்பட்டு அழித்துவிடக்கூடாது.

4. நீங்கள் மேற்கொள்ளிட்ட கார்ல் மார்க்ஸின் வரிகள் மிக நுட்பமானவை என்பதில் அய்யமில்லை. மனிதர்களின் செயல்களுக்கும் வரலாற்றின் ஆன்மாவுக்குமான இயங்கியல் உறவே ஹெகலோ-மார்க்ஸீய சிந்தனைப்புலத்தின் அடிப்படை எனலாம். கொலாகோவ்ஸ்கியின் "மார்க்சீய சிந்தனையின் முக்கிய நீரோட்டங்கள்" (Main Currents of Marxism) என்ற விரிவான சிந்தனை வரலாற்று நூலுக்கு அடிப்படையாவதும் இதுவே.

மற்றபடி மேதினம் உங்களது சிந்தனையை இத்திசையில் தூண்டியது வரவேற்கத்தக்கது.

ஜமாலன் சொன்னது…

நன்றி ராஜன் குறை.

நீங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் எழுத்துக்களில் நான் செலுத்த வேண்டிய மேலதிக கவனத்தை கோருகின்றன. சுட்டிக்காட்டியவைற்றை கவனத்தில் கொண்டு எனது வாசிப்பை விரிவுபடுத்திக் கொள்கிறேன்.

1. பாட்டாளிவர்க்கம் கடுமையான சாராம்சங்கள் ஏற்றப்பட்டது என்பது குறித்த உங்கள் கருத்தை வாய்ப்புள்ளபோது விரிவாக எழுதுங்கள். இது புரிந்துகொள்வதற்கே மற்றபடி விவாதநோக்கில் இல்லை.

2. உங்கள் முதலீட்டியமும் மானுட அழிவும் நூல் வாசித்து விட்டேன். இருந்தாலும் நீங்கள் சொன்ன கோணத்தில் மறுமுறை அதை வாசிக்க வேண்டும். அந்நூலின் உள்ளோட்டமாக நான் சிந்தித்தவை வேறு.

3. இத்தகைய வாக்கிய உருவாக்கங்களில் எனது புரிதல் அடிப்படையில் வருபவையே. அதனால் இது புரிதல் குழப்பம் சார்ந்தவைதான். மற்றபடி அதன் தத்துவச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு ஆழ்ந்த தத்துவ வாசிப்புகள் இல்லை. அடிப்படையில் நான் தத்துவ மாணவனும் அல்ல. உங்கள் விமர்சனத்தை கவனத்தில் கொள்கிறேன்.

4. கொலாகோவ்ஸ்கியின் நூலை நான் படித்ததில்லை. மார்க்சிய மறவாசிப்பில் எனக்கு ஆர்வம் உண்டு. நூல் கிடைத்தால் நிச்சயமாக வாசிப்பேன். (நானுள்ள சூழலில் நூல்கள் எதுவும் கிடைக்காது. 1 வருடத்தி்ற்கு படிக்கவென கொண்டு வரும் நூட்கள் மட்டுமே. மற்றவை இணைய வாசிப்புகள்தான். (நல்லவேளை மறுபடியும் வாசிக்கலாம் என்று உங்கள் நூலை கொண்டு வந்திருந்தேன்.)

//மற்றபடி மேதினம் உங்களது சிந்தனையை இத்திசையில் தூண்டியது வரவேற்கத்தக்கது.//

இது சென்ற மேதினத்தில் வழக்கமான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழதியது, என்றாலும், மறுபிரசுரித்தவகையில் அதன் உள்ளோட்ட சிந்தனைகளுக்கான பொறுப்பு என்னுடையதே. ஒருவேளை இந்த மேதினத்திற்கு புதிதாக எழுதியிருந்தால் இதைவிடவும் மோசமான திசையில் எழுதியிருக்கலாம். :) :)

உங்கள் விமர்சனத்தை கவனத்தில் கொள்கிறேன். நன்றி.

Rajan Kurai Krishnan சொன்னது…

அன்புள்ள ஜமாலன்,

பொதுவாக தங்கள் கூற்றை நியாயப்படுத்தவே சிந்தனையாளர்கள் பல சமயங்களில் முயல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது உங்கள் எளிமையான நேரடி பதில் வித்தியாசமாக இருக்கிறது. அதேசமயம் நான் கொஞ்சம் சட்டாம்பிள்ளைத்தனமாக எழுதிவிட்டேனோ என்று சங்கடமாகவும் இருக்கிறது. பாட்டாளி வர்க்கம் மார்க்ஸீய சிந்தனைத் தடங்களில் சாராம்சப்படுத்தப்பட்டதை பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

மற்றபடி சிந்திக்கத் தலைப்படும் அனைவரும் தத்துவ மாணவர்கள்தாம். நாம் எவ்வளவு படித்திருக்கிறோம், எவ்வளவு "சரியாக" படித்திருக்கிறோம் என்பதல்ல; எவ்வளவு தூரம் உழைத்து சிந்திக்கத் தயாராயிருக்கிறோம் என்பதே நம்மை சிந்தனையாளராக்குகிறது. அந்தவிதத்தில் தொடர்ந்து தமிழ் சிந்தனைக்களத்தில் செயல்படும் உங்களை சக போராளியாகவே கருதுகிறேன்.

என்றும் உரையாடல்களை எதிர்நோக்கியிருக்கும்

ராஜன் குறை

ஜமாலன் சொன்னது…

நண்பர் ராஜன் குறைக்கு..

//அதேசமயம் நான் கொஞ்சம் சட்டாம்பிள்ளைத்தனமாக எழுதிவிட்டேனோ என்று சங்கடமாகவும் இருக்கிறது. //

அப்படி எல்லாம் இல்லை. நீங்கள் மிகவும் கவனத்துடன்தான் சுட்டிக்காடடியுள்ளீர்கள். இந்த விமர்சனம் சரியானதே.

//எவ்வளவு தூரம் உழைத்து சிந்திக்கத் தயாராயிருக்கிறோம் என்பதே நம்மை சிந்தனையாளராக்குகிறது.//

உண்மைதான்.

//அந்தவிதத்தில் தொடர்ந்து தமிழ் சிந்தனைக்களத்தில் செயல்படும் உங்களை சக போராளியாகவே கருதுகிறேன்//

நன்றி.

Perundevi சொன்னது…

நண்பர் ஜமாலன், நண்பர் ராஜன், உங்கள் சுமுகமான உரையாடல் தென்றல் வீசியது என்மேல் :) வரலாற்றுப்பின்னணியில் கட்டப்பட்ட வர்க்கங்களின் சாராம்சத்தைப் பற்றி எனக்கும் பேச ஆசையாக இருக்கிறது. ஆனால், இப்போது வின்னிபெக்-கில் தின வகுப்புகளுக்கு சீனச்சொற்களுக்கு சரியான உச்சரிப்பைக் கண்டுபிடிப்பதிலேயே எனக்குத் தாவுதீர்ந்து விடுகிறது. :(:( பார்க்கலாம்....நேரமிருந்தால் எழுதுகிறேன்.

ஜமாலன் சொன்னது…

Perundevi சொன்னது…

//நண்பர் ஜமாலன், நண்பர் ராஜன், உங்கள் சுமுகமான உரையாடல் தென்றல் வீசியது என்மேல் :)//

வீசும் வீசும். சீன மொழியல் சிக்கி சின்னாபின்னமாகாமல் அப்பப்ப இந்த தென்றலையுமு் அனுபவித்தால் சரி :)

ஆமா என்ன வச்சி காமெடி கீமெடி எதும் பன்னலையே :)

//வரலாற்றுப்பின்னணியில் கட்டப்பட்ட வர்க்கங்களின் சாராம்சத்தைப் பற்றி எனக்கும் பேச ஆசையாக இருக்கிறது. ஆனால், இப்போது வின்னிபெக்-கில் தின வகுப்புகளுக்கு சீனச்சொற்களுக்கு சரியான உச்சரிப்பைக் கண்டுபிடிப்பதிலேயே எனக்குத் தாவுதீர்ந்து விடுகிறது. :(:( பார்க்கலாம்....நேரமிருந்தால் எழுதுகிறேன். //

அப்பப்ப தமிழ் நாட்டையும் கொஞ்சம் கவனியுங்கள். :)

நறுமுகை சொன்னது…

மே தினத்திற்கு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தொலைகாட்சியில் ஒளிபரப்ப படும் அதுவே எங்களுக்கு போதும்..

- பொதுஜனம்


நாம் எவ்வளவு கத்தினாலும் எவர் காதிலும் விழப்போவதில்லை

www.narumugai.com

drstii சொன்னது…

to display only post titles as like s.ramakrishnan having in his blog follow d steps in this site http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

Thursday, June 10, 2010 6:10:12 AM GMT+04:00


to have label in drop down format follow steps in http://jacqsbloggertips.blogspot.com/2010/02/how-to-create-dropdown-labels-menu-in.html

June 10, 2010 7:41 AM

d சொன்னது…

hi jamalan,

Important subject: just show only post titles instead of showing both post title and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)