தமிழீழப்போராட்டம் ஒரு வெகுமக்களின் அரசியல் நிகழ்வாக மாறவேண்டியதொரு முக்கியத் தருணத்தில், வெந்ததை தின்று விதிவந்தால் சாவோம் என்கிற வேடிக்கை பார்க்கும் ஒரு கூட்டமாக பெருவாரியான தமிழர்கள் மாறியுள்ளனர். கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான போரில் எண்ணற்ற தமிழர்கள் கொல்லப்பட்டும், துரத்தப்பட்டும் ஒரு அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, தமிழகத்தில் எந்தவிதமான கொந்தளிப்பையும் அது ஏற்படுத்தவில்லை என்பது நமது அரசியல் உணர்வை நினைத்து வெட்கித் தலைகுனியச் செய்கிறது. தமிழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களிலும், வேறுபல போராட்டங்களிலும் ஈடப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்களிடம் காணப்படும் மெத்தனம் கவலைக்கிடமானது. அங்கங்கு தன்னெழுச்சியாக நடத்தப்படும் எதிர்ப்பு போராட்டங்கள், தமிழகமெங்கும் ஒருங்கிணைத்து வலுவானதாக நடத்தப்படவில்லை. மாணவர்களுடன் செர்ந்து தெருவில் இறங்கிப் போராடி மத்திய-மாநில அரசுகளுக்கு அறவழியிலான நெருக்கடிகளைத் தரவேண்டிய இந்த முக்கியத் தருணத்தில் மக்களின் இந்த மௌனநிலை பெரும் கேள்விக்குறியாக உள்ளது. புலியை முறத்தால் அடித்து துரத்தியதாக புறநானூற்றுப் பெருமை பேசும் நாம் ஏன் இன்று இந்த நிலைக்கு ஆளானோம் என்கிற கேள்வி நமது தமிழ் சமூகவரலாற்றை சமூகஉளவியல் மற்றும் அரசியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
மணிரத்தினத்தின் “இருவரி“-ல் வரும் தமிழ்ச்செல்வன் பேசும் கவிதை வரிகள் போல “நமது புறநானூற்று வீரம் எங்கே? போர்பரணி எங்கே?“ தமிழ்திரையின் பாத்திரங்களாக மாறிப்போன நமது அரசியல் வரலாற்றுத் தலைவர்கள் உருவாக்கி உள்ள ஒரு மீ-யதார்த்த (ஹைபர்-ரியல்) உலகில் தமிழனின் அகம் புறம் எல்லாம் அதீத உணர்விற்கு ஆட்பட்டு உண்மைகளின் நகல்களின் நகல்களின்….. நகல்களை அடைந்து, அது ஏற்படுத்தும் அதீ-யதார்த்த உணர்விலும்/உலகிலும் சஞ்சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம். போர் என்பது தொலைக்காட்சியின் மின்திரைப்பரப்பில் வந்துபொகும் ஹாலிவுட் படக்காட்சிகளைப் போல எந்த உறைப்பும், உணர்வும் இல்லாமல் ஒரு “காட்சிகானும் எந்திரமாக“ மாறிவிட்டோம்.
நண்பர் முபாரக் மின்-அஞ்சலில் அனுப்பிய பேசப்படா உண்மைகள் ஈழத்துயரம், மனித
அவலம் பற்றிய பெருந்துயரை நமக்குள் உறையச் செய்கிறது. வாழ்வதற்கு இடமற்றதாக துரத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் இன்று சாவதற்கும் தனது சொந்த மண்ணற்றவர்களாக சிதறடிக்கப்படுகிறார்கள். மரணம் என்பது எண்ணிக்கையாக மாறிவிட்ட இந்த அவலத்தில் மனிதம் என்பது வெறும் காட்சிகளின் நகல்களாக மாறிவிட்டது. தொலைக்காட்சியின் நெடுந்தொடர், விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு மத்தியில் கட்டமைக்கப்படும் செய்திகள் என்கிற “உண்மைகளில்“ வரும் காட்சிகள்கூட தமிழக மக்களை உறையவோ அல்லது உலுப்பவோ இல்லை என்பது கடந்த 25 ஆண்டுகாலமாக ஈழத்தை வைத்து செய்யப்பட்ட தமிழக அரசியலின் ஒரு உச்ச விளைவு எனலாம். இந்த உணர்வு புலிகளையும் அவர்களது செயல்பாடுகளையும் முன்வைத்து சிறுக சிறுக கட்டமைக்கப்பட்டது. இன்று ஈழத்தமிழினம் என்கிற ஒன்றே இல்லை அவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான் என்று திராவிடர்கள் பெயரில் கட்சி நடத்தும் அம்மையார் ஜெயலலிதா பி.பி.சி. என்கிற உலகச் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும் ஒரு வெளிப்படையான நிலையை அடைந்துள்ளது. தமிழகமக்களிடம் இதற்கு ஒரு முனுமுனுக்கும் எதிர்ப்புக்கூட இல்லை என்பது அதைவிட வருந்ததக்கது.
பொதுவாக இனஅடையாளம் என்பது ஒரு கற்பிதம். அதற்குள் இனம் சார்ந்ததான எந்தவொரு சாராம்ச உணர்வும் இருப்பதில்லை என்பதையெ இந்த எழச்சியற்ற தன்மை நமக்கு உணர்த்துகிறது என்றபோதிலும், இந்த கற்பித அடையாளத்தைக் கொண்டுதான் சிங்கள இனம் என்கிற பேரினவாதம் தன்னை அடையாளப்படுத்தி தமிழர்களை அழித்தொழிக்கிறது. எதிரி ஒரு அடையாள நெருக்கடியை நோக்கி உந்தி தள்ளும் ஒரு நிலையில் தவிர்க்கமுடியாமல் ஒரு தன்னடையாளத்தைப் பெற்று தன்னை ஒரு இனமாக உணரும் நிலை தமிழர்களுக்கு ஏற்படுகிறது. ஒருவன் தன்னை “தமிழனாக“ ஒரு தேசிய இனத்தவனாக உணர்வது என்பது இன்றைய அரசியல்-சமூக-பொருளியல்-உளவியல் வலைப்பின்னலில் தவிர்க்க முடியாததாக உள்ளது. பிரச்சனை இந்த வலைப்பின்னல் உள்ளாக மடிக்கப்பட்டு இன்று மேலே வேறோரு அரசியல் வலைப்பின்னல் உருவமைக்கப்பட்டு அதில் இயங்கும் அல்லது அந்த வலைப்பின்னலுக்கு ஏற்ப ஆடும் பாத்திரங்களாக தமிழக மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த வலைப்பின்னலை கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் இன் உணர்வினால் அச்சமூட்டப்பட்ட சக்திகள் தமிழீழத்திற்கு எதிரான தங்களது “வஞ்சம்“ தீர்க்கும் நிலைப்பாட்டால் பின்னலாக்கி உள்ளன என்பது மிகையாகாது. இந்திய தேசியத்தில் தமிழ் தேசியம் கரைக்கப்பட வேண்டும் என்கிற கருத்துடன் இந்த வலைப்பின்னல் பின்னலாக்கப்பட்டு வருகிறது. ஈழமுரண்பாடு என்பது ஒரு தேசியஇன முரண்பாடு. அதனால் தமிழர்களின் பிரிந்து போவதற்கான சுயநிர்ணய உரிமையை முன்வைப்பது உலக மக்களினது ஜனநாயகக் கடமை. இந்த குறைந்தபட்ச ஜனநாயக உணர்வுகூட அற்ற ஒரு அரசியல் சூழல் இன்று நிலவுகிறது.
1983-ல் நடந்த ஜீலைக் கலவரங்களுக்கு பின்பு தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல்
நிகழ்வாக எழுச்சியாக தமிழீழக் கொரிக்கை மாறியது. சரியாக 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த துவக்கப் புள்ளிக்கே வந்து சேர்ந்துள்ளோம். முன்பு இருந்த அதே பித்துநிலையுடன் ஆனால் முன்பிருந்த நம்பிக்கையோ, வெளிச்சமோ அற்று, குறைந்தபட்சம் தமிழ் என்கிற இனஉணர்வற்று. 25 ஆண்டுகளாக நடந்துவரும் ஒரு இன மக்களின் அவலக்கதையிது. அன்று இருந்த ஒரு அரசியல் தன்னெழுச்சி எங்கு போனது? ஏன் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு இனமும், அதன் பெயரைச் சொல்லி ஆள்பவர்களும் உள்ள ஒரு நாட்டில், குறைந்தபட்சம் தன்னினம் என்கிற உணர்வு இல்லாவிட்டாலும், கண்முன் ஒரு இனத்தை அழித்து சுத்தீகரிக்கும் ஒரு அநீதி போருக்கு எதிரான உணர்வு என்ன ஆனது? உலகிலேயே தனது சொந்த நாட்டின் மீது போர் தொடுக்கும், விமானக் குண்டுகள் வீசும் ஒரு இனவெறிப்பிடித்த அரசு ராஜபக்ஷேவின் சிங்கள பேரினவாத அரசாகத்தான் இருக்கும். சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் இதனை நமது மனதில் பேரதிர்ச்சியாக உறையச் செய்கிறது. இத்தலையங்கத்தில் தனது நண்பரான சிங்கள இனவாத ராஜபக்ஷேபற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார் சிங்கள ஜனநாயகவாதியான லசந்தா, தான் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள். ராஜபக்ஷே என்கிற இனப்பாசிச நவீன ஹிட்லருக்கு காவடித் தூக்கும் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்றவை தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த ஒரு இனத்தை பலியிடும் பெரும் சடங்கில் மணியாட்டிக்கொண்டு உள்ளன. தமிழக கட்சிகள் இனத்தை உண்டு அதிகார மலத்தை சுவைப்பதைத்தவிர வேறு ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தைகளாக கள்ள மௌனம் சாதிக்கின்றன. இந்திய தேசியவாதிகள் தமிழின அழிவைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டுள்ளனர். ஒரு உயிருக்காக ஒரு இனத்தை பலியிடும் ஒரு போர்சடங்காக இதனை மாற்றிக் கொண்டுள்ளது இந்திய அரசும் அதன் தேசியவாதிகளும். இப்போர்ச்சடங்கில் குலவையிடும் வெறிகொண்ட கூட்டமாக நாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகின் ஒரே தமிழினத்தலைவர் யார்? என்கிற தன்முனைப்பின் தீவிரத்திற்கு தமிழின மக்களை கொன்றொழிப்பதைக் கண்டு மத்திய அரசு அதை செய்யும் இதை செய்யும் என்று வானம் பார்த்த பூமிபோல வராது வந்து மாமழை பொழியாத என உளியடித்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபக்கம் என்றால், தனது அறைக்குள் முனுகிக்கொண்டிருந்த மற்றொருவரோ இன்று அறிக்கை விடுகிறார். இலங்கையில் நடப்பது அவர்களது உள்நாட்டுப் பிரச்சனையாம். அதில் இந்தியா தலையிடக்கூடாதாம். இந்தியா அமைதிப்படை அனுப்பியபோது இவர் எங்கே போயிருந்தார்? நடக்கும் நாடகங்களில் கொல்லப்படுவது தமிழினம் அல்ல தமிழா இன உணர்வுகொள் என்கிற வாசகத்தின் இறுதி எழுத்தும்தான்.
ராஜிவ்கொலை என்பதை முன்வைத்து ஒரு இன அழிப்பிற்கு தூபம்போடும் கட்சிகள், ராஜிவைக் கொல்லவேண்டிய தேவை ஏன்? அதில் உண்மையில் நலம் அடைந்தவர்கள் யார்? அதை செய்யத் தூண்டிய சக்திகள் எவை? அச்செயலால் பலன் அடைந்தவர்கள் யார்? என்பதை வெளிப்படையாக அறிவிக்கவுமில்லை. அந்த ஒரு காரணத்தை முன்வைத்து ஒரு இனத்தை அழிப்பதற்கு அனுமதி தருவதுபோல நடந்தகொள்ளும் இந்திய அரசின் நிலை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழினம் குறிப்பாக இந்திய தமிழர்கள் ஏற்படுத்தி உள்ள அரசியல் கசப்புணர்ச்சியின் விளைவாக, இன்று இந்தியாவின் எந்த மாநிலமும் குரல்கொடுக்கத் தயாரில்லை என்பது மற்றொரு பேரவலம். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மாணிப்பவர்களின் சொந்த வெறுப்புணர்ச்சியின் விளைவாக, சிங்கள பேரினவாத அரசு இன்னும் ஊக்கமும் உற்சாகமும் பெற்று ஈழத்தமிழர்களை புவியில்ரீதியாக நெருக்கி முல்லைத் தீவு என்கிற சிறு நிலப்பரப்பிற்குள் அடைத்துவிட்டது. உணவு, மருந்து மற்றும் வாழிடம் என்கிற எந்த அடிப்படை வசதியுமற்ற நிலையில் நெருக்கடியான நிலையில் மக்கள் வசிக்கும் ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றி உள்ளது முல்லைத்தீவை. இந்நிலையில் உலக அரசுகள் காட்டும் மெத்தனம் நிலமையை இன்னும் மோசமான நிலைக்கு எடுத்துச்சென்றுகொண்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேனன் ராஜபக்ஷே சந்திப்புக்குப் பின்னர் “இந்திய, இலங்கை உறவு வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு பாரம்பரியமானது. ஆழமானது. காலத்தையும் கடந்து இது நிலை பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான தீவிரவாதத்திற்கு எதிரான போரில், இலங்கை, இந்தியாவுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது என்றார் மேனன். ரோகித போகல்லகாமா கூறுகையில், நிலைமையைப் புரிந்து கொண்டு இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது பாராட்டுக்குரியது. இலங்கை இனப் பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு காண வேண்டும். இந்திய, இலங்கை ஒப்பந்தம்தான் தீர்வுக்கான சாத்தியமாகும்.“ இந்திய அரசின் தமிழினம் மற்றும் இலங்கை குறித்த வல்லாண்மை செய்யும் அல்லது தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு “தாதாவாக“ மாற்றிக்கொள்ளும் நிலையை வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு பேச்சே இது. உண்மையில் தற்போதையபோர், இந்தியாவின் ஆசியுடன் நடத்தப்படும் அல்லது இந்தியாவே நடத்தும் ஒரு மறைமுகப்போர் (proxy war) எனலாம். அதற்கான அறிவிப்பே இது.
தமிழகமக்களை அரசியல் படுத்தி பரவலான எதிர்ப்பை நாடு தளுவிய அளவில் இந்தியா முழுமைக்குமானதாக கொண்டு செல்வதற்கான ஒரு மக்கள் கட்சி என்பதோ ஒரு மக்கள் முன்னணி என்பதோ இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் பெரிய இரண்டு கட்சிகள் கள்ள மௌனமும் நல்ல மௌனமும் சாதிக்கின்றன. எதிர்கட்சித்தலைவரான ஜெயலலிதா நேரடியாக எதிர்நிலையை எடுத்துள்ளார். ஆளுங்கட்சியான கருணாநிதியோ இந்திய அரசிடம் மனுப்போட்டுக்கொண்டுள்ளார். தமிழக மக்களிடம் 25 ஆண்டுகாலமாக ஏற்படுத்தப்பட்ட புலிகள் மீதான பல அபிப்ராயங்கள், தமிழ் ஈழம் என்றாலே புலிகள் என்பதான ஒரு சங்கேதமாக மாறிவிட்டது. ஒருவகையில் புலிகள் தவிர எந்த ஜனநாயக அமைப்புகளோ அல்லது ராணுவ அமைப்புகளோ இல்லை என்கிற ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஈழப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுவிட்டது. பலகுரல்களை நசுக்கி தன்னை ஒற்றைக் குரலாக மாற்றிக்கொள்ளும்போது பெச்சின் பிரதிநிதித்துவம்கூட அந்த ஒற்றைக்குரலின் பிரதிநிதித்துவமாக மாறிவிடுவதும், அந்த ஒருவரின் பலம் பலவீனம் அந்த பேச்சின் நியயாத்தை சிக்கலாக்கிவிடுவதும் ஆன ஒரு கையறுநிலைதான் இன்று எஞ்சி உள்ளது.
தற்சமயம் பிரச்சனை இயக்கங்கள் அவர்களின் அரசியல் நிலைபாடுகள் பற்றிய விமர்சனங்கள் அல்ல. தமிழக இந்திய உலக அரசுகளின் அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள் பற்றியதும் அல்ல. உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான். உள்நாட்டில் சிதறடிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடு திரும்பி தினசரி வாழ்வை துவங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருள்கள் வாழ்வாதாரங்கள் வழங்கப்படுவதுடன், அவற்றை பெறுவதற்கான உத்திரவாதம் தரப்பட வேண்டும். கிழக்கு திமூர் இந்தோனேசியாவிலிருந்த பிரிந்து செல்வதற்கு உலக அமைப்புகள் தலையிட்டதைப்போல இப்பிரச்சனையிலும் உலக அமைப்புகள் தலையிட்டு ஒரு அமைதி தீர்வை நிலைநாட்ட வேண்டும். அதற்கு ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் ஒன்று திரண்டு நமது எதிர்ப்புக்குரலை முன்வைப்பதும், தமிழகமே ஒரு சில மணி நேரங்களாவது ஸ்தம்பிக்கச் செய்யும் வண்ணம் தமிழக மககள் அனைவரும் தெருவில் இறங்கி நின்று தங்கள்து சிங்கள - இந்திய ஆதிக்க அதிகாரத்திற்கான எதிர்ப்பை உலக அறியச் செய்வது இன்றைய உடனடி அரசியல் நடவடிக்கையாகும்.
தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுப்போம்
ஈழச் சகொதரர்களுக்கு கரம் கொடுப்போம்.
வீழ்வது நாமாக இருந்தாலும்
வெல்வது மானுடமாகட்டும்.
-ஜமாலன். 27-01-2009
தொடர்புடைய சுட்டிகள்.
யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்.
கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.
பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம் – மாயா




17 comments:
மிகச் சரியான கட்டுரை. நன்றி.
உறவுகளின் இனப் படுகொலைச் செய்திகளை கேட்டு பின் என்ன செய்வது எப்ப்படிச் செய்வது என்ற அறியாமை, வெறுப்பு, கோபம் என எல்லாம் ஒரு மனப்பிறழ்ச்சி நிலைக்கு இட்டுச்செல்கிறது.
உலகத் தமிழினம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தையும், தமிழனின் நலனுக்கான பெருங்குரலுக்கான ஒரு சர்வதேசத் தளத்தின் அவசியத்தையும் உணரமுடிகிறது.
ஜமாலன்,
நல்ல அவதானத்துடன் எழுதப்பட்டுள்ள கட்டுரை.
தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த மக்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாகும் அவசர, அவசிய தேவையிருக்கிறது. அத்தகைய கூட்டமைப்பை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கியிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நாற்காலி அரசியலில் தலைமைகளும், அமைப்புகளும் தனித்தனியாக பிரிந்து குரலெழுப்பி தமிழின படுகொலையை தடுக்க தவறியுள்ளனர். இன்னமும் காலம் கடந்து போகவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசியல் அமைப்புகளை புறக்கணிக்கும் அரசியலை தமிழக மக்கள் முன்னெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டேயிருக்கும் எம் கையாலாகாத்தனத்தினைக் கொண்டு என்ன செய்வது? :-((
நாம் என்ன சொன்னாலும் எதுவும் நடக்க போவதில்லை.. இங்கே எல்லோருமே சுயநலத்தை மட்டுமே பார்கிறார்கள்.. நல்ல தலைவர்கள் இல்லாததால் வந்த வினை இது.. அல்லல் படும் தமிழ் மக்களை நினைத்து கதறி அழுவதை தவிர நாம் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம்..
ஆட்சி பிடித்து
அழுதுக் கொண்டு இருப்பவர்கள்
இருக்கும்வரை
அவலங்களும்
அழுகைகளும்
அகலா போவதில்லை
ம்ம்ம்...
என்ன செய்வது...:(
உரியவர்களால் இதற்கு மேலும் ஏதாவது செய்ய முடியாவிட்டால் நாம் இப்படியே இருந்துவிட்டுப்போகிறோம் கையாலாதவர்களாகவே...:(
நன்றி சுந்தர், கையேடு, திரு, முபாரக், கார்த்திகை பாண்டியன், திகழ்மிளிர் மற்றும் தமிழன்-கருப்பி.
ஈழத்தில் புலிகளை அழிப்பதாகச்சொல்லிக்கொண்டு தமிழ் இன அழிப்புத்தான் நடக்கிறது நடப்பவைகள் அதைத்தான் சொல்கிறது..300 மேற்ப்பட்ட மக்கள் இறந்தும் ஆயிரத்துக்குமேற்பட்டவர்கள் கால் கை இழந்து குழந்தைகளும்,பெரியவர்கலும் ..இறந்தவர்களை,முதியவர்களையும் அப்படியேவிட்டுவிட்டு ஓடும் நிலையும் ,காயம்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி இடங்கள் ,மருந்துகள் இல்லாமல் அப்படியே இறப்பதும் சொல்ல முடியவில்லை நாளாந்தம் நடக்கும் ஈழமக்களின் அவலங்களை ....
இன்னும் வேதனை என்னவெனில் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் பேச்சு, ஈழத்தைல் நடந்துகொண்டிருக்கும் தற்போதைய நிகழ்வுகள் பெரிய அழவில் அதிர்ச்சிகள் ஏற்படுத்தாதது மட்டுமல்ல ஈழத்தில் புலிகளைவிட தாம் நேர்மையானவர்கள் தமிழ்மக்களின் உணர்வுகளை மதிப்பவர்கள் என்று சொல்லும் எவரும் .. லக்கிளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, கருணா. மற்றும் பிள்ளையான் (இவர்கலின் நிஜப்பெயர்கள் சரியாக தெரியாததால் புனைபெய்ர்கலை எழுதுகிறேன்.. ) பொதுமக்களை அரசு கொன்று குவிப்பதற்கெதிராக எந்தக்குரலையும் எழுப்பவில்லை ..அதுபற்ரி எதுவும் யாரும் இதுவரை சொல்லவும் இல்லை அரசுக்கு துணைபோவதைத்தவிர ..இவர்களிடம்தமிழர்களின் எதிர்காலமா என்பது மட்டுமல்ல..
புகலிடங்களில் இவர்களை ஆதரிப்பவர்களும் அங்கு தமிழ்மக்கள் கொல்லப்பட்டும்,ராணுவ பெண்வதைகளையும் ,மக்கள் அகதிகளாக அல்லல்படுவதையும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் புலிகள் அழியட்டும் என்று.. ...
புத்த மதத்தை தம்மதமாக கொண்டிருக்கும் புத்தபிக்குகள் அனேகர் போரை ஊக்கிவிப்பதும் ...மேற்கில் இதுவரை போரை நிறுத்தும்படி எந்த நடவடிக்கைகளும் இடதுசாரி கட்சிகளிலிருந்து மக்களும் போருக்கான தமிழ் பொதுமக்கள் இறப்பதற்க்கான எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது இதை எப்படி எடுப்பது என்று தெரியவும் இல்லை.
இந்திய அரசு இன்னும் பல வழிகளில் இலங்கைக்கு உதவிக்கொண்டிருப்பதும் ,மற்ரயநாடுகலின் ஆயுத உதவியும் ..
எல்லாம் இலங்கை பயங்கரவாத அரசுக்கு சாதகமாகவே இருக்கிறது ...
இந்த கொலைப்போருக்குள்ளும் இந்திய இலங்கைக் கிறிக்கட்போட்டி நடைபெறுகிறது.....
அடையாளங்கள் கற்பிதம்தான் ஆனால் அந்தக்கற்பிதங்களுடன்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கும்போது அந்த அடையாளங்களுக்காகத்தான் போராடவேண்டியிருக்கிறது இல்லையா...
நன்றி றஞ்சனி..
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடையாளப்படுத்தப்படுவதால், அடையாளங்களை முன்வைத்து போராடுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.
விரவான உங்கள் கருத்துக்கள் மேலதிக விளக்கம் தருவதாக உள்ளது.
நன்றி ஜமாலன்..
இன்று சென்னையில் ஒருவர் ஈழத்தமிழர்களுக்காக தீக்குழித்து தற்கொலைசெய்துகொண்டதாக அறிந்தேன் மிகவும் வேதனையாக இருக்கிறது எங்கும் மனித இழப்புக்கள்......
..இப்படியான உணர்சிவசப்பட்ட நிகழ்வுகளை தமிழ்நாடில் மக்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் இது இலங்கை அரசுக்கொ இந்திய அரசுக்கோ எந்த இழப்பையோ எந்த கஸ்டத்தையோ , நஸ்டத்தையோ கொடுக்கப்போவதில்லை .......
காஷாவில் சிறுவர்கள் குழந்தைகள் என்று 900 பேருக்குமேல் இறந்தும் காயப்பட்டும் வீடுகள் தரைமட்டமானதையும் உலகழவில் பார்க்ககூடியதாக இருந்தும்
ஸ்ரேல் அரசு எந்த பயமோ சலனமோ இல்லாமல் தாம் பொதுமக்களை கொல்லவில்லை அழிக்கவில்லை ,அவர்களின் வீடுகளை அழிக்கவில்லை என்கின்றது ..
இதயேதான் இலங்கை அரசும் நாம் பொதுமக்களை அழிக்கவில்லை கொல்லவும் இல்லை என்கிறது இதற்க்கு சாதகமாக அங்கு எந்த செய்தியாலர்கலும் அனுமதிக்கப்படுவதுவும் இல்லை ஸ்ரேலின் தந்திரத்தைத்தான் இலங்கை அரசும் கடைப்பிடிக்கிறது
..
ஸ்ரேலை ஊக்கிவிப்பதற்க்கு நாடுகள் இருப்பதுபோல இலங்கைக்கும் பக்க நாடுகளின் ஊக்குவிப்பும்,உதவியும்,ஆதரவும் ,அதிகமாகவே இருக்கிறது ...
தோழர் முத்துக்குமாரனின் இழப்பு நடந்தே இருக்க வேண்டாம் மிகவும் வேதனை அவரின் இறுதி நிகழ்வுகளை http://www.puthinam.com இணையத்தளத்தில் பார்த்தேன் கதறி அழவேண்டும்போல இருக்கிறது.. ஏன் எங்கும் மரணம் ஓலம் ...இதற்க்கு காரணமானவர்களை யார் கண்டிப்பது தண்டிப்பது..?
ஈழத்தின் இன்றை நிலமையை எழுதியிருக்கிறீர்கள்
பதுங்கு குழிகளும் பாதுகாப்பு கொடுக்காது.எவரது கருணையும் இல்லை மகிந்த மனிதர்களை மாடு ஆடுபோல் கொன்றொழிக்கிறார்.இந்தியா இந்தியத்தழிழர்களை நன்றாகவே ஏமாற்றுகிறது.தினசரி இறக்கும் குழந்தைகள் எத்தனை
எல்லா பிரார்த்தனைகளும் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன
முத்துக்குமாரின் மரணம் மனதை கொதிக்க வைக்கிறது.புதினத்தில் அவரின் வாக்கு மூலத்தைப் படித்தபோது கண்ணீர்விட்டு அழத்தான் முடிந்தது.மனதுள் கோடி அஞ்சலிகள்.கீற்றில் வெளியாகியுள்ள புதுவை இரத்தினதுரையின் கவிதைகளில் படரும் ஏக்கமும் வலியுந்தான் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.
உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது ஜமாலன்
தமிழகமக்களை அரசியல் படுத்தி பரவலான எதிர்ப்பை நாடு தளுவிய அளவில் இந்தியா முழுமைக்குமானதாக கொண்டு செல்வதற்கான ஒரு மக்கள் கட்சி என்பதோ ஒரு மக்கள் முன்னணி என்பதோ இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் பெரிய இரண்டு கட்சிகள் கள்ள மௌனமும் நல்ல மௌனமும் சாதிக்கின்றன. எதிர்கட்சித்தலைவரான ஜெயலலிதா நேரடியாக எதிர்நிலையை எடுத்துள்ளார். ஆளுங்கட்சியான கருணாநிதியோ இந்திய அரசிடம் மனுப்போட்டுக்கொண்டுள்ளார்.///
உங்கள் கருத்து சரிதான்...
நன்றி சித்தாந்தன் மற்றும் thevanmayam
கருத்துரையிடுக