இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

தமிழீழப் பிரச்சனை உக்கிரமடைந்து கடும் போர் நிகழும் இச்சூழலில் தமிழகத்தில் நடந்தவரும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான பல போராட்டங்களில் தமிழகக் கவிஞர்கள் ஒன்றுகூடி நடத்தும் ஒப்பாரிப் போராட்டம் இது.  இப்போராட்டம் குறித்து குறிப்பிடத் தகுந்த உடல்மொழிக் கவிதைகளை எழுதிவருபவரும், திரைப்படத்துறையில் மாற்றுத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டு வருபவருமான தோழர் லீணா மணிமேகலை இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலி்ல் தெரிவித்திருந்தார். தமிழக் கவிஞர்களுக்கான ஒரு புதிய வலைப்பதிவும் உருவாக்கி உள்ளனர்.  இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான “ஒப்பாரிக் கவிதைகளை” எழுதி தங்களது ஆதரவையும் இலங்கை அரசின் இனப்போருக்கு எதிரான உணர்வையும் பதிய வைக்க எண்ணம் உள்ளவர்கள் இந்த வலைப்பதிவிலோ அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலோ, அலைபேசி எண்ணிலோ, மின்-அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். 

கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் சமூக உணர்வை வெளிப்படுத்தும் இந்Sri Lankaநிகழ்வில் எல்லோரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறேன்.  ஏற்கனவே தமிழக ஓவியர்கள் ஏற்பாடு செய்த போரட்டம் குறித்து நாகார்ஜீனன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.

சென்னையைச் செர்ந்த பதிவுலக நண்பர்கள் இதில் கலந்துகொண்டு இந்நிகழ்வு பற்றிய பதிவுகளில் எழுதினால் எங்களைப்போல அயல்தேசத்தில் இருப்பவர்களுக்கு அப்போராட்டத்தை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். பதிவுகள் மாற்று ஊடகம் என்பதன் பொருள் இதுபோல் மைய ஊடகங்களால் புறக்கணிக்கப்ட்ட நிகழ்வுகளை பதியவைப்பதுதான்.  நண்பர்கள் இதுகுறித்து எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து ,
தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்
கண்டனக் கவிதைப் போராட்டம்.

இடம் :சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே
நாள் : டிசம்பர் - 7, 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம் :
காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை

நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி,
இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.
அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.
சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் !

தொடர்புக்கு

மின்னஞ்சல் : tamilpoets@gmail.com

செல்பேசி : 9841043438, 9884120284, 9952089604

நண்பர் கென்னின் அறிவிப்பு இங்கு.

தமிழீழம் குறித்து எனது பழைய பதிவு.  யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்

-குறிப்பும் அறிவிப்பும் ஜமாலன். 25-11-2008

படங்கள்.

தமிழர்கள கொண்று லாரியில் வாரிச்செல்லும் காட்சி. இறந்துபோன சகோதரனுக்கு கிளிநொச்சிக்கு வெளியில் உள்ள அமரர்கள் இடுகாட்டில் அஞ்சலி செலுத்தும் தமிழ்பெண்.

பொதியவெற்பன் மணிவிழா நிதி--ஒரு வேண்டுகோள்

image

பொதி என்று நண்பர்களால் அழைக்கப்படும் தோழர் வெ.மு. பொதியவெற்பன்தான் சீரிய இலக்கியம் எனப்படும் தமிழின் சிறு பத்திரிக்கை இலக்கியத்தை எனக்கு 1983-84 களில் அறிமுகப்படுத்தியவர். குடந்தையில் அவருடன் 10 ஆண்டுகளுக்குமேல் பல இலக்கியக் கூட்டங்கள், இயக்கப் போராட்டங்கள் என ஒன்றாக இயங்கி உள்ளேன். எனது கல்லூரிக் காலத்தின் பெரும்பாலான மாலைகள் அவரது சிலிக்குயில் புத்தகப் பண்ணையில்தான் கழிந்தது. இதுவரையில் இலக்கியம் சார்ந்தும், இலக்கியத்திற்கு அப்பாலுமான நட்பு உண்டு அவரிடம். பாப்புலோ நெரூடாவை தமிழில் மொழி்பெயர்த்து அவரது பெயரிலேயே சிலிக்குயில் என்கிற பதிப்பகத்தையும் நடத்தி வந்தவர். சிலிக்குயிலுக்கு ஒரு செங்கவிதாஞ்சலி என்கிற பாப்லோ நெருடா பற்றிய அஞ்சலி நூலை வெளியிட்டவர்.

குறிப்பிடத்தக்க கவிஞர், புதுமைபித்தன் குறித்து முழுமையாக ஆராய்ந்து தனது ஆய்வை நிறைவு செய்த தமிழ் அறிஞர், சமூகப்பொறுப்புள்ள இயக்கப்போராளி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், கலை இலக்கிய பெருமன்றத்தில் இயங்கியவர் மற்றும் புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தவர். சிலிக்குயில் என்கிற பதிப்பு நிறுவனத்தையும் முனைவன் மற்றும் பறை போன்ற இதழ்களையும் கொண்டுவந்தவர். சிறுபத்திரிக்கை இயக்கத்தின் முன்னொடியும் முதல் சிறபத்திரிக்கையுமான மணிக்கொடியின் பொன்விழாவை தனிமனிதராக இருந்து முனைப்புடன் (அதில் நான், தோழர் அ. மார்க்ஸ் மற்றும் போ. வேலுசாமி போன்றவர்கள் பங்கு பெற்றிருந்தாலும்) கொண்டாடியவர். அதற்காக மணிக்கொடி பொன்விழா மலரை வெளிக்கொண்டுவந்தவர்.  குடந்தையில் உள்ள இலக்கியவாதிகளின் ஒன்று கூடல்களுக்கும், தீவிர விவாதத்திற்கும் களமாக அமைந்தது அவரது சிலிக்குயில் புத்தகப்பண்ணை. 1983-ஜுலைக் கலவரத்திற்குப் பிறகு, ஈழத் தமிழ்க் கவிதைகளை வெளிக்கொண்டுவந்தவர். தமிழில் “கவிதாநிகழ்வு“ எனகிற நிகழ்வை அறிமுகப்படுத்தி நடத்திவந்த அவர், பர்வீன் சுல்தானாவின் தீவிர இசைப்பிரியர். இசைக்கோவையாக ராகத்துடன் கவிதைகளை மேடைகளில் அரங்கேற்றும் திறன் கொண்டவர். தமிழில் தத்துவம் குறித்து நூட்களை சமீபத்தில் எழுதி வெளிக்கொண்டு வந்துள்ளார். அவரது பொன்விழா இதழில் அவர்பற்றிய எனது அனுபவங்களையும், இலக்கியத்தை வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் சொந்த வாழ்வை இழக்கிறார்கள் என்பது குறித்த ஒரு விசாரமாகப் பகிரும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அது ஓரிருநாட்களில் பதிவேற்ற முயல்கிறேன். கடைசிவரை இலக்கியம், புத்தகப் பதிப்பு, விற்பனை என வாழ்ந்து தனது சொந்த வாழ்வையே சூன்யமாக்கிக் கொண்டவர் என்றால் மிகையாகாது. அவரது மணிவிழா குறித்து அவரது பதிவிலும், தனிப்பட்ட முறையில் எனக்கு அஞ்சலிலும் அனுப்பப்பட்ட இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுகிறேன். தற்சமயம் கார் விபத்தில் காலில் அடிபட்ட நிலையில் சிகச்சையில் இருக்கிறார்.  இலக்கிய நண்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள் என்கிற வேண்டுகோளுடன்..

சமூக ஓர்மைப் பதிப்பாள முன்னோடியும், சமூக மனசாட்சியான பன்முக ஆளுமையுமான வே.மு.பொதியவெற்பனின் 'பொதிகை--60' மணிவிழா நிகழ்வுகள் 10.05.08 அன்று 'வம்சி புக்ஸ்' சார்பில் திருவண்ணாமலையிலும், 29.08.08 அன்று கலை இலக்கிய பெருமன்ற கிளை சார்பில் குடந்தையிலும் நடைபெற்றன. மணிவிழா குழு சார்பில் சக பயணியர் தோழமைக் கெளரவிப்பாகவும், மருத்துவநல பராமரிப்பிற்காகவும் (கார் விபத்தில் கால்பாதிப்பு) நிதி திரட்டப்படுகிறது. நிதியளித்து உதவ வேண்டுகிறோம். நிதியளிப்பு நிகழ்ச்சி தஞ்சையில் முக்கூடல் ஏற்பாட்டில் தமிழ்ப்பல்கலை அரண்மனை வளாகத்தில் 07.12.08 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.
தங்கள் பங்களிப்பினை அளித்து உதவுக.

இங்ஙணம்

ஞானி, அ.மார்க்ஸ், இன்குலாப், கல்விமணி, த.பழமலை, தொ.பரமசிவம், வீ.அரசு, சி.மோகன், திலீப் குமார், கால.சுப்பிரமணியன், நா.விச்வநாதன், எம்.ஜி.சுரேஷ், மு.ராமசாமி, இளமுருகன், பா.மதிவாணன் , அரங்க.சுப்பையா, சுதீர் செந்தில், தேவேந்திர பூபதி, ந.முருகேச பாண்டியன், பிரேம், ரமேஷ், மாலதி மைத்ரி, அரச.முருகுபாண்டியன், இரத்தின கரிகாலன், வேலு சரவணன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் புது எழுத்து, முக்கூடல், ட்ரீம்ஷாப், மருதா, பொன்னி

பொதியவெற்பன் தொடர்பு முகவரி:

வே.மு. பொதியவெற்பன், சிலிக்குயில் புத்தகப்பயணம்,
சாஸ்தா நிவாஸ் மாடி, மனை எண்:31 , ராஜேஸ்வரி நகர், தஞ்சாவூர்-613005
கைபேசி: 98947 74213

வங்கிக்கணக்கில் செலுத்த:
V.M.POTHIYA VERPAN, A/C NO: 1854101031269 Canara Bank, Arul Nagar Branch , Thanjavur
http://chilikkuyil.blogspot.com/

குறிப்பும் அறிவிப்பும் ஜமாலன். 24-11-2008

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மோதல் ஒரு வருந்ததக்க செயல் என்பதும் பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்.  வன்முறை எப்போதும் எதிர்வன்முறைக்கான கூறைக் கொண்டே உள்ளது. அவ்வகையில் இந்த வன்முறையின் ஒருபக்கத்தை மட்டும் ஊடகங்கள் பெரிதுபடுத்தி இந்தப் பிரச்சனையில் தங்களது ஒருதலைப் பச்சமான உயர்சாதி சார்பு மனப்பான்மையை வெளிப்படுத்தி கொண்டன என்பதுடன் தங்களது ஓட்டுவங்கி அரசியலுக்கு இதனை பயன்படுத்திக்கொண்டன. ஊடகங்கள் உண்மைகளை சொல்வதில்லை “உண்மைகளை“ கட்டமைக்கின்றன என்பதை எடுத்துச் சொல்லியுள்ளது இச்சம்பவம்.

இச்சம்பவத்தில் பரவலாகப் பேசப்பட்ட முக்கியச் சொல்லாடல்கள். 1. சட்டம் 2. வன்முறை 3. வன்மம் 4. காட்டுமிராண்டித்தனம். 5. மாணவர்கள் - அரசியல் உறவு 6. காவல்துறைப்பணி 7. பொதுமக்கள் பார்வை 8. அரசு நடவடிக்கை 9. ஊடகங்கள் கட்டும் உண்மை 10. பொதுபுத்தியும் சாதிப்புத்தியும்.

இச்சொல்லாடல்கள் மறு உற்பத்தி செய்யப்பட்டு சமூக பொதுப்புத்தி கட்டமைப்பை மறுபடியும் மறுஉருவாக்கம் செய்து அவரவர் அடையாளங்களை ஒரு முறை மீளாக்கம் செய்துள்ளது என்றால் மிகையாகாது.  மேற்க்கண்ட சொல்லாடல்கள்வழி இந்நிகழ்வு எப்படி பரவலான கவனத்தையும் மக்களிடம் ஒரு அதிகார விருப்புறுதியையும் உருவாக்கியது என்பது பிறிதொரு ஆய்வு. சாதியம் என்பது ஒரு கருத்தியில் அல்ல அது ஒரு உடலரசியல் நிகழ்வு என்பதையும் ஒரு உடலின் உள்ளார்ந்துள்ள செயல்-பழக்கத்தின்(habitués)  வழியாக ஒரு கருத்துருவ-உடலாக மாற்றப்பட்டுள்ளது. விழாககள், ஜெயந்திகள் மற்றும் பல கொண்டாட்டங்கள் வழியாக சாதி குறித்த பல வரலாற்று நினைவுகள் தொடர்ந்து ஊடகங்களால் அந்த சாதிய ஆதிக்க வர்க்கத்தினரால் பெருக்கப்பட்டு, பாதுகாப்பாக அந்தந்த சாதி உடலுக்குள் இறக்கப்படுகிறது. இப்படி இறக்கப்பட்ட சாதிய உடல்கள் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதின் வழியாக தங்களது அடையாளத்தை மீளுருவாக்கம் (assemblages)  செய்துகொள்கின்றன. சாதியம் என்பது அடிப்படையில் தீண்டாமை மற்றும் தனது குழு உடல்கள் பற்றிய பெருமித அடையாளங்கள் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. வரலாறு என்கிற பெயரில் பல கற்பிதங்களை உருவாக்கி பல கதையாடல்களைக் கட்டமைத்துக் கொண்டதன்மூலம் சாதிய உடல்கள் மீண்டும் மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொண்டே உள்ளன இத்தகைய நிகழ்வுகளால். வினவு சுட்டிக்காட்டியதுபோல “சாதியத்தலைவரை தேசியத்தலைவராகவும், தேசியத்தலைவரை சாதியத்தலைவராகவும்” கட்டமைக்கும் ஒரு கதையாடலை இந்கிகழ்வுகள் சென்னை போன்ற பெருநகர்வரை கொண்டு சென்றுள்ளது.

விரிவாக இதனை வேறாரு பதிவாக எழுதலாம். இங்கு, இந்நிகழ்வின் காட்சிகள் மற்றும் இதுகுறித்து தோழர். அ.மார்க்ஸ் மற்றும் மக்கள் குடியுரிமைவாதிகளால் நடத்தப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கையும் நிகழ்ந்த இந்த வன்முறையின் அடிப்படைகளைச் சொல்லும் என்பதால் இங்கு மீள்பதிவிடப்படுகிறது.

இப்படி வந்த நான் ...........

imageimage
imageimage

















imageimage
இப்படி ஆயிட்டேன்.

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)

தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020.செல்: 94441 20582, 94442 14175, 94434 39869

20, நவம்பர் 2008

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிறசாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் பங்குபெற்றோர்:

அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.

இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத்தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம்ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான தலித் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது.சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.

பின்னணி:

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல்,விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) தலித்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது.

எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்’ என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளில் ‘தேவர் ஜெயந்தி’ கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’என்னும் பெயரிலுள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ என்னும் சொல்லை நீக்கி வெறும் ‘சென்னை சட்டக் கல்லூரி’என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் தலித் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும்எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.

இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை ‘ராகிங்’ செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கேலி செய்வது என்கிற வகையின்றி சும்மா விசாரித்துக் ‘கலாய்ப்பது’ என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ‘‘என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் ‘அக்யூஸ்ட்’ ராமர் என்னுடைய சித்தப்பா’’ என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதிரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற தலித்மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை, போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என தலித்மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி தலித் மாணவர்களை ‘‘தேர்வு எழுத வந்தால் தாக்குவோம், காலை ஒடிப்போம்’’ என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள தலித் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் தலித் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின்அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.

நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(தலித்)மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன்,ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு தலித் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன்ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம்.

இது குறித்து விடுதியில் தலித் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர்.தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.

நவ.12 வன்முறை:

இன்று காலை தேர்வு எழுத வந்த சில தலித் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் ‘கேட்’டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள ‘எஸ்பிளனேடு’ காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார்.

தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவிஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் ‘பகுஜன் சமாஜ் கட்சி’ தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார்.கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த லித் மாணவர்களிடம் பேசியுள்ளார்.அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்லியுள்ளனர்.

சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார். இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் தலித் மாணவர்களைத் திட்டிக்கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட லிலும் பெருங்காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினர் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.

இன்றைய நிலை:

நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

1. குற்ற எண்:1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 தலித் மாணவர்கள் ‘மற்றும் பலர்’ குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 தலித் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட)பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2. குற்ற எண்:1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும்(‘மற்றவர்கள்’) சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.

3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்காகஇடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி (ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.

எமது பார்வைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன.அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.

2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன் லிசிங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.

3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு Cognizable Offence நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும்,அனுமதியும் தேவையில்லை.

4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிபக்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழிலின் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.

5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும் போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. தமிழகம் முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம்.ஆனால் அதே நேரத்தில் Elite Schools என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.

6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.

8. தலித் மாணவர்கள், தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ‘திருப்பதி சட்டக் கல்லூரி’ மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். தலித் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.

பரிந்துரைகள்:

1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப்படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.

2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.

3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.

4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.

5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்களைத் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.

6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்தன்பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

7. கல்லூரி ஆசிரியப் பணிக் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சிலிங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு ‘வார்டன்’ நியமிக்கப்பட வேண்டும்.

8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதிஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும்
Legal Cell Authority, High Court Registry ஆகியவற்றில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.

9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.

நன்றி - சத்தியக்கடுதாசி

குறிப்பும் மீள்பதிவும் ஜமாலன் - 22-11-2008.

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு

சென்னை மற்றும் தமிழக நண்பர்களுக்கு.. கடந்த சில ஆண்டுகளாக கீற்று ஆற்றிவரும் வலையுலகத் தமழ்ப்பணி அறிந்ததே. கீற்று தனது வாசகர் சந்திப்பை சென்னையில் நடத்துகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு அது குறித்து பதிவிலும் எழுதினால், எங்களைப்போல நுற்கள் கிடைக்காத ஒரு நாடடில் கீற்றின் முக்கியத்தவம் உணர்ந்தவர்கள் உங்கள் வாயிலாக அதை படிக்க வாய்ப்பாக அமையும்.

----------------------------------------------------------------------------------------------

கீற்று இணையத்தைத் தொடங்கியது நாள் முதல் வாசகர்களாகிய நீங்கள், எங்களுக்கு அளித்துவரும் உற்சாகமும், ஆதரவும் அளப்பரியது. கடந்த மூன்றாண்டுகளில் எங்களது தொடர்பு முகவரியோ, கைப்பேசி எண்ணோ தராத நிலையிலும் நண்பர்கள் வாயிலாக அதைப் பெற்று, எங்களைத் தொடர்பு கொண்டு, கீற்றுவின் மீதான தங்களது மதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தினந்தோறும் எங்களுக்கு வரும் மின்னஞ்சல்களிலும், படைப்புகளுக்கு நீங்கள் தரும் பின்னூட்டங்களிலும் எங்கள் மீதான அன்பை உணர்ந்திருக்கிறோம்.
‘நான் வசிக்கும் நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் கீற்றுதான் எனக்கு ஒரே துணையாக இருக்கிறது’ என்றும், ‘அகதிகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையேயான உறவுப்பாலமாக கீற்று விளங்குகிறது’ என்றும், ‘தங்களின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த முறை நான் சென்னை வரும்போது தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்றும் வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கின்றன. அதுவே தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை எங்களுக்குத் தருகிறது.
கீற்றுவின் நான்காம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வாசகர்களுக்கு விடுத்தவேண்டுகோளில் எங்களது கைப்பேசி எண்ணைத் தந்திருந்தோம். அதுமுதல் எங்களைச் சந்திக்க விரும்புவதாக வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக வாசகர் சந்திப்பு ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதுகுறித்து கீற்று வலைக்குழுமத்தில் விவாதித்தபோது நிறையபேர் ஆர்வம் தெரிவித்தார்கள்.


நாள் குறித்தோம், அரங்கைப் பிடித்தோம். இதோ, வாசகர் சந்திப்புக்குத் தயாராகிவிட்டோம். கீற்றுவின் நிறை, குறைகள் குறித்தும், கீற்று தொடர வேண்டிய/ செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீங்கள் பேசலாம். கீற்று தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறோம்.

  • நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை
  • நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
  • இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு.

- குறிப்பும் மீள்பதிவும் ஜமாலன்.

ஜெயமோகனின் “எனது இந்தியா” பற்றி அ. மார்க்ஸ்

image

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழ்ச் செல்வன் தொடங்கி விக்ரமாதித்தன் வரை சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் கேலி செய்து எழுதியுள்ள ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை  அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.

காஷ்மீர் பிரச்சினையை, 1. பாகிஸ்தானின் தூண்டுதல், 2. `ஜிஹாதி' பயங்கரவாதம், 3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதே அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் கடமையாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமை அதுதானே. வாழுங் காலத்தின் சமூக அநீதிகைளக் கண்டு கொதித்து சம காலத்தையே நிராகரிப்பவன்தானே எழுத்தாளன். டால்ஸ்டாய் முதல் ஆஸ்கார் வைல்ட் வரை அப்படித்தானே வாழ்ந்துள்ளனர். எழுத்துக்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை என்பதன் பொருளும் இதுதானே.

பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப் பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக் காட்டி அதற்காகவே அருந்ததியை `குருவி மண்டை' எனவும், கூலிக்கு  எழுதுபவர் எனவும் இழிவு செய்கிறார் ஜெ.மோ. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் சம கால ராஜதந்திரியின் மூளை அமைந்துள்ளதெப்படி? ஜெ.மோ. ஒரு வினோதப் பிராணிதான்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.

இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.

ஜெயமோகன் கக்கியுள்ள இதர விஷக் கருத்துக்களைச் சுருக்கம் கருதி விட்டு விடுகிறேன். இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அஃப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவரைச் சென்று மிரட்டினாராம்.  ``இந்தியச் சமூகம் அளிக்கும் வாய்ப்புக்கள்'' மூலம் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் முன்னேறி வருகிறார்களாம் (பார்க்க : சச்சர் அறிக்கை); உலகப் பரப்பில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஆங்காங்கு புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளாக மாற்றுகின்றனவாம் முஸ்லிம் அமைப்புகள் (எத்தனை கொடூரச் சித்திரிப்பு பாருங்கள்); மாற்று தேசியங்களை மத நோக்கில் அழிக்க முஸ்லிம்களுக்குத் தயக்கம் இருக்காதாம்.

``காரணம், இஸ்லாம் என்பது ஒரு தேசிய கற்பிதம் - ஒரு தேசிய கற்பிதம் - ஒரு மதமோ வாழ்க்கை முறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய அற்புதங்களை ஏற்காது'' - ஜெ.மோ.

ஜெயமோகனுக்கு இஸ்லாம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மட்டுமே மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாமின் `தேசியம்' என்கிற கருத்தாக்கமே கிடையாது. `உம்மா' - சமூகம், நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு என்பதற்கே அங்கு முக்கியத்துவம். பிற நம்பிக்கையாளர்களுடன் சமூக இணக்கத்தை அது மறுத்ததில்லை. காஷ்மீர மக்கள் அதற்கொரு நடைமுறை எடுத்துக்காட்டு.

சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பெயர் குறித்து ஏசுகிறார் ஜெ.மோ. மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து நிதி வருகிறதாம். ``ஆங்கில இதழ்களின் ஞாயிறு இணைப்பில்'' வரும் கட்டுரைகளைப் பார்த்து தமிழில் எழுதுகிறவர்களாம் இத்தகைய அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதற்கு ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை, ``மனச்சாட்சியுள்ள வாசகர்கள்'' யோசிக்க வேண்டும். தமிழில் வெளிவந்த நூற்களையே ஈயடிச்சான் காப்பி அடித்து பொ. வேல்சாமி போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக அவமானப்பட்டவர் ஜெ.மோ. இவர் ஆங்கில இதழ்களைப் பார்த்து கட்டுரை எழுதுவதில்லை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் எதையும் படிப்பதில்லை. மலையாளத்தில் வரும்வரை அவர் காத்திருப்பார்.

``தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்ற போதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே `வெல்க பாரதம்' '' எனக் கட்டுரையை முடிக்கிறார் ஜெ.மோ. அவரது கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள் - முத்திரையை வேறு யாரும் அவர் மீது குத்த வேண்டுமா என்பது விளங்கும். முத்திரை குத்துவதற்கு அவர் முதுகில் இடமில்லை. அவரது உடல் முழுவதும் காவி முத்திரை படிந்துள்ளதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி.

`தேசபக்தி பாவமென்றாகி விட்ட சூழல்' என அவர் சமூகச் சுரணையுள்ள எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார். உண்மைதான். தேசபக்தியைப் பாவமென்று மட்டுமல்ல, கொடூரம், அயோக்கியத்தனம், vicious என்றெல்லாம் பெரியார் ஈ.வெரா மட்டுமல்ல, டால்ஸ்டாய் உள்ளிட்ட மனிதரை நேசித்த, சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் அவ்வளவுபேரும், ஆம் அவ்வளவு பேரும் சொல்லித்தான் உள்ளனர்.

ஜெயமோகனைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு `தேசபக்தி', `தேசியம்' ஆகியன குறித்தும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம்.

குறிப்பு : ஜெ.மோ போன்றவர்களுக்காக ஒரு தகவல்: காஷ்மீர் பயணம் முழுக்க முழுக்கச் சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவர் செலவு ரூ.19,200/-. (அடுத்த இதழில் முடியும்..)

- அ.மார்க்ஸ்                                                  நன்றி- தீராநதி-01-11-2008

குறிப்பு- தீராநதியில் அ. மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரை இங்க பதிவ வாசகர்கள் பரவலாக அறியும் பொருட்டு மறபதிவு செய்யப்படுகிறது.

தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு - தமிழவன்

தமிழுணர்வின் அடிப்படையில் தென் கிழக்காசியாவில் (சமீபத்திய நாட்களில்)தோன்றியுள்ள மன உணர்வு இந்தப் பிரதேசம் பற்றி அறிந்துகொள்ளும் முக்கியமான அளவுகோலாகும். 1937-இல் இந்தி எதிர்ப்பு, தமிழர்கள் மத்தியில் தோன்றியபோது இவ்வுணர்வு ஒரு புதுமுறையில் வெளிப்பட்டது.வெறும் தமிழ்வெறி என்று இந்தPrimordial sentiment (மூலப்படிம உணர்வு)-ஐக் கொச்சைப் படுத்துபவர்கள் மூடர்கள் என்பதுதான் என் கருத்து.

இந்த மூலப் படிம உணர்வை நடுநிலையான எல்லா மானுடவியலாளர்களும், வரலாற்றாளர்களும் புரிந்து அங்கீகரித்துள்ளனர். யுஜின் இர்ஷிக், கிளிபோர்ட் கீட்ஸ், பெர்டன்ஸ்டைன், போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

இந்த உணர்வைப் புரிந்துகொள்ளாத வறட்டு இடதுசாரிகள் ஒருகாலத்தில் இந்தியாவில் நிறையபேர் இருந்தனர். சோவியத் யூனியன் சிறுசிறு தேசிய இனங்களாகத் துண்டான பின்பு இந்த இடதுசாரிகள் தங்கள் அப்பாவித்தனத்தைப் புரிந்து கொண்டனர். இதனைப் புரிந்துகொண்டுள்ளார் தா.பாண்டியன் என்பது மகிழ்ச்சி தருகிறது.

தமிழ் என்னும் மூலப்படிமம் நாடகீயமாய், சடங்குகளாய், கோபமாய்,தற்கொலைகளாய், ஆக்ரோஷமாய், மௌடீகமாய், மூட நம்பிக்கையாய் வெளிப்படும் அதே நேரம் ஆழ்ந்த தர்க்கமாயும், விசாரிப்புமரபாகவும்கூட அமைகிறது. இதனை இரு எதிரும் புதிருமான உணர்வின் அல்லாட்டமாய்ப் பார்க்கவேண்டும். ஏதோ ஒரு உணர்வு மட்டும் பிரதிபலிப்பதாய்ப் பார்க்கக்கூடாது. பார்த்தால் தவறு செய்தவர்கள் ஆவோம்.

இன்றைய நாவலை, சிறுகதையை, நாடகத்தை, திறனாய்வை, திரைப்பட விமரிசனத்தை இந்த அடிப்படை இரகசியத்தை அறியாமல் அணுகினால் தவறு செய்தவர்கள் ஆவோம்.

மேற்கத்தியச் சிந்தனையோடு சார்ந்து செயல் படுகிற, சிந்திக்கிற நம்மில் சிலர்கூட இந்தத் தமிழ் சார்ந்த அடிப்படை இரகசியத்தைப் புரிந்து கொண்டால் தமிழ் பேசும் பிரதேச அடிப்படைகள் தெளிவாகும். நம்முடைய படைப்புகள்,விமரிசனங்கள், திரைப்படங்கள் உண்மையோடு தொடர்புடையவையாய் அமையும்; அல்லது ஒரு குருட்டாட்டமாய்ப் போய்விடும். ஆக அமைப்பியல்,பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் ஆகிய நாமகரணங்களின்கீழ் பேசப்படும் விசயங்கள் உண்மையான தமிழனின் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டுமானால் தமிழனின் மூலப்படிம உணர்வைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த அம்சங்கள் எந்த அளவு நம் சிந்தனைகளில், எழுத்துகளில்,செயல்பாடுகளில் வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது நியாயத்தன்மை (authonticity) நிரூபிக்கப்படும். அந்த நியாயத்தன்மையற்ற எழுத்துகள் பொய் எழுத்துகள்; பயனற்றவை.

தமிழ் ஓர்மையின் மிகத்தெளிவான 'சுட்டி'கள்(index) இன்று அரசியல் கட்சிகளின் மூலமே வெளிப்படுகின்றன. இந்த அரசியல் கட்சிகளின் மூலம் வெளிப்படும் மூலப்படிம உணர்வை நல்லமுறையில் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்; அதனைத் தன் சுய மேம்பாட்டுக்குப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். தன் குடும்ப, சுயவளர்ச்சிக்குப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். மூலப் படிம உணர்வு என்பது ஒரு வகை நீட்சேயன் உணர்வாகும். அதிகாரங்கள், வெறியுணர்வுகள்,மகோன்னத கணங்களின் ஒளிகள் அதில் காணப்படும். இதனை இன்றைய தமிழ் அரசியல் புரிந்து கொண்டுள்ள அளவு, அலசி ஆராயும் தெளிவுள்ள வேறு அறிவார்த்த தலைமை இல்லை; இதனை உருவாக்க தக்கவர்களைக் கொணரவில்லை இவர்கள்.

ஆகையால் கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சென்னையில் உள்ள ஆங்கிலம் படித்த தனி மனிதர்களை நம்ப வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் ஒரு குறிப்பிட்ட சாதிக்குழுவைச் சார்ந்தவர்கள். வரலாற்று ரீதியில் பழிவாங்கும் உணர்வுடன் உள்ள பிராமணர்கள் இவர்கள்.தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளமுடியாது இவர்களால். ஆனால் அதிகமான அறிவை இன்னும் இவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இலக்கியமா, பத்திரிகையா, தத்துவமா, அரசியல் மற்றும் சட்டத்துறையா, வெளிநாட்டு ஆட்சியியலா, விஞ்ஞானமா, மானுடவியலா,சமூகவியலா இவர்கள்தான் தங்கள் கைவசம் வைத்திருப்பதாய் தமிழ்க்கட்சிகளை நம்ப வைக்கின்றனர். எம்.எஸ். எஸ்.பாண்டியன் போன்ற அனைத்துலக அங்கீகாரம் கொண்ட ஒரு திராவிடவியல் அறிஞனைத் திராவிடத் தலைமையினர் துணைவேந்தராய் நியமிப்பார்களா என்ன?

என்னுடைய அளவுகோல் எப்போதும் தமிழ்தான். நான் மார்க்சீயம் படித்தாலும், அமைப்பியல் படித்தாலும் குறியியல் படித்தாலும் வார்ஸாவில் ஒரு கடவுள் என்ற நாவலை எழுதினாலும் என் அளவுகோல் தமிழ்தான்.தமிழர்கள்தான். இதனால் சிந்தனைத் துறையில் நான் அடைந்த பயன்கள் பலப்பல. வெறும் மேல் நாட்டு மோஸ்தர்களுக்கு ஆட்படாத ஒரு இலக்கியக் கோட்பாட்டாளனாய் நான் எஞ்சுவதற்குத் தமிழை ஒரு அளவுகோலாய் நான் வைத்திருப்பது உதவுகிறது.

சமீபத்தில் ஈழப்பிரச்சினை சார்ந்த தமிழர்களின்,தமிழ்க் கட்சிகளின்,தமிழ்த் திரைப்படத் துறையினரின் செயல்பாடுகளில் வெளிப்பட்ட செய்தி யாது?

கலைஞர் என்ற பெயரில் ஒரு நான்கு சகாப்தங்களாய் தமிழ் மக்களைத் தலைமை தாங்கிய தலைவர் இன்று,மூத்த ஒரு அகில இந்தியத் தலைவராய் விளங்குகிறார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சங்க இலக்கியமோ திருக்குறளோ இந்த மனிதரின் வாயில் வராமலில்லை. இவர் புலிகளையும் ஈழத் தமிழர்களையும் பிரித்துப் பேசுவதில்லை. ஆனால் இதற்கு நேர் எதிரானவர் இன்றைய எதிர்கட்சித் தலைவர். புலிகளையும் தமிழர்களையும் பிரித்துவைத்துப் பிரச்சினையைப் பேசாதவர்கள், வைகோ, மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர்.இதில் பா.ஜ.கவைச் சார்ந்த கணேசன் என்ற கட்சித் தலைவரும் அடங்குகிறார் என்று நினைக்கிறேன்.

சிலருக்குக் குழப்பமாகவிருக்கலாம். ஒரேவிதப் பார்வைக் கோணம் கொண்ட வைகோவும் கலைஞரும் எதிர் எதிர் கட்சிகளில் அணி சேர்ந்திருக்கின்றனரே என்று. மூலப்படிம அரசியல் செயல்பாடு என்பது இதுதான். அது தர்க்கரீதியான வகைப்பாடுகளுக்கு அடங்காது. பிரச்சினையின் காரணம் நமக்கு விளங்குகிறது. அதுபோதும். மூலப்படிம தமிழ் உணர்வை உச்சக் கட்டத்துக்கு வளர்த்துவிட்டவர் பாரதிதாசன். இந்த மூலப்படிமத் தமிழ் உணர்வு திரு.வி.க.விடம், மறைமலையடிகளிடம், சுந்தரம் பிள்ளையிடம் இருந்த அளவு பெரியாரிடம் இருக்கவில்லை. அண்ணாவிடம் கலைஞரிடம் வைகோவிடம் இருக்குமளவு ஜெயலலிதாவிடம் இல்லை. தா.பாண்டியனிடம் இருக்குமளவு வரதராஜனிடம் இருக்க முடியாது. இந்த மூலப்படிம உணர்வு சிக்கலானது. இது புதிய ஒரு கோட்பாடு.

தனி நபர்களை மகோன்னத ஆட்களாகக் கணிப்பதுதான் மூலப்படிம உணர்வு.இன்றைய சூழலில், வரலாற்றில் தமிழர்களின் உலகத்தலைவராக ஒருவரை இந்த உணர்வு இனம் காணத் துடிக்கிறது. மூலப்படிமத்தின் குறும்பான செயலே இதுதான். நமக்கு அந்த நபரைப் பிடிக்கிறதோ இல்லையோ, அந்த நபரை மூலப்படிம உணர்வுக்குப் பிடிக்கிறது. மூலப்படிமத்துக்குச் சில வேளை மூளை இருக்காது; சிலவேளை மூளை ரொம்ப ஜோராய் வேலை செய்யும்.கண்கள் பார்க்காது. முட்டி மோதுவதில் இன்பம் கொள்ளும். இன்றைய சூழலில் உலகத் தமிழர்களின் நாயகத்துவம் என்ற இடத்திற்கு யாரை மூலப்படிம உணர்வு இனம் காண்கிறது என்பது புரிகிறதா? எனவே வெறும் அலசல்முறைச் சிந்தனைமூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்று கருதுபவர்கள் ஏமாறப் போகிறார்கள். அதேநேரத்தில் தந்திரமாய் இயங்குபவர்களையும் இந்த மூலப்படிம உணர்வு காவு கொண்டே தீரும்.அரசியல் பலிகள் நடைபெறலாம்.

இந்த உணர்வை இந்தியாவில் இருக்கிற பலர் உணராமல் இருக்கையில் சிரிதுங்க ஜெயசூரியா என்ற இலங்கையின் யுனைட்டெட் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் உணர்ந்துள்ளார். அக்டோபர் 21-ஆம்தேதி (2008) பெங்களூரில் ஒரு கூட்டத்தில் அவர் கூறிய கருத்துகள் நமக்குக் கண்களைத் திறப்பதாக உள்ளன.அவர், இன்றைய ஈழத்தில் யார் தமிழர், யார் புலி என்று பிரித்தறிய முடியாமல் உள்ளது என்று கூறுகிறார். (பார்க்க: இந்து நாளிதழ், 22-10-2008) இந்தக் கருத்து ஏன் எனக்கு முக்கியமானதெனக் கூறுகிறேன்? ஏனென்றால் நான் கூறிவரும் மூலப்படிம உணர்வு சார்ந்தது இந்தக் கருத்து. மூன்றாமுலக அரசியலையும் பண்பாட்டையும் இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டும். சார்லஸ் ரெயர்ஸன்( Charles Ryerson) என்ற இறையியலாளர், தன் ‘வட்டார வாதமும் தமிழ் புத்தொளியும் வெகுசன இந்துமதமும்’ என்ற நூலில் கூறும் கருத்துகளும் என்னுடைய ஆய்வுக்கு வலிமை சேர்ப்பதாக உணர்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் இங்குக் கூறவேண்டும்.

ஈழத்தில் கிழக்கில்,பிள்ளையன் என்பவர் முதலமைச்சராகியுள்ளார்.அவருடைய கருத்துகள் தினமணி இதழில் (29-10-2008)வெளிவந்துள்ளன. இந்தியத் தமிழர்களின் மூலப்படிம உணர்வெழுச்சிக் காலகட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவிடம் அவர் வாக்குக் கொடுத்ததுபோல கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தாருங்கள் என்கிறார். போலீஸ் வைத்துக் கொள்வதற்குக்கூட,பெயருக்கு முதலமைச்சர் ஆகியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற புலிகளை எதிர்க்கும் குழுவின் சார்பில் அதிகாரத்துக்கு வந்துள்ளவருக்கு உரிமையில்லையாம்.

என்.ராம் என்ற இந்து நாளிதழை ஹைஜாக் செய்து தன் ஒரு நபர் திட்டத்தை ஈடேற்றும் நபர், புலிகளைத் தோற்கடித்து பிள்ளையனைப் போன்ற இன்னொரு முதலமைச்சரை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கொணரும் தன் ஆசை நிறைவேறினால் என்ன நடக்கும் என்று அறியவில்லை.திடீரென்று கருணாநிதியின் கையிலிருந்து போலீஸ் துறையைப் பிடுங்கி டெல்லி வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்! அதுபோன்று அதிகாரமில்லாத நபர்தான் பிள்ளையன். பிள்ளையன் போன்ற முதலமைச்சர்,மகிந்த ராஜ பக்க்ஷவின் தயவில் கொஞ்ச நாள் இருக்கலாம். ஆனால் வரலாறு வேறுவிதமானது.

ஓரளவு, மூலப்படிம உணர்வின் ஆழ்ந்த ஆய்வு சில விஷயங்களிலாவது நமக்கு ஒளிபாய்ச்சலாம் என்று கருதுகிறேன். ஆனால் இந்த ஆய்வுமுறை,இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வர இயலாது என்று பாஸில் ராஜ பக்க்ஷ,பிராணாப் முகர்ஜியுடன் கூறினாலும் பெரிதாகக் கண்டுகொள்ளாத கலைஞரையோ, அவரை அடியொற்றி நிற்கும் பிற கட்சித் தலைவர்களையோ இனம் காணப் பயன்படாது.

நன்றி உயிரோசை 03-11-2008

தமிழவனின் தொடர்புடைய இதரக் கட்டுரைகள்.

1. தமிழ் உணர்வுக்கு என்ன பொருள்

2. இந்து நாளிதழின் சர்ச்சைக்குரிய கட்டுரை- ஒரு குறியியல் அணுகல்

3. இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும் -நாகார்ஜினன்.

குறிப்புகள்.

1.  தமிழவன் குறித்து விக்கிப்பீடியாவில் நான் எழுதிய குறிப்புகள்.

- மீளபதிவும் குறிப்பும் ஜமாலன் - 04-11-2008

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.